4 "அன்புள்ள முத்துக்குமார் என்னுடைய செயலைத் தவறாக நினைக்காமல் - இதனுடனிருக்கும் ஆயிரம் ரூபாயைக் கைச்செலவுக்கு வைத்துக் கொள். சமயத்தில் நான் ஊரிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது, என்று புதிய ஊரில் புதிய இடத்தில் நீ செலவுக்குத் திண்டாடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடனேயே இதை உனக்குக் கொடுத்தனுப்புகிறேன்" என்றெழுதிக் கீழே கோபால் கையொப்பம் இட்டிருந்தான். - இந்தச் சிறிய கடிதத்தைப் படித்துவிட்டு - உடனிருந்த ரூபாய் நோட்டுக்களையும் பார்த்தபோது நண்பனின் செய்கைக்கு ஆத்திரப்படுவதா அன்பு கூறுவதா என்று புரியாமல் மீண்டும் குழம்பினான் முத்துக்குமரன். 'தன்னிடம் பணம் இருக்கிறதென்ற திமிரில் தானே இப்படிக் கொடுத்தனுப்புகிறான்' ...என்பதாக நினைத்தபோது கோபமும்... 'பாவம்! நான் சிரமப்படப் போகிறேனே என்ற எச்சரிக்கையுணர்வோடு குறிப்புணர்ந்து கொடுத்தனுப்பி இருக்கிறான்'...என்பதாக நினைத்த போது வியப்பும் அன்பும் மாறி மாறி உண்டாயின. தங்க இடம், உண்ண உணவு, நாடகம் எழுத வசதிகள், எல்லாம் செய்து கொடுக்கப்பட்டு விட்ட பின் தனக்குப் பணம் தேவை இல்லை என்றாலும்... திருப்பிக் கொடுத்தனுப்பினால் நண்பனுடைய மனம் புண்படுமே என்ற தயக்கம் முத்துக்குமரனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தேவை இல்லாத ஒரு காகிதக் கற்றையை டிராயருக்குள் திணிப்பது போல் மேஜை டிராயரில் அந்த உரையையும் கடிதத்தையும் பணத்தோடு எடுத்துப் போட்டு வைத்தான் அவன். மனமோ நண்பனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நாடகத்தைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. சென்னையைப் போன்ற ஒரு பெரிய கஸ்மாபாலிடன் நகரத்தில் - கோபாலைப் போன்ற புகழ்பெற்ற நடிகன் ஒருவன் தயாரித்து அளிக்கிற தான் எழுதும் நாடகம் எத்தனை பெருமைக்குரியதாக அமைய வேண்டுமோ அத்தனை பெருமைக்குரியதாக அதை அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் முதலில் அவனுக்குள் ஏற்பட்டது. மதுரை கந்தசாமி நாயுடுகாருவின் சபைக்கு எழுதிக் கொடுத்த பழைய பாலவிநோத நாடகங்களுக்கும், இப்போது எழுதப்போகிற இந்த நாடகத்துக்கும் என்னெண்ண வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்பதை முதலில் அவன் சிந்தித்தான். உத்தி, அமைப்பு, உரையாடல், சம்பவக் கோவை, நகைச்சுவை எல்லாவற்றிலுமே பட்டினத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற முறையில் இந்த நாடகம் அட்வான்ஸாக இருக்க வேண்டுமென்று அவனுக்கே தோன்றியது. அதனால்தான் அவன் திரும்பத் திரும்ப அந்த நாடகத்தைப் பற்றிச் சிந்தித்தான். நாடகமோ, வசனமோ, பாடல்களோ எழுதுவது அவனுக்குக் கைவந்த பழக்கம்தான் என்றாலும் அந்தப் பழக்கத்தை ஒரு புதிய உலகுக்குப் பயன்படுத்திக் காண்பித்து வெற்றிபெற வேண்டியவனாகத் தான் இருப்பதை இப்போது அவன் உணர்ந்திருந்தான். சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் அதுதான் காரணமாக இருந்தது. பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக நண்பன் மூலம் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையாயினும் - கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்பதில் இப்போது அக்கறை பிறந்தது. அது சம்பந்தமான திட்டங்களை மனத்தில் போடத் தொடங்கினான் அவன். காலை ஒன்பதரை மணிக்கு நாயர்ப் பையன் - இட்டிலியும் காபியும் கொண்டு வந்து வைத்துவிட்டு "சார்! உங்க 'ப்ரேக்ஃபாஸ்ட்' ரெடி" - என்றான். "ஐயா இருக்காரா! ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுப் போயிட்டாரா?" - என்று அவனிடம் விசாரித்தான் முத்துக்குமரன். "இன்னும் புறப்படலே! பத்து நிமிசத்திலே புறப்பட்டிடுவாரு" - என்று பதில் கிடைத்தது. "சாருக்கு எது வேணும்னாலும் உடனே செய்யச் சொல்லி ஐயா உத்திரவு போட்டிருக்கு" - என்று முத்துக்குமரன் கேட்காத ஒன்றையும் சேர்த்துத் தன் மறுமொழியில் கூறினான் பையன். முத்துக்குமரன் சிற்றுண்டியை முடித்துவிட்டு காபி அருந்திக் கொண்டிருக்கும்போது ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து கோபால்தான் கூப்பிட்டுப் பேசினான். "நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன் வாத்தியாரே! எது வேணும்னாலும் பையனிட்டக் கூச்சமில்லாமக் கேட்டுக்கலாம். ஸ்டூடியோவிலிருந்து அப்புறம் ஃபோன் பண்றேன்...நாடகம்...ஜல்தி தயாராகட்டும்..." "அது சரி! இதென்னமோ கவர்லே போட்டு அனுப்பிச்சிருக்கியே, இதுக்கென்ன அர்த்தம்னு புரியலியே! உங்கிட்ட நிறைய இருக்குங்கறதை எனக்குக் காமிக்கிறியா?" "சே; சே! எதையாவது உளறாதே வாத்தியாரே...சும்மா கைச் செலவுக்கு இருக்கட்டும் வச்சுக்க..." "வெள்ளைத் தாளா இருந்தாலும் கவிதை எழுதலாம். ரூபாய் நோட்டாவில்ல இருக்குது இது?" என்று முத்துக்குமரன் பதில் கூறியதைக் கேட்டு எதிர்ப்புறம் கோபால் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உரையாடல் முடிந்தது. கோபால் படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டான். முத்துக்குமரனுடைய மனநிலை, அகம்பாவம் எல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியுமாதலால் "படப்பிடிப்புப் பார்க்க வா - ஸ்டூடியோவைச் சுற்றிப் பார்க்க என் கூட வா" - என்றெல்லாம் உபசாரத்துக்காகக் கூட அவனைக் கூப்பிடவில்லை. சாதாரணமாக வெளியூரிலிருந்து முதல் தடவையாகப் பட்டினத்துக்கு வருகிறவன் ஒரு சினிமா ஸ்டூடியோவைப் பார்க்க வேண்டுமென்பதை எவ்வளவு பெரிய ஆர்வமாகக் கொண்டிருப்பானோ அவ்வளவு பெரிய ஆர்வமாக முத்துக்குமரன் அதைக் கொண்டிருக்க மாட்டான் என்பது கோபாலுக்குத் தெரியும். - பகல் பன்னிரண்டு மணிக்குள் பேசுவதற்கு விஷயத்துடனோ, விஷயமின்றியோ, மாதவி நான்கைந்து முறை முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்துவிட்டாள்... - மதுரையில் இருந்தவரை டெலிஃபோன் என்ற கருவியை இப்படி இத்தனை விதமாக இத்தனை அவசியமாகப் பயன்படுத்துகிற வாய்ப்பையோ, வசதியையோ முத்துக்குமரன் அறிந்ததில்லை. நவீன வாழ்க்கையில் சென்னையைப் போன்ற ஒரு நகரத்தில் அதன் அவசியத்தை இப்போது அவன் நன்றாக உணர முடிந்தது. வாழ்க்கையின் வேகமே மதுரைக்கும் சென்னைக்குமிடையே வேறுபட்டது. ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று கார்களும் லாரிகளும் சீறிப் பாய்கிற ரோட்டிற்கு வந்தால் தடுமாற நேரிடுகிற மாதிரி சென்னையின் பரபரப்பிற்கும் வேகத்திற்கும் அவன் சுறுசுறுப்பாகத் தயாராக வேண்டியிருந்தது. டெலிஃபோனில் ஒருவரிடம் நேரில் பேசுகிற மாதிரியே சிரித்தும் மலர்ந்தும் கோபித்தும் குலாவியும், சுபாவமாகப் பேசுவதற்கு அவனுக்கு வரவில்லை. போட்டோவுக்கு நிற்கிற மாதிரி ஒரு செயற்கை உணர்வுடனேயே பேச வந்தது அவனுக்கு. கோபாலோ, மாதவியோ ஃபோனில் பேசும் போது அப்படிச் செயற்கை எதுவுமில்லாமல சுபாவமாயிருப்பதையும் அவன் கவனித்தான். தானும் அப்படி ஃபோனில் பேசிப் பழகிவிட அவனுக்கும் ஆசையாகத் தான் இருந்தது. பல விஷயங்களில் அவனுக்குள் அகம்பாவம் நிரம்பியிருந்தாலும் சில விஷயங்களில் அவன் சென்னையின் சூழ்நிலையில் அகம்பாவப்பட முடியாமலும் இருந்தது. நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்னும் எதை எழுதுவது என்பது பிடிபடவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு பகல் உணவையும் முடித்தாயிற்று. கோபால் ஸ்டூடியோவிலிருந்து ஃபோன் செய்தான். "மூணு மணிக்கு நீ தயாராய் இருக்கணும் வாத்தியாரே! நம்ம புது நாடகத்தைப்பத்தி பேசறத்துக்காகச் சாயங்காலம் நாலு நாலரை மணி சுமாருக்கு எல்லா ப்ரஸ் ரிப்போட்டர்ஸையும் வரச்சொல்லியிருக்கேன். ஒரு சின்ன டீ பார்ட்டி. அப்புறம் எல்லாரும் புது நாடகத்தைப் பத்தி இன்ஃபார்மலா உன்னிடம் பேசுவாங்க...கேள்விகள் கேட்பாங்க... கேள்விக்கெல்லாம் நீதான் கோபப்படாமல் பதில் சொல்லணும். என்ன சரிதானா?" "நாடகமே இன்னும் தயாராகலே; அதுக்குள்ளே...இதெல்லாம் வேற எதுக்கு?" "இந்த ஊர்ல இதெல்லாம் ஒரு முறை. முன்கூட்டியே ஒரு பப்ளிஸிடிதான். வேறென்ன? திட்டினாலும் டிபன், காபி, பீடா எல்லாம் குடுத்திட்டு அப்புறம் திட்டினாத்தான் இங்கே கேட்பாங்க..." "கொஞ்சம் கொஞ்சமா என்னை மெட்ராசுக்குத் தயாராக்கப் பார்க்கறே! இல்லியா?" "தயாராக வேண்டியதுதானே?" "இதெல்லாமே ஒரு நாடகமாவில்லே இருக்கு?" "அப்படித்தானே இருக்கணும்!" "யாராரு வருவாங்க?" "சினிமா நிருபர்கள், பிரபல கதை வசன கர்த்தாக்கள், டைரக்டர்கள். நம்ம குழுவுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிற ஆளுங்க...மற்ற நடிக நடிகையர்களிலே சில பேரு...எல்லாரும்...வருவாங்க..." "என்னை என்னவோ கேட்பாங்கன்னியே; என்ன என்ன கேட்பாங்க்...?" "தப்பா ஒண்ணும் கேட்க மாட்டாங்க? 'நீங்க எழுதப் போகிற நாடகம் எதைப் பற்றி? எப்படி எப்ப தயாராகும்?'னு கேட்பாங்க 'தமிழகத்தின் மகோன்னதமான பொற்காலத்தைச் சித்தரிக்கும் மகோன்னதமான வரலாற்று நாடகமாக இது அமையும். இதுவரை யாரும் இப்படி ஒரு நாடகத்தைத் தமிழகத்துலே மட்டுமில்லே; இந்தியாவிலேயே தயாரித்திருக்க முடியாதுன்னு' பதில் சொல்லிவிடேன்." "கேள்வியையும் சொல்லிப் பதிலையும் நீயே சொல்லிக் கொடுத்துப்புட்டே...அப்படித்தானே?" "ஆமாம்! நீ என்ன பதிலைச் சொன்னாலும் 'மகோன்னதமான'ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்க, அது போதும்..." "மகோன்னதமான கோபால் குழுவினரின் மகோன்னதமான வரலாற்று நாடகம் மகோன்னதமாக வர இருக்கிறாக்கும்...?" "கிண்டல் வேண்டாம்; ஸீரியஸ்ஸாகவே சொல்றேன் நான்..." "ரெண்டுக்கும் வித்தியாசம் இங்கே எப்பவும் புரிய மாட்டேங்குது? எது ஸீரியஸ்? எது கிண்டல்னே தெரியலே கிண்டலானதையும் ஸீரியஸ்ஸாகச் சொல்றாங்க இங்கே?" "அது இருக்கட்டும்! நீ தயாராயிரு. நானும் மூணு மணிக்கு வந்திடுவேன். மாதவியைக் கூடக் கொஞ்சம் முன்னாடியே வரச்சொல்லி ஃபோன் பண்ணியிருக்கேன்" - என்று கூறிப் பேச்சை முடித்தான் கோபால்; முத்துக்குமரனோ மனத்தில் கோபாலை வியக்கத் தொடங்கினான். சென்னைக்கு வந்து சேர்ந்தபின் இந்தக் கோபால் தான் வாழ்க்கையை எவ்வளவு வேகமாகப் படித்திருக்கிறான்! இத்தனை உலகியலை இவன் எப்போது கற்றான்? இவ்வளவு சமயோசிதத்தை இவன் எப்படிப் படித்தான்? யாரிடம் படித்தான்? சமயத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் இந்த அரசியல் சாணாக்கியம் கலை வாழ்விலேயே இவனுக்குக் கிடைத்திருப்பது பெரிய ஆச்சரியம்தான்! - என்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. காலையில் நாடகம் எழுதச் சொல்லிவிட்டுப் பகலில் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு விளம்பரம் செய்யும் இந்தச் சாமார்த்தியமும், வேகமும்தான் பட்டினத்தில் வெற்றி பெற வழிகள் போலும் என்று ஒரு கணம் அவனுக்குள்ளேயே ஒரு மலைப்பு உண்டாயிற்று. ஒரு திறமையான காரியத்தைச் செய்வதோடு ஒடுங்கிவிடாமல் 'நான் செய்வதுதான் திறமையான காரியம்' - என பத்துப் பேரைக் கூப்பிட்டு வைத்து விருந்துபசாரத்தோடு அழுத்திக் கூறி அனுப்பும் சாமர்த்தியமும் இந்த நகரில் வேண்டும் போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன். பகல் இரண்டு மணியிலிருந்து ஒரு முக்கால் மணி நேரம் படுக்கையில் படுத்துப் புரள்வதில் கழிந்தது. தூக்கமும் வரவில்லை. நாயர்ப்பையன் கொண்டு வந்து போட்டிருந்த தமிழ் காலைத் தினசரியைப் படிப்பதில் அந்த நேரம் போயிற்று. இரண்டே முக்கால் மணிக்கு எழுந்து முகம்கழுவி உடை மாற்றிக்கொண்டு தயாரானான் அவன். அறைக் கதவை யாரோ மெல்லத் தட்டினார்கள். முத்துக்குமரன் கதவைத் திறந்தான். மல்லிகைப் பூ வாசனை குப்பென்று வந்து தாக்கியது. பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள் மாதவி. இதழ்களில் 'லிப்ஸ்டிக்'கைப் பூசி அழித்தது போலிருந்தது. முத்துக்குமரன் முகம் மலர்ந்து அவளை வரவேற்றான். "நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..." "எப்படி?" "கதவைத் தட்டிய விதம் மிக நளினமாக மிருதங்கம் வாசிப்பது போல் இருந்தது." "வளை ஒலி கூடக் கேட்டிருக்கலாமே?" - கேட்டது என்று பதில் சொல்லலாமா, கேட்கவில்லை என்று சொல்லலாமா என ஒரு கணம் தயங்கி அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல், "கேட்டதே!" என்றான் முத்துக்குமரன். "பெண்களின் கை வளைகள் ஒலிக்கும்போது கவிஞர்களுக்குக் கற்பனை பெருகுமென்கிறார்களே? உங்களுக்கு ஒன்றும் கற்பனை தோன்றவில்லையா?" - இந்தக் கேள்வியின் துணிவிலும் துடுக்குத்தனத்திலும் அயர்ந்துவிட்ட முத்துக்குமரன் தன்னைச் சமாளித்துக் கொண்டு மறுமொழி கூறச் சிறிது நேரமாயிற்று. "பிரத்யட்சமே நேரில் வந்து விட்டபின் கற்பனை எதற்கு மாதவி?" அவள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்த அலங்காரத்தில் ஒரு வனதேவதைபோல் அவள் அவனை மயக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பருகிவிடுவதுபோல் பார்த்தான். "என்ன பார்க்கிறீர்கள்...?" "ஒன்றுமில்லை. கதாநாயகி எப்படி இருக்கிறாள் என்று பார்த்தேன்?" அவள் முகம் சிவந்தது. வாயிற் பக்கம் யாரோ மெல்லக் கனைத்துச் செருமும் ஒலி கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கோபால் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். "உள்ளே வரலாமா?" "இதென்னடா கேள்வி? வாயேன்." "அதுக்கில்லே! ரெண்டு பேரும் ஏதோ குஷாலாப் பேசிக்கிட்டிருக்கீங்க. மூணாவது ஆளும் கலந்துக்க முடிஞ்ச பேச்சா அல்லது ரெண்டு பேர் மட்டுமே பேசற பேச்சான்னு தெரியலியே?" "எந்த ரெண்டு பேர் பேச்சிலும் மூணாவது ஆள் கலந்துக்கலாம்..." "ஒண்ணுலே மட்டும் முடியாது." "எதுலே?" "காதலர்கள் பேச்சிலே...!" கோபால் இப்படிக் கூறியதை மாதவி தவறாக எடுத்துக் கொள்ளப்போகிறாளே என்ற தயக்கத்தோடும், பயத்தோடும் அவள் முகத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். அவள் குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். கோபால் அப்படிச் சொல்லியதிலே அவளுக்கும் உள்ளூற மகிழ்ச்சிதான் என்று தெரிந்தது. கோபாலும் திருமணமாகாதவன். மாதவியும் திருமணமாகாதவள்; தானும் திருமணமாகாதவன் - என்றெண்ணி மூவரும் இப்படி வெளிப்டையாகத் துணிந்து காதலைப் பற்றிச் சிரித்துப் பேசவும், உறவு கொண்டாடவும் முடிவதையும் எண்ணியபோது பட்டினத்துக் கலையுலகம் மிக மிகத் துணிந்து முன்னேறியிருப்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. அந்தத் துணிவுக்கும், வேகத்துக்கும் ஏற்ப உடனே தயாராக முடியாமல் திணறினான் அவன். எல்லாம் கனவு போலிருந்தது அவனுக்கு. மூன்றரை மணிக்கு அவனும், கோபாலும், மாதவியும் தோட்டத்துக்கு வந்தார்கள். தோட்டத்தில் விருந்துபசாரத்துக்கு வெள்ளை விரிப்புடன் கூடிய மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேஜைகளில் பூக்கள் சொருகிய ஜாடிகளும், கிளாஸ்களும் வரிசை பிடித்ததுபோல் அழகாக அளவாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராக வரவர அவர்களை முத்துக்குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். மாதவி சுற்றிச் சுற்றி முத்துக்குமரனுக்குப் பக்கத்திலேயே சிரித்துக் கொண்டு நின்றாள். பெண் விருந்தினர்களை எதிர் கொண்டு அழைத்து வந்து அவள் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். விருந்துக்கு வந்திருந்த வசனகர்த்தாக்களிலே ஒருவன் முத்துக்குமரனை ஏதோ மட்டந்தட்ட விரும்புகிற பாணியில் கேட்பவன் போல், "இது தான் உங்க முதல் நாடகமா? இல்லே...முன்னே ஏதாவது எழுதியிருக்கீங்களா..." - என்பது போல் கேட்டான். முதலில் கேள்வியைக் காதில் வாங்காதது போலவே கோபத்தோடு சும்மா இருந்தான் முத்துக்குமரன். மறுபடியும் அதே அலட்சியத்தோடு அதே கேள்வியைக் கேட்டான் வசனகர்த்தா. முத்துக்குமரன் அவனை மடக்க விரும்பினான். "உங்க பேரென்னன்னு சொன்னீங்க?... "வசனப்பித்தன்." "இதுவரை எத்தினி படத்துக்கு வசனம் எழுதியிருக்கீங்க...?" "நாற்பதுக்கு மேலிருக்கும்..." "அதுதான் இப்படிக் கேக்கறீங்களோ?" - என்று அந்த ஆளைப் பதிலுக்கு மடக்கியதும் அவன் மிரண்டு போனான். திமிரோடு கேள்வி கேட்ட அவனை முத்துக்குமரன் பதிலுக்கு மடக்கிக் கேட்ட போது, ஓர் ஆசிரியருக்கு மறுமொழி கூறும் மாணவனைப் போல் அவன் பயந்து பயந்து பதில் கூறியதை மாதவி அருகிலிருந்து இரசித்தாள். முத்துக்குமரனின் அகம்பாவத்தையும், கர்வத்தையுமே அவள் காதலித்தாள். அந்த அகம்பாவமும், கர்வமுமே அவளை அவனுக்காக நெகிழச் செய்தன. காபி, சிற்றுண்டி முடிந்ததும் கோபால் எழுந்து முத்துக்குமரனை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துகிற விதத்தில் சில வார்த்தைகள் பேசினான். "முத்துக்குமரனும் நானும் பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். எனக்குத் தெரிந்த முதல் தமிழ்க் கவிஞன் முத்துக்குமரன்தான். அவனும் நானும் அந்த நாளில் பாய்ஸ் கம்பெனி வீட்டில் ஒரு பாயில் படுத்து உறங்கியிருக்கிறோம். அவனை நான் 'வாத்தியார்' என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட வாத்தியார் அன்றும் சரி, இன்றும் சரி, பல விஷயங்களில் எனக்கு ஆசிரியனாகவே இருந்து வருகிறான். அவனைத் துணைக் கொண்டு நான் தொடங்கும் இந்த நாடக மன்றம் வெற்றிகரமான பல நாடகங்களைத் தயாரித்து அளிக்கும் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்கள் அன்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு எப்போதும் தேவை" - என்று கோபால் பேசியதும் அவனையும் முத்துக்குமரனையும் அருகருகே நிற்கச் சொல்லி 'பளிச்' 'பளிச்' என்று சில பத்திரகைக்காரர்கள் படம் பிடித்துக் கொண்டனர். அந்தப் படங்களை எடுக்கும் போது அருகில் சிறிது தள்ளி நின்ற மாதவியைக் கூப்பிட்டு, 'என்னையும் உன்னையும் சேர்த்து ஒருத்தனும் படம் எடுக்க மாட்டான் போலிருக்கே' - என்று சிரித்துக் கொண்டே அவள் காதருகில் மெல்லக் கூறினான் முத்துக்குமரன். 'நாமே எடுத்துக்கிட்டாப் போச்சு' - என்று அவள் அவனிடம் பதிலுக்குக் கூறி நகைத்தாள். அவள் அப்படிப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விருந்தினர்களுக்கு அவனும் சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று கோபால் கேட்டுக் கொண்டான். முத்துக்குமரன் பேசினான். சிரிக்கச் சிரிக்கப் பேசினான். இரண்டு மூன்று நிமிடத்திலேயே விருந்தினர்களைத் தன் பேச்சினால் வசியப்படுத்தி விட்டான் அவன். அவனுடைய பேச்சிலிருந்த நகைச்சுவையும், குத்தலும் கூட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. "நான் மெட்ராசுக்குப் புதுசு" என்ற கொச்சை வாக்கியத்துடன் தொடங்கிய அந்தப் பேச்சு அரைமணி நேரம் நீண்டது. அந்த அரைமணி நேரத்தில் எல்லாரையுமே தன் பேச்சினால் கொள்ளை கொண்டு விட்டான் அவன். விருந்தின் முடிவில் மாதவி ஒரு பாட்டுப் பாடினாள். "ஒளி படைத்த கண்ணினாய் வா வா..." தன்னை வரவேற்பது போலவே அவள் அந்தப் பாட்டைப் பாடுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவளுக்குச் சங்கீதமும் நன்றாகத் தெரியும் என்று அவன் உணர முடிந்தது. மிகவும் சுகமான குரலில் உருக உருகப் பாடினாள் அவள். அந்தக் குரலும் அவள்மேல் அவனை அதிகப் பிரியம் கொள்ளச் செய்தன. விருந்து முடிந்து விடை பெற்றுப் போகும் போது எல்லாரும் முதலில் கோபாலிடமும், பின்பு முத்துக்குமரனிடமும் கைகுலுக்கிச் சொல்லிக்கொண்டு போனார்கள். முத்துக்குமரனிடம் விடை பெற்றவர்களில் அவன் பேச்சைப் பாராட்ட மறந்தவர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம். மிக விரைவிலேயே வாத்தியார் எல்லாரையும் கவர்ந்துவிட்டதைக் கண்டு கோபால் பெருமிதப்பட்டான். விருந்தினர்கள் யாவரும் விடைபெற்றுச் சென்றபின், "பிரமாதமாப் பாடறியே நீ! அப்பிடியே சொக்கிப் போயிட்டேன்...போ" என்று மாதவியைப் பாராட்டினான் முத்துக்குமரன். "பாட்டு மட்டும்தானா? அதுக்குப் பரத நாட்டியம் கூட நல்லாத் தெரியும்..." என்று கூறினான் கோபால். - தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவனறியச் சொல்வதற்குக் கூசியவள் போல் மாதவி நாணி நின்றாள். முத்துக்குமரன் அவளது ஒவ்வோர் உணர்விலும் ஓர் அழகைக் கண்டு மனம் மயங்கினான். அவள் துணிவாக வெடுக்கென்று பேசும்போது அழகாயிருந்தாள். நாணித் தலைகுனியும் போதும் அழகாயிருந்தாள். பாடும்போதும் அழகாயிருந்தாள். மௌனமாயிருக்கும் போதும் அழகாயிருந்தாள். 'இன்னிக்கு நீங்க ரொம்ப நல்லாப் பேசினீங்க' - என்று அவளும் அவனைப் புகழத் தொடங்கியபோது, 'என்னிக்குமே நான் பேசறது நல்லாத்தான் இருக்கும்' - என்று அகங்காரத்தோடு பதில் சொன்னான். அவள் குறுக்கிட்டாள்: "நான் கேக்கறது இன்னிக்குத்தானே?" "வேணும்னா இனிமே - நீ கேக்கறப்பல்லாம் பேசறேன் போதுமா?" அவள் சிரித்தாள். மின்னும் அந்தப் பல் வரிசையின் நிறத்திலும், மெருகிலும் அவன் வசமிழந்து கிறங்கினான். இப்படிப்பட்ட பெண்ணழகை இதற்குமுன் காவியங்களின் வர்ணனைகளில்தான் அவன் கண்டிருக்கிறான். கோபால் அவனருகே வந்தான். "நாடகம் இனிமே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிதான்..." "ஏன்? அதெப்படி இப்பவே நீ சொல்ல முடியும்...?" "வந்தவங்க சொல்றாங்க. நானா சொல்றேன்?" "அதெப்படி?" ஆளைப் பிடிச்சுப் போயிட்டா...அப்புறம் எல்லாமே நல்லாருக்கும்பாங்க. ஆளைப் பிடிக்கலியோ நல்லாயிருக்கிறதைக்கூட மோசம்பாங்க...அதுதான் இந்த ஊர் வழக்கம் வாத்தியாரே..." என்றான் கோபால். முத்துக்குமரனுக்கு அந்த வழக்கம் வேடிக்கையாகவும், விநோதமாகவும் தோன்றியது. ஆனாலும் அவன் அது விஷயமாகக் கோபாலிடம் எதிர் வாதிடுவதற்கு விரும்பவில்லை. அன்று மாலையில் ஆறரை மணிக்குக் கோபால் முத்துக்குமரனையும் மாதவியையும் உடனழைத்துக்கொண்டு ஓர் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கப் போனான். தியேட்டர்காரருக்கு முன்னாலேயே ஃபோன் பண்ணி - நியூஸ் ரீல் போட்டதும் உள்ளே நுழைந்து ஏற்பாடு செய்திருந்த 'பாக்ஸில்' போய்ப் படம் பார்த்துவிட்டுப் படத்தின் கடைசிக்காட்சி முடியுமுன்பே எழுந்துவர வேண்டியிருந்தது. இல்லையானால் கூட்டம் கூடிக் கோபாலைப் படம் பார்க்க விடமாட்டார்களென்று தோன்றியது. கோபாலின் இந்த நிலைமை முத்துக்குமரனுக்கு வியப்பை அளித்தது. பொது இடங்களில் சுதந்திரமாக நடக்க முடியாத அந்தப் புகழ் மனிதனைச் சிறைப்படுத்துவதை அவன் விரும்பவில்லை. கோபாலோ அதற்காகவே பெருமைப்படுவதாகத் தெரிந்தது. "ஆளைத் தன்னிச்சையாக நடக்க விடாத புகழ் என்னாத்துக்குப் பிரயோசனம்?" - என்று கோபமாகக் கேட்டான் முத்துக்குமரன். கோபால் அதற்குப் பதில் சொல்லுமுன் கார் பங்களாவை அடைந்து விட்டது. மூவருமே இறங்கினர். இரவுச் சாப்பாட்டை மூவரும் அங்கேயே முடித்துக் கொண்டபின் முத்துக்குமரன் தன் அவுட்ஹவுஸுக்கு வந்தான். "சாரிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்" - என்று கோபாலிடம் கூறிவிட்டு மாதவியும் முத்துக்குமரனோடு வந்தாள். அந்தக் குளிர்ந்த இரவில் அவள் உடன் நடந்து வர அவுட்ஹவுஸுக்குச் செல்லும்போது அவன் மனம் உற்சாகமாயிருந்தது. அவள் கை வளைகள் ஒலிக்கும் போது அதன் எதிரொலி அவன் மனத்தில் கேட்டது. அவள் சிரிக்கும்போது அதன் நாதம் அவன் இதயத்தில் புகுந்து கிறங்கச் செய்தது. இதமான குளிர் நிலவும் தோட்டத்தில் அந்த முன்னிரவு வேளையில் 'நைட்குவின்' செடி ஒன்று நட்சத்திரங்களை அள்ளிக் கொட்டியது போல் பூத்து வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. அந்த வாசனையும் குளிரும் அவன் மனத்தில் அநுராக கீதம் இசைத்தன. |