19
குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனை வண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணி செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம் கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே.
- திருஞானசம்பந்தர் "நீ மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைக்கிறேன்..." இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சிசுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப் பின்புறம் கோர்த்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மனத்தில் திட்டங்களும் தீர்மானங்களும் உலாவும் போது கால்களையும் இப்படி உலாவவிட்டுப் பழக்கம் அவருக்கு. "என்னப்பா இது? நான் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறேன், உன்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடப் பதில் வரவில்லையே!" "நீங்கள் சொல்வது என்னவென்று நான் சரியாக விளங்கிக் கொள்வதற்கு முன்னால் எப்படிப் பதில் பேச முடியும்?" "அதுதான் சொன்னேனே, அரவிந்தன்! பூரணி நீ சொன்னால் எதையும் மறுக்காமல் சம்மதிப்பாள் அல்லவா? முதலில் இது எனக்குத் தெரிய வேண்டும்." "நான் சொன்னால் தான் கேட்பாள் என்பதென்ன? நீங்கள் சொன்னாலும் கேட்கக்கூடியவள் தானே?" "அப்படியில்லை! இந்தக் காரியத்தை நீதான் என்னைக் காட்டிலும் தெளிவாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். ஒப்புக் கொள்ளச் செய்யவும் முடியும்!" "எதற்கு ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும்?" "அவசரப்படாதே! நானே சொல்லிக் கொண்டு வருகிறேன். கவனமாகக் கேள்!" தனது கூர்ந்து நோக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று சேர்த்து அவர் முகத்தையே பார்த்தான் அரவிந்தன். அவர் தொடர்ந்தார். "இன்னும் ஏழெட்டு மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது." "ஆமாம் வருகிறது." "அரசியல் துறையில் ஈடுபடுகிறவர்களும், பதவி வகிக்கிறவர்களும், இன்று நாட்டில் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் புகழும் குவித்து மாமன்னர்களைப் போல் வாழ்கிறார்களென்பதை நீயே நன்கு அறிவாய்." "அறிவேன், அதற்காக..." "நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் இப்போது சொல்ல இருப்பதைக் கேட்பதற்கு முன்னாலேயே அதன்மேல் உனக்கு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டாகிவிட்டாற்போல் தோன்றுகிறதே?" "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் மேலே சொல்லுங்கள்."
"நான் உன்னை எதற்காகவோ வற்புறுத்தி ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே! நல்ல சமயத்தில் இந்த யோசனை என் மனத்தில் உருவாயிற்று. நகரத்தில் முக்கியப் பிரமுகர்கள் எல்லோருக்குமே இந்த யோசனைப் பிடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று ஆமோதித்துக் கூறி எல்லோருமே ஒத்துழைப்பதாகச் சொல்கிறார்கள். பணச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் தாங்க முடியும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது"
"நீங்கள் தேர்தலுக்கு நிற்கப் போகிறீர்களா?" "நானா? விளங்கினாற் போலத்தான் விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டுச் சீதைக்கு இராமன் சிற்றப்பாவா என்கிறாயே. நான் நின்றால் ஜாமீன் தொகை இழக்க வேண்டியது தான். எனக்கு ஏது அத்தனை பேரும் புகழும்?" "பின் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்?" "இன்னும் உனக்குப் புரியவில்லையா, அரவிந்தன்? பூரணியை வடதொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தலாம் என்பது என் திட்டம். அவள் நின்றால் நிச்சயம் ஆகிவிடும். மேடை மேடையாகப் பேசிப் புகழும் பெருமதிப்பும் பெற்றிருக்கிறாள். அவள் போய்ப் பேசாத கிராமங்கள் இல்லை. அநேகமாகத் தொகுதியின் எல்லாப் பிரதேசங்களிலும் அவளை நல்லமுறையில் தெரிந்திருக்கிறது." "சுதந்திரம் பெறுகின்றவரை தொண்டாக இருந்த அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. பூரணியைப் போன்ற ஒரு நல்ல பெண்ணைச் சூதும் வாதும் நிறைந்த அழுக்கு மயமான அரசியல் பள்ளத்தில் இறங்கச் சொல்கிறீர்களே! இப்போது அவள் பெற்றிருக்கும் பேரும் புகழும் அவளுடைய தமிழறிவுக்காகவும், தன்னலமற்ற சமூகத் தொண்டுக்காகவும், தன்னலமற்ற பேரறிஞர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் என்பதற்காகவும் அவளை அடைந்தவை. அரசியலில் ஈடுபடுவதன் காரணமாகவே அவள் இவற்றை இழக்க நேர்ந்தாலும் நேரலாம். தவிர இந்த நூற்றாண்டில் முதல் இல்லாமல் லாபம் சம்பாதிக்கிற பெரிய வியாபாரம் அரசியல் தான். பண்புள்ளவர்கள் அந்த வம்பில் மாட்டிக் கொள்ளாமல் சமூகப் பணி செய்து கொண்டிருப்பதே நல்லது. மேலும் பூரணி இப்போது முழு நோயாளியாகி ஓய்வு கொள்ளப் போயிருக்கிறாள். அவள் கொடைக்கானலிலிருந்து திரும்ப மாதக்கணக்கில் ஆகும் அவளுடைய நிம்மதியைக் குலைத்து இதில் கவனம் செலுத்தச் செய்வது நல்லதாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" "அவளுக்கு ஒரு சிரமமும் இல்லையே? வந்து அபேட்சை மனுத்தாக்கல் செய்து விட்டுப் போனால், மறுபடியும் தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது திரும்பவும் வந்து நாலு இடங்களில் பேசினால் போதும். மற்ற காரியங்களையெல்லாம் நாம் பார்த்துக் கொள்கிறோம். நீ இருக்கிறாய். அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டான் இருக்கிறான். ஒரு நாளைக்கு நூறு கூட்டம் போட்டு பேசச் சொன்னாலும் அந்தப் பையன் சளைக்காமல் பேசுவான். பிரச்சாரமே அதிகம் வேண்டாம். ஒரு பெண் தேர்தலுக்கு நிற்கிறாள் என்பதே போதும். பூரணியைப் போல் இத்தனை பேருள்ள பெண் நிற்கிற போது போட்டியிருந்தாலும் வலுவிழந்து போகும். நீ என்ன நினைக்கிறாய் அரவிந்தன்? இதில் உனக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?" "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால்..." "ஆனால் என்ன ஆனால்?... தைரியமாக எனக்கு நல்ல முடிவு சொல்! பூரணியைப் போல் நல்லவர்கள் நுழைவதாலேயே அரசியல் நிலை சீர்திருந்தலாமல்லவா! தான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகிற புனிதத் தன்மைதான் அவளிடம் இருக்கிறதே! அப்படி இருக்கும் போது நாம் ஏன் அஞ்சவேண்டும்?" "நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது." "இதோ பார், அரவிந்தன்! இந்தக் காரியத்தை இவ்வளவு அலட்சியமாக நீ கருதலாகாது. என் மானமே இதில் அடங்கியிருக்கிறது. நகரத்துப் பெரிய மனிதர்கள் அடங்கிய கூட்டத்தில் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். பூரணியை நிறுத்தினால் தான் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்குமென்று எல்லோரும் நம்புகிறார்கள். அடுத்த ஞாயிறன்று தேர்தல் பற்றிய தீர்மானங்களுக்காக மறுபடியும் நாங்கள் சந்திக்கிறோம். அன்று அவர்களுக்கு இதுபற்றி உறுதி சொல்வதாக நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன்." மீனாட்சிசுந்தரத்தின் குரல் திட்டமாக உறுதியாக - சிறிதளவு கண்டிப்பும் கலந்து ஒலித்தது. "இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் போதுமான அரசியல்வாதிகளும் தலைவர்களும் இப்போதே இந்த நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் விவேகானந்தர் போல், ராமலிங்க வள்ளலார் போல் ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் ஆன்ம எழுச்சியையும் உண்டாக்குகிற ஞானிகள்தான் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் இந்த நாட்டில் தோன்றவில்லை. தயவு செய்து பூரணியையாவது இந்த வழியில் வளர விடுங்கள்? அரசியல் சேற்றுக்கு இழுக்காதீர்கள்." சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூறினான் அரவிந்தன். இவ்வளவு உறுதியாக வேறெந்தக் காரியத்துக்கும் அவன் இதற்குமுன் அவரிடம் மன்றாடியதில்லை. அவரை எதிர்த்துக் கொண்டு கருத்து மாறுபட்டு வாதாடியதுமில்லை. அவர் அவனுக்குப் படியளப்பவர். அவரிடம் பணிவும் நன்றியும் காட்ட வேண்டியது அவன் கடமை. அவருக்கு அறிவுரை கூறுவது போல், அவருக்கு முன்பே தன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு பேசலாகாது. ஆயினும் உணர்ச்சிவசப்பட்டுச் சற்று அதிகமாகவே பேசியிருந்தான் அவன். மீனாட்சிசுந்தரம் அயர்ந்து விடவில்லை. அவன் அருகே வந்தார். மெல்லச் சிரித்தார். வாஞ்சையோடு அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். தணிந்த குரலில் அவனை நோக்கிக் கூறலானார். "அரவிந்தன்! பச்சைக் குழந்தை மாதிரி அநாவசியமான கவலையெல்லாம் நினைத்துக் கலங்குகிறாயே! உன்னைப் போலவே எனக்கும் பூரணியின் எதிர்கால நலனில் மிகவும் அக்கறை உண்டு. அவளுக்குக் கெடுதல் தருவதை நான் கனவில் கூட நினைக்க மாட்டேன். வெற்றியைத் திடமாக நம்பிக் கொண்டு தான் நானும் இதில் இறங்குகின்றேன். ஆயிரக்கணக்கில் பணம் தண்ணீர் போல் செலவழியும். நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலம் முழுவதும் விற்றுத் தேர்தலில் போடப்போகிறேன். வைகைக் கரையில் அயனான நன்செய் விலைபோகிறது. பூரணியைத் துன்பப்படுத்துவதற்கா இவ்வளவு செய்வேன்? இத்தனை வருஷங்களாகப் பெற்ற பிள்ளை போல் என்னிடம் பழகுகிறாயே? உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படியானால் அப்புறம் உன் இஷ்டம்." சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு ரோஜாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். "இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு போச்சு" என்று அரவிந்தன் மட்டும் தான் அங்கிருப்பான் என்னும் எண்ணத்தில் இரைந்து கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த முருகானந்தம் மீனாட்சிசுந்தரம் இருப்பதைக் கண்டு கூச்சமடைந்தான். "வா தம்பி! நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உனக்கு ஆயுசு நூறு! இப்போதுதான் சற்று முன் அரவிந்தனிடம் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று அவரே தாராளமாக வரவேற்ற பின்புதான் முருகானந்தம் கூச்சம் தணிந்து இயல்பு நிலையை அடைந்தான். தன்னுடைய கோடைக்கானல் கடிதப் போக்குவரவு விவகாரத்தை மீனாட்சிசுந்தரம் வரை எட்டவிட்டு அவரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு தன்னை விசாரிக்க அரவிந்தன் காத்திருக்கிறானோ என்னும் தயக்கமும் முருகானந்தத்தின் கூச்சத்துக்கு ஒரு காரணம். அப்படி இல்லை என அப்போதே தெரிந்தது. "இப்போது அவசரமில்லை அரவிந்தன்! உனக்கு நிதானமாக யோசிக்க கொஞ்ச நேரம் தருகிறேன். நீ இந்தத் தம்பியையும் கலந்து சிந்தித்துக் கொண்டு நாளைக்குக் காலையில் எனக்கு முடிவு சொன்னால் போதும். அப்புறம் உன்னையே கோடைக்கானலுக்கு அனுப்புகிறேன். பூரணியையும் ஒரு வார்த்தை கேட்டுத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம். எனக்கு வீட்டுக்குப் போக நேரமாயிற்று. நான் வருகிறேன். காலையில் பார்க்கலாம்" என்று அவர்கள் இருவரையும் தனிமையில் அங்கு விட்டுவிட்டுக் கிளம்பினார் மீனாட்சிசுந்தரம். அவரை வழியனுப்பும் பாவனையில் எழுந்திருந்த அரவிந்தனும் முருகானந்தமும், வாயில் வரை உடன் போய்விட்டுக் கார் புறப்பட்டதும் உள்ளே திரும்பி வந்தார்கள். திரும்பியதும் கன்னத்தில் கையூன்றியபடி முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல் தெரிய நாற்காலியில் சாய்ந்தான் அரவிந்தன். அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் புரியாமல் முருகானந்தம், "என்னப்பா இது? கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்தில் கையூன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டாய்? 'பெரியவர்' என்ன சொல்லிவிட்டுப் போகிறார் உன்னிடம்? ஏதோ என்னையும் கலந்து கொண்டு காலையில் முடிவு சொல்லும்படிக் கூறிவிட்டுப் போகிறாரே என்ன அது?" என்று கேட்டான். 'முருகானந்தம்-வசந்தா தொடர்பு எப்போது எந்தவிதத்தில் ஆரம்பமாகிக் கடிதங்கள் எழுதிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது' என்று அவனையே விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்டிக்க வேண்டுமென்று அரவிந்தன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த நினைவே முற்றிலும் மறந்து போய்விட்டிருந்தது அவனுக்கு. மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தும் விஷயம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனதிலிருந்து அவன் அதைப் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விட்டான். முருகானந்தம் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் மீனாட்சிசுந்தரம் தன்னிடம் கூறியவற்றைச் சுருக்கமாக அவனுக்குச் சொன்னான் அரவிந்தன். அவன் நினைத்தது போல் முருகானந்தம் வருத்தமோ, திகைப்போ அடையவில்லை. "பூ! இதற்குத்தானா இப்படிக் கவலைப்படுகிறாய்? மகிழ்ச்சிப்பட வேண்டிய செய்தி இது! பூரணியக்கா அரசியலில் புகுந்தால் அரசியலில் இருக்கிற களங்கங்கள் அழிந்து அரசியலுக்கே நல்ல பேர் ஏற்பட்டுவிடும். உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நன்றாகச் சிந்தித்துக் காரணத்தோடு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது இந்த முடிவு" என்று உற்சாகம் பொங்க மறுமொழி தந்தான் முருகானந்தம். உடனே அரவிந்தன் சினமடைந்து பேசலுற்றான். "நீங்கள் எல்லோரும் அரசியல் இயக்கம் வளரவேண்டுமென்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். நானோ ஒழுக்கமும் பண்பாடும் வளர்வதற்கு ஓர் இயக்கம் வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த இரண்டாவது இயக்கத்தை வேரூன்றி வளர்க்க இன்று இந்தத் தேசத்தில் ஆளே கிடைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீ என்றுமே அரசியல்வாதி என்பது எனக்குத் தெரியும் முருகானந்தம். உன்னிடமிருந்து இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்." "இரண்டையும் வேறு வேறு இயக்கங்களாக நீ நினைப்பதால் தான் உனக்கு இந்தக் குழப்பம் உண்டாகிறது அரவிந்தன். முதல் இயக்கம் சரியாக இருந்தால் இரண்டாவது இயக்கமும் சரியாயிருக்கும். பூரணி அக்காவிடம் இந்த இரண்டு இயக்கங்களுக்குமே பாடுபடத் தகுதி இருக்கிறது. இதை நான் உறுதியாய் நம்புகிறேன்." "தகுதி இருக்கிறது என்பதற்காக அவளுடைய நிம்மதியையும், சுகத்தையும் பாழாக்கலாமா? அவளுக்கு எப்போதுமே தன் சுகத்தைக் கவனித்துக் கொள்ளத் தெரியாது. அன்றைக்குத் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்துப் பேசியதன் விளைவை நீயே பார்த்தாயே! அப்படி இருந்தும் இந்த ஆறு மாத ஓய்வு முடிந்து வந்தவுடன் அவளைத் தேர்தல் போர்க்களத்தில் குதிக்கச் செய்ய திட்டமிடுகிறீர்களே!" இதைச் சொல்லும்போது அரவிந்தனின் குரலில் பூரணியிடம் அவனுக்குள்ள பாசம் முழுவதும் கனிந்து ஒலித்தது. பூரணியின் மேல் இவ்வளவு அதிகமாக அனுதாபப்படுகிற உரிமைகூட அவனுக்குத்தான் உண்டு. அவன், அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறொருவருக்கும் இனி என்றும் கிடைக்க முடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அனுதாபத்தை மறைக்க முடியாமல் தவித்தான். "இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது. பூரணியக்காவைப் போல் பண்பும் ஞானமும் உள்ள ஒருவர் அதில் ஈடுபடுவது எல்லாத் துறைகளுக்கும் நல்லது தான் அரவிந்தன்" இப்படி நீண்ட நேரம் ஏதேதோ பல நியாயங்களை எடுத்துச் சொன்னான் முருகானந்தன். அரவிந்தன் பேசி அவன் மாணவ நிலையிலிருந்து கேட்பது தான் வழக்கம். அன்று அவ்வழக்கம் மாறியமைந்து விட்டது. "இதில் எனக்கென்ன வந்ததப்பா? அவரும் சொல்கிறார். நீயும் அதையே ஒத்துப் பாடுகிறாய். அவளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்" என்று மறுப்பின் வேகம் குறைந்து தளர்ந்தாற்போல் பட்டுக்கொள்ளாமல் சொன்னான் அரவிந்தன். மறுநாள் மீனாட்சிசுந்தரம் வந்த கேட்டபோதும் இதே மாதிரி மனம் தழுவாமல், பட்டுக் கொள்ளாத விதத்தில்தான் பதில் சொன்னான் அவன். ஆனால் அவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் கடுமையாக வற்புறுத்தினார். "யாருக்கு வந்த விருந்தோ என்கிறார் போல் நீ இப்படி ஒட்டுதல் இல்லாமல் பேசுவதாயிருந்தால் நான் இப்போதே இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விடுவேன். ஒன்றும் தலைக்குக் கத்தி வந்து விடாது. நாலு பெரிய மனிதர்களுக்கு நடுவில் என் மானம் போகும். போனால் போகட்டும். உங்களுக்கெல்லாம் இல்லாதது எனக்கு மட்டும் என்ன. நீ இதற்கு ஒத்துக் கொண்டு எனக்கு உதவி செய்வதாயிருந்தால் இரண்டு நாட்கள் கழித்துக் கோடைக்கானல் போய்க் கேட்டுச் சம்மதம் வாங்கிக் கொண்டு வா. முடியாவிட்டால் முடியாதென்று இப்போதே சொல்லிவிடு." அரவிந்தன் அரைமனத்தோடு கோடைக்கானல் போய்ப் பூரணியைக் கேட்டுக் கொண்டு வர இணங்கினான். இணங்காவிட்டால் அவர் ஆளை விட மாட்டார் போல் இருந்தது. மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் வையைக் கரைமேல் உள்ள 'திருவேடகம்' என்ற அழகிய ஊராகும். அது தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரையில் குடியேறி விட்டாலும், நிலங்கரைகள், தோப்புத்துரவு, ஒரு வீடு எல்லாம் அங்கு அவருக்கு இருந்தன. வீட்டைத் தேவாரப் பாடசாலைக்கு விட்டிருந்தார். பத்து பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு போட்டுத் தேவாரம் கற்றுக் கொடுத்து வரும் பாடசாலை ஒன்றைத் தம் பொறுப்பில் அங்கு நடத்தி வந்தார் மீனாட்சிசுந்தரம். குடும்பத்தில் பரம்பரைக் கட்டளை போல் அந்தப் பாடசாலைக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்கப் பெற்றிருந்தது. அவருடைய முப்பாட்டனார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலை அது. இன்னும் ஒழுங்காக நடந்து கொண்டு வருகிறது. திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விஷயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை அவனையும் கூட்டிக் கொண்டு திருவேடகத்துப் புறப்பட்டு விட்டார் அவர். மதுரைச் சீமையில் சோழவந்தானுக்கு அருகிலிருந்த வையை நதியின் வடபுறமும், தென்புறமும் அமைந்துள்ள பசுமை மயமான கிராமங்களின் அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது. 'வையை' என்னும் 'பொய்யாக் குலக்கொடி' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறாரே, அந்த வையை நல்லாளின் சீரிளமைத்திறம் காணவேண்டுமானால் தென்னஞ்சோலைகளுக்கு நடுவே அவள் அன்ன மென்னடை நடந்து கன்னிமை ஒயில் காட்டிக் கலகலத்து ஓடும் இப்பகுதியில் காண வேண்டும். பசுமைப் பூத்து எழுந்த வனத்தின் தூண்களை நட்டுப் பயிர் செய்தாற்போல் வாழைத் தோட்டங்கள், போகம் போகமாய் வெறும் நிலம் காண நேரமின்றிப் பசுமை காட்டி விளையும் நெற்கழனிகள், பசுமை குன்று புடைத்தெழுந்தாற் போல செறிந்து தெரியும் கொடிக்கால்கள். அந்தப் பகுதியில் வையைக் கரையின் ஒவ்வொரு கிராமமும் ஓர் இன்பக் காவியம். ஒவ்வொரு காட்சியும் ஒரு சொப்பன சௌந்தரியம். இந்தப் பகுதியின் வையைக் கரை மண்ணில் பிறந்தவரைப் போல் பெருமையும் கர்வமும் கொள்ளத் தகுதியுடையவர் வேறெங்குமே இருக்க முடியாதென்பது மீனாட்சி சுந்தரம் அவர்களின் திடமான எண்ணம். திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு அருகில் சமணர்களோடு புனல்வாதம் புரிந்த காலத்தில் அவர் இட்ட ஏடு வையை நதியை எதிர்த்துச் சென்று கரையேறிய தலமாதலால் அந்த ஊருக்குத் 'திரு ஏடகம்' என்று பெயர் ஏற்பட்டிருந்தது. இதற்கு முன்பும் இரண்டு மூன்று அதிகாலையில் அவரோடு திருவேடகத்துக்குக் காரில் வந்திருக்கிறான் அரவிந்தன். அங்கு வரும்போதெல்லாம் அவனைக் கவர்ந்து மனதை அடிமை கொள்வன அந்தத் தேவாரப் பாடசாலையும், அதன் இயற்கைச் சூழ்நிலையும் தான். நகரச் சந்தடியின் ஓசை ஒலியற்ற அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்தப் பெரிய தென்னஞ்சோலைகளுக்குள்ளிருந்து தலைநீட்டும் கோபுரத்தின் அருகேயிருந்து தெய்வமே குரல் எடுத்து அழைப்பது போல், 'குண்டலந்திகழ்தரு காதுடைக் குழகனை' என்று அற்புதமான பண்ணில் ஞானசம்பந்தரின் பாடலை இளங்குரல்கள் பாடுகிற ஒரே ஒலிநாதம் என்கிற மதுரசக்தியே விண்ணிலிருந்து அந்தத் தோப்புக்குள் சன்னமாக இழைந்து குழைந்து உருகிக் கொஞ்சமாய் அமுத இனிமையுடன் ஒழுகிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கும். இந்த அனுபவத்தில் தோய்வதை அரவிந்தன் பேரின்பமாகக் கருதினான். தொலைவிலிருந்து பார்க்கும் போது ஊர் தெரியாது. தென்னை மரங்களின் பரப்புக்கு மேலே அந்தப் பசுமைப் பரப்பையே தனமாகக் கொண்டு முளைத்துப் பூத்தாற் போல் கோபுரம் மட்டும் தெரியும். அங்கு வரும்போதெல்லாம், 'இந்தக் கோபுரம், இந்தத் தேவாரக் குரல் ஒலி, இந்த எளிமை அழகு பொங்கும் தெய்வீகச் சிற்றூர்கள் இவைதான் தமிழ்நாட்டின் உயிர், பெருமை எல்லாம். இவை அழிந்த தமிழ்நாடு தமிழ்நாடாக இராது. இந்தப் பழைய அழகுகள் அழியவே கூடாது. இவற்றைக் கொண்டு பெருமைப்பட என்றும் தமிழன் கூசக்கூடாது, என்று மனமுருக அரவிந்தன் நினைப்பான். ஆனால் ஆடம்பர ஆரவாரங்களைக் கொழுக்கச் செய்து மனங்களை வளர்க்காமல் பணத்தை மட்டும் வளர்க்கும் நகரங்களின் வாழ்க்கை வேகத்திலும், அவசரத்திலும் இந்த அழகுகளைத் தமிழர்கள் மறந்தும், மறைத்தும் எங்கோ போய்க் கொண்டிருப்பதை நினைக்கும்போது அவன் உள்ளம் நோகும். 'ஏடகம் கண்டு கைதொழுதால் கவலை நோய் அகலும்' என்று சம்பந்தர் பாடியிருந்தார். உண்மையிலேயே கவலையைப் போக்குகிற ஏதோ ஒரு ஆற்றல் அந்த ஊரின் செயற்கை அழுக்குகள் படியாத இயற்கை அழகில் இருப்பதை அரவிந்தன் உணர்ந்தான். நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் ஆள் புழக்கமற்ற பெரிய தென்னந்தோப்பு ஒன்றில் பேதைப் பருவத்துச் சிறுமி ஒருத்தி தனியாகப் புகுந்து மருண்டு ஓடுவது போல் வையை நதி அந்தப் பிரதேசத்தில் பாய்ந்தோடுகிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே! ஆற்றின் இருகரையும் நிறைய ஆணவம் பொங்கிடப் பாய்கிற வழக்கம் வையையிடம் இல்லை. புது மணப்பெண் நடந்து செல்லுகிற மாதிரி ஒல்கி ஒசிந்து ஓர் ஓரமாகப் பாய்ந்து செல்வது வையையின் அடக்கத்துக்கு ஓர் அடையாளமோ? தேவாரப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீனாட்சி சுந்தரமும், அரவிந்தனும் ஏடகநாதரை வழிபடச் சென்றார்கள். அம்மன் சந்நிதியில் பூக்கட்டி வைத்துப் பார்ப்பதென்று திட்டம். 'ஏலவார் குழலி அம்மை' என்று எழில் வாய்ந்த தமிழ்ப்பெயர் திருவேடகத்து அம்மனுக்கு. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கட்டியதாக தல வரலாறு கூறும் அந்தக் கோயிலை பின்னாளில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பெரிதாக்கி அழகுபடுத்தி இருந்தார்கள். தமிழ்நாட்டுத் திருத்தலங்களில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு கல்தூணும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்குமே! கோயிலுக்குள் மீனாட்சிசுந்தரம் அவனைக் கேட்டார். "என்னுடைய வழக்கம் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. இந்தக் கோயிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்தபின் முடிவு நன்றாக இருந்தால் நான் எதையுமே நிறுத்த மாட்டேன். எப்பாடுபட்டாவது அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவேன். இப்போது இங்கே அம்மனுடைய தீர்ப்பு எப்படி ஆகிறதோ அப்படியே செய்வதற்கு நீயும் இணங்குகிறாய், நீயும் கட்டுப்படுகிறாய் அரவிந்தன்! என்ன? உனக்குச் சம்மதந்தானே?" அரவிந்தனுக்குச் சமய நம்பிக்கை உண்டு, ஆனால் சடங்குகளில் நம்பிக்கை குறைவு. அந்தச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்கலாகாதே என்பதற்காகச் 'சம்மதந்தான்' என்று சொல்லி வைக்க வேண்டியதாயிற்று அவர்கள் ஏலவார் குழலியம்மன் சந்நிதிக்கு முன் நின்றார்கள். "இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை" என்று சொல்லிப் பூக்களை அவனிடம் காட்டி விட்டு இலையில் வைத்து ஒரே அளவாக முடிந்து குலுக்கிப் போட்டார் அவர். எலிவால் பின்னலும் அழுக்குப் பாவாடையுமாக அம்மன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கூப்பிட்டு, "இந்த இரண்டு பொட்டலங்களில் உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடு, பாப்பா!" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம். சிறுமி சிரித்துக் கொண்டே இரண்டு முடிச்சுக்களையும் பார்த்து இரண்டில் எதை எடுப்பதென்று தயங்கி நின்றாள். பின்பு குனிந்து ஒரு முடிச்சை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள். "என்ன பூ என்று நீயே பிரித்துப் பார், அரவிந்தன்!" என்று அவனுடைய கையில் அதை அப்படியே கொடுத்தார் அவர். அரவிந்தனின் உள்ளம் ஆவலும் துடிப்பும் கொண்டு தவித்தது! தவிப்போடு பிரித்தான். வெள்ளை வெளேரென்று பச்சை இலைக்கு நடுவே நந்தியாவட்டைப் பூ சிரித்தது! 'நீ தோற்றுவிட்டாய்' என்று சொல்வது போல் சிரித்தது! மீனாட்சிசுந்தரமும் சிரித்தார். "தெய்வசித்தமும் என் பக்கம் தானப்பா இருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவே முடியும்! நீ நாளைக்குக் காலையில் கோடைக்கானல் புறப்படுகிறாய். உன்னோடு அந்த முருகானந்தத்தையும் அழைத்துக் கொண்டு போ. இருவரும் எப்படியோ எடுத்துச் சொல்லி பூரணியைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும். உன்னால் முடியும்! நான் இன்று மாலையே உங்கள் வரவு பற்றிப் பூரணிக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து விடுகிறேன்..." என்று பெருமை பொங்கச் சொன்னார் அவர். அரவிந்தன் மௌனமாக 'ஆகட்டும்' என்பது போல் தலையசைத்தான். அவர்கள் இருவரும் திருவேடகத்திலிருந்து மதுரை திரும்பி வந்தனர். 'ஒரு முக்கியமான காரியமாகச் சந்தித்துப் பேசிவர அரவிந்தனை அனுப்புவதாக' அன்று மாலையில் கோடைக்கானலுக்கு தந்தி கொடுத்துவிட்டார் மீனாட்சிசுந்தரம். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|