9

     "இன்னிக்கு உனக்குப் பணம், பவிஷு எல்லாம் வந்திட்டதுனாலே நாடகம்னா என்னன்னு நீ கரைகண்டு விட்டதாக நான் ஒப்புக்கொண்டு விடமாட்டேன். நாடகம்னா என்னன்னு எனக்குத் தெரியும். அதைக் கேட்டு அதன்படி நடக்கிறதைவிட வேறே எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. திடீர்னு உன்னை நீ ரொம்பப் பெரிய புத்திசாலியா நினைச்சுக்க வேண்டிய அவசியமில்லே" - என்றெல்லாம் கோபாலைக் கண்டிக்க நினைத்திருந்தும் மாதவியின் முன் அதைச் செய்து கோபாலின் மானத்தை வாங்க விரும்பவில்லை அவன்,

     - வெளியேறும்போது நாடகப் பிரதி ஒன்றையும் கையிலெடுத்துக்கொண்டு வெளியேறிய கோபாலை "இந்தா அதை எங்கே நீ கொண்டு போறே? இப்படிக் கொடுத்திட்டுப் போ" - என்று உரத்த குரலில் அதட்டி வாங்கி வைத்துக் கொண்டான் முத்துக்குமரன். அந்த அதட்டலையும் மீற முடியாமல் கோபால் கட்டுப்பட்டான்.

     இருவருடைய இந்த நிலைகளுக்கு நடுவே தான் நின்று காண விரும்பாமல் மாதவி வீட்டுக்குப் போய் விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் பங்காளாவுக்குப் போய்விட்டான். போகும் போது முத்துக்குமரனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை, அது முத்துக்குமரனுக்கு ஒரு மாதிரி விட்டுத் தெரிந்தது. ஆனாலும் சுபாவமான அகங்காரத்தினால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஏழு மணிக்குச் சாப்பாடு கொண்டு வந்த நாயர்ப் பையன், "ஐயா உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு." - என்று ஓர் உறையிலிட்டு ஒட்டிய கடிதத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முத்துக்குமரன் ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினான். பையன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்து விட்டுக் கிளாஸில் தண்ணீரும் ஊற்றியபின் பதிலைக்கூட எதிர்பாராமல் பங்களாவுக்குப் போய்விட்டான்.

*****

     "அன்பிற்குரிய முத்துக்குமரனுக்குக் கோபால் எழுதியது. நீ மாதவியின் முன்னிலையில் என்னை எடுத்தெறிந்து பேசுவதும், கேலி செய்வதும், கண்டிப்பதும் உனக்கே நன்றாக இருந்தால் சரி. என்னிடம் அடங்கி வேலை செய்ய வேண்டியவர்களுக்கு முன்னால் நீ என்னை அவமானப்படுத்துவதை நான் விரும்ப முடியாது. அதை உன்னிடம் நேருக்கு நேர் சொல்ல நினைத்தும் தயக்கத்தினால் எழுதி அனுப்ப நேரிடுகிறது. இதை நீ புரிந்து கொண்டால் நல்லது. நாடகத்தை எழுதியிருப்பது நீ என்றாலும் அதை நடத்தவும் நடிக்கவும் போகிறவன் நான்தான் என்பது நினைவிருக்க வேண்டும்.

இப்படிக்கு,
கோபால்"

     என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கோபத்தோடு கசக்கி மூலையில் எறிந்தான் முத்துக்குமரன். கோபாலின் சுயரூபம் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்கு முன்னால் கோழையைப் போலப் பயந்து சாகும் அவன் - பின்னால் போய் என்னென்ன நினைக்கிறான் என்பதைக் கடிதம் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. கோபாலின் மேல் ஏற்பட்ட கொதிப்பில் சாப்பிடக்கூடத் தோன்றாமல் சிறிது நேரம் கடந்தது. அப்புறம் பேருக்கு ஏதோ சாப்பிட்டுக் கடனை கழித்த பிறகு சிறிது நேரத்தில் படுக்கையில் போய் சாய்ந்தான். மாதவி தன்னிடம் நெருங்குவதோ, ஒட்டிக் கொண்டாற் போலப் பழகுவதோ கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

     இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தன்னைப் பற்றியும் மாதவியைப் பற்றியும் கோபாலைப் பற்றியும் அரங்கேற வேண்டிய புதிய நாடகத்தைப் பற்றியுமே சிந்தித்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன். 'மறுநாள் ரிஹர்ஸலுக்காகத் தான் குறிப்பிட்டுச் சொல்லியனுப்பிய நேரத்தில் கோபால் அங்கே வருகிறானா இல்லையா?' என்பதை அறிவதில் அவன் ஆவலாயிருந்தான். அப்படி ஒரு வேளை தான் சொல்லியனுப்பியிருந்தபடி ரிஹர்ஸலுக்குத் தன்னைத் தேடி வராமல் கோபால் புறக்கணிப்பானானால் எழுதிய நாடகத்தோடு அந்த வீட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும் என்ற குரூரமான பழிவாங்கும் ஆசையும் அவனுள் கிளர்ந்தது அப்போது.

     ஆனால் மறுநாள் காலையில் அப்படி எல்லாம் நேரவில்லை. ரிஹர்ஸலுக்கென்று அவன் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே கோபால் அவுட்ஹவுஸிற்குத் தேடி வந்து விட்டான். மாதவியும் சரியான நேரத்திற்கு அங்கே வந்து விட்டாள். கோபால் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டது முத்துக்குமரனுக்கு ஓரளவு வியப்பை அளித்தாலும் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. சுபாவமாக தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினான் அவன். நாடகக் கம்பெனி நடைமுறைப்படியே எல்லாம் நிகழ்ந்தன. பூஜை போட்டு நாடகத்தின் ஒத்திகையைத் தொடங்குவதற்கு முன் கதையின் இயல்பு - கதாபாத்திரங்களின் இயல்பு பற்றிக் கோபாலுக்கும் மாதவிக்கும், விளக்கிச் சொல்லத் தொடங்கினான் முத்துக்குமரன். அதைச் சொல்லி விளக்கி விட்டுக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நேரே நடிப்பவர்களின் பெயர்களை நிரப்பிக் கொடுக்குமாறு கோபாலிடம் தாள்களைக் கொடுத்தான் அவன்.

     கழைக்கூத்தி - மாதவி
     பாண்டியன் - கோபால்

     புலவர்கள் - சடகோபன், ஜயராம் என்று தொடங்கி மொத்தம் பதினெட்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்களின் பெயர்களைப் பூர்த்தி செய்து முத்துக்குமரனிடம் கொடுத்தான் கோபால்.

     "இந்தப் பதினெட்டுப் பேர்லே நாம டைப் செய்திருக்கிற பிரதி மூணு பேருக்குத்தான் வரும். பாக்கி ஆளுங்க வசனம் மனப்பாடம் பண்ண இதைப் பார்த்துப் பிரதி எடுத்துக்கிட்டுப் போகணும்" என்றான் முத்துக்குமரன். கோபாலும் உடனே "ஆமாம்! அப்படித்தான் செய்யணும். அவங்க பிரதி எடுத்துக்கிட்டுப் போக நான் ஏற்பாடு செய்யிறேன்" - என்று அதற்கு ஒப்புக்கொண்டான். கோபாலுக்கும், மாதவிக்கும் காலை நேரத்தில் ஒத்திகை என்றும், மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மாலை நேரத்தில் ஒத்திகை என்றும் ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று முத்துக்குமரன் தெரிவித்த கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டது. கோபால் ஒத்திகையின் போது திடீரென்று நாடக வசனத்தில் ஒரு பகுதியைத் திருத்த வேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவிக்க முற்பட்டான்.

     "கதாநாயகியாயிருக்கிற கழைக்கூத்திக்கு "கமலவல்லி"ன்னு பேர் வச்சிருக்கே; கதாநாயகன் கதாநாயகியைக் கூப்பிடற எல்லாக் கட்டத்திலியும் "கமலவல்லி!" "கமலவல்லி"ன்னு முழுப்பெயரையும் நீட்டி இழுத்துக் சொல்லிக் கூப்பிடறதாகவே வருது. "கமலா"ன்னு கூப்பிடறதா மாத்தினா நல்லது. கூப்பிடறதுக்கு அழகாகவும் சுருக்கமாவும் வாய் நெறையவும் இருக்கும்."

     "கூடாது! கமலவல்லீன்னுதான் கூப்பிடணும்.

     "ஏன்? 'கமலா'ன்னுன்னு கூப்பிட்டா என்ன?"

     "இது சரித்திர நாடகம்! "கமலவல்லீ"ங்கிற பெயரைக் "கமலா"ன்னு சுருக்கிக் கூப்பிடறப்பவே ஒரு சமூக நாடகத் தன்மை வந்துடும்."

     "உனக்கு ஏன் புரியப் போகுது?" என்று முத்துக்குமரன் பதிலுக்கு வினவியபோது கோபால் முகம் சிவந்தான். தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆயினும் ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. முத்துக்குமரன் கோபாலுக்காக எதையும் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ இல்லை. வசனத்திலும், நடிப்பிலும், ஒத்திகையிலும், தான் கூறுவதைக் கண்டிப்பாக வற்புறுத்தினான் அவன். முதல் நாள் ஒத்திகையில் வேறு அதிகமான தகராறுகள் எவையும் கோபாலுடன் முத்துக்குமரனுக்கு ஏற்படவில்லை. மாதவியோ கோபாலுக்கு முன் புலியைக் கண்ட மான் போல் பயந்து நடுங்கினாள். அவளையும் வைத்துக்கொண்டே கோபாலிடம் கடுமையாகவோ அளவு மீறியோ பேசுவதற்கு முத்துக்குமரன் தயங்கினான். முந்திய தினத்தன்று இரவு கோபால் பையனிடம் எழுதிக் கொடுத்தனுப்பியிருந்த கடிதம் நினைவு வந்து அவனை ஓரளவு தயங்கச் செய்தது. கோபால் அசம்பாவிதமானவையும் அபத்தமானவையுமான கேள்விகளைக் கேட்கும்போதெல்லாம் அவனைக் கடுமையாகத் திட்ட வேண்டுமென்று கோபம் வந்து கூடப் பொறுமையாகப் போய்விட முயன்றான் அவன்.

     அன்று பகல் இரண்டு மணிக்கு முன்பே தனக்கு வேறு "கால் ஷீட்" இருப்பதாகக் கூறி கோபால் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் இருந்தாள். அவள் அவனைக் கடிந்து கூறினாள்.

     "உங்களுக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நாடகத்தை எழுதிக் கொடுத்தால் அவர்கள் இஷ்டப்படி, போட்டுக் கொண்டு போகிறார்கள்?"

     "நாடகத்தை எழுதியிருப்பவன் நான் என்பதை நானே அத்தனை சுலபமாக மறந்துவிட முடியுமா என்ன?"

     "மறந்திட சொல்லலை, ஓரேயடியா மன்றாடுவானேன்?"

     "அப்படியில்லே, பிடிவாதத்தினாலேதான் சில நல்லதையாவது இந்த நாளிலே காப்பாத்திக்க முடியுது."

     "நல்லதைக் காப்பாத்த யார் ஆசைப்படறாங்க? பணத்தைக் காப்பாத்திக்கத்தான் இப்ப எல்லாருமே ஆசைப்படறாங்க."

     "நீ ரெண்டாவதாகச் சொன்னது கோபாலுக்குப் பொருத்தம்தான்! அது சரி. சாயங்காலம் மத்தவங்களுக்கு ரிஹர்சல்னு சொல்லிட்டுப் போனானே; மத்தவங்க யாராரு? எப்ப வருவாங்க? எப்பிடி வருவாங்க? ஒண்ணுமே தெரியலியே?"

     "சொல்லியனுப்பிச்சிருப்பாரு. 'வேன்' போய்க் கூட்டிக்கிட்டு வரும். நாடகங்களிலே ஸைட் ரோல் நடிப்புக்குன்னே பல குடும்பங்கள் இங்கே கஷ்ட ஜீவனம் நடத்துது. ஆளுக்கென்ன பஞ்சம்?"

     "அது சரி? ஆனா பஞ்சத்துக்கு வந்த ஆளுங்கள்ளாம் கலையுணர்ச்சியைக் காப்பாத்திட முடியாதே?"

     "கலையைக் காப்பத்தறதுக்காக யாருமே பட்டணத்துக்கு வர மாட்டாங்க. வயித்தைக் காப்பாத்திக்கிறதுக்காகத்தான் வருவாங்க...வந்திருக்காங்க."

     "அதுதான் பட்டணத்துலே "கலை'ங்கள்ளாம் இப்படி இருக்குப் போலிருக்கு."

     இதற்கு மாதவி பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில அவள் கூறியது போலவே ஒரு 'வேன்' நிறைய ஆண்களும் பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் வந்து இறங்கினார்கள். ஏதோ களையெடுக்க வந்தவர்கள் மாதிரிக் கூப்பாட்டுடன் வந்தவர்கள் 'வேன்' அருகே வந்த முத்துக்குமரனையும் மாதவியையும் பார்த்ததும் அவர்களாகவே அடங்கிக் கட்டுப்பட்டு நின்றனர். அவர்களை அவுட் ஹவுஸ் வராந்தாவுக்கு அழைத்துப் போய் யார் யாருக்கு எந்தப் பாத்திரம் தரலாம் என்று தீர்மானம் செய்ய அரைமணி நேரத்துக்கு மேலாயிற்று.

     "எமது மாமன்னரின் வாளைச் சுழற்றினால் இப்பூமண்டலமே சுழலுமென்பதை நீ அறிய வேண்டும்?" என்ற வசனத்தைப் படைத் தூதன் வேடமிட இருந்த ஒர் இளைஞனைப் படிக்கச் சொல்லிக் கேட்டான் முத்துக்குமரன்.

     "எமது மாமன்னரின் வாலைச் சுலற்றினால் இப்பூமண்டலமே சுளலும்" என்று படித்த அந்த இளைஞனை நோக்கி, "ஏன்? உமது மாமன்னரின் வால் அத்தனை நீளமோ?" என்று முத்துக்குமரன் கிண்டல் செய்து பதிலுக்குக் கேட்டபோது அந்தக் கிண்டல் கூடப் புரியாமல் மருண்டு நின்றான் அந்த இளைஞன். "கிரகசாரமே" என்று தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர முத்துக்குமரனால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர்களில் பலர் தெளிவாக வசனங்களை உச்சரித்துப் பேசுவதற்கோ முகபாவங்களைக் காட்டியும், மாற்றியும் நடிப்பதற்கோ தகுதி அற்றவர்களாக இருந்தார்கள். நாடக உப பாத்திரங்களில் நடிப்பதற்கு நாட் கூலிகளைப் போல இப்படிப் பலர் சென்னையில் மலிந்திருக்கிறார்கள் என்பதை முத்துக்குமரனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரவர்கள் பகுதியை அங்கேயே உட்கார்ந்து பிரதி எடுத்துக் கொள்ளுமாறு கூறித் தாளும் பென்சிலும் கொடுத்தாள் மாதவி. அதில் சிலருக்குப் பிழை இல்லாமல் தமிழில் எழுதும் பழக்கம்கூட இல்லை என்பது தெரிய வந்தது.

     "பாய்ஸ் கம்பெனியில்கூட வயிற்றுக்கு வறுமை உண்டு. ஆனால் கலை வறுமையையோ தொழில் சூன்யங்களையோ அந்தக் காலத்தில் பார்க்க முடியாது. இங்கே இருக்கிற நெலமையைப் பார்த்தால் அந்தக் காலமே நல்லாயிருந்திருக்குன்னுதான் தோணுது..." என்று மாதவியைத் தனியே உள்ளே அழைத்து ஏக்கத்தோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.

     "என்ன செய்யிறது? இங்கே அப்பிடித்தான் இருக்கு. கஷ்டப்படறவங்கதான் இப்படி வேலையைத் தேடி வர்ராங்க. இதைத் கலைன்னு நெனச்சுத் தேடி வர்ரவங்களைவிட பிழைப்புன்னு நெனைச்சுத் தேடி வர்ரவங்க தான் அதிகமா இருக்காங்க" என்றாள் மாதவி. ஒத்திகையின் போது அந்த நடிகர்களிடம் இன்னொருவிதமான தொத்து நோயும் பரவி இருப்பதை முத்துக்குமரன் கண்டான். திரைப்படத் துறையில் பிரபலமாக இருக்கிற ஏதாவதொரு நடிகனின் குரல், பேசும் முறை, முகபாவம் அத்தனையையும் இமிடேட் செய்வதே தொழில் இலட்சியமாகவும், திறமையாகவும் அவர்களால் கருதப்பட்டது. கலையிலும், கலையைப் பற்றிய எதிர்கால நோக்கத்திலும் பக்குவமடையாத தன்மைகள் அதிகமாக இருந்தன. இரண்டு மூன்று மணி நேரம் அவர்களுக்குப் பயற்சியளிப்பதில் செலவழித்தான் அவன். ஒவ்வொரு உப நடிகனுக்கும் ஒரு நிமிஷம் மேடையில் தோன்றினாலும், தான் தோன்றுகிற ஒரு நிமிஷத்தில் கதாநாயகனைவிட அதிக முக்கியத்துவத்தோடு தோன்றிப் பேசி அட்டகாசம் செய்துவிட்டுப் போய்விட வேண்டுமென்ற ஆசை இருப்பதை முத்துக்குமரன் கண்டான். கலையில் எந்தத் துறையிலும் குறைவான ஆத்ம வேதனையும், அதிகமான ஆசையும் உடையவர்களே நிறைந்து தென்படுவதைச் சென்னையில் கண்டான் அவன். ஏதாவதொரு முன்னணி நடிகனுடைய பணமும், புகழும், கார்களும், பங்களாக்களுமே முன்னணிக்கு வராத ஏழை உபநடிகனின் கனவில் இருந்து கொண்டு தூண்டினவே தவிர, உழைப்பின் முனைப்போ, திறமை அடைய வேண்டுமே என்ற ஆர்வமோ தூண்டவில்லை. கலைத்துறைக்கு இப்படிப்பட்ட தூண்டுதல் பெருங் கெடுதல் என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான். மறுநாளும் ஒத்திகைக்காக அவர்களை வரச்சொல்லி விடை கொடுத்து அனுப்பும்போது மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. உப நடிகர்களை கூட்டமாக ஏற்றிக் கொண்டு வந்த 'வேன்' மறுபடியும் ஒரு மந்தையை உள்ளே அடைப்பதுபோல் திருப்பி ஏற்றிக்கொண்டு பெருத்த ஓசையுடன் பங்களாவிலிருந்து வெளியேறியது. புறப்பட்டுப் போகிற வேனைப் பார்த்தபடி மாதவியிடம் முத்துக்குமரன் கூறினான்:

     "ஒவ்வொரு நடிகரும் தன்னைச் சேர்ந்த பத்துப்பேருக்கு வேலை கொடுக்கலாம்னுதான் இப்படி ஒரு நாடகக் குழுவே ஏற்படுத்திக்கிறாங்கண்ணு தெரியுது."

     "உண்மை அதுதான்! ஆனா - அப்படி நினைக்காமே நல்ல கலை நோக்கத்தை வைத்துத் தொடங்கறவங்ககூட நாளடையில் நீங்க சொன்ன மாதிரி ஆயிடறாங்க..."

     "உப நடிகர்களுக்கு மாதச் சம்பளமா? அல்லது நாள் கூலியா? எப்படி இங்கே நடை முறை?"

     "வேண்டியவங்களா இருந்திட்டாங்கன்னா - ஒரு வேலையும் செய்யாட்டிக்கூட மாதச் சம்பளம் கொடுத்துடுவாங்க, மத்தவங்களுக்கு நாடகம் நடக்கிற தினத்தன்னிக்கு மட்டும் சம்பளம் இருக்கும். அது பத்து ரூபாயிலேயிருந்து ஐம்பது ரூபா வரை இருக்கும். ஆளைப் பொறுத்து, வேஷத்தைப் பொறுத்து, பிரியத்தைப் பொறுத்து - எல்லாம் வித்தியாசப்படும்..."

     "நாடகங்கள் பெரும்பாலும் எப்படி நடக்கும்? யார் அடிக்கடி கூப்பிடறாங்க? எதிலே நல்ல வசூல்?"

     "மெட்ராசிலே சபாக்களை விட்டால் வேற வழி இல்லை. இங்கே அநேகமா ஒவ்வொரு ஏரியாவிலேயும் ஒரு சபா இருக்கு. வெளியூர்லேயும் பம்பாய், கல்கத்தா, டில்லியிலே நம்ம ஆளுங்களுக்கு சபாக்கள் இருக்கு. மத்தபடி முனிசிபல் பொருட்காட்சி, மாரியம்மன் கோயில் பொருட்காட்சி. கட்சி மாநாட்டு அரங்கம்னு விதம் விதமா - நடக்கறது உண்டு. வெளியூர் நாடகம்னா ஸீன்களையும் ஆட்களையும் கொண்டு போய் திரும்பறதுக்குள்ள உயிர் போயிடும்..."

     "நடத்துகிற சபாக்கள், பொருட்காட்சிகள், அரங்கங்கள் எல்லாம் பெருகியிருந்தாலும் - அன்னிக்கு இந்தக் கலையிலே ஈடுபடறவனுக்கு இருந்த ஆத்ம வேதனை இன்னிக்கி இல்லே. இன்னிக்கு வயிற்றுப் பசி மட்டுமே இருக்கு. கலைப்பசி கொஞ்ச நஞ்சமிருந்தாலும் அதை மிஞ்சற அளவுக்கு வயிற்றுப் பசிதான் எங்கேயும் தெரியுது."

     "நீங்க சொல்றது உண்மைதான்." - மாதவி பெருமூச்சு விட்டாள். சிறிது நேரத்துக்குப் பின்பு அவளே மேலும் கூறலானாள்.

     "கல்கத்தாவிலே தினசரி ரெகுலரா நாடகமே நடத்தற தியேட்டர்கள் இருக்கு, நாடகங்களிலேயும் நீங்க சொல்ற ஆத்ம வேதனை இருக்கு. நான் ஒரு தடவை கோபால் சாரோட கல்கத்தாவுக்குப் போயிருக்கிறப்ப 'பசி'ன்னு ஒரு வங்காளி நாடகம் பார்த்தோம். ரொம்ப நல்லா இருந்தது! 'டயலாக்' ரொம்பக் கொஞ்சம், "ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ்'தான் அதிகம். நாடகம் கச்சிதமா பட்டுக் கத்தரிச்ச மாதிரி இருந்திச்சு..."

     "கோபால் சாரோட எதற்காகக் கல்கத்தா போயிருந்தாய் நீ" - என்று கேட்க நினைத்து வாய் நுனி வரை வந்துவிட்ட அந்தக் கேள்வியை அப்போது நாசூக்காக அடக்கிக் கொண்டு விட்டான் முத்துக்குமரன்.

     சிறிது நேரம் இருவருக்குமிடையே உரையாடல் தொடராமல் மௌனம் நிலவியது. தான் கோபாலுடன் கல்கத்தா போயிருந்ததை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்து அடங்கினாற்போல் தலைகுனிந்து சில விநாடிகள் மௌனமாயிருந்தாள் அவள். கை தவறி வாசித்துவிட்ட அபஸ்வரத்திற்காக உள்ளூற வருந்தும் நல்ல வாத்தியத்தின் சொந்தக்காரனைப் போன்ற நிலையில் அப்போது இருந்தாள் அவள். அபஸ்வரத்தைக் கேட்டுவிட்டு உட்கார்ந்திருந்தவனுக்கோ இன்னும் சிரமமாக இருந்தது. மௌனத்தை நீடிக்க விரும்பாமல் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள்.

     "நாளைக்கு எங்க ரெண்டு பேரோட ரிஹர்ஸலும் காலையிலே வழக்கம் போலத்தானே? நாள் ரொம்பக் குறைச்சலா இருக்கே?"-

     "எதுக்கு நாள் குறைச்சலா இருக்கு?"-

     "நாடக அரங்கேற்றத்துக்குத்தான், மந்திரி "டேட்" கொடுத்திருக்காரே?"

     "நாடகம் அரங்கேறப் போகுதுங்கறதைவிட மந்திரி தேதி கொடுத்திருக்காருங்கறது தானே எல்லாருக்கும் ஞாபகமிருக்கு..."

     "தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க. நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே."

     "எந்த அர்த்தத்திலே சொன்னா என்ன? இன்னிக்கி எந்தக் கலையும் அந்தக் கலைக்காகவே இருக்கிறதாகத் தெரியலை. மந்திரி தலைமை வகிக்கிறதுக்காகவும் பேப்பர்லே நியூஸ் வர்றதுக்காகவும்தான் எல்லாமே இருக்கிறதாகத் தோணுது..."

     "இன்னொரு விஷயம்... உங்ககிட்ட ரொம்பப் பணிவாகக் கேட்டுக்கிறேன். நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்கன்னாத்தான் அதை நான் உங்களிடம் சொல்லலாம்."

     "விஷயத்தையே சொல்லாம இப்படிக் கேட்டா உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?"

     "நீங்க கோபப்படாமல் பொறுமையாகக் கேட்கணும். அதை எப்படி உங்ககிட்டச் சொல்ல ஆரம்பிக்கிறதுன்னே எனக்குத் தயக்கமா இருக்கு. நல்ல வேளையா இன்னிக்கு முதல் நாள் ரிஹர்ஸல்லே அப்படி எதுவும் நடக்கலை..."

     "எது நடக்கலை?"

     "ஒண்ணுமில்லே! ரிஹர்ஸலின்போது கோபால் சார் என்னைத் தொட்டு நடிக்கிறதையோ, நெருக்கமாகப் பழகறதையோ, திடீர்னு நான் எதிர்க்கவோ, கடுமையாக உணர்ந்து முகத்தைச் சுளிக்கவோ முடியாது. அதையெல்லாம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. நான் அபலை, என்னைத் தொடறவங்களை எல்லாமே நானும் தொட விரும்பறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது."

     இப்படிக் கூறியபோது ஏறக்குறைய அழுது விடுவது போன்ற நிலைக்கு அவள் குரல் பலவீனமடைந்து விட்டது. கண்களின் பார்வை அழாத குறையாக அவனை இறைஞ்சியது. அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய வேண்டுகோளில் நிறைந்திருக்கும் முன்னெச்சரிக்கையும் தற்காப்பும் அவனுக்குப் புரிந்தன. அவளுடைய அந்த முன்னெச்சரிக்கையே அவள் உண்மையில் தனக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிய வைத்தாலும், குழந்தைத்தனமான மழலைத் தன்மையுடனும் பெண்மைக்கே உரிய பேதமையுடனும் அவள் அதைத் தன்னிடம் வேண்டியதையும் அவன் உணர்ந்தான். அவனுக்குப் பெருமையாகவும் இருந்தது; அவளை எதிர்க்க வேண்டும் போலவும் இருந்தது; அவளைக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது; அவளுக்கு அபயமளித்துத் தழுவிக்கொள்ள வேண்டும் போலவும் இருந்தது. அவன் மறுபடியும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் கண்கள் இன்னும் அவனை இறைஞ்சிக் கொண்டுதான் இருந்தன.