2 "மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரைமணி தாமதமாகும்." எல்லோருடைய முகமும் அந்தத் தாமரை அங்கீகரிப்பது போல் மலர்ந்தன. அடுத்து முன்பு வந்தவனைப் போலவே - கைலி, பனியன், மேலே சமையல் அழுக்குப் படிந்த துண்டுடன் - கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு 'கப்'களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சமையற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது. காபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசனை கமகமத்தது. "நீங்களும் 'ட்ரூப்'லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...?" என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்து விட்ட முத்துக்குமரன், "என்ன சொன்னீங்க...?" என்று மறுபடியும் அவளைக் கேட்டான். அவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள். "கோபாலை நல்லாத் தெரியும்! என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்." ஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பதை அவன் கவனித்தான். பெண்கள் அனைவரும் தன்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பவளைப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், "உங்கள் பெயரை எனக்குச் சொல்லலாமா?" என்று கேட்டாள். "முத்துக்குமரன்..." "பேர் ரொம்ப பிடிச்சிருக்கு..." "யாருக்கு...?" அவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்று ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தது. "இல்லே... நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்." "அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...?" "மாதவி..." "உங்க பேர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு." மறுபடியும் அவள் உதடுகளில் புன்னகை தோன்றவும் மறையவும் முயன்றது. முன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது. அவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பழைய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது. 'கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது' என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது. *****
விமான நிலையத்திலிருந்து வந்த கோபால் உள்ளே போய் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரிஸப்ஷன் ஹாலுக்கு வரப் பத்து நிமிஷம் ஆயிற்று. அந்தப் பத்து நிமிஷமும் ஹாலில் இருந்த யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. கண்கள் யாவும் ஒரே திசையில் இருந்தன. எப்படி உட்கார வேண்டுமென்று நினைத்தபடியே திட்டமிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். அசாதாரண மௌனம் நிலவியது. ஒவ்வொருவரும் நேர இருக்கும் விநாடிக்குத் தகுந்தவாறு தங்கள் மனம் மொழி மெய்களை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பேசவேண்டிய வார்த்தைகளும், வாக்கியங்களும் யோசிக்கப்பட்டன. எப்படிச் சிரிப்பது, எப்படிக் கைகூப்புவது என்றெல்லாம் சிந்தித்து உள்ளேயே திட்டமிடப்பட்டன. அரசர் நுழையும் முன்புள்ள கொலு மண்டபம் போல் மரியாதை கூடிய அமைதியாயிருந்தது அந்த ஹால்.நண்பன் கோபாலுக்காகத் தானும் அத்தனை செயற்கைகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்று முத்துக்குமரனின் மனத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தானும் இத்தனை அதிகப்படி மரியாதை பதற்றங்களுடன் நண்பனை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று தயங்கினான். அவன் நண்பன் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தே தான் அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை முடிவு செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு. கம்பெனியில் நாடகங்கள் நடைபெறாத காலத்தில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்து மீதியிருக்கும் ஒரே பாயில் இருவராகப் படுத்துத் தானும் கோபாலும் உறங்கிய பழைய இரவுகளை நினைத்தான் முத்துக்குமரன். அந்த அந்நியோந்நியம், அந்த நெருக்கம், அந்த ஒட்டுறவு இப்போது அவனிடம் அப்படியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்கலாமா, கூடாதா என்பதே முத்துக்குமரனுக்குப் புரியவில்லை. பணம் மனிதர்களைத் தரம் பிரிக்கிறது. அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிராபல்யம் இவைகளும் பணத்தோடு சேர்ந்துவிட்டால் வித்தியாசங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றன. வித்தியாசங்கள் சிலரை மேட்டின் மேலும் சிலரை பள்ளத்திலும் தள்ளிவிடுகின்றன. பள்ளத்தில் இருப்பவர்களை மேட்டிலிருப்பவர்கள் சமமாக நினைப்பார்களா? பூகம்பத்தில் சமதரை மேடாகவும், மேடு பள்ளமாகவும் ஆவது போல் பணவசதி என்ற பூகம்பத்தில் சில மேடுகள் உண்டாகின்றன. அந்த மேடுகள் உண்டாவதனாலேயே அதைச் சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் பள்ளமாகிவிட நேரிடுகிறது. பள்ளங்கள் உண்டாக்கப்படுவதில்லை. மேடுகள் உண்டாகும்போது - மேடல்லாத இடங்கள் எல்லாம் பள்ளங்களாகவே தெரிகின்றன. மேடுகள், பள்ளங்கள் நேர்கின்றன. கவிதையின் இறுமாப்பும், தன்மானத்தின் செருக்கும் நிறைந்த அவன் மனம் கோபாலை மேடாகவும் தன்னைத்தானே பள்ளமாகவும் நினைக்கத் தயங்கியது. கவிதை விளைகிற மனத்தில் கர்வமும் விளையும். கர்வத்தில் இரண்டு வகை உண்டு. அழகிய கர்வம், அருவருப்பான கர்வம் என்று அவற்றைப் பிரிப்பதனால் ஒரு நளினமான கவியின் மனத்தில் விளைகிற கர்வங்கள் அழகியவை. அரளிப்பூவின் சிவப்புநிறம் கண்ணைக் குத்துகிறது. ரோஜாவின் சிவப்புநிறம் கண்ணுக்குக் குளுமையாயிருக்கிறது. கவி அல்லாதவன் அல்லது ஒரு முரடனின் கர்வம் அரளியின் சிவப்பைப் போன்றது. கவியாக இருக்கும் இங்கிதமான உணர்ச்சிகளையுடைய ஒருவனின் கர்வம் ரோஜாப்பூவின் சிவப்பை போன்றது. முத்துக்குமரனின் உள்ளத்திலும் அப்படி ஒரு மெல்லிய கர்வம் அந்தரங்கமாக உண்டு. அதனால்தான் அவன் நண்பன் கோபாலை அந்நியமாகவும், தன்னைவிட உயரத்திலிருப்பவனாகவும், நினைக்கத் தயங்கினான். அவன் - தனது உயரத்தை மறக்கவோ, குறைக்கவோ தயாராக இல்லை. தான் அமர்ந்திருந்த சோபா, அந்த ஹால், அந்த பளிங்குத் தரை, பாங்கான விரிப்புகள், அங்கே சௌந்தரிய தேவதைகளாக அமர்ந்திருந்த அந்த யுவதிகள், அவர்களுடைய விதவிதமான வடிவ வனப்புகள், மேனி வாசனைகள், எல்லாம் சேர்ந்து - எல்லோரும் சேர்ந்து - அவனுள் சுபாவமாக உறைந்து கிடந்த அந்த மெல்லிய கர்வம் பெருகவே துணை புரிந்தார்கள். மலராத பூவுக்குள் எங்கோ இருக்கும் வாசனை போல் தேடிக் கண்டு பிடிக்க முடியாத இனிய கர்வம் அது. கோபால் இன்னும் ஹாலில் பிரவேசிக்கவேயில்லை. அவன் எந்த விநாடியும் உள்ளே பிரவேசிக்கலாம். முத்துக்குமரனின் மனத்திலோ கோபாலைப் பற்றிய பழைய சிந்தனைகள் கிளர்ந்தன. சில நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுகிறவன் வரமுடியாத சமயங்களில் தானே கதாநாயகனாக நடித்தபோது செயற்கையாக நாணிக்கோணி அருகில் பெண் வேஷத்தில் நின்ற கோபாலையும் இப்போது அந்த ஹாலுக்குள் பிரவேசிப்பதற்கிருந்த கோபாலையும் இணைத்துக் கற்பனை செய்ய முயன்றது அவன் மனம். அந்தப் பழைய கோபால் வேஷம் கட்டாத நேரத்திலும் அவனுக்கு முன்னால் நாணிக் கோணிக் கூச்சத்தோடுதான் நடந்து கொள்வான். ஓர் அடங்கிய சுபாவமுள்ள மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் முத்துக்குமரனுக்கு அந்த நாட்களில் கோபாலும் கட்டுப்படுவான். 'நீ பெண் பிள்ளையாகப் பிறந்து தொலைத்திருந்தால் முத்துக்குமார் வாத்தியாரையே கட்டிக்கிடலாம்டா கோபாலு' என்று சில சமயங்களில் நாடக சபையின் உரிமையாளரான நாயுடு கிரீன் ரூமுக்குள் வந்து கோபாலைக் கேலி செய்துமிருக்கிறார். ஸ்திரீ பார்ட் வேஷத்தில் கோபால் மிகமிக அழகாக இருப்பான். வேஷம் கட்டாத நேரங்களில் கூட, 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' - என்று கிண்டலாகக் கோபாலும், 'தேவி! இன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் செல்லலாமா!' - என்று கேலியாக முத்துக்குமரனும் பரஸ்பரம் பேசிக் கொள்வதுண்டு. 'பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் இவற்றை எல்லாம் இப்போது நினைத்துப் பயன் என்ன?' என்று உள்மனம் முத்துக்குமரனைக் கண்டித்தது. அபூர்வமானதொரு 'செண்ட்'டின் வாசனை முன்னே வந்து கட்டியம் கூற ஸில்க் ஜிப்பாவும் - பைஜாமாவும் அணிந்து கொண்டிருந்த கோலத்தில் கோபால் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை ஒவ்வொருவர் மேலும் பதிந்து மீண்டது. பெண்கள் நாணினாற்போல் நெளிந்தபடி புன்முறுவல் பூத்துக் கைகூப்பினார்கள். ஆண்களும் முகம் மலரக் கைகூப்பினர். முத்துக்குமரன் ஒருவன் மட்டும் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கால்மேல் கால்போட்ட நிலையிலேயே கம்பீரமாக வீற்றிருந்தான். கோபால் கை கூப்புமுன் தான் எழுந்து நின்று கைகூப்பவோ, பதறவோ அவன் தயாராயில்லை. கோபாலின் பார்வை இவன் மேல் பட்டதும் அவன் முகம் வியப்பால் மலர்ந்தது. "யாரு! முத்துக்குமாரு வாத்தியாரா? என்ன இப்படிச் சொல்லாமக் கொள்ளாமத் திடீர்னு வந்து ஆச்சரியத்திலே மூழ்க அடிக்கிறீங்களே?" முத்துக்குமரன் முகம் மலர்ந்தான். கோபால் அந்நியமாக நடந்து கொள்ளவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. "சௌக்கியமா இருக்கியா கோபாலு? ஆளே மாறிப்பருத்துப் போயிட்டே...? இப்ப உனக்கு... ஸ்திரீ பார்ட் போட்டா அது உலகத்துல இருக்கிற ஸ்திரீ வர்க்கத்தையே அவமானப் படுத்தறாப்பிலே இருக்கும்..." "வந்ததும் வராததுமாகக் கிண்டலை ஆரம்பிச்சுட்டியா வாத்தியாரே?" "ஓகோ! கிண்டல் கூடாதோ? 'நடிக மன்னர் கோபால் அவர்களே' - என்று மரியாதையாகக் கூப்பிடட்டுமா?" "மரியாதையும் வாண்டாம் மண்ணாங்கட்டியும் வாண்டாம். இப்ப என்ன சொல்றே? இவங்களையெல்லாம் இண்டர்வியூக்கு வரச் சொன்னேன். பார்த்துப் பேசி அனுப்பிடட்டுமா? இல்லை... நாளைக்கு வரச்சொல்லட்டுமா? நீ சொல்றபடி செய்யறேன் வாத்தியாரே..." "சே! சே! ரொம்ப நேரமாகக் காத்திருக்காங்க... பார்த்து அனுப்பிட்டு வா போதும்... எனக்கொண்ணும் இப்ப அவசரமில்லே..." என்றான் முத்துக்குமரன். "அது சரி! நீ எப்படி வந்தே? எங்கே தங்கியிருக்கே?" "அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்லே அவங்களை எல்லாம் பார்த்துப் பேசி அனுப்பு..." முத்துக்கும்ரனின் கருணைக்கு நன்றி செலுத்துவது போல் பல ஜோடிக் கயல் விழிகள் அவன் பக்கமாகத் திரும்பி அவனை விழுங்கிடாத குறையாகப் பார்த்தன. அத்தனை யுவதிகளை ஒரே சமயத்தில் கவர்ந்ததற்காகவும் சேர்த்து அவன் நெஞ்சு கர்வப்படத் தொடங்கியது. நாடகக் குழுவுக்கான நடிகர், நடிகையர் தேர்தல் தொடங்கியது. தூரத்தில் சோபாவில் அமர்ந்து விலகியிருந்தபடியே அந்த இண்டர்வ்யூவை வேடிக்கை பார்க்கலானான் முத்துக்குமரன். மேற்கு நாடுகளில் செய்வதுபோல் நெஞ்சளவு, இடையளவு, உயரம் என்று பெண்களை அளக்காவிட்டாலும், கோபால் கண்களால் அளக்கும் பேராசையோடுகூடிய அளவையே முத்துக்குமரனால் கவனிக்க முடிந்தது. ஏதோ நடிப்புக்கு போஸ் கொடுக்கச் செய்வது போன்ற பாவனையில் சில மிக அழகிய பெண்களை விதவிதமான கோணங்களில் நிற்கச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தான் கோபால். அந்தப் பெண்களும் தட்டாமல் அவன் சொன்னபடி எல்லாம் செய்தார்கள். ஆண்களை இண்டர்வ்யூ செய்ய அவ்வளவு நேரமே ஆகவில்லை. சுருக்கமாக சில கேள்விகள் - பதில்களோடு ஆண்கள் இண்டர்வ்யூ முடிந்துவிட்டது. தபாலில் முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி எல்லோரையும் அனுப்பி வைத்தபின் - கணவனுக்கு அருகில் அடக்கமாக வந்து அமரும் மனைவியைப் போல் முத்துக்குமரனுக்கருகே பவ்யமாக வந்து உட்கார்ந்தான் கோபால். "ஏண்டா கோபாலு! நெஜமாகவே நாடகக் கம்பெனி வைக்கப் போறீயா... அல்லது தினசரி குஷாலாக நாலு புதுப் பெண்களின் முகங்களையும், அழகுகளையும் பார்க்கலாம்னு இப்படி ஓர் ஏற்பாடா? ஒருவேளை, அந்தக் காலத்தில் நாடகத்திலே ஸ்திரீ பார்ட் போடப் பெண்களே கிடைக்காம நீ ஸ்திரீ பார்ட் போட நேர்ந்ததற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவழைச்சு பழி வாங்கறீயா, என்ன? இல்லே... தெரியாமத்தான் கேக்கறேன்?" "அன்னிக்கி இருந்த அதே கிண்டல் இன்னும் உங்கிட்ட அப்படியே இருக்கு வாத்தியாரே! அது சரி...! எங்கே தங்கியிருக்கேன்னு இன்னும் நீ சொல்லவே இல்லியே?" முத்துக்குமரன் எழும்பூரில் தான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைச் சொன்னான். "நான் நம்ம டிரைவரைப் போய் பில் பணத்தைக் கட்டிப்பிட்டு உன் பெட்டி படுக்கையை எடுத்தாறச் சொல்லிடறேன். இங்கேயே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு - வாத்தியார் அதிலே தங்கிக்கலாமில்லே...?" "வாத்தியார் என்னடா வாத்தியார்? நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்னு பழையபடி ஸ்திரீ பார்ட் குரல்லேதான் ஒரு தரம் சொல்லேன்." கோபால் அப்படிச் சொல்ல முயன்று குரல் சரியாக வராததால் பாதியில் நிறுத்தினான். "உன் குரல் தடிச்சுப் போச்சுடா கோபால்." "குரல் மட்டுமென்ன? ஆளுந்தான்" சொல்லிக் கொண்டே டிரைவரைக் கூப்பிட வெளியே போனான் கோபால். அவனைப் பின் தொடர்ந்து சென்ற முத்துக்குமரன், "ரூமை நல்லாப் பார்த்து என் ஐசுவரியம் எதையும் விட்டுவிடாமே எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு. நிகண்டு, எதுகை வரிசைப் புத்தகம் ரெண்டு மூணு இருக்கும்..." என்று எச்சரித்தான். "அதெல்லாம் ஒண்ணு விடாமே வந்து சேரும்; நீ கவலைப்படாதே..." "லாட்ஜ் ரூமுக்கு வாடகைப் பணம் தரணுமே?" "அதை நீ தான் கொடுக்கணுமோ? நான் கொடுக்கப்படாதா வாத்தியாரே?" முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, "ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்?... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?..." "பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..." "சே! சே! அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!" "அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே." "அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?" "பின்னே? வேறே எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?" "எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு?" "அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்." "அது சரிதான்! அதை நான் ஒண்ணும் மறந்துடலே; நல்லா நினைவிருக்கு..." - என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான். ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது. "உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு." "ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...?" "நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு..." "இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே!" "ஆமா... இந்த நல்ல சமயத்திலே 'வாத்தியார்' மெட்ராஸ் வந்ததைக் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரின்னு தான் சொல்லணும்..." "அது சரி! நாடகக் கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கப்போறே...?" "நீதான் நல்ல பெயரா ஒண்ணு சொல்லேன்..." "ஏன் 'ஐயா'வைக் கூப்பிட்டு ஒரு நல்ல பெயர் சூட்டச் சொல்லறதுதானே!" "ஐயையோ! நமக்கு கட்டாது வாத்தியாரே. அவரு குழந்தைக்குப் பெயர் வைக்கிறதுக்கே 'ரேட்டை' உசத்திப்பிட்டாரு..." "சாமி பெயரு வரலாமில்ல...?" "கூடியவரை பகுத்தறிவுக்குப் பொருந்தி வர்ராப்பில இருந்தா நல்லதுன்னு பார்த்தேன்..." "ஏன்?... அந்த லேபிள்ளேதான் நீ மெட்ராசிலே காலந்தள்ளுறியாக்கும்..." "இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது...?" "பகுத்தறிவுச் செம்மல்னு உனக்குப் பட்டமே கொடுத்திருக்காங்களே...?" "வம்பளக்காதே... பெயரைக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...?" "'கோபால் நாடக மன்றம்'னே வையி! இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா?" "'கோபால் நாடக மன்றம்'னு என் பெயரையே வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். 'இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது." "ஓகோ! ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத்தனை காரணங்களை யோசிக்கணும்... என்ன?" "கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?" "ஓகோ! புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படறேண்டா கோபாலு." என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான். "கொண்டு போய் அவுட் ஹவுசிலே வை. நாயர்ப் பையனைக் கூப்பிட்டுக்கிட்டுப் போய் அவுட் ஹவுஸ் பாத்ரூமிலே டவல், சோப், எல்லாம் வைக்கச் சொல்லு. 'வாத்தியாரு' சௌகரியமா இருக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யச் சொல்லு." டிரைவர் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். மறுபடி ஏதோ நினைவு வந்தவன் போல் கோபால் அவனைக் கூப்பிட்டான். "இந்தா உன்னைத்தானே! அவுட் ஹவுசிலே வெந்நீருக்கு வசதியில்லைன்னா உடனே 'ஹோம் நீட்ஸ்' கம்பெனிக்கு ஃபோன் பண்ணி ஒரு 'கெய்ஸா ப்ளாண்ட்' கொண்டாந்து பிக்ஸ் பண்ணச் சொல்லு." "இப்பவே ஃபோன் பண்றேன் சார்." டிரைவர் போனதும் மீண்டும் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தான் கோபால். "முதல் நாடகத்தை நீதான் கதை - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே?" "நானா? இதென்னப்பா வம்பா இருக்கு? எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க? என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது! நான் எழுதணும்னா சொல்றே?" என்று கோபாலின் மனநிலையை அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன். "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எதை எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு" என்றான் கோபால். "அப்படீன்னா?... அதுக்கு அர்த்தம்!" என்று சந்தேகத்தோடு பதிலுக்கு வினவினான் முத்துக்குமரன். |