![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
34
கரையா எனது மனக்கல்லும் கரைந்தது கலந்து கொளற்கு என் கருத்தும் விரைந்து புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று பொய்படாக் காதல் ததும்பிமேற் பொங்கிற்று.
- இராமலிங்க அடிகள் பூரணியையும் மங்களேசுவரி அம்மாளையும் கல்கத்தா மெயிலில் ஏற்றிவிட்டுச் சென்னையிலிருந்து மதுரை திரும்பிய அரவிந்தன் வாழ்க்கையிலேயே அதுவரை உணர்ந்திருக்க முடியாத வேதனையையும் தனிமையையும் முதல் முதலாக உணர்ந்தான். மீனாட்சி அச்சகத்திலிருந்து தன்னுடைய வாழ்வு பிரியும் என்றோ, பிரிக்கப்படும் என்றோ கனவில் கூட எண்ணியிருக்கவில்லை அவன். எண்ணியிருந்தால் என்ன? எண்ணியிருக்காவிட்டால் என்ன? திடீரென்று கண்ட பயங்கரக் கனவுபோல் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. மீனாட்சிசுந்தரம் உயிரோடிருந்தால் இப்படி நடந்திருக்குமா? கேட்பார் பேச்சைக் கெட்டுக்கொண்டு மனிதர்கள் எவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாகவும், நன்மையற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த அச்சகமும் அதன் பொருள் வளமும் சிறப்படைவதற்கு இரவு - பகல் பாராமல் துன்புற்று உழைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து நொந்தான் அரவிந்தன். தகப்பனுக்கு மூத்தபிள்ளை உழைப்பதை விட அதிகமாக உழைத்தானே அவருக்கு? அந்த உழைப்புக்கு உண்மைக்கு செலுத்தப்பட வேண்டிய நன்றியுணர்வெல்லாம் அவரோடு அவரைப் போலவே மாய்ந்துபோய் விட்டனவா? மறக்கப்பட்டு விட்டனவா? சென்னையிலிருந்து திரும்பிய அன்று காலையில் தன் பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதற்காகக் கடைசியாய் அச்சகத்துக்குச் சென்றான். பெட்டி படுக்கைகளையும், வேட்டி துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பின போது அவற்றில் சிலவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு பூரணியின் தம்பி திருநாவுக்கரசும் உடன் வெளியேறி விட்டான். விசாரித்ததில், "எனக்கு நேற்றோடு கணக்குத் தீர்த்து வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். இனிமேல் இங்கென்ன வேலை" என்றான் திருநாவுக்கரசு. அச்சகத்திலிருந்து ஒழித்துக் கொண்டு வெளியேறும்போது, கூடியவரை எவருடைய கண்களிலும் படாமல் வெளியேற வேண்டும் என்றுதான் அரவிந்தன் எண்ணியிருந்தான். ஆனால் அப்படி முடியவில்லை. அவன் வெளியேறுகிற நேரம் பார்த்தா அவனைத் தேடிக் கொண்டு வசந்தாவும் முருகானந்தமும் அச்சக வாயிலில் காரில் வந்து இறங்க வேண்டும்? முருகானந்தம் புன்னகையோடு கேட்கலானன். "என்ன கோலம் இது. எங்காவது வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாயா அரவிந்தன்? அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துதான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய்?" "முருகானந்தம்! இது வெளியூர்ப் பயணம் அல்ல! என்னுடைய வாழ்க்கைப் பயணம்" என்று சொல்லி மெல்லச் சிரித்தான் அரவிந்தன். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று தானே அவனுடைய திருக்குறள் சொல்லுகிறது. ஆனாலும் தான் சிரித்த சிரிப்பு அப்போது முழுமையாக இருந்திருக்க முடியுமென்பதில் அவனுக்கே நம்பிக்கை ஏற்படவில்லை. "விளங்கும்படியாகச் சொல் அரவிந்தன். எனக்குப் புரியவில்லை" என்றான் முருகானந்தம். அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை அரவிந்தனுக்கு. "இன்னும் எப்படியப்பா விளக்குவது? பதவுரை, பொழிப்புரை சொல்ல வேண்டுமா என்ன? இந்த மீனாட்சி அச்சகத்தை மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளை இருவரிடமும் ஒப்படைத்தாயிற்று. எனக்கும் இதற்கும் இனியொரு தொடர்பும் இல்லை. எனக்கும் இந்தப் பயல் திருநாவுக்கரசுக்கும் தங்கிக் கொள்ள இடம் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மங்கம்மாள் சத்திரத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விடுதியிலோ இரண்டு மூன்று நாட்கள் தங்கிக் கொண்டு அப்புறம் வேறு இடம் பார்க்கலாமென நினைக்கிறேன்." "நன்றி கெட்ட உலகம்" என்று கருவினான் முருகானந்தம். அரவிந்தனுக்கு இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவே முருகானந்தத்துக்கு வேதனையாயிருந்தது. "ஒரு சத்திரத்துக்கும் போக வேண்டாம். நம் வீடு எங்கே போயிற்று? மாடியில் எல்லா அறையும் காலிதான். நீங்கள் நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும். பூரணியக்காவிடமே திருப்பரங்குன்றம் வீட்டை ஒழித்துக் கொண்டு நம் வீட்டோடு வந்துவிடும்படி அம்மா வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு இது மாதிரி ஏற்பட்டு வெளியிடத்தில் போய் நீங்கள் தங்குவதை நாங்கள் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தோமென்றால் அம்மா திரும்பி வந்ததும் கோபித்துக் கொள்வாள். கண்டிப்பாக நீங்கள் வேறு இடத்துக்குப் போகக்கூடாது" என்று அரவிந்தனிடமும் திருநாவுக்கரசிடமும் இருந்த பெட்டி படுக்கைகளை வாங்கி காருக்குள் திணிக்கலானாள் வசந்தா. முருகானந்தம் உள்ளம் துடித்துப் பேசினான். "என்ன இருந்தாலும் மற்றவர்களை மன்னிக்கிற பண்பு உனக்கு இத்தனை அதிகமாக இருக்கக்கூடாது அரவிந்தன். உன்னுடைய சாது குணத்தாலும், மன்னிக்கிற சுபாவத்தாலும் பலரைக் கெடுதல் செய்ய துணியும்படி ஆக்கியிருக்கிறாய் நீ. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று தான் உலகம் கணக்கிடுகிறது. ஒரு தரமாவது கொட்டிக் காண்பிக்க வேண்டுமப்பா நீ." "மன்னிக்கவும், பதிலுக்குக் கெடுதல் செய்யவும் இது என்ன பெரிய விரோதமா! ஏதோ அந்த அம்மாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். மாப்பிள்ளைகள் அச்சகத்தை எடுத்துக் கொண்டு புதிய முதலீட்டுடன் பெரிய அளவில் என்னென்னவெல்லாமோ விரிவாகச் செய்யப் போகிறார்களென்றும் கூறினார்கள். 'நன்றாகச் செய்யட்டும் எனக்கும் மகிழ்ச்சிதான்' என்று சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன், அவ்வளவுதான்." "அப்படிச் சாதாரணமாக இருக்க முடியாது அரவிந்தன். யாரோ பின்னால் நின்று கொண்டு திட்டமிட்டுக் கெடுதல் செய்திருக்கிறார்கள். நீ என்னிடம் மறைக்கிறாய்! ஆனாலும் என்னால் இந்தச் சூழ்ச்சி நாடகத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து சொல்ல முடியும். இன்று மாலைக்குள் கண்டுபிடித்துச் சொல்லவில்லையானால் என் பெயர் முருகானந்தம் இல்லை. நீ என்னவோ ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை போல் சிரித்துப் பேசினாலும் மனம் வேதனைப்படுகிறது என்று உன் முகம் காட்டுகிறதே அப்பா." "அதெல்லாம் ஒன்றுமில்லை முருகானந்தம்! இந்த விநாடியோடு நீ இதை மறந்துவிடுவதுதான் நல்லது" என்று அமைதியாகக் கூறி முருகானந்தத்தைச் சமாதானப்படுத்தினான் அரவிந்தன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வசந்தாவும் முருகானந்தமும் வற்புறுத்தி தானப்ப முதலித் தெரு வீட்டுக்கே அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். "ஆனாலும் நீ கெட்டிக்காரன் தானப்பா. இவ்வளவு பெரிய காரியம் நடந்தும் அன்று அவர்களோடு சென்னை புறப்படும்போது கூட என்னிடமோ அவர்களிடமோ ஒரு வார்த்தை சொல்லவில்லையே நீ" என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றபின் மறுபடியும் அரவிந்தனைக் கடிந்து கொண்டான் முருகானந்தம். "தம்பி! கவலைப்படாதே! வேறு ஓர் அச்சகத்தில் உனக்கு வேலை தேடித்தருவது என் பொறுப்பு. ஒரு வேலையுமே கிடைக்கவில்லையானால் என்னுடைய தையல் கடைக்கு வந்துவிடு. தொழில்களில் எதுவுமே குறைவுடையதில்லை. தொழிலையும் சொல்லிக் கொடுத்து மீனாட்சி அச்சகத்தில் கொடுத்ததை விடப் பத்து ரூபாய் கூடவே சம்பளம் தருகிறேன் நான்" என்று பூரணியின் தம்பி திருநாவுக்கரசை முதுகில் தட்டிக் கொடுத்து முருகானந்தம் உற்சாகப்படுத்தினான். தனக்கு வேண்டியவர்கள் சோர்வடைந்து கிடப்பதை ஒரு கணமும் பொறுக்காதவன் அவன். மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியில் வசதியான அறை ஒன்றில் அரவிந்தனைத் தங்கச் செய்திருந்தாள் வசந்தா. குளியலறையும் இணைந்த வசதியான இடம் அது. "கூச்சமோ தயக்கமோ இல்லாமல் இங்கேயே பழகலாம். இது உங்களுக்கு புது இடம் இல்லை அண்ணா. உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயே மாடியில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன" என்றாள் வசந்தா. மரியாதையோடும் அன்புடனும் அரவிந்தனுக்கு ஓடியாடி உபசாரங்கள் செய்தாள் அவள். "எனக்காக நீங்கள் எல்லோரும் அதிகமான சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி செலுத்தப் போகிறேனோ? நிம்மதியாக எங்கள் கிராமத்துப் பக்கம் போய் பத்து பன்னிரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரலாமென நினைக்கிறேன்" என்று முருகானந்தத்தையும் வசந்தாவையும் நோக்கி அரவிந்தன் கூறினான். "அதெல்லாம் எங்கும் போகக்கூடாது. உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பல வகையிலும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறீர்கள். அக்கா கல்கத்தாவிலிருந்து திரும்புகிறவரை எங்கும் நகரக் கூடாது" என்று இருவருமே அவனைத் தடுத்துவிட்டார்கள். காப்பி, சிற்றுண்டி, உணவு என்று வேளை தவறாமல் வாராது வந்த விருந்தாளியைப் போற்றி உபசரிப்பது போல் அரவிந்தனைக் கவனித்துக் கொண்டாள் வசந்தா. அன்று தையற்கடையைப் பூட்டிக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்த போது முருகானந்தம் அரவிந்தனுக்கு அந்தச் செய்தியைச் சொன்னான். "நான் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டுவிட்டேன் அரவிந்தன். எல்லாம் பர்மாக்காரர் செய்த வினைதானப்பா. திருச்சியிலும் திருநெல்வேலியிலும் மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் வேலை பார்த்த கம்பெனிகளின் முதலாளிகள் பர்மாக்காரருக்கு வேண்டியவர்கள்; அவரே முயன்று தகவல் கூறி அவர்களை அங்கிருந்து நீக்கச் செய்ததுடன் மாமனாரின் அச்சகத்தை எடுத்து நடத்தலாம் என்று யோசனையும் கூறி வேறோர் ஆள் மூலம் முதலீடு செய்வதற்கு நிறைய பண உதவியும் அளித்திருக்கிறாராம். அசுர வேலைகள் செய்கிறார் அப்பா அவர். அவருடைய ஆட்கள் நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களாமே. நீ கல்கத்தா மெயிலில் அவர்களை ஏற்றிவிடப் போனது, திரும்பியது, அச்சகத்திலிருந்து எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு இங்கே வந்தது எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர் ஆட்கள்! இந்த அசுர சாமர்த்தியம் தான் இன்றைய அரசியலில் வெற்றி பெறும் கருவி அரவிந்தன். நீ என்னவோ நேர்மையையும் உண்மையையும் முதலாக வைத்துத் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்கிறாய். இந்தக் காலத்தில் பிழை செய்யத் தெரிந்தவனுக்குத் தான் பிழைக்கத் தெரிகிறதப்பா" என்று முருகானந்தம் வந்து கூறிய போது 'பர்மாக்காரர்தான் இதை செய்திருக்க வேண்டும்' என முன்பே, தான் புரிந்து கொண்டிருந்த கருத்து அரவிந்தன் மனத்தில் இப்போது தெளிவாக உறுதியாயிற்று. அதை இன்னும் உறுதிப்படுத்துவது போல் அன்றிரவு பத்து மணிக்கு மேல் அந்த வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. தனக்கு விடப்பட்டிருந்த மாடியறையில் உட்கார்ந்து தன் மனத்தின் வேதனைகளையும் எண்ணங்களையும், பித்தன் போல் டைரியில் கிறுக்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். மணி பத்தேகால் ஆகியிருந்தது. கீழ் வீட்டில் எல்லோரும் உறங்கிப் போயிருந்தார்கள். இரவு விளக்கு நீல ஒளி பரப்பிக் கொண்டிருந்தது. கீழ் வீட்டில் அந்த நேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. கீழே யாராவது விழித்துக் கொண்டு எடுத்துப் பேசுவார்கள் என்று அரவிந்தன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். கீழே எல்லோரும் ஆழ்ந்து தூங்கிப் போயிருந்ததனால் யாருமே டெலிபோனை எடுக்கவில்லை. மணியடிக்கிற ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் மாடியிலிருந்து இறங்கிப் போய் டெலிபோனை எடுத்தான். 'யாருக்கு ஃபோன்' வந்திருக்கிறதென்று தெரிந்து கொண்டு அப்புறம் உரியவர்களை எழுப்பிப் பேசச் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டே அதை எடுத்த அரவிந்தன், 'மிஸ்டர் அரவிந்தன் இருக்கிறாரா?' என்று தன் பெயரே டெலிபோனில் விசாரிக்கப்படுவது கேட்டுத் திகைத்தான். ஒரு கணம் தயங்கிவிட்டு, "ஏன்? அரவிந்தன் தான் பேசுகிறேன். நீங்கள் யார்?" என்று அவன் பதிலுக்கு விசாரித்த போது, "இதோ கொஞ்சம் இருங்கள்" என்று எதிர்பக்கம் ஃபோன் யாரிடமோ மாற்றிக் கொடுக்கப்பட்டது. அடுத்த வினாடி, பர்மாக்காரரின் கடுமையான கட்டைக்குரல் அவன் செவிகளில் நாராசமாக ஒலித்தது. "நான் தான் பேசுகிறேன் தம்பி. குரலிலிருந்தே உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். இந்த நிமிஷம் கூட எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது. இப்போதும் குடி முழுகி விடவில்லை. கடைசியாக உன்னை கேட்கிறேன். தேர்தல் அபேட்சை மனுவை வாபஸ் வாங்க இன்னும் ஒரு வாரம் தவணை இருக்கிறது. நீ மட்டும் அந்தப் பெண்ணை வாபஸ் வாங்கச் செய்வதாயிருந்தால், மீனாட்சிசுந்தரத்தின் மாப்பிள்ளைகள் அச்சக நிர்வாகத்தை மறுபடியும் உன்னை அழைத்து ஒப்படைத்துவிட்டுப் போவார்கள். இன்னும் உனக்கு என்னென்ன வேணுமோ, அத்தனையும் நான் செய்து தரத் தயாராயிருக்கிறேன். அபேட்சை மனுவைத் திரும்பப் பெற அந்தப் பெண் கல்கத்தாவிலிருந்து வந்து போவதற்குத் தனி விமானம் (ஸ்பெஷல் ப்ளேன்) என்னுடைய செலவில் ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து..." "தயவு செய்வதற்கில்லை. முடியாது" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். தனது பதிலைக் கேட்டு பர்மாக்காரரின் புலி முகம் எவ்வளவு கொடிய மாற்றம் அடைந்திருக்கும் என்று கற்பனை செய்துகொண்டே மாடிப்படியேறித் தன் அறைக்குச் சென்றான் அரவிந்தன். 'நான் பூரணிக்காக விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியாயிற்று. ஆடம்பரமான கூட்டங்களையும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளையும் நிறுத்திவிட்டேன். பர்மாக்காரர் விளம்பரங்களுக்கும், ஆதரவு திரட்டும் ஏற்பாடுகளுக்கும் ஆயிரமாயிரமாகச் செலவழிக்கிறார். அப்படியிருந்தும் அவர் ஏன் என்னைக் கெஞ்சுகிறார்? ஏன் என்னைக் கண்டுப் பயப்படுகிறார்? பயமுறுத்துகிறார்? உண்மையின் ஒளியைக் கண்டு பொய்க்கு ஏற்படும் பயமா இது?' என்று எண்ணி வியந்தான் அவன். பூரணிக்காக முருகானந்தம் தொகுதியின் எல்லா இடங்களிலும் நம்பிக்கை வாய்ந்த மனிதர்கள் மூலம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பது அரவிந்தனுக்குத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே செல்வதற்குக் கூசிக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் வீட்டு மாடியிலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் நேரத்தைக் கழித்தான் அரவிந்தன். பூரணியின் இலங்கைச் சொற்பொழிவுகளை 'டேப்ரிக்கார்டரி'லிருந்து மீண்டும் மீண்டும் வைக்கச் சொல்லிக் கேட்டான். அந்தக் குரல் அவன் உள்ளத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து சாந்தியளித்தது. பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் நூல்களை உள்ளம் தோய்ந்து திரும்பத் திரும்பப் படித்தான். சோர்வு தோன்றிய போதெல்லாம் பூரணியின் முகத்தையும் சிரிப்பையும் நினைத்துக் கொண்டான். ஆழ்ந்த கருத்துக்கள் ஒலிக்கும் அமுதக் குரலைக் கேட்டு மகிழ்ந்தான். இலங்கையில் சைவ மங்கையர் கழகத்தில் பூரணி பேசியிருந்த ஒரு பேச்சு மிக அற்புதமாயிருந்தது. டேப்ரிக்கார்டரில் அந்தப் பேச்சை வைத்துக் கேட்கும் போதெல்லாம் அரவிந்தனுக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. உணர்ச்சிமயமான உயிரோட்டமுள்ள சிறந்த சொற்பொழிவு அது. 'திருவாரூர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு பரவை நாச்சியார் காதல் கொண்ட' பகுதியைப் பற்றிய பெரிய புராணப் பேச்சு. அந்தப் பேச்சின்போது பரவை நாச்சியாருக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் ஏற்பட்ட தெய்வீகக் காதலுக்கு விளக்கமாகக் 'கரையா எனது மனக்கல்லும் கரைந்தது' என்று இராமலிங்க அடிகள் வள்ளலார் பாடலைத் தேனொழுகப் பாடுகிறாள். 'பொய்படாக் காதல் தும்பி மேற்பொங்கிற்று' என்ற கடைசி வரியை அவள் பாடும்போது அவளுடைய உள்ளமே பொங்குவதைக் கேட்கிறான் அரவிந்தன். இலங்கையில் அந்தச் சொற்பொழிவின் நடுவே இந்தப் பகுதியைப் பேசும்போது பூரணிக்குத் தன்னைப் பற்றிய நினைவு வந்திருக்க வேண்டுமென்று அரவிந்தனுக்குச் சந்தேகமற விளங்கிற்று. எத்தனை முறை கேட்டும் இந்தப் பேச்சு அரவிந்தனுக்கு அலுக்கவில்லை. 'பொய்படா காதல் ததும்பி மேற்பொங்கிற்று' என்று அந்தப் பாடலில் இறுதி வரியை அவள் மேற்கோளாகப் பாடிக் கூவும் போது நெஞ்சைப் பிழிந்து அன்பாய் நெகிழவிட்டு அவனையே கூவியழைக்கிற மாதிரி இருந்தது. திரும்பத் திரும்ப அந்தப் பகுதியைக் கேட்டு அவளுடைய இலங்கைச் சொற்பொழிவுகள் அரவிந்தனுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. அவற்றின் கருத்தையும் கம்பீரத்தையும் உணர்ந்த போது அவள் தன்னைக் கீழே தள்ளிவிட்டு தொடர முடியாத உயரத்துக்குப் போய்விட்டதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய பேச்சுக்களில் மிகவும் கவனம் கரைந்து பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிய சமயத்தில் அரவிந்தன் தன் டைரியை எடுத்துக் கீழ்க்கண்டபடி எழுதினான். "பூரணி! நீ குறிஞ்சிப் பூவைப் போலச் சூடிக்கொள்ள முடியாத உயரத்தில் எட்ட இயலாத அருமையோடு பூத்திருக்கிறாய். தரையில் பூக்கும் எல்லாப் பூக்களையும் போல் அல்லாமல், மானிடக் கைகளால் எட்டிப் பறிக்க முடியாத மலைச்சிகரத்தில் எப்போதும் பறிக்க முடியாத கால அருமையோடு அலர்ந்திருப்பவள் நீ. குறிஞ்சிப்பூ மதிப்பதற்கும் வியப்பதற்கும் உரியது! சூடிக்கொள்ள முடியுமா! உயரத்தில் பூத்திருப்பதைக் கீழிருப்பவன் எட்டிப் பறிக்கலாமா? பறிக்க முடியுமா?" பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தா போய்ச் சேர்ந்த தினத்தன்று நலமாக வந்து சேர்ந்த விவரத்தை அறிவிப்பதற்காக அங்கிருந்து டெலிபோனில் பேசினார்கள். டெலிபோன் வந்த போது அரவிந்தன் அருகில்தான் இருந்தான். வசந்தா பேசினாள். "உங்கள் செய்தி பற்றிச் சொல்லவா அண்ணா? நீங்கள் பேசுங்களேன்" என்று வசந்தா வேண்டிக் கொண்டபோது அரவிந்தன் மறுத்துவிட்டான். "இங்கு நடந்திருப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்லிப் போன இடத்தில் வீண் மனக்குழப்பத்தோடு இருக்கும்படி செய்து விடாதே. 'எல்லோரும் நலம்' என்று சொல்லி டெலிபோனை வைத்துவிடு, நான் ஒன்றும் பேசவேண்டாம்" என்றான் அவன். பூரணியின் தம்பி திருநாவுக்கரசுக்கு வேறு இடங்களில் சரியான வேலை கிடைக்காததனால் முருகானந்தம் தன் தையற்கடையிலேயே அவனை வைத்துக் கொண்டுவிட்டான். நாலைந்து நாட்களில் அரவிந்தனும் மனம் தேறி வெளியே நடமாடத் தொடங்கியிருந்தான். பொதுத் தொண்டுகளில் பழைய ஆர்வத்தோடும் துடிதுடிப்போடும் ஈடுபட்டு வேதனைகளை மறக்கலானான் அவன். மணி நகரத்திலிருந்த ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவிச் சங்கத்திலிருந்து திருமணம் செய்ய பணமில்லாமல் வயது வந்த பெண்களை வைத்துக் கொண்டு திண்டாடும் பல ஏழைப் பெற்றோருக்கு உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தான். பஸ் நிலையத்துக்குப் பக்கத்திலும் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியிலும் உள்ள நடைபாதைவாசிகளாகிய அநாதைகளுக்கு விடிவு உண்டாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று நண்பர்களைக் கலந்து ஆலோசனை செய்தான். 'நாகரிகப் பெண்களும், குழந்தைகளும் பிச்சையெடுக்க வருகிற இழிநிலையைப் போக்க உடனே ஏதாவது வழி செய்தாக வேண்டும்' என்று முனிசிபல் கவுன்சிலராகிய தன் நண்பர் ஒருவரைக் கொண்டு நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தான். பொன்னகரத்து உழைப்பாளி மக்களின் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசத் திருக்குறள் வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இருந்தது. அரவிந்தனுக்கே தெரியாமல் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததனால் முருகானந்தம் அவனுடன் அதிகம் அலைய முடியாமல் இருந்தது. "எங்கே அலைகிறாய் முருகானந்தம்? ஆளையே பார்க்க முடியவில்லையே?" என்று அரவிந்தன் கேட்டதற்குத் தையல் கடையைப் பெரிதாக்கி விரிவு செய்யும் காரியங்களுக்காக அலைவதாகப் பொய் சொல்லி வைத்திருந்தான் முருகானந்தம். எப்பாடு பட்டாவது தேர்தலில் பர்மாக்காரரின் ஆளுக்குத் தோல்வியும் பூரணிக்கு வெற்றியும் கிடைக்கச் செய்துவிட வேண்டுமென்ற வைராக்கிய வெறியுடன் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான் அவன். பொய்யின் முகத்தில் கரி பூசிவிட வேண்டுமென்று அவன் சபதம் செய்து கொண்டிருந்தான். கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாளோ நாலாம் நாளோ, பூரணி அங்கிருந்து விமானத் தபாலில் அரவிந்தன் அச்சக முகவரிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தாள். அச்சக ஊழியன் அந்தக் கடிதத்தை முருகானந்தத்திடம் தையல் கடையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான். அன்று அரவிந்தன் தன்னுடைய கிராமத்துக்குப் போயிருந்ததனால் மறுநாள் மாலை அவன் திரும்பிய பின்பே பூரணியின் கடிதத்தை முருகானந்தம் அவனிடம் சேர்க்க முடிந்தது. கடிதத்தின் உறையைப் பிரித்ததும், உள்ளே கம்மென்று சண்பகப்பூ மணம் எழுந்து பரவியது. ஆறேழு பக்கம், எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த கடித மடிப்பின் நடுவே இருந்து உலர்ந்து பாடமாகிப் படிந்த சண்பகப் பூக்கள் இரண்டும் உதிர்ந்தன. பூரணியே தலைநிறையச் சண்பகப் பூ வைத்துக் கொண்டு மணக்க மணக்க பக்கத்தில் வந்து நிற்பது போல் அரவிந்தனுக்கு அப்போது ஒரு பிரமை உண்டாயிற்று. வாடி ஒட்டிச் சப்பட்டையாய்ச் செப்புத் தகடு போல் படிந்திருந்த அந்தப் பூக்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சட்டைப் பையில் போட்டுக் கொண்டபின் கடிதத்தைப் படிக்கலானான். அன்பிற்கினியவருக்கு, பூரணியின் வணக்கங்கள். இப்படி ஒரு பெரிய கடிதத்தை இலங்கைக்குப் போயிருந்த போதே உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அங்கு ஓய்வே இல்லாமற் போய்விட்டதனால் அதற்கு வாய்க்கவில்லை. இப்போது இங்கே வாய்க்கிறது. மனத்தில் நிறைந்திருக்கும் உற்சாகமான அனுபவங்களையும் புதுமைகளையும் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கடிதத்தின் உறையைப் பிரித்தவுடன் உங்களுக்குப் பிரியமான சண்பக மணத்தை நுகர்ந்திருப்பீர்கள். நேற்று இங்கே ஒரு கூட்டத்தில் அபூர்வமானச் சண்பகப் பூமாலை போட்டார்கள் எனக்கு. அப்பப்பா...! என்ன மணம்! என்ன மணம்! அந்த மாலையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவந்து உங்கள் மேசையில் வைத்து நுகர்ந்து பார்க்கச் சொல்லி மகிழவேண்டும் போல் ஆசையிருந்தது எனக்கு. இரண்டு முழுப்பூக்களை மாலையிலிருந்து எடுத்து இந்தக் கடிதத்தில் வைத்து எழுதி முழு மாலையையும் வைக்க முடியாத குறையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். பேலூர் இராமகிருஷ்ணா மடத்தின் வடபுறம் ஹுக்ளியாற்றின் கரையில் பசும்புல் தரையில் அமர்ந்து கொண்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் அருகில் மங்களேசுவரி அம்மாள் உட்கார்ந்து தம் மக்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்வைக்கு எட்டின தொலைவு வரை ஹுக்ளியின் அக்கரையில் தட்சிணேசுவரத்துக் காளி கோயிலும் அப்பால் எல்லையற்ற கல்கத்தா நகரமும் மங்கிய ஓவியம் போல் தெரிகின்றன. கல்கத்தாவைப் போல் இத்தனை பெரிய நகரத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகான நகரம். தனியாக அரவிந்தன் மாடியறையில் உட்கார்ந்து கடிதத்தின் இந்த இடத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கீழேயிருந்து வசந்தாவின் குரல் அவனை அழைத்தது. "அண்ணா! உங்களை யாரோ டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்." அரவிந்தன் கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தான். தனியாய் மேசையில் எடுத்து வைத்திருந்த டெலிபோனைக் கையில் எடுத்தான். "கடைசித் தடவையாகக் கேட்கிறேன். வாபஸ் வாங்க நாளைக்கு ஒரே நாள் தான் மீதமிருக்கிறது. மரியாதையாக வாபஸ் வாங்கச் செய்! என்னை மிகவும் பொல்லாதவன் ஆக்காதே. நான் கெட்ட கோபக்காரன்" என்று பர்மாக்காரரின் குரல் சீறியது. பதில் சொல்லாமல் ஓசை எழும்படி 'ணங்'கென்று டெலிபோனை வைத்தான் அரவிந்தன். அவன் முகம் சிவந்தது. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தா, "என்ன அண்ணா, யார் அது? ஏதாவது நியூஸென்ஸா?" என்று வினவினாள். "இல்லை வேறு ஒரு வம்பு" என்று ஏதோ சொல்லி மழுப்பினான் அரவிந்தன். அப்போது வெளியிலிருந்து முருகானந்தமும் வந்து சேர்ந்தான். "கொஞ்சம் மாடிக்கு வா அரவிந்தன்! உன்னிடம் தனியாக ஒன்று சொல்லவேண்டும்" என்று முருகானந்தம் வந்ததும் வராததுமாகக் கூறியது அரவிந்தனின் கலக்கத்தை அதிகமாக்கியது. குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|