32

     தாய், குடல் சரிய குலை சரிய இரத்தம் பீறிட, மண்ணை நனைத்துக் கொண்டு கிடக்கிறாள். சமுதாயத்துக்கு உணவளிக்கும் ஏழைகளின் தாய்...

     நாகப்பன் அப்படியே இறுகிப்போய் நிற்கிறான்.

     வானம் இடிந்து தலையில் விழுந்துவிட்டது; பெரும் பிரளயம் வந்து முழுக்கி விட்டது.

     அம்மா...! அம்மா...!

     நீங்க ஏன் வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?

     எத்தனை முறைகள் அம்மாளைக் காப்பாற்ற விளக்கும் பாலாகம்பும் கொண்டு பின்னே சென்றிருக்கிறான்?

     மான் எப்படி இந்தப் பக்கம் ஓடி வந்தது? இந்த நடுப்பகலில், தோப்பில் கட்டியிருந்த மான் எப்படி இங்கே அம்மாளைக் குத்த ஓடி வந்தது? அது சனியா? யமதூதனா?...

     ஓடி ஓடி வருவாயே அம்மா?

     எந்த பஸ்ஸுக்குக் காத்திருந்தாளோ, அது வருகிறது.

     நவுரு, நவுரு... வழி விடுங்க!...

     பஸ்ஸில் எடுத்துச் செல்கிறார்களா? உசிர் இருக்குமா?

     நாகப்பன் எம்பிப் பார்க்கிறான். வந்த காரியம்... மூட்டையும் நெல்லும் அநாதைகளாக... மறந்து போய் நிற்கிறான்.

     பஸ் அப்படியே போகிறது.

     அம்மாளின் உடல் போகவில்லை.

     “பஸ்ஸில் ஏத்திட்டுப் போனா என்னடா? பாவி! போயி முட்டிட்டுச் சாவு!” என்று ஒரு பெண் பிள்ளை கையை நெரிக்கிறாள்.

     “போலீசு கேசாயிடுமில்ல? அவனுக்கு ஏன் வீண் வம்பு?” என்று ஒருவன் வியாக்கியானம் சொல்கிறான்.

     ஒன்றரை மணி சுமாருக்கு விழுந்த அம்மாளின் உடல் மூன்று மணி சுமாருக்கு யாரோ கார் கொண்டு வர, திருவாரூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.

     நாகப்பன் வண்டியைத் திருப்பி மூட்டை நெல்லை மாற்றாமலே பிணைவாசலுக்கு ஓட்டிச் செல்கிறான்.

     செய்தி காட்டுத் தீயாகப் பரவுகிறது.

     ‘அம்மா...! அம்மா, மணியம்மா, போயிட்டாங்க! பிணைவாசல்லே மான் குத்தி... போயிட்டாங்க!’

     ‘மான் குத்திச்சா?... மான் எப்படீப்பா குத்திச்சி...?’

     ‘திருவாரூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டிட்டுப் போயிருக்காங்க?’

     சுற்று வட்டம் கிராமங்கள் அனைத்திலுமிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சாரிசாரியாகத் திருவாரூருக்கு நடக்கின்றனர்.

     எத்தனை மாநாடுகள், எத்தனை பேரணிகள் கண்டவள் மணியம்மை! இன்று, நாகை மாநாட்டுப் பேரணி... ‘என்னை விலக்கிவிட்டு நடந்து விடுமோ’ என்று அறைகூவல் விடுத்து வெற்றியும் பெற்றுவிட்டாள்.

     திருவாரூர் ஆஸ்பத்திரி டாக்டரின் அறுவை சிகிச்சையில் இவள் உயிர் மீட்கப்படவில்லை. அறுத்துத் தைக்கப்பட்ட உடல், அந்திம ஊர்வலத்துக்குத் தயாராகிறது.

     கல்யாண காலமன்றோ? மல்லிகை, ரோஜா, செவ்வரளி மாலைகள் வந்து குவிகின்றன. நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் இவளைச் செம்மலர் மஞ்சத்தில் வைத்து, செம்பட்டுக் கொடி கொண்டு போர்த்துகிறார்கள்.

     செய்திகள் வானில் பரவும் புகை மண்டலம் போல் பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட கூட்டம், உடலை ஊர்வலத்துக்குப் பெறுமுன், கட்டுக்கடங்காத உணர்வுகளுடன் அலை மோதுகிறது.

     “மணி அம்மாவா... அவங்களையா, பண்ணை வளர்ப்பு மான் குத்திச்சு? ஆம்பிள போல வேட்டி கட்டிட்டு வருவாங்களே? அந்தம்மாளா? விவசாயத் தொழிலாளர்களுக்காக, கொடி புடிச்சிட்டு வரும் மணி அம்மாளா? தோட்டித் தொழிலாளர்களுக்காகப் போராட்டம் நடத்தின அந்த மணி அம்மாளா?”

     “வேணுமுன்னுதான் மானை அவுத்துவிட்டிருக்காங்க. பாவிங்க! தாயைக் கொன்னிட்டாங்க...”

     இவர்கள் ஊகங்களும், சோகத்தில் பீறிட்ட வெறிகளும், நிலப்பிரபுத்துவ வருக்கத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடப் போதுமான வேகம் கொண்டிருக்கிறது.

     ஆனால், நாகை மாநாட்டை முடிக்காமலே, அந்திம ஊர்வலத்தை இவளைக் கட்சி அமைப்பிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட கட்சி நடத்துகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் செயலாளருக்கும், நெஞ்சு வலிக்கச் சத்தியத்தின் சாட்டை கொண்டு வீசினாற் போல் ஓர் அதிர்ச்சியைத் தந்திருக்கிறாள் அல்லவோ? இறுதி ஊர்வலத்தில் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு இரங்கல் கூட்டம் நடத்துகிறார்கள்.

     இவளுடைய போராடும் எழுச்சி கண்டு பொறாமல், பிற பெண்களை இவளிடம் இருந்து விலக்கி வைத்த சாதிச் சமுதாயம், இவள் அந்திம ஊர்வலம் கண்டு மலைத்து நிற்கிறது. கூட்டுப் புழுக்களாய் இருந்த அந்த உறவு கிராமப் பெண்கள், இந்நாளில் திருவாரூர் வீட்டுப் படிகளில் நின்று, “அடியே, இவளைப் பற்றி எத்தனை பழி சொல்லி மறைவாகத் தூற்றினோம்? உண்மையில் இப்படி ஒரு மகிமைக்காரியா இவள்? காந்தி செத்துப் போய் ஊர்கோலம் போன போது கூடின கூட்டம் பேப்பரில் வந்ததைக் காட்டினாளே, அப்படி அல்லவா ஜனக்கூட்டம் போகிறது?”

     அவர்களையும் அறியாமல் கண்ணீர் பெருகி வருகிறது. திராவிட முன்னேற்றக் கட்சி மாநாடு முடிந்த பின் திருவாரூர் திரும்பிய இளவல் தியாகராஜன், அன்னை மாண்டதை எந்தக் கடையில் அவள் தன்னுடன் வருவதற்கில்லை என்ற செய்தியை அறிந்தானோ அதே இடத்தில் தான் கேள்விப்படுகிறான்.

     திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட நிலை குலைகிறது நெஞ்சம். அம்மா... அம்மா! விதியை நம்பாதவர்களையும் கலங்க வைக்குதே இச்செய்தி!... நீங்கள் அன்று... அந்தப் பிரசுரங்களுடன் இந்த மாநாட்டுப் பந்தல் வாயிலில் வந்து கடை விரித்திருக்கலாகாதா? இங்கே ஏன் நின்றீர்கள்?

     மான்... மான் எப்படிக் குத்தியது?...

     “மானா... வேறு விதமாகவும் சொல்லிக்கிறாங்க... இந்த கம்யூனிஸ்ட்காரங்களே பின்னாடிருந்து குத்திட்டதாச் சொல்லிக்கிறாங்கப்பா!”

     “... அதெல்லாம் இல்ல... சும்மா... டிராக்டர் ஓடுறத வேடிக்க பாத்திட்டு அம்மா போயிருக்காங்க. மான் வந்து பின்னாலேந்து குத்திடிச்சி. ஏழு கலை கொம்புள்ள ஆண் மான். புல்லுக்குடுக்கறதுக்குப் போனாங்களாம், குத்திச்சாம்பா? ஏவிவிட்டுக் கொன்னிட்டாங்கன்னு சொல்றாங்க. அது சும்மா?...”

     பல்வேறு பிசுறுகள், வதந்திகளாக - செய்திகளாக மாறிப் பரவ அவள் அந்நாளிலேயே வரலாற்று நாயகியாகிப் போகிறாள்.

     நண்டு வள மண்ணெடுத்த
     நாலு பக்க வளவுக்குள்ளே
     பண்டு பண்டாய் நாங்க ருந்தோம்
     பண்ணய்க்காரர் அடிமகளாய்,

     புத்துவள மண்ணெடுத்த
     புத்தூரு கோட்டக் குள்ள,
     புத்தி சத்தி இல்லாமலே
     புதஞ்சிருந்தோம் நாங்களெல்லாம்.

     கோட்டைக்குள்ள நாங்கருந்தோம்
     கொடுமயெல்லாம் சகிச்சிருந்தோம்
     சாட்டயடி கொண்டிருந்தோம்
     சாணிப்பால் குடிச்சிருந்தோம்.

     கோட்ட சரிஞ்சி விழ
     கொடி பிடிச்சி அம்மா வந்தா.
     சாட்ட யடிக்கு முன்னே
     சாகசங்கள் செய்து வந்தா.

     மதிலுகள் சரிஞ்சு விழ,
     மணியம்மா, அங்கே வந்தா
     பதிலுகள் கேட்டு வந்தா
     பட்ட மரம் தழைக்க வந்தா.

     நம்பி உழைப்பவர்க்கு
     நாயங்கள் கேட்டு வந்தா
     கும்பி குளுர வந்தா
     குரலுகளும் எழுப்பி வந்தா.

     ரோதை உருண்டு வர,
     ரத்தம் தெறிச்சிதம்மா!
     பாதை யெல்லாம் செம்பூவாய்
     பதிஞ்ச அடி பூத்ததம்மா!

     மாடு முட்டிக் கேட்டதுண்டு,
     மான் முட்டிக் கேட்டதுண்டோ?
     ஆடு முட்டிப்பாத்ததுண்டு
     ஆமை முட்டிப்பாத்ததுண்டோ?

     ஏழைக்குலம் குளுரும்
     எங்கம்மா பேரு சொன்னா!
     மக்கள் குலம் விளங்கும்
     மணியம்மா பேரு சொன்னா.

(முற்றும்)