முன்னுரை

     ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் கூட மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புக்களை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களே தாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை.

     ஜான்ஸிராணியின் தீரத்தைப் பற்றி எதிராளியே குறித்து வைத்தான். வள்ளியம்மையின் மன உறுதியைப் பற்றி, தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தை உலகுக்களித்த காந்தியடிகளே எழுதி வைத்தார். ஆனால் அத்தகைய பெருந்தன்மையாளர் மிக மிக அபூர்வமாகக் காணப்படும் நிலையில் அரசியல் அரங்கிலும், சமுதாய அரங்கிலும் பல பெண்மணிகள் காட்டிய அசாதாரணமான மன உறுதியும், துணிச்சலும், சமூக நீதிக்காகப் போராடும் திறனும் வெளிக்குத் தெரியாமலே போய் விட்டதுதான் உண்மை.

     பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் சனாதன சமயக் கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை மீறுவதற்கே போராளியாக மாறவேண்டி இருக்கிறது. அப்படித் தடைகள் மீறி, ஒரு முட்பாதையில், குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள் எல்லாம் எதிர்ப்புக்களாக மாறி விட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் (ஆண்) ஆதிக்கங்களையும் எதிர்த்து, ஒரு பெண், தேசியவாதியாக, சமுதாயவாதியாக நின்று தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளுக்கும் உழைப்பாளருக்கும் நீதி கோரிப் போராடி, இறுதியில் ஒரு தியாகியாகவே தன் இன்னுயிரையும் ஈந்தாள். ஆனால், இந்த அம்மையைப் பற்றி அவள் சார்ந்திருந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கும் இன்றைய பெண்மணிகளே அறியார்!

     1979-80-81 ஆண்டுகளில் கீழ்த்தஞ்சைப் பகுதியில் உழவர் பெருமக்களின் வாழ்-நிலையை ஆராயப் போன நான் 1953ல் மரித்த மணலூர் மணியம்மாள் என்ற இந்த அரிய பெண்மணியைப் பற்றி முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வோர் உழவர் குடிலிலும் இந்த அம்மையைத் தெய்வமாகக் கொண்டாடியதையும் அவருடைய செயல்களை, வீர சாகசங்களை, போராட்டங்களை, அவர்கள் கதை கதையாக விவரித்ததைக் கேட்டு வியப்பிலாழ்ந்தேன். முதலில் நொத்தூர் இராமசாமி என்ற முதியவர், வறுமையும் முதுமையும் தம்மை ஒடுக்கி இருந்த நிலையில், என்னிடம் மணியம்மையாரின் அளப்பரிய பரிவையும், துணிச்சலான செயல்களையும் பலவாறாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர், அம்மையாருக்கு ஒரு காலத்தில் வண்டி ஓட்டியிருந்தாராம். தெளிவில்லாத முதியவரின் புலம்பல் என்று தான் முதலில் நினைக்கத் தோன்றியது எனக்கு. ஆனால், நான் முற்றிலும் கேள்விப்பட்டிராத, நம்ப முடியாததொரு செய்தியாக, அவர் ஒரு கைம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானக் கொடுமையிலிருந்து வெளிப்பட்டு, ஆண் கோலத்தில், ஒடுக்கிய சநாதனங்களை எதிர்த்து நின்றார் என்ற செய்தி, சுரீலென்று என் உணர்வில் உறைத்தது. அப்பெருமாட்டியைப் பற்றிப் பிறகுதான் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த பெண்களிடமும் மற்றவர்களிடமும் நான் விசாரிக்கத் தலைப்பட்டேன். மூத்த சகோதரிகள், நான் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையே என்று ஆமோதித்தார்கள். நடவுப் பாடல்களை இசைக்கும், உழவர் குடிப் பெண்மக்களின் நாவிலே தவழும் ஓரிரு பாடல்களிலும் இந்த அம்மை அமரத்துவம் பெற்றுத் திகழ்வதைச் செவியுற்றேன். தேசிய சமுதாய அளவில், புரட்சிப் பெண்மணியாக, மூடப்பழமைகளை ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடிய இப்பெண்மணியின் பெயரைக் கூட நான் அதுகாறும் கேள்விப்பட்டிருக்கவில்லையே?

     இந்நாட்களில், அரசியல் சுதந்தரம், கல்வி உரிமை, பொருளாதார சுதந்தரம் எல்லாம் வந்திருந்தும் பெண் புதிய புதிய விதங்களில் சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். கருவிலேயே அவளை அழிக்கும் ஒரு செயல் கூட நியாயப்படுத்தப்படும் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றை எதிர்த்து நிற்கும் போராட்டச் சக்தியும் துணிவும் இன்றும் நமக்கு வரவில்லை. எனவே மணியம்மையின் வரலாற்றை எப்படியும் வெளிக்கொணர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன். இந்த என் கனவை நினைவாக்க, மேலும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு முழுமூச்சுடன் செயல்பட, எனக்கு உறுதுணையாக நின்று உதவிகள் அனைத்தும் செய்தவர்கள் பெரும்பான்மையோரும் அந்த உழவர் குலப்பெருமக்களேதாம். வில்வனம் படுகை கோபாலன் என்ற தோழர், முதன் முதலாக மணியம்மையைப் பற்றி நான் கேள்விப்பட்ட நாட்களில், என்னை மணலூருக்குக் கூட்டிச் சென்ற நாளிலிருந்து, கடைசியாக நான் வரலாற்றை எழுதி முடிக்கும் வரையிலும், என் முயற்சியில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு தம் பங்கை அளித்திருக்கிறார். அவர் வாயிலாகவே, நான் அனைத்து இயக்கக்காரர்கள், நண்பர்கள், அக்கால வரலாற்றில் பங்கு கொண்டவர்கள் அனைவரையும் கண்டு கொண்டேன்.

     பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த காலம் சென்ற திரு. காத்தமுத்து அவர்கள் பல செய்திகளைக் கூறி உதவினார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள், திரு. கோபு அவர்களும், திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும், எனக்கு மணியம்மையுடன் அவர்கள் பழகிய நாட்களை அன்போடு நினைவு கூர்ந்து எனக்கு ஆதரவளித்தார்கள். முரசொலி திரு. தியாகராஜன் அவர்கள், அம்மையாரின் இறுதிக்கால நிகழ்ச்சிகளை, உளம் கனிய நினைவு கூர்ந்து விவரங்களைத் தந்து உதவினார்கள்.

     பல அரங்குகளிலும், போராட்ட வீராங்கனையாகவே திகழ்ந்து வாழ்ந்து முடிந்த ஒரு பெருமாட்டியைப் பற்றி மிகச் சரியான வரலாற்றுப் பின்னணியுடன் எழுதுவதென்பது, சிரம சாத்தியமான செயலே. சான்றுகளைத் தேடிச் செல்வது ஒரு புறமிருக்க, கிடைத்த சான்றுகளைத் தொடர்புபடுத்தித் தெளிவு காண்பது மிகக்கடினமான முயற்சியாக இருந்தது. அலிவலம் கு. பாப்பம்மாள், தம் வீட்டில் இருந்த பல புகைப்படங்களைத் தேடித் தந்து உதவினார். இவருடைய காலம் சென்ற கணவர் திரு. குமாரசாமி தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். மணியம்மை இவர்கள் வீட்டுக்குப் பலமுறைகள் வந்திருக்கிறார். அந்தப் படங்களில் பல நிகழ்ச்சிகளுக்கான சான்றுகள் இருந்தன. ஒரு நிழற்படத்தில், 1940ம் ஆண்டில், சனவரி, 26ம் நாள் முதலாவதாக நேருவின் தீர்மானத்துக்கிணங்க, சுதந்தர நாளை நிர்ணயித்துக் கொண்டாடிய விழா ஊர்வலக் காட்சி கண்டேன்.

     அம்மாளை, கிராப்பு - வேட்டி - கதர் ஜிப்பா - துண்டு அணிந்த கோலத்தில் கண்டு கொண்ட போது, எனது உணர்வுகளை விவரிக்க இயலாது. அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் நடமாடி வரலாறு கண்ட கிராம மக்களிடம் சென்று காட்டி, அவர்களுடைய உணர்ச்சிப் பெருக்கையும் மகிழ்ச்சியையும் கண்டு, 'அம்மையே தான்' என்று தெளிந்தேன். படங்கள், பல நண்பர்களைக் கண்டு கொள்ள உதவின. எடுத்துக்காட்டாக, அம்மையின் துவக்க கால, காங்கிரஸ் ஈடுபாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிய வாய்ப்பாக, திரு. முருகையா என்ற நண்பரின் தொடர்பு கிடைத்தது. அவருடைய பம்பாய் முகவரி அறிந்து, தொடர்பு கொண்டதும், மிகவும் ஆர்வம் கொண்டு அனைத்து விவரங்களையும் உடனே தெரிவித்தார்கள். இவர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி உரித்தாகிறது.

     மணியம்மாளோடு வேலூர்ச் சிறையில் இருந்த அநுபவங்களைத் தொகுத்து எனக்கு நேர்முகமாகத் தந்து சகோதரி ஷாஜாதி அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் செங்கொடி காத்த சிவப்பி என்று புரட்சிப் பெண்ணாகப் புகழ்பெற்ற திருமதி சிவப்பி அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எனக்கு மணியம்மை தொடர்பான தம் சிறை அநுபவங்களைக் கூறினார்கள்! காலத்தால் புதையுண்டு போன மணியம்மையின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து அறியும் முயற்சியில் நான் சந்தித்த ஆண்கள், பெண்கள், அரசியல் இயக்கத் தொடர்பாளர், குடும்பத்தினர் அனைவரையும் பட்டியல் போட்டால் விரியும். அதனாலேயே சுருக்கமாகத் தெரிவிக்கிறேன். திரு. இராம அரங்கண்ணல், நாகப்பட்டினம் திரு. வெங்கடாசலம், டாக்டர். திரு. சந்திரமோகன், காலம் சென்ற திருமதி வத்ஸலா நடேசன், மன்னை திரு. அமிர்தலிங்கம், திரு. நாகப்பன், ஆகியோர் எனது முயற்சி மேலும் மேலும் ஆர்வம் பெற, நுட்பமாக ஆய்வு செய்யத் தகுந்த பல இன்றியமையாத தகவல்களைத் தந்து உதவினார்கள். ஆந்தக்குடியில் நான் சந்தித்த உறவினர்களான மூத்த பெண்மணிகள் பலரும், அக்காலத்தில், மணியம்மை எடுத்த புரட்சிகரமான முடிவுகளைப் பற்றிய சநாதன எதிரொலியை நான் நன்கு உணர்ந்து கொள்ள உதவினார்கள். திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில், நான் சான்றுகளைத் தேடிப் பெறவும், சென்னையில் இயக்கம் பற்றிய பல செய்திகளை அறியவும், பல நண்பர்கள் எனக்கு உதவினார்கள். குறிப்பாக, ஜனசக்தி அலுவலகத்தில் சென்று பழைய இதழ்களை நான் பார்ப்பதற்கு, ஜனசக்தி ஆசிரியக்குழுவும், நிர்வாகிகளும் எனக்குப் பேருதவி செய்தார்கள். தாம்பரம், வீணை வித்வான் திருமதி பாமா அவர்கள், எனக்கு மணியம்மையின் நாகபட்டிணத் தொடர்பு பற்றியும் சிநேகிதை குஞ்சம்மாள் பற்றியும் நேரில் கண்ட பல செய்திகளைக் கூறி உதவினார்கள்.

     மணியம்மையுடன் பழகி அநுபவம் பெற்ற, பழம் பெரும் தியாகிகளும் தொண்டர்களுமான ஜனநாயக மாதர் சங்கத்து ருக்மணி அம்மாள் தேசிய மாதர் சம்மேளனத்தைச் சார்ந்த திருமதி மீனாட்சி சுந்தரத்தம்மாள் ஆகியோர், மணியம்மையுடன் பழகிய அநுபவங்களை, பேரன்புடன் கூறி உதவினார்கள்.

     வாழ்க்கை வரலாறு எழுதியாயிற்று. ஆனால், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமே? அந்த அரிய பொறுப்பை, மனமுவந்து தினமணி கதிர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர்க் குழு ஏற்றுக் கொண்டது. மிக நல்ல முறையில் இந்தத் தொடரை வெளியிட்ட திரு. கி. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். பத்திரிகையில் வெளிவருவதில் உள்ள கூடுதல் சிறப்பு, தொடரை உயிர்த்துவமுடையதாகச் செய்யும் படங்களேயாம். இம்முறையும் புகழ்பெற்ற ஓவியர் திரு. கோபுலு அவர்கள் மணியம்மையை, அந்த வரலாற்று நிகழ்ச்சிகளுடன் கண் முன் பவனி வரும் உயிரோவியமாக வாரா வாரம் அளித்து, எண்ணற்ற வாசகர் மனதில் இடம் பெற்று விட்டார். ஏனெனில், மணியம்மையின் புகைப்படத்தை அவர் வாழ்ந்த கிராம மக்களிடம் நான் கொண்டு சென்று காட்டிய போது, அவர்களனைவரும், ஒரே குரலாகத் தங்களுக்கு அம்மாளின் படம் வேண்டுமே என்று கோரினார்கள். அத்தகைய படம் ஒன்று கூட இல்லாமல், திரு. கோபுலு அவர்கள் தீட்டி வெளியிட்ட படங்களைக் கண்டவர்கள், மிக மகிழ்ந்து அம்மா வாழ்ந்த நாட்களை நேரில் பார்த்தாற் போலிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே அரிய ஓவியர், திரு.கோபுலு அவர்களுக்கு - சில படங்களை நூலில் சேர்க்க அநுமதி அளித்தவருக்கு - என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     பத்திரிகையில் தொடர் வெளியாகும் போதே, 'புத்தகம் வந்துவிட்டதா? புத்தகம் வரும் இல்லையா?' என்று நண்பர்கள் பலர் கேட்டிருக்கிறார்கள். பலருக்கும் முழுமையாக புத்தகத்தில் படிப்பதில் தான் ஆர்வம் நிறைவேறுவதாக இருக்கிறது.

     எனது நூல்கள் அனைத்தும் உருவாவதற்கு, என் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் திரு. கண முத்தையா அவர்களை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். பழம்பெரும் தேச பக்தரும், முற்போக்கு இலக்கியக் கொள்கை உடையவருமாகிய அவர், மணியம்மையைப் பற்றி நான் எழுதுவதற்கு முதன் முதலாக ஊக்கம் அளித்து நான் செயல்படுவதற்குத் துணிவூட்டினார்.

     என் நூல்கள் அனைத்தையும் வெளியிட்டு, வாசகருலகுடன் என் தொடர்பைப் பசுமையாகவே வைத்திருக்கும் 'தாகம்' பதிப்பாளர் திரு. அகிலன் கண்ணன் அவர்களுக்கும் திருமதி மீனா அவர்களுக்கும் இந்நூலையும் பதிப்பிட்டு வெளியிடுவதற்கு என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். வாசகருலகம் குற்றம் குறை பொறுத்து இந்நூலை ஏற்கவேண்டும்.

ராஜம் கிருஷ்ணன்
6-7-91