![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முன்னுரை என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள். சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்! அப்படியே படைத்திருப்பதாகவும் நம்புகிறேன். தமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே?' என்பதுதான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாசகர்களோ 'மிக மிக நல்ல காரியம்' என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல, என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். 'நல்லது செய்தோம்' என்று பெருமைப்பட்டேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின, சான்று கூறின. சைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும். இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்கே காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று. தமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன். குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள். அரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு. நமது தமிழ்நாட்டின் சான்றாண்மைக்கும் இருப்பிடமான பேராசிரியர் மு.வ. அவர்கள் எக்காலத்துக்கும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும். குறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளிபரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.
அன்பன், நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்) குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|