23
கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து - இங்கு உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
- சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் 'பேய்க்கரும்பு' என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச் சுவைதான் இராது. பெரிய மனிதர்களைப் போல் தோன்றிக் கொண்டு பெருந்தன்மை சிறிதுமில்லாத கயவர்களாய்க் கொடியவர்களாய் வாழும் மனிதர்கள் சிலர் நல்ல அரிசியில் கல்போல் சமூகத்தில் கலந்திருக்கிறார்கள். இவர்கள் வெளித் தோற்றத்துக்குக் கரும்பு போல் தோன்றினாலும் உண்மையில் சுவை வேறுபடும் பேய்க் கரும்பு போன்றவர்கள் தான். கிராமத்திலிருந்து தன்னோடு மதுரைக்கு வந்த அந்தப் பெரிய மனிதரின் சுய உருவம் புரிந்த போது அரவிந்தனுக்கு உள்ளம் கொதித்தது. உள்ளக் கருத்து ஒன்றும் கள்ளக் கருத்து ஒன்றுமாக வாழ்ந்து ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய கொடியவர்களை உலகம் உணர்ந்து கருவறுக்கும் காலம் என்று வரப் போகிறதென்று குமுறினான் அவன். அந்த ஆளை முதலிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதற்காகத் தன்னை நொந்து கொண்டான். புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்குப் போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலத்துச் சமுதாய வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சரியான கருவியாக இருக்கிறது. காரணம்? ஒவ்வொரு மனிதனும் குழப்பங்கள் நிறைந்த ஒரு புத்தகமாக இருக்கிறான். படித்துப் புரிந்து கொள்வது அருமையாக இருக்கிறது. அரவிந்தனும் அந்த முதியவரும் மதுரையை அடைந்தபோது மாலை மூன்றரை மணி இருக்கும். கிராமத்திலிருந்து புறப்படும் போது இரயிலில் மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அவர் முதல் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அவனையும் முதல் வகுப்புக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார். "சீ! சீ! பட்டிக்காட்டுக் கும்பல் புளிமூட்டை மாதிரி அடைந்து கிடக்குமே மூன்றாம் வகுப்புப் பெட்டியில்? நிற்கக் கூட இடம் இருக்காது. அந்த டிக்கெட்டை இப்படிக் கொடு. திருப்பிக் கொடுத்துவிட்டு முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து பேசிக் கொண்டே போகலாம்" என்றார். "அதனால் என்ன பரவாயில்லை, எனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்து பழக்கம் கிடையாது. நீங்கள் முதல் வகுப்பில் வாருங்கள். நான் மூன்றாம் வகுப்பிலே வருகிறேன். மதுரையில் இறங்கினதும் சந்திப்போம்" என்று அவரை மறுத்துவிட்டு விலகிச் செல்ல முயன்றான் அரவிந்தன். அவர் விடவில்லை. "பழக்கம் இல்லையாவது, ஒன்றாவது தம்பி! புதுச் சொத்து எல்லாம் வந்திருக்கிறது, பணக்காரனாயிருக்கிறாய். ஸ்டேட்டஸ் (கௌரவம்) குறைகிறாற் போல் நடந்து கொள்ளலாமா? இந்தக் காலத்தில் புகழும் கௌரவமும் சும்மா வந்து விடாது. பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் அப்பனே!" ஒரு தினுசாகச் சிரித்தவாறே கண்களைச் சிமிட்டிக் கொண்டே, அவனை நோக்கி இப்படிச் சொன்னார் அவர். அவருடைய இந்தச் சொற்கள் அரவிந்தனின் செவியில் கீழ்மைப் பண்பின் ஒரே குரலாக ஒலித்தன. 'இத்தனை வயதான மனிதர் இவ்வளவு அனுபவங்களும் பெற்று முதிர்ந்த நிலையில் பேசுகிற பேச்சா இது? வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக முடிவு செய்திருக்கிறார். பல பேருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஒரு மனிதர் இப்படியா பேசுவது?' என்று வருந்தினான் அரவிந்தன். செல்வத்தை முதலீடாக வைத்துக் கொண்டு போலியான வழியில் புகழும், கௌரவமும் ஈட்ட முடிகிற காலமாக இது இருந்த போதிலும், அவரைப் போன்ற பொறுப்புள்ள ஒருவர், அதைப் பொன்மொழி போல் எடுத்துத் திருவாய் மலர்ந்தருளியது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதர் மேல் அவனுடைய மனம் கொண்டிருந்த மதிப்பில் ஒரு பகுதி குறைந்துவிட்டது. ஆனாலும் அவர் அவனை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய விடவில்லை. வலுக்கட்டாயமாக அவனது பயணச் சீட்டைப் பறித்துக் கொண்டு போய் முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வந்தார். அவன் மிகக் கண்டிப்போடு மறுக்க முயன்றான். முடியவில்லை. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் முதல் வகுப்புப் பெட்டியில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டு விட்டார். வண்டியும் புறப்பட்டு விடவே, அவன் அங்கேயே இருக்க வேண்டியதாகப் போயிற்று. இரயிலின் இருபுறமும் பசுமையான வெற்றிலைக் கொடிக்கால்கள் நகர்ந்தன.
"நான் என்னப்பா செய்வது? பேச்சுத் துணைக்கு வேறு ஆள் இல்லை. தனியாகப் போவதற்கு என்னவோ போலிருக்கிறது. உன் கொள்கையைப் பலாத்காரமாக மாற்றி விட்டேனே என்று என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே" என்று சிரித்து மழுப்ப முயன்றார் அந்தக் கிழவர். பதுங்கிப் பம்மிப் பாய வருகிற காலத்தில் வேங்கைப் புலியின் முகத்தில் தோன்றுகிற தந்திரமும் குரூரமும் இணைந்த சாயலைக் கண்டிருந்தால் அந்தக் கிழவரின் முகத்தைக் காண வேண்டிய அவசியமில்லை. அதே சூழ்ச்சிக் களையோடு கூடிய முகம் தான் அவருக்கும் வாய்த்திருந்தது. மதுரையில் அவரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு அரவிந்தனுக்கு ஏற்பட்டிராவிட்டாலும் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சிறுவயதிலிருந்தே ஊர் உறவுகளிலிருந்து விலகி அநாதை வாழ்க்கை வாழ்ந்து விட்டதனால் அவனுக்குத் தன்னூர் ஆட்களிடம் பழக்கமே இல்லை. அதிலும் இப்போது முதல் வகுப்பில் அவனோடு வந்து கொண்டிருக்கிற இந்த மனிதர் சிறுவயதிலேயே ஊரைவிட்டு, நாட்டை விட்டு பர்மாவுக்குப் போய் வட்டிக்கடை வைத்துப் பணம் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தவர். திரும்பி வந்தபின் கிராமத்துக்குப் போகாமல் பலவிதமான வாழ்க்கை வசதிகளுக்காக மதுரையிலே பங்களா கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார். அவருடைய சொந்தப் பெயரைச் சொன்னால் மதுரையில் தெரியாது. 'பர்மாக்காரர்' என்றால் நன்றாகத் தெரியும். வாலிப வயது முடிந்து நடுத்தரப் பருவத்தையும் கடந்து முதுமையை எட்டப்போகிற தருணத்தில் விநோதமான விதத்தில் அவர் பர்மாவிலிருந்து திரும்பியிருந்தார்.
வட்டிக்கடை வைத்துச் சேர்த்த பணமும் பகட்டும், வாழ்ந்து சோர்ந்திருந்த முதுமையும் மட்டுமின்றி; பச்சைக் கிளிபோல் எழில் கொஞ்சும் பர்மியப் பெண் ஒருத்தியையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார் அவர். பர்மாவுக்குப் போகும்போது ஒற்றைக் கட்டையாகப் போனவர் அவர். அதற்காக எப்போதும் ஒற்றைக் கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்குகிற போது எத்தனையோ நினைவுகள் தானாகவும் எளிதாகவும் நிறைவேறிவிடுகின்றன. உள்ளத்தைப் பித்துக் கொள்ளச் செய்யும் வனப்பு வாய்ந்த பர்மியப் பெண்களின் அழகில் மயக்கமும் சபலமும் கொண்டு ஏங்கிய நாட்கள் அவருடைய பர்மா வாழ்வில் அதிகமானவை. கடைசியில் தாயகம் திரும்புவதற்கு முந்தின ஆண்டில் அவருடைய ஆசை நிறைவேறி விட்டது. தம்முடைய வயதில் மூன்றில் ஒரு பங்கு வயது கூட ஆகாத ஒரு பர்மியப் பெண்ணை அவர் மணந்து கொண்டார். அனுமதியும் பெற்றுத் தம்மோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். விளையாடுவதற்குப் பிரியமான பொம்மை வாங்கிக் கொண்டு வந்ததுபோல் களிப்புடன் வந்தார் அவர். கொள்ளக் குறையாத செல்வத்தையும் கொள்ளை அழகு கொஞ்சும் மனைவியையும் இட்டுக் கொண்டு மதுரை திரும்பியபின் அவருக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய யோகங்கள் அடித்தன. பொது வாழ்வில் பல நண்பர்களும் சங்கங்களும் சேர்ந்து அவரைப் பெரிதுபடுத்தினர். பிரமுகராக்கினர். செல்வாக்கும் புகழும் அரசியலுக்கு அழைத்தன. அதிலும் நுழைந்து பதவியும் பகட்டுமாக வாழ்ந்தார் 'பர்மாக்காரர்'. மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய காம்பவுண்டுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனி 'எஸ்டேட்' ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் 'பர்மாக்காரர் எஸ்டேட்' என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பர்மாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான். ஆனால் பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்லோரும் அங்கீகரித்துக் கொண்டு போற்றவும் உதவி செய்தது. அதனால் வளர்ந்து வளம் பெற்றிருந்தார் அவர். அவரைப் பற்றி அரவிந்தன் அறிந்திருந்தவை இவ்வளவுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு உறவு முறையைக் கருதிப் 'பர்மாக்காரர்' வந்து போகிறாரா? அல்லது பணக்காரருக்குப் பணக்காரர் என்ற முறையில் விட்டுக் கொடுக்கக் கூடாதென்பதற்காக வந்தாரா' என்று நினைத்து வியந்தான் அரவிந்தன். முதல்நாள் மயானத்திலிருந்து திரும்பும் போது பர்மாக்காரர் தன்னிடம் பூரணி தேர்தலில் நிற்கப் போவது பற்றி அனுதாபத்தோடு எச்சரித்ததும் மீனாட்சிசுந்தரத்தைப் பற்றி விசாரித்ததும் இயல்பான நல்லெண்ணத்தால்தான் என்று சாதாரணமாக எண்ணியிருந்தான் அவன். பர்மாக்காரருடைய கீழ்மைத் தனமான பேச்சுக்களும், வயது வந்த முதுமைக்கும், பொறுப்புக்கும், பொருந்தாமல் அடிக்கடி அவர் கண்களைச் சிமிட்டிக் குறும்பு செய்வதும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே ஒழிய, அவர் கெட்டவராகவும், பயங்கரமான சூழ்ச்சிக்காரராகவும் இருப்பாரென்று அவன் நினைக்கக் கூட இல்லை. அவருடைய முகத்துக்குத் தான் புலியின் களை இருந்தது. இரண்டு இதழோரங்களிலும் கடைவாய்ப் பல் நீண்டிருப்பதன் காரணமாக எத்தனையோ சாது மனிதர்களுக்குக் கூட இப்படிப் புலிமுகம் இருப்பதை அரவிந்தன் கண்டிருக்கிறான். எனவே சிந்தித்துப் பார்த்தபின் அது கூட அவனுக்குப் பெரிய தப்பாகப் படவில்லை. இரயில் பயணத்தின் போது கூட அவர் அவனிடம் நெருக்கமாகவும் அன்பாகவும் தான் நடந்து கொண்டார். மதுரை நகரத்து அரசியல் நிலைமையைப் பற்றி, மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப் போகும் நோக்கம் பற்றித் தனக்குத் தெரியாத இரகசியம் எல்லாம் அவருக்குத் தெரிந்திருப்பதைக் கண்டு அரவிந்தனே அயர்ந்து போனான். யாரைப் பற்றிப் பேசினாலும் ஒருவிதமான அலட்சியத்தோடு தூக்கி எறிந்து பேசினார் அவர். "உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் இன்றைக்குத்தான் ஏதோ கொஞ்சம் வசதியா இருக்கிறான் அப்பா. இந்தப் பிரஸ் வைக்கிறதுக்கு முன்னாலே சண்முகம் மில்ஸ்னு ஒரு மில்லிலேயே நிறையப் பங்கு (ஷேர்) வாங்கினான். மில் திவாலாப் போச்சு. அப்போதே ஆள் மஞ்சள் கடுதாசி நீட்டி ஐ.பி. கொடுத்து விட்டுத் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போயிருக்கணும். எனக்கு நல்லாத் தெரியும்" என்று அவன் மனம் விரும்பாத வழியில் கீழான பேச்சை ஆரம்பித்தார் பர்மாக்காரர். முதல் வகுப்பில் உட்கார்ந்து மூன்றாவது வகுப்பு விஷயங்களைப் பேசினார் அவர். "எல்லாப் பணக்காரர்களுமே அப்படித்தான் ஐயா! ஒரு சமயம் கைநொடிக்கும். ஒரு சமயம் வளரும்" என்று அவருடைய பேச்சை வேறு வழிக்குத் திரும்ப முயன்றான் அரவிந்தன். "அதுக்கு இல்லை தம்பி! இந்தக் காலத்தில் ரொம்பச் சின்ன ஆளுங்க எல்லாம் வேகமாக மேலே வந்திடப் பார்க்கிறாங்க. இந்த பூரணிங்கற பொண்ணு ஏதோ தமிழ்ப் பிரசங்கம், மாதர் கழகமின்னு பேர் வாங்கி நாலுபேருக்குத் தெரிஞ்ச ஆளாயிட்டுது. இதனோட தகப்பன் அழகியசிற்றம்பலம் கஞ்சிக்கில்லாமே பஞ்சைப் பயலா மதுரைக்கு வந்தான். நம்ம வக்கீல் பஞ்சநாதம் பிள்ளைதான் அப்போ காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவர். போனால் போகுதுன்னு இந்த ஆளுக்குத் தமிழ் வாத்தியாரா வேலை போட்டுத் தந்தானாம் பஞ்சநாதம்! இப்போ என்னடான்னா உங்க முதலாளி, அந்த ஆளோட பெண்ணைத் தேர்தலிலே நிறுத்த வந்திட்டார்." அரவிந்தன் முகத்தைச் சுளித்தான். அவனுடைய உள்ளத்தில் தெய்வங்களுக்கும் மேலாக அவன் நினைத்திருந்த பெரியவர்களைப் புழுதியில் தள்ளி புரட்டுகிறாற் போல் நாவு கூசாமல் பேசினார் பர்மாக்காரர். வாயடக்கமில்லாமல் இப்படித் தாறுமாறாகப் பேசுகிறவர்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. 'பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் சன்மார்க்கமில்லை. பிறருடைய தீமையைப் பேசாமலிருப்பது கொல்லாமையைக் காட்டிலும் உயர்ந்த சன்மார்க்கம்' என்று நினைக்கிறவன் அரவிந்தன். சிறிது சிறிதாகத் தமது பேச்சாலேயே அவனுடைய உள்ளத்தில் மதிப்பிழந்து கொண்டிருந்தார் பர்மாக்காரர். மதுரை நிலையத்தின் கலகலப்பினிடையே புகுந்து இரயில் நின்றது. அவருடைய பர்மாக்கார மனைவியும், அவளுடன் அவருக்குப் பிறந்தவளான ஒரே மகளும் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தான் அரவிந்தன். பர்மிய இரத்தமும் தமிழ் இரத்தமும் கலந்த அழகில் அவருடைய மகள் காண நன்றாக இருந்தாள். தமிழ்நாட்டுக் கோலத்தில் நிலவு முகமும், மயக்கும் விழிகளுமாக நின்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மட்டும் மதுரைக்கு வந்து இத்தனை காலமான பின்னும் பர்மியத் தோற்றமும் அதற்கேற்ற அலங்காரங்களும் மாறவில்லை. கவிதை உணர்வின் புனிதமான எழுச்சியோடு அவர்கள் தோற்றங்களை அரவிந்தன் பார்த்தானே தவிர, வேறு விரசமான நினைவே இல்லை. அவன் மனதுக்கு விரசமாக நினைக்கவும் தெரியாது. "நம்ப உறவுக்காரப் பிள்ளையாண்டான். 'அரவிந்தன்' என்று தங்கமான பெயர். இவனுடைய சிற்றப்பாவின் கேதத்துக்காகத் தான் நான் போயிருந்தேன்" என்று பெண்ணுக்கும் மனைவிக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார். "நான் என்னவோ பர்மாவில் போய் பணத்தைத் திரட்டிக் கொண்டு வரலாம்னு போனேன் அப்பா! திரும்புகிற காலத்தில் இதோ இருக்கிறாளே, இந்தப் பொல்லாதவள் என் மனத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவிட்டாள். நான் இந்த அழகியையே கொள்ளையடித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டேனப்பா" என்று மிகவும் நகைச்சுவையாக மனைவியை அவனுக்கு அறிமுகம் செய்தார். அப்போது அந்தப் பர்மிய நங்கை சற்றே தலைசாய்த்து சிவந்த முகம் மேலும் சிவக்க ஒரு நாணப் புன்னகை பூத்தாள். உலகத்து மகாகவிகளின் நளின எழில்கள் யாவும் அந்தப் பர்மிய நங்கையின் சிரிப்பில் போய் இணைந்து கொண்டனவோ எனும்படி அழகாயிருந்தது அந்தச் சிரிப்பு. "எனக்குக் கோடைக்கானல் போக வேண்டும். இப்படியே பஸ் நிலையத்துக்குப் போனால் நாலு மணிக்குக் கோடைக்கானல் போகிற கடைசி பஸ் இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். பதினாறாம் நாள் காரியத்துக்கும் நீங்கள் கண்டிப்பாய் வந்துவிட வேண்டும்" என்று இரயில் நிலையத்திலிருந்தே பர்மாக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட முயன்றான் அரவிந்தன். இரயிலில் அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட பின்பு அவரிடமிருந்து விரைவில் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு. "நீ ஏனப்பா, பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாய். இவ்வளவு தூரம் வந்தவன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கோடைக்கானலுக்கு நாளைக்காலையில் போகலாம் தம்பி இப்போது வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்" என்றார் பர்மாக்காரர். அவருடைய மகளும் தந்தையின் பக்கம் பேசி அவனை வரச்சொல்லி வற்புறுத்தினாள். அரைகுறைத் தமிழ்ச்சொற்களோடு கூடிய குயில் குரலில் அவருடைய பர்மிய மனைவியும் அவனை நோக்கி ஏதோ கூறினாள். 'பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பர்மாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துக்களுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா' என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பர்மாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த கடிகாரம் போல் நேரம் பார்த்து, அளவு பார்த்து உள்நோக்கத்தோடு அவர் சிரித்துப் பழகுகிறாரா? அந்த மனிதரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு விடுவதற்காகவாவது அவருடைய வீட்டுக்குப் போய் வருவதென்று முடிவு செய்து கொண்டு இணக்கம் தெரிவித்தான் அரவிந்தன். இரயில் நிலைய வாயிலில் அவருடைய புதிய கார் பெரிதாக, அழகாக நின்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது. "நான் சொல்றேன் இதுதான், தம்பி! இதுவரைக்கும் நீ எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இனிமேல் உனக்குன்னு ஒரு அந்தஸ்து வேணும்! இலட்ச ரூபாய்ச் சொத்துக்கு வாரிசாயிருக்கிறாய்! அதுக்குத் தகுந்த உறவு, பழக்கம் எல்லாம் உண்டாகணும். அந்த மீனாட்சி அச்சக வேலையை நீ விட்டு விடலாம் என்கிறது என் அபிப்பிராயம். நீயே சொந்தத்தில் நாலு பிரஸ் வைத்து நடத்துகிற வளமை உனக்கு வந்தாச்சு. இனிமேல் எதுக்கு அந்தப் பொறுக்கிப் பயல் வேலை? என்ன? நான் சொல்வது சரிதானே?" என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தார் பர்மாக்காரர். அவன் கார் சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கூறியதை இலட்சியம் செய்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கார் வையைப் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாலத்தின் மேல் போக நேர்கிற போதெல்லாம் அரவிந்தனுக்கு ஒரு விந்தையான சிந்தனை உண்டாகும். 'இந்தப் பாலம் இலட்சாதிபதிகளும், பங்களாவாசிகளும் நிறைந்த வடக்கு மதுரையையும், சாதாரண மக்களின் நெருக்கடி நிறைந்த தெற்கு மதுரையையும் இணைக்கிறது. ஆனால் இந்த இரண்டு மதுரைகளின் மண் தான் இணைகிறதே ஒழிய மனம் இணையவில்லை. அதற்கு வேறொரு புதிய பாலம் போடவேண்டும். அது பண்பாட்டுப் பாலமாக இருக்கும்' என்று எண்ணுவான். அமெரிக்கன் கல்லூரியின் சிவப்பு நிறக் கட்டிடங்கள், தல்லாகுளம் பெருமாள் கோயிலின் பட்டையடித்த மதிற்சுவர் எல்லாவற்றையும் வேகமாகப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு கார் விரைந்தது. எதிரே நீலவானத்தின் சரிவில் மங்கிய ஓவியம்போல் அழகர் மலைக் குன்றுகள் தெரிந்தன. கார் 'பர்மாக்காரர் எஸ்டேட்'டில் நுழைந்தது. அரவிந்தன் மலைத்துப் போனான். அப்பப்பா? எத்தனை அழகான இடம்! எவ்வளவு பெரிய தோட்டம்! எத்தனை விதமான பூந்தொட்டிகள்! எவ்வளவு பெரிய மாளிகை! ஒரு பெரிய ஊரையே குடி வைக்கலாம். அவ்வளவு விரிவான நிலப்பரப்பில் தோட்டமும் மாளிகையும் அமைந்திருந்தன. சிற்றுண்டி, தேநீர் உபசாரமெல்லாம் பிரமாதமாக நடந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட எழுந்தான் அரவிந்தன். "என்னப்பா பறக்கிறாய்? இனிமேல் நாளைக் காலையில் தானே கோடைக்கானல் போகப் போகிறாய்! உன்னை என் நண்பர் ஒருத்தருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். கொஞ்சம் இரப்பா, அந்த நண்பருக்கு டெலிபோன் செய்து வரவழைக்கிறேன்" என்று யாருக்கோ டெலிபோன் செய்தார் பர்மாக்காரர். அவர் டெலிபோனில் பேசிய விதம், கண் சிமிட்டிக் கொண்டே கள்ளச் சிரிப்புச் சிரித்த விதம், எல்லாமாகச் சேர்ந்து மொத்தமாக அரவிந்தன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தைக் கிளப்பின. சிறிது சிறிதாக அவருடைய அந்தப் புலிமுகம் உண்மையாகவே புலிமுகமாய் மாறிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. 'நீ ஏதோ வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறாய்' என்பது போல் அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. 'மதுரை மீனாட்சி கோயிலில் வடக்குக் கோபுரத்தில் உட்பக்கம் சில தூண்கள் இருக்கின்றன. அவற்றுக்கு 'இசைத்தூண்கள்' என்று பெயர். அந்தத் தூண்களுக்கு அருகில் நெருங்கி அவற்றைத் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி கேட்கும். அதே போல் அருகில் நெருங்கி இதயத்தைத் தட்டிப் பார்க்கும் போதல்லவா மனிதனுடைய சுயமான உள்ளத்தின் ஒலி கேட்கிறது' என்று நினைத்து மருட்சியோடு பர்மாக்காரர் எஸ்டேட்டின் மாளிகைக்குள் அவரெதிரே வீற்றிருந்தான் அரவிந்தன். மருட்சி இருந்தாலும் அவன் தைரியத்தை இழந்துவிடவில்லை. சிறிது நேரத்தில் அவனுக்காக வரவழைப்பதாக பர்மாக்காரர் டெலிபோன் செய்த நண்பர் வந்து சேர்ந்தார். அந்த ஆளைக் கண்டதும் அரவிந்தன் திகைத்தான். அவர் அவனுக்கு இனிமேல் தான் அறிமுகம் ஆகவேண்டிய ஆள் இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான். வேறு யாருமில்லை. அன்றொரு நாள் பூரணியின் வீட்டில் அவனைக் கன்னம் சிவக்க அறைந்துவிட்டுப் போனாரே, புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர், அவர் தான் விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். அதன் பின் அங்கு நிகழ்ந்தவையெல்லாம் துப்பறியும் மர்மக் கதைகளில் நடப்பது போல் நிகழ்ந்தன. அரவிந்தன் வற்புறுத்தப்பட்டான். பயமுறுத்தப்பட்டான். அவர்கள் தன்னிடம் பேசியவற்றிலிருந்து அரவிந்தன் சில உண்மைகளைப் புரிந்து கொண்டான். பர்மாக்காரர் சிற்றப்பாவின் கேதத்துக்கு வந்திருந்தபோது மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப்போவது பற்றிக் கேட்டது, தன்னிடமிருந்து வாயளப்பு அறிவதற்காகவே என்பது இப்போது அவனுக்கு நன்றாக விளங்கிவிட்டது. பர்மாக்காரர் தம்முடைய ஆளாக, அதே தொகுதியில் புது மண்டபத்து மனிதரை நிறுத்த இருக்கிறார் என்பதும் அவனுக்கு விளங்கிற்று. இரயிலில் அவர் தன்னிடம் பேசித் தெரிந்து கொண்ட உண்மைகளும், தன்னைக் கோடைக்கானலுக்கு அன்றே போகவிடாமல் தடுத்ததும் எதற்காக என்பது அரவிந்தனுக்கு இப்போது புரியத் தொடங்கியது. புலிமுகம் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவனை நோக்கிப் பேசியது: "தம்பி! நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. எனக்குத் தெரியாமல் ஒரு காரியம் நடந்துவிட முடியாது. உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நேற்றுப்பயல்! எங்களுக்குப் பரம வைரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யத் தொடங்கிவிட்டான் அவன். நீ நம் வழிப்பையன். பேசாமல் நான் சொல்கிறபடி கேள், உனக்கு ஐயாயிரம் ரூபாய் பணம் தருகிறேன். அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்காமல் செய்து விடு. இது உன்னால் முடியும். அந்தத் தொகுதியில் நான் இவரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்." அரவிந்தன் நெற்றிக்கண் திறந்த சிவபெருமான் போல் கனல் விழிகளோடு அவர்களை முறைத்துப் பார்த்தான். ஐம்பது புத்தம் புதிய நீல நோட்டுகளை எண்ணி நீட்டினார் அவர். அரவிந்தன் விறுட்டென்று எழுந்து நின்றான். "சாக்கடையில் கொண்டுபோய்ப் போடுங்கள் அந்தப் பணத்தை. இதன் நாற்றம் சாக்கடையைக் கூட அசுத்தமாக்கி விடும்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இடது புறங்கையால் நோட்டுக் கற்றையை அலட்சியமாகத் தட்டிவிட்டான் அரவிந்தன். மின்சார விசிறியின் காற்று வேகத்தில் அவன் தட்டிவிட்ட புது நீல நோட்டுக்கள் சுழன்று பறந்தன. அவன் பணத்துக்குப் பறக்கவில்லை; பணம் எடுக்க ஆளின்றிப் பறந்தது. அவர்கள் முகம் சிவக்க அவனை வெறித்து நோக்கினர். பர்மாக்காரரின் முகம் புலிப் பார்வையின் கடுமையில் அதிகமான இறுதிக் கடுமையை எய்தியது. புது மண்டபத்து மனிதரின் கண்கள் நெருப்புக் கோளங்களாயின. "இந்தாப்பா, பலராம்! இந்தப் பையன் ஏதோ முறைத்து விட்டுப் போகிறான். நீ வந்து கொஞ்சம் பையனைக் கவனி" என்று யாரையோ கூப்பிட்டார் பர்மாக்காரர். எழுந்து வெளியேறிவிட்ட அரவிந்தன் வாயிற்படியிலிருந்து இறங்கி உட்பக்கம் திரும்பிப் பார்த்தான். அரிவாள் நுனிபோல் மீசையும், தடித்த உடம்புமாகக் கொழுத்த மனிதன் ஒருவன், உள்ளேயிருந்து வந்தான். திரைப்படங்களிலும் கதைகளிலும் கண்டது வாழ்க்கையிலும் இப்போது வருவதை உணர்ந்தான் அரவிந்தன். பெரும்புள்ளிகள் இம்மாதிரி 'அடி ஆட்கள்' வைத்திருப்பது பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. நெஞ்சின் வலிமைதான் பெரிது என நினைத்திருந்த அவன் முதன்முதலாகத் தன் வாழ்வில் உடம்பின் வலிமையைக் காட்டிப் போராட வேண்டிய சமயம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஜிப்பாவின் கைகளை மேலே மடித்துவிட்டுக் கொண்டான். கவிதைகளையும் புரட்சிக் கருத்துக்களையும் எழுதிய கைகள் போருக்குப் புடைத்து நின்றன. குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|