3 "நீ சும்மா எழுது வாத்தியாரே! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 'நடிகர் திலகம் கோபால் நடிக்கும் நவரச நாடகம்'னு ஒருவரி விளம்பரப்படுத்தினாப் போதும், தானா 'ஹவுஸ்புல்' - ஆயிடும்... சினிமாவிலே கிடைக்கிற புகழை நாடகத்துக்குப் பயன்படுத்தணும். அதுதான் இப்ப 'டெக்னிக்'." "அதாவது எழுதறவன் எந்தப் பயலாயிருந்தாலும் உன்பேர்ல நாடகம் தடபுடலாகிவிடும்னு சொல்றியா?" "பின்னென்ன? சும்மாவா?" "அப்படியானா நான் எழுத முடியாது!" முத்துக்குமரனின் குரலில் கடுமை நிறைந்திருந்தது. சிரிப்பு முகத்திலிருந்து மறைந்து விட்டது! "ஏன்? என்ன?" "உன்னுடைய லேபிளில் மட்டமான சரக்கையும் அமோகமாக விற்க முடியும் என்கிறாய் நீ! நானோ நல்ல சரக்கை மட்டமான லேபிளில் விற்க விரும்பவில்லை." இதைக் கேட்டவுடன் கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. வேறொருத்தன் இப்படிச் சொல்லியிருந்தால் கன்னத்தில் அறைந்து 'கெட் அவுட்' என்று கத்தியிருப்பான். ஆனால், முத்துக்குமரனிடம் ஓர் அடங்கிய மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் கட்டுப்பட்டான் அவன். சிறிது நேரம் நண்பனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் திகைத்தான் அவன். கோபமாகப் பேசமுடியவில்லை. நல்லவேளையாக முத்துக்குமரனே முகம் மலர்ந்து புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான். "கவலைப்படாதே கோபால்! உன்னுடைய அகங்காரத்தை ஆழம் பார்க்கத்தான் அப்படிப் பேசினேன். உனக்கு நான் நாடகம் எழுதுகிறேன். ஆனால், அது நீ நடிக்கிற நாடகம் என்பதை விட நான் எழுதிய நாடகம் என்பதையே நினைவு படுத்திக் கொண்டிருக்கும்." "அதனால என்ன? நீ பெருமை அடைந்தால் அதில் எனக்கும் உரிமை உண்டு வாத்தியாரே?" "முதல் நாடகம் - சமூகமா? சரித்திரமா?" "சரித்திரமாகவே இருக்கட்டும்! ராஜேந்திரசோழனோ சுந்தரபாண்டியனோ எதுவேணா இருக்கட்டும். அதுலே நடுநடுவே பார்க்கிறவங்க கைதட்டறாப்பல சில டயலாக்ஸ் மட்டும் கண்டிப்பா வேணும்! நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணும்! எம் மன்னர் காமராஜர், கன்னியர் மனங்கவரும் அழகுக் கொண்டல், இரப்போர்க்குக் கருணாநிதி, இளைஞர்க்குப் பெரியார், தம்பியர்க்கு அண்ணா - என்பதுபோல அங்கங்கே வசனம் வரணும்." "அது முடியாது?" "ஏன்? ஏன் முடியாது?" "ராஜராஜசோழன் காலத்தில் இவங்கள்ளாம் இல்லை. அதனாலே முடியாது." "மாஸ் அப்பீலா இருக்கும்னு பார்த்தேன்." "இப்படி எழுதினா மாஸ் அப்பீல் என்பதைத் திருத்தி 'மாசு அப்பீல்'னுதான் சொல்லணும்." "பின்னே என்னதான் எழுதப்போறே? எப்பிடி எழுதப் போறே?" "நாடகத்தை - நாடகமாகவே எழுதப்போறேன். அவ்வளவுதான்." "அது எடுக்கணுமே...?" "எடுக்கறதும் - எடுக்காததும் நாடகத்தைச் 'சிறப்பா' அமைக்கிறதுலேதான் இருக்கே ஒழிய நாடகத்துக்குச் சம்பந்தமில்லாததுலே மட்டும் இல்லே." "எப்படியோ உன்பாடு... நீ வாத்தியார். அதனாலே நான் சொல்றதைக் கேட்கமாட்டே?" "எந்தக் கதாபாத்திரத்தை யார் யார் நடிக்கிறதுங்கறதில இருந்து எத்தினி சீன் வரணும், எவ்வளவு பாட்டு, எல்லாத்தையும் நீ என் பொறுப்பிலே விடு. நான் வெற்றி நாடகமாக இதை ஆக்கிக் காட்டாட்டி அப்புறம் என் பெயரு முத்துக்குமார் இல்லே..." "சரி! செய்து பாரேன்... இப்ப சாப்பிடப் போகலாமா?" இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அப்புறமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் கோபால் தன் அலமாரியைத் திறந்து - வண்ண வண்ணமாக அடுக்கியிருந்த பாட்டில்களில் இரண்டையும் - கிளாஸ்களையும் எடுத்தான். "பழக்கம் உண்டா வாத்தியாரே?" "நாடகக்காரனுக்கும், சங்கீதக்காரனுக்கும் இந்தக் கேள்வியே வேண்டியதில்லே கோபால்." "வா! இப்படி உட்காரு வாத்தியாரே" என்று கூறிக் கொண்டே டேபிளில் கிளாஸ்களையும், பாட்டில்களையும் 'ஓபனரை'யும் வைத்தான் நடிகன் கோபால். அதன் பின் அவர்கள் பேச்சு வேறு திசைக்குப் போயிற்று. மாலையில் இண்டர்வ்யூக்கு வந்திருந்த பெண்களைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் தாராளமாகவும், சுதந்திரமாகவும் விமர்சித்துக் கொண்டார்கள்; பாட்டில்கள் காலியாகக் காலியாக - அவற்றில் இருந்த அளவு குறையக் குறையப் பேச்சின் தரம் குறைந்து கொண்டே வந்தது. தனிப்பாடல், திரட்டு முதலிய பழைய நூல்களிலிருந்து சில விரசமான கவிதைகளையும், சிலேடைகளையும் கோபாலிடம் சொல்லி, விவரிக்கத் தொடங்கினான் முத்துக்குமரன். நேரம் போவதே தெரியவில்லை. இதே பாட்டுக்களையும், பேச்சுக்களையும், அவர்கள் பாய்ஸ் கம்பெனியிலிருந்த காலத்திலும் பேசிக் கொண்டது உண்டு. ஆனால், அப்போது பேசிக் கொண்டதற்கும் இப்போது பேசிக் கொள்வதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. பாய்ஸ் கம்பெனியில் மது மயக்கத்தை அடைய வசதிகள் கிடையாது. இப்படி விஷயங்களைப் பயந்து பயந்துதான் பேசிக் கொள்ள வேண்டும். பெண் வாடையே வீசாத சூனியப் பிரதேசம் போல் கம்பெனி இருக்கும். இப்போது அப்படி இல்லை. பன்னிரண்டு மணிக்குமேல் தள்ளாடி தள்ளாடி அவுட் ஹவுஸை நோக்கி நடந்த முத்துக்குமரனைப் பாதி வழியில் விழிந்துவிடாமல் நாயர்ப் பையன் தாங்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டான். "ஞான் டெலிபோன் கீ போர்டுக்குப் பக்கத்திலே உறங்கும். ஏதாவது வேணும்னா ஃபோனில் பறயட்டும்" என்று கூறிப் படுக்கை அருகே இருந்த ஃபோன் எக்ஸ்டென்ஷனைக் காண்பித்துவிட்டுப் போனான் பையன். அவன் பேசிய குரலும், காட்டிய ஃபோனும் மங்கலாக முத்துக்குமரனுக்குக் கேட்டன; தெரிந்தன. உடலில் அங்கங்கள் வெட்டிப் போட்டது போலவோ அடித்துப் போட்டது போலவோ, சோர்ந்திருந்தன. தூக்கம் கண்களில் வந்து கொஞ்சியது. அந்த வேளை பார்த்துச் சொப்பணத்தில் கேட்பது போல் அறைக்குள் டெலிபோன் மணி கேட்டது. இருட்டில், டெலிபோனைத் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. தலைப்பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கைப் போட்டு விட்டு டெலிபோனை எடுத்தான் முத்துக்குமரன். எதிர்ப்புறம் ஓர் இனிய பெண் குரல் - பயமும், நாணமும், கலந்த தொனியில் 'ஹலோ' என்று இங்கிதமாக அழைத்து, 'என்னை நினைவிருக்கிறதா?' என்று வினாவியது. அந்தக் குரலை நினைவிருந்தாலும் அப்போதிருந்த நிலையில் யாரென்று பிரித்து நினைவு கூற முடியாமலிருந்தது. அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவளே தொடர்ந்து ஃபோனில் பேசினாள். "...மாதவி ... இண்டர்வ்யூக்கு முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருந்தேனே; நினைவில்லையா?" "ஓ... நீயா...?" போதையில் ஏகவசனமாக 'நீ' என்று வந்துவிட்டது. ஓர் அழகிய சமவயதுப் பெண்ணிடம் அவள் யௌவனத்தையும், பிரியத்தையும் அவமானப்படுத்துவது போல் 'நீங்கள்', 'உங்கள்' - என்று பேச முடியாதவனாக அவன் அப்போது இருந்தான். அவன் பருகியிருந்த மதுவைக் கசப்பாக்குவது போல் டெலிபோனில் அவள் குரல் இங்கிதமாக நளினமாய்த் தேனாகப் பெருகி வழிந்தது. "மன்னிக்கணும்... நீங்களா...?" - என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் உரையாடலை மறுபடி தொடர்ந்தபோது, "முதல்ல கூப்பிட்டாப்பிலேயே கூப்பிடலாம்! அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..." என்று எதிர்ப்புறம் அவள் குரல் ஒய்யாரமாய்க் குழைந்தது. அந்தக் குழைவு, அந்த இங்கிதம், எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனை மேலும் மேலும் கர்வப்பட வைத்தன. வலிய அணைக்கும் சுகம் போலிருந்தது அவளுடைய பேச்சு. "இந்த அகாலத்தில் எங்கேயிருந்து பேசறே? நான் இந்த அவுட் ஹவுஸ்லே ஃபோனில் கிடைப்பேன்னு எப்பிடி உனக்குத் தெரியும்...?" "அங்கே கோபால் சார் வீட்டிலே டெலிபோன் போர்டிலே இருக்கிற பையனைத் தெரியும்..." "அவனைத் தெரியும்கிறதனாலே இந்த அகாலத்திலே ஒரு பெண் இப்படி ஃபோனில் குழையலாமா? நாலு பேர் என்ன நினைப்பாங்க..." "என்னவேணா நினைக்கட்டுமே? என்னாலே பொறுத்துக்க முடியலே. கூப்பிட்டேன்... அது தப்பா?" கடைசி வாக்கியத்தில் கேள்வியின் தொனி வெல்லமாய் இனித்தது. கேட்பவனுக்கு அந்த நயம் மதுவின் போதையைவிட அதிகமான போதையை அளித்தது. உலகின் முதல் மதுவே பெண்ணின் இதழ்களிலும், குரலிலும் தான் பிறந்து ஊற்றெடுத்திருக்க வேண்டும் போலும். முத்துக்குமரனுக்கு அவளோடு பேசி முடித்த போது மனம் நிறைந்து பொங்கி வழிகிறாற் போலிருந்தது. கொஞ்சம் சுயப்ரக்ஞையோடு அவள் எதற்காக ஃபோன் செய்தாள் என்று நினைத்தபோது நினைவில் அவள் தான் மீதமாகக் கிடைத்தாளே ஒழிய, அவள் ஃபோன் செய்த காரணம் கிடைக்கவில்லை. தனக்கு ஃபோன் செய்து தன்னுடைய அன்பையும், தயவையும், பிரியத்தையும், சம்பாதித்துக் கொண்டால் - தான் அவளை நாடகக் குழுவில் ஓர் நடிகையாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கோபாலிடம் சிபாரிசு செய்யலாமென்பதற்காக மறைமுகமாய் இப்படி ஃபோன் செய்து தூண்டுகிறாளோ என்ற சந்தேகம் ஒரு கணம் எழுந்தது. அடுத்த கணமே அப்படி இருக்காதென்றும் தோன்றியது. தனக்கு அவள் போன் செய்ததற்குத் தன்மேல் அவள் கொண்டிருக்கும் பிரியத்தைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாதென்று நினைத்த உறுதியில் முன் நினைவு அடிபட்டுப் போய்விட்டது. அன்றிரவு மிக இனிய கனவுகளுடனே உறங்கினான் அவன். விடிந்தபோது மிகவும் அவசர அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. நாயர்ப் பையன் பெட் காபியோடு வந்து எழுப்பிய பின்புதான் அவன் எழுந்திருந்தான். வாயைக் கொப்பளித்துவிட்டுச் சூடான காபியைப் பருகினான். மனநிலை மிக மிக உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருந்தது. அவுட் ஹவுஸின் வராந்தாவில் வந்து நின்று எதிரே தோட்டத்தைப் பார்த்தபோது அது மிகவும் அழகாக இருந்தது. பனியில் நனைந்த ஈரப் புல்தரை மரகத விரிப்பாகப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பசுமைக்குக் கரை கட்டினாற் போல் சிவப்பு ரோஜாப்பூக்கள் பூத்திருந்தன. இன்னொரு மூலையில் புல்தரையில் பூக்களை உதிர்த்துவிட்டு - அப்படி உதிர்த்த தியாகத்தோடு நின்று கொண்டிருந்தது பவழ மல்லிகை. எங்கிருந்தோ ரேடியோ கீதமாக - "நன்னு பாலிம்ப"...வில் மோகனம் காற்றின் வழியே மிதந்து வந்தது. எதிரே தெரிந்த தோட்டமும் காலை நேரத்தின் குளுமையும் அந்தக் குரலின் மோகன மயக்கமும் சேர்ந்து முத்துக்குமரனை மனம் நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியின் விளைவாக மாதவியின் நினைவு வந்தது. முதல் நாளிரவு அகாலத்தில் டெலிபோனில் ஒலித்த அவள் குரலும் நினைவு வந்தது. சிலர் பாடினால் தான் சங்கீதமாகிறது. இன்னும் சிலரோ பேசினாலே சங்கீதமாயிருக்கிறது. மாதவிக்கோ வாய் திறந்து பேசினாலே சங்கீதமாயிருக்கிற குரல். குயில் ஒவ்வொரு கூவலாகக் கூவுவதற்காக அகவுவதுபோல் சொற்களை அகவி அகவிப் பேசினாள் அவள். அவளுடைய குரலைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவனுக்கு.
"தென்றல் வீசிடும் சுகமும் - நறுந்
இந்தப் பாடலை ஒவ்வோர் அடியாக வாயினாலேயே இட்டுக் கட்டிச் சேர்த்தபோது சில இடங்கள் கச்சிதமாகவும் வடிவாகவும் வரவில்லை என்பதை அவனே உணர்ந்தான். ஆனாலும் பாடிய அளவில் ஓர் ஆத்மதிருப்தியை அவன் அடைய முடிந்தது.தேனைக் குழைக்கும் நயமும் ஒன்றிப் பேசிடும் குரலாயின் - அது உரைக்கும் இன்னிசையாகாதோ? மன்றில் பாடும் பாடல் போல் - சிலர் மனத்திற் பாடும் பாட்டுண்டு ஒன்றிக் கேட்கும் இசையுண்டு - இவ் உலகிற் கேளா இசையுண்டு..." இப்படி முத்துக்குமரன் வராந்தாவில் நின்று தோட்டத்தையும், மனத்துள் நினைவலையாகச் சிலிர்த்த மாதவியின் குரலையும் இரசித்துக் கொண்டிருந்தபோது, கோபாலே 'நைட் கோட்' களையாத கோலத்தில், முத்துக்குமரனைப் பார்ப்பதற்காக அவுட் ஹவுசுக்குத் தேடிக் கொண்டு வந்தான். "நல்லாத் தூங்கினியா வாத்தியாரே?" "தூக்கத்துக்கென்ன குறைச்சல்...?" "அது சரி! இப்ப நான் உங்கிட்டப் பேச வந்த விஷயம் என்னன்னா...?" "என்ன?" "நேத்து வந்த பொண்ணுங்களிலே உனக்கு யாரை ரொம்பப் பிடித்திருந்திச்சு வாத்தியாரே?" "ஏன்! கல்யாணம் கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா?..." "அட அதுக்கில்லேப்பா...! நம்ம நாடகக் குழுவின் தொடக்க விழாவைச் சீக்கிரமே நடத்தி முதல் நாடகத்தை அரங்கேத்திடணுங்கிறதுலே நான் ரொம்பத் தீவிரமா இறங்கியிருக்கேன். அதுக்கான 'செலக்ஷன்'லாம் பட்பட்னு முடியணும்." "சரி முடியேன்." "முடிக்கிறதுக்கு முன்னே உன் யோசனையையும் கேட்கலாம்னு தான் வந்தேன் வாத்தியாரே?" "இந்த விசயத்திலே 'நடிகர் திலகத்துக்கு' நானா யோசனை சொல்லணும்...?" "இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது..." "கிண்டலா? சே! சே! உள்ளதைத்தானே சொன்னேன்?" "இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தவர்களிலே ஆம்பிளைங்க ரெண்டு பேரையும் அப்படியே எடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஏன்னா சங்கீத நாடக அகாடெமி செக்ரட்டரி சக்ரபாணியோட ரெகமண்டேஷனோட வந்திருக்காங்க அவங்க ரெண்டு பேரும்..." "சரி! ஜமாயி... அப்புறம்..." "வந்திருந்த பொம்பளைகளிலே...?" "அத்தினி பேருமே அழகுதான்..." "அப்படிச் சொல்லிவிட முடியாது! அந்த 'மாதவி' தான் சரியான வாளிப்பு. நல்ல உயரம், சரீரக் கட்டு, களையான முகம்..." "அப்படியா! ரொம்ப சரி..." "அவளை பெர்மனன்ட் 'ஹீரோயினா' வச்சிக்க வேண்டியதுதான்..." "நாடகத்துக்குத் தானே..." "வாத்தியாரே! உன் கிண்டலை நான் தாங்க மாட்டேன்... இத்தோடு விட்டுடு." "சரி பிழைத்துப்போ?... மேலே சொல்லு..." என்று நண்பனை மேலே பேசுமாறு வேண்டினான் முத்துக்குமரன். கோபால் மேலே கூறத் தொடங்கினான். "வந்திருந்த மத்தப் பொண்ணுங்களிலே சிலரை நாடகங்களிலே வர்ர உப பாத்திரங்களுக்காக எடுத்துக்கலாம்னு பார்க்கிறேன்..." "அதாவது சரித்திரக் கதையானால் தோழி - சேடி. சமூகக் கதையானால் கல்லூரி சிநேகிதி... பக்கத்துவீட்டுப் பெண் இப்படி எல்லாம் வேண்டியிருக்கும்... சமயத்திலே அந்த உப பாத்திரங்கள் வாழ்க்கைக்குக்கூடத் தேவைப்படலாம்..." கிண்டல் பொறுக்க முடியாமல் பேசுவதை நிறுத்திவிட்டு முத்துக்குமரனின் முகத்தை உற்றுப் பார்த்தான் கோபால். உடனே பேச்சை மாற்றக் கருதிய முத்துக்குமரன் சிரித்துக் கொண்டே, "அதென்னமோ, கோபால் நாடக மன்றம்னு பெயர் வைக்கிறதுக்கு முன்னே, உன்னோட செக்ரட்டரியை இன்கம்டாக்ஸ் விஷயமாகக் கலந்து பேசணும்னியே? பேசியாச்சா?" என்று வினவினான். அதற்குக் கோபாலிடமிருந்து பதில் கிடைத்தது. "அதெல்லாம் செக்ரட்டரிக்குக் காலையிலே ஃபோன் செய்து தெரிஞ்சுக்கிட்டேன். 'கோபால் நாடக மன்றம்'னே பெயர் வைக்கலாம். அதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்..." "சரி! மேலே என்ன செய்யணும்?" "இந்த அவுட ஹவுஸிலே உட்கார்ந்து எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா வாத்தியார் நாடகத்தை எழுதி முடிக்க வேண்டியதுதான் பாக்கி. இங்கே எல்லாம் வசதியா இருக்கும். எது வேணும்னாலும் உடனே அந்த நாயர்ப் பையனிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். இந்த அவுட் ஹவுஸ் வடநாட்டு நடிகர் திலகம் 'பிலிப்குமார்' இங்க வந்தப்ப அவர் தங்கறத்துக்காகக் கட்டினதாக்கும். அவருக்கப்புறம் இதுலே தங்கற முதல் ஆள் நம்ம வாத்தியார் தான்..." "வாத்தியாரை இதைவிட அதிகமா அவமானப்படுத்த வேறே எந்த வாக்கியத்துனாலேயும் முடியாதுன்னு பார்க்கிறயா?" "ஏன், இதுலே என்ன அவமானம்?" "இல்லே பிலிப்குமார் ஒரு நடிகன். நானோ ஒரு கர்வக்காரக் கவிஞன்!... அவன் தங்கிய இடத்தை ஒரு க்ஷேத்திரமாக நான் நினைக்க முடியாது. நீ அப்படி நினைக்கலாம். நானோ நான் தங்கிய இடத்தை மற்றவர்கள் க்ஷேத்திரமாக நினைக்க வேண்டும் என்று எண்ணுகிறவன்." "எப்படி வேணுமானால் எண்ணிக்கோ வாத்தியாரே! நாடகத்தைச் சீக்கிரமா எழுதி முடி..." "எழுதிப்போடற ஸ்கிரிப்டை நீட்டா தமிழிலே டைப் பண்ண - ஓர் ஆள் வேணும்டா கோபால்!" "எனக்கு ஒரு ஐடியா தோணுது! மாதவிக்கு நல்லா 'டைப் ரைட்டிங்' தெரியும்னு நேத்தி இண்டர்வ்யூவிலே சொன்னா. அவளையே டைப் பண்ணச் சொல்றேன். டைப் செய்யறப்பவே வசனம் அவளுக்கு மனப்பாடம் ஆயிடும்..." "நல்ல ஐடியா தான்... இப்படிக் 'கதாநாயகியே' கூட இருந்து 'ஹெல்ப்' பண்ணினா எனக்குக்கூட நாடகத்தை வேகமா எழுத வரும்..." "நாளைக்கே புதுத் தமிழ் டைப்ரைட்டிங் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்துடறேன்..." "நீ ஒவ்வொண்ணா ஆர்டர் கொடுத்து வரவழைக்கப் போற மாதிரி நான் கற்பனைக்கு ஆர்டர் கொடுத்து வரவழைக்க முடியாது! அது மெல்ல மெல்லத்தான் வரும்." "நான் ஒண்ணும் அவசரப்படுத்தலே. முடிஞ்சவரை சீக்கிரமா எழுதினா நல்லதுன்னுதான் சொன்னேன்... குடிக்கிறதுக்கு காபியோ, டீயோ, ஓவலோ எது வேணும்னாலும் ஃபோன்லே சொன்னா உடனே இங்கே தேடி வரும்..." "காபியோ, டீயோ, ஓவலோ... தான் குடிக்கறதுக்குத் தேடி வருமா அல்லது குடிக்கிறதுக்கு வேறே 'அயிட்டங்களும்' கேட்டாத் தேடி வருமா?" "கண்டிப்பா! உடனே தேடி வரும்..." "என்னை ஏறக்குறைய உமர்கையாமாகவே ஆக்கறே...? இல்லையா...?" "சரி! சரி! எதையாவது சொல்லிக்கிட்டிரு... நான் போகணும்... பத்து மணிக்கு 'கால்ஷீட்' இருக்கு. வரட்டுமா!" என்று கேட்டுக் கொண்டே எழுந்து புறப்பட்டு விட்டான் கோபால். முத்துக்குமரன் இன்னும் அவுட் ஹவுஸின் வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்தான். புற்களில் பனியால் விளைந்திருந்த புகை நிறம் மாறி வெயிலால் மேலும் பசுமை அதிகமாகியது. ரோஜாப் பூக்களின் சிவப்பைப் பார்த்த போது மாதவியின் உதடுகளை நினைவு கூர்ந்தான் முத்துக்குமரன். உள்ளே ஃபோன் மணியடிப்பது கேட்டது. விரைந்து சென்று எடுத்தான். "நான் தான் மாதவி பேசறேன்." "சொல்லு! என்ன சங்கதி!" "இப்பதான் 'சார்' ஃபோன் பண்ணிச் சொன்னாரு. உடனே உங்களைக் கூப்பிட்டேன்..." "சார்னா யாரு?" "அவர்தான் நடிகர் திலகம் சார். ஃபோன் பண்ணிச் சொன்னாரு. நாளையிலிருந்து 'ஸ்கிரிப்ட்' டைப் பண்ண வந்திடுவேன். நான் வருவேன்னு தெரிஞ்சதும் உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா, சார்?" "வந்தப்புறம் தானே சந்தோஷம்." எதிர்ப்புறம் சிரிப்பொலி கேட்டது. "இந்தா... மாதவி! உன்னையெத்தானே? டைப் பண்றதுக்கு நீதான் வருவேன்னு கோபால் சொன்னப்ப நான் அவன்கிட்டே பதிலுக்கு என்ன சொன்னேன் தெரியுமா?" "என்ன சொன்னீங்க?" "கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே, 'கதாநாயகியே கூட இருந்து ஹெல்ப் பண்ணினா நாடகத்தை வேகமா எழுதிடலாம்னேன்'..." "கேக்கிறப்பவே எனக்கு என்னவோ செய்யுது..." "என்ன செய்யிதுன்னு சொல்ல வரலியாக்கும்...?" "நாளைக்கு நேரே வாரப்ப சொல்றேன்..." - என்று இனிய குரலில் கலக்கும் இன்பக் குறும்பின் விஷமத்தோடு பதில் சொல்லி ஃபோனை வைத்தாள் அவள். முத்துக்குமரனும் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அறை வாயிலில் நாயர்ப் பையன் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் கையில் ஒரு சிறிய கவர் இருந்ததைக் கண்டதும் - "என்னது? கொடுத்திட்டுப் போயேன்" - என்று அவனைக் கூப்பிட்டான் முத்துக்குமரன். பையன் கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். கவர் கனமாக இருந்தது. மேற்புறம் ஒட்டியிருந்ததோடு முத்துக்குமரனின் பெயரும் எழுதியிருந்தது. பையன் கவரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அவசர அவசரமாக முத்துக்குமரன் அதைப் பிரித்த போது உள்ளே புத்தம் புதிய பத்துரூபாய் நோட்டுக்கள் நூறும், மேலாக ஒரு துண்டுக் கடிதமும் இருந்தன. கடிதத்தைப் படிப்பதற்காகப் பிரித்தான் முத்துக்குமரன். கடிதத்தில் இரண்டே இரண்டு வரிகள் தான் எழுதப்பட்டிருந்தன. கீழே கோபாலின் கையெழுத்தும் இருந்தது. இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும், திரும்பத் திரும்ப அதைப் படித்தான் முத்துக்குமரன். அவன் மனத்தில் பலவிதமான உணர்வுகள் அலை மோதின. நண்பன் கோபால் தன்னை நண்பனாக நினைத்து அன்புரிமையோடு பழகுகிறானா அல்லது பட்டினத்துக்குப் பிழைக்க வந்திருக்கும் ஒருவனிடம் அவனுடைய எஜமான் பழகுவது போல் பழகுகிறானா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றான் முத்துக்குமரன். கோபால் அந்தத் தொகையுடன் தன் பெயருக்கு வைத்திருந்த கடிதத்தைப் படித்து அதிலிருந்து கோபாலின் மனத்தை நிறுத்திப் பார்த்துவிட முடியும் என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. கடிதம் என்னவோ மிகமிக அன்போடும் பாசத்தோடும் எழுதப்பட்டிருந்தது போலத் தென்பட்டது. |