15

     இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ணி எண்ணிக் கடைசியில் பிரயாண தினமே வந்து விட்டது. பகல் ஒரு மணிக்கு விமானம். சிங்கப்பூர் போகிற ஏர் இந்தியா போயிங்கில் பயணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் பினாங்கில்தான் நாடகங்களை நடத்தப்பட வேண்டுமென்று அப்துல்லா கண்டிப்பாகச் சொல்லியிருந்ததனால் சிங்கப்பூரில் இறங்கியதும் உடனே வேறு விமானத்தில் மாறி அவர்கள் மூவரும் பினாங்கு போக வேண்டும். அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்காக அப்துல்லா சிங்கப்பூர் விமான நிலையத்திற்கே வந்திருப்பார்.

     பிரயாண தினத்தன்று கோபால் மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான். மாதவியிடமும், முத்துக்குமரனிடமும் கூட முகத்தைத் தூக்கிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பழகினான். பங்களாவில் வருவோரும், போவோருமாக ஒரே கூட்டம். போர்டிகோவிலும், தோட்டத்திலும் இடம் போதாமல் - தெருவிலும் 'பார்க்' செய்யப்பட்டிருக்கும் அளவுக்குச் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கார்கள் 'போக் ரோடே' நிறைந்து காணப்பட்டன.

     'ஜில் ஜில்'லும், வேறு பத்திரிகைக்காரர்களும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிய வண்ணமிருந்தனர். தேடி வந்திருக்கும் யாரையும் தன் கவனத்திலிருந்து தவறவிட்டு விடாமல் எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் கோபால். பெரிய பெரிய மாலைகளை படத் தயாரிப்பாளர்களும், சக நடிகர்களும், நண்பர்களும் கொண்டு வந்து போட்ட வண்ணமாயிருந்தனர். ஹால் முழுவதும் தரையில் ரோஜா இதழ்கள் நெற்களத்தில் நெல்லைப்போல சிதறியிருந்தன. 'பொக்கே'கள் ஒரு மூலையில் மலையைப் போல் குவிந்து விட்டன. பதினொன்றே முக்காலுக்கு விமான நிலையத்திற்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது.

     விமான நிலையத்திற்குப் புறப்படும்போது கோபாலுடன் அதே காரில் சக நடிகர்களும் பட முதலாளிகளும் சேர்ந்து கொண்டதால் முத்துக்குமரனும் மாதவியும் வேறொரு காரில் தனியே சென்றனர்.

     மீனம்பாக்கத்திலும் பலர் மாலையணிவிக்க வந்திருந்தனர். கூட்டமும் நிறைய இருந்தது. முத்துக்குமரனுக்கு அது முதல் விமானப் பயணம். அதனால் பயணத்தைப் பற்றிய குறுகுறுப்பு மனத்தில் இருந்தது. வழியனுப்புகிறவர்களின் கூட்டம் கோபாலை மொய்த்துக் கொண்டிருந்தது. வழியனுப்ப வந்திருந்தவர்களில் பலரை மாதவி அறிந்திருந்தாலும் அவர்களோடு பேசுவதற்காகவும் சொல்லி விடை பெறுவதற்காகவும் கோபாலருகிலே போய் நின்றால் முத்துக்குமரன் தனியே விடப்படுவான் என்பதை உணர்ந்து அவனருகிலேயே இருந்தாள் அவள். நடுநடுவே கோபால் தன் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஏதேதோ கேட்ட போதும் கூட அதற்குப் பதில் சொல்லிவிட்டு மறுபடி முத்துக்குமரனின் அருகிலேயே வந்து நின்று கொண்டாள் அவள்.

     ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த அந்தக் கூட்டத்தில், 'தான் தனியே விடப் பட்டிருக்கிறோம்' - என்று முத்துக்குமரன் எண்ணாதபடி அவனருகே இருக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதை மாதவி உணர்ந்தாள். அவனுடைய இதயம் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. தான் அப்படி முத்துக்குமரனின் அருகிலேயே ஒட்டிக் கொண்டு நிற்பதைக் கோபால் வித்தியாசமாக எடுத்துக் கொள்வானோ என்ற பயம் இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

     'கஸ்டம்ஸ்' சடங்குகள் முடிந்து அப்பாலிருந்த வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கான லவுஞ்சில் அமர்ந்திருந்த போது, ''நீ நாடகத்தின் கதாநாயகி, கோபால் நாடகத்தின் கதாநாயகன், மூன்றாவதாக நான் எதற்கு இப்போது சிங்கப்பூர் வருகிறேன் என்பதுதான் எனக்கே புரியவில்லை'' என்று மீண்டும் அவளிடம் வம்புக்கு இழுத்தான் முத்துக்குமரன்.

     மாதவி முதலில் ஓரிரு விநாடிகள் இதற்கு மறுமொழி கூறவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டாள். சில விநாடிகள் கழித்து அவன் காதருகே மெதுவான குரலில் அவள் கூறினாள்: ''கோபால் நாடகத்துக்குக் கதாநாயகர். கதாநாயகிக்குக் கதாநாயகர் நீங்கள்தான்!'' அவன் முகத்திலும் இதைக் கேட்டுச் சிரிப்பு மலர்ந்தது. கோபாலும் அருகே வந்து அதில் கலந்து கொண்டான்.

     ''என்ன வாத்தியாரிட்ட இரகசியமா ஜோக் அடிக்கிறே...''

     ''ஒண்ணுமில்லே! சாருக்கு இதுதான் முதல் விமானப் பயணமாம்...''

     ''மெய்டன் ஃப்ளைட் இல்லையா?'' கோபால் அளவுக்கு மீறிய பிரயாண உற்சாகத்திலிருந்தான். திடீரென்று அவர்களிடம் வந்து, ''ஜமாய்ச்சுப்பிடணும், இத்தனை பிரமாதமான நாடகம் இதுவரை பார்த்ததே இல்லேங்கிற மாதிரி மலேயா முழுவதும் பேசிக்கிறாப்பல பண்ணிட்டு வரணும்'' என்றான் அவன்.

     சிங்கப்பூர் போகிற 'ஏர்- இந்தியா போயிங்' பம்பாயிலிருந்து கம்பீரமாக வந்து லாண்ட் ஆகியது. ஓசை கிறீச்சிடப் பிரம்மாண்டமான 'போயிங்' விமானம் இறங்கி வருகிற காட்சியைப் பிரமிப்போடு பார்த்தான் முத்துக்குமரன். அவனைப் போன்ற நாட்டுப்புறத்துக் கவிஞனுக்கு இவையெல்லாம் புது அநுபவங்கள். புதுமையும் கர்வமும் கலந்த உணர்வுகள் அவன் மனத்தில் நிறைந்திருந்தன. மாதவி அன்று வெளிநாட்டுப் பிரயாணத்துக்காக பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு புதிய அந்நியப் பெண்ணைப் பார்ப்பது போல் அவளைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்தில் விமானத்தில் வந்து அமருமாறு பிரயாணிகள் அழைக்கப்பட்டார்கள்.

     மாதவி, முத்துக்குமரன், கோபால் மூவரும் விமானத்தை நோக்கி நடந்தார்கள். விமானத்துக்குள்ளே நுழைந்ததும் மிகவும் ரம்மியமான வாசனையும் மெல்லிய வாத்திய இசையும் காதில் ஒலித்தது. முத்துக்குமரன், மாதவி, கோபால் மூவரும் அடுத்தடுத்து மூன்று ஸீட்டுகளில் உட்கார ஏற்பாடாகியிருந்தது. நடுவில் மாதவியும் இந்த ஓரத்தில் முத்துக்குமரனும் அந்த ஓரத்தில் கோபாலும் அமர்ந்தார்கள். போயிங் விமானம் கம்பீரமான ஒலி முழக்கத்துடன் கிளம்பியபோது மண்ணைவிட்டு மேலே பறக்கும் உற்சாகம் மூவர் மனத்திலும் நிறைந்திருந்தது. மண்ணைவிட்டு மேலே பறப்பதுதான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது?

     விமானம் மேலெழும்பியதுமே கோபால் விஸ்கி வரவழைத்துக் குடித்தான். முத்துக்குமரனும் மாதவியும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தார்கள். மூவருமே எகானமி கிளாஸில் பிரயாணம் செய்ததனால் ஜூஸுக்கும் விஸ்கிக்கும் பணம் கொடுத்தான் கோபால். ஒரு சிறிய உலகமே நகர்வது போல் விமானத்திற்குள்ளே யாவும் அழகாயிருப்பதை உணர்ந்தான் முத்துக்குமரன். உற்றுக் கவனிக்காத வேளையில் விமானம் விரையும் உணர்வு கூட இன்றி அப்படியே அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. அந்த அநுபவத்தின் புதுமையையும் சுகத்தையும் இரசிப்பதில் ஈடுபட்ட அவன் மாதவியோடும் கோபாலோடும் அதிகம் பேசவில்லை.

     விமானத்திற்குள்ளிருந்த மைக், நிகோபர் தீவுகளுக்கு மேலே பறந்து கொண்டிருப்பதாக அறிவித்தது. கீழே புள்ளிகளாகத் தென்னை மரங்களும் ஓட்டுக் கட்டிடங்களும் மங்கித் தெரிந்தன. டிஸ்எம்பார்கேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன. மூவருடைய கார்டுகளையும் மாதவியே பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கி ஹோஸ்டஸிடம் கொடுத்தாள். பகலுணவு விமானத்திலேயே வழங்கப்பட்டது. மறுபடியும் விஸ்கி வாங்கிக் குடித்தான் கோபால். விமானத்திலிருந்த தொண்ணூற்றுக்கு மேற்பட்ட பிரயாணிகளுக்கு ஹோஸ்டஸ் பெண்கள் வண்டுகள் போல் சுறுசுறுப்பாக அலைந்து முக்கால் மணி நேரத்திற்குள் உணவு வழங்கிய அதிசயம் முத்துக்குமரனுக்கு வேடிக்கையாயிருந்தது. இவர்களுடைய பூவை ஊதுவது போன்ற மெல்லிய குரலும், உதடுகளைக் குவித்து அழகாக அதிராமல் வினவும் அழகும் முத்துக்குமரனை வியக்கச் செய்தன.

     விமானம் முழுவதும் மெல்லிய குளிரோடு ஓடிகொலோன் வாசனை நிரம்பியிருந்தது. அவன் அது பற்றிக் கேட்டபோது ''ஒவ்வொரு ஃப்ளைட்டுக்கு முன்னாலும் 'ஏர்க்கிராப்ஃட்'டினுள்ளே வாசனை ஸ்பிரே செய்வார்கள்'' என்று விளக்கினான் கோபால்.

     கீழே அடுக்கடுக்காகக் கட்டிடங்களும், கடலில் கப்பல்களும் தென்பட்டன. விமானத்தில் சிங்கப்பூர் நேரம் அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேல் இந்திய நேரத்திற்கும் அதற்கும் வித்தியாசமிருந்தது. பிரயாணிகள் உடனே கைக்கடிகாரங்களைச் சரிசெய்து கொண்டார்கள்.

     விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியது. மீனம்பாக்கத்தில் புறப்படும்போது உதவி செய்தது போலவே முத்துக்குமரன் ஸீட் பெல்ட்டைக் கட்டிக் கொள்வதற்கு மாதவி உதவி செய்தாள்.

     சிறிதும் பெரிதுமாக அந்த நிலைய ரன்வேயில் அங்கங்கே நின்ற விமானங்களைப் பார்த்தபோது ஒரே பிரமிப்பாயிருந்தது. அபிமான நட்சத்திரங்களைப் பார்க்க நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பால்கனியிலும் கூட்டம் கூடியிருந்தது. அப்துல்லா வரவேற்றார். ஏராளமான மாலைகள். விமான நிலைய லவுஞ்சிலே மாதவியும் கோபாலும் டெலிவிஷனுக்கு ஓர் இண்டர்வ்யூ கொடுத்தனர். ரசிகர்கள் ஆட்டோகிராப் வேட்டைக்கு மொய்த்தனர்.

     முத்துக்குமரனுடைய பெயரோ வருகையோ அதிகமாக விளம்பரப்படுத்தப்படாததால் மாலை, வரவேற்பு, தடபுடல் கூட்டம் எல்லாம் கோபாலைச் சுற்றியும் மாதவியைச் சுற்றியுமே இருந்தன. முத்துக்குமரனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. தன்னை உலகுக்கு விளம்பரப்படுத்திக் கொள்ளாதவன் தடபுடலான வரவேற்பை எதிர்பார்ப்பது நியாயமில்லை தானென்று தோன்றியது அவனுக்கு. நட்சத்திர அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு உள்ள 'கிளாமர்' இப்போதுதான் பட்டினத்துக்கு வந்து கோபாலின் தயவில் நாடகம் எழுதத் தொடங்கியிருக்கும் தனக்கு - அதுவும் அந்நிய தேசத்தில் - இருப்பதற்குக் காரணமில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் தனது தோற்றப் பொலிவின் காரணமாகத் தன்னையும் ஒரு நடிகனைப் பார்ப்பதுபோல் எல்லாரும் உற்று உற்றுப் பார்ப்பது அவனுக்குப் பெருமையாயிருந்தது.

     மாதவியிடமும், கோபாலிடமும் பழகியது போல் அப்துல்லா முத்துக்குமரனிடம் அத்தனை மலர்ச்சியாகப் பழகவில்லை. அதற்குக் காரணம் சென்னைக்கு அவர் வந்திருந்த போது நிகழ்ந்த சம்பவங்களாக இருக்கலாமென்று தோன்றியது. முத்துக்குமரன் மாதவியிடம் கூறினான்:

     ''கூட்டத்திலே நான் எங்கியாவது தவறிப் போயி நீங்களும் அதை மறந்து பேசாம இருந்திட்டா புது ஊர்ல என்ன செய்யிறதுன்னு பயமாயிருக்கு...''

     ''அப்படியெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. எங்கண்ணுதான் நேராகவும் திருட்டுத்தனமாகவும் இடைவிடாம உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கே...''

     ''எல்லார் கண்ணும் உன்னைப் பார்க்கறப்ப நீ என்னை மட்டுமே எப்படிக் கவனிச்சுக்கிட்டிருக்க முடியும்?''

     ''கவனிக்கிறேனே! அதுதான் எனக்கே புரியலே. என்ன சொக்குப்படி போட்டு என்னை மயக்கினீங்களோ தெரியலியே - ''

     அவள் இப்படிப் பேசியது அவனுக்குப் பெருமையாயிருந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் லவுஞ்சிலேயே முக்கால் மணி கழித்தபின் வேறு விமானத்தில் பினாங்குக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். பினாங்குக்குப் புறப்பட்ட மலேஷியன் ஏர்வேஸ் விமானத்தில் அப்துல்லாவும் கோபாலும் கேபின் அருகில் முன் வரிசையில் தனியே அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டதால், முத்துக்குமரனும் மாதவியும் பின்னால் நாலு வரிசை தள்ளி அமர்ந்து பேச முடிந்தது. விமானத்தில் கூட்டமே இல்லை. மாதவி அவனிடம் கொஞ்சலாகப் பேசினாள்.

     ''எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கு. இந்த ஊர் ரொம்ப நல்லா இல்லே?''

     ''ஊர் மட்டுமென்ன? நீ கூடத்தான் இன்னிக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே. உன்னைப் பார்க்கிறப்ப ஒரு வனதேவதை மாதிரியிருக்கு.''

     ''ஏது ரொம்பப் புகழறீங்களே?''

     ''ஏதாவது கிடைக்காதான்னுதான்...''

     அவளுடைய வலது கை ஸீட் பின்புறமாகப் பின்னால் மாலைபோல் வளைந்து அவனுடைய வலது தோள் பட்டையைத் தடவிக் கொடுத்தது.

     ''ரொம்ப சுகமாயிருக்கு.''

     ''இது ஏரோப்ளேனாக்கும்! உங்க அவுட்ஹவுஸ் இல்லே! இஷ்டம் போலல்லாம் இருக்கிறதுக்கு - ''

     ''நீ பேசறதைப் பார்த்தா அவுட்ஹவுசுக்கு நீ வந்தப்ப எல்லாம் நான் ஏதோ என் இஷ்டம்போல நடந்துகிட்டதாவில்லே ஆகுது.''

     ''தப்பு! தப்பு! எனக்கும் இஷ்டம்தான் ராஜா'' - என்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி. முத்துக்குமரன் அவளை வேறொரு கேள்வி கேட்டான்:

     ''கப்பல்லே புறப்பட்டவங்கள்ளாம் இன்னிக்குப் பினாங்கிலே கரையிறங்கியிருக்கணுமில்லே?''

     ''இல்லே! நாளைக் காலையிலேதான் வந்து சேருவாங்க. அவங்களுக்கெல்லாம் நாளைக்கு முழு ரெஸ்ட். நம்ம மூணு பேருக்கும் நாளைக்கு ப்ரோக்ராம் 'ஸைட்ஸீயீங்.' நாளன்னிக்கித்தான் முதல் நாடகம்.''

     ''எங்கெங்கே எல்லாம் நாடகம் ஏற்பாடாகியிருக்கு?''

     ''முதல் நாலு நாள் பினாங்கிலே நாடகம். அடுத்த ரெண்டு நாள் ஈப்போவில் நாடகம். அதற்கடுத்த ஒரு வாரம் கோலாலும்பூர். அடுத்த மூணு நாள் மலாக்கா. மறுபடி ரெண்டு நாள் கோலாலும்பூர். அப்புறம் ஒரு ரெண்டுநாள் ஸைட்ஸீயீங், ரேடியோ டெலிவிஷன் பேட்டி. கடைசி ஒரு வாரம் சிங்கப்பூரில் நாடகம். சிங்கப்பூர்லருந்தே மறுபடி மெட்ராசுக்கு ப்ளேன் ஏறிடறோம்...'' - என்ற புரோகிராமை அவனிடம் ஒப்பித்தாள். அவளோடு உல்லாசமாகப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

     ''இன்னிக்கு ஏன் உன் உதடு இத்தினி சிவப்பாயிருக்கு.''

     ''........''

     ''ஏன்னு சொல்லேன்...''

     ''உங்க மேலே ரொம்ப ஆசையினாலே...''

     ''கோபத்திலே கூடப் பொம்பிளைங்களுக்கு உதடு சிவக்கிறது உண்டு...''

     ''அப்பிடியும் இருக்கலாம்! ஏனின்னாக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்லே உங்களைப் போல ஒரு மேதையை வான்னுகூடச் சொல்லாம அப்துல்லா வெறும் கூத்தாடிகளாகிய எங்களையே சுத்திச் சுத்தி வந்தாரே! அப்ப எனக்கு இந்த உலகத்து மேலேயே தாங்க முடியாத கோபம் வந்திச்சு...''

     ''உனக்கு வந்திருக்கலாம். ஆனா எனக்கு கோபம் வரலே. நம்ம மாதவிக்குட்டிக்கு எத்தினி கவர்ச்சி, எத்தினி வனப்பு, எவ்வளவு கூட்டம்னு நான் பெருமைப்பட்டேன். அத்தினி கூட்டத்துக்கு நடுவே அரண்மனை மாதிரிப் பெரிய ஏர்ப்போர்ட் லவுஞ்சிலே கையிலே தாங்கமுடியாம மாலைகளைத் தாங்கிக்கிட்டுப் பட்டுப்பூச்சி மாதிரி நீ நின்னது எவ்வளவு நல்லாயிருந்திச்சுத் தெரியுமா?''

     ''பக்கத்திலே யார் யாரோ நின்னாங்க. நீங்க நிக்கணும்னு எம் மனசு தவித்தது.''

     ''அது எனக்குத் தெரியும்! ரெண்டு மனசும் ஒண்ணு தானே?''

     ''கேக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு - வசிஷ்டரு வாயாலேயே பிரம்ம ரிஷின்னு வந்திரிச்சு...''

     ''எதைச் சொல்றே?''

     ''உங்க வாயாலேயே நாம ரெண்டு பேரும் ஒண்ணுன்னு ஒப்புக்கிட்டதைச் சொல்றேன்...''

     - வாயினால் பேசுவதை நிறுத்திவிட்டு அவளை அப்படியே ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

     அந்த நேரம் பார்த்து அப்துல்லாவும் கோபாலும் வந்து சேர்ந்தார்கள்.

     ''மாதவி! சார் உங்கிட்டக் கொஞ்சம் பேசணுமாம். கொஞ்சம் அப்பிடி முன்ஸீட் பக்கமா வாயேன்'' என்று அப்துல்லாவைக் காண்பித்துக் கண்களைக் குறும்புத்தனமாகச் சிமிட்டி அவளை அழைத்தான் கோபால். அவள் முத்துக்குமரனின் முகத்தைப் பார்த்தாள்.

     ''கொஞ்சம் மன்னிச்சுக்க வாத்தியாரே! என்று கோபால் முத்துக்குமரனையே வேண்டினான். ஏதோ அவனுடைய உடமையை ஒரு விநாடி இரவல் கேட்பதுபோல் கோபாலின் குரல் கெஞ்சியது. அவன் ஏன் தன்னை அநுமதி கேட்கிறானென்று முத்துக்குமரனுக்கும் ஆச்சரியமாயிருந்தது. அவன் கண்ணைச் சிமிட்டி அழைத்த விதம் கோப மூட்டுவதாகவும் வெறுப்பூட்டுவதாகவும்கூட இருந்தது. கோபால் கேட்டதற்கு ஏற்றாற்போல் மாதவியும் முத்துக்குமரன் வாய் திறந்து 'போயிட்டு வாயேன்' என்று சொன்னாலொழிய ஸீட்டிலிருந்து எழுந்திருக்க மறுப்பவள் போல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அப்துல்லாவின் முகம் கடுமையாகியது.

     அவர் கனமான குரலில் ஆங்கிலத்தில், ''ஹு இஸ் ஹீ டு ஆர்டர் ஹெர்? வொய் ஆர் யூ அன்னெஸஸ்ஸரிலி ஆஸ்க்கிங் ஹிம்'' என்று கோபாலை இரைந்தார்.

     ''போயேன்! ஏதோ இங்கிலீஷ்லே கத்தறான் மனுஷன்'' என்று மாதவியின் காதருகே கூறினான் முத்துக்குமரன். அடுத்த நிமிஷம் மாதவி செய்த காரியம் முத்துக்குமரனையே திகைக்க வைப்பதாயிருந்தது.

     ''நீங்க போங்க, சித்தே பொறுத்து அங்கே வரேன். சாரிட்டப் பேசிக்கிட்டிருந்த பேச்சை முடிச்சிட்டு வந்திடறேன்'' என்று அப்துல்லாவுக்கே பதில் கூறினாள் அவள். கோபாலின் முகமும் கடுமையாகியது. இருவரும் கேபின் பக்கமாக நடந்தார்கள். அவர்கள் விமானத்தின் முன்வரிசை இருக்கைகளை நோக்கி நகர்ந்ததும்,

     ''போயிட்டுத்தான் வாயேன்...வந்த இடத்திலே எதுக்கு வம்பு!'' என்று மீண்டும் கூறினான் முத்துக்குமரன். மாதவிக்கு உதடுகள் துடித்தன.

     ''நான் போயிருப்பேன், ஆனா அவன் இங்கிலீஷ்ல என்ன சொன்னான் தெரியுமா?''

     ''என்ன சொன்னான்?''

     ''இவளுக்குக் கட்டளையிட அவன் யாரு? அவனை ஏன் கேக்கிறேன்னு கோபாலிட்ட உங்களைப் பத்திச் சொன்னான் அவன்.''

     ''அதிலே தப்பென்ன? அவன் சொன்னது வாஸ்தவம் தானே?''

     அவள் இதழ்கள் இரத்தப் பூக்களாகச் சிவந்து துடித்தன, கண்களில் ஈரம் கசிந்தது. தன்னை வேற்றுமைப்படுத்தி அவன் விளையாட்டுக்காகப் பேசினாலும் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

     ''நான் அப்துல்லாகிட்டப் போகப் போறது இல்லே'' என்ற உதடு துடிக்கச் சொல்லிவிட்டுக் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள் அவள்.

     விமானம் ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கியது. 'கோத்தபாரு ஏர்போர்ட்' என்ற எழுத்துக்கள் தரையில் தெரிந்தன. அந்த விமானம் கோத்தபாரு, குவாந்தான், கோலாலும்பூர், ஈப்போ ஆகிய இடங்களில் எல்லாம் இறங்கிக் கடைசியாகத்தான் பினாங்கு போகுமென்று தெரிந்தது. மெல்ல இருட்டிக் கொண்டு வந்த அந்த மருள் மாலைப் பொழுதில் அந்த நிலையமும், சுற்றி மலைகளின் பசுமையும் மிக அழகாயிருந்தன.

     எங்குப் பார்த்தாலும் மரகதப் பசுமை மின்னியது. மலைகளுக்குக் கர்லிங் வைத்துக் 'கிராப்' வெட்டி விட்டாற்போல் எங்கு பார்த்தாலும் ரப்பர்த் தோட்டங்கள், வாழைகள், ரம்புத்தான் மரங்கள், வானளாவிய காடுகள் நிறைந்திருந்தன. ரம்புத்தான், டொரியான் போன்ற மலேயாவின் பழங்களைப் பற்றி ஊரிலேயே ஒரு செட்டிநாட்டு நண்பனிடம் கேள்விப்பட்டிருந்தான் முத்துக்குமரன். உருவி விட்டது போல், முன் பக்கமும் பின் பக்கமும் வித்தியாசம் தெரியாத ஒரு மலாய்க்காரி - அந்த விமானத்தின் ஹோஸ்டஸ் - கேபினுக்கும் - வால் பக்கத்துக்குமாக டிரேயோடு போய் வந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் வெள்ளை வெல்வெட் துணியில் கருநாவற் பழத்தை உருட்டினாற்போல் அழகாயிருந்தன.

     விமானம் அந்த நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது. மறுபடி கோபால் மட்டும் தனியே அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தான்.

     ''நீ செய்யிறது உனக்கே நல்லாயிருந்தாச் சரி மாதவி.''

     கண்களைத் துடைத்துக்கொண்டு ஸீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு எழுந்து நின்றாள் அவள். இம்முறை முத்துக்குமரனைக் கேட்காமலே, அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலே அப்துல்லா இருந்த ஸீட்டை நோக்கி நடந்தாள் அவள். முத்துக்குமரன் தனிமையை உணராமலிருப்பதற்காக மாதவி உட்கார்ந்திருந்த ஸீட்டில் கோபால் உட்கார்ந்து கொண்டு - அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.

     ''அதுல பாரு வாத்தியாரே; அப்துல்லா ஒரு குஷால் பேர்வழி. நல்ல பணக்காரன், ஒரு நட்சத்திரத்தோட பக்கத்திலே உட்கார்ந்து பேசிப்பிடணும்னு உயிரை விடறான். கொஞ்சம் பொம்பளைக் கிறுக்கும் உண்டு! போய் உட்கார்ந்து பேசினாக் கொறஞ்சா போயிடும்? அவனோட காண்ட்ராக்ட்ல தானே இந்தத் தேசத்துக்கே வந்திருக்கோம்? இதெல்லாம் மாதவிக்குப் புரியமாட்டேங்கிறது! முழுக்கப் புரியலேன்னும் சொல்ல மாட்டேன். ரொம்ப சூட்டிகையான பொண்ணு அவ. புத்திசாலி, கண்ணசைச்சாலே அர்த்தம் புரிஞ்சிக்கிறவதான். வாத்தியார் இங்க வந்தப்புறம்தான் ஒரேயடியா மாறிப்போயிட்டா. முரண்டு, கோபம், உதாசீனம் எல்லாமே வந்திருக்கு...''

     ''அவ்வளவும் என்னாலேதான் வந்திருக்காக்கும்?''

     ''நான் அப்பிடிச் சொல்லலே! அப்புறம் உங்கோபத்தைத் தாங்க முடியாது.''

     ''பின்னே என்ன அர்த்தத்துலே அப்படிச் சொன்னே கோபாலு?''

     - முத்துக்குமரனின் குரலில் சூடேறுவதைக் கண்டு கோபால் மேலே பேசுவதற்குப் பயப்பட்டான். முத்துக்குமரனோ சீறத் தொடங்கி விட்டான்.

     ''பொண்ணைப் பொண்ணா நடத்தணும். வியாபாரம் பண்ணப்பிடாது. யாரோ செய்யற வேலையை உன்னையைப்போல ஒரு கலைஞன் ஏன் செய்யணும்னுதான் எனக்கும் புரியலே. நீ இப்ப பழைய நாடகக் கம்பெனி கோபாலாக இல்லைங்கிறது மட்டும் எனக்குப் புரியுது. உன்னை அப்துல்லாவோ அல்லது எவனோ ஒரு தோலான் துருத்தியோ மதிக்கணும்னா, நீ ஒரு கலைஞன்கிறதுக்காக மதிக்கணுமே ஒழிய - உன்கிட்ட இருக்கிற நாலு பொம்பளைகளை அந்தத் தோலான் துருத்திக்கு முன்னாலே நிறுத்திப் பல்லிளிக்க வச்சு அதிலேருந்து நீ மதிப்பைத் தேடிக்கிட்டிருக்கே.''

     அவர்கள் பேச்சினிடையே எங்கெங்கே விமானம் இறங்கி ஏறியதென்று கூடக் கவனிக்கவில்லை இருவரும்.

     விமானம் கோலாலும்பூரில் சுபாங் இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இறங்கிய போது மட்டும்,

     ''இங்கே சிலபேர் மாலைபோட வந்திருப்பாங்க, லவுஞ்சி வரை போயிட்டுத் திரும்பிடுவம் வாங்க'' என்று அப்துல்லாவே வந்து கூப்பிட்டார். கோபால் போனான். மாதவி தயங்கி நின்றாள், முத்துக்குமரன் ஸீட்டிலிருந்தே எழுந்திருக்கவில்லை, அவன் மாதவிக்கு கூறினான்.

     ''நான் வரலே! எனக்கு யாரும் மாலை கொண்டாந்திருக்க மாட்டாங்க. நீ போயிட்டு வா.''

     ''அப்ப நானும் போகலே.''

     அப்துல்லா மறுபடி விமானத்திற்குள் ஏறி, ''டோண்ட் கிரியேட் எ ஸீன் ஹியர், பளீஸ் டூ கம்'' - என்றார்.

     அவள் அவரைப் பின் தொடர்ந்தாள். அவரும் மாதவியை மட்டும் கூப்பிட்டாரே ஒழிய முத்துக்குமரன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

     கோலாலும்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வந்திருந்தவர்கள் போட்ட மாலைகளுடனும், கொடுத்த பூச்செண்டுகளுடனும் கோபால், அப்துல்லா, மாதவி மூவரும் மீண்டும் விமானத்தில் ஏறி வந்தார்கள். கோபால் அப்போதுதான் முத்துக்குமரன் விமானத்திற்குள்ளேயே இருந்து விட்டதைக் கவனித்தவன்போல், ''அடடே! வாத்தியார் கீழே இறங்கி வரவேயில்லையா?'' - என்று போலியான அனுதாப வார்த்தைகளை உதிர்த்தான். முத்துக்குமரன் அதற்குப் பதில் சொல்லவில்லை.

     விமானம் புறப்பட்டது. பழையபடி முன்வரிசை ஆசனத்தில் அப்துல்லாவும், கோபாலும் அருகருகே அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தார்கள். மாதவி முன்பு உட்கார்ந்திருந்ததுபோலவே முத்துக்குமரனுக்கு அருகே உட்கார்ந்து ரொம்பவும், சோர்ந்துவிட்டது போல் முகத்தைக் கைக்குட்டையால் மூடிக் கொண்டாள். சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேச எதுவுமில்லை. யாரோ மெல்ல விசும்புகிறார், போலிருந்தது. பின் ஸீட்டில் பார்த்தான் முத்துக்குமரன். பின் ஸீட் பக்கத்து ஸீட் எல்லாம் காலியாயிருந்தன. ஏதோ சந்தேகம் தட்டியது மனத்தில். அவள் முகத்திலிருந்த கைக்குட்டையை எடுக்க விரைந்தது அவன் கை. அவள் அந்தக் கையைத் தடுத்தாள். மீறி அவன் அந்தக் கைக்குட்டையை அவள் முகத்திலிருந்து எடுத்தபோது அவள் கண்ணீர் வடித்து மெல்ல அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

     ''இது என்ன காரியம்? வந்த இடத்திலே ஊர் சிரிக்கணுமா?''

     ''எனக்கு நெஞ்சு கொதிக்குது...''

     ''ஏன்? என்ன வந்தது இப்ப?

     ''ஒரு மரியாதைக்குக் கூட அந்தத் தடியன் நீங்களும் இறங்கி வாங்க 'சார்'னு உங்களைக் கூப்பிடலியே?''

     ''அவன் யாரு என்னைக் கூப்பிடறதுக்கு?'' கேட்டுக் கொண்டே அந்தக் கைக்குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொடுப்பதுபோல், அவள் தலையைக் கோதிக் கொடுத்தான் முத்துக்குமரன்.

     ''இந்த நிமிஷமே செத்துப் போயிடணும் போலிருக்கு. ஏன்னா நீங்க இந்த விநாடி எம்மேல ரொம்பப் பிரியமாயிருக்கீங்க. அடுத்த விநாடி உங்க கோபத்தைத் தூண்டறாப்பல ஏதாவது நடக்கறதுக்குள்ளே நான் போயிட்டா நல்லது...''

     ''இந்தா...பைத்தியம் மாதிரி உளறாதே. வேறு விஷயம் பேசு. அப்துல்லா கிட்டப் போனியே என்ன சொன்னான்? ஏதாச்சும் உளறினானா?''

     ''என்னவோ பத்து நிமிஷமா உளறிக்கிட்டிருந்தான். 'ஐயம் எ மேன் ஆஃப் ஃபேஷன்ஸ் அண்ட் ஃபேன்ஸீஸ்' - னான்.

     ''அப்பிடீன்னா என்ன அர்த்தம்?''

     அவள் அர்த்தத்தைச் சொன்னாள். அவன் பேசுவதை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையிலாழ்ந்தான். விமானம் ஈப்போவில் இறங்கியது. அங்கு மாலை போட ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால் கோபால் மட்டுமே அப்துல்லாவோடு இறங்கிப் போனான். மாதவி தலையை வலிப்பதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முயன்றாள்.