8

     மாதவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளைப்பற்றிக் கோபாலிடம் விசாரிக்காமலே விட்டு விட்டான் முத்துக்குமரன்.

     'மாதவியை நீ சாப்பாடு பரிமாறக் கட்டளையிடுவது, எச்சிற்கையைக் கழுவுவதற்குத் தண்ணீர் ஏந்தி வரச் செய்வது போன்ற காரியங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவை உன் திமிரைக் காட்டுகின்றன' என்று கோபாலிடம் கண்டித்துப் பேச வேண்டும் என்று நினைத்திருந்த முத்துக்குமரன் - மாதவியின் வேண்டுகோளுக்காகவே அந்த நினைவைக் கைவிட வேண்டியதாயிற்று.

     'அவரோட ரொம்ப நாளாகப் பழகிக் கொண்டிருக்கிற என்னிடம் அவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென்று திடீரென்று இப்போதுதான் நீங்கள் கண்டிக்கப் புறப்படுவது என்னவோ போலிருக்கும். அது வேண்டாம்' - என்றாள் மாதவி. அவளைப் பரிமாறச் சொல்லியது, கைகழுவத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியது ஆகியவற்றைப் பற்றி நண்பன் கோபாலிடம் தான் கண்டிப்பதோ, விசாரித்துப் பேசுவதோ மாதவியைப் பாதிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. கோபாலையும் நாளாக நாளாகத்தான் முத்துக்குமரனால் கணித்துப் புரிந்து கொள்ள முடிந்தது. வந்த முதல் தினத்தன்று சந்தித்த கோபாலிடம் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததாக அவனுக்குத் தோன்றியதோ அந்தப் பெருந்தன்மை அவ்வளவும் தவறான கணிப்பு என்று இப்போது தோன்றியது. வெளியில் பெருந்தன்மை உடையவனைப் போல தோன்றினானே ஒழியக் கோபாலனிடம் உள்ளூற வஞ்சகமும், சிறுமையும், தற்பெருமையுமே நிரம்பியிருப்பதையே கண்டான் முத்துக்குமரன். சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் மனிதர்களின் பெருந்தன்மையைப் பற்றிச் சராசரி வெளியூர்க்காரனுக்கு ஏற்படுகிற ஆரம்பகால அநுமானம் நாட்பட நாட்படப் பொய்யாகி விடுகிறது என்பதை முத்துக்குமரன் இப்போது புரிந்துகொண்டிருந்தான். பெருந்தன்மையும், கருணையும், அன்புமே முதலில் தெரிந்து அவற்றின் காரணங்கள் பின்னால் போகப் போகத் தெரியும்போது முதலில் ஏற்பட்ட அநுமானமும், கணிப்பும் தவறோ என்று தயங்க வேண்டியிருக்கிறது. கோபாலைப் பொறுத்த அளவில் இப்போது அதே தயக்கம்தான் முடிவாக முத்துக்குமரனுக்கு ஏற்பட்டிருந்தது.

     சமூகத்தில் நாகரீகமடைந்த வீதிகள் எல்லாம் அழகாகவும் அலங்காரமாகவும் பட்டினத்தில் தோன்றினாலும் - அந்த வீதிகளில் - வீடுகளில் ஆற்றல் நிறைந்த சந்தர்ப்பவாதிகளும், கொடியவர்களும், ஆதரவற்ற நியாய வாதிகளும்; நல்லவர்களும் முறைமாறிய சரிசமமற்ற பலத்தோடு நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களென்றே தோன்றியது.

     சிந்தாதிரிப்பேட்டை அங்கப்பனின் ஓவியக் கூடத்திற்கு எல்லோருமாகப் போய்ப் பார்த்து 'ஸீன்கள்' தேர்ந்தெடுத்து விட்டு வந்த தினத்திற்குப் பின் ஓர் இரண்டு வாரங்கள் கோபாலோடு நெருக்கமாகவோ, அடிக்கடி சந்தித்துப் பழகவோ வாய்ப்பின்றிப் போகும்படி தானாகவே ஒரு வசதி நேர்ந்தது முத்துக்குமரனுக்கு.

     அடுத்த நாளே, ஏதோ ஒரு படத்தின் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் கோபால் விமானம் மூலம் குழுவினருடன் காஷ்மீருக்குப் புறப்பட்டு விட்டான். தான் திரும்ப இரண்டு வாரமாகுமென்றும் - அதற்குள் நாடகத்தை எழுதி முடித்து ரிஹர்ஸலைத் தொடங்குவதற்கு ஏற்ற முறையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முத்துக்குமரனிடமும், மாதவியிடமும் கோபால் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதனால் முத்துக்குமரன் கடற்கரைக்கோ, வேறு வெளியிடங்களுக்கோ செல்வதைக் குறைத்துக் கொண்டு நாடகத்தை தீவிரமாக எழுதி முடிப்பதில் ஈடுபட்டான். மாதவியும் அவன் எழுதிய கையெழுத்துப் பிரதியை டைப் செய்வதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினாள். அந்த வேகமான நாட்களில் முத்துக்குமரன் இரவிலும் கண்விழித்து எழுதினான். இரவில் அவன் எழுதிக் குவித்தவற்றையும் சேர்த்துப் பகலில் பிரதி எடுக்க வேண்டிய கடுமையான வேலை மாதவியின் தலையில் சுமந்தது. இதனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் எப்படி கழிந்தனவென்றே தெரியாமல் வேகத்தில் போய்விட்டது.

     கோபால் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் காஷ்மீர் புறப்பட்டுச் சென்ற பன்னிரண்டாவது நாள் அவனிடமிருந்து, 'நாடகம் எந்த நிலையில் இருக்கிற தென்று விசாரித்து முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் தன் கைக்குக் கிடைத்த சமயத்தில் முத்துக்குமரன் நாடகத்தின் கடைசிக் காட்சியில் எல்லாருமாகச் சேர்ந்து பாட வேண்டிய பாடலையும் எழுதிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையில் முத்துக்குமரன் வரையில் நாடகம் எழுதப் பெற்று முடிந்துவிட்டது. மாதவி தான் டைப் செய்து முடிக்க வேண்டியிருந்தது, அவளும் காலையிலிருந்து நண்பகல் வரை டைப் செய்வதற்கான வேலைதான் மீதமிருந்தது. அவள் காலையில் டைப் செய்ய வந்தபோது 'ஹேர் கட்டிங்குக்காக' முத்துக்குமரன் ஸலூனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். சென்னை வந்ததிலிருந்து முடிவெட்டிக் கொள்ளாததாலும். அதற்கு முந்தியும் ஒரு மாத காலமாக முடி வளர்ந்து காடாகியிருந்ததாலும் அவன் அன்று கண்டிப்பாக அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு வந்து விடுவதென்று கிளம்பியிருந்தான். போகும்போது, "நான் திரும்பி வருகிறவரை டைப் செய்யப்போதுமான வேலை உனக்கு இருக்கிறது. நீ டைப் செய்து முடிப்பதற்குள் நான் ஸலூனிலிருந்து அநேகமாகத் திரும்பி வந்துவிடுவேன்" என்று மாதவியிடம் அவன் சொல்லிவிட்டுத்தான் போனான்.

     கோபாலின் டிரைவர் பாண்டி பஜாரில் ஓர் ஏர்க்கண்டிஷன் செய்த நவநாகரிக ஸலூனின் முன்னால் கொண்டுபோய் முத்துக்குமரனை இறக்கிவிட்டான். முத்துக்குமரன் உள்ளே நுழைந்ததுமே - முன் பகுதியில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது அந்தக் காத்திருக்கும் இடத்தில் தமிழ்த் தினசரிகள், வார, மாத சினிமா இதழ்கள், ஆங்கில இதழ்கள் எல்லாமாக ஒரு குட்டி லைப்ரரியே இருந்தது. மேலே சுவரின் நாற்புறமும் குளிக்கிற பெண்களின் காலண்டர்களும் - குளிக்காவிட்டாலும் - குளிப்பதைவிடக் குறைவாக உடையணிந்த பெண்களின் ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தன. ஒரே சமயத்தில் உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் குளித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறே எதையும் செய்ய முடியாதென்றோ, குளித்துக்கொண்டிருப்பதே ஒரு 'யுனிவர்ஸல் பெண்மை இலட்சியம்' என்றோ காலண்டர்காரர்கள் கருதியது மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு, சுவரையும், படங்களையும் பார்ப்பதில் அலுத்தவனாக அங்கே கிடந்த பளபளப்பான அட்டையுள்ள தமிழ் வாரப் பத்திரகை ஒன்றை எடுத்துப் புரட்டலானான் அவன். அதிலும் அட்டையிலிருந்து உள்ளே தொடர் கதைகள், சிறுகதைகள் வரை எல்லாவற்றிலும் பெண்கள் இன்னும் குளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நல்ல வேளையாக மேலும் அவனுடைய பொறுமையைச் சோதிக்காமல் உள்ளே முடிவெட்டிக்கொள்ள வருமாறு ஸலூனின் வரவேற்பு ஆள் வந்து கூப்பிட்டு விடவே அவன் உள்ளே போய் உட்கார்ந்தான். முன்னாலும், பின்னாலும் பக்க வாட்டிலுமாக அவனுடைய முகங்கள் பத்திருபது கண்ணாடிகளில் தெரியலாயின. திடீரென்று கர்வப்படலாம் போல அத்தனை சுகமாயிருந்தது அவனுக்கு. இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே ஓர் இடைவெளியில் பெரிதாக பிரேம் செய்யப்பட்டுக் கோபாலின் படமும் அந்த ஸலூனில் மாட்டப்பட்டிருந்தது. ஆள் தலையில் கத்தரிக்கோலால் முடிவெட்டிக் கொண்டிருக்கும் சுகத்தில் தூக்கம் சொக்கும் கண்களால் கோபாலின் அந்தப் படத்தை பார்த்தான் முத்துக்குமரன். படத்தைப் பார்த்ததை ஒட்டிக் கோபாலைப் பற்றிய ஒரு சிந்தனையும் அவன் மனத்தில் ஓடியது.

     'கோபால் சாரை எனக்கு ரொம்ப நாளாய்ப் பழக்கம், பேருக்குத்தான் அவரு என்னை இண்டர்வ்யூவுக்கு வரச் சொல்லிப் புதிதாக அப்போதுதான் சந்திப்பவர் போல் கேள்விகளைக் கேட்டார்! சும்மா அது ஒரு கண் துடைப்பு' - என்று மாதவி தன்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டதும், கோபால் இதுவரை அப்படி ஒப்புக்கொள்ளாமல் மறைப்பதையும் இணைத்து நினைக்கலானான் முத்துக்குமரன். கோபாலோ - இண்டர்வ்யூவின்போது தான் முதன் முதலாக மாதவியையே தான் சந்திப்பது போல் தன்னையே நம்ப வைத்துப் பேசிக் கொண்டிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். மாதவிக்குத் தமிழ் டைப்ரைட்டிங் தெரியும் என்று சொல்ல வந்தபோது கூட,

     "மாதவிக்கு நல்லா டைப்ரைட்டிங் தெரியும்னு இண்டர்வ்யூவிலே சொன்னா, அவளையே டைப் பண்ணச் சொல்றேனே?" - என்றுதான் சொல்லி ஏமாற்றியிருந்தானே ஒழிய அவளைத் தனக்கு ரொம்ப நாளாகத் தெரியும் என்பதைக் கோபால் தன்னிடம் மறைக்கிறான் என்பதாகவே முத்துக்குமரனுக்குப் புரிந்தது.

     ஸலூனிலிருந்து திரும்பி வந்தபோது காலை பதினோரு மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மாதவி டைப் செய்ய வேண்டிய வேலையை முடித்து முதலிலிருந்து டைப் செய்த தாள்களில் பிழையாக டைப் ஆனவற்றைத் தேடிப் பார்த்துத் திருத்திக் கொண்டிருந்தாள். முத்துக்குமரன் உள்ளே போய்க் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தான். மாதவி அவனை உற்றுப் பார்த்துவிட்டுக் கூறினாள்:

     "திடீர்னு இளைச்சுப்போன மாதிரித் தெரியறீங்க...முடியை ரொம்பக் குறைச்சு வெட்டிட்டாங்க போலிருக்கு."

     "கவனிக்கலே! முடி வெட்டறப்ப நல்லா உறக்கம் வந்திச்சு...உறங்கிட்டேன்..."

     "நாடகம் நல்லா முடிஞ்சிருக்கு. தலைப்பு இன்னும் எழுதலியே? என்ன பேர் வைக்கப் போறீங்க இந்த நாடகத்துக்கு?"

     "கழைக் கூத்தியின் காதல்'னு வைக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்ன நினைக்கிறே?..."

     "எனக்கும் அது சரின்னுதான் தோணுது..."

     "கோபால் என்ன சொல்வான்னு தெரியலே..."

     "அதான் நாளைக் கழிச்சு மறுநா வந்துடுவாரே? அப்பத்தானே தெரியுது?"

     "ஒரு வேளை அவன் இன்னும் புதுமையான பேரா வைக்கணும்னு ஆசைப்பட்டாலும் படுவான்..."

     "இப்போதைக்கு நான் இந்த ஸ்கிரிப்ட்லேயும், டைப் அடிச்சதிலேயும், 'கழைக் கூத்தியின் காதல்'னே எழுதி வைக்கிறேன்."

     அவனும் அதற்குச் சம்மதித்தான். பகல் உணவுக்குப் பின் அவளோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த போது "இன்னிக்கு நாடகம் முடிஞ்சிருக்கு...அதைக் கொண்டாடணும்; நாம ரெண்டு பேருமா ஒரு சினிமாவுக்குப் போனா என்ன?" என்று அவளைக் கேட்டான் முத்துக்குமரன்.

     "மாட்னி ஷோவுக்கானா நான் வர்ரேன்..." என்றாள் அவள். அவனும் அதை ஏற்றான். இருவருமாகப் புதிதாய் அப்போதுதான் ரிலீஸாகியிருந்த ஒரு தமிழ்ப் படத்திற்குப் போனார்கள். அது ஒரு சமூகப் படம். வங்காளிக் கதையின் தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் காட்டும் போதே பாவமன்னிப்புக் கேட்டுவிட்டுத் தொடங்கியது படம். வசனத்தையும் பாடல்களையும் திரைக்கதையையும் டைரக்ஷனையும் ஒருவரே செய்திருந்தார். கோபாலைப் போல் வேறொரு பிரபல நடிகர் அதில் ஹீரோவாக வந்து - பழைய வள்ளி திருமண நாடகத்தில் வேலன், வேடன், விருத்தன் வேடங்களை ஒருவரே போடுவது போல் - இந்தப் புதிய சமூகப் படத்தில் பஞ்சாபி பட்டாணி, வட்டி வாங்கும் மார்வாரி ஆகிய பல வேடங்களில் தோன்றினார். முத்துக்குமரன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாதவியை ஒரு கேள்வி கேட்டான்:

     "எல்லாப் படத்திலேயும் ஏன் ஒருத்தரே பல துறையிலும் திறமைசாலின்னு காமிக்க முயற்சி பண்ணி எல்லாத் துறையிலும் தான் அரைகுறைதான்னு நிரூபிக்கிறாங்க?"

     "தமிழ்ப்படத் தயாரிப்பிலே - யாராலேயும் போக்க முடியாத குறை அது! இங்கே டைரக்டரே திடீர்னு ஒரு படத்துக்கு கதை எழுதுவாரு. அவரு நோக்கம் தனக்குக் கதை எழுதவும் தெரியறதை நிரூபிக்கணும்கிறதுதான். புகழுறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க. பார்க்கிறவங்களும் அதை உபசாரத்துக்குப் பார்ப்பாங்க. எழுதறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழ்ந்து எழுதுவாங்க."

     "ஏன் நிறுத்திட்டே? மேலே சொல்லேன்! டைரக்டர் கதை எழுதறப்ப நாம் ஏன் எழுதக் கூடாதுன்னு நடிகருக்குத் தோணும். உடனே நடிகரும் ஒரு கதை எழுதுவாரு, அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க..."

     "ஆமாம்! அப்புறம் திடீர்னு ஸ்டூடியோ லைட்பாய் ஒரு நாள் ஒரு லவ் ஸ்டோரி எழுதுவான். ஜனநாயகத்திலேதான் யாரும் எதையும் செய்யலாமே? அதுவும் படமாகும். ஒருவேளை அது டைரக்டர், நடிகரெல்லாம் எழுதினதைவிட ரியலாகவும் பிராக்டிகலாகவும் இருந்தாலும் இருக்கும்."

     பின் ஸீட்டில் இருந்த பரம ரசிகர் ஒருவர் படத்தில் கவனத்தைச் செலுத்தாமல் முத்துக்குமரனும் மாதவியும் பேசிக் கொள்வதைப் பற்றிச் சூள்கொட்டி முணுமுணுக்கத் தொடங்கவே மாதவியும் முத்துக்குமரனும் பேசுவதை நிறுத்தினார்கள். படத்தில் கதாநாயகியின் கனவு ஸீன் ஓடிக்கொண்டிருந்தது. ஜிகினா மரங்கள் ஒவ்வொன்றிலும் வெள்ளிக் கனிகள், கதாநாயகி ஒவ்வொரு மரத்திலும் ஏறி ஊஞ்சலாடியும் - ஒரு மரம்கூட முறியவில்லை. அவ்வளவு கனமான அவள், ஒரு பெரிய பாட்டும் பாடுகிறாள்; அவள் எல்லா மரங்களிலும் ஏறி ஊஞ்சலாடி முடிகிறவரை முடியாதபடி அத்தனை நீளமாக அந்தப் பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. 'டங்கரி டுங்காலே டுங்கிரி டங்காலே' என்ற பாடலில் வந்த சில வரிகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்று புரியாமல் மாதவியைக் கேட்டான் முத்துக்குமரன்.

     "சினிமா மொழி - அல்லது காதலர் மொழியைச் சேர்ந்தவையாயிருக்கும்" - என்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி.

     "சும்மாப் பேசிக்கிட்டேயிருந்தீங்கன்னாப் படத்தைப் பார்க்க முடியலே. வேணும்னா வெளியிலே போய்ப் பேசுங்க சார்?" - என்று பின் ஸீட்காரர் மறுபடி உரிமைப் பிரச்னையைக் கிளப்பினார். மறுபடியும் அவர்கள் மௌனமானார்கள்.

     படம் முடிகிறவரை அவர்களால் இருக்க முடியவில்லை. பாதியிலே புறப்பட வேண்டியதாயிற்று. மவுண்ட்ரோடில் ஒரு மேற்கத்திய பாணி ஏர்க்கண்டிஷன் ஹோட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிடச் சென்றார்கள் அவர்கள். டிபனுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரன் அவளைக் கேட்டான்.

     "ஆமாம்! நான் வெறுக்கிற மாதிரியே இந்த அரை வேக்காட்டுப் படங்களை நீயும் வெறுக்கிறியே? அப்பிடி இருந்தும் எப்பிடி இந்தத் துறையிலேயே தொடர்ந்து உன்னாலே காலந்தள்ள முடியுது?"

     "வேறே பிழைப்பு ஏது? கொஞ்சம் படிச்சிருக்கிற காரணத்துனாலே - இது மோசம்னு தெரியுது. ஆனா வேற யாரிட்டவும் மோசம்னு ஒத்தருக்கொருத்தர் சொல்லிக்கவும் மாட்டமே? இங்கே முகமன் வார்தைக்கும் - புகழ்ச்சிக்கும் ஆழமான வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. அதனாலே கவலைப்பட வேண்டியதில்லை. தன்னாலே நல்லாச் செய்ய முடியற ஒரு காரியத்தை மட்டும் கருத்தூன்றிச் செய்துவிட்டு மற்றதை மற்றவங்ககிட்டே விடணும்கிற பெருந்தன்மையெல்லாம் இங்கே கிடையாது. எல்லாரும் எல்லாத்தையுமே செய்யலாம்கிற ஒரு மனப்பான்மை இங்கே உண்டு. அந்த மனப்பான்மையை யாரும் அத்தனை சுலபமாகப் போக்கிட முடியாது..."

     "கோபால் எப்படி இதிலே?"

     "நீங்க கேட்கிறதினாலே இப்ப நான் உபசாரப் புகழ்ச்சி செய்யக் கூடாது..."

     "உள்ளதைச் சொல்லேன்."

     "ஃபீல்டுக்கு வந்தப்ப ஸின்ஸியரா உழைச்சாருங்கறாங்க...இப்ப அவரும் எல்லாரையும் போலத்தான் ஆயிட்டாரு..."

     "கலையிலே ஆத்ம வேதனைப் படணும்..."

     "அப்படீன்னா?"

     அசல் சிரத்தை வேணும்னு சொல்றேன்..."

     "ரொம்பப் பேரு இங்கே உடம்பு வேதனைப்பட்டே உழைக்கிறதில்லே. நீங்க என்னடான்னா ஒரு படி மேலே போய் ஆத்ம வேதனைப்படணும்னே சொல்றீங்க..."

     "உள்ளதைச் சொல்றேன்! ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி பாட்டு எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி கதை எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி நல்ல வசனம் எழுத முடியலே..."

     "இருக்கலாம்! உங்களுக்கு உங்க கலை மேலே அத்தனை சிரத்தை இருக்கிறதுனாலே அப்படித் தவிக் கிறீங்க! ஆனா இங்கே பல பேருக்கு 'ஆத்ம வேதனை'ன்னாலே என்னான்னு தெரியாது! 'கிலோ' என்ன விலையின்னு கேட்பாங்க..."

     "பரிதாபம்தான்! இத்தனை போலிகள் சேர்ந்து எப்படி லட்ச லட்சமாப்பணம் பண்றாங்கங்கறது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்..."

     - டிபன் வந்தது, இருவரும் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தார்கள். காபி வர சிறிது தாமதமாயிற்று. மெதுவாகவும், நிதானமாகவும், கேட்டு - ஆர்டர் எடுத்துக் கொண்டு, பின் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து வைத்ததன் காரணமாக அங்கே சிற்றுண்டி - காபி சாப்பிட்டு முடிக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகியிருந்தது. திரும்பும் போது மாதவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான் முத்துக்குமரன்.

     மறுநாள் காலை யாரும் எதிர்பாராமல் ஒருநாள் முன்னதாகவே திரும்பி வந்து விட்டான் கோபால். வந்தவுடனேயே நாடகத்தைப் பற்றிய வேகத்தையும், அவசரத்தையும் அவன் தன் பேச்சில் காண்பித்தான். காஷ்மீரிலிருந்து திரும்பிய தினத்தன்று கோபால் எங்கும் வெளியே போகவில்லை. நாடகப் பிரதியை வாங்கிக்கொண்டு போய்த் தன் அறையில் வைத்துப் படித்துவிட்டு மறுபடியும் மாலை ஆறு மணிக்கு முத்துக்குமரனைத் தேடி அவுட்ஹவுஸுக்கு வந்தான். அப்போது முத்துக்குமரனோடு மாதவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். கோபால் திடீரென்று உள்ளே பிரவேசித்தவுடன் மாதவி பயபக்தியுடனே எழுந்து நின்றாள். அவள் அப்படி எழுந்து நின்றதை முத்துக்குமரன் ரசிக்கவில்லை.

     "நாடகத்தைப் படிச்சாச்சு..."

     "........."

     "தலைப்பு வேற மாத்தணும். பேர் புதுமையா இருந்தா நல்லா இருக்கும். ஹாஸ்யத்துக்கு ஒண்ணும் ஸ்கோப் இல்லை. அதையும் உண்டாக்கணும்."

     "........"

     "என்ன வாத்தியாரே! நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ ஒண்ணும் பதில் பேச மாட்டேங்கிறீயே?"

     "பதில் பேசறதுக்கு என்ன இருக்கு? அதான் உனக்கே எல்லாம் தெரியுதே?"

     "நீ குத்தலாக பதில் சொல்ற மாதிரியல்ல இதுக்கு?"

     "........"

     "கவர்ச்சியா ஒரு பேரு வைக்கிறதிலியும் நடுநடுவே ஹாஸ்யம் வருகிறாப்பிலே செய்யறதிலியும் நம்ம ஜில்ஜில் எமகாதகன்! அவன்கிட்ட இந்த ஸ்கிரிப்டைக் கொடுத்து சரி பண்ணி வாங்கலாம்னு பார்க்கிறேன்..."

     "சே! சே! அவன் எதுக்கு? ஜில் ஜில்லைவிட - இந்த மாதிரி வேலைகளுக்கு உன்னோட பாண்டிபஜார் - ஏர்க்கண்டிஷன் ஸலூன்காரன்தான் ரொம்பப் பொருத்தமானவன்..."

     "நீ கேலி பண்றே?"

     "டேய்; கோபால் - நீ என்னன்னு நினைச்சிட்டிருக்கேடா? இதென்ன நாடகமா, அல்லது புரோ நோட்டா?"

     முத்துக்குமரன் இந்தத் திடீர் சிம்ம கர்ஜனையில் கோபால் அப்படியே ஒடுங்கிப்போனான். முத்துக்குமரனை எதிர்த்துப் பேச அவனுக்கு வாய் வரவில்லை. அதிக நேரம் பதிலே சொல்லாமல் ஆத்திரமானதொரு மௌனத்தைச் சாதித்த முத்துக்குமரன் திடீரென்று வாய் திறந்து சீறியபோது கோபாலுக்கு வாயடைத்துப் போயிற்று. முத்துக்குமரனின் கோபம் திடீரென்று புயலாக வந்த வேகத்தைப் பார்த்து மாதவியே அதிர்ந்து போனாள்.

     "ஜில் ஜில்லைவிட உன்னுடைய பாண்டிபஜார் ஆள்" - முத்துக்குமரன் கொடுத்த பதில் கோபாலைச் சவுக்கடியாக விளாசி விட்டிருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் சுபாவமாக ஒன்றுமே நடைபெறாதது போலக் கோபாலைப் பார்த்து, "நாளையிலிருந்து நாடகத்துக்கு ரிஹர்சல் இங்கே இந்த அவுட் ஹவுசிலே நடக்கும்...நீயும் வந்து சேர்" - என்று கட்டளையிட்டான் முத்துக்குமரன். அதையும் கோபால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.