உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
21 ஆண்டு 1947. ஆகஸ்ட் பதினைந்தாம் நாள். விடியப் போகிறது! அந்த இரவில் பாரத நாடே விழித்திருக்கிறது. விஜயபுரத்துக் கடைவீதி உறங்குமா? இந்த ஒரு நாளைக் காண எத்தனை எத்தனை போராட்டங்கள், களபலிகள், துப்பாக்கிக் குண்டுகள், சிறைவாசங்கள்! வெள்ளை அரசாங்கம் தன் குடையைச் சுருட்டிக் கொண்டு கப்பலேறுகிறது! ஒவ்வொரு கடை வாயிலிலும், வாயிற்படியிலும் இரவு பன்னிரண்டு மணியை எதிர்பார்த்துக் கிளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சையில் சின்னச் சின்ன பல்புகள் எரியும் தொடர் விளக்குத் தோரணங்கள். கொடியேற்றும் நிகழ்ச்சியை ஒவ்வொரு தெருவிலும் திட்டமிடுகிறார்கள். நள்ளிரவில், பட்டாசைக் கொளுத்தி, கொண்டாடுகிறார்கள். மணி தங்கள் அலுவலக இருக்கையிலும் கொடி ஏற்றுகிறாள். ஒரு பக்கம் செங்கொடி இன்னொரு பக்கம் பெரிய அளவிலான தேசீயக் கொடி. ஒரு கிராமஃபோன் பெட்டி, ‘மைக்’கில், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று பட்டம்மாளின் குரலாய் முழங்குகிறது. மணி விடியற்காலைக்கு முன்பே இரயில் நிலையக் கிணற்றில் நீராடி, புதிய கதர் வேஷ்டி, சட்டை அணிகிறாள். இனிப்புடன் இட்லியும் சட்டினியும் வாங்கி வருகின்றனர் தோழர்கள். அவர்களுடன் காலை உணவருந்திவிட்டு, பல்வேறு விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் தேசீயக் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளக் கிளம்புகிறாள். இந்தக் கோலாகல மகிழ்ச்சியுனூடே, கரும்புள்ளிகள் இல்லாமல் இல்லை. கருப்புச் சட்டை அணி ஒன்று மவுன ஊர்வலம் புறப்பட்டிருக்கிறது. “இது என்னப்பா, திருஷ்டி பரிகாரம்?” “... இந்தச் சுதந்திரம் யாருக்கு? தமிழனுக்குச் சுதந்திரம் இன்னும் வரவில்லை. இது ஆரிய சுதந்திரம் தானேன்னு சொல்றாங்கம்மா!” என்று சுவாமிநாதன் தெரிவிக்கிறான். “அட, இதில இதுவேறே இருக்கா!...” “அவங்க இன்னிக்குச் சாயங்காலம், ஐநூத்துப் புள்ளயார் கோவில் முன்ன பார்க்கில் துக்க மீட்டிங் போடுராங்க!” “...ஓ...! அப்படியா சங்கதி!” இந்தக் கருஞ்சட்டைப் படையினர் தவிர, இன்னொரு முள்ளும் இச் சுதந்திர நாளை உறுத்திக் கொண்டிருக்கிறது. “...தேசம் துண்டாடப்பட்டிருக்கிறது. ஹிந்துக்களை முஸ்லிம்கள் கொலை பண்ணுகிறார்கள். முஸ்லிம்களை ஹிந்துக்கள் கொல்கிறார்கள்! காந்திஜியே இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை!” என்று ஓர் அணி, இது துக்க நாள் என்று அறிவிக்கிறது. உண்மையே. ஆனால், துவக்க நாள்களில் இருந்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பற்றி உணர்ந்து ஒற்றுமை ஒற்றுமை என்று இவர்கள் குரல் கொடுக்காமலில்லையே! அவன் சூழ்ச்சியில் வென்று விட்டான். ஆனால் அதற்காக, இந்தச் சுதந்திரம் பொய் என்று துக்கம் கொண்டாடுவது மடத்தனம் இல்லையா? நண்பர்கள் புடைசூழ, மணலூரில், தேவூரில், கொடியேற்று வைபவம் காணச் செல்கிறாள். எல்லாச் சங்கங்களிலும், தலைக்கு ஓரணா வசூல் செய்து, கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். “தோழர்களே, நமக்கு இது நன்னாள். அன்னியர் பிடியில் இருந்து அகன்றது முதல் அரசியல் விடுதலை. இந்தியாவின் எல்லா முன்னேற்றங்களுக்கும் எது முதல் முட்டுக்கட்டை என்று நினைத்துப் போராடினோமோ, அந்த முட்டிக்கட்டை அகன்று விட்டது... காங்கிரஸ்காரர், கம்யூனிஸ்ட்காரர், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய எல்லாரும் இந்தியர். இந்தியாவுக்கு விடுதலை வந்துவிட்டது... ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே! பறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை...!... இது ஆனந்த சுதந்திரமாக நாம் பாடுபடுவோம், தோழரே!” நடையில் அலுப்புத் தெரியாமல் சுற்றுகிறாள். மாலையில் ஐநூற்றுப் பிள்ளையார் கோயில் பக்கம் வந்து சேருகிறாள். பிள்ளையார் கோயில், எதிரே சாலையைக் கடந்தால் அல்லிக்குளம். குளத்தை அடுத்த மைதானத்தில் தான் கருஞ்சட்டைக்காரர்களின் கூட்டம் 6-30 மணிக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். ஆங்காங்கு ஓரிரு கருஞ்சட்டைகள் காணப்படுகின்றன. இந்த இளவல்களுக்கு உண்மையில் இந்தத் துக்கத்தைக் கொண்டாட உள்ளூர விருப்பம் இருக்காது. ஊர் முழுதும் கோலாகலமாக ஆடிப் பாடுகையில் இவர்கள் தங்கள் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு துயர நாளாகக் கருதி முடங்க வேண்டி இருப்பது துர்பாக்கியம்தான். மேலும், கொண்டாட்டத்துக்குத் தான் கூட்டம், கோஷம் எல்லாம் தேவை. துக்கத்துக்கு என்ன கூட்டம்? கண்டனக் கூட்டம் என்றாலும் அதில் ஓர் அர்த்தமுண்டு. தமிழனுக்கு இதில் பங்கில்லை என்று தேசீய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுதல் சரியோ? மணி இடுப்பில் கை வைத்துக் கொண்டு அல்லிக் குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளைப் பார்க்கிறாள். குளத்தின் இடப்புறம் - வீதியில், ஒரு மாடி வீடு இருக்கிறது. மறுபுறம் தான் கூட்டம் நடக்கும் திடல். மணி விடுவிடென்று அந்த வீட்டுக்குள் செல்கிறாள். “ஜே ஹிந்த்...!” “வாங்கம்மா... வாங்க!” என்று வீட்டுக்காரர் இவளை மகிழ்ந்து வரவேற்கிறார். “உங்ககிட்ட ஒரு விண்ணப்பம். மாடியைக் கொஞ்சம் உபயோகத்துக்குத் தரமுடியுமா? சுதந்திர நாள் கூட்டம் போடணும்...” “ஆகா! தாராளமாக உபயோகிக்கலாம். இதுக்குக் கேக்கணுமா?...” அவ்வளவுதான். தொண்டர்கள், கிடுகிடுவென்று மொட்டைமாடியைக் கூட்ட மைதானமாக்குகிறார்கள். மேசை ஒன்று; நாற்காலி; விரி சமக்காளம்; பெரிய புனல் போன்ற ஒலிபெருக்கிக் குழாய்... அங்கே துக்கக் கூட்டம் துவங்கச் சில நிமிஷங்களுக்கு முன் இங்கே குரல் ஒலிக்கிறது. “அன்பார்ந்த, தோழர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!” என்ற விளிப்புக் குரலை அல்லிக்குளத்துச் சிற்றலைகள் சிலிர்த்து வரவேற்கின்றன. காற்றிலே பரப்புகின்றன. விநாயகர் கோயிலின் முன் சுதந்திர நாள் - வெள்ளிக்கிழமை அலங்கார வழிபாடு காணக் குழுமிய பக்தர் குழாம், குரல் வரும் திசை எது என்று ஆகாயத்தைப் பார்க்கின்றனர். சிறிது நேரத்தில், அந்த வீட்டின் முன், வாயிலில் மாடி திண்ணை என்று கூட்டம் நிரம்பிவிடுகிறது. “மணி அம்மா...! நம்ம மணி அம்மாய்யா!” “கம்யூனிஸ்ட் கூட்டமா இது?...” “அட இல்லைய்யா, இது சுதந்தர நாள் கூட்டம். இதுல காங்கிரஸ் கம்யூனிஸ்டெல்லாம் கிடையாது!” கருப்புச் சட்டைத் துக்கங்கள், இந்தக் கோஷங்களிலும், முழக்கங்களிலும் கரைந்து போன இடம் தெரியவில்லை! “இது துக்க நாளா? தோழர்களே! நம்மைப் பிடித்த பிசாசு போயிற்று. சுதந்தர ஆர்வம் கொண்டு நமது பூசாரிகள் அடித்த வேப்பிலையில், ஐயோ போறேன், போறேன்னு போயிருக்கிறது. இது துக்க நாளா? இப்ப தமிழனுக்குச் சந்தோஷமில்லையென்றால், அந்த அன்னிய ஆதிக்கத்தில் தமிழன் சந்தோஷமாக இருந்தானென்று அர்த்தமா? தோழர்களே! நமக்குள் வேற்றுமைகளை அழித்த நிலையில், ஒட்டுமொத்தமாக, வயிற்றுக் குழந்தை வெளிவந்த சுதந்தரம் இது! இனிமேல் இதற்குக் கண் திறந்து, மூச்சுத் துவாரம் செம்மையாக்கி, சுத்தமாக்கி போஷித்து வளர்க்க வேண்டும்... நாம் இப்போதுதான் கண்ணும் கருத்துமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்!” கூட்டங்கள், கோஷங்கள் முடிந்து அறையில் திரும்புகையில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. ரோஜா இதழ்களின் கசகசப்பு... நூல் மட்டுமே தெரியும் மாலைகள். கல்யாணம் முடிந்த ஆசுவாசம்... ஆக, சுதந்திரம் வந்துவிட்டது! ஆனால், சிவப்பும் மஞ்சளும் பச்சையுமாகக் குளிர்ச்சியாகத் தெரிந்த வண்ணங்கள் ஒரே அலசலில் குழம்பிச் சாயங்கள் அழிகின்றன. வடக்கே நாடு துண்டாடப்பட்டதனால் ஏற்பட்ட சமயக் கலவரங்கள், வன்முறைகளின் கோர தாண்டவங்கள், நாடு முழுதும் எதிர்பார்ப்புகள் பொய்யாகிப் போன நிதர்சனங்கள்... ஒன்றா, இரண்டா? மக்களின் அன்றாட வாழ்வுக்கான உணவுப் பொருள்கள் விலை ஏறுவதுடன், கிடைக்காமலும் போகின்றன. அத்துடன், தமிழகத்தில், புதிய ஆட்சியாளர், தம்மை மிராசு வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே மெய்ப்பித்துக் கொள்ளும் போக்கு மணி எதிர்பார்த்தபடியே நிகழும் நிகழ்ச்சிகளில் விளங்குகின்றன. ஆனால், இவள் போராடப் பிறந்தவள். வாழ்க்கையே இவளுக்கு எதிரான அறைகூவல்தானே! செங்கொடிச் சங்கங்களை நசுக்க, காங்கிரஸ் விவசாய சங்கம் நிறுவுகிறது. நியாயக் கட்சி, அதன் வகையில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி, பாட்டாளிகளின் ஒற்றுமையைத் துண்டாடுகிறது. மயிலாங்குடிப் பண்ணையில் தகராறு. குறுவை நெல் ஒரு நெருக்கடிச் சாகுபடி முன்பெல்லாம், குறுவைச் சாகுபடி முக்காலும் கிடையாது. இப்போது அரசு உணவு உற்பத்தி ஊக்கம் என்று, குறுவை அதிகமாகப் பயிரிடுவது வழக்கமாகி இருக்கிறது. அதை அறுத்துப் போரடித்து மூட்டையாக்கி வீடு கொண்டு வரும் நாள்களில் வானில் கருமேகம் சூழ்ந்து கொட்டுவேன் என்று பயமுறுத்தும். இம்முறை மயிலாங்குடிப் பண்ணையில் மணி கூறியபடி ஆள்கள் கூலிக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். பலன், தடியடி, போலீசு, பொய் வழக்கு... சுப்பையா என்ற ஆளைப் பொய்வழக்குப் போட்டுக் கொண்டு போய் விட்டார்கள். மணிக்கு முதல் நாளிரவு தான் தப்பலாம்புலியூரில் செய்தி வருகிறது. இவள் அதிகாலையில் விரைகிறாள். இருள் பிரிவு நேரத்தில் வரப்பில் விறைத்துக் கொண்டிருந்த இவள் கழுத்தில் குடை வளையும் கவ்வுகிறது. “பொட்டச்சி, அம்பிட்டுக்கிட்டா!...” தப்திப்பென்று அடிகள். மணிக்கு நின்று நிதானிக்கச் சிறிது நேரம் ஆகிறது. கையில் ஒரு கம்பு கொண்டு வரவில்லை. குடைக்குள் ஒரு கத்தி வைத்து எப்போதும் இடுக்கிக் கொண்டிருப்பாளே, அதுவும் இல்லை. ஏதோ ‘அஹிம்சா மூர்த்தி’களிடம் பேச்சுவார்த்தை நடத்தவருவது போலல்லவா வந்தாள்! அவள் முரண்டி இருந்தால், ஒருகால் கொலையே செய்திருப்பார்கள். இது அவளை அவமானப்படுத்த வேண்டும் என்று செய்யும் செயல். அவர்களாக இவளை இழுத்துச் செல்வதற்கு உடன்பட்டுச் செல்கிறாள். “அம்மா, தனியாப் போகாதீங்க” என்று அவள் மைந்தர்கள் அலறுவார்களே! சுதந்திர இந்தியாவில் இவளுக்குக் கிடைக்கும் முதல் மரியாதையா இது? இவள் மனம் புழுங்கியவளாகப் பண்ணை எல்லையை மிதிக்கையில் பண்ணை அதிபனான தடியன்... கோட்டை வாயில் போன்ற கதவைத் திறக்கிறான். “ஆம்புளப் பொட்டச்சி! அம்புட்டுக்கிட்டியா! நீ என்னான்னு நினைச்சிட்டு ஆளுகளைத் தூண்டிவிடுற? காலம் காலமா சாணிப் புழுக்களைப் போல சிலும்பாம பண்ணவேலை செஞ்சிட்டிருந்தானுவ, நீ வந்து தூண்டிக் குடுத்து ஆட்டம் காட்டுற!... எந்த... வந்து உனக்கு இப்ப மால போடுறான்னு பாக்குறேன்! எங்களுக்கு எதிரா, அந்தப் பசங்களை வச்சிட்டு நீ கொடிகட்டுற! ஆ, ஊன்னா, கலெக்டர் ஜட்ஜியக் கையில போட்டுட்டு ஆர்டர் வாங்கிற?... இந்தா வச்சிக்க! எந்தப் பயலும் இப்ப வரமாட்டா.” கால் செருப்பைக் கழற்றி இவள் மீது வீசி எறிகிறான் அந்தப் பதர். அட பழிகாரா! எவன் வருவான்னா சொல்ற? என் மக்கள் திரண்டு வந்தால் நீ ஒரு மூச்சிக்குத் தப்ப மாட்டே அலறுவாய்! தடி ராஸ்கல்! அவங்க போடும் சோறு, அது கொடுக்கும் வீச்சுதான் உன் திமிர்...! மனதோடு பொருமிக் கொள்கிறாளே ஒழிய, வாய் திறக்கவில்லை. இவளைப் பின்கட்டில் வண்டிச் சாமான்கள் உள்ள அறைக்குள் இழுத்து விடுகிறான் காரியக்காரன். பூட்டிக் கொண்டு போகிறார்கள். அநியாய ஆதிக்கம், நியாயங்களை நசுக்க வன்முறையைக் கையாளுகிறது. அந்தக் காலத்தில், கள் குத்தகையை எடுத்து ருக்மிணி சத்யாக்கிரகம் செய்கையில் இரவோடு இரவே, அந்த ஆதிக்கம், தொண்டர்கள் மீது மலங்களைக் கரைத்துக் கொட்டினார்களாம். ருக்மிணி கதை கதையாய்ச் சொன்னாள்... ருக்மிணி இவளை விட இளைய பெண். ஏழு வயசில் கல்யாணம்... சீர் செய்நேர்த்தி போதவில்லை என்று விட்டுப் போனானாம்... ஏதேதோ நினைவில் வருகின்றன. ருக்மிணி அந்தக் கலவரத்தில் அவர்களை மன்னிப்புக் கேட்க வைத்ததாகச் சொன்னாள். ஆனால், இந்த வர்க்கம், அப்படிக்கு இறங்குமா? திடீரென்று கசமுசவென்று குரல்கள் கேட்கின்றன. ஆள்கள் திமுதிமுவென்று வரும் ஓசைகள்...! இவள் நெஞ்சம் விம்முகிறது. அவர்களுக்கு இவள் கற்பித்திருக்கும் ஒற்றுமை - ஒருமைப்பாட்டிற்கு, ஒரு சிறிதும் பலனில்லாமல் போகவில்லை. குரல்கள் மோதுகின்றன. கேட்டை உடைக்கும் சப்தங்களும் வருகின்றன. அருகிலேயே குரல்கள்... செங்கொடி வாழ்க... அம்மா எங்கே? “எங்கம்மா எங்கே! அம்மா எங்கே, சொல்! பழி வாங்குவோம்! எலேய், உசிருக்குப் பயமிருந்தால் அம்மாளை விடு! அடிடா! உடை...!” இவள் அறைக் கதவு திறக்கப்படுகிறது. யார்...? இவன் கீழ்வெண்மணிப் பண்ணை... “அம்மா... வாங்க, ஏதோ தப்புத்தண்டா நடந்திடிச்சி. மன்னாப்பு...” இவன் எங்கே இங்கே வந்தான்? இவன்... ஒரு பெண் விடலை... ஒரு குமரிப்பெண்ணை விட்டுவைக்காத கயவன் அல்லவா? இப்போது இவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “அம்மா, எங்க உசிரைக் காப்பாத்தணும்...” “ஏன், உங்க உசிருக்கு இப்ப என்ன வந்தது? அதான் சண்டைக்கடா போல அடியாள் வளர்த்து வச்சிருக்கிறீங்க?” “அம்மா, நீங்க இப்ப மனசு வைக்கணும்...” சற்று முன் செருப்பை விட்டெறிந்தவன் இப்போது காலில் விழுகிறான். வெளியே கூச்சல் பலக்கிறது. கதவை உடைத்துவிட்டார்கள். ஓட்டின் மீது, முற்றங்களில் திமுதிமுவென்று புகுந்துவிட்டார்கள். அம்மம்மா! இவள் பிள்ளைகள் - பெண்கள், மடிநிறையக் கற்கள், கம்பு, தடி, பாவாக் கம்பு, மண்வெட்டி... “டே, நாகப்பா, சீனுவாசா, ராமா, கோவாலு, என்னப்பா இதெல்லாம்!” “அம்மா... அம்மா, உங்கள என்ன பண்ணாங்க? எங்க வவுத்திலே மண்ணள்ளிக் கொட்டும் அக்கிரமத்துக்கு மேலே... இவனுவளக் கொன்னு தொலைச்சிட்டு நாங்க ஜெயிலுக்குப் போறோம்...” மணிக்குக் கண்கள் கசிகின்றன. “எனக்கு உங்க நெஞ்சுகளே துணையா இருக்கறப்ப இவங்களால ஒண்ணும் செஞ்சிட முடியாது...” “அவங்களப் போகச் சொல்லுங்கம்மா... மன்னாப்பு...” “உன்னைச் சும்மா வுடணுமா? தூ!” என்று ஒருவன் வெற்றிலைச் சாற்றை உமிழ்கிறான். “எங்க உயிர்நாடி நீங்க. இந்தக் கும்பலை நம்பாதீங்கம்மா? இவனுவள நொறுக்கிட்டு ஜெயிலுக்குப் போறோம்...” “ஷ், வாண்டாம்பா, நான் உங்களுக்கு நல்லது சொல்வேன். அப்படிச் செய்வது வீரமில்லை. நாம் சத்தியப் பாதையில் நின்னு இப்ப உரிமை கேட்கிறோம். நீங்கள் எல்லோரும் அமைதியாக இருங்கள். நான் இப்ப உங்கள் விவகாரத்தைத் தீர்க்கிறேன்...” விவகாரம் தீர்ப்பது என்று வரும்போது, மணி இம்மியும் அசையவில்லை. பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|