13 அன்றிரவு அவள் உறங்கவே இல்லை. கண்ணீரால் தலையணை நனைந்தது. 'என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு துணை வேண்டும்' - என்று முத்துக்குமரனைக் கூப்பிட்டுவிட்டு அவன் நடந்தே உடன் புறப்பட்டு வந்த பின் கோபாலுடன் காரில் கிளம்புகிற அளவு தன் மனம் எப்படி எங்கே பலவீனப்பட்டது என்பதை இப்போது அவளாலேயே அநுமானிக்க முடியாமலிருந்தது. தான் செய்ததை நினைத்த போது அவளுக்கே அவமானமாயிருந்தது. மறுநாள் முத்துக்குமரனின் முகத்தில் விழிப்பதற்கே பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவளுக்கு கோபால் தானே வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கெஞ்சியபோது தான் எப்படி உடனே மனம் நெகிழ்ந்து அதற்கு இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. காலையில் எழுந்ததும் இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த இரண்டாவது அதிர்ச்சிக்குப் பின் கோபாலைச் சந்திப்பதற்கும் அவள் கூசினாள்; பயப்பட்டாள் என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. முத்துக்குமரனைக் கனியழகன் பேட்டி கண்டு வெளியிட்டிருந்த ஜில் ஜில் இதழ் அன்று காலை முதல் தபாலில் அவளுக்குக் கிடைத்தது. ஜில் ஜில் கனியழகன் அந்தப் பேட்டியின் இடையே ஒரு புகைப் படத்தையும் பிரசுரித்திருந்தான். முத்துக்குமரனின் தனிப் படத்தையும் மாதவியின் தனிப் படத்தையும் - வெட்டி இணைத்து அருகருகே நிற்பது போல ஒரு 'பிளாக்' தயாரித்து வெளியிட்டிருந்தான். 'ஜில் ஜில்' 'மாதவியைப் போல ஒரு பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன்' - என்று முத்துக்குமரன் கூறியதாகவும் பேட்டியில் வெளியிட்டிருந்தது. அந்தக் கனியழகன் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. கோபாலுக்கும் அதே பத்திரிகை அன்று காலைத் தபாலில் கிடைத்திருந்தால் என்ன உணர்வை அவன் அடைந்திருப்பான் என்று அநுமானிக்க முயன்றாள் அவள். ஜில் ஜில் கனியழகன் பேட்டிக்குரியவர் என்ற முறையில் முத்துக்குமரனுக்கும் அதே இதழை அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது. தான் முத்துக்குமரனோடு சேர்ந்து நிற்பது போன்ற அந்தப் படமும், தன்னைப் போன்ற ஒருத்தியையே மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறிய முத்துக்குமரனின் பேட்டி வாக்கியமும் - கோபாலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை உணர்ந்தாள் அவள். இருவரையுமே அன்று சந்திக்கப் பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு. கோபாலையும் முத்துக்குமரனையும் சந்திக்கத் தயங்கி அன்று மாம்பலத்துக்குப் போகாமலே இருந்துவிட முடிவு செய்தாள் அவள். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதினோரு மணிக்குக் கோபால் அவளுக்கு ஃபோன் செய்து விட்டான். ''பாஸ்போர்ட் அப்ளிகேஷன்லியும் வேறு ரெண்டொரு பேப்பர்லியும் கையெழுத்துப் போடணும். ஒரு நடை வந்திட்டுப்போனா நல்லது.'' ''எனக்கு உடம்பு நல்லாயில்லே. அவசரம்னா யாரிட்டவாவது குடுத்தனுப்பிடுங்க, கையெழுத்துப் போட்டு அனுப்பிடறேன்'' என்று அங்கே போவதைத் தட்டிக் கழிக்க முயன்றாள் அவள். அவளுடைய முயற்சி பலித்தது. அவள் கையெழுத்துப்போட வேண்டிய பாரங்களை டிரைவரிடம் கொடுத்தனுப்ப ஒப்புக்கொண்டான் கோபால். முத்துக்குமரன் அவளுக்கு ஃபோன் செய்ய விரும்பவில்லை என்று தெரிந்தாலும் அவளே அவனுக்கு ஃபோன் செய்வதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. முதல் நாளிரவு அவன் கூறிய பதில் இன்னும் அவள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கடுமையாகப் பேசிவிட்டான் என்ற உறுத்தலைவிடத் 'தான் தவறு செய்துவிட்டோம்' என்ற உறுத்தலும் பதற்றமும் தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக்குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடியாமல் இருந்தது. அன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத்துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாலின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்குமரனிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஓர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்தது. முத்துக்குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி எண்ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந்தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ்சுரம் அவளுக்கு இல்லை. ஜனவரி முதல் வாரத்திலிருந்து மூன்று வார காலம் மலேயா - சிங்கப்பூரில் சுற்ற வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. முத்துக்குமரன் உடன் வராமல் தான் மட்டும் தனியாக கோபாலுடன் வெளியூரில் சுற்றுவதற்குப் பயப்பட்டாள் அவள். வாழ்க்கையில் முதன் முதலாகச் சமீபகாலத்தில் தான் கோபாலிடம் இப்படிப்பட்ட வேற்றுமையும் பயமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன. கோபாலின் பங்களாவில் வேலை செய்யும் நாயர்ப்பையனை அந்தரங்கமாக ஃபோனில் கூப்பிட்டு, 'மலேயாவுக்கு வசனகர்த்தா சாரும் வருவாரில்ல? அவர் வர்ராரா இல்லியாங்கிற விவரம் உனக்குத் தெரியுமோ?' என்று செய்தி அறிய முயன்றாள் மாதவி. பையனுக்கு அந்த விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதற்குமேல் அவனை வற்புறுத்தி விசாரித்தால் 'அவரோட ஃபோன்ல பேசிக்கங்கம்மா' என்று லயனை அவுட்ஹவுஸுக்கே போட்டாலும் போட்டு விடுவான் என்று தோன்றியது. முத்துக்குமரனோடு பேசச் சொல்லி லயனை அவுட்ஹவுஸுக்குப் போட்டால் - அவனோடு என்ன பேசுவது? எப்படிப் பேசுவதென்ற பயமும் கூச்சமும் அவள் மனத்தில் அப்போதும் இருந்தன. ''என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று முத்துக்குமரனிடம் கேட்டுவிட்டு கோபாலுடன் புறப்பட்டு வந்துவிட்ட குற்றம் அவள் மனத்திலேயே குறுகுறுத்தது. அடுத்த நாளும், 'உடம்பு சௌகரியமில்லை' என்ற பெயரில் அவள் மாம்பலத்துக்குப் போகவில்லை. ''அவசரமில்லை! உடம்பு சரியானதும் வந்தால் போதும்'' என்று கோபால் ஃபோன் செய்தான். அவள் எதிர்பார்த்த ஃபோன் மட்டும் வரவேயில்லை. தானே போன் செய்து முத்துக்குமரனைக் கூப்பிடத் தவித்தாள் அவள். ஆனால் பயமாயிருந்தது. அவனோ பிடிவாதமாக அவளுக்கு ஃபோன் செய்யாமலிருந்தான். அவனோட பேசாத நிலையில் அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அவுட்ஹவுஸில் அவனுடைய ஃபோனிருந்தும் அவன் தன்னோடு பேசாதது அவளை ஏங்கித் தவிக்கச் செய்தது. கோபாலிடம், 'உடம்பு சௌகரியமில்லை' என்று புளுகியதையும் மறந்து புறப்பட்டுப் போய் நேரிலேயே முத்துக்குமரனைச் சந்தித்து விடலாமா என்று கூடத் துடிதுடித்தாள் அவள். மாலை ஐந்து மணிவரை தன்னுடைய கவலையையும் மனத்தின் பரபரப்பையும் கட்டுப்படுத்த முயன்று அவள் தோற்றாள். மாலை ஐந்தரைமணிக்கு முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு - அவள் புறப்பட்டுவிட்டாள். கோபாலிடம் கார் அனுப்பச் சொல்லிக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை. டாக்ஸியிலேயே போய்க் கொள்ளலாமென்று தீர்மானித்திருந்தாள் மாதவி. டாக்ஸி ஸ்டாண்டில் அவள் போன சமயத்தில் டாக்ஸி ஒன்றும் இல்லை. சோதனை போல் டாக்ஸி கிடைப்பதற்கு நேரமாயிற்று. அந்த வெறுப்பில் முத்துக்குமரன் ஒருவன் மட்டுமின்றி உலகமே தன்னிடம் முறைத்துக் கொண்டிருப்பதைப்போல் உணர்ந்தாள் அவள். எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் தன் ஒருத்தி மேல் மட்டும் கோபமும் குரோதமும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. வீட்டிலிருந்து 'அஜந்தா ஹோட்டல்' வரை நடந்து வருவதற்குள்ளேயே தெருவில் வருகிறவர்களும் போகிறவர்களும் முறைத்து முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து கூசியவள், டாக்ஸி கிடைக்காமல் தெருவில் நிற்க நேர்ந்த போது இன்னும் அதிகமாகக் கூசினாள். உயரமும் வாளிப்புமாக - நாலு பேர் பார்வையைக் கவருகிற விதத்தில் இருப்பவர்கள் தெருவில் நடந்தாலே உற்று உற்றுப்பார்க்கிற உலகம் அழகு, கவர்ச்சி ஆகியவை தவிர நட்சத்திரக் களையும் உள்ள ஒருத்தி தெருவில் வந்துவிட்டால் சும்மா விடுமா? பார்க்கும் ஒவ்வொரு ஜோடிக் கண்களும் அவளைக் கூச வைத்தன? தலைகுனியச் செய்தன. அரைமணி நேரத்துக்குப் பிறகு ஒரு டாக்ஸி கிடைத்தது. நல்ல வேளையாக 'போக் ரோடு' திரும்பும் போதே எதிரே காரில் கோபால் எங்கோ வெளியே போவதை டாக்ஸியிலிருந்து அவள் பார்த்துவிட்டாள். அவள் தான் கோபாலைப் பார்த்தாள், கோபால் அவளைப் பார்க்காதது அவளுக்கு வசதியாய்ப் போயிற்று. டாக்ஸியை பங்களா முகப்புக்கு விடச் சொல்லாமல் நேரே 'அவுட்ஹவுஸ் முகப்புக்கு விடச்சொன்னாள் அவள். அவுட்ஹவுஸ் ஜன்னல்களில் விளக்கொளி பளிச்சிட்டது. முத்துக்குமரன் வெளியே எங்கும் போயிருக்கவில்லை என்பதை அவள் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. புறப்படும்போது பட்ட தொல்லையை மறுபடி பட நேரிட்டுவிடாமல் இருக்க - வந்த டாக்ஸியையே 'வெயிட்டிங்'கில் நிறுத்திக் கொண்டாள். நாயர்ப் பையன் வாசற்படி அருகே நின்றிருந்தான். ஏறக்குறைய அவுட்ஹவுஸ் வாயிற்படியை வழி மறிப்பது போலவே அவன் நின்று கொண்டிருந்தாற்போலத் தோன்றியது. ''யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்னு ஐயா சொல்லி இருக்கு...'' அவளுடைய பார்வையின் கடுமையைத் தாங்க முடியாமல் அவன் வழியைவிட்டு விலகிக் கொண்டான். உள்ளே நுழைந்ததும் அவள் தயங்கி நின்றாள். முத்துக்குமரனுக்கு முன்னால் டீப்பாயில் பாட்டிலும் கிளாஸ்களும் சோடாவும் 'ஓபன'ரும் வைக்கப்பட்டிருந்தன. அவன் குடிப்பதற்கு தயாராயிருப்பதுபோல் தோன்றியது. வாசலருகிலே தயங்கினாற் போல மாதவி அவனை ஒரு கேள்வி கேட்டாள். ''ரொம்ப பெரிய காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கீங்க போலிருக்கு. உள்ளே வரலாமா, கூடாதா?... பயமாயிருக்கே.'' ''அவங்க அவங்களுக்கு, அவங்க அவங்க செய்யிறது பெரிய காரியம் தான்.'' ''உள்ளே வரலாமா?'' ''சொல்லிட்டுப் போறவங்கதான் மறுபடி கேட்டுக்கிட்டு வரணும். சொல்லாமலே எங்ககெங்கியோ எவனெவனோடவோ போறவங்க வர்றவங்களைப் பத்தி என்ன சொல்றதுக்கு இருக்கு?'' ''இன்னும் என்னை உள்ள வரச் சொல்லி நீங்க கூப்பிடலை.'' ''அப்பிடிக் கூப்பிடணும்னு ஒண்ணும் கண்டிப்பு இல்லே.'' ''அப்படியானா நான் போயிட்டு வரேன்.'' ''அதுக்கென்ன? இஷ்டம்போலச் செய்துக்கலாம்.'' ஓர் அசட்டுத் தைரியத்தில் போய்விட்டு வருவதாகச் சொல்லி விட்டாளே ஒழிய அவளால் அங்கிருந்து ஓர் அங்குலம் கூட வெளியே நகர முடியவில்லை. அவனுடைய அலட்சியமும் கோபமும் அவளை மேலும் மேலும் ஏங்கச் செய்தன. முகம் சிவந்து கண்களில் ஈரம் பளபளக்க நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவள். அவன் குடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று அவள் பாய்ந்து வந்து கீழே குனிந்து அவனுடைய பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அவளுடைய கண்களின் ஈரத்தை அவன் தன் பாதங்களில் உணர்ந்தான். ''நான் அன்னைக்கி செஞ்சது தப்புதான்? பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க.'' ''என்னைக்கு செஞ்சது? எதுக்கு திடீர்னு இந்த நாடகம்?'' ''உங்களைத் துணைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்புறம் - நான் கோபால் சாரோட காரிலே வீட்டுக்குப் போயிருக்கப்படாது. திடீர்னு அவரைப் பகைச்சுக்கவோ, முகத்தை முறிச்சுக்கவோ முடியாமப் போயிட்டது.'' ''அதான் அன்னிக்கே சொன்னேனே யார் துணையாக் கெடச்சாலும் உடனே கூடப் போறவங்க யாரோட போனாத்தான் என்ன?'' ''அப்பிடிச் சொல்லாதீங்க...நான் முன்னாடி அந்த மாதிரி இருந்திருக்கலாம். இப்ப அப்பிடி இல்லே? உங்களைச் சந்திச்சப்புறம் நீங்க தான் எனக்கு துணைன்னு நான் நினைச்சிட்டிருக்கேன்.'' ''.........'' ''ஒண்ணு என் வார்த்தையை நம்புங்க. அல்லது இப்ப விழுந்து கதறும் கண்ணீரையாவது நம்புங்க. நான் மனசறிஞ்சு உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.'' மீண்டும் அவளுடைய பூப்போன்ற முகமும், இதழ்களின் ஈரமும், கண்ணீரும் தன் பாதங்களை நனைப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். அவனுடைய மனம் இளகியது. அவளை மறப்பதற்காகத்தான் எதிரே இருக்கும் மதுவை அவன் நாடினான். அவளோ சில விநாடிகளுக்குள்ளே மதுவையே மறக்கச் செய்து விட்டாள். எதிரே மது இருக்கிறது என்ற நினைவே இல்லாதபடி தன்னுடைய கண்ணீரால் அவனை இளகச் செய்திருந்தாள் அவள். தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவளுடைய கூந்தலின் நறுமணத்திலும், மேனியின் வாசனைகளிலும் கிறங்கினான் அவன். கண்ணீர் மல்கும் அவளுடைய அழகிய விழிகள் எழுதிய சித்திரத்தைப் போல் அவனுடைய உள்ளத்திற்குள் புகுந்து பதிந்து கொண்டன. ''நடந்தாவது வீட்டுக்குப் போகலாம். ஆனா நீங்க மட்டும் துணைக்குக் கூட வரணும்னு சொன்னப்ப இருந்த ரோஷம் அப்புறம் எங்கே போச்சோ தெரியலே?'' ''நல்லா யோசனை பண்ணினீங்கன்னா உங்களுக்கே தெரியும்! ஒரு மனுஷன் காரைக் கொண்டாந்து பக்கத்திலே நிறுத்திக்கிட்டு, 'புறப்படு போகலாம்'னு தார்க்குச்சி போடறப்ப எப்பிடி மாட்டேங்கறது?'' ''அடிமைப்பட்டுப் போயிட்டா அப்பிடிச் சொல்ல முடியாது தான்...'' ''யாரும் யாருக்கும் அடிமைப்பட்டுப் போயிடலை! அதுக்காகச் சாதாரண முகதாட்சண்யத்தைக்கூட விட்டிட முடியாது.'' - கூறிக்கொண்டே அவள் எழுந்து நின்றாள். வாசற் பக்கம் போய் கைதட்டி நாயர்ப் பையனைக் கூப்பிட்டாள். அவன் வந்தான். ''இதெல்லாம் இங்கேருந்து எடுத்துக்கிட்டுப் போ. வேணாம்'' என்று முத்துக்குமரனைக் கேட்காமலே பாட்டிலையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகும்படி பையனுக்குக் கட்டளையிட்டாள் அவள். அவளுடைய கட்டளையை அவன் மறுக்கவில்லை. அவன் ஒருவேளை அந்த பாட்டில்களையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகக் கூடாதென்று தடுப்பானோ என்ற தயக்கத்தில் பையன் ஓரிரு விநாடிகள் பின்வாங்கினான். எடுத்துக் கொண்டு போ' என்ற உத்தரவு முத்துக்குமரன் வாய்மொழியாக வந்தாலொழிய பையன் அவற்றை எடுத்துக் கொண்டு போகமாட்டான் போலத் தோன்றியது. முத்துக்குமரனும் வாய் திறந்து அப்படிச் சொல்லவில்லை. மௌனம் எல்லாத் தரப்பிலும் நீடிக்கவே பையனும் தயங்கி நின்றான். ஐந்து நிமிஷத்துப்பின், 'எடுத்துக் கொண்டு போய்த் தொலையேன், ஏன் நிக்கிறே' என்ற பாவனையில் கையால் பையனுக்கு ஜாடை காண்பித்தான் முத்துக்குமரன். பையன் உடனே டிரேயோடு கிளாஸ்களையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு போனான். அவள் பிரியத்தோடு அவனைக் கேட்டாள்: ''ஏன் இந்தக் கெட்டப் பழக்கம்? அளவுக்கு மீறினா உடம்பு கெட்டுப் போயிடுமே?'' ''ஓகோ! நீ ரொம்ப ரொம்ப நல்ல பழக்கங்கள்ளாம் உள்ளவ. அதனாலே எங்கிட்ட என்னென்ன கெட்ட பழக்கம்லாம் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சுச் சொல்ல வேண்டியது தான்.'' ''அப்பிடி நான் சொல்ல வரலே, நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன்னே நீங்க சொன்னாலும் நீங்க எனக்கு நல்லவர்தான்.'' அவன் கிண்டலாக ஒரு வாக்கியம் சொன்னான்; ''காக்காய் பிடிக்கவும் உனக்குத் தெரிஞ்சிருக்கே...?'' ''விடலாமா பின்னே? உங்க தயவை நான் எப்படியும் அடைஞ்சாகணும்-'' ''வாயரட்டையிலே ஒண்ணும் கொறைச்சல் இல்லே?'' ''இவ்வளவு பயப்படறப்பவே - உங்ககிட்டக் காலந்தள்ளுறது சிரமமாயிருக்கு! வாயரட்டைன்னு வேற சொல்றீங்களே?'' இவ்வளவு நேரத்திற்குப்பின் ஒருவருக்கொருவர் தாக்குதல் இன்றி சுபாவமாகப் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாகவே அவனிடம் கேட்டாள் அவள். ''மலேயா போறதுக்கான பாஸ்போர்ட் அப்ளிகேஷன்ல எல்லாம் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டிங்களா?'' ''நான் அங்கெல்லாம் வராம இருந்தா உங்களுக்கெல்லாம் ரொம்ப சௌகரியமாகயிருக்குமில்லே?'' ''சும்மா இப்படி எல்லாம் குத்தலாகப் பேசாதீங்க. நீங்க வந்தாத்தான் எனக்கு சௌகரியமாகும் - '' தன் காதில் பூக்களாக உதிரும் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அருகில் நின்ற அவளுடைய செழிப்பான தோள்களைப் பற்றினான் முத்துக்குமரன். அந்தப் பிடி இறுகி வலிப்பது போல் - அதன் சுகத்தில் மூழ்கிக் கொண்டே சிணுங்கினாள் அவள். பூங்குவியலாய் அவள் மேனி அவனைப் பிணைத்து இறுக்கியது. மூச்சுக்கள், பரஸ்பரம் திணறும் ஒலிகள் சுகத்தைப் பிரதிபலிப்பனவாக ஒலித்தன. இருவர் காதிலும் அந்த மூச்சுக்களே மதுர சங்கீதமாக நிறையும் நிலையில் அவர்கள் இருந்தனர். அவள் குரல் அந்த மதுர சங்கீதத்தின் அலைகளாக அவன் செவிகளில் பெருகியது. ''அந்தப் பத்திரிகையிலே நம்ம படம் போட்டிருக்கான் பார்த்தீர்களா?'' ''வந்தது! படத்திலே என்னா இருக்கு?'' ''நேரதான் எல்லாம் இருக்கா?'' ''சந்தேகமில்லாம....'' அவன் பிடி அவளைச் சுற்றி இறுகியது. ''தோட்டத்தில் போய் புல் தரையிலே உட்கார்ந்து பேசுவமே?'' என்று மெதுவாக அவன் காதருகே வந்து முணுமுணுத்தாள். திடீரென்று கோபால் அங்கே வந்து விடுவானென்று அவள் பயப்படுவதாகத் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவள் கூறியதற்கு இணங்கி அவளோடு தோட்டத்திற்குச் சென்றான் அவன். அவர்கள் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கோபால் வெளியேயிருந்து திரும்ப வந்து விட்டான், அவுட்ஹவுஸில் போய்த் தேடிவிட்டு அவனும் தோட்டத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கையில் அந்தப் பத்திரிகை இருந்தது. ''இதைப் பாத்தியா வாத்தியாரே? உன்னைப் பத்தி ரொம்பப் பிரமாதமா ஜில் ஜில் எழுதியிருக்கானே?'' ''பிரமாதமா ஒண்ணுமில்லே. நான் சொன்னதைத் தானே எழுதியிருக்கான்? பிரமாதமா இருக்கிறதைப் பிரமாதமா எழுத வேண்டியதுதானே?'' ''அப்படியா? அப்ப எல்லாமே நீ சொன்னதைத்தான் எழுதியிருக்காங்கன்னு சொல்லு.'' இந்த கேள்வியைக் கோபால் குறும்புத்தனமான குரலில் வினவினான். எதற்காக அவன் இதை இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்கிறான் என்பது அவர்கள் இரண்டு பேருக்குமே விளங்கவில்லை. சிறிது நேரமாகிய பின்பே இருவருக்கும் அவன் அப்படிக் கேட்டதன் உள்ளர்த்தம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. 'முத்துக்குமரன் மாதவியை மணந்து கொள்ள ஆசைப்படுகிறார்' - என்ற அர்த்தத்தில் அந்தப் பத்திரிகைப் பேட்டியில் காணப்பட்ட ஒரு பகுதிதான் கோபாலின் எல்லாக் கேள்விகளுக்கும் காரணமென்று தெரிய வந்தது. சிறிது நேரம் மூவருக்குமிடையே மௌனம் நிலவியது. ''இந்தப் பேட்டியில் இருக்கிற படம்கூட சமீபத்திலே எடுத்ததுதான் போலிருக்கு'' - என்று அவர்கள் இருவரும் இணைந்ததாக வெளியாகியிருந்த புகைப்படத்தைக் காட்டிக் கோபாலே மீண்டும் தொடங்கினான். |