![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
21
நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும் கனற்புகைய வேகின்றான்...
- புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்; தாயாதிச் சண்டைகள் நிறைந்தவர்கள், சொத்துச் சேர்ப்பதும் பணத்துக்கு மரியாதை செலுத்துவதும் தவிர வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்று நினைப்பவர்கள். இந்த அத்தியாயத்தைத் தொடங்குமுன் அரவிந்தன் இளமைப்பருவம் பற்றியும், பெற்றோர் பற்றியும், பிறந்த ஊர் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவனுக்கு நோயாளியான சிற்றப்பா ஒருவர் ஊரில் இருந்தார். தனக்கு அவர் ஒரு நன்மையும் செய்ததில்லை என்பதை அரவிந்தன் உணர்ந்திருந்தான். தந்தைக்கும் தன் குடும்பத்துக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிற்றப்பா செய்திருக்கிற கொடுமைகளை, துரோகங்களை, ஏமாற்றுக்களை அரவிந்தன் பலமுறை நினைத்துப் பார்த்துக் கொதிப்பு அடைந்திருக்கிறான். அந்தக் கொதிப்பின் காரணமாகவே மதுரைக்கு வந்து படித்துப் பெரியவனாகி, தனக்கென்று ஒரு வாழ்வை வகுத்துக் கொண்டு முன்னேறினான் அவன். அவனுடைய தந்தை தாராளக் கையாக இருந்தவர், தான தருமங்களுக்கு வாரி இறைத்தவர். சிற்றப்பா கருமி, அநாவசியமாகக் கால் காசு செலவழிக்க மாட்டார். அவசியத்துக்காகக் கூட சிந்தித்தே செலவழிப்பார். வட்டியும் முதலுமாக ஏறிப் போய் கடன் வாங்கினவன் திணறும் போது அவனுடைய நிலங்களையோ, வீடு, நகை போன்ற பொருள்களையோ கடனுக்கு ஈடாகப் பறிமுதல் செய்து விடுவார். முக்கால் வட்டியும், முழு வட்டியும் கூசாமல் வாங்குவார். அப்பா நாளுக்கு நாள் கைநொடித்து ஏழையாகப் போய்க் கொண்டிருந்த போது, சிற்றப்பா பணக்காரராகி மாடி வீடு கட்டினதன் இரகசியம் இதுதான் என்பதை வயது வந்த பின் அரவிந்தன் தெரிந்து கொண்டிருந்தான். கடைசிக் காலத்தில் அரவிந்தனின் தந்தைக்கு எமனாக நின்றவரும் அவருடைய தம்பிதான். 'உடன் பிறந்த தம்பிதானே? எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வது போல் நம்மிடம் நடந்து கொள்ளமாட்டான். மூத்தவன் என்றும், அண்ணன் என்றும் தம்மை மதிக்கக் கடமைப்பட்டவன் அல்லவா?' என்று எண்ணிக் கொண்டு தம்பியிடம் விவசாயச் செலவுக்காகச் சில ஆயிரம் கடன் வாங்கினார் அரவிந்தனின் தந்தை. அந்த ஆண்டு விளைச்சல் சுகப்படாததனால் அவரால் தம்பிக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும் நீ எனக்கு உடன்பிறப்புத்தானே அப்பா! கடவுள் புண்ணியத்தில் செட்டாகச் சேர்த்து வைத்துக் கொண்டு நன்றாகயிருக்கிறாய். என்னைப் போல் வாரியிறைத்துவிட்டு நிற்கவில்லை நீ. அடுத்த மகசூலில் உன் கடனை அடைத்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள். ஏதோ என் போதாத காலம் விளைச்சல் சரியில்லை" என்று தம்பியை வீடு தேடிப் போய்க் கெஞ்சினார் அரவிந்தனின் தந்தை. ஆனால் அவருடைய தம்பி அதற்கு இணங்கவில்லை. மனைவி சொல் கேட்டுக் கொண்டு அண்ணனிடம் மரியாதையின்றிப் பேசினார். "சொன்னபடி வாங்கின கடனைக் கீழே வைத்து விட்டு மறுவேலை பார். பணத்துக்கும் உடன்பிறப்புக்கும் சம்பந்தமில்லை." "ஏண்டா! நீ பணத்தோடுதான் பிறந்தாயா? என்னோடு பிறக்கவில்லையா? பெண்பிள்ளை பேச்சைக் கேட்டுக் கொண்டு மூத்தவன் என்கிற மதிப்புகூட இல்லாமல் இப்படி என்னிடம் கண்டிப்புப் பண்ணலாமா?" "இதெல்லாம் எதற்கு அண்ணா வீண் பேச்சு? பணம் என்றால் கண்டிப்பில்லாமல் முடியாது." அவர் பெரிய மானி. வேறு வழியில்லாமல் போகவே தம்முடைய சொத்து என்று மீதமிருந்த கொஞ்ச நிலத்தையும் விலைக்கு விற்றுத் தம்பிக்குக் கடன் கொடுத்து நல்லவரானார் அரவிந்தனின் தந்தை. அவருக்கும் அவர் மனைவிக்கும் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் காலந்தள்ளிப் பிறந்த கடைசிக் கொழுந்துதான் அரவிந்தன். செல்லப் பிள்ளையாக வளர்த்தார்கள் அந்தக் குழந்தையை. சிற்றப்பாவின் கடனால் மனம் ஒடிந்து தந்தை நிலத்தை விற்கிறபோது, அரவிந்தனுக்குப் பத்து வயது. ஓரளவு நினைவு தெரிந்த காலம்தான் அது. உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்போ நாலாவது வகுப்போ படித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரே ஆஸ்தியாக மீதியிருந்த நிலத்தை விற்று விட்டபின் அதே ஏக்கத்தில் படுக்கையானார் அரவிந்தனின் தந்தை. அவர் காலமான தினம் இன்னும் அவன் மனத்தில் துக்கப் புண்ணின் வடுவாகப் பதிந்திருக்கிறது. ஒரு விவரமும் சொல்லாமலேயே அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துப் போய் மொட்டை அடித்துவிட்டுப் பிஞ்சுக்கை நோகக் கொள்ளிச் சட்டிக் காவடியைச் சுமக்கச் செய்து அப்பாவின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு அழைத்துப் போன நிகழ்ச்சி இன்னும் மறக்க இயலாது. பொருமிப் பொருமி அழுதுகொண்டே நடந்து போன அன்றைய நிகழ்ச்சியை நினைத்தால் இப்போதும் கண்கலங்கிவிடும். அரவிந்தனுக்கு அவனுடைய பிஞ்சுப் பருவத்து வாழ்க்கையில் அடுத்த பேரிடி அம்மாவின் மரணம். பன்னிரண்டு வயதுச் சிறுவனாகி ஆரம்பப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்த தறுவாயில் தாயையும் இழந்து அநாதையானான் அவன். சமுத்திரத்தின் வேகமும் ஆழமும் தெரியாமல் கரையோரமாகக் காகிதத்தில் கப்பல் செய்துவிடலாமா என்று பேதைத்தனமாக எண்ணும் குழந்தை போல் வாழ்க்கைக்கு முன்னால் அநாதையாக நின்றான் அரவிந்தன். எப்படியாவது வாழவேண்டும் என்ற ஆசையும், எப்படி வாழ்வது என்ற மலைப்புமாகத் தவித்தது உலகம் தெரியாத இந்தப் பூ உள்ளம். ஊர்க்காரர்களுடைய பழிக்கு அஞ்சிச் சிற்றப்பா சிறிது காலம் அவனை வீட்டில் வைத்துக் கொண்டார். சித்தி கொடுமையே உருவானவள். "தண்டச்சோறு கொட்டிக் கொள்கிறாயே கடன்காரா! தின்கிற சோற்றுக்கு வேலை வேண்டாமோ! இந்த எருமை மாடுகளையெல்லாம் நன்றாக மேய்த்துக் கொண்டு வா" என்று பள்ளிக்கூடம் போகவிடாமல் தடுத்து மாடு மேய்க்கிற வேலையை அவன் தலையில் கட்டினாள், சித்தி. மாடுகளை மேயவிட்டு வயல்வரப்புகளிலே அமர்ந்து பச்சைப் பிள்ளையாகிய அவன் மனத்தவிப்பு அடங்கக் குமுறிக் குமுறி அழுத நாட்கள் கணக்கிலடங்கா. "அப்பா! அம்மா! என்னை ஏன் இப்படி அநாதைப் பயலாக இந்த உலகத்தில் விட்டுச் சென்றீர்கள்? சித்தியிடம் அடி வாங்கவும், சிற்றப்பாவிடம் திட்டு வாங்கவுமா விட்டுப் போனீர்கள்?" என்று தனக்குத்தானே புழுங்கி அவன் நொந்த நாட்கள்தாம் எத்தனை! சிற்றப்பாவுக்கும் சித்திக்கும் குழந்தையில்லை! சித்தி தன் உறவுவழிப் பெண் ஒருத்தியை வீட்டோடு அழைத்துக் கொண்டு வைத்து வளர்த்து வந்தாள். அரவிந்தனை அவர்கள் பிள்ளைக் குழந்தையாக எண்ணி வளர்க்கவில்லை. மாட்டுக் கொட்டத்திலே மாடுகள் வளரவில்லையா அப்படி அவனையும் விட்டு விட்டார்கள்! அவன் மாட்டுக் கொட்டத்திலேயே சாப்பிட்டான். அங்கேயே ஒரு மூலையில் உறங்கினான். விடிந்ததும் மாடு பற்றிக் கொண்டு போனான். ஒருநாள் மாடுகளை மேயவிட்டு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருந்து விட்டதால், பக்கத்து நெல்வயலில் ஒரு பக்கமாக மாடுகள் வாய் வைத்து விட்டன. வயல்காரன் சிற்றப்பாவிடம் போய்ச் சொல்லிவிட்டான். சாயங்காலம் அவன் மேய்ச்சல் முடிந்து திரும்பினதும் மூக்கு முகம் பாராமல் அடித்து விட்டார் சிற்றப்பா. சித்தி வாயில் வராத வார்த்தையெல்லாம் சொல்லி வைத்தாள். அன்று தான் அவனுடைய கண்களும், மனமும் திறந்தன. இனி, இந்த வீட்டில் தான் இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது. எங்காவது ஓடிப்போய் விட வேண்டும் என்ற துணிவு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று. இரவு எல்லோரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்? வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டிருந்தான் என்றே கூறலாம். அதன்பின் அரவிந்தன் இன்றைக்கு இருக்கிற அரவிந்தனாக மாறி வளர்ந்தது துன்பங்களும், வேதனைகளும் நிறைந்த கதை. உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் அவன் வளர்ந்தான். படித்தான். காலையில் பத்து மணி வரையும், மாலையில் ஐந்து மணிக்கு மேலும் ஓட்டல்களில் டேபிள் கிளீனர் வேலையோ, சப்ளையர் வேலையோ எது கிடைத்தாலும் பார்த்தான். மதுரை இரயில் நிலையத்துக்கு அருகில் அந்த நாளில் 'பீமவிலாசம்' என்ற பெரிய ஓட்டல் இருந்தது. அதன் முதலாளி தங்கமான மனிதர். அவர் தம் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் அவனை அனுமதித்தார். ஓட்டலுக்கு அருகில் இரயில் நிலையத்தில் மேற்குப் புறத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தான் அரவிந்தன். அவனோடு படிக்கிற மாணவர்கள் ஐந்து மணிக்கு மேல் அதே ஓட்டலுக்குச் சிற்றுண்டி உண்ண வருவார்கள். அழுக்குத் துணியும் கையுமாக மேசை துடைக்க நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு கேலி செய்வார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். வகுப்பிலே அவனுக்கு 'டேபிள் கிளீனர்' என்ற பட்டப் பெயர். பல்லைக் கடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் அரவிந்தன். சில நாட்களில் உடைமாற்றிக் கொள்ள நேரமிருக்காது. ஓட்டலில் வேலை செய்த அழுக்குகள் படிந்த உடையோடு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவான். சில ஆசிரியர்கள் அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஏளனமாக நகைப்பார்கள். பையன்கள், "டேய் டேபிள் கிளீனர், முதலில் உன்னைக் 'கிளீன்' பண்ணிக்கோடா!" என விசில் அடித்துக் கேலி பேசுவார்கள். பதின்மூன்று வயதிலிருந்து இருபதாவது வயது வரை உள்ள காலம் அவனுடைய வாழ்க்கையைக் கடுமையான உழைப்பினால் மலர்வித்த காலம். கேவலமோ ஏளனமோ பாராமல் அவன் உழைத்துத் தன்னை வளர்த்துக் கொண்ட காலம் அது. தெருத் தெருவாகத் தினசரிப் பேப்பர்களைக் கூவி விற்று அதில் கிடைக்கும் கமிஷனைப் பள்ளிச் சம்பளமாகக் கட்டியிருக்கிறான். அச்சாபீஸில் தாள் மடித்திருக்கிறான். வேறு ஒரு வேலையும் கிடைக்காத இரண்டொரு சமயங்கள் மூட்டை தூக்கிக் கிடைக்கிற கூலியைக் கொண்டு பள்ளிக்கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். அவனுடைய வயதில் அப்படி அவனைப் போல் உழைத்து முன்னுக்கு வருவது என்பது எல்லோருக்கும் முடியாத காரியம். அவன் பிடிவாதமாக முன்னுக்கு வந்தவன். இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப் பிரச்சினைகளில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருக்கிறதென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். 'உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஓடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்த பின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனுடைய தமிழாசிரியர் ஒருவர் அவனை மீனாட்சி அச்சக உரிமையாளரிடம் அழைத்துப் போய் சிபாரிசு செய்ததும், அவன் அங்கு சேர்ந்து தன் திறமையாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்ததும் காலத்தின் போக்கில் நிகழ்ந்து நிறைந்தவை. தான் நினைத்தபடியே உழைத்து மேல்நிலைக்கு வந்து விட்டதை நினைக்கும் போது அரவிந்தன் ஆச்சரியம் கொள்வான். தன்னைப் போன்றவர்களுக்காகவே, 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்' என்று திருவள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறாரோ என்று நினைத்து நினைத்து வியப்புக் கொள்வான் அவன். அன்று கோடைக்கானலுக்குப் புறப்படுகிற நேரத்துக்கு அந்தத் தந்தி வந்தபோது துன்பங்கள் நிறைந்த தன் இளமை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சித்திரங்கள் போல் நினைவு வந்தது அரவிந்தனுக்கு. அவற்றை நினைக்கத் தூண்டியது அந்த தந்திதான். "சிற்றப்பா இறந்து விட்டார்! உடனே புறப்பட்டு வரவும்" என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். கடைசிக் காலத்தில் அந்தச் சிற்றப்பா நீரிழிவு வியாதியால் படுத்த படுக்கையாகி விட்டார். தன் பிறந்த வீட்டு வழியில் எவரையாவது தத்து எடுத்துக் கொள்ளச் செய்து சொத்துகள் எல்லாம் கைமாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பகற்கனவு கண்டு கொண்டிருந்த சித்தி அவரையும் முந்திக் கொண்டு இறந்து போயிருந்தாள். தனியாக நோயுடன் கிராமத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய காலமும் முடிந்து விட்டதென்று இதோ இந்தத் தந்தி சொல்லுகிறது. அரவிந்தன் மதுரையில் இருப்பது கிராமத்தில் உறவினர்களுக்குத் தெரியும். சிறுமைகளும், பணத்தாசையும் நிறைந்த அவர்களோடு நெருங்கிப் பழகவே இப்போது அவனுக்கு அருவருப்பு ஏற்பட்டிருந்தது. 'இந்தத் தந்தியைக் கொடுத்த உறவினர்கள் என்ன பொருளில் எதற்காக அவனுடைய பெயருக்குக் கொடுத்திருக்கிறார்கள்' என்பது அவனுக்குப் புரிந்தது. அவருக்கு வேறு வாரிசு இல்லை. 'அவன் போய்த்தான் கொள்ளி வைக்க வேண்டும். அவர் தான் அன்று அந்தப் பச்சைப் பிள்ளை வயதில் அவனை அடித்துத் துரத்தினார். அவர் துரத்தியிராவிட்டால் இன்று இப்படி ஆகியிருக்க முடியாது. அவன் சிற்றப்பாவும், சித்தியும் படுத்தி அனுப்பிய கொடுமையில் தான் அவனுக்கு 'வாழவேண்டும், தன் முயற்சியால் வளர வேண்டும்' என்ற வைராக்கியமே உண்டாயிற்று. அந்த வைராக்கியமே அவனை வளர்த்தது. 'மறுபடியும் அவருடைய வீட்டு வாயிற்படியை மிதிப்பதில்லை' என்ற வைராக்கியத்தோடு அன்று அவன் கிளம்பியிருந்தான். அந்த உறுதியான பிடிவாதத்தின் பயனை இன்று அவன் அடைந்து விட்டான். ஆனால் சிற்றப்பா ஊரையெல்லாம் ஏமாற்றி உறவினரை வஞ்சித்து மற்றவர்கள் எல்லாம் ஏழையாகும்படி பிறரை அழச் செய்து பணமும், நிலமும் சேர்த்தாரே, அதன் விளைவை அடையாமலே செத்துப் போய்விட்டாரே? சாவாவது நன்றாக வந்ததோ? நீரிழிவு நோயோடு எழுந்து நடமாட முடியாமல் திணறி வேதனைப்பட்டு, 'நான் விரைவில் சாக வேண்டும்' என்று வருந்திச் சாவுக்கு ஏங்கச் செய்து வந்த சாவு அல்லவா அவருடைய சாவு? 'மனிதர்கள் என்னவோ பணத்தாலேயே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு போய்விடலாம்' என்று பார்க்கிறார்கள். பணம் ஓர் அழகான சொப்பனம். கனவு எத்தனை அழகாயிருந்தாலும் விரைவில் அதிலிருந்து விழித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிற்றப்பாவைப் போல் ஆக வேண்டியதுதான்' என்று தந்தியைப் படித்து விட்டு நினைத்துக் கொண்டான் அவன். சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். 'ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?' என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள் அவர்கள் இருவரும். இந்த இலட்ச ரூபாயையும் சொத்தையும் பற்றித்தான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றியது. அதே செல்வத்தினால் அவனுடைய தந்தை அழிந்தார் என்பதையும், அவன் அவமதிக்கப்பட்டு ஓடி வந்தான் என்பதையும் அவர்கள் நினைக்கவில்லை. அரவிந்தனின் முகம் கடுமையாக மாறியது. "எவனாவது அநாதைப் பிணத்துக்குப் போடுகிற மாதிரி கோவிந்தா கொள்ளிப் போட்டுவிட்டுப் போகட்டும். யாருக்கு வேண்டும் இந்த நாய்க்காசு?" என்று தந்தியைக் கிழித்தெறிந்தான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம்தான் அவனைத் தனியாக அழைத்துச் சென்று பக்குவமாக உபதேசம் செய்தார். "அடே அசடு! மரணம் என்பது எத்தனை பெரிய காரியம். அதில் போய்ப் பழைய கோபதாபங்களையும், குரோதத்தையும் காட்டிக் கொண்டிருக்கலாமா? பேசாமல் நான் சொல்லுகிறபடி கேளு! நீ இன்று கோடைக்கானல் போக வேண்டாம். நானும் முருகானந்தமும் போய்க் கொள்கிறோம். நீ புறப்பட்டு உன் கிராமத்துக்குப் போய் சிற்றப்பாவின் காரியங்களை நடத்தி விட்டு வா. இல்லாவிட்டால் எவனாவது மூன்றாவது முறைத் தாயாதிக்காரன் கொண்டு போவான். அந்தச் சொத்து உன் கைக்கு வந்தால் நல்ல காரியத்துக்குச் செலவு செய்யேன். அதற்காக ஒரேயடியாக வேண்டாம் என்று கண்களை மூடிக் கொண்டு வெறுப்பானேன்?" என்றார் மீனாட்சிசுந்தரம். "அந்த வீட்டு வாயிற்படியில் கால் எடுத்து வைக்க நினைக்கவே கூசும்படி அத்தனை கெடுதல் எனக்குச் செய்திருக்கிறாரே அவர்!" "செய்திருக்கட்டுமே, அப்பா! அவருடைய பணத்தை நல்ல காரியத்துக்குச் செலவழித்து அத்தனைக்கும் பழிவாங்கி விடேன் நீ." என்னென்னவோ சமாதானங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி அரவிந்தனை வழிக்குக் கொண்டு வந்தார் மீனாட்சிசுந்தரம். காலையில் அந்த நேரத்துக்குச் சரியாக இராமேசுவரம் போகிற இரயில் இருந்தது. முருகானந்தமும் அவரும் அரவிந்தனைக் காரில் கொண்டு போய் இரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிற்றப்பனுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய ஊருக்குப் புறப்பட்டான் அவன். போகும்போது இரயிலில் அவன் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்தது. நினைவுகளே பெருங்காற்றாக மாறி அந்தக் காற்றில் நெஞ்சினிடையே மூளும் சிந்தனைக் கனல் கொழுந்து பாய்ச்சிச் சுடர் பரப்பிற்று. எதை எதையோ எண்ணிக் கொண்டு பயணம் செய்தான் அவன். 'மீனாட்சிசுந்தரமும், முருகானந்தமும் கோடைக்கானல் போகிறார்களே! அவர்கள் சொல்லிப் பூரணி தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டு விடுவாளா? இந்தச் சமயத்தில் இந்தப் பெரிய காரியத்துக்கு இணங்கலாமா, வேண்டாமா என்று பூரணி முடிவு செய்ய என்னுடைய கருத்தையல்லவா கேட்பாள்? பார்க்கலாமே என்னைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்கிறாளா? அல்லது மீனாட்சிசுந்தரம் விவரம் சொல்லிய அளவில் ஒப்புக் கொண்டு விடுகிறாளா? இந்தச் சந்தர்ப்பத்தில் நானே போய் அவளைச் சந்தித்து நல்லது கெட்டது இரண்டையும் சீர்தூக்கித் தேர்தலில் நிற்கலாமா நிற்கலாகாதா என்று தீர்மானம் செய்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தியில் நானும் முருகானந்தமும் புறப்பட்டு வருவதாகத்தான் கொடுத்திருக்கிறார். நான் இங்கே இந்தக் கிழவனுக்குக் கொள்ளி வைக்க வந்தாயிற்று. என்னை எதிர்பார்த்துப் பெரிதும் ஏமாற்றமடைந்திருப்பாள் பூரணி' என்று நினைத்தான் அரவிந்தன். எதற்கோ ஆசைப்பட்டுக் கொண்டு அநாவசியமாகப் பூரணியைத் தேர்தலில் வம்புக்கு இழுக்கும் மீனாட்சிசுந்தரத்தின் மேல் கோபம்தான் வந்தது அவனுக்கு. 'நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த மட்டும் அவருடைய இந்த எண்ணத்தைத் தடுத்துவிட முயன்றேன். முடியவில்லையே? பிடிவாதமாகத் திருவேடத்துக்கு கூட்டிக் கொண்டு போய்ப் பூக்கட்டி வைத்தும் பார்த்து உறுதி செய்து கொண்டு விட்டாரே' என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன். இரயிலிலிருந்து இறங்கி அவன் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. உறவினர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான பாட்டிமார்கள் அவனிடம் போலியாக அழுதுகொண்டே துக்கம் விசாரிக்க வந்தார்கள். மற்றவர்கள் சம்பிரதாயமாக அழுகையெல்லாம் இல்லாமல் வாய் வார்த்தையில், "சிற்றப்பா காலமாகி விட்டாரே தம்பி!" என்று தொடங்கி விசாரித்தார்கள். விசாரித்தவர்களை விட விசாரித்தோமென்று பேர் பண்ணியவர்கள் தான் அதிகம். 'கணித பாடத்தில் சரியான விடை வந்தாலும் வழி எழுதாத கணக்குத் தப்புக்குச் சமம்தான். செல்வமும் செல்வாக்கும் அறவழியில் ஈட்டப்படாமல் வேறு வழியில் குவிக்கப்பட்டிருந்தால் வழி எழுதாத கணக்கைப் போல் அவை மதிப்பிழந்து நிற்கின்றது' என்பதை அன்று அங்கே சிற்றப்பாவின் ஈமச் சடங்கிலே கண்டான் அரவிந்தன். உள்ளூரில் நல்லவர்கள் யாரும் மயானம் வரை கூட உடன் வரவில்லை. தன்னைப் பற்றிக் கூடச் சிலர் ஊரில் கேவலமாகப் பேசிக் கொண்டதாக அரவிந்தன் காதுக்குத் தகவல் வந்தது. நேரிலும் கேள்விப்பட்டான். "பணம் அல்லவா பேசுகிறது. இந்தப் பையன் அரவிந்தனுக்காகவா இத்தனை பாடுபட்டுச் சேர்த்து வைத்தான் கருமிப்பயல்" என்று அவன் காதுபடவே ஒருவர் சொன்னார். அவருக்குத் தாயாதிப் பொறாமை. "என்னவோ விரோதம்! அவன் கொள்ளி போட வரமாட்டான் என்றீரே. சொத்து ஐயா! சொத்து! நாய் மாதிரி ஓடி வந்திருக்கிறான் பாரும்" என்று வேறு ஒருவர் பேசியது காதில் விழுந்த போது அரவிந்தனுக்கும் மனம் புண்பட்டது. 'தன்னைப் பற்றி இவ்வளவு சர்வ சாதாரணமாக மதிப்பிடுகிறார்களே அவர்கள்' என்று தான், அவன் வருந்தினான். கேதத்துக்கு (அந்திமக்கிரியை) மதுரையிலிருந்து இரண்டொரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மதுரை நகரின் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர். வயது முதிர்ந்தவர். நீண்ட நாட்கள் அனுபவசாலி. ஈமச் சடங்கு முடிந்து மயானத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் கூறிய செய்தி அரவிந்தனைத் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அவன் பரம ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருந்த செய்தியை எல்லோருக்கும் நடுவில் அவர் வெளிப்படையாக விசாரித்தார். "என்னப்பா தம்பி, உன் முதலாளி அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்கிறாராமே? உனக்குத் தெரிந்திருக்குமே?" அவருடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அரவிந்தன் தயங்கியபோது அவரே மேலும் கூறினார். அவர் வாயிலாக முக்கியமான தொரு செய்தி வெளிவந்தது. "மீனாட்சிசுந்தரம் இதில் எல்லாம் கெட்டிக்காரர் தான் அப்பா. விவரம் தெரிந்துதான் செய்வார். ஆனால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். எதற்கும் அவர் காதில் போட்டு வை. அந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடைக்காரன் இருக்கிறான். முரடன், எதற்கும் துணிந்தவன், அவனே நிற்கப் போவதாகக் கேள்வி" என்று அவர் கூறிக் கொண்டே வந்த போது அரவிந்தன் குறுக்கே மறித்து, "யார் தாத்தா அந்தப் புத்தகக் கடைக்காரர்?" என்று கேட்டான். அவன் சந்தேகம் சரியாயிருந்தது. அவர்களுக்கு விரோதியான அந்த ஆளின் பெயரைத்தான் கிழவர் கூறினார். 'அவன் மிகவும் மும்முரமாகத் தேர்தலில் இறங்கி இருப்பதாகவும்' அவர் கூறினார். அப்போதே புறப்பட்டுப் போய்க் கோடைக்கானலில் அவர்களுக்கு இச்செய்தியை அறிவித்து விட வேண்டும் போல் அரவிந்தனுக்குத் துடிப்பு உண்டாயிற்று. குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|