19

     அன்றைய நாடகத்துக்கு முன்பு அவசர அவசரமாக வசனங்களையும் காட்சிகளின் வரிசை அமைப்பையும் ஒருமுறை புரட்டிப் பார்த்தான் முத்துக்குமரன். அவனே வசனங்களை எழுதி டைரெக்ட் செய்திருந்ததனாலும் சில முறை நாடகங்களைச் சபையில் அமர்ந்து பார்த்திருந்ததனாலும் எல்லாம் நன்றாக நினைவிருந்தது. தவிர அவனே ஒரு கவியாக இருந்ததனால் மனோ தர்மத்துக்கு ஏற்ப அப்போதே வசனத்தை இடத்துக்குப் பொருத்தமாக மேடையிலேயே இயற்றிச் சொல்லிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. உடன் நடிப்பவள் மாதவியாகையினால் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கும் குறைவில்லை.

     அப்துல்லாவுக்கு மட்டும் பயம் இருந்தது. கோபால் நடிக்கவில்லை என்று தெரிந்து ஜனங்கள் எதுவும் கலாட்டா செய்து மேடை மேல் நாற்காலியைத் தூக்கி வீசுகிற நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்று பயந்தார் அவர். ஆனால் கூடவே ஒரு நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. கோபாலை விட முத்துக்குமரன் அதிக அழகன் என்பதும் பார்க்கிறவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரும் வசீகரமான கம்பீர புருஷன் என்பதும் அவருக்குத் தைரியம் அளித்தன.

     முத்துக்குமரனைப் பொறுத்தமட்டில் எந்த அவநம்பிக்கையுமின்றி இருந்ததோடு ஓரளவு அலட்சியத்தோடும் இருந்தான். கோபால் குடித்துவிட்டு மரீலின் ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் ஃபிராக்சர் ஆகிப் படுத்த படுக்கையாயிருப்பது கூட்டத்தில் அந்த விநாடி வரை யாருக்கும் தெரியாதமையினால் கூட்டம் அமைதியாயிருந்தது. கோபாலுக்கு இருக்கிற 'ஸ்டார் வால்யூ' முத்துக்குமரனுக்கு இல்லையே என்பதுதான் அப்துல்லாவின் கொஞ்ச நஞ்சக் கவலையாயிருந்தது. கோலாலும்பூரில் முதல் நாள் நாடகத்தில் கோபால் தோன்றி ஜனங்கள் அவனையும் அவன் நடிப்பையும் நன்கு கண்டு கொள்ளும்படி செய்திருந்ததனால், கோபாலுக்கும் முத்துக்குமரனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்களோ என்று வேறு சந்தேகமாக இருந்தது அவருக்கு. இந்தச் சந்தேகம் எல்லாம் நாடகம் தொடங்குகிற வரை தான்.

     ஆனால் நாடகம் தொடங்கியதும் கூட்டத்துக்கும் - அவருக்கும் இதெல்லாம் மறந்தே போயின. மன்மதனே ராஜா வேடந்தரித்து தர்பாரில் வந்து அமர்வது போல் முத்துக்குமரன் மேடைக்கு வந்து தர்பாரில் அமர்ந்தபோது முதல் நாள் அதே காட்சியில் கோபால் பிரவேசித்த போது இருந்ததை விட அதிகமான கைதட்டல் இருந்தது. மாதவியும் அன்று மிக அழகாயிருப்பது போல் பட்டது. பளபளவென்று மேனி மின்னும் அரபிக் குதிரை பாய்ந்து வருவது போல் அன்று வாளிப்பாயிருந்தாள் அவள்.

     'நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்'... என்ற பாட்டுக்கேற்ப அவள் ஆடியபோது பிரமாதமாக இருந்தது. முத்துக்குமரன் உடன் நடிக்கிறான் என்பதால் மாதவியும், மாதவி உடன் நடிக்கிறாள் என்பதால் முத்துக்குமரனும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக நடித்தார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் கைதட்டல் கட்டிடமே அதிரும்படி ஒலித்தது. அன்றைய நாடகம் பிரமாதமான வெற்றியாக அமைந்தது. சக நடிகர்களும் அப்துல்லாவும் முத்துக்குமரனை வாய் ஓயாமல் பாராட்டினார்கள்.

     "இதிலே பாராட்ட என்ன இருக்கு? என் கடமையை நான் செய்தேன். பணம் செலவழித்து அழைத்திருக்கிறீர்கள். கை நஷ்டப்படுமோ என்று உங்களுக்குப் பயம் வருகிறது. உங்கள் பயத்தைப் போக்கவும், என் நண்பனைக் காப்பாற்றவும் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்" என்று சுபாவமாக அப்துல்லாவுக்கு மறுமொழி கூறினான் அவன். மறுநாள் காலைத் தினசரிகளில் கோபால் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாயிருக்கும் செய்தியும் முந்திய தினம் இரவு நடந்த நாடகத்தில் கோபால் நடிக்க வேண்டிய பாகத்தை அந்த நாடகத்தின் ஆசிரியராகிய முத்துக்குமரன் என்பவரே ஏற்று நடித்தார் என்ற செய்தியும் வெளியாகி விட்டன.

     மறுநாள் காலை முத்துக்குமரனும், மாதவியும் கோபாலைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்.

     "சமயத்திலே கைகொடுத்து என் மானத்தைக் காப்பாத்தினத்துக்கு நன்றி வாத்தியாரே" - என்ற கை கூப்பினான் கோபால்.

     "நான் உன் மானத்தைக் காப்பாத்தணும்னுதானே நீ வந்த இடத்திலே வெளிநாட்டுச் சரக்காச்சேன்னு காணாததைக் கண்டதுபோல மட்டில்லாமக் குடிச்சு மானத்தைக் கப்பலேத்திக்கிட்டிருக்கே. நல்ல வேளை பேப்பர்காரன்லாம் 'குளியலறையிலே வழுக்கி விழுந்து'ன்னு மட்டும் தான் போட்டிருக்கான். எதினாலே வழுக்கி விழுந்தான்னு சேர்த்துப் போட்டிருந்தானோ எல்லாரும் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க" - என்று நண்பனைக் கடிந்துகொண்டான் முத்துக்குமரன்.

     "வாத்தியாரே! தப்புத்தான். புத்தியில்லாமச் செய்துட்டேன், இப்ப நினைச்சு என்ன பிரயோசனம்! குடிக்கிறதுக்கு முன்னாடி நினைச்சிருக்கணும். அப்ப எனக்குச் சுய புத்தியில்லே..."

     "எப்பத்தான் உனக்குச் சுயபுத்தி இருந்திச்சி? அது போகட்டும், இப்ப எப்பிடி இருக்கு? நேத்து நல்லாத் தூங்கினியா?"

     "நல்லாத் தூங்கினேன். காலையில் விடிந்ததும் நாடகம் கான்ஸலாயிடிச்சோன்னு கவலையோட இருந்தேன். நல்ல வேளையா நீ காப்பத்திட்டே, பத்திரிகையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன், அப்துல்லாவும் வந்து சொன்னாரு, என்னைவிடப் பிரமாதமா நடிச்சேன்னாரு..."

     "சே! சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லே. தப்பு இல்லாமச் செய்தேன். அவ்வளவுதான்..."

     "நீ சும்மா அடக்கமா மறைக்கப் பார்க்கிறே வாத்தியாரே! ஏகப்பட்ட கைதட்டல்னு அப்துல்லா ஒரேயடியாப் புகழ்ந்து பிரமாதமாகக் கொண்டாடறாரு. பேப்பர்க்காரனும் உன்னைப் பாராட்டி எழுதியிருக்கான்.

     "ஆயிரம் இருக்கலாம்டா கோபாலு! நீ அதுக்குன்னே பிறந்தவன்; உன்னை மாதிரி ஆகுமா!"

     - இவ்வளவில் 'ரொம்பப் பேச வேண்டாம்; பேஷன்டுக்கு ரெஸ்ட் வேணும்' - என்று நர்ஸ் வந்து கடிந்து கொள்ளவே அவர்கள் புறப்பட்டனர். முத்துக்குமரனும் மாதவியும் ஸ்டிரெய்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றபோது ரெட்டியாரிடமிருந்து ஃபோன் வந்தது.

     "நேத்து நானும் நாடகத்துக்கு வந்திருந்தேன். நேத்து உன்னை வேஷத்திலே பார்த்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனா நம்ப முடியலே. இன்னிக்குக் காலையிலே பேப்பரைப் பார்த்தப்பதான் என் சந்தேகம் சரிதான்னு தெரிஞ்சுது. பிரமாதமா இருந்திச்சுப்பா உன் நடிப்பு... சும்மா சொல்லப்பிடாது. ஜமாய்ச்சுப்பிட்டே. ஆமா இப்ப கோபாலுக்கு எப்படி இருக்குது? நான் போய்ப் பார்க்கலாமா?"

     "இன்னிக்கி வேணாம் ரொம்ப ரெஸ்ட் தேவைங்கிறாங்க. நாளைக்கிப் போய்ப் பாருங்க. மவுண்ட்பாட்டன் ரோடிலே இருக்காரு" என்று ரெட்டியாருக்குப் பதில் கூறினான் அவன். அதன்பின் குழு கோலாலும்பூரில் முகாமிட்டிருந்த ஏழு நாளும் கோபாலின் பாத்திரங்களை எல்லாம் முத்துக்குமரனே நடித்தான். பிரமாதம் என்று பேரும் வாங்கினான். பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. பத்திரிகைகள் பத்தி பத்தியாகப் புகழ்ந்து எழுதின. சிலர் முத்துக்குமரன், மாதவி ஜோடிப் பொருத்தத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

     "வசனம் மறந்து போறப்ப நீங்களே மேடையிலே வசனம் பேசிக்கிறீங்க. அது சில சமயம் ஏற்கனவே எழுதி வச்சிருந்த வசனத்தைவிட நல்லா அமைஞ்சிடுது" என்றாள் மாதவி.

     "இதுலே அதிசயப்படறதுக்கு என்ன இருக்கு மாதவி? எல்லோரும் அதிசயப்படறதைப் போல நீயும் அதிசயப்படறதிலே அர்த்தமில்லே. பிறந்ததிலிருந்து இதிலேயே உழன்றுக்கிட்டிருக்கேன். பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்து இன்று வரை பார்த்தாச்சு. என்னாலே இது கூட முடியலேன்னாத்தான் ஆச்சரியப்படணும் நீ."

     "உங்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு உங்களோட ஒவ்வொரு சாதனையுமே பெருசுதான். ஒவ்வொரு திறமையுமே ஆச்சரியந்தன். நான் அதை இனிமே மாத்திக்க முடியாது" - என்றாள் மாதவி.

     "சும்மாயிரு! நீ ஒரு பைத்தியம்."

     "பைத்தியம்னே வச்சுக்கங்களேன். ஆனா எல்லாப் பித்தும் உங்கமேலேதான்! நீங்க சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்ல இறங்கினப்ப, தனியா யாருமே கவனிக்காமே அநாதை போல நின்னப்ப என் வயிறெரிஞ்சுது. அதுக்குப் பலன் இப்பத்தான் கிட்டியிருக்கு. அப்துல்லலாவும் கோபாலும் பினாங்கிலே அநாவசியமா உங்களைக் கொதிக்கக் கொதிக்கப் படுத்தினாங்க, இன்னிக்கு நீங்க தான் அவங்க மானத்தைக் காப்பாத்த வேண்டியிருக்கு."

     "சரி! சரி! போதும் இதோட விடு, என் தலையை ரொம்பக் கனக்கப் பண்ணாதே. நீ புகழ்ந்தால் தலை ரொம்பக் கனமாகிவிடுகிறது மாதவி..."

     "அது சரி. நேத்து அப்துல்லா ஏதோ தனியா உங்களைப் பார்க்கணும்னாரே?..."

     "அதுவா? எங்கிட்ட வந்து, 'சமயத்துல கைகொடுத்துக் காப்பாத்தினீங்க! பழசு ஒண்ணையும் மனசுலே வச்சுக்காதீங்கன்'னு சொல்லி ஒரு வைர மோதிரத்தை நீட்டினார்."

     "ஐயா! நான் உங்களுக்காக எதையும் செய்யலை, என் நண்பனுடைய மானத்தைக் காக்கவே என் கடமையை நான் செய்தேன். எது செய்யணும்னாலும் கோபாலுக்கு செய்யுங்க. எனக்கு உங்களோட நேரே பேச்சில்லைன்னு மறுத்திட்டேன்."

     "நல்லா வேணும்? உங்களை எத்தினி பாடு படுத்தினாரு. இங்கிலீஷ் தெரியாதுன்னு உங்களைக் கிண்டல் வேறே பண்ணினாரு,"

     "எது தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன? மனிதனோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் போது தான் பேசப்படுகிறது. அது தெரிஞ்சாலே போதும். அது தெரியாதவங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படறபோது ரெண்டு சொட்டுக் கண்ணீரும் சந்தோஷப்படறபோது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக்குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு."

     கோபால் மேலும் ஒரு வாரம் ஒய்வுகொள்ள வேண்டுமென்று டாக்டர் கூறிவிடவே மலாக்காவில் நடைபெற வேண்டிய நாடகங்களிலும் முத்துக்குமரனே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்துக்குமரனும் குழுவினரும் காரிலேயே மலாக்காவுக்குப் புறப்பட்டனர். கோபாலைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ருத்ரபதி ரெட்டியாரிடம் விடப்பட்டிருந்தது.

     மலாக்காவில் தங்கியிருந்தபோது ஒரு நாள் பகலில் போர்ட் டிக்ஸன் கடற்கரைக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்கள் அவர்கள். மலாக்காவிலும் நாடகங்களுக்குப் பிரமாதமான வசூல் ஆயிற்று. முத்துக்குமரனின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறியது - குழுவுக்கு நல்ல பேர் கிடைக்க அவன் ஒருவனே காரணமாயிருந்தான். மலாக்காவில் நாடகங்கள் முடிந்ததும் திரும்புகிற வழியில் சிரம்பானில் ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். விருந்து முடிந்ததும், அந்த விருந்தை அளித்தவர் மூலமாக அப்துல்லா தாம் முன்பு கொடுத்து மறுக்கப்பட்ட அதே வைரமோதிரத்தைத் திரும்பவும் கொடுக்கச் செய்தார். முத்துக்குமரனுக்கு அவர் ஏற்பாடு புரிந்தது. தாம் நேரே கொடுத்தால் மறுக்கிறானே என்று சிரம்பான் நண்பர் மூலம் விருந்துக்கு ஏற்பாடு செய்து அப்துல்லா சுற்றி வளைத்து அதே மோதிரத்தைக் கொடுக்க வருவதை அவன் அறிந்திருந்தும் பலருக்கு முன்னே அவரை அவமானப்படுத்த விரும்பாமல் வாங்கிக் கொண்டான்.

     சிரம்பானிலிருந்து கோலாலும்பூர் திரும்பியதும் முதல் வேலையாக அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தான்.

     "இதோ பாருங்க மிஸ்டர் அப்துல்லா! நீங்க எதைக் கொடுத்தும் என் பிரியத்தை விலைக்கு வாங்க முடியாது. நான் உங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்த்தே நடிக்கலை. எனக்கு உங்களுடைய காண்ட்ராக்ட் லாபமா, நஷ்டமாங்கிறதைப் பத்திக்கூட கவலையில்லை. என் சிநேகிதனோட நான் மலேயாவுக்கு வந்தேன். அவன் ஒரு கஷ்டத்தில் இருக்கறப்ப உதவறது என் கடமை. அதைத் தவிர வேறெந்த ஆசைக்காகவும் இதை நான் செய்யலே. நீங்க எது செய்யணும்னாலும் கோபாலுக்குத்தான் செய்யணும். சிரம்பானிலே நாலு பேர் முன்னாலே உங்களை அவமானப்படுத்தக்கூடாதுன்னு தான் இதை வாங்கிக் கொள்வதுபோல் நடித்தேன். எனக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனால் பெருந்தன்மை தெரியும். நான் ரொம்ப மானஸ்தன். ஆனா அதுக்காக இன்னொருத்தனை அவமானப்படுத்த மாட்டேன். மன்னிச்சுக்குங்க. இதை நான் திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கு -"

     "என்னை ரொம்பச் சங்கடப்படுத்தறிங்க, மிஸ்டர் முத்துக்குமார்!"

     "சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..."

     அப்துல்லா தலையைத் தொங்கப் போட்டபடியே மோதிரத்தை வாங்கிக்கொண்டு போனார். ஆணோ பெண்ணோ விலைக்கு வாங்க முடியாத மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடைய தலை இப்படித்தான் தொங்கிப் போயிருக்கிறது.

     அன்று மாலை கோபால் முத்துக்குமரனைக் கூப்பிட்டனுப்பினான். முத்துக்குமரன் மவுண்ட்பேட்டன் ரோடுக்குப் போய் அவனைச் சந்தித்தான். "உட்கார்" என்று தன் அருகே படுக்கையை ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டினான் கோபால். முத்துக்குமரன் உட்கார்ந்தான்.

     "நீ அப்துல்லா கொடுத்த மோதிரத்தை வேண்டாம்னு திருப்பிக் கொடுத்தியா?"

     "ஆமா, ஒருவாட்டி மட்டுமில்லே, ரெண்டுவாட்டி கொடுத்தாரு. ரெண்டுவாட்டியும் திருப்பிக் கொடுத்திட்டேன்."

     "ஏன் அப்படிச் செய்தே?"

     "அவருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. நான் உன்கூட இங்கே வந்திருக்கேன். உனக்கு முடியலைங்கிறத்துக்காகத்தான் நாடகத்திலே பதிலுக்கு நடிக்கிறேன். அவர் யார் என்னைப் பாராட்டவும் பரிசு கொடுக்கவும்!"

     "அப்பிடிச் சொல்லப்படாது. அன்னைக்கு அண்ணாமலை மன்றத்தில் நாடக அரங்கேற்றத்தின்போது அவர் உனக்கு மாலை போட்டார். 'ஒருவருடைய மாலையை ஏற்கும்போது அவருடைய கைகளின் கீழே என் தலை குனிய நேரிடுகிறது, அதனால் மாலைகளை நான் வெறுக்கிறேன்' - என்று சொல்லி அவர் மனம் சங்கடப்படும்படி செய்தே. இன்னிக்கி வைரமோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அவரை அவமானப் படுத்தறே. இப்பிடி நடந்துக்கிறதிலே உனக்கு என்ன பெருமை? வீணா ஒரு பெரிய மனுசனை மனசு நோகப் பண்றதிலே என்ன லாபம் இருக்க முடியும்னு நினைக்கறே?"

     "ஓகோ! அப்பிடியா சங்கதி! ஒரு பெரிய மனுஷன் நம்மை அவமானப்படுத்தினா மௌனமா இருக்கணும். ஒரு பெரிய மனுஷனை நாம் பகைச்சுக்கக் கூடாது. அப்பிடித்தானே?"

     "அப்துல்லா உன்னை அவமானப்படுத்தியிருக்கார்னே வச்சுக்க. அப்படியிருந்தாலும்..."

     "சே! சே! இன்னொருவாட்டி சொல்லாதே. என்னை அவமானப்படுத்தறதுக்கு அவன் இல்லே, அவனோட பாட்டன் வந்தாலும் முடியாது. அவமானப்படுத்தறதா நெனைச்சுக்கிட்டு ஏதேதோ சில்லறை விஷமங்கள் பண்ணினாரு; அவ்வளவுதான்."

     "இருந்தாலும் இவ்வளவு ரோஷம் உனக்கு ஆகாது வாத்தியாரே!"

     "அது ஒண்ணுதான் ஒரு கலைஞனுக்கு நிச்சயமா மீதமிருக்கப் போற விஷயம். அதையும் விட்டுட்டா அப்புறம் எப்பிடி?"

     "அப்துல்லா எங்கிட்ட வந்து சொன்னாரு, மோதிரத்தை எப்பிடியாவது அவரை வாங்கிக்கச் செய்யணும்னாரு."

     "அதுதான் நான் அவரிட்டவே சொன்னேனே. எது செய்யணும்னாலும் கோபால்கிட்டச் செய்யுங்க. எனக்கும் உங்களுக்கும் நேரே ஒரு சம்பந்தமும் இல்லேன்னேனே? சொல்லலியா உங்கிட்ட?"

     "சொன்னாரு. சொல்லிட்டு மோதிரத்தையும் எங்கிட்ட கொடுத்திட்டுப் போயிருக்காரு..."

     "அப்படியா?"

     "அப்துல்லாகிட்ட மோதிரத்தை வாங்கிக்கக்கூடாது, ருத்ரபதி ரெட்டியாரிட்டக் கைக்கடிகாரம் வாங்கிக்கலாமா?"

     "ருத்ரபதி ரெட்டியாரும், அப்துல்லாவும் ஒண்ணாயிட மாட்டாங்க. ரெட்டியாரு இன்னிக்கிக் கோடீசுவரனாகியும் எங்கிட்ட ஒரு வித்தியாசமும் இல்லாமப் பழகறாரு."

     கோபாலால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. "சரி! உங்கிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லே! போயிட்டு வா!" என்றான் கோபால்.

     முத்துக்குமரன் கோலாலும்பூரில் மேலும் இரண்டு நாடகங்கள் நடித்தான். அதற்குள் கோபால் எழுந்து நடமாடத் தொடங்கி விட்டான். இரண்டாவது நாள் நாடகத்தை, கோபாலும் சபையில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்தான். அவனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை. முத்துக்குமரனின் நடிப்பைப் பார்த்து அவன் மூக்கில் விரலை வைத்தான்.

     நாடகம் முடிந்ததும் முத்துக்குமரனைக் கட்டித் தழுவிப் பாராட்டினான் கோபால். மறு நாள் ரேடியோவுக்கும் டெலிவிஷனுக்கும் அவர்கள் பேட்டியளித்தார்கள். பேட்டிக்கு முத்துக்குமரன், கோபால், மாதவி மூவரும் சென்றார்கள். இன்னொரு நாள் சுற்றிப் பார்ப்பதில், வேண்டியவர்களிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்வதில் கழிந்தது. புறப்படுகிற தினத்தன்று மரீலின் ஹோட்டலில் கோபால் குழுவினருக்கு ஒரு ஸெண்ட் - ஆஃப் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதில் எல்லாருமே முத்துக்குமரனை வாயாரப் புகழ்ந்தனர். உபசாரத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது கோபால் கூட முத்துக்குமரனையே பாராட்டிப் பேசினான். மாதவி விழாவில் குழுவினரின் சார்பில் ஒரு பாட்டுப் பாடினாள். 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா'... பாடும்போது அவள் கண்கள் எதிரே உள்ள வரிசையில் அமர்ந்திருந்த முத்துக்குமரனையே பார்த்தன.

     வழக்கம்போல் சிங்கப்பூருக்கு யார் யார் விமானத்தில் போவது என்ற பிரச்னை வந்தபோது முத்துக்குமரனும், மாதவியும் மறுத்துவிட்டனர்.

     "அப்படியானால் நானும் ப்ளேன்ல போகலே. உங்களோட கார்லியே வரேன்" - என்றான் கோபால். கால் சரியாகி எழுந்திருந்தும் அவன் 'வீக்' ஆக இருந்தான்.

     அவன் காரில் இருநூறு மைலுக்கு மேல் பயணம் செய்வதென்பது முடியாத காரியம். எனவே முத்துக்குமரன் அவனை வற்புறுத்தி விமானத்திலேயே வரச் சொல்ல வேண்டியதாயிற்று.

     "இடங்களையும், இயற்கை வளத்தையும் நல்லாப் பார்க்கலாம்னுதான் நாங்க ரெண்டு பேரும் கார்லே வரதாகச் சொல்கிறோம். அதை நீங்க யாரும் வித்தியாசமா நெனைக்கக் கூடாது. நீ இப்ப இருக்கிற நிலைமையிலே கார்லே வர லாய்க்குப்படாது. சொன்னாக் கேளு" - என்று முத்துக்குமரன் விளக்கிய பின்பு கோபால் ஒப்புக் கொண்டான். அப்துல்லாவுக்கு இன்னும் உதயரேகாவிடம் மயக்கம் தீரவில்லை. மூன்று பேரும் மலேஷியன் - ஏர்வேஸ் விமானத்தில் சிங்கப்பூர் பறந்தார்கள். முத்துக்குமரன் உட்பட மற்றவர்கள் ஜோகூர் வழியே கார்களில் சிங்கப்பூர் சென்றார்கள். ருத்ரபதி ரெட்டியார் டிபன் காரியர்களில் பகலுணவு தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தார். நடுவே ஓரிடத்தில் எல்லாரும் கார்களை நிறுத்திவிட்டுப் பகலுணவை ஓர் காட்டு ஓடைக்கரையில் முடித்துக் கொண்டார்கள். பிரயாணம் மிகமிக இன்பமாக இருந்தது. ஜோகூர் பாலம் தாண்டும்போது மாலை ஆறரை மணிக்கு மேலாகிவிட்டது. இருட்டுகிற நேரத்தில் சிங்கப்பூர் மிக அழகாயிருந்தது. குளிருக்கும் இருளுக்கும் பயந்து ஓர் அழகிய நவநாகரிக யுவதி ஒதுங்கி ஒளிவது போல் நகரம் அந்த வேளையில் மங்கலாகவும் அழகாகவும் தெரிந்தது. அவர்களுடைய கார்கள் புக்கிட்டிமா ரோட்டைக் கடந்து பென்குவின் தெருவிலுள்ள ஓர் ஹோட்டலை அடையுமுன் நன்றாக இருட்டி விட்டது. அட்டையில் அடுக்கிய மாதிரிப் பல மாடிகளைக் கொண்ட வானளாவிய ஒரே மாதிரிக் கட்டிடங்கள் எங்கும் தென்பட்டன. ஊர் கோலாலும்பூரைவிடப் பரபரப்பாகவும் வேகம் மிகுந்தும் காணப்பட்டது. கார்கள் சாலையில் எறும்பு மொய்ப்பதுபோல் மொய்த்தன. மஞ்சள் நிற மேற் பகுதியோடு டாக்ஸிகள் விரைந்து கொண்டிருந்தன. இரவு உணவுக்கு எல்லாரும் சிரங்கூன் ரோடிலிருந்த கோமளவிலாஸ் சைவக் கடைக்குப் போய்விட்டு வந்தார்கள்.

     இம்முறை கோபாலும் அவர்களுடனேயே தங்கிவிட்டான். அப்துல்லாவும் உதயரேகாவும் மட்டுமே காண்டினெண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். சிங்கப்பூர் நாடகங்களில் எல்லாம் கோபால்தான் நடித்தான். சிங்கப்பூர் நாடகங்களிலும் நல்ல வசூல் ஆயிற்று. கடைசி இரண்டு தினங்கள் மட்டும் வசூல் கொஞ்சம் சுமாராக இருந்தது. மழை வந்து கெடுத்துவிட்டது. ஆனாலும் நஷ்டம் எதுவுமில்லை என்றார் அப்துல்லா. சிங்கப்பூரிலும் அவர்கள் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ஜுரோங் தொழில் பேட்டை, டைகர்பாம் கார்டன்ஸ், குவின்ஸ்டவுனின் உயரமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள். டைகர்பாம் தோட்டத்தில், சீனப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பாவம் செய்தவர்கள் எப்படி எப்படி எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிப் பல குரூரமான காட்சிகளைச் சுதை வேலைச் சிற்பங்களால் நெடுகச் சித்தரித்திருந்தார்கள். பாவம் செய்த ஒருவனை நரகத்தில் ரம்பத்தால் அறுப்பது போலவும், தலையில் இரும்பு ஆணிகளை அறைவது போலவும், நெருப்புக் கொப்பரையில் நிர்வாணமாகத் தூக்கிப்போடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே முத்துக்குமரன், "மெட்ராஸிலே இருக்கிற அத்தினி சினிமாக்காரங்களையும் கூட்டியாந்து இந்தக் காட்சிகளை அடிக்கடி காமிக்கணும் மாதவி?" என்றான்.

     "வேண்டியதில்லை..."

     "ஏன் அப்படிச் சொல்றே?"

     "ஏன்னா இதெல்லாம் அங்கேயே தினம் தினம் நடந்துக்கிட்டிருக்கு!..."

     அவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள். ஊருக்குப் புறப்படுகிற தினத்தன்று காலையில் அவரவர்கள் 'ஷாப்பிங்' போனார்கள். ஒரு புடவைக் கடைக்குச் சென்றிருந்தபோது:

     "நான்கூட ஒரு புடவை வாங்கவேண்டியிருக்கு. உனக்கு முண்டு கொடுக்கணுமே" என்றான் முத்துக்குமரன். அவள் முகம் நாணத்தில் சிவந்தது. மாலையில் சிங்கப்பூரிலும் ஒரு பிரிவுபசார விருந்து இருந்தது. அதை முடித்துக் கொண்டு குழுவினர் அனைவரும் வருவதற்கான கப்பல் பயண ஏற்பாடுகள் பற்றி அப்துல்லாவிடம் கூறிவிட்டு கோபால், முத்துக்குமரன், மாதவி மூவரும் விமான நிலையம் புறப்பட்டனர். சென்னை செல்கிற ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அப்புறம் அங்கிருந்து சென்னை புறப்பட வேண்டும். அன்றிரவு அது ஆஸ்திரேலியாவிலிருந்து தாமதமாகத்தான் வந்தது. அப்துல்லாவும், குழுவினரும், சிங்கப்பூர் ரசிகர்களும், அகாலத்தையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள்.

     விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போதே அதிக நேரமாகிவிட்டதனால் சென்னையை அடையும்போது இந்திய நேரப்படியே இரவு பன்னிரண்டரை மணி ஆகியிருந்தது. கஸ்டம்ஸ் ஃபார்மாலிடீஸ் முடிந்து வெளிவர ஒரு மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கோபாலுக்கும் மாதவிக்கும் வரவேற்புக்கூற இரசிகர்களும், விசிறிகளும், மாலைகளுடன் காத்திருந்தார்கள். அதில் ஒரு அரைமணி கழிந்துவிட்டது.

     கோபாலின் பங்களாவிலிருந்து கார்கள் வந்திருந்தன. ஒரு கார் நிறைய சாமான்கள் ஏறின. மறு காரில் அவர்கள் மூவரும் ஏறிக்கொண்டனர். வீடுபோய்ச் சேரும்போது ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது.

     "இந்நேரத்துக்குமேலே வீட்டுக்குப் போவானேன்? இங்கேயே தூங்கிட்டுக் காலையிலே போயேன் மாதவி" என்று கோபால் அவளை வேண்டினான். மாதவி தயங்கினாள்.

     "நீ ஆளே மாறிப்போயிட்டே! முன்னே மாதிரி இல்லே" என்று அவளுடைய தயக்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான் கோபால். அவள் அதற்கு மறுமொழி கூறவில்லை. கோபால் சிரித்துக் கொண்டே உள்ளே போய்விட்டான்.

     "அவன் ஏன் சிரிக்கிறான்...?" முத்துக்குமரன் அவளைக் கேட்டான்.

     "நான் ரொம்ப மாறிட்டேனாம்?"

     "வீட்டுக்குப் போகணுமா? இங்கேயே தங்கறியா? ரொம்ப நேரமாச்சே?"

     "தங்கலாம்! ஆனா உங்க அவுட்ஹவுசிலே ஒரு மூலையிலே இடங்கொடுத்தீங்கன்னாக்கூடப் போதும். மத்த எந்த இடத்திலியும் இந்தப் பங்களாவிலே தங்க முடியாது. இது ஒரு பிசாசு வீடு மாதிரி. சிங்கப்பூரிலே நேத்துக் காட்டினீங்களே நரகத்தில் நடக்கும் குரூரங்களை, அதை மறுபடியும் நினைச்சக்குங்க..."

     "அவுட் ஹவுஸ்லே ஒரே கட்டில்தானே இருக்கு. தரை ஜில்னு இருக்குமே?"

     "பரவாயில்லே! உங்க காலடிலே கீழே தரையோரமா கொஞ்சம் இடம் கொடுங்க போதும்."

     அவள் பின்தொடர அவன் அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான். அன்று அவர்கள் எல்லாம் சிங்கப்பூரிலிருந்து திரும்புகிற செய்தியறிந்து நாயர்ப்பையன் அவுட்ஹவுஸைப் பெருக்கிச் சுத்தப்படுத்திப் பானையில் தண்ணீர் எடுத்து வைத்துப் புதிய தலையணை விரிப்புகள் எல்லாம் போட்டுப் படுக்கையையும் சுத்தமாக விரித்து வைத்துவிட்டுப் போயிருந்தான்.

     அவர்களோடு வந்த சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் உரியவற்றை அவுட்ஹவுஸ் வராண்டாவில் டிரைவர் ஏற்கெனவே கொண்டுவந்து வைத்திருந்தான். இருவரும் அவற்றை எடுத்து உள்ளே வைத்தார்கள்.

     கோபால் என்ன நினைத்துக்கொண்டாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மாதவி முத்துக்குமரனோடு அவுட்ஹவுஸிலேயே தங்கிவிட முடிவு செய்தாள்.

     முத்துக்குமரன் விரிப்பையும் தலையணையையும் அவளுக்குக் கொடுத்துவிட்டுக் கட்டிலில் இருந்த வெறும் மெத்தையில் படுத்தான்.

     மாதவி கீழே விரித்துப் படுத்தாள். "இந்தாங்க ஒரு தலையணைதான் இருக்கு போலிருக்கே, எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்குங்க..." என்று மாதவி சிறிது நேரம் கழித்துத் தலையணையைக் கொடுப்பதற்காக அவனருகே வந்தாள். அவன் இலேசாகத் தூங்கத் தொடங்கியிருந்தான். அப்போது டெலிபோன் மணி வேறு அடித்தது. தான் எடுக்கலாமா, கூடாதா என்று மாதவி தயங்கி நின்றாள். முத்துக்குமரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் கோபால் பேசினான்.