6

     ஒரு பெரிய பங்களாவின் தோட்டத்தில் வலது ஓரமாக இருந்த சிறிய அவுட்ஹவுஸுக்கு மாதவி அவனை அழைத்துச் சென்றாள். வீட்டின் வரவேற்பு அறை, கூடம், சமையலறை யாவும் கச்சிதமாகவும் நவீனமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் ஒரு மூலையில் டெலிபோன் இருந்தது. வீட்டில் மாதவியின் தாயையும் ஒரு வேலைக்காரியையும் தவிர வேறெவரும் இல்லை. மாதவி தன் தாயை முத்துக்குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்த வயதான அம்மாள் மலையாள பாணியில் காதில் ஓலையணிந்து பட்டையாகச் சரிகைக் கரையிட்ட பாலராமபுரம் நேரியல் - முண்டு தரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் காபி குடிக்காமல் அங்கிருந்து தப்ப முடியவில்லை.

     "கடற்கரைக்குப் போய்விட்டு மறுபடி இரவு சாப்பாட்டுக்கு இங்கேதான் திரும்ப வரப்போகிறோம் இப்போதே காபியைக் கொடுத்து அனுப்பி விடலாமென்று பார்க்காதீர்கள்" - என்று முத்துக்குமரன் கேலியாகக் கூறியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. அவனுக்கும், மாதவிக்கும் சக்கை வறுவல், காபி கொடுத்த பின்பே கடற்கரைக்குப் போக விட்டாள். அவர்கள் கடற்கரைக்குப் புறப்படும் போதே "எட்டு எட்டரை மணிக்குள் சாப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும்" - என்பதையும் வற்புறுத்திச் சொல்லியனுப்பினாள். கூட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் 'எலியட்ஸ்' கடற்கரைக்குப் போகலாம் என்றாள் அவள். அவனோ அதற்கு நேர்மாறாக முரண்டு பிடித்தான்.

     "கூட்டத்துக்குப் பயப்படறதுக்கும், அதைக் கண்டு விலகி ஓடறதுக்கும் நம்ம ரெண்டு பேரும் கோபாலைப் போல அவ்வளவு பிரபலமாயிடலையே?"

     "அதுக்குச் சொல்லலே... உட்கார்ந்து பேசறதுக்கு வசதியா இருக்கும்னுதான் பார்த்தேன்."

     "எந்த இடத்திற்குப் போனாலும் வசதியாகத்தானிருக்கும். இந்தக் குளிர் காலத்திலே எவன் கடற்கரைக்கு வரப்போறான்?" - என்றான் முத்துக்குமரன். சாலையிலேயே காரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கடற்கரை மணலிலே நடந்தார்கள் அவர்கள். எலியட்ஸ் பீச்சில் அந்தக் குளிர் மிகுந்த டிசம்பர் மாத முன்னிரவில் கூட்டமே இல்லை. ஒரு மூலையில் வெள்ளைக்காரக் குடும்பமொன்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல வண்ணப் பந்துக்களை (பீச் பால்) வீசி எறிந்தும் பிடித்தும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரனும் மாதவியும் மணல் சுத்தமாக இருந்த ஒரு பகுதியாகத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். கடலும் வானமும், சூழ்நிலையும் அப்போது அங்கே மிக மிக அழகாயிருப்பதாக இருவருக்குமே தோன்றியது. திடீரென்று முத்துக்குமரன் மாதவியை ஒரு கேள்வி கேட்டான்.

     "மாவேலிக்கரையிலிருந்து மெட்ராசுக்கு வந்து இந்தக் கலையிலே ஈடுபட வேண்டிய நிலை உனக்கு எப்போ ஏற்பட்டது?" திடீரென்று ஏன் அவன் இப்படித் தன்னைக் கேட்கிறான் என்று அறிய விரும்பியோ அல்லது இயல்பான தயக்கத்துடனோ - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

     "சும்மா தெரிந்து கொள்ளலாம்னுதான் கேட்டேன். உனக்கு விருப்பமில்லைன்னாச் சொல்ல வேண்டாம்" - என்றான் அவன்.

     "சேட்டன் - நல்ல வாலிபத்தில் இறந்து போனப்புறம் - அம்மையும் நானும் மெட்ராஸ் வந்தோம். சினிமாவுக்கு 'எக்ஸ்ட்ராக்கள்' சேர்த்துவிடும் ஆள் ஒருவன் எங்களை ஸ்டுடியோக்களில் நுழைத்துவிட்டான். அங்கே கோபால் சாரோடு பழக்கம் ஏற்பட்டது..."

     "பழக்கம்னா...?"

     - அவள் பதில் சொல்லவில்லை. அவள் முகம் கலவரமான மனநிலையைப் பிரதிபலித்தது. அவனும் மேலே அழுத்திக் கேட்கத் தைரியமற்றவனாக இருந்தான். சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. பின்பு அவளே மேலும் தொடர்ந்தாள்:

     "நான் இந்த லயன்லே ஓரளவு முன்னுக்கு வந்து வசதியாயிருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்."

     "ஊரிலே வேறே யாரும் இல்லையா?"

     "அச்சனைப் பறிகொடுத்தப்புறம், சேட்டனும் போனபின் - அம்மையும் நானும் தான் எல்லாம்" என்றாள் அவள். குரல் கம்மியது.

     அவளுடைய தமையன் ஒருவன் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடும் பருவத்தில் நல்ல வாலிப வயதிலே காலமாகி விட்ட செய்தியை முத்துக்குமரன் அறிந்தான். அழகும், உடற்கட்டும், குரலும் மலையாளமாயிருந்தும் வித்தியாசம் தெரியாமல் இயல்பாகத் தமிழ் பேசும் திறமையும் சேர்ந்தே அவளுக்குத் தமிழகத்துக் கலையுலகில் இடம் தேடிக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் அவனால் அநுமானிக்க முடிந்தது. சராசரியாக ஒரு நடிகைக்கு இருக்க வேண்டியதைவிட அதிகமான இயற்கையழகு அவளிடம் இருந்தது. சென்னைக்கு வந்தவுடன் இருந்த நிலைக்கும், படிப்படியாக சினிமா எக்ஸ்ட்ராவாக மாறிய நிலைக்கும் நடுவே அவளுடைய வாழ்க்கை எப்படி எப்படிக் கழிந்திருக்கும் என்பதை அவளிடமிருந்தே அறியவோ, தூண்டித் துளைத்துக் கேட்கவோ அவன் விரும்பவில்லை. அப்படிக் கேட்பதால் ஒருவேளை அவளுடைய முகத்தில் புன்முறுவல் மறைய நேரிடுமோ என்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது. அவளுடைய மனத்தைப் புண்படுத்தும் அல்லது அவளைத் தர்ம சங்கடமான நிலையில் வைக்கும் எந்தக் கேள்வியையும் அவன் கேட்கத் தயங்கினான். எனவே பேச்சை வேறு திசைக்குத் திருப்பக் கருதித் தயாராகிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவள் ஆவலோடு கேட்கலானாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "இந்த நாடகத்தில் நீங்களே என்னோடு கதாநாயகனாக நடித்தீர்களானால் நன்றாக இருக்கும்" - என்று சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினாள் அவள்.

     அவன் சிரித்தபடியே பதில் கூறலானான்:

     "நாடகமே கோபால் கதாநாயகனாக நடிப்பதற்காகத்தானே தயாராகிறது! அடிப்படையிலே கைவைத்தால் அப்புறம் ஒன்றுமே நடக்காது..."

     "இருக்கலாம். எனக்கென்னமோ நீங்கள் என்னோடு நடிக்க வேண்டும் போல ஆசையாயிருக்கிறது."

     "நீ இப்படிக் கூறுவதையே நான் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூற நினைக்கிறேன். நீ என்னோடு நடிக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறாய்... நானோ உன்னோடு வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்."

     - இப்படிக் கூறும்போது அவன் உணர்ச்சி வசமாகி நெகிழ்ந்திருந்தான். பூப்போன்ற அவள் வலக்கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டு பேசினான் அவன். வாழ வேண்டுமென்ற அவன் விருப்பத்துக்கு அப்படியே அப்போதே இணங்கித் தன் மனத்தையும் உடலையும் அளிப்பவள் போல் அந்த விநாடியில் இசைந்து இருந்தாள் அவள். அவளுடைய மௌனமும், இசைவும், இணக்கமும், நாணமும், புன்னகையும் அவனுக்கு மிகமிக அழகாயிருந்தன.

     இருட்டி வெகுநேரமான பின்பும் அவர்கள் கடற்கரையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை.

     "சாப்பாடு ஆறிப்போகுமே! புறப்படலாமா?"என்று அவள் தான் முதலில் நினைவூட்டினாள். அவன் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டே அவளுக்கு மறுமொழி கூறினான்.

     "சில விருந்துகள் மிக அருகிலிருக்கும் போதே வெகு தொலைவிலிருக்கும் வேறு சில விருந்துகளை மறந்துவிடத்தான் முடிகிறது..."

     "நீங்கள் எழுதும் வசனங்களைவிடப் பேசும் வசனங்கள் மிகவும் நன்றாகயிருக்கின்றன..."

     "அது கலை! இது வாழ்க்கை! கலையைவிட வாழ்க்கை அழகாகவும், சுபாவமாகவும் இருப்பது இயல்புதானே?"

     பேசிக்கொண்டே இருவரும் புறப்பட்டார்கள். மாதவியின் வீட்டில் இரவு விருந்திற்கு மலையாளச் சமையல் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் மணம் கமகமத்தது. நடுக்கூடத்தில் பொருத்தி வைத்திருந்த சந்தன வத்தியின் நறுமணமும், மாதவியின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூ மணமும், சமையலின் வாசனையுமாகச் சேர்ந்து அந்த சிறிய வீட்டிற்குத் திருமண வீட்டின் சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன.

     டைனிங் டேபிள் எளிமையாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தான் பரிமாறுவதாகக் கூறி அவர்கள் இருவரையுமே சாப்பிட உட்கார வைத்து விட்டாள் மாதவியின் தாய்.

     டைனிங் டேபிளில் மாதவியின் தாய் பறிமாறிக் கொண்டிருந்த போது - ஹாலின் சுவரில் மாட்டியிருந்த படங்களை நோட்டம் விட்டான் முத்துக்குமரன்.எல்லாப் படங்களையும் விட ஒரு படம் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் எதிரே நிமிர்ந்தால் உடனே பார்வையிற்படுகிற விதத்தில் இருந்தது. அந்தப் படத்தில் நடிகன் கோபாலும் மாதவியும் சிரித்துக் கொண்டிருப்பது போல் ஏதோ ஒரு திரைப்பட 'ஸ்டில்' பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. முத்துக்குமரனின் பார்வை அடிக்கடி அந்தப் படத்தின் மேலேயே செல்வதைக் கண்டு மாதவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவன் மனத்தில் அநாவசியமாக ஏதேனும் சந்தேகம் எழக்கூடாது என்று விளக்கக் கருதியவளாக, "மணப்பெண் என்ற சமூகப் படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நான் உபபாத்திரத்தில் நடித்தேன். அப்போது கோபால் சார் என்னைச் சந்தித்துப் பேசுவதாக வந்த காட்சி இது" எனக் கூறினாள் மாதவி.

     "அப்படியா? அன்று முதன் முதலாக உன்னை 'இண்டர்வ்யூ'வில் பார்த்தபோது, உனக்கும் கோபாலுக்கும் அதற்குமுன் அறிமுகமே கிடையாது; எல்லாரையும் போல் நீயும் புதிதாகத்தான் வந்திருக்கிறாய் என்றல்லவா நான் நினைத்தேன்? நீயோ மெட்ராசுக்கு நீ வந்த நாளிலிருந்து உன் முன்னேற்றத்திற்குக் கோபால் தான் எல்லா உதவியும் செய்ததாகக் கூறுகிறாய்?..."

     "நாடகக் குழுவுக்கான நடிகைகள் பகுதியில் என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்னாலேயே முடிவு செய்துவிட்டாலும் - ஒரு முறைக்காக எல்லாரோடும் சேர்ந்து என்னையும் அங்கே 'இண்டர்வ்யூக்கு' வரச் சொல்லியிருந்தார். அவர் அப்படிச் சொல்லியிருந்ததனால் நானும் நாடகக் குழுவுக்கான இண்டர்வ்யூவின் போது முற்றிலும் புதியவளைப் போல அங்கு வந்து உட்கார்ந்திருந்தேன்."

     "ஆனால் திடீரென்று என்னிடம் மட்டும் தேடி வந்து ரொம்ப நாள் பழகியவளைப் போல சுபாவமாகப் பேசிவிட்டாய்."

     அவள் பதில் பேசாமல் புன்னகை பூத்தாள். விருந்து மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருந்தது. புளிச்சேரி, எறிசேரி, சக்கைப் பிரதமன், அவியல் என்று மலையாளப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நடுநடுவே மாதவி ஏதாவது சொல்லிய போதெல்லாம் அவளுக்குப் பதில் சொல்லத் தலை நிமிர்ந்த முத்துக்குமரனின் கண்களில் அந்தப் படமே தென்பட்டது. மாதவியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

     இந்த ஒரு படத்தைத் தவிர அங்கே மாட்டப்பட்டிருந்த மற்றப் படங்கள் எல்லாம் சாமி படங்களாயிருந்தன. குருவாயூரப்பன் படம், பழனி முருகன், வேங்கடாசலபதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றினிடையே தென்பட்ட இந்த ஒரு படம் மட்டும் அவன் கண்களை உறுத்தியது. மாதவி அவன் சாப்பிட்டு முடிப்பதற்கு இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்பே முடித்திருந்ததனால் அவன் அனுமதியுடன் எழுந்து போய்க் கைகழுவி விட்டு வந்தாள். பின்னால் சிறிது தாமதமாகப் போய்க் கைகழுவிவிட்டு வந்த முத்துக்குமரனுக்கு அந்த ஹாலில் இப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மாதவியும் கோபாலும் சிரித்துக்கொண்டு நின்ற புகைப்படத்தை அங்கே காணவில்லை. படத்தை மாதவி கழற்றியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானிக்க முடிந்தது. அவளோ ஒன்றும் வாய் திறந்து கூறாமல் அதைக் கழற்றி விட்ட திருப்தியோடு சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் கேட்டான்: "ஏன் படத்தைக் கழற்றி விட்டாய்?"

     "உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. கழற்றிவிட்டேன்..."

     "எனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் நீ விட்டு விடுவதென்பது சாத்தியமா மாதவி?"

     "சாத்திய அசாத்தியங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காததை நான் விட்டுவிட ஆசைப்படுகிறேன்."

     பழங்கள் நிறைந்த தட்டையும், வெற்றிலைப் பாக்குத் தட்டையும் அவன் முன்னே வைத்தபடியே பேசினாள் அவள். மாதவியின் பிரியமனைத்தையும் உடனுக்குடனே தாங்கிக் கொள்ள இடம் போதாமல் தன் மனம் சிறிதாயிருப்பது போன்ற உணர்ச்சியை மீண்டும் அவன் அடைந்தான். அவள் ஒவ்வொரு விநாடியும் தனக்காகவே உருகிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். புறப்படும்போது அவளும் மாம்பலம் வரை கூட வந்துவிட்டுத் திரும்புவதாகக் கூறினாள். அவன்தான் பிடிவாதமாக அவள் வரவேண்டாமென்று மறுத்தான்:

     "வந்தால் நீ மறுபடியும் கோபாலுடைய காரிலேயே திரும்ப வேண்டியிருக்கும்; டிரைவருக்கு அநாவசியமா ரெண்டு அலைச்சல் ஆகும்."

     "உங்களோடு வந்துவிட்டுத் திரும்பினோம்னு என் மனசுக்கு ஒரு திருப்தியிருக்கும்னு பார்த்தேன். அவ்வளவு தான்..."

     "ராத்திரியிலே வீணா அலைய வேண்டாம். காலை தான் பார்க்கப் போகிறோமே?"

     "சரி! உங்க இஷ்டப்படியே நான் அங்கே வரலே."

     முத்துக்குமரன் மாதவியின் தாயிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டான். அந்த மூதாட்டி அன்புமயமாயிருந்தாள். மாதவி வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். மணி இரவு ஒன்பதரைக்குமேல் ஆகியிருந்தது. கார் புறப்படுவதற்கு முன் கதவருகே குனிந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெதுவான குரலில், "நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் அங்கே ஒண்ணும் ரொம்பச் சொல்லவேண்டாம்" என்றாள் மாதவி. புரிந்தும் புரியாததுபோல், "அங்கேன்னா எங்கே?" என்று சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான் அவன். அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் கார் நகர்ந்துவிட்டது. அவள் அப்படிக் கூறியதை அவன் அவ்வளவாக இரசிக்கவில்லை. தானும் அவளும் கடற்கரைக்குச் சென்றது, பேசியது, திரிந்தது எதுவுமே கோபாலுக்குத் தெரிய வேண்டாம் என்று அவள் பயந்தாற் போலக் கூறியது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு அவள் அதைப் பற்றிக் கூறியதன் உட்கருத்து என்னவாக இருக்குமென்று அவன் சிந்திக்கத் தொடங்கினான். அவள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்திருப்பவன் கோபால். அவனிடம் அவளுக்கு மரியாதையும், பயமும் இருப்பதை தப்பாக நினைக்க முடியாது. ஆயினும், மெதுவான குரலில் புறப்படுவதற்கு முன் பதற்றத்தோடு அவள் கூறிய அந்தச் சொற்களை அவனால் மறக்கவே முடியவில்லை.

     அவன் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபால் வீட்டிலில்லை. ஏதோ அல்ஜீரியக் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி ஒன்றைக் காண்பதற்காக அண்ணாமலை மன்றத்திற்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. திரும்பி வந்தவுடன் முத்துக்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு மணி நேரம் எழுதிவிட்டு அப்புறம் உறங்கப் போகலாம் என்று தோன்றியது. ஏற்கனவே, எழுதி முடித்தவரை நாடகப் பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டு மேலே எழுதத் தொடங்கினான். எழுதினவரை ஸ்கிரிப்டை மாதவி தெளிவாகத் தமிழ்த் தட்டெழுத்துப் பிரதி எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்ததனால் படிக்க வசதியாயிருந்தது. எழுதி முடித்த பகுதிகளைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பின்பே மேலே எழுத வேண்டிய பகுதிகளை எழுதத் தொடங்குவது அவன் வழக்கம். எழுதிக் கொண்டிருந்தே போதே கோபால் அண்ணாமலை மன்றத்திலிருந்து திரும்பியதும் தன்னை ஃபோனில் கூப்பிட்டாலும் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே எழுதினான். ஆனால் அவன் எழுத முடிந்தவரை எழுதிவிட்டுத் தூங்கப் போகிறவரை கோபால் திரும்பி வந்தானா வரவில்லையா என்பதைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை.

     காலையில் முத்துக்குமரன் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்தபோது கோபால் அங்கே வந்தான்.

     "என்ன? வாத்தியாருக்கு நேத்து ரொம்ப அலைச்சல் போலேருக்கு. எலியட்ஸ் பீச், விருந்துச் சாப்பாடுன்னு ஒரே 'பிஸி'ன்னு கேள்விப்பட்டேன்..."

     - இப்படிக் கோபால் கேட்ட தொனியும் - சிரித்த சிரிப்பும் விஷமமாகத் தென்படவே - முத்துக்குமரன் ஓரிரு விநாடிகள் பதில் சொல்லாமலே மௌனம் சாதித்தான்.

     "உன்னைத்தான் கேட்கிறேன் வாத்தியாரே? மாதவிகிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேசினப்புறம் எங்கிட்டப் பேசறதுக்குப் பிடிக்கலியா? பதில் சொல்ல மாட்டேங்கறியே?"

     - இந்த இரண்டாவது கேள்வி இன்னும் விஷமமாகத் தோன்றியது. கேள்வியில், 'என்னிடம் சொல்லிக் கொள்ளாமலும், கேட்காமலுமே நீங்களாக வெளியில் சுற்றுகிற அளவு வந்துவிட்டீர்களே' என்று வினாவுகிற தொனியும் இருந்ததை முத்துக்குமரன் கண்டான். மேலும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது நன்றாக இராது என்ற முடிவுடன்,

     "யார் சொன்னாங்க? சும்மா வெளியிலே போய்ச் சுற்றி விட்டு வராலாம்னு தோணிச்சு போயிட்டு வந்தோம்" - என்றான் முத்துக்குமரன். பேச்சு இவ்வளவோடு நிற்கவில்லை; தொடர்ந்தது.

     "அது சரி நீயோ, மாதவியோ எங்கிட்டச் சொல்லாட்டியும் எனக்குத் தெரியாமப் போயிடும்னு பார்த்தியா வாத்தியாரே!"

     "தெரிஞ்சதுக்காக இப்ப என்ன செய்யணும்கிறேடா கோபாலு? ஏதாவது சிரசாக்கினையா என்ன?"

     "சிரசாக்கினைக்கு எல்லாம் கட்டுப்படற ஆளா நீ?"

     ஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வது போலவே பேச்சுத் தொடர்ந்தாலும் - இரண்டு பேருடைய பேச்சுக்கு நடுவே வேடிக்கையல்லாத ஏதோ ஒன்று நிச்சயமாக இடறுவது தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த இருவருமே அப்படி ஒன்று நடுவே இடறுவதை உணர்ந்தார்கள். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் பரஸ்பரம் நாசூக்காகவும் சுமுகமாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோபாலே இரவு அண்ணாமலை மன்றத்தில் அல்ஜீரியா நடனம் முடிந்து திரும்பியவுடனேயோ, காலையிலேயோ டிரைவரிடம் அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கக் கூடும் என்பது முத்துக்குமரனுக்குப் புரிந்தது. ஆனாலும், 'யாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாய்' என்பதைக் கோபாலிடம் வினாவவில்லை அவன்; பத்துப் பதினைந்த நிமிஷ அமைதிக்குப் பின் கோபாலே மீண்டும் பேசினான்:

     "நாடகம் எந்த நிலையிலிருக்கிறது? எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறாய்?"

     பதில் சொல்லாமல் கையெழுத்துப் பிரதியும், டைப் செய்யப்பட்ட பகுதிகளுமாக இருந்த மேஜையை நண்பனுக்குச் சுட்டிக் காண்பித்தான் முத்துக்குமரன். கோபால் அந்தப் பிரதிகளை எடுத்து அங்கும் இங்குமாகப் படிக்கத் தொடங்கினான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடு நடுவே சில அபிப்பிராயங்களையும் கூறலானான்.

     "செலவு நெறைய ஆகும்னு தெரியுது. தர்பார் ஸீன், அது இதுன்னு ஏராளமான ஸீன்ஸ் எழுதிக்கணும், இப்பவே தொடங்கினாத்தான் முடியும். 'காஸ்ட்யூம்ஸ்' வேறே செலவாகும்..."

     இந்த அபிப்பிராயங்களை விமர்சிக்கும் ரீதியிலோ, இவற்றிற்குப் பதிலுரைக்கும் ரீதியிலோ முத்துக்குமரன் வாய் திறக்கவே இல்லை.

     - சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கோபால் போய்விட்டான். நாடகம் எடுப்பாகவும் நன்றாகவும் வாய்த்திருப்பதாக அவன் பாராட்டிவிட்டுப் போன வார்த்தைகளைக் கூட அவ்வளவு ஆழமானவைகளாக முத்துக்குமரன் எடுத்துக் கொள்ளவில்லை, அப்போது அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த விஷயம் வேறாக இருந்தது. தன் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விருந்தினர் ஒருவர் எங்கே போகிறார் வருகிறார், யாரோடு பேசுகிறார் என்றெல்லாம் - தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரிடம் விசாரிப்பவன் எவ்வளவிற்குப் பண்புள்ளவனாக இருக்க முடியும்? அப்படி விசாரிக்கப்படும் நிலைமைக்கு ஆளான விருந்தினனைப் பற்றி அந்த டிரைவர் தான் எவ்வளவு மதிப்பாகவும் மரியாதையாகவும் நினைப்பான் என்றெல்லாம் சிந்தனை ஓடியது முத்துக்குமரனுக்கு. ஒருவேளை கோபால் இரவிலேயாவது, காலையிலாவது மாதவிக்கே ஃபோன் செய்து விசாரித்திருப்பானோ என்று அவன் நினைத்தான்; அந்த நினைப்பு சாத்தியமில்லை என்பதும் உடனே அவனுக்கே தோன்றியது. மாதவிக்குக் கோபாலே ஃபோன் செய்து விசாரித்திருந்தாலும் கூட அவள் தன்னையே எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில் கோபாலுக்கு ஒன்றும் பிடி கொடுத்துப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்ப முடிந்தது. திடீரென்று கோபால் புரியாத புதிராகியிருப்பது போல் முத்துக்குமரனுக்குத் தோன்றியது.

     'என்னுடைய செலவுகளுக்கு நான் திண்டாடக் கூடாது என்று குறிப்பறிந்து ஆயிரம் ரூபாய் பணத்தை உரையிலிட்டுக் கொடுத்தனுப்புகிற இந்த நண்பன் ஒரு சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படிக் கீழ்த்தரமாக இறங்கிப் போகிறான்; நான் வெளியே உலாவப் போகவோ, மாதவி தன் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைக்கவோ உரிமையில்லையா என்ன? இதற்காக ஏன் இவன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறான்? இது ஒரு பெரிய விஷயமாக ஏன் இவனுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இவனைப் பற்றி இவனே இரகசியம் என்று நினைத்துக் கொள்கிற எந்த விஷயங்களையாவது மாதவி என்னிடம் கூறியிருப்பாளென்று சந்தேகப்படுகிறானா? அந்தச் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள முடியாமல் தான் சுற்றி வளைத்து இப்படியெல்லாம் கேட்கிறானோ?'-

     என்றெல்லாம் முத்துக்குமரனின் மனத்தில் சிந்தனைகள் ஓடின. காலைச் சிற்றுண்டியை பையன் கொண்டு வருவதற்குள் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்துவிடலாம் என்று 'பாத்' ரூமுக்குள் நுழைந்தான் அவன். பல் துலக்கும் போதும், நீராடும் போதும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் போதும் நண்பனைப் பற்றிய அதே சிந்தனை தொடர்ந்தது.

     'ஷவரை' மூடிவிட்டுத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமை அடுத்த பகுதியில் உள்ளே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன் அவன் வந்தபோது அறைக்கு வெளியில் மேஜையில் 'டைப்' அடிக்கும் ஒலியும், வளைகள் குலுங்கும் நாதமும் கேட்டன. மாதவி வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தனக்குக் காத்திராமலும், தன்னை எதிர் பார்க்காமலும் வந்தவுடனே அவளாக டைப் செய்யத் தொடங்கியது என்னவோ விட்டுத் தெரிவது போல் தோன்றியது அவனுக்கு.

     உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் மாதவி அமைதியாக இருந்ததைக் கண்டான். தான் வெளியே வந்ததும் அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டுத் தன்னிடம் பேசாமல் - தொடர்ந்து அமைதியாக டைப் செய்து கொண்டே இருந்ததைக் கண்டதும் நிலைமையை அவனால் உய்த்துணர முடிந்தது. கோபால் அவளிடம் ஏதோ பேசியிருக்கக் கூடுமென்றும் அவனுக்குப் புரிந்தது. கோபால் பேசியிராத பட்சத்தில் திடீரென்று அவள் அவ்வளவு செயற்கையாக மாற வழியில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. அருகே சென்று அவள் டைப் செய்து போட்டிருந்த தாள்களைத் கையிலெடுத்தான் முத்துக்குமரன். அப்போதும் அவள் அவனிடம் பேசவில்லை; தொடர்ந்து டைப் செய்து கொண்டிருந்தாள்.

     "என்ன மாதவி! எதுவும் பேசக்கூடாதென்று கோபமா! அல்லது இன்றைக்கு மட்டும் மௌன விரதமா?" - என்று அவனே முதலில் பேச்சைத் தொடங்கினான்.

     அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினாள். அவள் குரல் சீறினாற் போல ஒலித்தது.

     "நான் அவ்வளவு தூரம் சொல்லியனுப்பியிருந்தும் கோபால் சாரிடம் போய் நீங்கள் இதையெல்லாம் சொல்லியிருப்பது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை."

     அவளுடைய சந்தேகத்துக்கும் கோபத்திற்கும் காரணம் இப்போது அவனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. அவள் தன்னைப் பற்றி அத்தனை அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து கோபித்துப் பேசியதைக் கண்டு அவனுள்ளும் ஆத்திரம் கிளர்ந்தது. அவனுடைய புருவங்களும் வளைந்து கண்கள் சினத்தால் சிவந்தன.