![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
18
பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு) இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப - ஒருவாற்றான் நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர்.
- குமரகுருபரர் மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறார் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக் கொட்டிக் குவித்தாற்போல் மஞ்சள் குளித்து மயங்கிய இந்த மாலைப் போதுதான் எவ்வளவு மயக்கம் தருகிறது! தமிழில் மருள்மாலை என்று இதற்குப் பெயர் வாய்த்தது எத்தனை பொருத்தமானது? தமிழ்ச்சங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்கு அருகே கையில் துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தான் அரவிந்தன். அன்றைக்குச் சந்தை நாள் போலிருக்கிறது. திருவிழாக் கண்டதுபோல் வீதி கொள்ளாமல் மக்கள் கூடிக் கொண்டும், சிதறிக்கொண்டும் இருந்தார்கள். இரண்டு பக்கத்து நடைபாதைகளிலும் கூடைக்காரிகளின் கும்பல் தரைமேல் ஹோலிப் பண்டிகை கொண்டாடின மாதிரி தாறுமாறாகத் துப்பின வெற்றிலைச்சாறு - கால்களைப் பதித்து நடக்கக் கூசிற்று. மழை வந்து விட்டால் கைகளில் தூக்கிச் சுமக்க நேரிடுமே என்று செருப்பணியாமல் வந்திருந்தான் அரவிந்தன். பாதங்களைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் மிகவும் விருப்பமுள்ளவன் அவன். வாதா மரத்தின் பழுத்த இலைகளைப் போல் நல்ல பாதங்கள் அவனுக்கு. செம்பொன் நிறம். அதில் அழகாகவும் அளவாகவும் விரல்கள். நீளமும் அகலமுமான பெரிய பாதங்கள் அவை. எப்பொழுதாவது அரவிந்தனின் பாதங்களைக் கவனிக்க நேருகிறபோது அவனோடு சம வயதுள்ள நண்பர்கள், "பெண்பிள்ளைகளின் பாதங்களைப்போல் எப்படி அப்படி கால்களை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்கிறாய்" என்று கேலியாகக் கேட்பதுண்டு. பித்த வெடிப்பும், சேற்றுப்புண்ணுமாக முரடு தட்டிப்போன முருகானந்தத்தின் பாதங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கால்களைக் கவனி தம்பி; உன்னைப் போலவே அவையும் முரடாகிக் கொண்டிருக்கின்றன' என்பான் அரவிந்தன். "எனக்கு இந்த அழகுக் கவலையே உண்டாவதில்லை அரவிந்தன்! எங்கள் வீடு இருக்கிற பகுதிக்குப் பெயர்தான் பொன்னகரம் என்று பிரமாதமாக வைத்துவிட்டார்கள். உண்மையில் பொன்னரகம் தான் அது. சேறும் சகதியும், மேடும் பள்ளமுமான அந்தத் தெருக்களில் நடக்கிற கால் இப்படியில்லாமல் வேறு எப்படி இருக்கும்?" என்று முருகானந்தத்திடமிருந்து பதில் வரும். பூரணி கொடைக்கானலில் இருந்து படிப்பதற்காகக் கேட்டிருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவதற்காகவே அரவிந்தன் அப்போது தமிழ்ச்சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஏராளமான நூல்கள் நிறைந்த பெரிய நூல் நிலையம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்தது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் இந்தத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்தார். இதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்பாக, மூன்று தமிழ்ச்சங்கங்களும் அழிந்த குறையைத் தீர்ப்பதற்காக இராமநாதபுரம் அரச குடும்பத்தினரும் பாண்டித்துரைத் தேவர் என்ற பெயருள்ளவருமான வள்ளலும் இந்த நான்காம் சங்கத்தைத் தோற்றுவித்தார்கள். செந்தமிழ் வளர்த்த சேதுபதி அரசர்களோடு பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்துக்கு இளமையிலிருந்தே நட்புறவுண்டு. ஒவ்வொரு நவராத்திரி விடுமுறையின்போதும் இராமநாதபுரத்தில் கலைமகள் விழாக் கவியரங்கத்துக்குச் சென்று சிறந்த மரியாதைகளோடு திரும்பி வருவார் அழகிய சிற்றம்பலம். அப்பாவின் அந்த உறவும் பெருமையும் இப்போது பூரணிக்குப் பயன்பட்டன. தன் வீட்டில் இல்லாத சில அரிய நூல்களை அவள் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தில் எடுத்துப் படிப்பது வழக்கமாயிருந்தது. பூரணி கொடைக்கானலிலிருந்து எழுதியிருந்த கடிதத்தையும், புத்தகங்களைப் பற்றிய குறிப்பையும் காட்டியவுடனே நூல் நிலையத்தில் சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அரவிந்தன் அவற்றைப் பையில் நிரப்பிக் கொண்டு திரும்பினான். அச்சகத்தில் போய் அந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி கொடைக்கானலுக்கு மறூநாள் காலை பார்சல் செய்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு விரைந்தான் அவன். சந்தை சிறிது சிறிதாகக் கலைந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தை என்று பேர்தானேயொழிய வியாழக்கிழமையிலும் சந்தை கூடும். அங்கே தேசிய இயக்கக் காலத்தின் சின்னமாகத் 'திலகர் சதுக்கம்' என்ற புதுப்பெயரையும் ஏற்றுக்கொண்டிருந்தது அந்த சந்தை மைதானம். சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறிகளை விற்று முடித்தபின், மாலை ஆறரை மணிக்கு மேல் அரசியல் சந்தை கூடுகிற இடமாக மாறிவிடும் அது. அதாவது பொதுக்கூட்டங்கள் அங்கே நடைபெறும். உணர்ச்சிமயமான பேச்சாளர்கள் தங்கள் முதல் இல்லாத சரக்கை விற்கிற இடமும் அதுதான். இப்படிப் பகலில் காய்கறியும் இரவில் அரசியலும் விலை போய்க் கொண்டிருந்த அந்த இடத்தின் வாயிலில் வீதி வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தை அங்கே சந்தித்தான் அரவிந்தன். "என்ன அரவிந்தன்! தமிழ்ச் சங்கத்தையே பைக்குள் வாரி அடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாய் போலிருக்கிறதே" என்றான் முருகானந்தம். "ஒன்றுமில்லையப்பா, பூரணி கொடைக்கானலிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லி எழுதியிருந்தாள். அவளுக்கு அனுப்புவதற்காக வாங்கிக் கொண்டு போகிறேன்." "எனக்குக்கூட கடிதம் வந்தது..." என்று சிரித்துக் கொண்டே களிப்போடு பேச்சைத் தொடங்கிய முருகானந்தம் மின்சாரத் தொடர்பு அற்றதும் பட்டென்று ஒலி நிற்கிற வானொலி மாதிரி உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்தினான். சொல்ல வேண்டாமென்று இருந்ததை வாய்தவறிச் சொல்லியது போன்ற உணர்வு அவன் முகத்தில் நிலவியது. அரவிந்தன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உல்லாசமும் தடுமாற்றமும் கலந்த நூதனமானதொரு குழப்பத்தோடு தோன்றினான் முருகானந்தம். அரவிந்தனின் பார்வையைத் தன் முகத்தில் தாங்கிக் கொள்ள இயலாதவன் போல் தலையைச் சாய்த்துக் கொண்டு எங்கோ பராக்குப் பார்த்தான் அவன். மலராத பூவின் மகரந்த மணம்போல் அப்போது அவனுடைய முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் நாணமும் கூச்சமும் கலந்து நிற்பதை அரவிந்தன் கண்டான். "உனக்கு யாரிடமிருந்து கடிதம் வந்தது முருகானந்தம்? தனியாக உனக்கு வேறு கடிதம் எழுத இயலவில்லை என்றும், உன்னிடம் தன் வணக்கத்தைக் கூறும்படியும் உன்னுடைய பூரணியக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருக்கிறாளே அப்பா?" இந்தக் கேள்விக்குப் பின் முருகானந்தத்தின் உல்லாசத் தடுமாற்றம் இன்னும் அதிகமாயிற்று. அரவிந்தன் விடவில்லை மேலும் அவனைத் துளைத்தெடுத்தான். "என்னப்பா தம்பி, என்ன சங்கதி? முகம் ஒரு மாதிரிக் கோணிக் கொண்டு போகிறது. கடிதம் வந்திருக்கிறது என்கிறாய். யார் எழுதினதென்று கேட்டால் பதில் சொல்லாமல் பராக்குப் பார்க்கிறாய்?" "ஒன்றுமில்லை அரவிந்தன் வந்து..." "வந்தாவது, போயாவது. ஆண்பிள்ளையாய் இலட்சணமாய்க் கூச்சமில்லாமல் பேசு ஐயா." "அந்தப் பெண் வசந்தா கொடைக்கானல் போய்ச் சேர்ந்ததும் என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தான் வாய் தவறி உன்னிடம்..." "சொல்லிவிட்டாயாக்கும்! பலேடா தம்பி. காதல் கதை ஆரம்பமாகியிருக்கிறதா? எத்தனை நாட்களாக இந்தக் கடிதம் எல்லாம் வந்து போகிறதப்பா?" "சத்தியமாகச் சொல்கிறேன் அரவிந்தன், எனக்கு ஒரு வம்பும் தெரியாது. அந்தப் பெண்ணாகத் தான்..." "டேய்! டேய்! சத்தியம் என்கிற வார்த்தை ரொம்பவும் பெரிது. அதை இங்கே இழுக்காதே. இது சாதாரண காதல் விவகாரம்" என்று வேடிக்கை பண்ணினான் அரவிந்தன். முருகானந்தம் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தான். "ஓகோ! அப்படியா சங்கதி! பதில் எழுதி விட்டாயோ இல்லையோ!" எழுதி விட்டேன் என்பது போல் தலையாட்டினான் முருகானந்தம். அரவிந்தன் சிரித்தவாறே மேலும் கூறினான். "இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது, அப்பனே! சினிமா வம்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு வரத் திருச்சி போய் திரும்பின அன்றிலிருந்தே நீ தானப்ப முதலித் தெருவுக்கு அடிக்கடிப் போகத் தொடங்கிவிட்டாயே; 'அந்த அம்மா ஏதோ தைப்பதற்குத் தருகிறேன் என்று வரச் சொன்னதாக' அல்லவா போய்க் கொண்டிருந்தாய்? இதுதானா அந்தத் தையல் வேலை". "இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்" என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம். "இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் - இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயோ?" என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத்திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத்தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பிவிட்டாலும் பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்தபோது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அரவிந்தனுக்கு. 'இந்தத் தொடர்பைப் பற்றி மங்களேஸ்வரியம்மாள் என்ன நினைப்பார்? பூரணி என்ன நினைப்பாள்? முருகானந்தத்தின் பெற்றோர்கள் தான் என்ன நினைப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? நாலு தடவை சந்தித்து சிரித்துப் பேசியும் பழகி விட்டால் மனத்தில் இந்த அசட்டுத்தனமான கனவுகள் உண்டாகிவிடுகின்றன. இராத்திரி அச்சகத்துக்கு வந்தால் முருகானந்தத்தைக் கண்டிக்க வேண்டும்?' என்று தீரச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், அரவிந்தன். 'செல்வத்திமிரும் இறுமாப்பும் நிறைந்தவள். ஆடம்பா அசட்டுத்தனங்களும், வெளிப்பகட்டும் உள்ளவள்' என்றுதான் வசந்தாவைப் பற்றிப் பூரணி சொல்லி இருந்தாள். அத்தகைய இறுமாப்பு நிறைந்த பெண் உள்ளம் அதற்கு நேர்மாறான கொள்கைகளும் சாதாரண வாழ்க்கை வசதிகளும் உள்ள முருகானந்தத்தை நோக்கி எப்படி மலர்ந்தது? எவ்வாறு நெகிழ்ந்தது? சிந்திக்க சிந்திக்க அந்த இருவரின் இணைப்பு விளங்காப் புதிராகவே தோன்றியது அவனுக்கு. 'கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபலம் என்ற உணர்வே! உனக்குத்தான் பெண் என்று மறுபெயர் சூட்டியிருக்கிறார்கள்' என்னும் கருத்துப்பட 'ஹாம்லெட்' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. உலகத்து அறிஞர்களின் பொன்மொழிகளைக் குறித்து வைக்கும் தனது நோட்டுப் புத்தகத்தில் இக்கருத்தைக் குறித்திருந்தான் அவன். எல்லாப் பெண்களையும் இந்தச் சட்டத்தில் அடக்க விருப்பப்படவில்லை அவன் மனம். 'பூரணியைப் போல் அறிவு வளர்ச்சியிலும் தொண்டு, தியாகங்களிலும் கரைந்து போய் சொந்தச் சபலங்களை மறந்து விடுகிறவர்களும் இருக்கிறார்களே!' அரவிந்தனின் சிந்தனை எதிரே வந்து கை நீட்டிய ஓர் இளைஞனால் கலைந்தது. "சார், சாப்பிட்டு ஏழு நாளாச்சு சார்! ஊருக்குத் திரும்பிப் போகலாமென்றால் கையில் காசு இல்லை சார். ஏதாவது உதவி செய்யுங்க சார். வயிற்றுப் பசி தாங்கமுடியலை சார். இன்னும் சிறிது நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் இப்படியே நடுவீதியில் செத்துப் போய் விழுந்து விடுவேன் போலிருக்கிறது சார்" என்றான் அந்த இளைஞன் கண்ணீரும் கம்பலையுமாக. வேகமாக நடந்து கொண்டிருந்த அரவிந்தன் நின்றான். துவண்டு ஒடிந்து விழுந்து விடுகிறாற்போல நின்ற அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தான். நாலைந்து தடவைகள் ரப்பரால் அழித்து எழுதின காகிதம் மாதிரி வாலிபம் வீறுகுன்றிச் செழிப்பற்ற முகம். தொடர்ந்து பல நாட்களாகக் குளிக்காத தோற்றம். வேர்வையேறி அழுக்கடைந்த சட்டை வேட்டி. குழிந்து இமையடியில் பள்ளம் வாங்கிப் பஞ்சடைந்த கண்கள். இந்த நாட்டு ஏழ்மை ஏக்கங்களுக்கும், பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும் பிரதிநிதியாக வந்தவன் போல் நின்றான் அந்தப் பஞ்சை வாலிபன். தன்னை காண்பவரிடத்தில் இரக்கத்தை உண்டாக்கும் குழைவைத் தன் முகத்திலும் தோற்றத்திலும் கைகளிலும் காட்டினான் அவன். அரவிந்தன் கேட்டான். "உனக்கு என்ன ஊர் அப்பா?" இராமநாதபுரம் சீமையில் வறட்சியும் பஞ்சமும், நித்திய ஆட்சிபுரியும் பகுதியைச் சேர்ந்த ஒர் ஊரைச் சொன்னான் அந்த வாலிபன். "எதுவரை படித்திருக்கிறாய்?" "எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறேன் சார்! டைப்ரைட்டிங் தெரியும். சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதினேன். தேறவில்லை வேலை தேடி மதுரைக்கு வந்தேன், சார்!" அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'படித்துப் பரீட்சை எழுதிவிட்டு மனத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோடு பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து இறங்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இன்று இந்த நாட்டில் பெரிய நகரத்தின் ஆரவாரமிக்க தெருக்களில் வயிற்றுக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுடைய மானத்தைக் காப்பாற்றாத வரையில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது இந்த நாட்டில்' என்று கொதித்தது அவன் உள்ளம். "சார், பசி பொறுக்க முடியவில்லை!" தனது இடது கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலது கையை நீட்டினான் அவன். ஜிப்பா பையில் கையை விட்டு முழு ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் வைத்து, "ஏதாவது வாங்கிச் சாப்பிடு, அப்பா!" என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தான் அரவிந்தன். தன்னையே அந்த இளைஞனின் நிலையில் வைத்து எண்ணிப் பார்த்து வருந்தினான் அவன். 'மீனாட்சி அச்சகமும், கருணையும் பெருந்தன்மையும் உள்ள அதன் உரிமையாளரும் தடுத்தாட் கொண்டிருக்காவிட்டால் தான் இப்படி ஏதாவது ஒரு பெரிய நகரத்தின் புழுதி படிந்த தெருக்களில் வயிற்றுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டியவன் தானே' என்பதைச் சிந்தித்த போது மேலும் நெகிழ்ந்து குழைந்தது அவன் உள்ளம். கையில் தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்கள் கனத்தை விட மனத்தில் அதிகமாகக் கனத்த சிந்தனையோடு அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். அச்சகத்து வேலை நேரம் முடிந்து வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். "நீங்க தமிழ்ச் சங்கத்துக்குப் புறப்பட்டுப் போனப்புறம் 'ஐயா' வந்தாருங்க. இப்போ கீழாவணி மூலவீதிப் பேப்பர்க் கடைக்குப் போயிருக்காரு. நீங்க வந்தால் உங்களை எங்கேயும் வெளியே போய்விடாமல் இங்கேயே இருக்கச் சொன்னாரு. உங்ககிட்ட ஏதோ முக்கியமான சங்கதி கலந்து பேசணுமாம்" என்று அச்சகத்து ஊழியன் (ப்யூன்) அரவிந்தனிடம் வந்து சொன்னான். அப்போது அரவிந்தனுடைய மனத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் தெருவில் சந்தித்த இளைஞனைப் பற்றியதாக இருந்தது. அதிலிருந்து தற்காலிகமாகத் தன்னை மீட்டுக் கொண்டு, "நான் இங்கேதானப்பா இருக்கப் போகிறேன். இன்றைக்கு வெளியில் எங்கும் போகப் போவதில்லை. நீ உள்பக்கம் போய் அங்கே நம் திருநாவுக்கரசு இருந்தால் நான் கூப்பிட்டேனென்று வரச்சொல்" என்று ஊழியனிடம் சொல்லி அனுப்பினான் அவன். சிறிது நேரத்தில் பூரணியின் தம்பி திருநாவுக்கரசு வந்து நின்றான். "சார், என்னைக் கூப்பிட்டீர்களாமே?" "ஆமாம்! இந்தா இந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி பார்சல் செய்வதற்கேற்ற முறையில் வைத்துவிடு. நாளைக் காலையில் உன் அக்காவுக்கு அவற்றை அனுப்ப வேண்டும்". கையோடு புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசு உள்ளே சென்றான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு 'பசி பசி' என்று பரிதாபமாகக் கதறி நின்ற அந்த வாலிபன், மறுபடியும் நினைவின் வட்டத்தில் வந்து அரவிந்தனை வாட்டினான். நெஞ்சு நெகிழ்ந்து உருகியவாறே தனது குறிப்பு நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினான் அரவிந்தன். "தாங்க முடிந்ததற்கு மேல் அதிகப்படியான சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறவன் ஏலாமையோடு முனகுகிற மாதிரி வாழ்க்கையில் இன்று எங்கும் ஏலாமையின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்ளோடு கூடிய செடி பெரிதாக வளர வளர முள்ளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருப்பதைப் போல உரிமைகளும் விஞ்ஞான விவேக வசதிகளும் நிறைந்து வாழ்க்கை தழைத்து வளர வளர அதிலுள்ள வறுமைகளும் பிரச்சினைகளும் பெரிதாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. குற்றம் குறைகளோடு தப்பாக எடுக்கப் பெற்ற புகைப்படத்தை அப்படியே என்லார்ஜ் செய்தால் அந்தக் குறைகளும் பெரிதாகத் தெரிகிற மாதிரித்தான் இருக்கிறது இப்போதுள்ள பாரத நாட்டு வாழ்க்கை 'வளர்ச்சி'! இந்த நாட்டு இளைஞர்கள் சோர்வும் பசியும் ஏமாற்றமும் அவநம்பிக்கைகளும் கொண்டு படிப்புக்கேற்ற வேலையின்றி உழைப்புக்கேற்ற புகலிடம் இன்றி வேதனைப்படுகிறார்கள். இரயிலின் முன் விழுந்தும் மரக்கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டும் நஞ்சு தின்றும் சாவதற்கா இவர்கள் பிறந்தார்கள்?" பேனா வெள்ளைக் காகிதத்தைக் கிழித்து விட்டு நின்றது. மை இல்லை. நல்ல கருத்துகள் மனத்துக்குள் வெள்ளமாகப் புரண்டு வருகிற நேரத்தில் வரண்டு போய்த் தொல்லை மிகக் கொடுக்கும் பேனாவின் மேல் கோபம் வந்தது அரவிந்தனுக்கு. அதை அப்படியே முறித்துப் போட்டுவிடலாமா என்று சினம் தோன்றியது. எழுதும்போது பேனாவில் மை இல்லாமல் போகிற இடையூறு போல் பெரிய இடையூறு உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது என்ற கொதிப்புடன் மேசை இழுப்பறையைத் திறந்து அவன் மைக்கூட்டை எடுத்தான். நீர் வறண்டு தரை தெரியும் வெய்யிற் காலத்து வானம் பார்த்த பூமிக் கிணறு மாதிரி மைக்கூடும் காலியாக இருந்தது. பொறுக்க முடியாத எரிச்சல் மூண்டது அவனுக்கு. அந்த எரிச்சலோடு இரைந்து கத்தி, ஊழியனை மை வாங்கி வரச் சொல்லலாமெனக் கூப்பிட்டான். பின்புறம் ஏதோ கை வேலையாக இருந்ததனால் ஊழியன் உடனே வரவில்லை. "எல்லாப் பையன்களுக்கும் காது அடைத்துப் போய்விட்டது. நாமே போய் வாங்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்து வெளியேறி மேலக்கோபுரத் தெருவில் திரைப்பட நிலையத்துக்கு அருகில் இருந்த 'ஷாப்'பில் போய் மைப்புட்டி வாங்கிக் கொண்டு திரும்பினான். புதுப்படம் போட்டிருந்தார்கள் போலும். திரைப்பட நிலையத்தின் முன் 'கியூ' வரிசை நீண்டிருந்தது. தற்செயலாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களின் மேற்சென்ற அரவிந்தனின் பார்வை வியப்புடன் ஒரு முகத்தின் மேல் நிலைத்துப் பதிந்தது. கோபுரம் சரிந்து விழுவது போல் மனத்தில் ஓர் உணர்வு உடைந்து சரிந்தது. நெற்றி சுருங்கப் பார்த்தான் அவன். ஏழு நாட்களாகப் பட்டினி கிடந்து சாவதாகப் பஞ்சைப் பாட்டுப்பாடி அரவிந்தனுடைய அனுதாபத்தையும் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு போனானே, அந்த வாலிபன் வாயில் 'சிகரெட்' புகை சுழலச் சினிமா பார்ப்பதற்காக பன்னிரண்டரையணா டிக்கெட் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அதைக் கண்டதும் உலகமே தலைகீழாகச் சுழல்வது போலிருந்தது அரவிந்தனுக்கு. முருகானந்தமாயிருந்தால் அந்த வாலிபனை வரிசையிலிருந்து வெளியே இழுத்துச் செம்மையாக உதைத்திருப்பான். அரவிந்தனுக்கும் மனம் குமுறிற்று. அருகில் போய் அவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்ற துடிப்பும் கூட ஏற்பட்டது. ஆனால் வரிசை நகர்ந்ததன் காரணமாக அதற்குள் அந்த வாலிபன் உட்பக்கம் முன்பாகப் போயிருந்தான். 'எக்கேடும் கெட்டுத் தொலையட்டும்! இவர்கள் உருப்படப் போவதில்லை. இரயிலுக்குப் போகிற அவசரம் போலப் பரபரப்போடு பலப்பல தவறுகளைச் செய்து இரவும் பகலும் பாழாக்கித் தங்கள ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சிந்தனையில்லாமல் கோயில் காளைகள் போல் திரிகிற இந்த விடலைக் கும்பல் எந்த வழியால் உய்யப் போகிறது? இவர்களைத் திருத்துவதற்கு மகாத்மாக்கள் பிறக்கவேண்டும். வெறும் மனிதர்களால் முடியாது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பதவியுடையவர் வாரத்துக்கு ஒருமுறை தான் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். மாதம் முப்பது ரூபாய் வாங்குகிற கூலியாள் வீட்டில் மனைவி குழந்தையும் பட்டினி கிடக்க ஒரே படத்துக்கு ஏழு தடவைகள் போகிறான். கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது? அப்போதே அந்த வாலிபனிடம் ஒரு ரூபாயை முழுசாகத் தூக்கிக் கொடுத்திருக்கக் கூடாது. நானே ஓட்டலுக்குக் கூட்டிப் போய்ச் சாப்பாடு பண்ணி அனுப்பி வைத்திருக்க வேண்டும். பரவாயில்லை, எனக்கு இதுவும் ஒரு பாடம் தான். சுலபமாக நம்பி ஏமாறதபடி என்னை நான் விழிப்பாக வைத்துக் கொள்வேன் இனிமேல்' என்று நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி வருவதைத் தவிர அரவிந்தனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அச்சகத்தில் போய் உட்கார்ந்து புத்தகப் பார்சலோடு கிடைக்குமாறு தனித் தபாலில் பூரணிக்கு ஒரு கடிதமும் எழுதினான். முருகானந்தம்-வசந்தா கடிதத் தொடர்பு வேறு அவன் மனத்தை உறுத்திச் சந்தேகங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆயினும் அதுபற்றி அவன் பூரணிக்கு ஒன்றும் எழுதவில்லை. மீனாட்சிசுந்தரம் ஏதோ முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டுமென்று தன்னை இருக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறாரே. அது என்ன விஷயமாக இருக்குமோ, என்னும் சந்தேகங்களைப் பின்னலாயிற்று அவன் மனம். அரவிந்தன் மீனாட்சிசுந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாள் வந்தாள். 'இரண்டு மூன்று முக்கியமான கடிதங்கள் மங்கையர் கழகத்துக்கு வந்திருப்பதாகவும் அவற்றுக்குப் பூரணியைக் கலந்து கொண்டுதான் பதில் எழுதவேண்டும்' என்றும் சொல்லிப் பூரணியின் கொடைக்கானல் முகவரியை அரவிந்தனிடம் கேட்டாள் அந்த அம்மாள். "இல்லை, கடிதம் எழுதிக் கலந்து கொள்ளத்தான் முகவரி கேட்டேன்" என்று அம்மாள் கூறிவிடவே புத்தகம் கொடுத்தனுப்புவது சாத்தியமில்லையென முகவரி மட்டும் எழுதிக் கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனாள் அந்தப் பெண்மணி. 'உடல்நலமில்லாமல் ஓய்வு கொள்ளப் போன இடத்திலும் கூட பூரணியைக் கவலையின்றி நிம்மதியாய் இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான் அரவிந்தன். இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. மணி ஏழே முக்காலை எட்டிய சமயம், சிறிது நேரத்தில் மீனாட்சிசுந்தரம் வந்து சேர்ந்தார். "இப்படி உள்ளே வா அரவிந்தன்! நான் பேசவேண்டிய விஷயம் மிக அந்தரங்கமானது. உன்னுடைய உதவியில்லாமல் இந்தத் தீர்மானத்தையும், நினைவையும் நான் நிறைவேற்றிக் கொள்வதற்கில்லை. இதனால் நமது தொழிலும் செல்வாக்கும் பெருகலாம். எத்தனையோ இலாபங்களும் சௌகரியங்களும் சுலபமாகக் கிடைக்க இது ஒரு வழி" விஷயத்தை விண்டு சொல்லாமல் பூடகமாகவே பேசிக் கொண்டு போனார் அவர். "என்ன விஷயமென்று நீங்கள் சொன்னால்தானே எனக்குத் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவருடைய மேசைக்கு முன்னால் நின்றான் அரவிந்தன். "முதலில் நீ உட்கார்ந்து கொள்!" அரவிந்தன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான். "நான் கேட்பதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே! பூரணி நீ சொன்னால் எதையும் தட்டமாட்டாள் அல்லவா?" எதற்காக, ஏன், என்ன நோக்கத்தோடு இதை அவர் கேட்கிறாரென விளங்காமல் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|