உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
26 மணி வேலூருக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஓடி விடுகிறது. சிறைவாசம் என்பதை அதை அனுபவித்தவர்களால்தான் உணர்ந்து கொள்ள முடியும். அத்திம்பேர் விசுவநாதன் முதன் முதலாக அவர்கள் வீட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த புதிதில், அங்கு எவ்வாறு தம் வைதீக ஆசாரங்களைக் காப்பாற்றிக் கொண்டார் என்பதையே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அங்கு சிதைக்கப்பட்ட சிதிலங்களாய் நடமாடிய ‘மனித வடிவங்களை’ அவர் காணவில்லை. ‘நான்... நான் தேசீயவாதி. யாரும் செய்யாத ஒரு செயலைச் செய்து வந்திருக்கிறேன்’ என்று தான் நினைத்திருப்பார். மணியிடம் அந்த ‘நான்’ இல்லை. அந்த உணர்வு பெண்ணாய்ப் பிறந்து அவள் ஆளுமை தலைகாட்டும் முன்பே சிதைக்கப்பட்டு விடுகிறது. திருமணத்தில் அது இருந்த இடம் வேர் தெரியாமல் அழிக்கப்பட்டு விடுகிறது. கைம்மை நிலையில் அவள் உடல் சார்ந்த உணர்வும் கூட குரூரங்களுக்கு உள்ளாகிறது. இத்தனை அடிகளையும் மீறிக்கொண்டு மணியின் உள்ளத்து ஆளுமை எத்தகைய பரிணாமத்தை எய்தியிருக்கிறது? அவளே நினைத்துப் பார்க்கிறாள். அண்மையில் சிறையில் கிடைத்த நூல்களிடையே ‘ஃபீனிக்ஸ்’ என்ற ஒரு கற்பனைப் பறவையைப் பற்றிப் படித்தாள். காந்திஜி கூட, தாம் தென்னாப்பிரிக்காவில் ‘மாதிரி ஆசிரமம்’ ஒன்று அமைக்கையில் அதற்கு ‘ஃபீனிக்ஸ் பண்ணை’ என்று பெயரிட்டார். அந்தப் பறவை சாகாதாம், செத்தாலும் அதன் அழிவின் எச்சங்களில் இருந்தே மீண்டும் மீண்டும் உருப்பெறுமாம். மணியை இந்தக் கற்பனை பெரிதும் கவர்ந்திருக்கிறது. மணி, தானே உருமாறி, உருமாறி, ஃபீனிக்ஸ் பறவையாகி எழுந்து... மேலே... மேலே... இரவில் புதிய கைதி வரும் அரவம் கேட்கிறது. உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறாள். விடிந்த பின்னரே, அந்தக் கைதியை - ஜானகி இருந்த அறையில் புதிதாக வந்திருக்கும் பெண்ணைப் பார்க்கிறாள். “யாரம்மா?...” மெல்லிய உருவம், இளமையின் தலை வாயிலில் நிற்கும் வயசு. “அம்மா... நான் ஷாஜாதி...” ஒரு கருப்புப் பாவாடை, தாவணி, சட்டை, நீண்ட சடை, வாராமல் பின்னாமல் சிடுக்குக் கூண்டாக... கன்னங்கள் தேய கண்கள் கருவளையும் ஆக மெலிந்து, “நீ... நீதான் ஷாஜாதியா?... ஓ... ஷாஜாதி! ரயில்வே நிர்வாகத்தையே கதி கலங்கச் செய்த தொழிற் சங்கப் பெண் ஷாஜாதியா நீ?...” அவள் நலிந்த இதழ்களில் புன்னகை எட்டிப் பார்க்கிறது. “ஆமாம் ஷாஜாதி, ரத்னா, ராஜி... எல்லாம் நான் தான்.” மணி எழுச்சியுடன் அவளைத் தழுவிக் கொள்கிறாள். “உண்ணாவிரதம் இருந்தேனம்மா... ரொம்ப இம்சைப்படுத்திட்டாங்க...” “உண்ணாவிரதத்தை முடிச்சியா?” “இல்ல. அம்மா, அண்ணன் எல்லாம் வந்தாங்க. கெஞ்சினாங்க. அழுதாங்க. வாயில இட்டிலிய வச்சாங்க. ஆனா நான் விடல...” “சபாஷ்... ரொம்பப் பெருமையா இருக்கும்மா?” “பின்ன கைது பண்ணி கடலூர் ஜெயில்ல வச்சாங்க. அங்க ஒரு வசதியும் இல்லே...” மணி அந்த மெலிந்த உடலில் சோர்ந்த விழிகளிலும் கூட மின்னிய ஒளியைக் கண்டு வியந்து நிற்கின்றாள். இந்தப் பெண் எந்தப் பின்னணியில் இருந்து இத்தனை ஆளுமை பெற்றாள்? முகத்தைக் காட்டுவது கூடப் பாவம் என்று கனத்த முகத்திரைக்குள் பெண்களை மறைத்துக் குருடாக்கும் ஒரு சமய சம்பிரதாயப் பின்னணியில் இருந்து வந்தவள். இவள் கண்களில் மின்னும் ஒளி தேசீயமா? இல்லை தேசீயம் கடந்த சர்வதேசீயம்; அதையும் கடந்த மனிதாபிமானம் சார்ந்த ஒரு கொள்கை கொண்ட அமைப்பு தந்த ஆற்றல். “நீ உடம்பு ரொம்ப மெலிந்திருக்கேம்மா, உன் உடம்பைத் தேற்றுவது இனிமேல் என் பொறுப்பு. காலையில் எதானும் சாப்பிட்டாயா?” “ஒரே வயிற்று நோவம்மா, எதுவும் பிடிக்கல்ல...” “பிடிக்க வைக்கிறேன் பாரு!” மணியிடம் ஒளிந்திருந்த அந்தப் பேணும் ஆற்றல் எழுச்சி கொள்கிறது. சமையற்கட்டில் சென்று, சோறும் பருப்பும் பக்குவமாகப் பொங்கிக் குழைத்து காயும் போட்டு மசித்து புளிக்காத மோர் ஊற்றிக் கரைத்துக் கொடுக்கிறாள். தலையை எண்ணெய் தொட்டுச் சீவிச் சிக்கெடுத்து, வெந்நீர் பதமாக வைத்துக் குளிக்கச் செய்கிறாள். மெல்ல, மெல்ல உடல் தேறி ஆரோக்கியம் கூடுகிறது. இவளுக்கு உற்றதொரு இளந்தோழியாகச் செல்வக் குமரியாக ஒன்றிப் போகிறாள். இந்தச் சிறைவாசத்தை இனிய அனுபவமாக்குகிறாள். ஒரு நாளின் பெரும்பொழுதும் இணைந்தே இருக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். “பெண்ணே தூங்கினாயா?... ஓ... நீயும் அதற்குள் குளித்து துணி துவைத்து... எல்லாமாயிற்றா?...” “அம்மா உங்கள் சுறுசுறுப்பு எனக்கு வர வேண்டாமா?” இருவரும் சிறையின் பெரிய சமையற்கூடத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். பல அரிவாள்மனைகள் இயங்கி டக்கு டக்கென்று மரம் போன்ற கீரைத் துண்டுகளையும், பூசணி, பரங்கித் துண்டுகளையும் வெட்டுகின்றன. சோறு பெரிய பெரிய பானைகளில் வடிக்கப்பட்டு உருண்டு கிடக்கின்றது. புளியும், பருப்பும் என்ற நாவுக்கு உணர்வூட்டும் குழம்பு கறி வகைகள் கிடையாது. வடித்த கஞ்சியில் மிளகாய்த் தூளை அள்ளிப்போட்டு அந்தக் காய்த் துண்டங்கள் போட்ட குழம்பு... “அம்மா இந்தப் பெண் கைதிங்க ஏன் மரப்பட்டைகளை விரலால உரிச்சிக்கிட்டிருக்காங்க?... தெரியுமா?...” “நான் கேட்டேன் ஷாஜாதி. இவங்களுக்கு வெத்தில புகையில போட்டுப் பழக்கம். அது கெடையாது. மரப்பட்டய உரிச்சி மென்னு துப்புறாங்க...” சிறையில் இவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. பன்னிரண்டு ரூபாய் போல் செலவுக்குப் பணமும் உண்டு. ஆனால் இந்தச் சுகங்கள், அலைகடலில் மிதக்கும் இலையின் சுகத்தை ஒத்ததாகப் படுகிறது. ஷாஜாதியை வழக்கு விசாரணைக்காக, வெளியே கடலூருக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அந்தக் கெட்டிக்காரி, மீண்டு வருகையில், இயக்கம் பற்றிய செய்திகளை, முக்கிய அறிக்கைகளை, பாவாடை மடிப்புக்குள் வைத்துத் தைத்து உள்ளே கொண்டு வருகிறாள். “அம்மா, இயக்கம் ஸ்தம்பித்து விட்டது. நாம் சிறையில் இருந்து வெளியே செல்கையில், கம்யூனிஸ்ட்கள் என்று சொல்ல ஆட்களே இருக்க மாட்டார்கள்!...” இவள் மனம் துயரத்தில் ஆழ்ந்து போகிறது. ஒவ்வொரு துளியாகச் சேர்த்த நன்னீர்... அதுவும் ஓட்டைக் கலத்தில்... ஒரு புறம் அடைத்தால் மறுபுறம் பொத்துக் கொள்ளும் கலத்தில்... சேர்த்த நீர்... மக்களின் அரிய உணர்வை மையமாக்கி வைத்துக் கட்டிய இயக்கம், வெளியே இருக்கும் கட்சி... உதிரிகளாக நிற்பவர்கள், நாள்தோறும் அடிபட்டும், துன்பப்பட்டும் சாகிறார்கள். அவர்கள், சிறைக்குள் உயர் வகுப்பில் சொகுசாக வாழும் தலைவர்களை நோக்கி, ‘உண்ணாவிரதம் இருங்கள்! போராடுங்கள்! நாங்கள் சாகிறோம்... நீங்கள் போராட வேண்டும்! உயிரைத் திரணமாக மதியுங்கள்’ என்று கருத்துரைக்கிறார்கள். ஆனால்... இங்கே தலைமை என்ன முடிவு எடுக்கிறது? எல்லாருமே செத்துவிட்டால், இந்த இயக்கத்தில் - பொது உடைமைக்காரர் என்று மிஞ்ச யாருமே இருக்கமாட்டார்கள் - அப்படியாகிவிடுமோ? ஆனால், மணி ஷாஜாதியுடன் சிறைக்குள் வேறு விதமாக ஒரு போராட்டத்தை மேற்கொள்கிறாள். பிள்ளைக் கொட்டடியை ஒரு நாள் சென்று பார்க்கிறார்கள். ஓ, இந்தப் பிஞ்சுகள் என்ன பாவத்தைச் செய்தன? தாயும் தகப்பனும் திருடியோ, சாராயம் விற்றோ, செய்த பாவங்களின் கரி நிழலில் இந்தப் பிஞ்சுகள் கருகி வெம்பி விடுகின்றன. ஈரும் பேனும் உடலில் ஊரும் நிலை மொட்டையடித்த தலைப்புண்கள்... கண்கள் புளிச்சையும், பொங்கிய வீக்கமுமாகப் பார்வையை மறைக்கின்றன. கூழ்பற்றாத நெஞ்சுக் கூடுகள், சூணா வயிறுகள் - மல மூத்திரக் காடாகத் தரை; அழுகை, ஓலங்கள்... மணி, சேரிக் குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டியவள் அல்லவா? கற்பித்தவள் அல்லவா? இப்போது அத்தனை குழந்தைகளையும், வெந்நீர் வைத்து எண்ணெய் பிரட்டி, பேனும் சிக்கும் எடுத்து, குளிப்பாட்டி, மருந்து போட்டு, பாலும் சோறும், கஞ்சியும் ருசியாகக் கொடுத்து, வேறு சட்டை போட்டு... அவற்றின் சிரிப்பொலியைக் காண வேண்டுமே? இருவரும் ஊக்கமாக, தங்களுக்குக் கிடைக்கும் அன்றாட உணவுப் பொருள்களைச் சேகரிக்கிறார்கள். காசைப் பத்திரமாகச் சேமிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைக்கூட அலுவலர் ஏதோ கடனே என்று காலத்தைக் கழித்துவிட்டுப் போய்விடுகிறார். மணியும் ஷாஜாதியும், ஜெயிலரின் உதவியுடன், அந்தக் குழந்தைகளை இங்கே கொண்டு வரச் செய்து, தாயாரையும் வரவழைத்து, சுடுநீர் போட்டு, எண்ணெய் தடவிக் குளிப்பாட்டுகிறார்கள். நல்ல பருப்புச் சோறும் பாலும் கொடுக்கிறார்கள். புதிய துணி போடச் செய்கிறார்கள். அதே போல் மாதம் ஒருமுறை, இந்தக் கைதிப் பெண்களுக்கு, காரம், புளிப்பு, உப்புப் போட்டுக் குழம்பு வைத்துச் சோறு செய்து கொடுத்து, வெற்றிலை பாக்கும் வாங்கிக் கொடுக்கிறார்கள். இரு மனிதாபிமான உள்ளங்கள் இணைந்தால் என்ன செய்ய முடியாது? பெண்கள் இவளை, அன்னை என்றே கொண்டாடுகிறார்கள். அப்போதுதான் சிறைக்குள், கூட்டுதலும் துப்புரவு செய்தலும், கைதிகளுக்கு ஆடை மாற்றிக் கொடுப்பதுமாக ஒரு பரபரப்பு உண்டாகிறது. “என்னம்மா? என்ன பரபரப்பு, இன்னிக்கு யார் வராங்க?” என்று ஜெயிலரை மணி கேட்கிறாள். “மந்திரி வராங்க...” “எப்ப...?” “நாளக்கி, அவங்க இங்க இருந்தவங்க...” “யாரு...? ஜெயில் மந்திரி...?” மணி யோசனை செய்கிறாள். “ஓ, மாதவமேனன்... குட்டியம்மாளு... அவர் மனைவி தெரியுமே?” “ஷாஜாதி, நாம் ஒண்ணு செய்வோம்.” இருவரும் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். மந்திரியும் அவர் குழுவும் சிறை - காவல்துறையின் பெரிய அதிகாரிகளும், பார்வையிட வாயில் கடந்து வருகையில், இவர்கள் அவர்கள் முன் நின்று வழிமறிக்கிறார்கள். இவர்களுடன் எலும்பும் தோலுமான குழந்தைகளின் ஒரு படை... “...என்ன...ம்மா?” “ஆனரபிள் மினிஸ்டர், ஸார்! இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? இவர்கள் பெற்றோர் செய்த பாவத்துக்கு இந்தக் கபடமற்ற குழந்தைகளும் இப்படித் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? நூற்றுக்குத் தொண்ணூறும் தாய்மார் தண்டனை முடிந்து செல்லுமுன் இங்கேயே சாகின்றன. எதிர்கால இந்தியாவுக்கு இந்த நிலைமையினால் வளம் காண முடியுமா? சொல்லுங்கள்?” மந்திரி இவளை - துணிவை வியப்புடன் பார்க்கிறார். இவள் கோலம் கேரளத்துக்காரியோ என்றும் ஐயமுறச் செய்கிறது. “குழந்தைகள் எந்தப் பாவமும் செய்யவில்லை. அவர்களை நன்கு பராமரிக்கப் போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பால், பழம், முட்டை என்ற சத்துள்ள உணவுப் பொருள்கள் குழந்தைகளுக்குக் குறைவில்லாமல் வழங்கப் பெற வேண்டும்.” இவள் கோரிக்கை அடங்கிய மனுவையும் அவரிடம் கொடுக்கிறாள். பலனில்லாமல் போகவில்லை. மணி சிறைத்தண்டனை முடிந்து வெளியேறுமுன், குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|