14

     அந்தப் பத்திரிகைப் படத்தைப் பற்றிய கவனத்தை கோபாலிடமிருந்து வேறு திசைக்குத் திருப்பிவிட முயன்றாள் மாதவி. முத்துக்குமரன் கோபாலின் கேள்விகளைப் பொருட்படுத்தாமலே இருந்து விட்டான். இப்படிப்பட்ட கேள்விகளைத் தங்களிருவரையும் தேடிவந்து அவன் கேட்பதே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு; முத்துக்குமரன் கோபால் இருவருமே கோபித்துக் கொண்டு விடாமல் நாசூக்காக நிலைமையைச் சமாளித்துவிட விரும்பினாள் மாதவி. அவளுடைய முயற்சி பயனளிக்கவில்லை.

     சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், "இராத்திரி பிளேன்ல அப்துல்லா ஊருக்குத் திரும்பராரு. நான் வழியனுப்ப 'ஏர்ப்போர்ட்' போறேன். நீங்க யாராச்சம் வரீங்களா?" என்று கோபால் கேட்டான்.

     முத்துக்குமரன், மாதவி இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனரே ஒழிய அவனுக்கு மறுமொழி கூறவில்லை. அவர்கள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவன்,

     "சரி நான் போயிட்டு வரேன்" - என்று விமான நிலையத்துக்குப் புறப்பட்டான். போகும் போது அந்தப் பத்திரிகையை அவன் எடுத்துச் செல்லவில்லை. அங்கேயே புல்தரையில் மறந்தார்ப் போலப் போட்டு விட்டுப் போய் விட்டான்.

     "அப்துல்லாவை வழியனுப்பறத்துக்கு நீ போவியே? போகலியா?" - என்று முத்துக்குமரன் கோபால் தலைமறைந்ததும் மாதவியைக் கேலி செய்தான்.

     அப்போது நாயர்ப் பையன் ஓடி வந்து, "டாக்ஸி ரொம்ப நேரமா வெயிட்டிங்கில் இருக்கு. டிரைவர் சத்தம் போடறான்" - என்று அவள் நிறுத்தி விட்டு வந்த டாக்ஸியைப் பற்றி நினைவூட்டினான். தான் ஒரு டாக்ஸியில் வந்ததையும் அது வெகு நேரமாக வெயிட்டிங்கில் நிற்பதையும் அவள் அப்போதுதான் நினைவு கூர்ந்தாள். உடனே முத்துக்குமரனின் பக்கம் திரும்பி, 'நான் புறப்படட்டுமா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகட்டுமா?' என்று கேட்பது போன்ற பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அவளைப் போகச் சொன்னான்.

     "டாக்ஸி நிற்கிறதுன்னாப் புறப்பட்டுப் போயேன். நாளைக்குப் பார்த்துக்கலாம்."

     அவள் போக மனமின்றியே புறப்பட்டாள். அவனிடம் இன்னும் நிறையப் பேச வேண்டுமென்று மனத்தில் ஒரு குறையோடுதான் புறப்பட்டாள் அவள். அவன் தோட்டத்திலிருந்து எழுந்து அவுட்ஹவுஸு க்குப் போய்ச் சேர்ந்தான்.

     மறுநாள் காலையில் பிரயாணத்துக்காகப் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி - அவளுக்கு டெலிபோன் செய்தான் கோபால். பாண்டிபஜாரில் ஏர்க்கண்டிஷன் செய்த பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் கோபாலுக்கு அக்கவுண்ட் உண்டு. நாடகங்களுக்கு வேண்டிய பட்டுப் புடவைகளைக்கூட அவள் அங்கே போய்த்தான் எடுத்துக் கொள்வது வழக்கம். பில் நேரே அங்கிருந்து கோபாலுக்கு அனுப்பப்பட்டுவிடும். "பதினொரு மணிக்கு நீ அங்கே வருவேயின்னு கடைக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடட்டுமா?" - என்று கோபால் அவளிடம் கேட்ட போது அவள் சரி என்று சொல்லியிருந்தாள். அதனால் அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானாள் அவள்.

     சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும். ஸீன்கள், ஸெட்டிங் அயிட்டங்கள் ஆகியவற்றுடனும் - விமானத்தில் கொண்டு போக முடியாத வேறு கனமான நாடகப் பொருள்களுடனும் பதினைந்து இருபது பேர் இன்னும் இரண்டு நாட்களில் கப்பலில் புறப்பட இருந்தார்கள். விமானத்தில் குறைந்த கனமுள்ள பொருள்களை மட்டுமே கொண்டு போக வேண்டுமென்று திட்டமிடப்பட்டிருப்பதால் - ஒரு வேளை அதிகப்படியான புடவை துணிமணிகளைக்கூடக் கப்பலில் முன்கூட்டியே கொடுத்தனுப்பிவிட வேண்டியிருக்கும். ஆகவேதான் கோபால் சொன்னவுடன் தட்டிச் சொல்லாமல் உடனே புடவை கடைக்குப் போக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள். கோபாலின் குழு மலேயாவில், முத்துக்குமரனால் எழுதிப் புதிதாக அரங்கேற்றப்பட்ட சரித்திர நாடகத்தைத் தவிர வேறு இரண்டொரு சமூக நாடகங்களையும் போட வேண்டியிருந்தது. அந்த சமூக நாடகங்களை எப்போதோ தொடக்க நாட்களில் கோபாலும், மாதவியும் நடித்திருந்தார்களாயினும் மறுபடி அவற்றை நடிப்பதற்குத் தயாராக வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். 'கழைக் கூத்தியின் காதல்' - என்ற சரித்திர நாடகத்தை மட்டுமே அப்துல்லா பார்த்து ஒப்பந்தம் செய்திருந்தாலும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் வெளிநாட்டு நகரங்களில் அந்த ஒரே நாடகத்தை நடத்துவதிலுள்ள சிரமங்களை உணர்ந்தே வேறு நாடகங்களையும் இடையிடையே சேர்க்க வேண்டியிருந்தது. சமூக நாடகம், சரித்திர நாடகம் எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி மாதவிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதனால் அந்தப் பாத்திரங்களுக்கேற்றபடி நவநாகரிகப் பட்டுப் புடவைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. பகல் பதினொரு மணிக்குப் போனால் ஒரு மணி வரையாவது ஆகும். போக் ரோடு - பங்களாவிற்குப் போய்த் தன்னோடு முத்துக்குமரனை உடனழைத்துக் கொண்டு போக விரும்பினாள் அவள். தன்னோடு முத்துக்குமரனைப் புடவைக் கடைக்கு உடன் அழைத்துச் செல்ல எண்ணிய போதே அந்த எண்ணத்தின் மறுபுறம் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. அவன் உடன்வர மறுத்து விடுவானோ என்று பயந்தாள் அவள்.

     "ஐயா உங்களைப் புடைவைக் கடைக்கு அழைச்கிட்டுப் போகச் சொன்னாரு" என்று டிரைவர் பத்தேகால் மணி சுமாருக்கே அவள் வீட்டு வாசலில் காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான்.

     அவள் காரில் ஏறி உட்கார்ந்ததும், "நேரே பாண்டி பஜாருக்குத்தானே" என்று கேட்ட டிரைவரிடம்,

     "இல்லே! பங்களாவுக்கே போ. அவுட்ஹவுஸ்லேருந்து வசனகர்த்தா சாரையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவோம்" - என்றாள் மாதவி. கார் போக் ரோட்டை நோக்கி விரைந்தது.

     - அவள் போய்ச் சேர்ந்தபோது முத்துக்குமரன் அவுட்ஹவுஸ் வராந்தாவில் உட்கார்ந்து அன்றைய காலைத் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். அவள் காரிலிருந்து இறங்கி அருகே போய் நின்றதும் அவன் பேப்பரிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான்.

     "வாசனை ஜமாய்க்குதே? அப்துல்லா கொடுத்த செண்ட் போலேருக்கு..."

     "இன்னார் கொடுத்தான்னு கூட வாசனையே எடுத்துச் சொல்லுமா என்ன..."

     "சொல்லுதே! சும்மாவா? கமகமனில்ல சொல்லுது - "

     அவள் பதிலொன்றும் பேசாமல் புன்னகை புரிந்தாள்.

     "எங்கியோ வெளியிலே கிளம்பிட்டாப்ல இருக்கு."

     "ஆமாம்! உங்களையும் அழச்சிட்டுப் போகலாம்னு தான் வந்திருக்கேன்."

     "நானா? நான் எதுக்கு? இப்ப என்னைக் கூப்பிட்டப்புறம் பாதி தூரம் போனதும் வேற யாரோடவாவது காரிலே ஏறிப் போயிடறதுக்கா?"

     "உங்களுக்கு என் மேலே கொஞ்சம்கூட இரக்கமே கிடையாதா? இன்னும் அதையே சொல்லிக் குத்திக்காட்டிக்கிட்டிருக்கீங்களே..."

     "நடக்கறதைச் சொன்னேன்."

     "அப்படி அடிக்கடி சொல்லிச் சொல்லிக் காட்டறதிலே என்னதான் இருக்கோ! தெரியலே..."

     "நீ செய்யலாம்? அதை நான் சொல்லிக் காட்டக் கூடாதா என்ன?"

     "தப்புச் செய்யறவங்களை மன்னிக்கிறதுதான் பெருந்தன்மைம்பாங்க..."

     "அந்தப் பெருந்தன்மை எனக்கு இல்லைன்னுதான் வச்சுக்கயேன்..."

     "சும்மா முரண்டு பிடிக்காதீங்க...நான் ஆசையோட கூப்பிடறேன்... மாட்டேன்னு சொல்லி என் மனசைச் சங்கடப்படுத்தாமே புறப்பட்டு வாங்க..."

     "அப்பப்பா...இந்தப் பொம்பளைங்களோட பழகறது எப்பவுமே..."

     "பெரிய வம்புதான்னு வச்சுக்குங்களேன்" என்று அவன் தொடங்கி அரை குறையாக நிறுத்தியிருந்த வாக்கியத்தை அவள் முடித்தாள்.

     சிரித்துக்கொண்டே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு அவளோடு புறப்படத் தயாரானான் அவன்.

     புறப்பட்டுப் படியிறங்குகிறபோதுதான். "எங்கே போகணும்கிறே இப்ப?-" என்று போக வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.

     "பேசாமே எங்கூட வந்தீங்கன்னாத் தானே தெரியுது" என்று உரிமையோடு அவனை வற்புறுத்தினாள் அவள்.

     -கடை வாசலில் போய் இறங்கிய பின்புதான் அவள் தன்னைப் புடைவைக் கடைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் அவளைக் கேலி செய்யத் தொடங்கினான்.

     "ஓகோ! இப்பவே வற்புறுத்திப் புடைவைக் கடைக்கு இழுத்துக்கிட்டு வர்ர அளவுக்குப் போயாச்சா? உருப்பட்டாப்லதான் போ - " அவன் இவ்வாறு கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

     "நீங்கள் பார்த்து எது எது பிடிக்கிறது என்று சொல்கிறீர்களோ, அதை மறு பேச்சுப் பேசாமல் எடுத்துக் கொள்ளப் போகிறேன்."

     "புடைவைகளைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் நான் இல்லையே; கட்டிக்கொள்ளப் போகிறவர்கள் அல்லவா பிடித்தமானதைக் தேர்ந்தெடுக்க வேண்டும்!"

     "உங்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடித்ததாயிருக்கும்."

     கடைக்காரர்கள் அவர்கள் இருவரையும் அபூர்வமாக வரவேற்றனர்.

     "கோபால் சார் ஃபோன் பண்ணிச் சொன்னாரும்மா. அப்பருந்து தயாரா, எப்போ வரப்போறீங்கன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கோம்" என்று வாயெல்லாம் பல்லாக எதிர்கொண்டார் கடை முதலாளி.

     கீழே விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் மடிப்பு மடிப்பாகப் பட்டுப் புடைவைகள் அடுக்கப்பட்டிருந்தன. முத்துக்குமரனும் அவளும் ஜமுக்காளத்தில் அமர்ந்து கொண்டனர்.

     "சார் தான் எங்க புது நாடகத்தை எழுதிய ஆசிரியர். ரொம்பப் பெரிய படிப்பாளி. பெரிய கவிஞர்" என்று மாதவி அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, "போதும்! காரியத்தைப் பார்..." என்று அவள் காதருகே முணுமுணுத்தான் அவன்.

     குளிர்ந்த ரோஸ் மில்க் இரண்டு கிளாஸ்களில் அவர்கள் எதிரே கொண்டு வந்து வைக்கப்பட்டது.

     "இதெல்லாம் எதுக்குங்க...?" என்றாள் மாதவி.

     "உங்களைப் போலொத்தவங்க நம்ம கடைக்கு வர்ரதே அபூர்வம்..." என்று மோதிரங்கள் அணிந்த கையைக் கூப்பி உபசாரம் செய்யலானார் கடைக்காரர்.

     பட்டு வேஷ்டி, சில்க் ஜிப்பா, வெற்றிலைக் காவியேறிய புன்னகை - பட்டின் வழவழப்பைவிட அதிகம் மென்மையுள்ள முகமன் வார்த்தைகள், ஆகியவற்றோடு கடைக்காரர் அவர்களிடம் மிகவும் நாசூக்காகவும் விநயமாகவும் பழகினார்.

     நிறங்களும், மினுமினுப்பும், கரைகளும், அமைப்பும் ஒன்றையொன்று விஞ்சுகிறாற் போன்ற விதத்தில் புடைவைகள் அவர்களுக்கு முன்னால் குவிக்கப்பட்டன.

     "இது உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கிளிப்பச்சை நிறப் பட்டுப்புடைவை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள் அவள்.

     "கிளிகளுக்கு எல்லாம் பச்சை நிறம் பிடிப்பது நியாயமானதுதானே?" என்று புன்முறுவலோடு மறுமொழி கூறினான் முத்துக்குமரன். புடைவை எடுத்துக் கொண்டிருந்தவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னாள்;

     "இந்தக் குறும்புதானே வேண்டாம்னு சொன்னேன்."

     "புடைவையைப் பத்தி ஆம்பிளைகிட்டக் கேட்டா என்ன தெரியும்?"

     சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கட்டுக்களை விரித்தும், உலைத்தும் பார்த்தபின் - பன்னிரண்டு புடைவைகளைத் தேர்ந்தெடுத்தாள் மாதவி.

     "நீங்க ஏதாவது பட்டுவேஷ்டி எடுத்துக்கிறீங்களா?"

     "வேண்டாம்."

     "சரிகைக்கரை போட்ட வேஷ்டி உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குங்க...'' இது கடைக்காரர். முத்துக்குமரன் மறுத்துவிட்டான். கடையிலிருந்து அவர்கள் திரும்பும்போது பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபாலின் காரியதரிசி ரீஜனல் பாஸ்போர்ட் ஆபீஸிலிருந்து பாஸ்போர்ட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்கள் அவரவர்கள் கைவசம் ஒப்படைக்கப்பட்டன. கப்பலில் முன்கூட்டியே புறப்படுகிறவர்கள் பிரயாணத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஸீன்கள், நாடகப் பொருள்கள், ஸெட்டிங்குகள் எல்லாம் கப்பலில் கொண்டு போவதற்குரிய முறையில் கட்டப்பட்டன.

     நடிகர் சங்கம் ஒரு வழியனுப்பு உபசார விருந்துக்கு எற்பாடு செய்திருந்தது. கோபால் குழுவினர் மலேயா செல்வதை முன்னிட்டு நடைபெறுவதாக விளம்பரப் படுத்தப்பட்டிருந்த அந்த விழாவில் கப்பலில் போகும் கலைஞர்களுடன் கோபால், மாதவி, முத்துக்குமரன் அனைவருமே கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர், கோபால் குழுவினர் - தங்கள் கலைப் பயணத்தை வெற்றி கரமாக நடத்திக்கொண்டு வரவேண்டுமென்று வாழ்த்துக் கூறினார்.

     நாள் நெருங்க நெருங்கத் தெரிந்தவர்கள் வீட்டில் விருந்து, வழியனுப்பு உபசாரம் என்று தடபுடல்கள் அதிகமாயின. சிலவற்றில் முத்துக்குமரன் கலந்துகொள்ளவில்லை. ஒருநாள் மாலை மாதவியே அவனை ஒரு விருந்துக்கு வற்புறுத்தினாள். தனக்கு மிகவும் சிநேகிதமான ஒரு நடிகை கொடுக்கிற வழியனுப்பு உபசார விருந்து அது என்று அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் போகவில்லை. விமானத்தில் பயணம் புறப்பட வேண்டிய தினத்திற்கு முந்திய நாள் இரவு - முத்துக்குமரனையும், கோபாலையும் தன் வீட்டிற்குச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள் மாதவி.

     முத்துக்குமரன் விருந்துண்ண இருந்த தினத்தன்று மாலையிலேயே மாதவியின் வீட்டுக்கு வந்துவிட்டான். மாலையில் காபி சிற்றுண்டி கூட அங்கேதான் சாப்பிட்டான். அவளும் அவனும் அன்று மிகப் பிரியமாக உரையாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே சிறு சிறு நட்சத்திரங்களோடு கூடிய கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அன்று அவள் அணிந்திருந்தாள். அவளுடைய மேனியின் பொன் நிறத்தை அந்தப் புடவை நன்கு எடுத்துக் காட்டியது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கோலத்தைப் புகழ்ந்து அவன் ஒரு கவிதை வரி கூறினான்:

     "இருளைப் புனைந்துடுத்தி
     இளமின்னல் நடந்துவரும்-"

     அந்தக் கவிதை வரி அவளை மிக மிக மகிழச் செய்தது. "ரொம்ப அழகாகப் பாடி என்னைப் பிரமாதமாய்ப் புகழ்ந்திருக்கீங்க! அட்சரலட்சம் கொடுக்கலாம் இதுக்கு."

     "நிஜமாச் சொல்றீயா, அல்லது உன்னைப் புகழ்ந்ததுக்காகப் பதிலுக்கு என்னைப் புகழணும்னு புகழறியா?..."

     "நீங்க அதைச் சொல்றப்ப கேக்கறதுக்கு அழகாயிருந்திச்சு, புகழ்ந்தேன்-"

     அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது கோபாலிடமிருந்து ஃபோன் வந்தது. மாதவி தான் ஃபோனை எடுத்துப் பேசினாள்.

     "இன்கம்டாக்ஸ் விஷயமா ஒருத்தரை அவசரமாப் பார்க்க வேண்டியிருக்கு. நான் இன்னிக்கு அங்கே வர்ரத்துக்கில்லே மன்னிச்சுக்க..."

     "இப்படிச் சொன்னா எப்படி? நீங்க அவசியம் வரணுமே! நானும் வசனகர்த்தா சாரும் ரொம்ப நேரமா உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிட்டிருக்கோம்."

     "இல்லை! இன்னிக்கு முடியும்னு தோணலை எனக்கு, முத்துக்குமாரு வாத்தியாரிடம் சொல்லிடு."

     - அவள் முகம் மெல்ல இருண்டது. ஃபோனை வைத்துவிட்டு. "அவரு வரலியாம். யாரோ இன்கம்டாக்ஸ் ஆளைப் பார்க்கப் போகணுமாம்" என்று முத்துக்குமரனை நோக்கிக் கூறினாள் மாதவி.

     "அதுக்கென்ன உனக்கு இவ்வளவு சடைவு?"

     "சடைவு ஒண்ணுமில்லே, வர்றேன்னு சொல்லி ஒப்புக் கொண்டப்புறம் திடீர்னு இப்படிச் சொல்வதைக் கேட்டா என்னவோ போலிருக்கு."

     "நான் ஒண்ணு கேக்கறேன் மாதவி, வித்தியாசமா நினைச்சுக்க மாட்டியே?"

     "என்ன?...கேளுங்களேன்..."

     "இன்னிக்கு விருந்துக்கு கோபால் வந்து நான் மட்டும் வராமப் போயிருந்தேன்னா எப்படி நினைப்பே நீ? -"

     "அப்படி ஒண்ணைக் கற்பனை செய்யவே என்னாலே முடியலே - "

     "அப்படி நடந்திருந்தா என்ன செய்வே? அதைத்தான் நான் இப்பக் கேக்கிறேன்!"

     "அப்படி நடந்திருந்தா என் முகத்திலே சிரிப்பையே பார்க்க முடியாது. நான் ஏறக்குறைய நடைப்பிணமாப் போயிருப்பேன்..."

     "என்ன இருந்தாலும் இப்பக் கோபால் இங்கே வரலேங்கறதுலே உனக்கு ஏமாற்றம்தான்...."

     "அப்படித்தான் வச்சுக்குங்களேன் - "

     "........"

     "நான் வந்திருக்கேன்ங்கிறது ஒரு பெருமையா என்ன, கோபாலைப் போல ஸ்டேட்டஸ் உள்ள பெரிய நடிகன் வந்தா உனக்கும் பெருமை, அக்கம்பக்கத்தாருக்கும் அது கம்பீரமாகத் தெரியும்..."

     "நீங்க சும்ம.. இருக்காமே என் வாயைக் கிண்டறீங்க? கோபால் சார் வரலேங்கிறதிலே எனக்கு வருத்தந்தான். ஆனா அவரு வராத அந்த வருத்தம் நீங்க இப்ப இங்கே வந்திருக்கிற சந்தோஷத்துக்கு ஈடானதான்னு கேட்டீங்கன்னா இல்லைன்னுதான் சொல்வேன்."

     "நீ ஒரு உபசாரத்துக்கு இப்படிச் சொல்றே. அப்படித்தானே?"

     "என் பிரியத்தைச் சந்தேகிச்சா நீங்க நிச்சயமா நல்லா இருக்க மாட்டீங்க..."

     "இப்படி ஒரு சாபமா எனக்கு?"

     "சாபம் ஒண்ணும் இல்லே. நீங்க துணைக்கு வர்ரீங்கங்கற நம்பிக்கையில தான் நான் இந்தப் பிரயாணத்துக்கே ஒப்புத்துக்கிட்டேன்- "

     "கோபிச்சுக்காதே. சும்மா உன் வாயைக் கிளறிப் பார்த்தேன் -"

     முத்துக்குமரன் அவள் முகத்தையும் உயிர்க்களை திகழும் அந்த வனப்பு நிறைந்த விழிகளையுமே இமையாமல் பார்த்தான். அவற்றில் அவள் சத்தியமாகத் தனக்கு அர்ப்பணமாகியிருக்கிறாள் என்ற உணர்வின் சாயலை அவன் கண்டு கொள்ள முடிந்தது. அந்தச் சத்தியமான உணர்வைக் கண்டுபிடித்த பெருமிதத்தோடு அவள் வீட்டில் விருந்துண்ண அமர்ந்தான் அவன்.