3
"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என்செய்வோம் இனி அவ் வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"
-நற்றிணை விளக்கம் துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. "தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ. பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு. பூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள். பூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது. "சிறுபிள்ளைக் கைதானே அம்மா! மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு" என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான். "அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்" என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை விசாரித்தாலும் 'பாலு' என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் 'தவறு தன்னுடையதில்லை' என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார். "ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். "கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்" என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள். வைத்தியர் சிரித்தார். "உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர். அப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா? பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. "உங்களுக்கெல்லாம் வேடிக்கையாயிருக்கிறதா? அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் "அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். "நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா! இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்?" என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர். 'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன? பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின. "அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?" அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. "இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்" என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது. காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது? நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே! ஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள். வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில மில்களும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது. வீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே. "அரசு! வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி. பனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் ஜன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுக்கள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்துக் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி. கோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் 'ஓம்' என்ற பெரிய எழுத்துக்கள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த 'ஓம்' இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த 'ஓமை' உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த 'ஓம்' மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் 'ஓம்' என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த 'ஓம்'. வீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள். தேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம். வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது. கமலா - அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் - மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக 'கமலா' என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு 'பூரணியா?' என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள். "உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா?" "அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்" என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி. "வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய்? மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்." "வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்" பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. "நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது." "தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன? கமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். "சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே" என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் 'கூடை தட்டிப் பறம்பு' என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள். "இதுதான் அந்த ஸ்டோர். ஊரைவிட்டு விலகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்" கமலா சொல்லி முடித்தாள். வாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஸ்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஸ்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்துவாறு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான். "செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை. இப்போ எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே ரூம் தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஒரு ஆளு அட்வான்ஸோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு". நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்' என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள். "இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா? இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது" என்று கமலாவின் காதில் மெல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது. "எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே! நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள். "இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா! சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும்..." என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் 'சுர்ர்' ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது. மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள். திடீரென்று, "ஐயோ! சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே" என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |