20

     குரலிலிருந்து கோபால் நன்றாகக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

     "மாதவி அங்கே இருக்காளா? வீட்டுக்குப் போய்விட்டாளா?" சொற்கள் குழறின. கோபாலுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் டெலிபோனை அப்படியே மாதவியின் காதருகே வைத்தான் முத்துக்குமரன். அதே கேள்வி குழறலாக அவள் காதிலும் ஒலித்தது. அவள் முகத்தில் பழைய பயம் இன்னும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். கவனித்தபடியே அவளை வினவினான்:

     "என்ன பதில் சொல்லட்டும்? முன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து பீச்சுக்குப் போனன்னிக்கி, 'பீச்சுக்குப் போனதெல்லாம் அங்கே ஒண்ணும் சொல்ல வேண்டாம்'னு கோபாலுக்கு நடுங்கினியே; அப்பிடியேதான் இன்னிக்கும் இருக்கியா? அல்லது..."

     "சும்மா அதையே குத்திக்காட்டிப் பேசாதீங்க. இன்னிக்கி நான் எதுக்கும் யாருக்கும் பயப்படலே, அவருக்கு நீங்க என்ன பதில் சொல்லணுமோ அதைச் சொல்லலாம்."

     அவள் குரலில் தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் அவனுக்கும் புரிந்தது.

     தொடர்ந்து போனில் ஒரே கேள்வியை மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்த கோபாலுக்கு முத்துக்குமரன் தீர்க்கமான - தெளிவான குரலில் பதில் கூறினான்:

     "ஆமா இங்கேதான் இருக்கா..."

     உடனே எதிர்ப்புறம் பதில் சொல்லாமல் டெலிபோன் ரெஸ்டில் 'ணங்' என்று வைக்கப்பட்டது.

     "இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன்; நீங்க இடம் கொடுத்தாத்தான் இங்கே தங்கலாம்னு!"

     "நெஞ்சிலேயே இடம் கொடுத்தாச்சி! இங்கே இடம் தர்ரத்துக்கு என்ன? பிடிவாதமா நீ கேட்டு வாங்கிக்கிட்டியே."

     சிங்கப்பூரில் ஷாப்பிங் போனபோது வாங்கிக் கொண்டு வந்த ஸெண்ட்டை விமானத்திற்குப் புறப்படுமுன் பூசியிருந்தாள் மாதவி. இருளில் அவள் ஒரு வனதேவதை போல் நறுமணத்தோடு எதிரே நிற்பதை அப்படியே புதிதாக அப்போதுதான் பார்ப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முத்துக்குமரன்.

     "இந்தாங்க தலையணை..."

     "வேண்டாம்! எனக்கு ரொம்ப மெதுவான தலையணை வேண்டும்" - என்று அவளுடைய தங்க நிறத்தோளைத் தொட்டுக் காண்பித்துக் குறும்புத்தனமாகச் சிரித்தான் அவன்.

     "சரிதான்! இந்த வீட்டிலே இந்த ஒரு ரூம்லியாவது பாதுகாப்புக் கிடைக்கும்னு நினைச்சேன். இதுவும் மோச மாகத்தான் இருக்கும் போலேருக்கு." அவள் பொய்க் கோபத்தோடு இப்படிக் கூறியபோது அவளுடைய உதடுகளில் புன்னகையும், முகமும் மிக மிக அழகாயிருந்தன. அவன் மகிழ்ச்சியிலே திளைத்தான்.

     "தரையிலே ஜில்னு ஈரம். வீணா நாளைக்கு ஜுரம் வந்து கஷ்டப்படப் போறே..."      "இப்ப நீங்க என்ன பண்ணனும்கிறீங்க - ?"

     "ரொம்ப நாளா நடிச்சு நடிச்சு நடிக்கறது உனக்கும் அலுத்திருக்கு, எனக்கும் அலுத்திருக்கு. இனிமே நாம வாழணும் - "

     முத்துக்குமரன் எழுந்து நின்று அவளுடைய கரங்களைப் பற்றினான். அவள் வீணையாக வளைந்து அவன் மேற் சாய்ந்தாள். அவனுடைய பரந்து விரிந்த மார்புப் பகுதியும், திரண்டு பருத்த தோள்களும் அவளுடய பூங்கைகளால் வளைக்க முடியாத அளவு பெரியவையாக இருந்தன. முத்துக்குமரன் அவள் காதருகே முணுமுணுத்தான்:

     "என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கிறே?"

     உலகத்தின் முதல் பெண் போல் அவள் அவன் முன் நாணிக் கண் புதைத்தாள்.

     "ஏன் பேச மாட்டேங்கிறே?"

     அவள் பெருமூச்சு விட்டாள். மூச்சு விடுவதுகூட அநுராக சப்தமாக அவன் செவியில் ஒலித்தது.

     "சம்சாரிக்கும் பாடில்லா?" என்று தனக்குத் தெரிந்த கொஞ்ச மலையாளத்திலேயே அவன் கேட்டபோது, அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. அவளுடைய பூங்கைகள் அவன் தோள்களில் இருந்தன. இருவருக்குமிடையே சந்தோஷத்தின் எல்லை போன்றதொரு மௌனம் நிலவியது.

     அந்த தோள்களில் ஒன்றில்தான் அன்று இரவு மாதவி பத்திரமாக உறங்கினாள்.

     விடிந்ததும் அவள் அங்கே நீராடினாள். புதிய புடைவையையும் கட்டிக்கொண்டு அவள் எதிரே வந்தபோது அழகிய உஷத்காலமே சிரித்துக்கொண்டு வருவது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அப்போது கோபால் நைட்கவுனோடு அவுட்ஹவுஸுக்கு வந்தான். மாதவியின் பக்கம் சென்ற அவன் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது. அவளோடு அவன் பேசவே இல்லை. அவன் தன்மேல் ரொம்பக் கோபம் அடைந்திருக்கிறான் என்பது அவளுக்கும் ஒருவாறு புரிந்தது. திடீரென்று கோபால் முத்துக்குமரனிடம் ரொம்பவும் பிஸினஸ்லைக்காகப் பேசலானான்.

     "நீ எனக்குப் பதிலா கோலாலும்பூரில் எட்டு நாடகமும், மலாக்காவிலே மூணு நாடகமும், ஆக மொத்தம் பதினோரு நாள் வேஷங் கட்டியிருக்கே..."

     "ஆமா! அதுக்கென்ன இப்ப?"

     "இல்லே பண விஷயத்திலே அண்ணன் தம்பிகளுக்குள்ளே கூடச் சண்டை வரும்பாங்க..."

     "திடீர்னு உனக்கு இப்ப என்ன வந்திரிச்சிடா, கோபாலு..."

     "பதினொரு நாடகத்துக்காகவும் சேர்த்துப் பதினையாயிரம் ரூபாயும் சேர்த்து இருபதாயிரத்துக்கு ஒரு 'செக்' ராத்திரி எழுதி வச்சேன். இந்தா."

     முத்துக்குமரன் முதலில் சிறிது தயங்கினான். அப்புறம் மனதுக்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் மறுக்காமல் அந்தச் 'செக்'கை உடனே கோபாலிடமிருந்து வாங்கிக் கொண்டான். அடுத்த நிமிஷம் கோபால் முற்றிலும் எதிர்பாராத இன்னொரு கேள்வியும் முத்துக்குமரனிடமிருந்து எழுந்தது:

     "மாதவி கணக்கு என்னென்னு பார்த்து அதையும் இப்பவே தீர்த்துவிட முடியுமா?"

     "அதைக் கேக்கிறதுக்கு நீ யாரு?"

     திடீரென்று முத்துக்குமரனே எதிர்பாராத விதமாகக் கோபாலின் குரலில் சூடேறித் துடித்தது.

     "நான் யாரா? நான் தான் இனிமே அவளுக்கு எல்லாம். அடுத்த வெள்ளிக்கிழமை குருவாயூர்லே எனக்கும் அவளுக்கும் கலியாணம், இனிமே அவ உங்கூட நடிக்கமாட்டா."

     "அதை அவள்னா சொல்லணும் எங்கிட்ட, நீ யாரு சொல்றதுக்கு?"

     "அவ உங்கிட்டப் பேச விரும்பலை. நான்தான் சொல்லுவேன்."

     "உன்னை ரொம்ப நெருங்கின சிநேகிதன்னு நெனைச்சு இந்த வீட்டிலே நுழைய விட்டேன்..."

     "அதுக்கு நான் எந்தத் துரோகமும் செஞ்சுடலையே?"

     "சரி! சரி! அதைப்பத்தி இப்ப என்ன? ஒரே உறையிலே ரெண்டு கத்திகள் இருக்க முடியாது. அஞ்சு நிமிஷம் இரு! மாதவி கணக்கையும் தீத்துடறேன்." என்று பதில் கூறி விட்டுத் தன்னுடைய பெர்ஸனல் ஸெகரெட்டரிக்கு அங்கிருந்தே ஃபோன் செய்தான் கோபால். பத்தே நிமிஷத்தில் அவனுடைய பெர்ஸனல் ஸெகரெட்டரி இன்னொரு 'செக் லீஃப்' கொண்டு வந்தார். அவள் பெயருக்கு ஓர் இருபதாயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தான்.

     "பணம் கொடுத்திட்டேடா கோபால்! ஆனா மனுஷன் சில சமயங்களிலே செய்த உதவி, பணத்தால் மதிப்பிட முடியாதுங்கறதை மட்டும் நினைவு வச்சிக்க. பணத்தை உன் முகத்திலே வீசி எறியாமே நான் வாங்கிக்கிறதுக்கு ஒரே காரணம் - இன்னிக்கி இந்த உலகத்திலே பணத்தை விட உயர்ந்த விஷயங்களான மானம், மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்கும் இந்தப் பாழாய்ப் போன பணம் தான் வேண்டியதாயிருக்கு. அந்த ஒரே காரணத்துக்காகத்தான் பணத்தைக் கணக்காக நானும் கேட்டு வாங்கிக்கிறேன்."

     கோபால் இதைக் காதில் போட்டுக் கொள்ளமலே எழுந்து போய்விட்டான். முத்துக்குமரன் தன்னுடைய பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்தான். மாதவி அவனுக்கு உதவி செய்தாள். பத்துப் பதினைந்து நிமிஷத்தில் அந்த அவுட்ஹவுஸைக் காலி செய்து சாமான்களை வராண்டாவில் கொண்டு வந்த வைத்துவிட்டார்கள் அவர்கள். மாதவி அவனிடம் கூறினாள்:

     "சண்டை வந்ததே என்னாலேதான். நான் ராத்திரி வீட்டுக்கே போயிருக்கணும்."

     "மறுபடியும் உன் பேச்சிலே பயம் வர்ராப்பிலே தெரியிறதே மாதவி! இப்பிடி ஒரு சண்டை வந்ததுக்காக நான் சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா... மறுபடியும் அநாவசியமாகக் கவலைப்படறியே! இனிமே இவங்கிட்டே நாம இருக்க முடியும்னா நீ நினைக்கிறே? சும்மா நடிச்சுக்கிட்டே இருந்தா இப்படித்தான் புத்தி வக்கிரமாகப் போகும். கொஞ்சமாவது வாழணும். ஒருத்தன் வாழாமே நடிச்சா அது நல்ல கலையாகவும் இருக்கமுடியாது. கோபால் ஒழுங்கா இருக்கணும்னா கலியாணங் கட்டிக்கிட்டு ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை முதல்லே அவன் பழகிக்கிணும். இல்லாட்டி அவன் இதைவிட இன்னும் மோசமாகச் சீரழிஞ்சுதான் போவான். இந்த பங்களாவைத்தான் பாரேன், பேய் வீடு மாதிரி. வாசல்லே ரெண்டு இழைக் கோலம் போட ஒரு சுமங்கலி இதிலே இல்லே. வேலையாட்களும், காரும், தோட்டமும், பணமும் இருந்து பயனென்ன? ஒரு குழந்தையின் மழலைகூட இந்தப் பங்களாவிலே இதுவரை கேட்கலே. கொஞ்சமாவது லட்சுமிக்களை இங்கே இருக்கா பாரேன்?"

     அவன் கூறியவை அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல் மாதவி மௌனமாக இருந்தாள். அவுட்ஹவுஸ் வாசலில் நின்று அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே நாயர்ப் பையன் அங்கு வந்தான். அவனை ஒரு டாக்ஸி கொண்டுவருமாறு அனுப்பினாள் மாதவி. டாக்ஸி வந்தது. பையன் மாதவியிடம் தனியே ஏதோ பேசிக் கொண்டு நின்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

     "உங்ககிட்ட ஒரு அஞ்சு ரூபா இருந்தாக் குடுங்க..."

     - என்று மாதவி முத்துக்குமரனைக் கேட்டு ஓர் ஐந்து ரூபாய் வாங்கி அந்தப் பையனிடம் கொடுத்தாள். பையன் இருவருக்கும் ஒரு கும்பிடு போட்டான். அவன் கண்கள் மீண்டும் கலங்கின.

     "அடுத்த வாரம் பினாங்கிலேருந்து கப்பல் வந்ததும் உதயரேகா இங்கே இந்த அவுட்ஹவுஸ்லே வந்து தங்கப்போறாளாம்...! கோபால் தன்னிடம் சொன்னதாகப் பையன் எங்கிட்டச் சொன்னான்" என்றாள் மாதவி.

     "அது சரி! அப்துல்லா அவளைப் பினாங்கிலேருந்து இங்கே வரவிட்டால்தானே?" இதைக் கேட்டு அவளுக்கு சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.

     "விடு அசிங்கத்தை! வேறே நல்ல விஷயம் ஏதாவது பேசுவோம்" என்றான் முத்துக்குமரன். இருவரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தனர். பையன் முத்துக்குமரனுடைய பெட்டி படுக்கையையும், மாதவியின் சூட்கேஸ்களையும் டாக்ஸியில் எடுத்து வைத்தான். முத்துக்குமரன் அவளைக் கேட்டான்:

     "எங்கே போகலாம்? உன்னை வீட்ல விட்டுட்டு நான் பழையபடி எக்மோர் லாட்ஜு க்கே போயிடட்டுமா?"

     "ஹேய்... ஆளைப் பாரு! லாட்ஜுக்காவது போறதாவது? நான் விட்டாலும் உங்க மாமியார் விடமாட்டாங்க. வம்பு பண்ணாம வீட்டுக்கே வந்து சேருங்க..." இப்படி அவள் பேசியது அவனுக்கு மிகவும் பிடித்தது. டாக்ஸி விரைந்தது. டாக்ஸிக்காரனுக்கு லாயிட்ஸ் ரோட்டில் இடம் அடையாளம் சொல்லிவிட்டு முத்துக்குமரனிடம் பேசத் திரும்பினாள் மாதவி. அவன் அவளைக் கேட்டான்:

     "உன்னை இன்னொரு கேள்வி கேட்கணுமே?"

     "என்னது, கேளுங்களேன்?"

     "வீட்டிலே எத்தனை கட்டில் இருக்கு!"

     "ஏன்? ரெண்டு இருக்கு?"

     "இருக்கப்பிடாதே...?"

     "சீ குறும்பெல்லாம் வேணாம்" என்று உதட்டில் விரலை வைத்துக்காட்டி அவனை அதட்டுபவள் போல் அவள் பாவனை காட்டியது மிகமிக அழகாயிருந்தது. ஒவ்வொரு குறும்பிலும் அவளை ரசித்தான் அவன். நிறைய உள்ளர்த்தங்களும், வியங்கியமும், வசீகரமும், அணிகளும் நிறைந்த ஒரு கவிதையைப் போலிருந்தாள் அவள். அவள் இரண்டு உதட்டின் மேலும் விரலை வைத்துத் தன்னை அதட்டுவது போல் பாவனை காட்டிய சமயத்தில் அவள் முகத்தில் தெரிந்த குறும்பும் அழகும் கலந்த வசீகரத்தை அப்படியே ஒரு கவிதையாக எழுதவேண்டும் போலிருந்தது அவனுக்கு. மாதவியின் தாய் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றாள். பணம் கொடுத்து அனுப்புமுன் டாக்ஸிக்காரன்,

     "அவங்க சினிமாப் படத்திலே நடிச்சிருக்காங்கள்ளே சார்?'' என்று முத்துக்குமரனைக் கேட்டபோது, "ஆமா, இனிமே நடிக்கமாட்டாங்க" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் மறுமொழி கூறினான் முத்துக்குமரன். மாதவி முன்பே இறங்கி உள்ளே போயிருந்தாள். உள்ளே சென்றதும் முதல் வேலையாக டாக்ஸிக்காரன் கேட்டதையும், அதற்குத் தான் சொன்ன பதிலையும் அவளிடம் கூறினான் முத்துக்குமரன். மாதவி சிரித்தாள்.

     "உங்களாலே நட்சத்திர உலகத்துக்கு எத்தினி பெரிய நஷ்டம்னு உங்க மேலே கோபத்தோட போயிருப்பான் அந்த டாக்ஸி டிரைவர்..."

     "அப்பிடியாகிவிடாது! நஷ்டத்தை ஈடுசெய்ய எத்தனையோ உதயரேகாக்கள் வருவார்கள்."

     - அவள் மீண்டும் சிரித்தாள்.

*****

     அடுத்த வெள்ளிக்கிழமை குருவாயூர் கோவிலில் மாதவிக்கும், முத்துக்குமரனுக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு எங்கிருந்தும் எந்த ரசிகர்களும் வாழ்த்தனுப்பவில்லை; எந்தப் படவுலகப் பிரமுகர்களும் வரவில்லை. திருமணம் முடிந்ததும் அவர்கள் வணங்கியெழ மாதவியின் தாய் மட்டுமே அவர்களோடு உடனிருந்தாள். அன்றிரவு அவர்கள் மாவேலிக்கரைக்கு ஒரு டாக்ஸியில் அங்கிருந்து சென்றார்கள். மாவேலிக்கரை மாதவியின் சொந்த ஊர் ஆயினும் அங்கே அவளுக்கு வீடு வாசல் இல்லை. சொந்தக்காரர்கள் வீட்டில் அவர்கள் அன்றிரவு தங்கினர். இரவுச் சாப்பாட்டிற்குப் பின் தனிமையில் அவள் அவனிடம் வந்தாள்.

     "பார்த்தீங்களா? இங்கே எல்லாருமாகச் சேர்ந்து சதி பண்ணி இந்த அறையில் ஒரே கட்டில்தான் போட்டிருக்காங்க..."

     அவன் சிரித்தான். அவள் அவனருகே வந்தாள். நறுமணம் நிறைந்த மலையாள மல்லிகை அவள் கூந்தலைச் சூழ்ந்திருந்தது. அவன் அவளைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்து அந்தப் பூவின் நறுமணத்தை நாசி நிறைய நுகர்ந்தான்.

     "மாதவி! சமுகத்தின் நீண்ட வீதிகளில் எங்கும் பயப்படாமல் நடக்க வேண்டுமானால், பெண் இப்படி ஒரு பாதுகாப்பான கட்டிலிலிருந்துதான் கீழே இறங்கி நடக்க முடியும் என்பது பல்லாயிரம் தலைமுறைகளுக்கு முன்பே முடிவாகிவிட்ட விஷயம். சமுதாய வீதியில் நிரந்தரமாக இராவணர்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்."

     "அப்துல்லாவைச் சொல்றீங்களா?"

     "அப்துல்லா, கோபால், எல்லோரும்தான்! ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிக்கிறாங்களே!"

     அவள் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

     தன்னுடைய சொந்தக்கட்டிலில் உறங்குவது போன்ற சுகத்தை அந்த நெஞ்சு அவளுக்களித்தது. பெண் உறங்குவதற்கு இப்படி ஒரு கட்டிலும் இப்படி ஒரு துணையும் வேண்டுமென்பது ஆண்மக்களில் முதல் இராவணன் தோன்றியபோதே உலகில் முடிவாகிவிட்டது. இராவணன்கள் இருக்கிறவரை அவள் சமூகத்தின் புழுதி படிந்த வீதிகளில் துணையின்றித் தனியாக நடக்கவே முடியாதோ என்னவோ?