18 ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று. இரண்டாம் நாள் நாடகத்தன்றும் பரவாயில்லை. பினாங்கில் ஆன வசூல் ஈப்போவில் ஆகவில்லை என்று கோபாலிடம் குறைபட்டுக் கொண்டார் அப்துல்லா. இரண்டாம் நாள் நாடகத்தன்று மாலையில் நல்ல மழை பிடித்துக் கொண்டதுதான் வசூல் குறைவிற்குக் காரணம் என்று கருதினான் கோபால். ஈப்போவில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில் சுற்றுப்புறப் பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டார்கள் அவர்கள். அடுத்து நாடகம் நடத்த வேண்டிய ஊர் கோலாலும்பூர். இடையில் ஒரு நாள் ஓய்வு கொள்வதற்கு மீதம் இருந்தது. அப்துல்லாவும், உதயரேகாவும், கோபாலும் 'கேமரான் ஹைலண்ட்ஸ்' - என்ற மலை வாசஸ்தலத்திற்குப் போக விரும்பினார்கள். ஆனால் அந்த ஒரு நாள் ஓய்விற்குக் குழுவினர் அனைவரையும் அழைத்துச் செல்ல அவர்கள் தயாராயில்லை. "நீ விரும்பினால் வரலாம்" - என்று மாதவியிடம் மட்டும் தெரிவித்தான் கோபால். "நான் வரவில்லை" - என்று சுருக்கமாகப் பேச்சை முடித்து அவனை அனுப்ப முயன்றாள் மாதவி. ஆனால் கோபால் அதோடு விடாமல் மேலும் பேச்சுக் கொடுத்தான். "உதயரேகாவை அனுப்பிச்சும்... அப்துல்லா உன்னையே நெனைச்சு உருகிப் போயிட்டிருக்காரு..." "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் கேமரான் ஹைலண்ட்ஸுக்கு வரலையின்னு சொன்னப் புறமும் நீங்க மேலே மேலே பேசிக்கிட்டிருந்தா அப்புறம் நான் பதில் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை." "அதுக்கில்லே; அப்துல்லா கோடீஸ்வரன். மனசு வச்சுட்டான்னாக் கோடி கோடியாப் பணத்தைக் கால்லே கொண்டாந்து கொட்டுவான்." "எங்கே கொட்டணுமோ கொட்டட்டுமே?" "நீ வீணாக ரொம்ப மாறிப் போயிட்டே." "ஆமாம் மாறித்தான் போயிட்டேன். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டிருந்தாச் சரிதான். "வாத்தியார் என்னமோ மாயமாகச் சொக்குப் பொடி போட்டு உன்னை மயக்கிப்புட்டான்..." தன் அறையைத் தேடி வந்து தனிமையில் கோபால் நீண்ட நேரம் பேசுவதை அவள் விரும்பவில்லை. அவன் வாயிலிருந்து வீசிய நாற்றத்தில் அப்போது அவன் குடித்துவிட்டு வேறு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. ஆகவே நீண்ட பேச்சைத் தவிர்க்க விரும்பினாள் அவள். அவனோ என்ன சொல்லியும் போகிற வழியாயில்லை. பேசிக் கொண்டே நின்றவன் திடீரென்று ஒரு பயங்கர மிருகத்தின் வெறியோடு தாவி அவளைத் தழுவ முயன்றான். அதை முற்றிலும் எதிர்பாராத மாதவி தன் கைகளின் முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள். நேரே முத்துக்குமரனின் அறைக்குப் போய்க் கதவைத் தட்டினாள் மாதவி. முத்துக்குமரன் எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அவளிருந்த பதற்றமான நிலையைக் கண்டு திகைத்தான். "ஏன் இப்படி உடம்பு நடுங்குது? என்ன நடந்துச்சு?" "உள்ளே வந்து சொல்றேன்" - என்று கூறிவிட்டு அவனோடு அவனறைக்குள் சென்றாள் மாதவி. கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே சென்று அவளை உட்காரச் சொன்னான் முத்துக்குமரன். குடிக்கத் தண்ணீர் கேட்டாள் அவள். அவனே எழுந்து சென்று 'ஜக்'கிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். தண்ணீரைப் பருகிய பின் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னாள் அவள். எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டான் அவன். சில விநாடிகள் அவளுக்கு என்ன மறுமொழி சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் திடீரென்று விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். வெடித்துப் பொங்கி வந்த அழுகை அவன் இதயத்தைப் பிசைந்தது. அவள் அருகே சென்று பட்டுக் கருங்கூந்தலைக் கோதியபடியே ஆறுதலாக அரவணைத்தான் அவன். அவனுடைய அரவணைப்பில் அவள் பாதுகாப்பைக் கண்டது போல் உணர்ந்தாள். நீண்ட நேரத்திற்குப்பின் அவன் அவளிடம் கூறினான்: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|