5

     நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படியேறி அறைக்குள் வந்ததும்... தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக்குமரனுடைய அணைப்பில் சிக்கியது.

     "என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவதற்குத்தான் வந்தேனாக்கும்..."

     "இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில்லையா?"

     -அவள் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள்.

     "உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்..."

     "ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத்திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும்."

     முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளுடைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன.

     "உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி"-

     "எனக்கும் கூடத்தான்...ஆனால்" இப்படி மெல்லிய குரலில் அவன் காதருகே கிளுகிளுத்த போது அவள் குரலில் சங்கீத நயத்துக்கும் அப்பாற்பட்டதோர் இனிமை நிலவியதை அவன் உணர்ந்தான்.

     அவனிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து விடைபெற்றுச் சென்றாள் அவள். இரவு அவனும் தனியாக விடப்பட்டான். அவள் நின்ற இடத்து மல்லிகைப்பூ வாசனையும் சிறிது நிலவியது. அவளை அவன் அணைத்த போது உதிர்ந்த இரண்டொரு பூக்கள் தரையில் இருந்தன. அதைத் திரட்டி எடுத்து மறுபடியும் அந்த வாசனையை நினைவிற் பதிக்க முயன்றான் முத்துக்குமரன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வாடைக் காற்று சில்லென்று வீசியது. அவன் ஜன்னலை அடைத்துத் திரையை இழுத்து விட்டான்.

     டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சென்று எடுத்தான்.

     "நான்தான் மாதவி, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்..."

     "அதைச் சொல்றதுக்கு ஒரு ஃபோனா?"

     "ஏன்? நான் அடிக்கடி ஃபோன் பேசறது பிடிக்கலையா உங்களுக்கு?"

     "அப்படி யார் சொன்னா? நீயா ஏன் சண்டைக்கு இழுக்கறே?"

     "வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேனோ இல்லையோன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கப் போறீங்களேன்னு ஃபோன் பண்ணினாச் சண்டைக்கு இழுக்கறேங்கிறீங்க...?"

     "எனக்கே உன்கிட்டச் சண்டை போடணும்னு ஆசையாயிருக்குன்னு வச்சுக்கயேன். ஆனா இப்படி ஃபோனிலே...இல்லை."

     "பின்னே எப்படி?"

     "நேரிலே சண்டை போடணும். 'சொல்றபடி கேட்டுக்கிட்டு ஒழுங்கா இருன்னு' உன் கன்னத்திலே ஒண்ணு வைக்கணும்..."

     "செய்யுங்களேன். எனக்குக்கூட உங்ககிட்ட அப்படி ஓர் அறை வாங்கணும்னு ஆசையாயிருக்கு..."

     - இப்படி வெகு நேரம் நீண்டது அவர்களுடைய உரையாடல். இருவரும் பேச்சை முடிக்க விருப்பமில்லாமலே முடித்துக் கொண்டார்கள். அவளிடம் பேசுவதற்கு இன்னும் நிறைய மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவனும், அவனிடம் பேசுவதற்கு நியை மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவளும் மனமில்லாமலே ஃபோனை வைத்தார்கள்.

     மனம் களிப்பினால் பொங்கி வழிந்த அந்த வேளையில் - நாடகத்துக்குப் பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் தொடங்கினான் முத்துக்குமரன். பாண்டிய மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு கழைக் கூத்தியைப் பற்றிய கதையை மனத்தில் அமைத்துக் கொண்டு எடுப்பாகவும் - பிரமாதமாகவும் அமைய வேண்டிய முதற் காட்சியை உருவாக்குவதில் அவன் ஈடுபட்டான். பாண்டிய மன்னன் தன் அமைச்சர், புலவர், பரிவாரங்களுடன் கழைக் கூத்தைப் பார்க்கும் காட்சி. அதில் கழைக் கூத்தாடுகிறவள் பாடுவதாக ஒரு பாடலையும் எழுத வேண்டியிருந்தது. கழைக் கூத்தியான அந்தக் கதாநாயகியைக் கற்பனை செய்ய நேர்ந்த போதெல்லாம் அவன் மனக் கண்ணில் மாதவி சிரித்துக் கொண்டு நின்றாள். கதாநாயகனையோ அவன் கற்பனையே செய்யவில்லை. தன்னையே பாவித்துக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவுக்கு மேல் நேரம் சரியாகத் தெரியாத வேளையில் பங்களாவிலிருந்து கோபால் ஃபோன் செய்து முத்துக்குமரனை அழைத்தான்.

     "என்ன வாத்தியாரே! இங்கே வர்ரியா! 'சோம பானம்'லாம் ரெடியாயிருக்கு. ஒரு கை பார்க்கலாம்..."

     "வேண்டாம்பா...நான் எழுதிக்கிட்டிருக்கேன். நல்லா எழுத வர்ரப்ப பாதியிலே விட்டுட்டு வரவேண்டான்னு பார்க்கிறேன்."

     "அங்கேயே கொடுத்தனுப்பட்டுமா?"

     "வேண்டாம்; சொன்னாக் கேளு..."

     "சரி! அப்புறம் உன் இஷ்டம்" - என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான் கோபால்.

     - முத்துக்குமரனின் மனத்திலோ மாதவியே பெரிய போதையை உண்டாக்கி அப்போது அவனை எழுதுவித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய நாசியில் இன்னும் அவள் மேனியின் நறுமணம் நினைவு இருந்தது. அநுபவம் நிறைந்திருந்தது. அவளுடைய பொன் மேனியின் மென்மை இன்னும் அவனுடைய கைகளில் நிறைந்திருந்தது. அவற்றை விட அதிகமான எந்தச் செயற்கை மதுமயக்கமும் அப்போது அவனுக்குத் தேவையாயிருக்கவில்லை. அவளே அவனுடைய இதயத்தின் எல்லாப் பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு ஒரு பெரிய மது மயக்கமாக உள்ளே உறைந்து போயிருந்தாள். அவளை அற்புதமாக அலங்கரித்துப் பாண்டியப் பேரரசனுடைய திருக்கொலுவில் கழைக் கூத்தாட வைத்து இரசித்துக் கொண்டிருந்தான் அவன். கழைக் கூத்தின் போது, கழைக்கூத்தி பாண்டியனை நோக்கிப் பாட வேண்டிய பாடலும்கூட நன்றாக வந்து விட்டது.

     "நெஞ்சின் எல்லையில் நீயாட      நீள் கழையினில் நானாடுவேன்"

     - என்ற பல்லவியோடு மிக இனிய இராகமொன்றில் மெட்டமைத்து அந்தப் பாடலை அவன் இயற்றியிருந்தான். அன்றிரவு அவன் படுக்கப் போகும் போது ஏறக்குறைய விடிகாலை மூன்று மணிக்கு மேலாகி விட்டது.

     படுக்கையில் களைப்போடு விழுந்தபோது அவுட்ஹவுஸுக்கு அருகில் தோட்டத்திலிருந்து பவழ மல்லிகைப் பூக்களின் ஈர வாசனை குளிர்ந்த காற்றுடன் கலந்து வந்தது. அந்த வாசனையை உள்வாங்கி மனத்திலிருந்த மாதவியைப் பற்றிய நினைவுகளுக்குச் சூட்டிக்கொண்டு உறங்கினான் அவன்.

     மறுநாள் காலையில் விடிந்ததே அவனுக்குத் தெரியாது. அவன் எழுந்திருக்கும் போது ஏறக்குறைய மணி ஒன்பதாகிவிட்டது. அப்போது அவுட்ஹவுஸின் வராந்தாவில் - மாதவியின் குரலும், கோபாலின் குரலும் கலந்து கேட்டது. மாதவி வந்திருக்க வேண்டுமென்ற அநுமானத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் முத்துக்குமரன். பதினைந்து இருபது நிமிஷங்களுக்குப் பின் அவன் மறுபடி வெளியே வந்தபோது - நாயர்ப் பையன் காபி சிற்றுண்டியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தான்.

     சிற்றுண்டியை முடித்துக் கைகழுவிக் கொண்டு வந்து அவன் காபியை பிளாஸ்கிலிருந்து டம்ளரில் ஊற்றிப் பருகிக் கொண்டிருந்த போது, மாதவி உள்ளே வந்தாள்.

     "எனக்குக் கிடையாதா?"

     அவளுடைய குரல் அவனைக் கெஞ்சியது; கொஞ்சியது. முத்துக்குமரன் பிளாஸ்கைக் கவிழ்த்துப் பார்த்தான். அதில் காபி இல்லை. அவன் கையிலிருந்த டம்ளரில் முக்கால் வாசி பருகியது போக மீதமிருந்தது.

     "இந்தா, குடி..." - என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே அதையே அவளிடம் நீட்டினான் அவன்.

     "நான் கேட்டதும் இதைத்தான்" - என்று புன்முறுவலோடு அதை அவனிடமிருந்து வாங்கிப் பருகினாள் அவள். அவள் அப்படிப் பிரியத்தோடும், பாசத்தோடும் தன்னை நெருங்குவதும் பழகுவதும் அவன் மனத்தில் கர்வத்தை வளர்த்தன. அவளுடைய மனத்தை வென்று தன் பக்கமாகச் சேர்த்துக் கொண்டதற்காக அவன் உண்மையிலேயே கர்வப்படத் தகுந்தவனாகத்தான் இருந்தான். பத்தேகால் மணிக்கு நாயர்ப்பையன் முன்னால் வழி காட்டி அழைத்துக் கொண்டு வர, காக்கி உடையணிந்த - டைப்ரைட்டிங் மெஷின் கம்பெனியின் ஆள் ஒருவன் - புதிய தமிழ்த் தட்டெழுத்து மெஷினைக் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான்.

     "ஸ்கிரிப்ட்டைத் தர்ரீங்களா? டைப் செய்யத் தொடங்கலாம்னு பார்க்கிறேன்..." என்று மாதவி மெஷினைத் திறந்து புது ரிப்பனை மாட்டிக் கொண்டே அவனைக் கேட்டாள்.

     அப்போது ஸ்டூடியோவுக்குப் புறப்படத் தயாராகி விட்டக் கோலத்தில் கோபால் வந்தான்.

     "டைப்ரைட்டர் ரெடி! உன் கதாநாயகியும் ரெடி...! இனிமேலாவது நீ வேகமாக நாடகத்தை எழுதணும் வாத்தியாரே."

     "முதல் காட்சி ரொம்ப நல்லா வந்திருக்குடா கோபால். நாடகம் நல்லபடி முடியும்கிறதுக்கு இதுவே நல்ல அடையாளம்."

     "சபாஷ்! வேகமா எழுது! இப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன். சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். சாயங்காலம் பார்க்கிறேன் வாத்தியாரே?" - என்று கூறிவிட்டு மாதவியின் பக்கம் திரும்பி,

     "ஒன் பிளஸ் டூ அல்லது வந்தால் ஒன் பிளஸ் திரீ எடு. மேலே தேவையானா அப்புறம் எடுக்கலாம்! நீ உற்சாகப்படுத்தற 'ஜோர்'ல தான் வாத்தியார் நாடகத்தை முடிக்கணுமாக்கும்..." - என்று சொல்லிச் சென்றான் கோபால்.

     "அப்படியே கவனித்துக் கொள்கிறேன்"- என்ற பாவனையில் தலையை ஆட்டிச் சிரித்தாள் மாதவி.

     - எழுதி முடித்திருந்தவரை தன் கையெழுத்துப் பிரதிகளை அவளிடம் கொடுத்து - டைப் செய்யச் சொன்னான் முத்துக்குமரன். அவள் அதை வாங்கிப் பார்த்ததுமே முதலில் அவன் கையெழுத்தைப் புகழத் தொடங்கினாள்;

     "உங்க கையெழுத்தே முத்து முத்தா ரொம்ப நல்லாயிருக்குதே!'

     "அந்தக் காலத்திலே ஏட்டிலே எழுத்தாணியாலே எழுதிப் பழகின கையாச்சே? நல்லா இருக்காமே பின்னே வேற எப்படியிருக்கும்?" என்று அவனும் தற்பெருமையாகச் சொல்லிக்கொண்டான். அவள் மேலும் அவனைப் புகழ்ந்தாள்.

     "உங்க தற்பெருமைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."

     "உலகத்திலே கஷ்டப்படறதுக்குன்னே பிறக்கப்போற கடைசிக் கலைஞன் வரை சொந்தம் கொண்டாடறத்துக்கு அவனோட செருக்கு ஒண்ணுதான் அவனுக்குன்னு மீதமிருக்கு."

     "எத்தனையோ பேரிடம் செருக்கு இருந்தாலும் சில பேருக்குத்தான் அதுவே ஒரு வீரமாகவும் கம்பீரமாகவும் இருக்கும்..."

     "'புகழாபரணன்'னு பழைய தமிழில் ஒரு தொடரே உண்டு மாதவி!"

     "சொல்றதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. புகழைத் தனக்கு ஆபரணமாக அணிஞ்சிக்கிறவங்கன்னு தானே இதுக்கு அர்த்தம்?"

     "ஆமா! 'புகழே இன்னார் கழுத்திலே நாம் ஆபரணமாக அணி செய்யணும்னு ஆசைப்படற ஆள்'னும் அர்த்தம் சொல்லலாம்" - என்று அதற்கு விளக்கம் கூறினான் முத்துக்குமரன். டைப் செய்வதற்கு முன் அவன் தன்னிடம் கொடுத்த கையெழுத்துப் பிரதியை நிதானமாக ஒரு முறை படிக்கலானாள் மாதவி. படித்து முடிந்ததும் முத்துக்குமரனை அவள் பாராட்டினாள்:

     "நல்லா வந்திருக்குங்க! கழைக்கூத்தாடிப் பெண் பாடறதாக ஒரு பாட்டு எழுதியிருக்கீங்களே! அது ரொம்பப் பிரமாதம்..."

     "அந்தப் பாட்டைத்தான் உன் குரலிலே ஒரு தடவை பாடேன்; மனசு குளிரக் கேட்கிறேன்?"

     "இப்ப நான் பாடினா அதுனாலே ஒரு அரைமணி நேரத்துக்கு வீணா உங்க வேலை கெடுமே...?"

     "உன் பாட்டை கேட்கிறதைவிட வேற வேலைகூட இருக்கா எனக்கு?"

     - அவள் பாடத் தொடங்கினாள். தொண்டையைக் கனைத்துக் குரலைச் சரி செய்து கொண்டு,

     "நெஞ்சின் எல்லையில் நீயாட
     நீள் கழையினில் நானாடுவேன்"

     என்று அவள் பல்லவியை எடுத்தபோது தேன் வெள்ளம் மடை திறந்தது. அவளே கதாநாயகியாகவும், அவனே கதாநாயகனாகவும் மாறி விட்டாற் போன்ற ஒரு சூழ்நிலையை அந்தப் பாடல் அங்கே உருவாக்கிவிட்டது. தன்னுடைய சொற்கள் அவளுடைய குரல் என்ற இங்கிதத்தில் அமுதமாகப் பெருகி வருவதைக் கண்டு கட்டுண்டு போய் வீற்றிருந்தான் முத்துக்குமரன். அவள் பாடி முடித்த போது அமுதமழை பொழிந்து நின்ற மாதிரி இருந்தது.

     -பாடி முடிந்ததும் ஓடிச் சென்று ஒரு பூச்செண்டைத் தூக்குவது போல் அவளைக் கட்டித் தூக்கினான் அவன், அவள் அவனைத் தடுக்கவில்லை. அவனுடைய பிடியில் சுகம் கண்டவள் போல் இருந்தாள் அவள்.

     பகல் உணவை அங்கேயே அவுட் ஹவுஸுக்குக் கொண்டுவரச் சொல்லி இருவரும் சாப்பிட்டார்கள். அவனுக்கு டேபிளில் இலை போட்டு அவள் பரிமாறினாள்.

     "இப்படி எனக்கு நீ இலை போட்டுப் பரிமாறும் காட்சியைத் திடீர்னு யாராச்சும் பார்த்தா என்ன நினைச்சுப்பாங்க..."

     "ஏன்? எதுக்காக இப்படிக் கேட்கிறீங்க?"-

     "ஒண்ணுமில்லே! இந்த ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒண்ணுபட்டாங்கன்னு பார்க்கிறவங்களுக்குப் பிரமிப்பாகவும் பொறாமையாகவும் இருக்காதான்னு கேட்டேன்..."

     "இப்படித் திடீர்னு சந்திக்கறதுக்காகவும் - ஒண்ணு சேர்றதுக்காகவும் உலகத்தின் எந்த இரண்டு மூலையிலோ எந்த இரண்டு ஆண் பெண்களோ எந்தக் காலத்திலும் மீதமிருக்கிறார்கள்னு தான் சொல்லத் தோன்றுகிறது."

     "அது சரி! என்னைப் பார்த்ததுமே உனக்கு ஏன் என் மேலே இவ்வளவு பிரியம் விழுந்திச்சு..."

     "இந்தக் கேள்வி ரொம்ப அக்கிரமமானது; அகங்காரமானது. எப்படியோ வந்து ராஜா மாதிரி கால்மேலே கால் போட்டு உட்கார்ந்து கொண்டு என்னை மயக்கினதுமில்லாமே இப்ப ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரிக் கேள்வி கேட்கறதைப் பாரு...?"

     "அப்படியா? நான் உன்னை மயக்கிப்பிட்டேனின்னா குற்றஞ் சாட்டறே?"

     "என்னை மட்டுமில்லே! உள்ளே கம்பீரமா நுழைஞ்சு கால்மேல் கால் போட்டு ராஜாவாட்டமா உட்கார்ந்தப்ப அங்கே இருந்த அத்தினி பேரையும் தான் மயக்கினீங்க. ஆனால் என்னைத்தவிர மத்தவங்களுக்குத் தைரியமில்லே. உங்ககிட்டே வந்து பக்கத்திலே நெருங்கிப் பேசறதுக்குப் பயப்பட்டாங்க. நான் ஒருத்திதான் தைரியமாகத் தேடிப் பக்கத்திலே வந்து அந்த மயக்கத்தை உங்ககிட்டவே ஒப்புக் கொண்டேன்..."

     "அடடே அப்படியா சங்கதி! இது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் அப்பவே பிகுவா, டெஸ்ட் பண்ணியிருப்பேனே? அத்தினி பெரிய தைரியசாலியா நீ?"

     "இல்லையா பின்னே? உங்களைப் போல இருக்கிற மாபெரும் தைரியசாலியையே அடையணும்னாக் கொஞ்சமாவது தைரியம் எனக்கு இருந்தாத்தானே முடியும்?"

     "சரி, அது போகட்டும்! பையன் ஒரு இலைதானே கொண்டாந்திருக்கான். இப்ப நீ எப்படிச் சாப்பிடுவே? இன்னொரு இலை கொண்டாரச் சொல்லட்டுமா? அல்லது டிபன் கேரியர்லியே சாப்பிடறியா?"

     "நீங்களே வேணும்னு ஒரு இலை கொண்டாரச் சொல்லியிருப்பீங்க..?"

     "சே! சே! நான் ஒண்ணும் சொல்லலே."

     "என்ன பண்ணித் தொலைக்கிறது! இந்த இலையிலேயே சாப்பிட வேண்டியதுதான். காலையிலே காப்பி குடிக்கிறப்பவே அப்படித்தானே செஞ்சிங்க...? மனுஷாளை உங்களுக்கு அடிமையாக்கிறதிலே அத்தனை அகங்காரம் உங்களுக்கு, இல்லையா?"

     "அப்படிச் சொல்லாதே மாதவி! உன்னை என் மனத்தின் சௌந்தரிய ராணியாகக் கொலு வைத்திருக்கிறேன் நான். நீயாகவே ஏன் உன்னை அடிமையென்று சொல்லிக் கொள்ளுகிறாய்? அடிமை எங்காவது ராணியாகப் பதவி பெற முடியுமா?"

     "நீங்கள் எனக்கு ராணிப்பட்டம் கொடுத்திருக்கிறீர்களே...? அடிமைகளும் ராணியாக முடியுமென்பதைத்தானே இது காட்டுகிறது?"

     - ஆதரவுடன் அவன் அருகில் உட்கார்ந்து பரிமாற அவன் சாப்பிட்டு மீதமிருந்த இலையிலேயே அவள் அன்று பகலில் சாப்பிட்டாள். அப்படி உண்ணும்போது அவளுடைய நாணத்தையும், அன்பையும், வசப்படும் ஓர் அடிமை போன்ற பிரியத்தையும் - தாங்கமுடியாத அளவு அவன் மனம் திடீரென்று சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான் அவன். அவ்வளவு மகிழ்ச்சிகளை, அவ்வளவு இனிய அநுபவங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு தாங்க மனத்தில் இடம் குறைந்துவிட்டது போல் மகிழ்ச்சிகளும் இனிமைகளும் பெரிதாகத் தோன்றின அவனுக்கு.

     சாப்பாடு முடிந்ததும் நாயர்ப்பையன் வந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனான். அவள் டைப் செய்வதற்காக உட்கார்ந்தாள்.

     "இந்த விரல்களால் வீணையின் நரம்புகளில் இடைவிடாமல் எந்த இனிய பண்ணையாவது நீ வருடிக் கொண்டே இருந்தால் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். வீணை வாசிக்கவேண்டிய உன்னுடைய நளினமும், சாதுரியமும் நிறைந்த விரல்கள் டைப் அடிப்பதால் இந்த மிஷின் பாக்கியம் செய்ததாகிறது, மாதவி!"

     "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இப்போது? என்னைப் புகழ்கிறீர்களா? அல்லது கேலி செய்கிறீர்களா? நான் வீணை வாசித்தாலும் டைப் அடிக்கிறது மாதிரிதான் இருக்கும் என்பதைச் சொல்லிக் கிண்டல் செய்கிறீர்களா? டைப் அடிக்கிற மாதிரி வீணை வாசித்தால் நரம்புகள் அறுந்து போகும். வீணை வாசிக்கிற மாதிரி டைப் அடித்தால் எழுத்துக்களே காகிதத்தில் பதியாது."

     "உனக்குத்தான் இரண்டு காரியத்தையுமே நல்லாச் செய்யத் தெரியுமே?" என்றான் முத்துக்குமரன். மாலையில் அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது கடற்கரைக்கோ கடை வீதிக்கோ போக வேண்டுமென்று ஆசையாயிருந்தது அவனுக்கு. அவளுடைய அன்பு என்ற இங்கிதத்தில் மூழ்கிக்கொண்டே உருவாக்கினால் அந்த நாடகம் மிகச் சிறப்பாக வாய்க்குமென்று தோன்றியது அவனுக்கு. முதற்காட்சி முழுமையையும் இரண்டாங் காட்சியில் சில பகுதிகளையும் அவன் எழுதி முடித்திருந்தான். பிற பகுதிகளை இரவில் தொடர்ந்து எழுதினால் காலையில் அவள் வந்து 'டைப்' செய்ய வசதியாயிருக்கும் என்று எண்ணினான் முத்துக்குமரன் - மூன்று மணியானதும் நாயர்ப்பையன் அவர்கள் இருவருக்கும் மாலைக் காபி சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தான்.

     "இப்படி எங்கேயாவது வெளியிலே போய்ச் சுற்றிவிட்டு வரலாம்னு பார்க்கிறேன். நீயும் வர்றியா மாதவி?"

     "ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கிட்டீங்கனா வரேன்"

     "என்ன நிபந்தனைன்னு சொன்னா ஒப்புக்கொள்ள முடியுமா இல்லையான்னு பார்க்கலாம்..."

     "பீச்சுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்போம் - அப்புறம் வர்ர வழியிலே ராத்திரிச் சாப்பாடு எங்க வீட்டில... இப்பவே அம்மைக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடப் போறேன்..."

     "உங்க வீடு எங்க இருக்கு?"

     "சொந்த வீடு இல்லே; வாடகை வீடு தான். லாயிட்ஸ் ரோடிலே ஒரு பங்களா 'அவுட்ஹவுஸ்'லே நானும் அம்மையும் இருக்கோம்..."

     "கோபாலைக் கூப்பிடலையா?"

     "அவரு வரமாட்டாரு..."

     "ஏன்?"

     "எங்க வீடு ரொம்பச் சின்னது. இன்னொருத்தரோட பங்களாவின் 'அவுட்ஹவுஸ்.' தவிர, நான் அவர் நாடகக் கம்பெனியில் மாசச் சம்பளத்துக்கு 'ஆர்ட்டிஸ்டா' ஒப்பந்தம் பண்ணிக் கையெழுத்துப் போட்டவ. 'ஸ்டேட்டஸ்' பிரச்னையெல்லாம் வேற இருக்கு. அவருக்குத் தெரிஞ்சா உங்களையேகூடப் 'போக வேண்டாம்' பாரு."

     "அதுக்கு வேறே ஆள் பார்க்கணும். ஒருத்தன் சொல்லித் தலைவணங்கற ஆளு இல்லே நான். இந்த போக்ரோடு கோடீயிலே இருக்கே டீக்கடை; அதுக்கு வான்னு நீ என்னையெக் கூப்பிட்டினாக்கூட உங்கூட குசாலாக் கை கோத்துக்கிட்டு வர நான் தயாராயிருக்கேன் மாதவி."

     அவள் முகத்தில் நன்றியும் அன்பும் கனிவும் புன்முறுவல் தோன்றியது.

     "நான் கண்டிப்பாச் சாப்பிட வரேன். உன் நிபந்தனையை ஏதுக்கறேன். இப்பவே உங்க அம்மைக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு..."

     "இருங்க! முதல்லே நாயர்ப் பையனைக் கூப்பிட்டு வெளியே புறப்படறதுக்குக் காரை எடுக்கச் சொல்றேன்..."

     "வேண்டாம் மாதவி! கோபாலோட கார்ல போக வேண்டாம்! டாக்ஸியிலே போவோம். அல்லது பஸ்லே போவோம்..."

     "சே! சே! அவ்வளவு வித்தியாசமாகப் போனா அப்புறம் அவருக்குக் கோபம் வரும். கார் எடுத்துக்கிட்டுப் போறதை அவர் தப்பா நினைக்க மாட்டாரு. 'எங்க போகணும்னாலும் டிரைவரிட்டச் சொல்லி சின்ன வண்டியிலே அழைச்சிட்டுப் போ'ன்னு போறப்பக்கூட அவரு என்கிட்டச் சொன்னாரு..."

     "ஒருவேளை அவனோட கார் உன் வீட்டு வாசல்லே நிற்கிறதுகூட ஸ்டேட்டஸ் குறைவாயிருக்குமோ என்னவோ?"

     "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை" - என்று முத்துக்குமரனுக்குப் பதில் கூறிவிட்டு ஃபோனில் நாயர்ப்பையனைக் கூப்பிட்டு மலையாளத்தில் பேசினாள் மாதவி. சில விநாடிகளில் அவுட்ஹவுஸின் முன் சிறிய 'பியட்' ஒன்று வந்து நின்றது. புறப்பட்டுக் கொண்டே அவளிடம் முத்துக்குமரன் ஒரு கேள்வி கேட்டான்: "மாதவி உனக்கு மலையாளத்தில் எந்த ஊரு?"

     "மாவேலிக்கரை..." - என்று பதில் கூறினாள் அவள். கார் புறப்பட்டது. முதலில் தன்வீட்டில் போய்ச் சாப்பிட வருவது பற்றிச் சொல்லிவிட்டு அப்புறம் கடற்கரை செல்லலாமென்றாள் அவள். பிறப்பினால் மலையாளியாயிருந்தும் அதிக வித்தியாசம் தெரியாமல் அவள் தமிழ் பேசியதும் டைப் செய்ததும் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தன. தமிழ் வசனத்தையே மலையாள வசனம் போலவும், தெலுங்கு வசனம் போலவும் மாற்றி உச்சரிக்கும் சில நடிகைகளை அவனறிவான். அப்படிப்பட்டவர்களிடையே மாதவி புதுமையாகத் தோன்றினாள் அவனுக்கு.