![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
25
பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப் பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி முகில்காட்டும் குழல்காட்டி நன்பாட்டுப் பொருள் நயம்போல் நகைக்கின்றாய் நகைக்கின்றாய் பண்பாட்டுப் பெருமையெலாம் பயன்காட்டி நகைக்கின்றாய்.
- அரவிந்தன் கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலைகளே வாய் திறந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் பூக்கள் பூத்திருக்கும். அந்த அழகிய சூழலில் பசும்புல் நிறைத்துப் படர்ந்த ஒரு மேட்டின் மேல் அரவிந்தனும் பூரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மரத்தில் இரண்டு பச்சைக் கிளிகள் சிறிது தொலைவு இணையாகப் பறப்பதும், கிளைக்குத் திரும்புவதுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. எங்கோ மிக அருகிலிருந்து சற்றைக்கொருமுறை குயில் கூவியது. அந்தக் குயில் ஒலி ஒருமுறை கேட்டு இன்னொரு முறை ஒலிக்குமுன் இருந்த இடைவெளி விநாடிகள் அதன் இனிமையை உணர்வதற்கென்றே கேட்போருக்குக் கொடுத்த அவகாசம் போல் அழகாயிருந்தது. செம்பொன் மேனிச் சிறுகுழந்தைகள் அவசரமாக ஓடி வந்து கள்ளச் சிரிப்போடு முகத்தை நீட்டிவிட்டுப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிற மாதிரி, பெரிய பெரிய ரோஜாச் செடிகள் தத்தம் பூக்கள் காற்றில் முன்புறம் ஆடிக் கவிழ்வதும், விரைவாகப் பின்னுக்கு நகர்வதுமாகக் காட்சியளித்தன. வான விரிப்பும், மலைப்பரப்பும், திசைகளும், எங்கும், எல்லாம் அழகு மயமாயிருந்தன. ஊழியில் அழிந்து அமிழ்ந்து மீண்டும் மேலெழுந்து மலர்ந்த புது யுகத்துப் புவனம்போல் எங்கும் அழகாயிருந்தது. தனிமையின் இனிமையில் தோய்ந்த அழகு அது! எதையோ இரண்டாம் முறையாக நினைத்துக் கொண்டு சிரிக்கிறவன் போல் அரவிந்தன் சிரித்தான். அந்தச் சிரிப்பைப் பூரணி கண்டுகொண்டாள். "எதற்காகச் சிரிக்கிறீர்கள் இப்போது?" என்று கேட்டாள் பூரணி. "ஒன்றுமில்லை, பூரணி! சற்று முன் நீ சொல்லியதை மறுபடியும் நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. 'நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்கிறோம்' என்று நீ என்ன அர்த்தத்தில் கூறினாய்?" "ஏன், நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள், அரவிந்தன்?" "எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது பூரணி! உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக்கூடாது" என்று அவன் சிரித்தபடியே இந்தச் சொற்களைக் கூற முயன்றாலும், கூறும்போது ஏதோ ஒரு விதமான உணர்வின் அழுத்தம் அவனையறியாமலே, அவன் உணர்வு இல்லாமலே அந்த சொற்களில் கலந்து விட்டது. எப்படிக் கலந்தது, ஏன் கலந்தது, எதற்காகக் கலந்தது என்பதை அவனே விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தான். பூரணி அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இமையாமல் பார்த்தாள். மெல்லச் சிரித்துக் கொண்டே பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான். "ஏன் இப்படித் தோன்றக் கூடாதோ? உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நான் தான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடுவேன்" என்று கூறிக் கொண்டே அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தைச் செல்லமாக இழுத்துப் பறித்தாள் பூரணி. அதை அவள் பிரித்துப் படித்து விடாமல் திரும்பப் பறிக்க முயன்றான் அரவிந்தன். முடியவில்லை. மான் துள்ளி எழுந்து பாய்வது போல் எழுந்து ஓடி விட்டாள் பூரணி. சிறிது நேரத்துக்கு முன் அவள் தன்னை நோக்கிச் சிரித்த சிரிப்பின் அழகை ஒரு கவிதையாக உருவாக்கி அந்த நோட்டுப் புத்தகத்தில் அவசரமாய் எழுதியிருந்தான் அரவிந்தன். அதை அவளே படித்து விடலாகாதே என்பதுதான் அவன் கூச்சத்துக்குக் காரணம். ஆனால் அவள் அதைப் பிரித்துப் படித்தே விட்டாள். 'பொன் காட்டும் நிறம் காட்டிப் பூக்காட்டும் வழிகாட்டி நகைக்கின்றாய்' என்ற அந்தக் கவிதை அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. கற்கண்டை வாயிலிட்டுக் கொண்டு சுவைக்கிற மாதிரி வாய் இனிக்க, நெஞ்சு இனிக்க அவள் அந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். குறும்பு நகையோடு அவனை நோக்கிக் கேட்டாள். "உங்களோடு பழகுவதே பெரிய ஆபத்தான காரியமாக இருக்கும் போலிருக்கிறதே! பேசினால், சிரித்தால், நின்றால் நடந்தால் எல்லாவற்றையும் கவிதையாக எழுதி விடுகிறீர்களே?" "என்ன செய்வது? நீயே ஒரு நடமாடும் கவிதையாக இருக்கிறாயே பூரணி!" என்றான் அவன். "அது சரி, 'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன்காட்டி நகைக்கின்றாய்' என்று எழுதியிருக்கிறீர்களே, அதற்கு என்ன பொருள்?" - தலையைச் சற்றே சாய்த்து விழிகளை அகலத் திறந்து நோக்கி மெல்லிய நாணம் திகழ அவனைப் பார்த்தும் பாராமலும் கேட்டாள் பூரணி. அவனும் புன்னகையோடு மறுமொழி கூறினான். "உன்னுடைய சிரிப்பிலும் பார்வையிலும் மிகப் பெரிதாக, மிகத் தூய்மையாக ஏதோ ஓர் ஆற்றல் தென்படுகிறது. அந்த ஆற்றலின் உன்னதத் தன்மையை எப்படிச் சொல்லால் வெளியிடுவதென்பது எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் அப்படிக் கூற முயன்றிருக்கிறேன்." அருகில் நெருங்கிவந்து நோட்டுப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிக் கொள்ளாமல் தனக்கு மிக அருகில் நீண்டிருக்கும் அவளுடைய வலது கையைச் சிரித்துக் கொண்டே பார்த்தான் அரவிந்தன். பவழ மல்லிகைப் பூவின் காம்பு போல் மருதாணிச் சிவப்பேறிய உள்ளங்கையையும் நகங்களையும், நீண்ட நளின மெல்லிய விரல்களையும் புதுமையாய் அப்போதுதான் பார்க்கிறவனைப் போல் பார்த்தான் அவன். "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" "பெண்ணின் விரல்களில் நளினம் இருக்கிறது. அதை மின்னலில் செய்திருக்கிறார்கள்" - என்று கூறிக் கொண்டே அவளிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான் அரவிந்தன். "ஆண்களின் மனத்தில் கொடுமை இருக்கிறது. அதைக் கொடுமையால் செய்திருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் என்னைக் கேட்காமல், என் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், 'என்னைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்கச் செய்வதாக' நீங்கள் மீனாட்சிசுந்தரத்தினிடம் வாக்குக் கொடுப்பீர்களா?" "நேற்று வரை அவருக்கு அப்படி வாக்களித்ததை எண்ணி நானே நொந்து கொண்டிருந்தேன் பூரணி! ஆனால் நேற்று மாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் மனத்தையே வேறு விதமாக நினைக்கச் செய்துவிட்டது. பிடிவாதமாக நீ தேர்தலில் நிற்கவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்." "நேற்று மாலையில் என்ன நடந்தது?" என்று கேட்டாள் பூரணி. பர்மாக்காரரோடு கிராமத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய மாளிகையில் தான் அடைந்த அனுபவங்கள் வரை எல்லாவற்றையும் பூரணிக்குச் சொன்னான் அரவிந்தன். வியப்போடு எல்லாவற்றையும் கேட்டாள் பூரணி. "மனிதர்கள் ஏழைமையின் காரணமாகத்தான் தீயவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்களே! இந்தப் பர்மாக்காரர் ஏன் இப்படிச் சூழ்ச்சியும், கெடுதலுமாக வாழ்கிறார்? இவருக்கு என்ன ஏழைமை? இன்று இந்தத் தேசத்தைச் சூழ்ந்து நிற்கும் அத்தனை பிரச்னைகளையும் வசதியுள்ளவர்கள்தாம் உண்டாக்கி வளர்த்திருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது பூரணி! ஏழைகள் அப்பாவிகள், வயிற்றுக்குப் போராடுவதற்கே அவர்களுக்கு நேரமில்லை. சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் நினைக்க அவர்களுக்கு நேரம் ஏது?" "கீழான மனமும், கீழான எண்ணங்களும் கொண்டவர்கள் எத்தனை உயர்ந்த மேலான சூழ்நிலைகளிலிருந்தாலும் பழைய கீழ்மை வாசனைதான் இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சரின் அற்புதமான உபகதை ஒன்று உண்டு. அதை நீங்கள் படித்திருக்கிறீர்களோ, இல்லையோ சொல்லட்டுமா அரவிந்தன்?" "சொல்லேன்! கேட்கிறேன்." "ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன். "அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள் தங்குவதற்காக ஒழித்துக் கொடுத்தான். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவன் தங்களுக்காக ஒழித்துக் கொடுத்த அறைக்குள் சென்றனர். அந்த அறை 'கமகம'வென்று நறுமணம் வீசியதைக் கண்டு நாலுபக்கமும் பார்த்தார்கள். ஒரு மூலையில் சில பூக்கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை வாடிக்கையாகக் கொடுக்கும் சிலருக்கு மறுநாள் காலையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டவை. ஆனால் மீன் வாசனையோடு பழகியவர்களுக்கு நறுமணம் வீசும் வாசனை எப்படிப் பிடிக்கும்? அந்த வாசனை பிடிக்காததனால் அவர்களால் அதைப் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. வாசனைகைலும் பரிமள சுகந்தங்களிலுமே பழகியவர்களுக்கு, நாற்றத்தின் நடுவே எவ்வாறு தூக்கம் வராதோ, அவ்வாறே, நாற்றத்திலேயே பழகிவிட்ட அவர்களுக்கு வாசனையின் நடுவே தூக்கம் வரவில்லை. அவர்களில் ஒரு புத்திசாலிப் பெண் மற்றவர்களைப் பார்த்து ஒரு யுக்தி சொன்னாள். "நமக்குத் தூக்கமோ வருவதாக இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்தில் வைக்கவும் முடியாது. நம்மிடத்திலுள்ள மீன்கூடைகளைக் கொஞ்சம் நனைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டால் இந்தப் பூவாசனையும் மீறிக் கொண்டு நமக்குப் பழக்கமான நாற்றம் உண்டாகும். உடனே சுகமாய்த் தூங்கிவிடலாம்" என்றாள். யாவரும் அவளுடைய யோசனையை ஏற்று அப்படியே செய்து தமக்குப் பழக்கமான நாற்றத்தை உண்டாக்கிக் கொண்டு தூங்கினார்களாம். 'பழக்கமான வாசனை' என்று சொல்லுகிறோமே, அது இத்தகையதுதான் அரவிந்தன்! "உங்களைத் துன்புறுத்த நினைத்த பர்மாக்காரரையும் புதுமண்டபத்து மனிதரையும் இந்த உபகதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்." 'எத்தனை அற்புதமான கருத்துக்களை மனத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் கூடுகிறார்போல் இவள் சொற்பொழிவுகளுக்குக் கூட்டம் கூடுவதின் இரகசியம் இந்தக் கருத்தழகு மிக்க பேச்சுத்தானே' என்று உள்ளத்துக்குள் வியந்து கொண்டான் அரவிந்தன். "அரவிந்தன்! நானாகவே என்னைப் பற்றி உங்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்கிறேனே என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி ஒரு கம்பீரமான கனவுத் தோற்றம் உண்டாகும். பசியும், நோய்களும், வறுமையும், வாட்டமும் கொண்டு தவிக்கும் இலட்சக்கணக்கான ஆண், பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே நான் கையில் ஒரு தீபத்தை ஏந்திக் கொண்டு செல்கிறேன். என் கைத் தீபத்தின் ஒளி பரவி, பசியும் நோயும் அழிகின்றன. வறுமையும், வாட்டமும் தொலைகின்றன. இலட்சக்கணக்கான முகங்களில் என்னையும் என் தீபத்தையும் கண்டவுடன் மலர்ச்சி பொங்குகிறது. நான் மேலே மேலே முடிவற்று நிலையற்று அந்த ஒளி விளக்கோடு நடந்து கொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க அந்த விளக்கின் சுடர் பெரிதாகிறது. சுடர் பெரிதாகப் பெரிதாகச் சுற்றிலும் பரந்து தென்படும் மக்கள் வெள்ளம் என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களுக்கு அனுதாபப்படவும், இரக்கம் கொண்டு உழைக்கவுமே நான் பிறந்திருப்பதாக என்னுள் மிக ஆழத்திலிருந்து ஒரு புனிதக் குரல் ஒலிக்கிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் போல நினைவு மலராப் பருவத்திலேயே இரக்கத்துக்குரிய ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்வதற்கென்று நான் பிறந்திருக்கிறேன் என்று ஒரு தன் விழிப்பு அடிக்கடி என்னுள் உண்டாகிறது. இதயத்தின் அந்தரங்கமான பகுதியிலிருந்து ஏதோ ஒரு பேருணர்வு கண் திறந்து பார்த்துத் திடீர் திடீர் என்று என்னைப் பரீட்சை செய்கிறது. அப்படி அந்தப் பேருணர்வு என்னைப் பரீட்சை செய்யும்போது தற்சமயம் நான் செய்து கொண்டிருப்பனவெல்லாம் மிகச் சிறிய காரியங்கள் போலவும், பெரிய காரியங்களை இனிமேல் தான் செய்ய வேண்டும் போலவும் ஒரு துடிப்பை உணர்கிறேன். அதை உணரும் போது எனக்கு அழுகை வருகிறது." பூரணி ஆவேசமாக இதைச் சொல்லிக் கொண்டு வரும்போது அவள் முகத்தில் தெய்வீகமானதொரு பேரொளி பூத்துப் பரவுவதையும் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் உருள்வதையும் அரவிந்தன் கண்டான். அப்போது அவளையும் அவள் முகத்தையும் பார்த்தால் இனம்புரியாப் பரவசம் உண்டாவது போலிருந்தது அவனுக்கு. 'இத்தகைய விநோத உணர்வுதான் 'கௌதம புத்தர்' என்ற ஞானியை உண்டாக்கிற்று. இந்தத் தன்விழிப்புப் பரிட்சையில்தான் புத்தர் பிறந்தார். இந்த மாதிரிக் கண்ணீரோடு தான் அரண்மனையின் சுகபோகங்களிலிருந்து கீழ் இறங்கி நடந்தார்' என்றெண்ணியபடி பயபக்தியோடு அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். அப்போதே தன்னைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக அழியா அழகு ஒன்று அவள் உள்ளத்தில் வளர்ந்து கொண்டிருப்பது அரவிந்தனுக்கு புரிந்தது. 'பக்கத்தில் அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசுகிறபோது அவளுடைய புற அழகும் சாதாரணமான பெண்தன்மையும் தான் தோன்றின. ஆனால் அந்த மனத்தின் அழகைக் காண நேர்கிற போதெல்லாம், தான் வெகு தொலைவுக்கு விலகித் தாழ்ந்து இறங்கிப் போய்விட்டது போல் தோன்றுகிறது. ஒரே காலத்தில் இரண்டுவிதமான பூரணிகளோடு பழகுகிறோமோ?' என்று அரவிந்தன் மருண்டான். 'உணர்ச்சிகளும், ஆசைகளும், அன்பும், பெண்மையும் நிறைந்த பூரணி என்னும் அழகு மங்கை வேறு, கையில் தீபத்தை ஏந்திக் கொண்டு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே பாதை வகுத்துக் கொண்டு நடந்து செல்வதாகக் கனவு காணும் பூரணி வேறு. இதில் எந்தப் பூரணி அவனைக் காதலிக்கிறாள்? எந்தப் பூரணியை அவன் காதலிக்கிறான்? இந்த இரண்டு பூரணிகளில் அவனுடைய மானிடக் கைகளினால் எட்டிப் பறிக்க முடிந்த சாமானிய உயரத்தில் பூத்திருக்கும் பூரணி யார்? அல்லது பிஞ்சு அரும்புகிற காலத்தில் பூவிதழ்கள் கழன்று கீழே விழுந்து விடுவதைப் போல் இந்த இரண்டு பேரில் முடிவாகக் கனிகின்ற பூரணி ஒருத்தியாகத்தான் இருக்க முடியுமா?' நீண்ட நேர மௌனத்துக்குப் பின் அரவிந்தன் அவளிடம் மெல்லக் கேட்டான். "அரசியலில் பங்கு கொள்ள நேரிடுவதால் உன்னுடைய இந்த இலட்சியக் கனவு கலைந்து பாழாகிவிடும் என்று நீ பயப்படுகிறாய்?" "பயப்படவில்லை! ஆனால் தயங்குகிறேன். நீங்களும் அவரும் சேர்ந்து வற்புறுத்தினால் அந்தத் தயக்கத்தைக் கூட நான் உதறிவிடும்படி நேரலாம்." "நீ அப்படித்தான் செய்ய நேரிடும் போலிருக்கிறது பூரணி!" "பார்க்கலாம்!" இதன்பின் அவர்கள் வேறு செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். முருகானந்தம்-வசந்தா காதலைப் பற்றிக் குறிப்பாகச் சொன்னாள் பூரணி. "உனக்கு முன்னாலேயே அந்த இரகசியம் எனக்குத் தெரியும் பூரணி. நண்பனின் காதல் வெற்றி பெறுவதற்கான சம்மதத்தையும் ஒருவாறு அந்த அம்மாளிடமிருந்து பெற்றுவிட்டேன்" என்று தொடங்கி முதல்நாள் மதுரையில் மங்களேசுவரி அம்மாளுக்கும் தனக்கும் நடந்த பேச்சுக்களைச் சொன்னான். "அந்த அம்மாளின் முற்போக்கு மனப்பான்மையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஏற்றத்தாழ்வை எண்ணித்தான் நானும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். அது இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முடிந்தால் இன்றைக்கு இரவே அந்த அம்மாளிடம் பேசி முடிவு செய்து விடலாம். நாம் இருவரும் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்" என்றாள் பூரணி. "முடிவெல்லாம் ஏற்கெனவே செய்த மாதிரிதான். 'மாப்பிள்ளை முருகானந்தம்தான்' என்கிற ஒரு இரகசியத்தை மட்டும் இன்னும் நான் வெளியிடவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அரவிந்தன். மாலையில் மெல்ல இருள் சூழ்ந்து சிலேட்டுப் பலகை நிறத்துக்கு மங்கத் தொடங்கியது. வெண்மை நுரைத்துப் பொங்கினாற் போல் மஞ்சு சூழ்ந்தது. அரவிந்தனும், பூரணியும் குறிஞ்சியாண்டவர் மலைப்பகுதியிலிருந்து எழுந்து நடக்கலாயினர். மலைப் பகுதிகளில் எல்லாப் பசுமையும் கலந்து மணக்கும் ஒருவித மணமும் குளிரும் கலந்த அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இரண்டுபேரும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். அரவிந்தனோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்தபோது பூரணி தன் உள்ளத்தில் சில ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தாள். இவரைக் காண வேண்டும் என்று நேற்றும் அதற்கு முன் தினங்களிலும் எவ்வளவு ஏங்கிக் கொண்டிருந்தேன். எவ்வளவு தாகமும் தாபமும் கொண்டிருந்தேன். பார்த்த பின்பும் அவற்றை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பும், அறிவும், மனம் கலந்து அன்பு செலுத்துவதற்குப் பெரிய தடைகளா! இவரிடம் என் அன்பையெல்லாம் கொட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏதேதோ அறிவுரை கூறுவது போல் பேசிவிட்டேன். எனக்கு எத்தனையோ அசட்டு இலட்சியக் கனவுகள் சிறு வயதிலிருந்து உண்டாகின்றன. அதை இவரிடம் சொல்லி இவருடைய மனம் தாழ்வு உணர்ச்சி கொள்ளும்படி செய்து விட்டேனே? இவர் என்னைப் பற்றி இன்று என்னென்ன நினைத்திருப்பாரோ? என்னைப் பற்றி அழகு அழகாகக் கவிதை எழுதினாரே? அதைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் சொல்லக்கூடத் தோன்றாமல் போய்விட்டதே. சே! சே! அன்பு வெள்ளமாக நெகிழ்ந்துவிடத் தெரிய வேண்டாமோ இந்த உள்ளத்துக்கு? அன்று தலை நிறையப் பூவும், கைகள் நிறைய வளையல்களும், மனம் நிறைய இவரைப் பற்றிய தாகமுமாக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் பித்துப் பிடித்தவள் போல் வீற்றிருந்தேனே! அந்த ஏக்கம், அந்த நெகிழ்ச்சி இன்று இவரருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த போது, உரையாடினபோது எங்கே போனது? பக்திக்கும் காதலுக்கும் அகங்காரம் இருக்கலாகாது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது எத்தனை உண்மை! என்னுடைய அகங்காரத்தைக் குத்திக் காட்டும் நோக்கத்தோடுதான் 'உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே தங்கிவிடுவேன்' என்றாரா? அல்லது வேடிக்கையாகச் சொன்னாரா? பரமஹம்சருடைய கதையையும், என்னுடைய இலட்சியக் கனவுகளையும் உண்மையாகவே மனம் உருகித்தான் இன்று இவரிடம் கூறினேன். இவர் என்னிடம் கலகலப்பாகப் பேச முடியாமல் போனதற்கு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித்தனமும் ஒரு காரணமோ? குறும்புப் பேச்சும் சிரிப்புமாக மனம் விட்டுப் பழகும் இவர், இன்று நான் இவற்றையெல்லாம் கூறியபின் எதையோ குறைத்துக் கொண்டு ஏதோ ஓர் அளவோடு பழகுவது போல் அல்லவா தெரிகிறது? அவள் மனத்தின் சிந்தனைத் தவிப்புத் தாங்கமுடியாத எல்லையைத் தொட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருவரும் வழிப்போக்கர் போல் நடந்து செல்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அந்த அவசியமற்ற மௌனத்தை அவளே துணிந்து கலைத்தாள். "இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் வருகிறீர்கள்? என் மேல் எதுவும் வருத்தமோ?" இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். அவன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் அவள் உள்ளம் தவித்தது. "நன்றாயிருக்கிறதே கதை! நீ ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது. அதனால்தான் பேசவில்லையே தவிரப் பேசாமலே நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நான் ஒன்றும் தீர்மானம் செய்து கொள்ளவில்லையே?" 'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன் காட்டி நகைக்கின்றாய்' என்று அவளுடைய சிரிப்புக்கு, இலக்கணம் வகுத்துச் சொன்னாற்போல் அரவிந்தன் பாடினானே, மெய்ப்பிப்பது போல் நகைத்தாள் பூரணி. "அனுப்பியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்தாயா பூரணி?" "எல்லாவற்றையும் மனந்தோய்ந்து அனுபவித்துப் படித்தேன். இந்த மலைப்பிரதேசத்துச் சூழ்நிலையே படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிகமாக சுறுசுறுப்பை அளிக்கிறது." வானம் நன்றாக இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூற்றல் விழுந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே மீனாட்சிசுந்தரம் பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய கார் முன்புறம் நின்று கொண்டிருந்ததிலிருந்தே அதைத் தெரிந்து கொண்டார்கள். மங்களேசுவரி அம்மாள் முதலியவர்களும் ஏரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அன்று இரவும், மறுநாளும் அவர்கள் சேர்ந்து பேசி முடிவாகச் சில தீர்மானங்களைச் செய்து கொண்டார்கள். நீண்ட நேர விவாதத்துக்கும் மறுப்புகளுக்கும் பிறகு பூரணி தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் அளிக்க வேண்டியதாயிற்று. அரவிந்தனே தன்னை வற்புறுத்தி வேண்டிக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்ட போது அவளால் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவள் நிற்க மறுத்துவிட்டால் பர்மாக்காரருடைய கெடுபிடிகளுக்கும், மிரட்டலுக்கும் பயந்துவிட்டதாக ஆகும் என்பதையும் அரவிந்தன் முன்பே குறிப்பாக அவளுக்குச் சொல்லியிருந்தான். எப்படியோ தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை அவளை அந்தப் பொறியில் மாட்டி வைத்துவிட்டது. கூச்சத்தோடு நழுவ முயன்ற முருகானந்தத்தை இழுத்து வந்து, "இவன் தான் அம்மா உங்க மாப்பிள்ளை! சந்தேகமிருந்தால் உங்கள் பெண்ணையே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்" என்று அரவிந்தன் கூறியபோது வசந்தா சிரிப்பும் நாணமும் நிறைந்த முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு உள்ளே எழுந்து ஓடிவிட்டாள். திடீரென்று ஆரம்பமாகிய அந்த நாடகத்தைக் கண்டு திணறி வெட்கப்பட்டுப் போனான் முருகானந்தம். வசந்தா அறைக்குள்ளிருந்தே ஒட்டுக் கேட்டுப் பூரித்துக் கொண்டிருந்தாள். "திருப்பரங்குன்றம் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விடலாம்" என்று மீனாட்சிசுந்தரம் கூறியதை மங்களேசுவரி அம்மாள் ஒப்புக் கொள்ளவில்லை. "மூத்த பெண்ணின் கல்யாணம் வீட்டிலேயே நடக்க வேண்டும். ஏனோ தானோ என்று கோயிலில் நடத்தி முடிக்க மாட்டேன். இலங்கையிலிருந்து மதுரை வந்த பின் வீட்டில் ஒரு சுபகாரியமும் நடக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை என் வீட்டில்தான் செய்யப் போகிறேன்." "என்னடா முருகானந்தம்! உனக்குச் சம்மதந்தானே?" என்றான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தின் முகம் அற்புதமாய்ச் சிரித்தது. மறுநாள் இலங்கை, மலேயா, கல்கத்தா முதலிய இடங்களிலிருந்து வந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவுகளுக்குப் போகச் சம்மதம் தெரிவித்து மங்கையர் கழகத்துக்கு மறுமொழி எழுதிவிட்டாள் பூரணி. எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளிநாட்டுப் பயண அனுமதியை 'இண்டர்நேஷனல் பாஸ்போர்ட்டாக' வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன். பாஸ்போர்ட்டுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக அன்று மாலை பூரணியை அங்குள்ள ஒரு புகைப்பட நிலையத்துக்கு அழைத்துப் போயிருந்தான் அரவிந்தன். அந்தப் புகைப்பட நிலைய உரிமையாளர் அவர்களைப் புதுமணம் புரிந்து கொண்ட இளம் ஜோடியாக எண்ணியதால் ஏற்பட்ட நளினமான குழப்பங்களில் சிறிது நேரம் இருவருமே நாணிக் கூசி நிற்கும் நிலையாகி விட்டது. பூரணியைப் பாஸ்போர்ட் அளவு படம் எடுத்தபின், அவர்கள் இருவரையும், அருகில் ஒன்றாக நிறுத்தி ஒரு படமும் எடுத்துக் கொண்டார் உரிமையாளர். இரண்டு பேருமே பார்க்க இலட்சணமாக இருந்ததினால் காட்சி அறையில் (ஷோரூமில்) அந்தப் படத்தை வைக்கலாம் என்பது அவர் விருப்பமாயிருந்தது. புகைப்பட நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த இந்த இன்பக் குழப்பங்களால் நெஞ்செல்லாம் மெல்லிய நினைவுகளும் கனவுகளும் குமிழியிட அரவிந்தனும் பூரணியும் வீடு திரும்பியிருந்தார்கள். அப்போது மங்களேசுவரி அம்மாளும் மீனாட்சிசுந்தரமும் வீட்டு வாயிலிலேயே அவர்களை எதிர்கொண்டனர். "உன்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும். கொஞ்சம் இப்படி என்னோடு வருகிறாயா?" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணியை தனித்து அழைத்துப் போனாள். அதே வார்த்தையை அரவிந்தனிடம் கூறி அவனை வேறொருபுறம் தனியாக அழைத்துக் கொண்டு போனார் மீனாட்சிசுந்தரம். இருவர் நெஞ்சிலும் பெரிதாய்ப் புரிந்தும் புரியாததுமாய்க் கேள்விக்குறிகள் பூத்துப் பொலிந்து நின்றன. குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|