12 ஒரு பெண்ணின் நளினம் என்பதே தன் அன்பை அவள் அழகாகவும், சாதுரியமாகவும் வெளியிடுவதில்தான் இருக்கிறதோ என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. அவள் கூறிய அந்த வாக்கியம் அவனை முற்றிலும் நெகிழச் செய்துவிட்டது. 'எங்கூட நீங்க வராம வேறே யார் வருவாங்க?' - இந்த வாக்கியத்தில் இழைந்து ஒலித்த ஏக்கமும், தாபமும் அவன் உள்ளத்தை உருக்கின. அவள் தன்னோடு என்றும் துணையாகக் கூடவருவதற்கு அவனைத் தவிர வேறெவருமே இல்லையென்று நம்பிக்கையோடு நினைப்பதை அந்தக் குரலில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளிடம் அவ்வளவு உரிமையோடு கோபப்படுவதற்கும் தாபப்படுவதற்கும் தான் யார் என்றும் எவ்வளவு காலமாகத் தான் அவளோடு பழகுகிறவன் என்றும் நினைத்துப் பார்த்த போது அது அவனுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவளுடைய உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், தளர்த்தவும் செய்கிற அளவிற்குத் தான் அவள்மேல் அத்தனை பிடிப்பையும், பற்றையும் எப்போது கொண்டோம், எப்படிக் கொண்டோம் என்றெல்லாம் எண்ணியபோது, அந்த மாறுதல் அவனையே அயரச்செய்தது. பிரியத்தையும், ஆசையையும் விடமுடியாத அளவுக்கு அவள் தன் மனத்தில் இணைபிரியாத பொருளாகியிருப்பதை அவனே புதிதாக அப்போதுதான் புரிந்து கொள்வதுபோல் உணரத் தலைப்பட்டான். மாலையில் அப்துல்லாவை அழைத்துவரச் செல்வதற்கு முன்னால் முத்துக்குமரனை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்தாள் அவள். "நான் மலேயாவுக்கு வரலை. இப்ப படம் ஒண்ணும் எடுக்க வேண்டாம்" என்றான் முத்துக்குமரன். "நீங்க வரலையின்னா நானும் போகப் போறதில்லே" என்றாள் அவள். அவள் சொல்லியதை அவன் சிரித்துக்கொண்டே மறுத்தான்: "நீ நாடகத்துக்குக் கதாநாயகி, நீ போகாட்டி நாடகமே நடக்காது. அதனாலே நீ போய்த்தான் ஆகணும்." "கதாநாயகரே வராட்டாக் கதாநாயகி போய் என்ன பிரயோசனம்?" "கோபால்தான் வர்ரானே." "நான் கோபாலைப் பத்திப் பேசலை, இப்ப என்னோட கதாநாயகரைப் பத்திப் பேசறேன். "அது யாரு?" "தெரிஞ்சு உணர்ந்து வேணும்னே கேட்கறீங்க இதை, அப்பிடித்தானே?" அவள் தன்னையே ஆத்மார்ததமான கதாநாயகனாக வரித்துப் பேசும் அந்தப் பேச்சைக் கேட்டு உள்ளம் பூரித்துப் பேசத் தோன்றாமல் மௌனமாயிருந்தான் அவன். அதன்பின் சிறிது நேரத்தில் அவள் கூப்பிட்டதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளோடு போட்டோ ஸ்டூடியோவிற்குச் சென்றான் அவன். போட்டோ ஸ்டூடியோவில் பாஸ்போர்ட்டுக்காக படம் எடுத்து முடிந்ததும், அவள் விரும்பியபடியே அவளும் அவனும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள். மாலையில் அப்துல்லாவை அழைத்துவர ஓஷியானிக் ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது அவன் மனநிலையை அறிந்து அவள் - தனியே செல்லவில்லை. காரில் அவனையும் உடனழைத்துக் கொண்டே புறப்பட்டாள். அவனும் அவளும் புறப்பட்ட கார் பங்களா காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதற்குள்ளேயே கோபால் இன்னொரு காரில் எதிரே வந்து விட்டான். அவள் அப்போதுதான் அப்துல்லாவை அழைத்துவரப் போகிறாள் என்று புரிந்து கொண்ட கோபமும், தான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி தனியே போகாமல் மாதவி முத்துக்குமரனையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறாள் என்பதைக் கண்டு எரிச்சலுமாகக் கடுகடுப்பான முகத்தோடு அவளை எதிர்கொண்டான் அவன். "அப்பவே போகச் சொல்லியிருந்தேனே உன்னை? நீ இப்பத்தான் போறியா?" "முடியலை. இவரை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போனேன். நேரமாயிடுச்சு. இப்பத்தான் புறப்பட முடிஞ்சிது." "அது சரி! சாரை ஏன் வீணா சிரமப்படுத்தறே? நீ மட்டும் அப்துல்லாவைக் கூப்பிடப் போயிட்டு வந்தாப் போதாது?" என்று நாசூக்காக முத்துக்குமரனைக் கத்திரித்துவிட முயன்றான் கோபால். அந்த நிலையில் முத்துக்குமரனே முன் வந்து கோபாலுக்குப் பதில் சொல்லி மாதவியைத் தர்மசங்கடமான நிலையிலிருந்து தப்புவித்தான். "இல்லே! நானேதான் 'ஓஷியானிக்' - எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு புறப்பட்டேன். நானும் இப்படிக் காத்தாடப் போயிட்டு வரேனே..." கோபாலுக்கு மேற்கொண்டு எப்படி முத்துக்குமரனைச் சமாளித்துக் கீழே இறக்குவது என்று தெரியவில்லை. "சரி! ரெண்டு பேருமே போய் அவரை அழைச்சிட்டு வாங்க. வண்டியிலே வர்றப்ப அவருட்ட விவாதம் ஒண்ணும் வச்சுக்க வேண்டாம். நமக்கு அவரிட்டக் காரியம் ஆகணும். வீணா அவர் மனசு புண்படக் கூடாது" என்று பொதுவாக எச்சரித்து விட்டு உள்ளே போனான் கோபால். ஆனால் உள்ளூற மாதவியின் மேல்தான் கடுங்கோபத்தோடு போனான் அவன். மாதவிக்கு அது ஓரளவு புரிந்து விட்டிருந்தாலும் முத்துக்குமரனிடம் அவள் அதைக் காண்பித்துக் கொள்ளவில்லை. "பயலுக்கு என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் காரிலிருந்து இறக்கி விட்டுடணும்னு ஆசை. முடியல்லே..." கோபத்தோட சிரித்துக் கொண்டே சொன்னான் முத்துக்குமரன். நல்ல வேளையாக அப்போது மாதவியே காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் அவர்கள் இருவரும் சுதந்திரமாகப் பேசிக் கொண்டு போக முடிந்தது. பினாங்கு அப்துல்லாவின் அறையில் இவர்கள் போகிற போது நாலைந்து விசிட்டர்கள் இருந்தார்கள். இவர்களையும் வரவேற்று உள்ளே அமரச் செய்து கொண்டார் அவர். "கோபால் என்னை நைட் டின்னருக்குத்தானே 'இன்வைட்' பண்ணினாரு! எட்டரை மணிக்கு வந்தாப் போதாது? இப்ப ஆறரை மணிதானே ஆகுது?" என்று கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே பேச்சை இழுத்தார் அப்துல்லா. மாதவி அவருக்கு மறுமொழி கூறினாள்: "இப்பவே வந்திட்டீங்கன்னாக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்திட்டு அப்புறம் சாப்பிடலாம்னு பார்க்கிறார். பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது. நிமிஷமா மணி எட்டரை ஆயிடும்." "ரியலி அன்னிக்கி உங்க நடிப்பு பிரமாதமா இருந்திச்சு. மலேயாவிலே உங்களுக்கு ரொம்ப நல்ல பேரு கிடைக்கும்" என்று மாதவியை அவள் வெட்கப்படுகிற அளவுக்கு நேரே முகத்துக்கு எதிரே புகழத் தொடங்கினார் அப்துல்லா. ஏற்கனவே இருந்த விசிட்டர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றனர். முத்துக்குமரனை அருகில் வைத்துக் கொண்டே தன்னை மட்டும் அவர் புகழ்வதை விரும்பாமல் கூச்சமடைந்த மாதவி, "எல்லாம் சாரோட பெருமைதான். நாடகத்தை அவ்வளவு நல்லா எழுதியிருக்கிறதினாலேதான் நாங்க - நடிச்சிப் பேர் வாங்க முடியுது..." என்றாள். "இருந்தாலும் நடிக்கிறவங்க திறமைதானே எழுதறவங்களுக்குப் பெருமையைத் தேடித்தரும், என்ன நான் சொல்றது. புரியுதில்லே?" என்று அப்துல்லா தான் சொல்லியதையே மேலும் வற்புறுத்தினார். முத்துக்குமரன் விவாதத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஆணி அடித்தாலும் இறங்காமல் காய்ந்த மரம் போலாகிவிட்ட சில வியாபார ஆசாமிகளிடம் கூடியவரை கலையைப் பற்றிப் பேசுவதையே தவிர்க்க விரும்பினான் அவன். அப்துல்லாவைப் பொருட்படுத்தி அவரோடு கலையைப் பற்றி விவாதிப்பதே கலைக்குக் செய்கிற துரோகம் அல்லது பாவம் என்று கருதியவனாகக் கால்மேல் கால் போட்டபடி அவன் சும்மா உட்கார்ந்திருந்தான். அவன் அப்படி மனோபாவத்தில் இருப்பதை மாதவியும் புரிந்து கொண்டாள். அப்துல்லாவின் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள். "போன மாதம் 'கங்கா நாடகக்குழு' மலேயாவுக்கு வந்திருந்தாங்களே? அவங்ககூட உங்க 'காண்ட்ராக்ட்லே' தான் வந்தாங்க போலிருக்கு? அவங்களுக்கு அங்கே நல்ல பேர்தானுங்களா?" "அப்துல்லா 'காண்ட்ராக்ட்'னாலே பேரு தானே வராது! எங்க கம்பெனி இருபத்தஞ்சு வருசமா தமிழ் நாட்டு நாட்டியக்காரங்க. நாடகக் கலைஞர்களை மலேயா வரவழைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கு. இதுவரை நாங்க ஏற்பாடு பண்ணி மலேயாவிலே எதுவும் சோடை போனதில்லை. சும்மா பெருமைக்கு சொல்றதா நீங்க நினைக்கப்பிடாது, நம்ம பேருக்கே அப்பிடி ஒரு ராசி உண்டு." "அதெல்லாம் நெறையக் கேள்விப்பட்டிருக்கோம்." "நமக்கு வியாபாரம் டயமெண்ட் மெர்ச்சண்டுங்க, ஒரு பொழுது போக்குக்காகத்தான் இந்தக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்றோம்." முத்துக்குமரனுக்கு அந்தப் பேச்சு அலுப்புத் தட்டியது, மாதவிக்கு ஜாடை காண்பித்தான். "புறப்படறலாங்களா? நீங்க தயாராகுங்க. கோபால் சார் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பாரு. சீக்கிரமாப் போனோம்னா நல்லது" என்று அப்துல்லாவை மெல்ல அவசரப்படுத்தினாள் அவள். அப்துல்லா உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனார். அறையில் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியருகே பெரிதும் சிறிதுமாகப் பலவகை 'செண்ட்' பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. அப்துல்லா உடை மாற்றிக் கொண்டு வந்து அந்தக் கண்ணாடியருகே நின்று பூசிக்கொண்ட ஒரு 'செண்ட்'டின் மணம் மின்சாரம் போல வேகமாக அறை முழுவதும் பரவியது. பாட்டிலோடு இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரே செய்யும் குமிழால் அவர் அந்த வாசனைப் பொருளைக் கழுத்திலும், சட்டை மேலும் பலமுறை அழுத்தி அழுத்தி ஸ்பிரே செய்து கொண்டார். உடை மாற்றுவதிலும், தயாராவதிலும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் வேகம், ஃபேன்ஸி எல்லாம் நிரம்பியவராக இருந்தார் அப்துல்லா. அவர் ஹோட்டல் பையனைக் கூப்பிட்டு அவர்கள் பருகுவதற்கு டீ வரவழைத்தார். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. அவரே டீயை 'மிக்ஸ்' செய்து மூன்று கோப்பைகளிலும் நிரப்பத் தொடங்கிய போது மாதவியும் அவருக்கு உதவி செய்தாள். டீயை 'மிக்ஸ்' செய்வதில் அவள் தனக்கு உதவ முன் வந்ததில் அப்துல்லாவுக்கு மகிழ்ச்சி. முத்துக்குமரன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான். டீயைப் பருகியதும் அவர்கள் மூவருமாகப் புறப்பட்டு விட்டார்கள். புறப்படுவதற்கு முன் அந்த வாசனை ஸ்பிரே பாட்டிலைப் பற்றி விசாரித்தாள் மாதவி. உடனே அப்துல்லா 'ஐ வில் கிவ் யூ...யூஸ் இட்..." என்று அதை அவளிடமே கொடுத்து விட்டார். "இல்லீங்க, நான் சும்மா விசாரிச்சேன். அவ்வளவு தான்" என்று அவள் மறுத்தும் கேட்காமல், "நோ நோ கீப் இட்...டோண்ட் ரெஃப்யூஸ்" என்று அவளிடமே அதைக் கொடுத்துவிட்டார். முத்துக்குமரனுக்கு மாதவிமேல் கோபம் கோபமாக வந்தது. அவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அப்துல்லாவிடம் போய் செண்ட் பற்றி விசாரித்ததனால் அவர் ஏதோ ஒரு பிச்சைக்காரிக்குத் தூக்கிக்கொடுப்பதுபோல் மாதவியிடம் பாட்டிலைத் தூக்கிக் கொடுத்ததை முத்துக்குமரன் அவ்வளவாக ரசிக்கவில்லை. வாசனைப் பொருளுக்கும், பூவுக்கும், புடவைக்கும், பகட்டுக்கும் சபலமடையாத அழகிய பெண்களே உலகில் இருக்க முடியாது போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன். எப்படி ஒரு குடும்பப் பெண் வாசனைப் பொருள், பூ, புடவை போன்றவற்றைப் பற்றி அந்நிய ஆடவனிடம் விசாரிப்பது விரசமோ, அப்படியே மாதவி அப்துல்லாவிடம் விசாரித்ததும் கொஞ்சம் அடக்கக் குறைவாகவே தோன்றியது அவனுக்கு. சினிமாத் துறையில் ஊறியதனால் வந்த வினை இது என்று நினைத்து உள்ளூற அவளை அவன் மன்னிக்கவும் செய்தான். காரில் மாம்பலம் செல்லும்போது அப்துல்லா மலேயாப் பயணத்தைப்பற்றி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். "உங்க குழுவிலே மொத்தம் எத்தினி பேர் வருவாங்க? யார் யார் பிளேன்ல வருவாங்க? யார் யார் கப்பலிலே வருவாங்க." மாதவி தனக்குத் தெரிந்த அளவில் அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். முன்ஸீட்டில் அவளருகே முத்துக்குமரன் அமர்ந்திருந்தான். அப்துல்லா பின் ஸீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தார். பங்களா வாசலில் போர்டிகோவிலேயே கோபால் அப்துல்லாவை எதிர்கொண்டு வரவேற்றான். வரவேற்கும் போதே தும்பிக்கை பருமனுக்கு ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையையும் அப்துல்லாவுக்குச் சூட்டினான். விருந்துக்கு வந்திருந்த மற்ற நடிகர் நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும், சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களையும் அப்துல்லாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். விருந்துக்கு முன் எல்லோரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோபாலுடைய விருந்து ஏற்பாட்டிலும், தடபுடல்களிலும் அப்துல்லா ஓரளவு நன்றாகவே மயங்கிப் போனார். என்ன காரணமோ தெரியவில்லை, முத்துக்குமரன், மாதவி இருவரிடமுமே அன்று கோபால் கடுகடுப்பாக இருந்ததுபோல் தெரிந்தது. விருந்தின்போது அப்துல்லா நடிகைகள், எக்ஸ்ட்ராக்கள் அடங்கிய கூட்டத்தினிடையே அமர்த்தப்பட்டார். ஒரு பணக்கார ஷேக் தன்னுடைய ஹோத்தில் அமர்ந்திருப்பதுபோல் அந்தச் சமயத்தில் அவர் காட்சியளித்தார். நடிகைகளின் இங்கித சிரிப்பொலிகளுக்கு நடுவே அப்துல்லாவின் வெடிச்சிரிப்பும் கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. விருந்து முடிந்து திரும்பப்போகும்போது அப்துல்லாவை யார் ஓஷியானிக்கில் கொண்டு போய்விடுவதென்ற பிரச்னை எழுந்தது. தான் கொண்டு போய்விட வேண்டியிருக்குமோ என்ற தயக்கத்தோடு கோபாலுக்கு முன்னாலே போய் நின்றாள். "நீ வேண்டாம். நீ போய் உன் வேலையைப் பாரு. உனக்குக் குறிப்புத் தெரியாது. நீ ஊரை எல்லாம் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போவே" என்று சிறிது கடுமையாகவே பதில் கூறிவிட்டான் கோபால். மாதவிக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. ஆனால், அந்தத் தொல்லை தன்னைவிட்டுப் போனதற்காக உள்ளூர மகிழ்ச்சி அடைந்தாள் அவள். வேறு யாரோ ஒரு துணை நடிகையோடு கோபால் அப்துல்லாவை ஓட்டலுக்கு அனுப்பி வைப்பதை அவளே கண்டாள். அவள் பேசாமலிருந்து விட்டாள். அப்துல்லா எல்லாரையும் நோக்கிக் கைகூப்பிவிட்டுப் புறப்பட்டார். சாப்பிட்டு முடிந்ததுமே முத்துக்குமரன் அவுட்ஹவுஸுக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் பங்களாவின் ஃபோர்டிகோவில் மற்றவர்களை வழியனுப்ப நின்று கொண்டிருந்தாள். திரும்பக் கொண்டு போய்விடுவதற்காக தான் அப்துல்லாவோடு தனியே போய் விடுகிறேனோ, இல்லையோ என்பதைச் சோதனை செய்வதற்காகவே, அவர் அவுட்ஹவுஸுக்கு அவசர அவசரமாகப் போயிருக்க வேண்டுமென்று மாதவி நினைத்துப் புரிந்து கொண்டாள். தான் தனியே அப்துல்லாவைத் திரும்பக் கொண்டு போய்விடப் போகாதது முத்துக்குமரனுக்குத் திருப்தி அளிக்கும் என்ற மகிழ்ச்சியோடுதான் அப்போது அவள் அங்கே நின்றிருந்தாள். ஒவ்வொருவராகக் கோபாலிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு புறப்படத் தொடங்கினர். மாதவியிடமும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். எல்லோரும் சொல்லிக் கொண்டு போனபின்பு வீட்டில் வேலை பார்ப்பவர்கள், கோபாலின் செகரெட்டரி, மாதவி ஆகியோர்தான் அங்கே மீதமிருந்தனர். நாயர்ப்பையன் டெலிபோன் அருகே அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தான். திடீரென்று அத்தனை பேர் முன்னிலையிலுமாகக் கோபால் மாதவியிடம் சீறத் தொடங்கினான். அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அவனிடம் வெளிப்படத் தொடங்கியது. "வர வரப் பெரிய பத்தினியாயிட்டே! உனக்குத் திமிர் அதிகமாயிருக்கு. ரெண்டு மூணு மணிக்கே அப்துல்லாகிட்டப் போயிட்டு அவரோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு அப்புறம் அவரை கூட்டிக்கிட்டு வான்னு நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். நான் சொன்னதைக் காதிலேயே வாங்கிக்காமே என்னென்னமோ பண்ணியிருக்கே. இது எல்லாம் கொஞ்சங்கூட நல்லா இல்லே. வாத்தியார் இந்த வீட்டுக்கு வந்தப்புறம் உன் போக்கே மாறியிருக்கு. நானும் பார்க்கத்தான் பார்க்கிறேன்." மாதவி பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள். ஆனால் அவளுக்கு கண் கலங்கிவிட்டது. முன்பெல்லாம் நாலுபேர் முன்னிலையிலே கோபால் இப்படிப் பேசினாலும் அவளுக்கு உறைக்காது; உறைத்ததில்லை. துடைத்தெறிந்து விட்டு மறுபடி அவனோடு பழகத் தொடங்கி விடுவாள். இப்போது அவள் யாருக்கு ஆட்பட்டிருந்தாளோ அவனிடமிருந்த மானமும், ரோஷமும், அவளுள்ளேயும் கிளர்ந்திருந்ததனால் அப்படித் துடைத்தெறிந்து விட்டு அவளால் இருக்க முடியவில்லை. அவளுக்கு நெஞ்சுகுமுறியது. பழக்கத்தின் காரணமாக அவளால் கோபாலை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் இப்படி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மரமாக நின்றதுபோல் நிற்காமல் இன்று அவள் மனம் கொதித்தாள். பத்து நிமிஷத்திற்கு மேல் கோபம் தீரக் கத்தித் தீர்ந்தபின் கோபால் உள்ளே சென்றான். அவள் ஏறக்குறைய முகம் சிவந்து கோவென்று கதறியழுகிற நிலைக்கு வந்துவிட்டாள். நேரே அவுட்ஹவுஸுக்கு விரைந்தாள் அவள்; நடுவே டிரைவர் வந்து, "ஐயா உங்களை வீட்டிலே கொண்டு போயி 'டிராப்' பண்ணிட்டு வரச்சொன்னாரு..." என்றான். கோபாலிடம் காட்டத் தவறிய கோபத்தை அந்த டிரைவர் மேலே காட்டினாள் மாதவி. "அவசியமில்லை! நீ போய் உன் வேலையைப் பாரு, எனக்கு வீட்டுக்குப் போயிக்கத் தெரியும்..." "சரிங்க...ஐயாகிட்டச் சொல்லிடறேன்..." அவன் போய் விட்டான். அவுட்ஹவுஸில் நுழையும் போதே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. முத்துக்குமரனைப் பார்த்ததும் அவள் அழுதே விட்டாள். விக்கலும், விசும்பலுமாக அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே அவன் மார்பில் வாடிய மாலையாக சாய்ந்துவிட்டாள் அவள். "என்ன? என்னது? என்ன ஆச்சு? யார் என்ன சொன்னாங்க? எதுக்காக இப்படி?" - முத்துக்குமரன் பதறினான். சில நிமிஷங்கள் அவளால் பேசவே முடியவில்லை. வெளிப்படும் வார்த்தைகளை அழுகை உடைத்தது. அவளைத் தழுவிக் கொண்டு ஆதரவாக அவள் கூந்தலை நீவினான் அவன். மெல்ல மெல்லப் பேசும் நிதானத்துக்கு வந்தாள் அவள். "நான் வீட்டுக்குப் போகணும். பஸ் நேரம் முடிஞ்சி போச்சு. டாக்ஸிக்கு எங்கிட்டப் பணம் இல்லே. நீங்க துணைக்கு வர்ரதா இருந்தா நடந்தே போகலாம். வேற யாரும் எனக்குத் துணை இல்லை. நான் அநாதை..." "என்ன நடந்திச்சு? ஏன் இப்படிப் பேசறே? நிதானமா நடந்ததைச் சொல்லு..." "நான் பத்தினி வேஷம் போடறேனாம். அப்துல்லாவைக் கூட்டியாறத்துக்கு நான் தனியாப் போகலையாம். நீங்க வந்தப்புறம் என் நடத்தையே மாறிப் போச்சாம்..." "யார் சொன்னா? கோபாலா?" "வேறு யார் சொல்லுவாங்க இப்படி எல்லாம்?" - முத்துக்குமரன் கண்களில் கோபம் சிவந்தது. சில விநாடிகள் அவன் பேசவே இல்லை. சிறிது நேரத்துக்குப் பின் அவன் வாய் திறந்தான். "சரி! புறப்படு. உன்னை வீட்டிலே கொண்டு போய் விட்டு வரேன்..." முத்துக்குமரன் அவளை அழைத்துக் கொண்டு நடந்தே புறப்பட்டான். பங்களா காம்பவுண்டைக் கடந்து அவர்கள் இருவரும் வெளியேறுவதற்குள்ளேயே கோபால் வந்து வழி மறைத்துக் கொண்டான். "டிரைவர் வந்து சொன்னான். நீ ஏதோ ரொம்பக் கோபிச்சுக்கிட்டுச் சொல்லியனுப்பிச்சியாம். நான் ஒண்ணும் தப்பாப் பேசிடலை. எவ்வளவோ பேசியிருக்கோம், பழகியிருக்கோம்; இப்பல்லாம் உனக்கு உடனே ரோஷம் வந்திடுது. ரோஷத்தையும், கோபத்தையும் காட்டற அளவுக்கு என்னை அந்நியனாக்கிட்டா, நான் அப்புறம் ஒண்ணுமே சொல்லறதுக்கில்லே - " மாதவி அவனுக்குப் பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள். முத்துக்குமரனும் பேசவில்லை. கோபால் கைகளைத் தட்டி யாரையோ அழைத்தான். டிரைவர் காரை எடுத்து வந்து மாதவியினருகே நிறுத்தினான். இந்த நிலையில் அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்று முத்துக்குமரன் அமைதியாக நின்று கவனிக்கலானான். "ஏறிக்கொள். வீட்டில் போய் இறங்கிக் கொண்டு காரைத் திருப்பி அனுப்பு. என்னை மனச்சங்கடப்படச் செய்யாதே" என்று கோபால் கெஞ்சினான். மாதவி முத்துக்குமரனின் முகத்தை, 'என்ன செய்வதென்ற' பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அதைக் கவனிக்காதது போல் வேறெங்கோ பராக்குப் பார்க்கத் தொடங்கினான். "நீ சொல்லு வாத்தியாரே! மாதவி எம்மேலே அநாவசியமாகக் கோவிச்சுக்கிட்டிருக்கு. சமாதானப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வை" - என்று கோபால் முத்துக்குமரனையே வேண்டினான். முத்துக்குமரன் அந்த வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்து விட்டான். மாதவி எந்த அளவுக்கு மனத்திடமுடையவள் அல்லது இல்லாதவள் என்பதை அப்போது கவனித்துப் பார்த்து விட விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான் முத்துக்குமரன். திடீரென்று கோபால் ஒரு காரியம் செய்தான். சைகை செய்து டிரைவரை ஆசனத்திலிருந்து இறங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, "வா! நானே உன்னைக் கொண்டு வந்த டிராப் செய்கிறேன்" என்று மாதவியைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். அவன் வார்த்தைகளை மீற முடியாமல் மெல்ல மெல்லத் தயங்கித் தயங்கி முத்துக்குமரன் நின்ற பக்கத்தைப் பார்த்தபடியே முன் ஸீட் கதவைத் திறந்து ஏறிக் காரில் அமர்ந்தாள் மாதவி. கோபால் காரைச் செலுத்தினான். வருகிறேன் என்பதற்கு அடையாளமாக அவள் முத்துக்குமரனை நோக்கிக் கையை உயர்த்தி ஆட்டினாள். அவன் பதிலுக்குக் கையை ஆட்டவில்லை, கார் அதற்குள் பங்களா 'கேட்'டைக் கடந்து வெளியே ரோட்டுக்கு வந்து விட்டது. தான் இப்படிச் செய்தது முத்துக்குமரனுக்குப் பிடிக்காது என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள். கார் வீடு போய்ச் சேருகிற வரை கோபாலுடன் அவள் பேசவில்லை. கோபாலும் அப்போதிருக்கும் அவள் மனநிலையை அநுமானித்தவனாக அவளோடு எதுவும் பேச முடியவில்லை. லாயிட்ஸ் ரோடு வரை வந்து அவளை அவள் வீட்டில் 'டிராப்' செய்துவிட்டுத் திரும்பிவிட்டான் அவன். இறங்கி வீட்டுக்குள்ளே சென்றதும் பதறும் மனதுடன் நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொள்ள முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்தாள் அவள். "நீங்க தப்பா நினைச்சுக்கலியே? அவரு அவ்வளவு மன்றாடினப்புறம் எப்படி நான் மாட்டேங்கறது?" "ஆமாம்! முதல்லே கிடைச்சதைவிட நல்ல துணை அப்புறம் கிடைச்சிட்டா - அதை விட்டுடலாமா?" - என்று அழுத்தமான குரலில் எதிர்ப்புறமிருந்து பதில் கூறினான் முத்துக்குமரன். குரலில் உள் அடங்கிய சினம் ஒலித்தது. "நீங்க சொல்றது புரியலே. நீங்களும் கோபமாகவே பேசறீங்கன்னு மட்டும் தெரியுது. "அப்படித்தான் வச்சுக்கயேன்" - என்று கடுமையாகவே பதில் சொல்லிவிட்டு ரிஸீவரை ஓசை எழும்படி அழுத்தி வைத்தான் முத்துக்குமரன். மாதவிக்கு நெஞ்சில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. நடை பிணமாக அவள் சோர்ந்து போய் ஃபோனை வைக்கவும் தோன்றாமல் நின்றாள். பின்பு ஃபோனை வைத்துவிட்டு படுக்கையில் போய் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். தன்னுடைய போதாத காலம்தான் முத்துக்குமரனும் தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது என்று தோன்றியது அவளுக்கு. முத்துக்குமரனிடம் போய் அழுது கெஞ்சி அவனைத் துணையாகக் கூப்பிட்டுவிட்டுப் பாதி வழியில், கோபாலோடு காரில் ஏறி வந்தது அவன் மனத்தை வேதனைப்படுத்தியிருக்கும் என்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது. |