உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
7 மணி, அறுவடை நாளில், களத்து மேட்டில் நிற்கிறாள். ஆண்களும், பெண்களுமாக உழைப்பின் பயனைக் காண்பதில் உற்சாகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொன்னிறக்கற்றைகளை, இருளாண்டியும் வீரனும் சோமனும் பூமியில் அடிக்கும் மாத்திரத்தில் நெல் மணிகள் கலகலவென்று சிரிப்பது போல் உதிர்ந்து அந்தக் கட்டாந்தரையைப் பொன்னாக்குகின்றன. குஞ்சு குழந்தைகளுக்கு ஆனந்தம். ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. பட்டறை போட்ட நெல்லுக்கு உடமைக்காரன் காவல் கிடையாது. உழைப்பாளிகளே பொறுப்பு. உழைப்புக்கேற்ற நெல் இல்லாமல், காலும் அரையுமாக அளந்துவிட்டு, அரை அணா ஓரணா கள்ளுக்காக என்று கொடுத்து ஏமாற்றும் வழக்கை 'நடுவாளுடன்' இவள் முடித்துவிட்டாள். அரை மரக்காவுக்கு முக்கால், சிந்திய நெல்லில் ஒரு பங்கு, அதிகம் கண்டதில் ஒரு பங்கு என்று அந்த ஏழு குடும்பங்களுடன், ராமுவின் அம்மாவுக்கும் கூலி அளந்துவிடச் சொல்கிறாள். வீரன் தான் அளக்கிறான். பிறகு மூட்டைகளில் கட்டி, வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். சென்னைக்கு வருடாந்தரச் சாப்பாட்டுக்கும், வீட்டுச் செலவுக்கும் வைத்துக் கொண்டது போக, வியாபாரியிடம் மீதி நெல்லை விற்றதில் நானூறு ரூபாய்க்கு மேல் கையில் நிற்கிறது. ஊருக்கு மகிழ்ச்சியுடன் கடிதம் எழுதிப் போடுகிறாள். "குழந்தைகளா! வீட்டில் மாடு, கன்று போட்டுப் பால் நிறையக் கறக்கிறது. புதிய காளை வண்டிக்குப் பூட்டியிருக்கிறேன். புதிய மணி வாங்கிக் கட்டியிருக்கிறேன். மாங்காய் இறக்கி ஊறுகாய் போட்டிருக்கிறேன். நீங்கள் லீவு விட்டதும், புறப்பட்டு வாருங்கள். திருவாரூருக்கு வண்டி வரும்..." என்று தம்பி குழந்தைகளுக்குக் கடிதம் எழுதிப் போடுகிறாள். இந்தப் புதிய கோலம் அவளுக்கு இதுநாட்கள் உள்ளோடு இருந்த கூச்ச உணர்வை, தாழ்மை உணர்வை உதறத் தெம்பு கொடுத்திருக்கிறது. புதிய ஒற்றைக்காளை பூட்டிய சிறு வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு காக்கழனி, சிமிளி என்று செல்கிறாள். உறவினர் ஊர்களில் முன் சுவாமி பெட்டியுடன் போய் இறங்கித் தங்கிய நாட்களின் ஒட்டுறவும் 'சமூக' மதிப்பும் இன்று இல்லை. "மணியா? வா!" என்று வரவேற்கும் பாங்கும், வீட்டு மருமக்கள் 'வாங்கோக்கா' என்று மகிழ்வுடன் எதிர்கொள்ளும் நடப்பும் மாறிவிட்டன. உட்கூடக் கதவுகளைச் சாத்திக் கொள்கிறார்கள். இவள் முன் அறையில் - திண்ணையில் 'ஆண்'களுடன் காங்கிரஸ் கூட்டம் பற்றிப் பேசி அறிக்கை கொடுத்துவிட்டுப் போக வந்தால், இவளே 'குடிக்க ஜலம் கொண்டாம்மா?' என்று குரல் கொடுத்தால் தான் கதவு திறக்கிறது. கூஜாவோ, செம்போ தம்ளருடன் கொண்டு வந்து பக்கத்தில் வைக்கப்படுகிறது. இவளுக்கு மனசில் பருக்கைக்கல் சிக்கினாற்போல் முரண்பாடு உறுத்தாமல் இல்லை. ஆனால் அதை விழுங்கிக் கொண்டு உள்ளூறச் சிரித்துக் கொள்கிறாள். இவள் பார்த்து வளர்த்த தமக்கை பிள்ளைகளுக்கும் கூட இவள் கோலம் திகைப்புத்தான். முன்பு பெண்ணாய் ஒட்டியிருந்த குடும்பப் பாசம், இன்று செயற்கைப் பசை உலர்ந்து விழ வெறும் கடமைக்கு மட்டுமாக பட்டும்படாத உறவாக நிற்கிறது. தலைமொட்டை முக்காட்டுடன், எண்ணெய் ஒட்டா உப்புமாவையோ, தோசையையோ வைத்துக் கொண்டு பொழுதோடு முற்றத்தில் தட்டில் வைத்துப் பிட்டு வாயில் போட்டுக் கொண்டு, ஊர் மாட்டுப் பெண்களின் சீர் - செனத்தி விவகாரங்களை, உள்வீட்டு மோதல்களை நாவில் வைத்து அரைத்துக் கொண்டு பொழுதை சுவாரசியமாகக் கழிக்கும் தங்கள் வரிசையில் மணி ஒட்டாமலே விலகி விட்டாளே என்ற ஆத்திரம், இளைய தலைமுறை அவளைப் பார்க்கவே கூடாது என்று சட்டமிடச் செய்திருக்கிறதோ என்று மணி நினைத்துக் கொள்கிறாள். கோடையின் வரவைக் கட்டியம் கூறிக் கொண்டு, சேரி ஓரமுள்ள இலுப்பை மரங்களில் பொறிப் பொறியாகப் பூ உலர்ந்து மணம் கமழுகிறது. "ஏ, காஞ்சி, ராமு, குஞ்சான், மணி எல்லாம் வாங்க!" அம்மா இரண்டு நாட்கள் ஊரிலில்லை. விஜயபுரம் சென்று வந்தால் இந்தப் பிள்ளைகளுக்கு ஆரஞ்சிமிட்டாய் வாங்கி வந்து கொடுப்பாள். "ரெண்டு நாளாப் படிச்சீங்களா?" "வாங்க, வாங்க!" அம்மா மரத்தடியில் அமர்ந்து, ஒவ்வொரு சிறுவனையும் சிறுமியையும் கை பிடித்து மணலில் எழுதக் கற்பிக்கிறாள். "அ... அ... அம்மா... ஆ... ஆ... ஆடு... இ... இறகு... ஈ... ஈ தெரியுமா?" "தெரியும், தெரியும்!" உற்சாகமாக எல்லோரும் தலையாட்டுகிறார்கள். அப்போது, ஒரு முதியவர், ஒரு பையனை அங்கு அழைத்து வருகிறார். "அம்மா கும்பிடறேங்க!" மணி நிமிர்ந்து பார்க்கிறாள். "ஏம்ப்பா, அங்கேயே நின்னுட்ட, இப்படி வா. நீங்க... எந்தூரு பண்ணை?" "மயிலாங்குடி... இந்தப் பையனையும் படிக்கப் போடணும்னு... இவெ இங்காலதே மாடு மேய்க்க வாரான்..." "படிக்கணும். நிச்சயமாப் படிக்கணும். இங்கே வாடா பயலே, உம் பேரு என்ன?" "எல, போ..." என்று பெரியவன் தள்ளுகிறான். அப்பளக் குடுமியும் முடிகயிறுமாக அவன் தாத்தாவை ஒண்டிக் கொண்டு நிற்கிறான். "பண்னையில ரொம்பக் கெடுபிடிங்க... பள்ளுப்பற படிக்கிறதுன்னா... மேச்சாதி ஒத்துக்காதுங்களே... பண்ண எசமானுக்குத் தெரிஞ்சா எங்களத் தொலைச்சிடுவாங்க... அம்மா கொஞ்சம் மனசு பண்ணி படிப்பு சொல்லித் தாங்க." "எல்லோரும் படிக்கணும். மேச்சாதி என்ன கீழ்ச்சாதி என்ன?" "பையா! ஒம் பேரென்ன?..." பாட்டனின் வேட்டித் துணியைப் பற்றிக் கொண்டு தலை குனிந்து அவன் பேசுகிறான். ஒன்றுமே செவியில் விழவில்லை. "குஞ்சிங்க இவம்பேரு... இவாத்தா... மூணு மாசத்துல செத்திட்டாங்க... அவ பேர வச்சி குஞ்சின்னு குப்பிடுறோமுங்கம்மா!..." "இங்கே ஏற்கெனவே ஒரு குஞ்சு, காஞ்சி இருக்காங்க. உம்பேரு முருகன்னு வைக்கிறேன். நிதம் வரணும்... என்ன?" பையன் தலையாட்டுகிறான். "சரி இப்ப... நான் சொல்வதை நிங்க எல்லாரும் சத்தமாச் சொல்லணும்!... வந்தே மாதரம்!" "சத்தமா...!" இளங்குரல்கள் பிசிறுபிசிறாக ஒலிக்கின்றன. காஞ்சி 'மோதரம்...' என்று சொல்வது தெளிவாகப் புரிகிறது. "மோதரம் இல்லை... மாதரம்... வந்தே...!" "வந்தே! மாதரம்..." உற்சாகம் பிய்த்துக் கொண்டு போக எல்லோரும் கத்துகிறார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு வந்தே மாதரம் கத்திக் கொண்டு தோப்பு துரவெங்கும் சுற்றும் போது, மணி 'கள் குடிக்கக் கூடாது' என்று பாடம் சொல்கிறாள். "கள்ளுக்குடிச்சா, புத்தி கெட்டுப் போகும்." "உங்கப்பன் எல்லோரும் குடிக்கிறதாலதான், நீங்க நல்லா சாப்பிட முடியல. துணி போட முடியல... கள்ளு பாவம்... அதோ மரத்தில தென்ன மரத்தில என்ன இருக்கு தெரியுமில்ல?..." "அதுல கள்ளு எடுக்கிறாங்க... இப்ப நீங்க என்ன செய்யணும் தெரியுமா? நேரா குறி பார்த்து, கல் வீசி சட்டிய உடைக்கணும்..." பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டுமா? ஒரு நொடியில் ஓட்டாஞ் சில்லிகள், சிறு கற்கள் சேர்ந்து விடுகின்றன. விர் விர் என்று அவை கள்ளுக் கலயங்களைக் குறி பார்த்துப் பறக்கின்றன. அவை உடைந்து அதனுள்ளிருந்து திரவம் வெளியே பெருகுவதைக் காணும் மணிக்குப் பெருமிதம் பூரிக்கிறது. சபாஷ்...! அனைவருக்கும், இந்தத் தீரச் செயலுக்குரிய பரிசாக ஆரஞ்சி மிட்டாய், மஞ்சள், சிவப்பு, பச்சை வண்ணங்களில் பிள்ளைகளின் நாவில் இனிமையாகச் சுரக்க வந்து சேருகின்றன. மணிக்கு அப்போது, இந்தச் செயல் இவள் பட்டாமணியத்தின் வைக்கோற்போரில் உதறிய தீக்கங்கு என்ற உணர்வு உறைக்கவில்லை. குழந்தைகள் சென்னையில் இருந்து வந்து ஒரு வாரம் தங்கிவிட்டு அவர்களின் தாய்வழிப் பாட்டனார் ஊரான ஆலங்காட்டுக்குச் சென்று விடுகிறார்கள். இந்த நாட்களில்தான் கிராம தேவதைகளின் விழாக்களுக்குக் குடிமக்களின் கோயில்களில் கொடியேற்றுவது வழக்கம். இவ்வாண்டு பள்ளர்குடிகளில், அம்மாளின் ஆதரவு பெற்ற மக்களிடையே புதிய உற்சாகம் அலை மோதுகிறது. இதற்கு முன், மணி கிராமக் கோயில்களில் விழாக்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். பண்ணை உடைமை என்ற நிலையில் காப்புக் கட்டியதும் இவர்கள் பங்காகப் பொருள் மட்டுமே கொடுத்து உதவுவார்கள். இந்த மேற்குலத்தினர் தெய்வ சந்நிதிக்குள் அந்தத் தாழ்த்தப் பட்டவர்கள் வருவதற்கு உரிமையில்லை. இவர்கள் தெய்வங்களுக்கு வேண்டிக் கொண்டு, பொருள் கொடுப்பதுடன் சரி. மணி இப்போது அந்தக் குடிகளில் சுற்றி வருகிறாளே? பொன்னம்மாக் கிழவியின் பேத்தியை உழனி பண்ணையில் கட்டி, அவள் பேறு காலத்திற்கு வந்திருக்கிறாள். இப்போது இந்த மாதிரியான உதவிகளையும் கூட, 'அம்மா' மேற்கொள்கிறாள். மணி மல்லிகைப் பூவும் விளக்கெண்ணெயும் எடுத்துக் கொண்டு அந்தச் தலைச்சன் பிள்ளைகளைப் பார்க்க வருகையில், அந்தக் குடியில் இருவர் சிலம்பம் ஆடுகிறார்கள். சுற்றிலும் கூட்டம் உற்சாகமாக இரு கட்சிகளாகப் பிரிந்த நிலையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒருவன் வயது முதிர்ந்தவன். மற்றவன் உழைப்புக்கேற்ற ஊட்டமில்லை என்றாலும் இளமை என்ற மந்திர வசந்தம், மற்றவனின் புத்துணர்வை இசைத்திருக்கிறது. முதியவன் சிறிது குட்டை. அவனை இவள் இந்தக் குடிகளில் பார்த்ததாகத் தெரியவில்லை. மற்றவன், இவர்களிலேயே சலவை செய்யும் சின்னானின் மூத்த மகன் குப்புசாமி. நீள நெடிய ஒல்லி, வெட்டாத சுருள் முடி குதிக்க, கருமேனி இலாவகமாக வளைந்து நெளிந்து அவன் சிலம்பம் ஆடுகிறான். "டேய் அம்மா... அம்மா வராங்க! வழி விடு!" "இருக்கட்டும். இந்தா முத்தம்மா, இந்த எண்ணெயையும், பூவையும் பொன்னம்மா பாட்டி ஊட்ல குடு!" என்று அனுப்பிவிட்டு, அந்த வீட்டின் சாணி மெழுகிய திண்ணையில் உட்காருகிறாள். முதியவனான ஆட்டக்காரன் திரும்பி, மூச்சு வாங்கும் இரைப்பை ஆற்றிக் கொள்பவனாகச் சிரித்துக் கொண்டு அம்மாளை வணங்குகிறான். "நீங்க இவ்வளவு நல்லா ஆடுறீங்க? சின்னவனுக்குச் சமமா...!" முன் பற்கள் இரண்டு மட்டுமே தெரிகின்றன. கன்னப் பக்கத்துப் பற்கள் விழுந்துவிட்ட பெரும்பள்ளம் பூரிக்க அந்த முதியவன் சிரிக்கிறான். முன் தலை வழுக்கை, சவரம் செய்தபின் வந்த வெண்முடி, அறுபதுக்கு மேலும் வயசிருக்கும் என்று ஊகிக்க வைக்கிறது. "காளியம்மா திருவிழால்ல! சாமி பல்லாக்கு வாரப்ப இந்தத் தபா, ஆடணும்னாருங்க... ராசு வாத்தியாருன்னு அந்தக் காலத்துல அவுரு ரொம்ப பிரசித்தம். அவுரு வயிசில சின்னப்பிள்ளையெல்லாம் ஈடு குடுக்க முடியாது. அப்பிடி ஓராட்டம் ஆடுவார்..." "நீங்க எந்தப் பக்கம்?..." "இதா... ஒழனி. இந்தப் பய அப்பன் எனக்கு ஒரு வகையில் மச்சான். உறமுறைதா. என் சம்சாரமும் இவப்பாரும் சித்தாத்தா பெரியாத்தா." "ஓ... ரெண்டு தலை முறைக்காருங்க...!" "இதெல்லாம் ஒரு மாதிரி மத்தவங்க அடிக்கவராம பாத்துக்கிடத்தான் தாயி. நம்மகிட்ட வேற என்ன ஆயுதம் இருக்கு? கம்பு சொழட்டுறதா. வங்களம் புதூருல என் தங்கச்சி மவ சின்னப்புள்ள. அவளும் நெல்லா ஆடுறா. பெரி... பெரிய ஆளுக கூட பந்தியம் போட்டு கெலிக்கறா..." "சின்னப் புள்ளங்க... கத்துக்கறாங்க... வீருசமா வரல... நெதிக்கும் காலம எந்திரிச்சி, அது ஒரு மொறயாப் பழகணும்..." மணி சிறிது நேரம் வாளா இருக்கிறாள். பட்டாமணியமும், பதினாறு வயசிலேயே கயமைகளின் இருப்பிடமாக இருக்கும் அவன் மகனும், இவளை எந்த வகையிலும் சீண்டக் கூடியவர்கள். இந்த மாதிரி ஆண் கோலம் கொண்டு நிற்பதில் ஒருவகையில் அவர்கள் அஞ்சி விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இவர்கள் பானைகளை உடைத்த மறுநாள், அந்தச் சின்னவன், கொல்லைப்புறம் வந்து நின்று அசிங்கமாக வசை பொழிந்தான். தெருவில் போகும்போதும், வரும்போதும், "பொட்டச்சி வேசம் கட்டினா எப்படிருக்கு பாரு?" "டீ யேய்..." என்று ஏதேனும் கூறிச் சிரிக்கிறார்கள். எதற்கும் தன்னிடம் ஒரு தற்காப்பு என்று பிறர் அஞ்சக்கூடிய சாதனம், திறமை அவசியம்... "நீங்க... எனக்கு இந்த வித்தையைச் சொல்லிக் குடுக்கணும், வாத்தியாரே!" அவள் கேட்பது பொய்யோ மெய்யோ என்பது போல் அயர்ந்து நிற்கிறான். "நிசந்தானையா... நான் உசந்த குலத்துல பிறந்திட்டேன்னு வித்தியாசமா நினைக்க வேண்டாம். அநியாயத்தைத் தட்டிக் கேட்க, நான் தனியாப் போராட வேண்டியிருக்கு. நீங்க இதைக் கத்துக்குடுத்தா... எனக்கு அது ரொம்ப உதவியாயிருக்கும்..." இது தீர்மானமான பிறகு, மணி அதிகாலையில் எழுந்து, அடுத்த ஊரின் அந்தப் பள்ளர் குடிக்கு சிலம்பம்-கழி சுற்றுதல் பழகச் செல்கிறாள். உட்கச்சும் வேட்டியும் வரிந்து இசைத்து, மேலே சட்டை போட்டுக் கொண்டு இவள் தடி சுழற்றப் பயிற்சி செய்கிறாள். ஐந்தரையடி நீளமுள்ள தடியைப் பற்றும் விதம், தாவும் முறை, சுழன்றாடும் வகைகள், எல்லாம் பாடம் கேட்கிறாள். நாலடி எட்டடி என்று பாய்ந்து பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிகிறாள். பயிற்சி நடக்கிறது. அந்த முதியவன், மேல் சாதியில் பிறந்து, ஆணுடையில் வந்து பழகும் இவளை மாரியம்மா, காளியம்மா என்றே பக்தி பூர்வமாக நினைக்கிறான். சிறிது நேரம் ஆசுவாசம் செய்து கொண்டு நீர் வாங்கி அருந்துகிறாள். அதே கம்பை எடுத்துக் கொண்டு ஊர் திரும்புகிறாள். பலபலவென்று விடிந்து சூரியன் உதயமாய்க் கொண்டிருக்கிறான். கால்வாயில் சட்டிபானை, பாத்திரங்கள் கழுவும் குடியானவப் பெண்கள் இவளை வினோதமாகப் பார்க்கிறார்கள். கட்டுத்தறி பெருக்குபவர்கள், எருச் சுமந்து கொட்டுபவர்கள் இவளைப் பார்த்து ஒரு கணம் நிற்கிறார்கள். ஆனால் பேசவில்லை. அன்று பகல், பின்புறமாக இவள் வீடு திரும்புகையில், ஒரு கடிதம் சாத்திய கதவுக்குள் இடுக்கு வழியாகப் போடப்பட்டிருந்தது. சன்னல் வழி பார்க்கையில் பட்டாமணியத்தின் மைனர் பயல், வெற்றிலைச் சாற்றை வாயிலில் நின்று துப்புவது கண்களில் படுகிறது. கடிதம்... அவன் போட்டதல்ல. தபாலில் வந்திருக்கிறது. இது முதல் நாள் மாலையே வந்திருக்க வேண்டும். கூட்டை உடைத்துப் படிக்கிறாள்... தம்பி எழுதியிருக்கிறான். "...நமஸ்காரங்கள்..." "நீ ஊரில் ஏதோ நல்லபடியாக இருந்து பண்ணையைப் பார்ப்பாய் என்று நினைத்தேன். காங்கிரஸில் சேர வேண்டும் என்று சேர்ந்தாய். மதிப்பும் கௌரவமும் குறையாமல், உன்னை மாகாண காங்கிரஸ் வரை கொண்டு செல்லவும், நம் சொந்த பந்துக்கள் உனக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஆனால், உன் நடவடிக்கை மிக மோசமாக இருக்கிறது. ஏற்கெனவே ஊரிலிருந்து எனக்கு நீ, பொதுக் காரியங்களில் தலையிட்டு, ஊர்க்கட்டுப்பாட்டை எதிர்த்து, தான் தோன்றித்தனமாக எல்லாம் செய்வதாக கடிதாசி வந்தும், நான் அதை மதிக்கவில்லை. இப்போது எனக்கு நம்பகமுள்ள மனிதர்களே உன் நடவடிக்கைகளைச் சொல்கையில் நம் குடும்பத்துக்கு இப்படியெல்லாம் தலைக்குனிவு வர வேண்டுமா என்று வேதனையாக இருக்கிறது. நீ இனி பண்ணையைப் பார்க்க வேண்டாம். அதற்கு வேறு ஏற்பாடு செய்து விடுகிறேன். நான் அடுத்த வாரமோ, பத்து நாளிலோ அங்கு வருகிறேன். அம்மாவும் நீயும் இங்கே புறப்பட்டு வரத் தயாராக இருங்கள். இனி மணலூரில் குடும்பம் ஒன்று வேண்டாம்..." மார்கழிக் குளிரில் பனிக்கட்டியை வாரி இறைத்தாற் போல் இக்கடிதம் அவளைச் சில்லிட்டுப் போகச் செய்கிறது. நீ பண்ணையைப் பார்க்க வேண்டாம்... உனக்கு... பிதிரார்ஜித பூசை செய்ய அருகதையில்லை... நீ ஸ்திரீ... புருஷன் போய்விட்ட பின் உனக்குப் பண்ணை அதிகாரம் ஒரு கேடா! இவள் என்ன குறை வைத்தாள்? தரிசாகக் கிடந்த இடத்தில் மரம் வைத்தாள். பயறாய், உளுந்தாய், தேங்காயாய் அனுப்பி வைக்கவில்லை?... ஆனால், மணி, மணலூரை விட்டு நகருவதாக உத்தேசமில்லை. மணி அன்றே இவளுக்கு நெருக்கமாக நினைக்கக் கூடிய ஒரு வக்கீல் நண்பரைப் பார்க்க நாகைப்பட்டினத்திற்குச் செல்கிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|