32
பெருத்திடும் செல்வமாம் பிணிவந்துற்றிடில் உருத்தெரியாமலே ஒளிமழுங்கிடும் மருத்துளதோ எனில் வாகடத்திலை தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே. கவலை நிறைந்த முகச்சாயலோடு வந்த நண்பர் பாண்டியன், அரவிந்தனை அங்கே கண்டதும் வலிந்து சிரிப்பை வரவழைத்த மாதிரி இருந்தது. நிருபர் பாண்டியன், அரவிந்தனை அன்புடன் நலம் விசாரித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு "நீங்களும் முருகானந்தமும் முன்புறத்து அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள், அதற்குள் நான் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறி அவரையும் முருகானந்தத்தையும் முன்புறத்துக்கு அனுப்பிய பின் அரவிந்தன் குளிக்கும் அறைக்குள் புகுந்தான். அரவிந்தன் பொன்னிற மேனியில் கண்ட புண்களைப் பற்றிய அதிர்ச்சியிலிருந்து முருகானந்தம் இன்னும் விடுபடவில்லை. தங்கத்தட்டில் கரிக்கோடு விழுந்ததுபோல் நண்பனின் அழகிய மேனியில் தெரிந்த சவுக்கடிக் கோடுகள் அவன் உள்ளத்தைக் கொதிக்கச் செய்தன. குமுறச் செய்தன. முன்புறத்து அறையில் வந்து அமர்ந்ததும், நிருபர் பாண்டியன் தம் பேச்சில் அவன் கவனத்தைத் திருப்பினார். "முருகானந்தம் உனக்கு நான் எவ்வளவு சொல்லியிருந்தும், நீ உணர்ச்சிவசப்பட்டுப் பெரிய தப்பு பண்ணிவிட்டாய் அப்பா" "எதைச் சொல்கிறீர்கள், பாண்டியன்?" என்று கேட்டான் முருகானந்தம். "இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பார் தெரியும். சிறிது நேரத்துக்கு முன் பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் அவசரமாகக் காரில் வந்து இறங்கி எங்கள் ஆசிரியரிடம் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தயங்கினாலும் ஆசிரியர் பர்மாக்காரரின் செல்வாக்குக்கு முன் அஞ்சுகிறார்" என்று கூறி நாலைந்து முழுத்தாளில் துப்புரவாக டைப் செய்திருந்த அந்தச் செய்தியை முருகானந்தத்திடம் கொடுத்தார் பாண்டியன். அதை ஒவ்வொரு வரியாகக் கருத்தூன்றிப் படித்தான் அவன். 'பூரணியின் தாமரைப்பூ சின்னத்துச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு வந்த ஆட்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த தமது கழுகுச்சின்னம் சுவரொட்டிகளை மறைத்தும் கிழித்தும் வம்பு செய்ததாகவும், அப்படிச் செய்ததைக் கண்டிக்க வந்த தம் ஆட்களை அடித்தும் உதைத்தும் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறியிருந்தார் புதுமண்டபத்து மனிதர். மேலும், செல்லூர் திருவாய்ப்புடையார் கோயில் தெருவிலுள்ள தமது 'ஸ்டாக் ஹவுசை' பூரணியின் ஆட்கள் வன்முறைச் செயல்களால் பூட்டை உடைத்துத் திறந்து புத்தகங்களையும், பிற பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாகவும்' அந்தச் செய்தியில் அவர் விவரித்திருந்தார். வன்முறைச் செயல்களைச் செய்தவர்களின் பெயர்களாக அவர் கொடுத்திருந்த பட்டியலில் வேண்டுமென்றே முருகானந்தத்தின் பெயர் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது. 'ஸ்டாக் ஹவுஸ்' கொள்ளையிடப்பட்டதற்கு முதல் நாள் காலை அரவிந்தன் பர்மாக்காரர் எஸ்டேட்டுக்கு வந்து தன்னைச் சந்தித்துக் 'கன்னா பின்னா'வென்று பேசிப் பயமுறுத்தியதாகவும் ஒரு பொய்ச் செய்தி திரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதைப் படித்துவிட்டு முகத்தில் சினம் துடிக்க நிமிர்ந்தான் முருகானந்தம். அவன் பார்வையில் ஆத்திரமும் படபடப்பும் தெரிந்தன. நிருபர் பாண்டியனை நோக்கிக் கேட்கலானான்.
"இந்தச் செய்தி அறிக்கையை இப்படியே நீங்கள் வெளியிடப் போகிறீர்களா பாண்டியன்?" "என்னைக் கேட்டால் நான் என்னப்பா பதில் சொல்ல முடியும்? நேற்றைக்குத் 'தேர்தல் பகை காரணமாக இளைஞர் கடத்தப்பட்டார்' என்று நீ எழுதிக் கொடுத்த செய்தி அறிக்கையை நான் வெளியிடவில்லையா? நீ கொடுத்த செய்தி மெய் என்று எனக்கு தெரிந்து, நானே உன்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டது. இப்போது இவர் கொடுத்திருகும் செய்தி 'பொய்' என்று எனக்குத் தெரிகிறது. தெரிந்தும் நான் ஒன்றும் செய்வதற்கில்லையே? நாங்கள் பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் வேண்டியவர்கள். நான் எங்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டவன். எங்கள் ஆசிரியர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவர். பெரிய மனிதர்கள் எல்லோரும் பர்மாக்காரருக்குக் கட்டுப்பட்டவர்கள். பயப்படுகிறவர்கள். தினப்பத்திரிகை என்பது ஊர்ப்புறத்தில் இருக்கிற குட்டை; அதில் நல்ல தண்ணீர்தான் வந்து நிறையும் என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி எல்லாம் வம்பு வரும் என்று தெரிந்துதான் நேற்று உனக்கு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், என்பதை வற்புறுத்திச் சொல்லியிருந்தேன்." "நீங்கள் சொல்லியிருந்தீர்கள் பாண்டியன். ஆனால் அவர்கள் என்னை நிதானமாக நடந்து கொள்ள விடவில்லையே!" என்று தொடங்கிச் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றதிலிருந்து செல்லூருக்குப் போய் அரவிந்தனை மீட்டு வந்ததுவரை உண்மையாக என்னென்ன நடந்தனவோ அவற்றை அவரிடம் விவரித்துச் சொன்னான். முருகானந்தம் சற்றுமுன் அரவிந்தனின் முதுகில் தான் கண்ட சவுக்கடிக் காயத்தைப் பற்றியும் சொன்னான். "அநியாயமும் கொடுமையும் செய்திருக்கிறார்களென்று நமக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது முருகானந்தம். ஆனால் சமூகத்துக்கு இவைகளைப் புரிய வைக்கிறவரை நிதானமாகத்தான் போகவேண்டும். பூரணி இப்போது இந்த நாட்டுக்குள்ளேயே இல்லை. இலங்கையில் இருக்கிறாள். புது மண்டபத்து மனிதர் கொடுத்துள்ள இந்த செய்தி அறிக்கை வெளியானால் அவளுடைய நல்ல பெயரும் கெடத்தான் செய்யும். அரவிந்தனை சாது, நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சந்தேகப்படுவார்கள், உன்னைப் பற்றி..." "ஏற்கெனவே கெட்டவன், முரடன், தடியன் என்று எல்லோருக்கும் தெரியுமாக்கும்? ஏன் நிறுத்திவிட்டீர்கள், பாண்டியன்? நன்றாகச் சொல்லுங்களேன். எனக்கும் என்னைப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்களென்று தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கும் அல்லவா? பூரணி-அரவிந்தன் இவர்களுக்கு நான் உதவியிருக்கிறேன் பாருங்கள்! ஏதாவது பெரிய குற்றம்சாட்டி என்னை ஓர் ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டால் தேர்தல் முடிகிற வரை என்னுடைய தொந்தரவு இருக்காதென்று நினைக்கிறார் பர்மாக்காரர். இல்லாவிட்டால் செல்லூர் வீட்டுக்குள் நுழைந்து அடைபட்டுக் கிடந்த அரவிந்தனை மீட்டு வந்த நிகழ்ச்சியைத் திரித்து நான் என் ஆட்களோடு கொள்ளையிட வந்தேனென்று வல்வழக்குத் தயார் செய்வாரா?" "பதற்றமடையாதே முருகானந்தம். பர்மாக்காரனின் இந்தச் சூழ்ச்சி பலிக்காமல் போகும்படி செய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பத்திரிகையில் அறிக்கை விடுகிற தகுதி அவர்களுக்குத்தான் உண்டு என்பதில்லையே? உன்னுடைய தகுதி என்ன குறைவு? நீயும் தொழிற்சங்கங்களின் தலைவன், தொழிலாளர்களின் மதிப்புக்குரியவன். பர்மாக்காரர் அரவிந்தனைக் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்தியதையும், செல்லூர் வீட்டில் சிறை வைத்ததையும் பற்றி நீயும் விரிவாக ஓர் அறிக்கை எழுதிக் கொடு; உன் அறிக்கையை அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பித்து வெளியிடப் போவதாகச் சொல்லி மெல்ல மிரட்டிப் பார்க்கிறேன். அப்படிச் செய்தால், 'இரண்டு அறிக்கைகளையுமே வெளியிட வேண்டாம். பேசாமல் விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுங்கள்' என்று அவர்களே எங்கள் ஆசிரியருக்கு 'டெலிபோன்' செய்து தடுத்து விடுவார்கள். "நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடைபெறாமல் பர்மாக்காரரின் செல்வாக்குக்குப் பயந்து உங்கள் ஆசிரியர் அவர்களுடைய அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டால்?" "வெளியிடமாட்டார்! அதற்கானதை எடுத்துச் சொல்வது என் பொறுப்பு!" முன்புறத்து அறையில் அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது நீராடி உடை மாற்றிக்கொண்டு தூய தோற்றத்தோடு அரவிந்தன் வந்தான். "அரவிந்தன் ஏற்கெனவே மிகவும் மன வேதனைப்பட்டுப் போயிருக்கிறான். இதில் ஒன்றையும் அவன் காதில் போட வேண்டாம்" என்று பின்புறமிருந்து அரவிந்தன் காலடி ஓசை கேட்டதுமே, பாண்டியனிடம் மெதுவான குரலில் கூறி எச்சரித்திருந்தான் முருகானந்தம். உள்ளே வந்த அரவிந்தன் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான். "பூரணி எப்போது இலங்கையிலிருந்து திரும்புகிறாள்?" என்று அரவிந்தனை நோக்கிக் கேட்டான் பாண்டியன். "திரும்புகிற சமயம் தான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவள் திரும்பிவிடுவாள்." "நீங்கள் எது நடந்தாலும் கவலையோ, சோர்வோ அடையக் கூடாது அரவிந்தன்! தேர்தல், அரசியல் போட்டி என்று வரும் போது இந்தநாளில் இவையெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. பூரணி திரும்பி வந்து நான்கு கூட்டங்களில் பேசினால் போதும்; இந்தத் தொகுதியில் அவளுக்குத்தான் வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை." "நியாயத்திலும் நேர்மையிலும் நம்பிக்கையிருந்தால் பூரணியைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்காக 'என்னைத் தேர்ந்தெடுங்கள், எனக்கே வாக்களியுங்கள்' என்று இனிப்பு மிட்டாய்க்கு அடித்துக் கொண்டு பறக்கிற சிறுபிள்ளை மாதிரி அவள் கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக வந்து கதறமாட்டாள். இலங்கையிலிருந்து திரும்பி வந்ததுமே சில நாட்களில் கல்கத்தாவில் நடைபெறவிருக்கும் கிழக்கு ஆசிய பெண்கள் மாநாட்டுக்கு அவள் போக வேண்டும். கல்கத்தாவிலிருந்து திரும்பியதும் மலேசியாவில் சில வாரங்கள் சுற்றுப் பயணம் செய்யப் போகவேண்டும். தேர்தலை ஒரு வியாபாரமாகக் கருதி அதற்காக முதல்போட்டு செலவழித்து அலைய அவளுக்கு நேரமில்லை. நானும் அதை வியாபாரமாக நடத்த விரும்பவில்லை" என்று நிருபர் பாண்டியனிடம் சுடச்சுட பதில் கூறினான் அரவிந்தன். "நீங்கள் சொல்வதெல்லாம் உயர்ந்த இலட்சியம்தான். ஆனால் உங்களை எதிர்த்து நிற்பவர் பணபலமும், ஆள் பலமும் சூழ்ச்சிகளும் உள்ளவராயிற்றே!" "மனித உரிமைகளும், சமத்துவமும் உருவாகிற சமுதாயத்திலே பணத்துக்கென்று தனிப்பலமே இருக்கக்கூடாது. அதிக ஏழ்மையைப் போல, தனித்தனி மனிதர்களிடம் அதிகச் செலவம் தேங்கிவிடுவதும் நாட்டுக்கு ஒரு பெரிய நோய்; மனித உடம்பு முழுவதும் சதைப்பற்று இருந்தால், வளமான உடல் என்கிறோம். உடலில் பல பகுதிகள் இளைத்து எங்காவது சில இடங்களில் மட்டும் சதை வைத்திருந்தால் அது கட்டி, நோய். செல்வமும் நமது சமுதாயத்தில் கட்டி விழுந்து விகாரமான உடல் மாதிரி சில இடங்களிலேயே தேங்கி நாறுகிறது. உலகத்து நோய்களையெல்லாம் மருந்தால் தீர்க்கலாம். ஆனால் செல்வக் கொழுப்பு என்கிற நோய்க்கு மட்டும் எந்த மருத்துவ நூலிலும் மருந்து இல்லை. ஏழ்மை என்ற இன்னொரு நோய்தான் முன்னைய நோய் தீர ஏற்ற மருந்து. சமூக நோய்களுக்கு மருந்து கிடைக்கிற வரை அரசியல் போட்டிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டம் தான்" என்று ஏக்கத்துடன் நிருபர் பாண்டியனை நோக்கிக் கூறினான் அரவிந்தன். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின் முருகானந்தத்தையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் பாண்டியன். அரவிந்தன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். முருகானந்தத்தைத் தினச்சுடர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார் நிருபர் பாண்டியன். அரவிந்தன் செல்லூர் வீட்டில் அடைத்து வைக்கப் பெற்றிருந்தது பற்றியும், கொடுமைப் படுத்தப்பட்டது பற்றியும் முருகானந்தத்தின் கைப்பட ஒரு விரிவான அறிக்கை எழுதி வாங்கி அதை ஆசிரியரிடம் கொண்டுபோய்க் காட்டினான் பாண்டியன். 'தினச்சுடர் ஆசிரியர்' இரண்டு அறிக்கைகளிலும் எது மெய்யென்று கண்டுகொள்ள முடியாமல் திணறினார். "சார்! பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் கொண்டு வந்து கொடுத்த அறிக்கையில் உண்மையே இருப்பதாக தெரியவில்லை. 'அரவிந்தனை அவர்கள் கடத்திக் கொண்டு போய் கொடுமைப்படுத்தினார்கள்' என்பதுதான் உண்மை. ஊரெல்லாம் இந்த உண்மை தெரிந்திருக்கிறது! அப்படியிருக்கும் போது பொய்யும் புரட்டுத்தனமுமான அவர்கள் அறிக்கையை வெளியிட்டால் நமது பத்திரிகையின் பேர்தான் கெடும். இரண்டு பக்கத்தாருடைய அறிக்கைகளையுமே வெளியிடாமல் விட்டு விடலாம். இப்போது முருகானந்தம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அறிக்கையைப் பற்றி நீங்களே அவர்களிடம் டெலிபோனில் கூறுங்கள். அவர்களே தம் அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறி விடுவார்கள்" என்று சமயம் பார்த்து ஆசிரியருக்கு வழி கூறினான் பாண்டியன். ஆசிரியர் உடனே பர்மாக்காரருக்கு டெலிபோன் செய்து கூறினார். பாண்டியன் அனுமானம் சரியாயிருந்தது. 'எங்கள் அறிக்கை, அவன் அறிக்கை, ஒரு மண்ணாங்கட்டியும் வெளியிட வேண்டாம். இந்தச் செய்தி பற்றி மூச்சுக் காட்டக்கூடாது!' என்று டெலிபோனில் பதில் கூறிவிட்டாராம் பர்மாக்காரர். ஆசிரியருக்கும் பாண்டியனுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டான் முருகானந்தம். கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னை சென்று அங்கிருந்து ரயில் மூலம் மறுநாள் காலை மதுரையை அடைந்து விடுவதென்ற திட்டத்தோடுதான் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் கிளம்பியிருந்தார்கள். விமானத்தில் கிடைத்த செய்தித்தாளில் 'அரவிந்தன் கடத்திக்கொண்டு போகப்பட்டான்' என்ற திடுக்கிடும் செய்தியைப் படித்தவுடன் இருவருக்குமே பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையும் தவிப்பும் ஏற்பட்டன. பூரணியின் முகம் அழுவதுபோல் களை குன்றித் துயரச் சாயலுடன் தோன்றியது. கண்களில் நீர் கோர்த்தது. மங்களேசுவரி அம்மாள் கூறலானாள்: "வர வர அரசியல் நேர்மை குன்றிய துறையாக மாறிவிட்டது பூரணி. கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கருத்துக்களோடு மட்டும் பகைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். கருத்துக்களுக்குப் பதிலாக ஆட்களை எதிர்க்கிற அநாகரிகத்தைத் தான் இங்கே காண்கிறோம்." "தவறு என்னுடையதுதான் அம்மா! நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று முதலிலேயே கண்டிப்பாக மறுத்திருக்க வேண்டும். தேர்தல் வேதனைகளால் தான் மீனாட்சிசுந்தரம் இறந்தார். தேர்தல் பகையினால்தான் இவர் காணாமல் தலைமறைவாகக் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் என்னென்ன துன்பங்களும் தொல்லைகளும் வருமோ!" "கவலைப்படாதே அம்மா! அரவிந்தனுக்கு ஒரு கெடுதலும் நேராது. அவரைப் போல் நல்லவர்களுக்கு இறைவனுடைய அருள் துணை எப்போதும் கெடுதல் நேராமல் அருகிலிருந்து காக்கும். விமானம் சென்னைக்குப் போய்ச் சேர்ந்ததும் இறங்கி (டிரங்க் டெலிபோனில்) வெளியூர்த் தொலைபேசி மூலம் மதுரைக்குப் பேசுவோம். விவரம் தெரிந்துவிடும். இது நாளு நாளைக்கு முந்திய செய்தித்தாள். ஒருவேளை இதற்குள் அரவிந்தன் மீண்டு வந்தாலும் வந்திருக்கலாம். என் மாப்பிள்ளை ஒரு விநாடி கூடச் சும்மா இருக்க மாட்டார். ஏதாவது செய்து இதற்குள் அரவிந்தனை மீட்டுக் கொண்டு வந்திருப்பார்" என்று மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ஆறுதல் கூறினாள். கொழும்பிலிருந்து புறப்படும் முன்பே சென்னையிலிருந்த தன் உறவினர்க்குத் தந்தி மூலம் தங்களது வரவு பற்றி அறிவித்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அந்த அம்மாளின் உறவினர்கள் காருடன் வந்து காத்திருந்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து உறவினர்களுடன் பூரணியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றாள் மங்களேசுவரி அம்மாள். உறவினர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. அங்கிருந்து மதுரையில் தன் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அவசரமாகப் பேசுவதற்கு முயன்றாள் அந்த அம்மாள். பூரணி துடிப்பும் தவிப்புமாக விவரம் அறிந்து கொள்ளும் ஆவலோடு மங்களேசுவரி அம்மாளின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். கால்மணி நேரத்தில் மதுரை எண்ணுடன் தொலைபேசித் தொடர்பு கிடைத்துவிட்டது. மதுரையிலிருந்து வசந்தா பேசினாள். கொழும்பிலிருந்து விமானத்தில் வரும்போது செய்தித்தாளில் படித்த செய்தியைப் பற்றி கூறி விவரம் கேட்டாள் மங்களேசுவரி அம்மாள். வசந்தாவிடமிருந்து கேட்ட மறுமொழியால் மங்களேசுவரி அம்மாளின் முகம் மலர்ந்தது. அருகில் இருந்த பூரணியின் மனத்தில் அதைக் கண்டதும் நம்பிக்கை மலர்ந்தது. வசந்தா சிறிது நேரம் பேசிவிட்டு "இதோ பக்கத்தில் உங்கள் மாப்பிள்ளையே வந்து நிற்கிறார் அம்மா! அவரிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்று தொலைபேசியை முருகானந்தத்தின் கையில் கொடுத்துவிட்டாள். முருகானந்தம் நடந்தவற்றை மிகச் சுருக்கமாக மாமியாருக்கு தெரிவித்தான். "நீங்கள்தான் நாளைக்குக் காலையில் இங்கே மதுரைக்கு வந்துவிடப் போவதாகக் கூறினீர்களே. மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம். காலையில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு நானும் அரவிந்தனும் இரயில் நிலையத்துக்கு வருகிறோம்... அவ்வளவுதானே? வைத்துவிடட்டுமா?" என்று முருகானந்தம் பேச்சை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைக்க இருந்தபோது, "இதோ பூரணி பக்கத்தில் கவலையோடு நிற்கிறாள். நான் சொன்னால் நம்புவாளோ மாட்டாளோ? 'அரவிந்தன் திரும்பி வந்துவிட்டான்' என்று நீங்களே அவளிடம் போனில் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் மாப்பிள்ளை" என்றாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி தொலைபேசியைக் கையில் வாங்கிக் கொண்டாள். பூரணியிடம், "அக்காவுக்கு வணக்கம். இலங்கைப் பயணம் எல்லாம் சுகமாயிருந்ததோ? இங்கே வசந்தா மிகவும் பொல்லாதவள் ஆகிக் கொண்டு வருகிறாள். திருமணத்துக்குப் பின் ஒரே அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது அக்கா! எனக்குச் சுதந்திரமே இல்லை" என்று சிரித்துக் கொண்டே முருகானந்தம் பேசியபோது இடையில் ஒரு கணம் 'போன்' அவன் கையிலிருந்து மாறி "இவர் சொல்வதெல்லாம் சுத்தப் பொய் அக்கா, கிண்டல் செய்கிறார்" என்று வசந்தாவின் நாணம் விரவிய மென்குரல் ஒலித்தது. மீண்டும் முருகானந்தம் பேசினான். "அரவிந்தன் சுகமாக இருக்கிறான். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். காலை எக்ஸ்பிரஸில் உங்களை எதிர்பார்க்கிறோம். புறப்பட்டு வந்து சேருங்கள்" என்று அவன் உறுதி கூறிய பின்பே பூரணியின் மனம் நிம்மதியை முழுமையாக அடைந்தது. தவிப்பும் கவலைகளும் குறைந்தன. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த உறவினர் வீடு மயிலாப்பூர் பகுதியில் இருந்தது. 'அரவிந்தன் திரும்பி வந்து விட்டான். சுகமாக இருக்கிறான்' என்ற செய்தி தெரிந்ததும் மங்களேசுவரி அம்மாளையும் அழைத்துக் கொண்டு மயிலைக் கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று கற்பகாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு வந்தாள் பூரணி. அன்று மாலை திருவனந்தபுரம் விரைவு வண்டியிலேயே அவர்கள் சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். இரயிலில் வரும்போது அரசியல் நிலைகளையும் அதிலுள்ள வம்புகளையும் பற்றிக் கதை கதையாகச் சொல்லிக் கொண்டு வந்தாள் மங்களேசுவரி அம்மாள். "இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சி இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப்பழக்க வழக்கங்களைப் போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தேள் கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து மறைந்து வலி ஒன்று மட்டுமே உறைப்பதுபோல், பள்ளிக்கூடச் சிறுவனிலிருந்து பல்போன கிழவர்கள் வரை அரசியல் எழுச்சி ஒன்றே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழே சதைபோட்டுப் பருத்துவிடுகிற யானைக்கால் வியாதி போல அரசியல் ஒன்றே கதி என்று ஆகிவிட்டது!" என்று அந்த அம்மாள் கூறியதை பூரணி கவனித்துக் கேட்டாள். விழுப்புரம் கடந்த பின் தான் இரண்டு பேருக்கும் நல்ல தூக்கம் வந்தது. காலையில் இரயில் சரியான நேரத்துக்கு மதுரையை அடைந்துவிட்டது. மங்கையர்க்கழகத்துப் பெண்கள் முதல் பிளாட்பாரத்தை நிறைத்துக் கொண்டு பூரணியை வரவேற்கக் கூடியிருந்தார்கள். முதல்நாள் சென்னையிலிருந்து டெலிபோனில் செய்தி வந்ததுமே, வசந்தா மங்கையர் கழகத்துக்குத் தகவல் தெரிவித்து, இந்த ஏற்பாடு செய்திருந்தாள். பிளாட்பாரம் பல வண்ண மலர்கள் குலுங்கும் வண்ண மலர்ச்சோலையாக காட்சியளித்தது. அரவிந்தனும் முருகானந்தமும் நிருபர் பாண்டியன் முதலிய மற்ற நண்பர்களும் ஒருபுறம் நின்று கொண்டிருந்தார்கள். பூரணி இரயிலிலிருந்து இறங்கும்போதே அவளுடைய கண்கள் அரவிந்தனைத் தேடிச் சுழன்றன. யாருடைய சிரிப்பில் அமுதத்தின் ஆற்றல் இருந்ததாக உணர்ந்து வியந்தாளோ, அவனுடைய சிரிப்பையும் மலர்ந்த முகத்தையும் பருகிவிடுவது போல் காணும் ஆவலில் அவள் கண்களும் மனமும் விரைந்தன. ஆனால் வசந்தா, மங்கையர் கழகத்துக் காரியதரிசி முதலிய பெண்கள், மாலைகளோடு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு பார்வையை மறைத்துவிட்டனர். ஆனால் அரவிந்தனுடைய கண்கள் இரயிலிலிருந்து இறங்கும் போதே அவளை நன்றாகப் பார்த்துவிட்டன. புதிய பெருமிதமும் புதிய அழகும் அப்போது அவள் முகத்தில் தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. தன்னைப் பற்றிப் புகழும் பெருமையும் நிலவும் சூழலில் போய்க் கலந்து பழகிவிட்டு மீளும்போது மனிதருக்கு முகத்தில் உண்டாகிற அபூர்வமான எழில் ஒளியைத்தான் அப்போது பூரணியின் முகத்திலும் காண முடிகிறதென நினைத்தான் அவன். இரயில் பயணத்தினால் கலைந்து சுருள் சுருளாகக் காதோரத்தில் சரிந்து சுழன்ற இணைந்த ஒளிவட்டமாய்த் தெரிந்த அந்த முகம் அவன் உள்ளத்துக்கு அழகிய சிந்தனைகள் அளித்தது. பெண்கள் கூட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டு பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அரவிந்தன் முதலியவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு வந்தார்கள். "கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்ட போது பேப்பரில் அந்தச் செய்தியைப் பார்த்தோம். இரண்டு பேருக்கும் ஒரே தவிப்பு. மனம் ஒரு நிலையில் இல்லை" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். பேசுவதற்கே ஒன்றும் தோன்றாத மனப்பூரிப்போடு நின்ற பூரணி, அரவிந்தனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். "இரயில் நிலையத்தில் நின்று இதையெல்லாம் பேசுவானேன்? வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக் கொள்ளலாம்" என்று முருகானந்தம் கூறினான். மங்களேசுவரி அம்மாளின் பெரிய கார் வெளியே காத்திருந்தது. எல்லோரும் புறப்பட்டார்கள். தானப்ப முதலி தெரு வீட்டுக்குப் போனதும், சில மணி நேரம் விசாரிப்புகளிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் கழிந்துவிட்டது. தேர்தல் சுவரொட்டி ஒட்டப்போன இடத்தில் விளைந்த கலவரத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடந்த தம்பி திருநாவுக்கரசைப் பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் அச்சகத்துக்குச் சென்று பார்த்து வந்தனர். வசந்தா, வீட்டில் அன்றைக்குப் பெரிய விருந்துச் சாப்பாட்டுக்கே ஏற்பாடு செய்திருந்தாள். பகல் உணவு முடிந்ததும் நடுக்கூடத்தில் டேப்ரிகார்டரை வைத்து பூரணி இலங்கையில் பேசிய சொற்பொழிவுகளை ஒலிபரப்பத் தொடங்கினாள் செல்லம். அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லோரும் சூழ அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பூரணி மாடி அறையில் இருந்தாள். டேப்ரிகார்டு போட்ட சிறிது நேரத்துக்குப் பின் பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி வந்து, "அக்கா உங்களைக் கூப்பிட்டாங்க, ஏதோ தனியா பேசணுமாம்" என்று அரவிந்தனை மாடிக்கு அழைத்துப் போனாள். பூரணி மாடியில் முன் வராந்தாவிலேயே இருந்தாள். அவள் கைகள் பின்புறம் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டிருந்தன. "கூப்பிட்டாயாமே?" என்று சிரித்துக் கொண்டே அவள் முன் போய் நின்றான் அரவிந்தன். அவளும் சிரித்தாள். "தயவு செய்து உங்கள் கையை நீட்டுங்கள்" என்றாள் பூரணி. "எதற்காக?" "நீட்டுங்களேன் சொல்கிறேன்." அரவிந்தன் கையை நீட்டியவாறே சிரித்தபடி நின்றான். அவள் அவனுடைய பொன் நிறமுள்ள கையில் புதிய தங்கக் கடிகாரத்தைக் கட்டினாள். "காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடச் செய்துவிட்டேன்." "தவறு பூரணி. நாம் மனிதர்கள்! காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்" என மறுமொழி கூறி அழகாக நகைத்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|