உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
30 1953, ஏப்ரலில், மன்னார்குடியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு கூடுகிறது. இந்த மாநாடு கூடுவதற்கு முன்பே, மணி பொது இயக்கத்திலிருந்து தான் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்திருக்கிறாள். ஆனால், அவளுடைய மக்களில் எவருக்கேனும் இந்த மேலிடத்தின் போக்குத் தெரியுமோ? இது மிக நுட்பமான நரம்போட்டம். “எங்களுக்கு மணியம்மா கட்சிதா வோணும். நாங்க அதில சேர்ந்திட்டோம்...?” “அதென்ன மணியம்மா கட்சி?” “செங்கொடிக் கட்சி... அதுதா மணியம்மா கட்சி. சோடிக்கு ரெண்டணாச் சந்தா...” இந்த அலையை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. “அது என்னடா மணியம்மா கட்சி? ஆட்டுப் புழுக்கை கட்சி?” “ஓரடிக்குத் தாங்காது! மரியாதையா எல்லாம் காங்கிரசில சேந்து நாயமா இருங்க!” என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் பண்ணையாள்களை மிரட்டுவதையும் மணி அறிகிறாள். ஆனால், மணி, மக்களையும், தன் இலட்சியங்களையும் தவிர வேறு எந்தப் பேச்சையும் போக்கையும் பொருட்படுத்தாதவளாகச் செயல்படுகிறாள். ஜனசக்திக்கு மட்டுமின்றி, சோவியத் நாடு, மற்றும் சோவியத் நாட்டில் வெளியாகும் குழந்தைப் புத்தகங்கள் உள்ளிட்ட பல பிரசுரங்களையும் வரவழைத்து விற்பனை செய்யப் போகிறாள். எந்தக் கூட்டமானாலும் தயங்குவதில்லை. பாபநாசமா, ராதாநல்லூரா? வெண்ணைத்தாழி உற்சவமா! இளைஞன் தியாகராசனுடன் கட்டுக்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவாள். ‘ஓரணாத்தான். வாங்கிப் படியுங்கள்? புதிய செய்தி? புதிய அறிவு. தான்யா, வீரமங்கையின் கதை...” என்று இவள் புத்தகப் பிரசுரங்களை வைத்துக் கொண்டு விற்பது சாதாரணக் காட்சியாகிறது. முன்பெல்லாம் எந்தக் கூட்டமானாலும், இவள் பேசாமல் அது நிறைவு பெறாது “இப்போது தோழியர் மணியம்மை பேசுவார்!” என்று அறிவிப்பதை எதிர்பார்த்து மக்கள் இருப்பார்கள். “ஆம்பிள மாதிரியப்பா, பொம்பிள பேசுறாங்க!” என்று பார்ப்பார்கள். “மணி அம்மா! நம்ம மணி அம்மா!” என்று கீழ்வருக்கம் பூரித்துப் போகும். போலீசும் கூட இவள் பேசும் கூட்டத்தை விலக்குவதில் தீவிரம் காட்டியதில்லை. அத்தகையவளுக்கு, இன்று மாநாட்டில், பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமா? வார உரிமைப் பிரச்சினையா? எதுவானாலும் கீழ்மட்டத்தில் அடிவரையில் உழலும் மக்களின் உணர்வோடு ஒன்றி அவற்றைப் பரிசீலனை செய்யும் தகுதி அவளை விட ஏறு எவருக்கு உண்டு? இவள் ‘நடுவாள்’ முறையை ஒழிக்க முன்வந்து உழைப்பவர் பக்கம் நின்ற போது, இவளைச் சேர்ந்த காங்கிரசே இவளைத் தூக்கி எறிந்தது. ‘பொதுவுடைமையில் ஜனநாயகத்துக்கு ஏது இடம்?’ என்று அந்நாளில் இவளைப் பலரும் துருவியிருக்கிறார்கள். இந்நாளில் காங்கிரஸ் தன் செல்வாக்கு, அதிகாரம் அனைத்தையும் பிரயோகித்து, பண்ணையாட்களைச் சிறிது சிறிதாகத் தங்கள் பக்கம் கவர முயலுகிறது. அவர்களை எதிர்த்து, ஏழை உழைப்பாளிகளின் உரிமை உணர்வை ஒன்றுபட்ட சக்தியைத் தோற்றுவிக்க, ஓர் அற்பமான சந்தாக் குறைப்பு... இதை ஒத்துக் கொள்ளக் கூடாதா மேலிடம்? “ஓ, நீங்கள் கையாண்ட யுக்தி சரியே அம்மா. நாம் கூட்டத்தில் இதுபற்றித் தீர்மானம் நிறைவேற்றுவோம். நம் கட்சிக்கு இது ஊக்கச் சக்தியாகும்...” என்று ஏன் இவர்கள் சொல்லவில்லை? மாறாக... மாறாக... இவளுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. ஏன்... ஏன்? காலம் காலமாக ‘தான்’ என்று ஆதிக்கச் சிந்தனையை வளர்த்து வந்திருக்கும் ஆண் வருக்கம், அங்கே பெரும்பான்மை. இவள் சிறுபான்மை இனத்தில் பட்ட பெண். எந்தப் பக்கமும் ஆதரவின்றி அன்னியப்படுத்தப்பட்டவள். வெளியே காட்டிக் கொள்ளாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே பிரசுரங்கள் விற்கிறாள், சில்லறையை எண்ணிப் போட்டுக் கொள்கிறாள். இந்தக் கட்சி அமைப்பு, விதிகள், கட்சி ஒருமைப்பாடு அனைத்துமே, இரகசிய ஆணைகளின் வலிமையில் நிலை நிற்பதாகும். உங்கள் கட்சியில் மனிதமதிப்பு தனிமனித நிலையில் துடைக்கப்படுகிறது என்று அவளிடம் எத்தனை பேர் வாதாடி இருக்கிறார்கள்? தனிமனிதர்களை அமுக்கி வெறும் இயந்திரங்களாக்கும் அமைப்பா இது? மனித சக்தியை ஒன்றிணைக்கச் சில விதிகளும் கட்டுப்பாடுகளும் கடுமையாக இருக்கவேண்டியதவசியம் என்றாலும், மனிதாபிமான வேரையே அது பதம்பார்ப்பது சரிதானா...? இல்லை... இல்லை... இவளை அன்னியப்படுத்தித் தூக்கியெறியும் இந்தப் போக்கு, இவள்... இவளாக இருப்பதால் தான். கட்சியின் உயிர்மூச்சாக, அது நலிந்த நிலையிலும் கட்டிக்காத்த அவளுக்கு இந்தத் தண்டனை சரிதானா...? இத்துணை குமுறல்களையும் அவள், அந்தப் பெரிய கூட்டத்தின் ரகசிய அரண்களை உடைத்துக் கொண்டு வெடிக்க முடியும். அது... கட்சியின் புனிதமான இலட்சியத்தை மாசுபடுத்திவிடும். ஏற்கெனவே நிலப் பிரபுத்துவமும் முதலாளித்துவமும், இந்தக் கட்சியின் மீது வன்முறை உயிர்க்கொலை வண்ணங்களைப் பூசி, இளைஞர் பலரையும் இந்த அமைப்பில் சேராவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, மணி பொறுக்கிறாள். மாலையில் பொதுக்கூட்டம், இரவில் சில நிகழ்ச்சிகள். ‘தான்யா’ நாடகம் அரங்கேறுகிறது. சோவியத் வீராங்கனை தான்யவாக ருக்மணி நடிக்கிறாள். ருக்மணி... “காம்ரேட்! உங்களுக்கு ஒண்ணுமில்லை; உடம்பு சரியாகிப் போகும். உங்கள்... இலட்சியம் வீணாகாது!” என்று சொல்லி அமுதமாக ரசம் சோறு கரைத்துக் கொண்டு வந்த சகோதரி, நாடகம் முடிந்ததும் மேடையேறிச் சென்று அவளைத் தழுவிப் பாராட்டுகிறாள். “ருக்மணி, அற்புதமாக நடித்தீர்கள்...” கண்ணீர் மல்க, உணர்ச்சிமுட்ட, பேச நாவெழாமல் நிற்கிறாள். இந்த மாநாட்டில் வரலாறு காணாத அளவு மிகப் பெரிய பேரணி நடக்கிறது. விவசாய சங்கங்கள் ஒவ்வோர் ஊராக அணி அணியாகத் திரண்டு நிற்கிறாகள். மணி எத்தனையோ பேரணிகளில் பங்கு கொண்டிருந்திருக்கிறாள். மதுரைத் தொழிற்சங்க மாநாட்டில் இவளுக்குத் தான் எத்தனை புகழும் பெருமையும் செல்வாக்கும் இருந்தன? கூட்டத்தில் பெண்கள் அணியில் இவள் கோஷமிட, கேரளத்தில் இருந்து வந்த தோழர் ஒருவர் இவளை ஆணென்று நினைத்து, ‘இந்தப் பக்கம் வாருங்கள்!’ என்று கத்தியபோது எழுந்த சிரிப்பலை! ஆனால், இன்றும் இவளுடைய தொண்டர்களாகிய செல்லப்பிள்ளைகளை இவளைத் தலைவியாகத்தான் கருதி நீண்ட அணியாக நிற்கின்றனர். ‘செங்கொடி வானில் பறக்கட்டும்! புரட்சி ஓங்குக! பாட்டாளிகளின் உரிமையைப் பறிக்காதே! உழவனின் உரிமையைப் பறிக்காதே!’ என்ற கோஷங்களுக்கு இடையே ‘தோழியர் மணியம்மை வாழ்க!’ என்றும் முழங்குகிறார்கள். இவளோ, ‘உழவருக்கும் தொழிலாளிக்கும் நியாயம் செய்! உரிமைகளைப் பறிக்காதே! ஒற்றுமை ஓங்குக! உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுவோம்!’ என்ற கோஷங்களை முன் வைத்து நடக்கிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|