17 மறுநாள் மாலை அவர்கள் குழுவின் முதல் நாடகம் நடைபெறவேண்டிய தினமாகையினால் காலையில் அவர்கள் எங்குமே வெளியே செல்லவில்லை. பகலில் மேடை ஏற்பாடுகள், ஸீன்ஸ் - ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காக கோபாலும் வேறு சிலரும் நாடகம் நடைபெற இருந்த இடத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அன்று பகலுணவு ஸென்யீ என்ற அப்துல்லாவின் நண்பரான சீனாக்காரர் வீட்டில் நடந்தது. 'காண்ட்ராக்ட்காரர்' அப்துல்லா ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அடை காப்பதுபோல் மாதவியையே சுற்றிச் சுற்றி வந்தார். முத்துக்குமரன் அவளோடு கூடவே இருந்தது அவருக்குப் பெரிய இடையூறாக இருந்தது. நாளுக்கு நாள் அவன் மீது அவருடைய வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. தான் மாதவியோடு பேசவோ நெருங்கிப் பழகவோ முடியாமல் அவன் பெரிய போட்டியாகவே இருக்கிறானென்று அவருக்குத் தோன்றியது. முதல் நாள் நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு அப்துல்லாவுக்கும் முத்துக்குமரனுக்கும் நேரிடையாகவே ஒரு மனஸ்தாபம் நேர்ந்தது. நல்ல வசூல் ஆகியிருந்ததனாலும் நகரமண்டபம் கொள்ளாமல் கூட்டம் நிறைந்திருந்ததனாலும் அத்தனைக்கும் காரணமான அப்துல்லாவின் மேல் கோபாலுக்கு மிகுந்த பிரியம் உண்டாகியிருந்தது; நாடகம் முடியும்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நாடக முடிவில் எல்லாரையும் மேடைக்கு வரவழைத்து மாலை சூட்டியும், அறிமுகப்படுத்தியும் நன்றி கூறிய அப்துல்லா - முத்துக்குமரனை மட்டும் மறந்தாற்போல் விட்டுவிட்டார். அவருக்கு மறக்கவில்லை என்றாலும் பிறர் அதை மறதியாக எண்ணிக் கொள்ளட்டும் என்பதுபோல் வேண்டுமென்றே விட்டுவிட்டார். கோபாலுக்கு நினைவிருந்தது, அப்துல்லாவின் செய்கைகளில் குறுக்கிட்டுக் கூறப் பயந்தவன் போல அவனும் சும்மா இருந்துவிட்டான். மாதவி மட்டும் மனம் குமுறினாள். அவர்கள் எல்லாரும் திட்டமிட்டுக்கொண்டு சதி செய்வது போலத் தோன்றியது அவளுக்கு. நாடகம் முடிந்தபின் பினாங்கிலுள்ள பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டில் அன்றிரவு அவர்கள் விருந்துண்ண ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா. நாடகம் நடந்து முடிந்ததும் அங்கிருந்தே அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், விருந்துண்ண அழைத்திருந்த செல்வந்தர். மேடையில் நடந்ததில் மனம் குமுறியிருந்த மாதவி முத்துக்குமரனைக் கிரீன் ரூமுக்கே வரச் சொல்லித் தனக்கு மிகவும் வேண்டிய துணை நடிகை ஒருத்தியிடம் சொல்லியனுப்பியிருந்தாள். அவளுக்கும் மலையாளத்துப் பக்கம் தான். "மாதவி விளிச்சு" என்று மேடையருகே கீழே நின்று கொண்டிருந்த முத்துக்குமரன் காதருகே வந்து கூறினாள் அந்தத் துணை நடிகை. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போலிருந்த முத்துக்குமரனிடம் மீண்டும் அருகில் வந்து "ஞான் வரட்டே?" என்று கேட்டாள் அந்தத் துணை நடிகை. முத்துக்குமரன் அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். அவள் போய்விட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப்பின் அவனும் கிரீன் ரூமுக்குச் சென்றான். மாதவி அவனருகே வந்து குமுறினாள். "இங்கு நடந்த இந்த அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாம் விருந்துக்குப் போக வேண்டாம்." "தன்மானம் வேறு! அற்பத்தனம் வேறு; அவர்களைப் போல் நாமும் அற்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. மாதவி! இந்த மாதிரி விஷயங்களில் நான் ரொம்ப ரோஷக்காரன். அசல் கலைஞன் ஒவ்வொருவனுமே இப்படி ரோஷக்காரன்தான். ஆனால் அது ரோஷமாக இருக்க வேண்டுமே ஒழிய மிகவும் அற்பத்தனமான குரோதமாக இருக்கக் கூடாது. புது நாட்டில் புது ஊரில் நாம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்." "அது சரி! ஆனால் மற்றவர்கள் நம்மிடம் அப்படிப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளவில்லையே? அற்பத்தனமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்." "பரவாயில்லை! இன்னும் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதற்குத்தான் அவசியமிருக்கிறது." - இதற்குமேல் மாதவி அவனோடு வாதிடவில்லை. அன்றிரவு அவர்கள் விருந்துக்குப் போனார்கள். விருந்து முற்றிலும் மேனாட்டு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்விடேஷன்கள் ரொம்பவும் காஸ்மாபாலிடனாகக் கொடுக்கப்பட்டிருந்தன. சில மலாய்க்காரர்கள், சீனர்கள், வெள்ளைக்காரர்கள், அமெரிக்கர்கள்கூடத் தத்தம் குடும்பத்தோடு விருந்துக்கு வந்திருந்தார்கள். - விருந்து முடிந்ததும் வேறொரு ஹாலில் வந்திருந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகக் கைகோர்த்து டான்ஸ் ஆடினார்கள். முத்துக்குமரனும் மாதவியும் ஓர் ஓரமாகப் போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். டான்ஸில் கலந்துகொள்ளவில்லை. கோபால் கூட ஒரு சீன யுவதியோடு - டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அப்துல்லா வந்து தன்னோடு டான்ஸ் ஆட வருமாறு மாதவியைக் கூப்பிட்டார். "எக்ஸ்க்யூஸ் மீ சார்; நான் இவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்'' - என்று மிகவும் மரியாதையாகப் பதில் கூறிப் பார்த்தாள் மாதவி. அப்துல்லா விடவில்லை. இந்த நைப்பாசையைத் தீர்த்துக்கொள்ளவே அந்த விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருப்பார் போலிருந்தது. அவளோடு அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முத்துக்குமரனை ஓர் ஆளாகவே பொருட்படுத்தாதது போலத் திரும்பத் திரும்ப அப்துல்லா அவளிடமே வந்து கொஞ்சத் தொடங்கிப் பதிலளித்தார். முத்துக்குமரன் அநாவசியமாகத் தான் குறுக்கிட்டு அவருக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று ஆனமட்டும் பொறுத்துப் பார்த்தான். ஒரு நிலைக்குமேல் அப்துல்லா வெறிகொண்டு தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மாதவியை மெல்ல கையைப் பிடித்து இழுக்கவே ஆரம்பித்து விட்டார். "வரமாட்டேன்கிற பொம்பிளையைக் கையைப் பிடிச்சு இழுக்கறதுதான் உங்க ஊர் நாகரிகமோ?" - என்று அப்போதுதான் முத்துக்குமரன் முதன் முதலாக வாய்திறந்தான். அப்துல்லா கடுங்கோபத்தோடு அவனைப் பார்த்து முறைத்தார். "ஷட் அப் ஐயாம் நாட் டாக்கிங் வித் யூ - " அப்துல்லா முத்துக்குமரனை இப்படி இரைந்த பின் மாதவி அவரை இன்னும் அதிமாக வெறுக்கத் தொடங்கினாள். அப்புறம் கோபால் அவளைத் தேடிவந்து அப்துல்லாவுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினான். "இவ்வளவு செலவழிச்சுக் கூப்பிட்டிருக்காரு. நாம் இந்த நாட்டைவிட்டு ஊர் திரும்பறதுக்குள்ள நமக்கு இன்னும் என்னென்னவோ செய்யணும்னு இருக்காரு. அவர் பிரியத்தை ஏன் கெடுத்துக்கறே?" "நான் முடியாது -" என்று கடுமையாக அவள் மறுத்ததற்குக் காரணமே அருகில் முத்துக்குமரன் நிற்பது தான் என்பதாக, கோபால் புரிந்து கொண்டான். முத்துக்குமரன் அருகில் இல்லாவிட்டால் அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்பதையும் கோபாலால் அநுமானிக்க முடிந்தது. எனவே அடிபட்ட புலிபோல் சீறினான் கோபால். "நீ பயப்படறதைப் பார்த்தா வாத்தியாரை அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்துக் கலியாணங்கட்டிக்கிட்ட மாதிரியில்ல இருக்கு? அப்படிக் கலியாணங்கட்டிக்கிட்டவங்க கூட இந்தக் காலத்தில் புருசனுக்கு இப்பிடி இவ்வளவு நடுங்கறதில்லே." முத்துக்குமரன் அருகில் நின்று இருவர் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் பேச்சில் தான் குறுக்கிட விரும்பவில்லை. மாதவிக்குத்தான் கோபாலின் பேச்சு ஆத்திரமூட்டி விட்டது. "சீ! நீங்களும் ஒரு மனுசனாட்டம்...? ஒரு பொம்பிளை கிட்ட வந்து இப்பிடிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?" என்று முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவள் தன்னிடமே சீறியதைக் கண்டு கோபால் திகைத்தான். இதுவரை அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியதில்லை என்று கடந்த காலத்தை நினைத்து விட்டு - இன்று எவ்வளவு கடுமையாகப் பேச முடியுமோ அவ்வளவு கடுமையாகப் பேசியும் விட்டாள் என்பதை உணர்ந்தபோது கோபாலுக்குத் திகைப்பாக இருந்தது. எது செய்யச் சொன்னாலும் தான் காலால் இட்ட கட்டளையைத் தலையால் செய்து கொண்டிருந்தவள் இன்று இவ்வளவு ரோஷமும் மானமும் அடைந்து சீறுவதற்கு யார் காரணம் என்று எண்ணியபோது மீண்டும் முத்துக்குமரன் மேல் அவனுடைய அவ்வளவு கோபமும் திரும்பியது. "வாத்தியாரே! இதெல்லாம் உன் வேலைமானம் போலேருக்கு...?" "அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்; நான் உங்க கூட இங்கே வரலையின்னு..." - என்று முத்துக்குமரன் கோபாலுக்கு மறுமொழி கூறியதைக் கேட்டு மாதவிக்கு முத்துக்குமரன் மேலேயே கோபம் வந்துவிட்டது. "இதுக்கு என்ன அர்த்தம்? நீங்க வந்ததினாலேதான் நான் மானம் - ரோஷத்தோட இருக்கேன்? நீங்க வராட்டி நான் மானங்கெட்டுப் போய்த் திரிவேன்னு அர்த்தமா?" என்று முத்துக்குமரனைப் பார்த்தே மாதவி சீறத் தொடங்கினாள். சண்டை அவர்கள் இருவருக்குள்ளேயுமே மூண்டு விடவே கோபால் மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான். மாதவி முத்துக்குமரனை விடவில்லை. "நீங்களே இப்படி என்னை விட்டுக்கொடுத்துப் பேசினீங்கன்னா அப்புறம் மத்தவங்க கொண்டாட்டத்துக்குக் கேட்பானேன்?" "என்ன விட்டுக்கொடுத்துப் பேசிப்புட்டேன் இப்ப? பெரிசாச் சத்தம் போடறியே! சும்மா 'உன்னாலேதான் எல்லாம், உன்னலேதான் எல்லாம்'னு சொல்லிக் காட்டிக்கிட்டிருக்கான் அவன். அதுதான் 'என்னை ஏண்டா கூட்டிக்கிட்டு வந்தே'ன்னு கேட்டேன். அதுக்கு நீ ஏன் என்மேலே கோபப் படணும்னுதான் எனக்குப் புரியலை." "நீங்க வந்திருக்காட்டி நான் என் இஷ்டம் போலத் தாறுமாறாகத் திரிவேன்னு நெனைச்சுச் சொன்னது போல இருந்திச்சு, அதுதான் நான் அப்பிடிக் கேட்டேன்..." "அப்படித் திரியறவள்னு தானே இன்னும் அவுங்க உன்னைப்பத்தி நெனைச்சுக்கிட்டிருக்கிறதாத் தெரியுது?" "யார் என்னவேணா நினைக்கட்டும், அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லே. ஆனா நீங்க சரியா நினைக்கணும், நீங்களும் என்னைத் தப்பா நெனைச்சா என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது." "இவ்வளவு நாள் தாங்கிக்கிட்டுத்தானே இருந்திருக்கே..." "இப்பத் திடீர்னு இப்பிடி நடந்துக்கப் போகத்தானே அவன் திகைக்கிறான்...?" முத்துக்குமரன் இப்படிப் பேசியது பிடிக்காமல் அவள் அவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டுத் தலை குனிந்து கீழே பார்த்தபடி இருந்தாள். விருந்து நடந்த இடத்திலிருந்து திரும்பும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கோபாலும் அப்துல்லாவும் மொத்தமாக இவர்கள் இருவரையுமே புறக்கணித்தது போல் நடந்து கொண்டார்கள். இவர்களோ தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புறக்கணித்ததுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினர். அதன் பின் பினாங்கில் நாடகம் நடந்த மூன்று தினங்களும் இதே நிலையில் பரஸ்பரம் - கோபால் மாதவியோடும் மாதவி முத்துக்குமரனோடும் - சுமூகமாகப் பேசிக் கொள்ளாமலே கழிந்தன. ஆறு மணியானதும் தியேட்டருக்குக் கார்களில் கூட்டமாகப் போகவும், கிரீன் ரூமுக்குள் நுழைந்து மேக்கப் போடவும், மேடையில் நடிக்கவும் நாடகம் முடிந்ததும் திரும்பவுமாக நாட்கள் போயின. அப்துல்லாவின் நைப்பாசையை வேறொரு வகையில் திசை திருப்பிவிட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தான் கோபால். தன்னுடைய குழுவிலேயே உபநடிகையாக இருந்த 'உதயரேகா' என்ற கட்டழகி ஒருத்தியை அப்துல்லாவோடு காரில் தனியே போகவும், அவருடைய அன்பைப் பெறவும் ஏவினான். உதயரேகா துணிந்த கட்டை. அவள் 'தாராளமாகவே' அப்துல்லாவைத் திருப்தி செய்து டேப்ரெகார்டர், டிரான்ஸிஸ்டர், ஜப்பான் நைலெக்ஸ் புடைவைகள், நெக்லெஸ், மோதிரம் என்று அவரிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தாள். முதல் நான் அநுபவத்துக்குப் பின் முத்துக்குமரன் - நாடகம் நடைபெற்ற இடத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு மாலையில் அறையிலேயே இருக்கத் தொடங்கினான். தனிமையில் அவனால் சில கவிதைகள் எழுத முடிந்தது. மற்ற நேரங்களில் - மலேயாவில் வெளி வரும் - இரண்டு மூன்று தமிழ்த் தினசரிகளையும் ஒரு வரி விடாமல் அவன் படித்தான். நல்ல வேளையாக - அந்த நாட்டில் வெளியாகும் ஒவ்வொரு தமிழ் தினசரியும் நாள் தவறாமல் பத்துப் பன்னிரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் பெரிது பெரிதாக வெளிவந்து கொண்டிருந்தது. மூன்று தினசரிகளையும் படிக்க அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. பகல் நேரத்தில் குழு நடிகர்கள் சிலர் அவனிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. இரண்டாவது நாளோ மூன்றாவது நாளோ கோபால் நாடக மன்றத்தைச் சேர்ந்த ஒரு துணை நடிகன், "ஏன் சார், நீங்க நாடகத்துக்கு வரதையே நிறுத்திட்டீங்க?... உங்களுக்கும் கோபால் அண்ணனுக்கும் எதினாச்சும் மனஸ்தாபமா?" என்று முத்துக்குமரனிடம் கேட்டே விட்டான். முத்துக்குமரன் அவனுக்குப் பூசி மெழுகினார் போல் பதில் சொன்னான். "ஒரு நாள் பார்த்தாப் போதாதா என்ன தினம் பார்க்கணுமா? நாம எழுதின நாடகம், நாமே சேர்ந்து நடிக்கிறோம். தினம் பார்க்கறதுக்கு என்ன அவசியம்?" "அப்பிடிச் சொல்லிடலாமா சார்? நாடகம் சினிமா மாதிரியில்லியே! சினிமா ஒருவாட்டி காமிராவிலே புடிச்சு ஓட விட்டுப்பிட்டா அப்புறம் அப்படியே ஓடிக்கிட்டிருக்கும். நாடகம் உசிர்க் கலையாச்சே? ஒவ்வொரு நாளைக்கு நடிப்பிலே புது நயம், பாட்டுலே புது நயம்னு, நயம் நயமா வந்துகிட்டே இருக்குமே?" "வாஸ்தவம்தான்..." "இப்ப பாருங்க... நேத்து நீங்க வரலே. முதல் நாள் நீங்க வந்திருந்தீங்க... நீங்க வந்து பார்த்த அன்னிக்கி மாதவியம்மா நடிப்புப் பிரமாதமா இருந்திச்சு, நீங்க வராததுனாலே நேத்து ரொம்ப டல்லா இருந்தாங்க. நடிப்பிலே உற்சாகமே இல்லை..." "நீ என்னைப் பெருமைப் படுத்தறதா நினைச்சுச் சொல்றே தம்பீ! ஆனா அப்பிடி ஒண்ணும் இருக்காது. 'மாதவி'க்கு ஒரு திறமை உண்டு. அது எப்ப நடிச்சாலும் எதிலே நடிச்சாலும் ஒரே தரமா இருக்குமே?" "நீங்க விட்டுக் கொடுத்துப் பேசமாட்டீங்க சார்! ஆனா நான் கவனிச்சுப் பார்த்துச் சொல்றேன். நமக்குப் பிரியமுள்ளவங்க கீழே சபையில் உட்கார்ந்து பார்த்தா அது நமக்கு ஒரு 'டானிக்' மாதிரி இருந்து வேலை செய்துங்கிறது உண்மைதான். ஒரு தடவை பாருங்க... விருது நகர் மாரியம்மன் பொருட்காட்சிக்கு நான் முன்னே வேலை பார்த்த கம்பெனி ட்ரூப்போட போயிருந்தேன். அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரு. என் அத்தை மகள் - அதுதாங்க எனக்கு முறைப் பொண்ணு - வந்து நாடகத்தைப் பார்த்துச்சு. அன்னிக்கு நான் ரொம்ப உற்சாகமா நடிச்சேன்." "அது சரிதான்; உனக்கு உன் அத்தைமகள் மேல் காதல் வந்திருக்கும்." "அப்படி வாங்க வழிக்கு! அதே மாதிரிதான் மாதவிக்கும் உங்க மேலே..." - உடனே முத்துக்குமரன் தன்னைப் பார்த்த பார்வையைத் தாங்க முடியாமல் மேலே சொல்வதைத் தயங்கி நிறுத்திவிட்டான் அந்தத் துணை நடிகன். அந்தத் துணை நடிகன் சொல்லியதில் உள்ள உண்மையைத் தானே உணர்ந்தாலும் அவனிடம் ஒரு சிறிதும் மாதவியின் மேல் தனக்குப் பிரியமிருப்பதைக் காண்பித்துக் கொள்ளாமலே பேசினான் முத்துக்குமரன். ஆனால் தன்னுடைய முகம் எதிரே தென்படாமல் இருப்பது அவளுடைய நடிப்பைப் பாதிக்கத்தான் செய்யும் என்று முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். உள்ளூற அந்த உணர்ச்சி இருந்தாலும் மாதவியை உற்சாகப்படுத்துவதற்காகக்கூட பினாங்கில் முகாம் இட்டிருந்தவரை நாடகங்களுக்கு அவன் போகவே இல்லை. பினாங்கில் கடைசி நாடகமும் முடிந்த பின் - பண்டங்கள் அங்கு மிகவும் மலிவு என்பதனால் குழுவில் ஒவ்வொருவரும் தனியாகவும், கூட்டமாகவும் 'ஷாப்பிங்' போனார்கள். 'ஃப்ரீபோர்ட்' ஆகையால் பினாங்குக் கடை வீதிகளில் கைக்கடிகாரங்களின் வகைகளும், நவீன டெரிலீன், ரெயான், டெரிகாட், ஸில்க் துணிகளும், ரேடியோக்களும் கொள்ளை மலிவாகக் குவிந்து கிடந்தன. அப்துல்லாவிடம் அட்வான்ஸ் வாங்கிக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் நூறு வெள்ளி பணம் கொடுத்தான் கோபால். முத்துக்குமரனுக்கும், மாதவிக்கும் தலைக்கு இருநூற்றைம்பது வெள்ளி வீதம் ஐந்நூறு வெள்ளியையும் ஒரு கவரில் போட்டு மாதவியிடமே கொடுத்து விட்டான் அவன். முத்துக்குமரனை நேரில் எதிர்க் கொண்டு பேசி அவனிடம் பணத்தைக் கொடுப்பதற்குப் பயமாக இருந்தது கோபாலுக்கு. மாதவியிடம் கொடுத்தபோதே தயங்கித் தயங்கித்தான் அதை வாங்கிக் கொண்டாள் அவள். "எதுக்கும் அவரிட்டவும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க... நானாப் பணத்தை வாங்கிட்டேன்னு அவர் கோபிச்சாலும் கோபிப்பார்" - என்று மாதவி கோபாலிடம் சொல்லியபோது, "அவர் அவர்னு ஏன் நடுங்கறே? முத்துக்குமார்னு பேரைத்தான் சொல்லித் தொலையேன்" என்று கடுமையாக அந்த 'அவரி'ல் குரலை ஓர் அழுத்து அழுத்தி இரைந்தான் கோபால். - மாதவி இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. கோபால் அவளைக் கடுமையாக உறுத்துப் பார்த்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ஆனாலும் அவளிடம் கடுமையாகப் பேசியது போலவே முத்துக்குமரனை அவன் புறக்கணிக்கத் தயாராயில்லை. மூன்று நாட்களாகத் தனக்கும் அவனுக்கும் இடையே நிலவிய மௌனத்தையும் மனஸ்தாபத்தையும் தவிர்ப்பதுபோல், அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுத்தான். "எல்லோரும் ஷாப்பிங் போறாங்க! பினாங்கைவிட்டு இன்னிக்கி ராத்திரியே நாம் புறப்படறோம். நீயும் போய் ஏதாவது வாங்கிக்கணும்னா வாங்கிக்க. மாதவிகிட்ட உனக்காகவும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கேன். கார் வேணும்னா எடுத்திட்டுப் போயிட்டு வந்திடுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போய் ஷாப்பிங் முடிச்சிக்கலாம். அப்புறம் புறப்படற வேளையிலே டயம் இருக்காது" "......." "என்னது? நான் வேலை மெனக்கெட்டுப் போய் உங்கிட்டச் சொல்லிக்கிட்டிருக்கேன். பதில் சொல்லாமே இருக்கியே...?" "நீ சொல்றதைச் சொல்லியாச்சில்லே...?" "எனக்கொண்ணுமில்லே! உனக்காகத்தான் சொன்னேன்..." "அதாவது - என்மேலே உனக்கும் அக்கறையிருக்குன்னு காமிக்கிறே! இல்லியா - ?" "இப்படிக் குத்தலாகப் பேசாதே வாத்தியாரே! எனக்குப் பொறுக்காது- " "பொறுக்காட்டி என்ன செய்யிறதா உத்தேசமோ?" "சரி! சரி! உங்கிட்டே இப்போ பேசிப் பயனில்லை. நீ ரொம்பக் கோபத்திலே இருக்கிற மாதிரித் தெரியிது" - என்று கூறிவிட்டு முத்துக்குமரனிடம் மேலே ஒன்றும் பேசாமல் நழுவி விட்டான் கோபால். அவன் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்தாள். அப்படி வந்தவள் முத்துக்குமரனை நேருக்குநேர் பார்க்கப் பயந்து தயங்கியவளாக எங்கோ பார்த்துப் பேசினாள். அவள் கையில் கோபால் கொடுத்த பணம் அடங்கிய கவர் இருந்தது. "பணம் கொடுத்திருக்காரு... ஷாப்பிங் போகணும்னா வச்சுக்கணுமாம்..." "யாருக்குப் பணம்?" "உங்களுக்கும் எனக்கும்..." "உனக்காக நீ வாங்கிட்டது சரி! எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம்?" "நான் வாங்கலே! அவராக் கொடுத்திட்டுப் போறாரு." "கொடுத்திட்டுப் போனா வச்சுக்க. எனக்கு எந்தக் கடைக்கும் போகவேண்டாம். எதுவும் வாங்க வேண்டாம்..." "அப்பிடியானா எனக்கும் போக வேண்டியதில்லை..." "சே! சே! சும்மா நீயும் அப்பிடிச் சொல்லிக்காதே போய் வேண்டியவை வாங்கிக்க - 'உதயரேகா' வைப்பாரு, ரெண்டு நாளாப் புதுப் புது நைலான், நைலக்ஸ்லாம் கட்டிக்கிறா... அவளுக்குக் குறைவான துணியை நீ கட்டலாமா...? ஹீரோயினாச்சே நீ?" "இந்தாங்க! நீங்க இப்பிடிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா?... உதயரேகாவையும் என்னையும் ஒண்ணாப் பேசற அளவு உங்க மனசு என் விஷயத்திலே கெட்டுப் போயிருக்கு..." "யார் மனசும் கெட்டுப் போகலே! அவங்க அவங்க மனசைத் தொட்டுப் பார்த்தாத் தெரியும்." "என்ன தெரியும்?"- "ரெண்டு மூணு நாளா எப்பிடி நடந்துகிட்டோம்னு தெரியும்." "இதே கேள்வியை நானும் உங்ககிட்டத் திருப்பிக் கேட்க முடியும்." "........" அவள் அவனருகே வந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில், கெஞ்சுவது போல் வேண்டினாள்: "இந்தாங்க! வீணா மனசைக் கெடுத்துக்காதீங்க. நான் இனி ஒருக்காலும் உங்களுக்குத் துரோகம் பண்ணமாட்டேன். இப்ப இந்த இடத்துலே நான் அநாதை, நீங்களும் இல்லேன்னா எனக்கு யாருமே துணையில்லே." "சக்தியில்லாதவனிடத்தில் அடைக்கலமாவதில் என்ன பயன்?" "உங்களுக்குச் சக்தியில்லேன்னா இந்த உலகத்திலேயே அது இல்லே, வீணா அடிக்கடி என்னைச் சோதிக்காதீங்க..." "ஏன் மூணு நாளா எங்கூடப் பேசலே?" "நீங்க ஏன் பேசலே?" "நான் கோபக்காரன், ஆண் பிள்ளை.." "அது தெரிஞ்சுதான் நானே முந்திக்கொண்டு வந்து இப்பக் கெஞ்சறேன்..." "நீ ரொம்பக் கெட்டிக்காரி..." "அதுவும் உங்களாலேதான்..." - கடுமை மறைந்து அவன் முகத்தில் புன்முறுவல் மலர்ந்துவிட்டது. அதற்குமேல் அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை. அருகே இழுத்து அவளை நெஞ்சாரத் தழுவினான் அவன். அவள் குரல் அவன் காதருகே கிளுகிளுத்தது. "வாசற் கதவு திறந்திருக்கிறது." "ஆமாம்! போய் அடைத்து விட்டுவா! அப்துல்லா பார்த்துத் தொலைக்கப் போகிறான், 'பணத்தின் ராஜாவாகிய நமக்கு கிடைக்காதது இந்தப் பஞ்சைப் பயலுக்குக் கிடைக்கிறதே - என்று அப்துல்லா என்மேல் பொறாமைப்படப் போகிறான் - " "அதொண்ணுமில்லே! எனக்கு நீங்கதான் ராஜா" - "சொல்றதை மட்டும் இப்பிடிச் சொல்லிப்பிடு. ஆனா மேடை மேலே கதாநாயகியா வர்ரப்ப வேற எந்த ராஜாவுக்கோதான் ராணியா நீ நடிக்கிறே?" "பார்த்தீங்களா, பார்த்தீங்களா? இதுக்குத்தான் நான் முன்னாடியே பயந்து பயந்து அப்பப்ப வேண்டிக்கிறேன். மேடை மேலே நான் யாரோட நடிக்கிறேன், எப்ப எப்ப நெருக்கமா நடிக்கிறேன்னு கவனிச்சு என்னைக் கோவிச்சுக்காதிங்கன்னு பல தடவை சொல்லியிருக்கேன். இருந்தும் நீங்க அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் காமிக்கிறீங்க. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? மேடையிலேகூட நீங்கதான் என்னோட கதாநாயகரா நடிக்கணும்னு நான் ஆசைப்படத்தான் செய்யிறேன். நீங்க கதாநாயகரா நடிக்கிறதா இருந்தா உங்க அழகு வேறெந்தக் கதாநாயகருக்கும் வராது..." "போதும்! ரொம்ப அதிகமாகக் காக்காய் பிடிக்காதே..." "இனிமேல் காக்காய் பிடித்து ஆகவேண்டியதில்லை. உங்களை ஏற்கெனவே நான் முழுக்க முழுக்கக் காக்காய் பிடிச்சாச்சு." - "சரி! சரி! போதும், உன் பேச்சும் நீயும். நாம் கடைக்கு எதுக்கும் இங்கே போக வேண்டாம். எல்லா 'ஷாப்பிங்' கையும் புறப்படறப்ப சிங்கப்பூர்லே வச்சுப்போம்..." என்று அவன் கூறியதை அவள் ஒப்புக் கொண்டாள். தங்களிடம் அப்துல்லாவும் கோபாலும் எவ்வளவு வித்தியாசமாக நடந்து கொண்டாலும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடாது என்று அப்போது அவர்கள் இருவருமே பரஸ்பரம் தங்களுக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டார்கள். அன்று மாலையிலேயே ஈப்போவுக்குப் புறப்படும்போது ஒரு சோதனை வந்து சேர்ந்தது. நாடகங்களின் மொத்தக் காண்ட்ராக்ட்காரரான அப்துல்லா தன்னுடன், கோபாலுக்கும் மாதவிக்கும் மட்டும் விமானத்தில் ஈப்போ செல்ல ஏற்பாடு செய்து கொண்டு மற்றவர்கள் அனைவருமே - காரில் பயணம் செய்யட்டும் என்று திட்டம் வகுத்திருந்தார். அதன்படி முத்துக்குமரனும் காரிலே போகிறவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த ஏற்பாடு மாதவிக்குத் தெரிந்தது. அவள் உடனே கோபாலிடம் சென்று தைரியமாக மறுத்துவிட்டாள். "நானும் காரிலேயே வரேன். நீங்களும் அப்துல்லாவும் மட்டும் ப்ளேன்ல வாங்க..." "அது முடியாது! ஈப்போக்காரர்கள் ஏர் - போர்ட்ல வரவேற்க வந்திருப்பாங்க..." "வந்திருக்கட்டுமே, அதுனாலே என்ன? நீங்கதான் போறீங்களே..." "அது எப்படியிருந்தாலும் நீயும் ப்ளேன்லதான் வந்தாகணும்." "நான் கார்லதான் வருவேன்..." "அதென்ன? அப்பிடி ஒரு பிடிவாதமா?" "பிடிவாதம்தான்." "வாத்தியாருக்குப் பிளேன் டிக்கட் வாங்கலேங்கிறதுக்காகத்தான் நீ இப்ப வல்வழக்காடறே?" "அப்படித்தான் வச்சுக்குங்களேன். நான் அவரோட தான் காரிலே ஈப்போ வரப்போறேன்..." "இந்த வாத்தியார் ஒண்ணும் ஆகாசத்திலேருந்து உனக்கு முன்னாலே திடீர்னு அபூர்வமாக வந்து குதிச்சுப்புடலே, என்னாலேதான் உனக்கும் பழக்கம்..." "இருக்கட்டுமே, அதுக்காக..." "நீ ரொம்ப எதிர்த்துப் பேசறே? உனக்கு வாய்க் கொழுப்பு அதிகமாயிடிச்சு." "........" "வந்த இடத்திலே உன்கிட்ட ஒண்ணும் பண்ண முடியலை. மெட்ராஸா இருந்தா 'தூரப்போடி கழுதைன்னு' தள்ளிப்புட்டு ஒரே நாளிலே வேறே ஹீரோயினுக்கு வசனம் மனப்பாடம் பண்ணி வச்சு உன்னை வெளியே அனுப்பிடுவேன்." "அப்பிடிச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தா அதையும் செய்துக்க வேண்டியதுதானே?" இதைக் கேட்டுக் கோபால் அதிர்ச்சியடைந்தான். இவ்வளவு துடுக்காக அவள் தன்னிடம் எதிர்த்துப் பேச நேர்ந்த அனுபவம் இதற்கு முன் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. முத்துக்குமரன் என்ற கொழுகொம்பின் பற்றுதலில் மாதவி என்ற மெல்லிய கொடி எவ்வளவு இறுக்கமாகப் பற்றிப் படர்ந்திருந்தால் இந்தத் துணிவு அவளுக்கு வந்திருக்க முடியுமென்று எண்ணியபோது அவன் திகைத்தான். கடைசியில் அப்துல்லாவும், அவனும் உதயரேகாவும்தான் விமானத்தில் சென்றார்கள். மாதவி, முத்துக்குமரனோடும் மற்றக் குழுவினருடனும் காரில் தான் ஈப்போவுக்கு வந்தாள். மாதவிக்கு உறைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவளுக்கு ரிஸர்வ் செய்திருந்த விமானப் பயணச் சீட்டை உதயரோகாவின் பெயருக்கு மாற்றி அவளை விமானத்தில் அழைத்துக்கொண்டு போனார்கள் அவர்கள். மாதவியோ அவர்கள் யாரை விமானத்தில் அழைத்துப் போகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. உதயரேகாதான் மறுநாள் காலை எல்லாரிடமும் பினாங்கிலிருந்து விமானத்தில் தான் அப்துல்லாவோடு வந்ததாகப் பறையறைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய அந்தஸ்து உயர்ந்திருப்பதைக் குழுவிலுள்ள மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட ஆசைப்பட்டாள் அவள். அப்படித் தெரிவதால் குழுவிலுள்ள மற்றவர்கள் தனக்குப் பயப்படவும் மரியாதை செய்யவும் வழி உண்டு என்று அவளுக்குத் தோன்றியது போலும். |