12
"எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப் பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய் என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!" உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. 'அவன் ஊரில் இல்லை' என்று தம்பி அச்சகத்துக்குப் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது. 'அரவிந்தன் எங்கே போயிருக்கலாம்? எங்கே போனால் என்ன? போகும் போது என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய்விட்டது? அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா? ஐயோ! அன்றைக்குக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப்பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன்? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின் தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறுமனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒருபோதும் தயாராயில்லை. அச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். "புதிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கம்பெனிக்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச் சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் மாலை உன்னைக் கோயிலில் சந்தித்ததாகச் சொன்னானே? அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம். பூரணி கேட்டாள், "என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்."
"வருகிற நாள்தான்! அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை" என்று மறுமொழி கூறினார் அவர். 'அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத்தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன்மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று, என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை உற்றுக்கண் திறந்தது.
"இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா! உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள்? நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா? பணமோ, வேறு வகை உதவிகளோ எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல் கேளம்மா. நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்" என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சிசுந்தரம். "அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசியமானால் சொல்கிறேன். 'அவர்' ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்" என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச்சொல்லித் தானே வலுவில் வேண்டிக்கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள். மறுநாள் காலை எழுந்திருந்தபோது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பதுபோல் தோன்றியது. அன்று காலை மங்களேஸ்வரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்தபோது காரியதரிசி அம்மாளும் உடன் வந்திருந்தாள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களை மறந்து, பார்த்து அனுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேஸ்வரி அம்மாளுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள். "நானும் துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்கு சாத்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும், பேயையோ, பூதத்தையோ பார்த்துவிட்டவள் போல் பதறிக் கொண்டு எழுந்து போய்விட்டாய்! நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு? ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு அப்படி ஒரு கடிதம் வரும்போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்" என்று காரியதரிசியம்மாள் சொல்லியபோது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்ததென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேஸ்வரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு "நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்" என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பிவிட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித்தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அக்கா ஓர் ஐந்து ரூபாய் வேண்டும்." முகத்தை மறைத்தாற்போல் தூக்கிப் பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்துகொண்டு நின்றான். "இப்போது எதற்கடா பணம்? போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்?" "சம்பளத்துக்காக இல்லையக்கா. பரீட்சை நெருங்குகிறது! கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும்போது மை கசிகிறது..." பூரணி தம்பியின் முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு. "ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது? குளித்தாயோ இல்லையோ? தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போக வேண்டுமா? என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே? அதற்காக இப்படியா இருப்பாய்? காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய். மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை. வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கேதான் படிக்கிறாயோ, என்னதான் செய்கிறாயோ?" தம்பி தலையைக் குனிந்தான்! கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது. "அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ. சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வரவர உன் போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு" என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால்தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக்கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. "அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு எங்கெங்கோ போய்விடுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், 'அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்' என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா" என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது. அவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்கவில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக்கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள். 'இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது' என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக்கொண்டு அலமாரிக் கதவைச் சாத்தியபோது "உள்ளே வரலாமா?" என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள். அரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய் கதறியிருப்பாள். அன்று கோயிலில் அவனிடம் அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோயிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் 'வாருங்கள்' என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பிரயாண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பியிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக் கத்தி நுனிபோல் கூராக இருக்குமே, அதுபோல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன். "உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது இப்போது? நான் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் உன்னைக் கோயிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத்தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய்விட்டாய்..." என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத்தொடங்கியபோது பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்துகொள்கிற முறை. 'உங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன்? பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்! அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தைதான் போலும்' என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டான். 'காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றிவிட்டுத்தான் போனேன்' என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான். "இதெல்லாம் எதற்கு?" என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி. அன்பு கனிய அவன் கூறலானான்: "இன்றைக்குக் காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி! அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது? உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய் விட்டேன். நேரே இங்குதான் வருகிறேன்." "நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வரமாட்டேன் என்கிறது. உடம்புக்கு ஒன்றுமில்லை... மனக்குழப்பங்களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம்..." இவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்தபோதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். "இவன் இருக்கிறானே என்பதற்காக நீ மனம்விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த்தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். 'ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப்பயல் போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே' என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை, முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே, அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர்களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம்..." அரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கை கூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. "அக்கா! உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். 'எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான்! அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா? இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் 'அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள்' என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இதுதான். எனக்குத் தெரியும்" என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்துகொண்டது. "இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி" என்று அரவிந்தன் அப்போதும் சிரித்துக் கொண்டுதான் சொன்னான். "அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது." பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் பொறுமையாக முழுவதும் படித்தான். "இந்தா! நீயும் படி" என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு? அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு. "இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோயிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப் பார்த்ததும் பேசாமல் இருந்தால் நல்லதென்று முட்டாள்தனமாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. அப்போதிருந்த ஆத்திரத்தில் அப்படியே செய்துவிட்டேன். அதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு உண்டோ இல்லையோ? நீங்கள் என்னை மன்னித்துதான் ஆகவேண்டும்." இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். முருகானந்தம் கொதிப்போடு பூரணியை நோக்கிக் கூறினான், "அக்கா! அண்ணன் உங்களை மன்னித்துவிடலாம். ஆனால் உங்களையும் அண்ணனையும் பற்றி இப்படி ஒரு கடிதம் எழுதின கைகளை நான் மன்னிக்க முடியாது. அந்தக் கீழ்மை நிறைந்த விரல்களை என் கைகளாலேயே தேடிப்பிடித்து முருங்கைக் காயை முறிப்பது போல் முறித்தெறிய வேண்டும்." "பொறு முருகானந்தம்! காலம் வரும். இந்த மொட்டைக் கடிதம் எழுதியதற்கே அந்தக் கைகளின் மேல் நீ இத்தனை ஆத்திரப் படுகிறாயே? அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்" என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. "நீ சும்மா இரு அரவிந்தா! கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வருந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா?" என்று குமுறலோடு பேசினான் முருகானந்தம். "பூரணி! முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகுதூரம்" என்றான் அரவிந்தன். "உணர்ச்சிவசப்பட்டாலும் நன்றாகப் பேசுகிறாரே! உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இளைஞர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே?" என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள். "எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற்கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற்சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு" என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான். "அப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளாதே தம்பீ! உன் வாயிலிருந்து தப்புத் தப்பாக வெளிப்படுகிற கருத்துக்களுக்கும் நான் தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப்போகிறாள்." பூரணி இதைக் கேட்டு கலகலவென நகைத்தாள். அரவிந்தனிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள், முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச்சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால், முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்தனின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது. முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே வெறி மையமாக இருந்தது. காலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ? இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி. "நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய்? தேநீர் வேண்டாம்..." என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. "வருகிறேன் அக்கா" என்று ஆயிரங்காலம் பழகிவிட்டாற்போன்ற உரிமையோடு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம். அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஓதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது. "என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிச்சடையாக விட்டுவிட்டாய்? சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி! வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ? இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை" என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா! என் வாழ்வில் மனநிறைவே இல்லையா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே! நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன்? எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள். ஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். 'அண்ணன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை' என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஓதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லி சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி. அவன் போய்ப் பார்த்துவிட்டு "அண்ணனை அங்கே காணவில்லை" என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோரு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. 'எங்கே போய்த் தேடுவது? எப்படித் தேடுவது?' என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தபோது, மங்களேஸ்வரி அம்மாளின் கார் வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது, பயமாகவும் இருந்தது. "பூரணி! இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் போட்டுவிட்டுப் போய்விட்டாளடி! காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு" என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|