உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19 அந்த ஆண்டு மே மாதத்தில், ஐரோப்பாவை ஒரு குலுக்குக் குலுக்கிய ஜெர்மனி - வீழ்ச்சியுறுகிறது. ஃபாஸிஸ ஹிட்லர் ஒழிந்து போகிறான். ஆனால் இந்தப் போரின் வெற்றி, உலகில் அமைதியைக் கொண்டு வரவில்லை. ஃபாஸிஸ ஹிட்லரையும் ஒரு படி மிஞ்சிய நிலையில், அமெரிக்கா அணுகுண்டை ஜப்பானிய மக்கள் மீது வீசி, தனது மேலாதிக்க ஆற்றலை நிரூபித்துக் கொள்கிறது. அந்த ஆகஸ்ட் ஐந்தாம் நாள், உலக மனித குல வரலாற்றுக்கே ஒரு கரிநாள் என்று கருதும் வகையில் ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் பூண்டோடு அழிகின்றன. இங்கோ, நாட்டில் இடைக்கல சர்க்காரின் நெருக்கடிகள் - முஸ்லிம் லீக் தகராறு என்று பூரண சுதந்திர சூரியனை மக்கள் காண முடியுமோ என்று கவலை கொள்ளச் செய்கின்றன. மக்கள் சமுதாயமோ, பதுக்கல் கள்ளச்சந்தை, முதலாளிகளின் முறையற்ற பணக் குவிப்பு, இடைத்தரகர் ஏகபோகங்கள், ஏழைக் குடும்பங்களைக் குரல்வளையைப் பிடித்து நெருக்குகின்றன. பசி, பஞ்சம், பட்டினி என்ற ஓலம், போர் முடிந்த வேலையில்லாத் திண்டாட்டத்துடன் சேர்ந்து கொள்கின்றன. மணி திருவாரூர் ரயிலடிக்கு அருகாமையில் கடைவீதியில் ஒரு மாடியில் இடம் பெயர்ந்திருக்கிறாள். அவள் இருக்கை, இல்லம், அவள் சார்ந்த கட்சி, இயக்க அலுவலகம் எல்லாமும் அதே இடம் தான். இந்த மாடியில், தண்ணீர் மற்றும் அத்தியாவசியமான சில சொந்த வசதிகளுக்கும் கூட இடம் கிடையாது. ரயில் நிலையத்துக்குத்தான் இவள் அதற்கெல்லாம் செல்ல வேண்டும். விரிந்து பரந்த வெளியும், தோப்புகளும், வண்டிமாடுகளும், மனையும் சூழ்ந்த வசதிகள் அனைத்தையும் விட்டு இந்த மாடிச் சிறைக்கு இவள் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள். இரவில்லை பகலில்லை என்று இயக்க அலுவல்கள்; போலீசு கச்சேரி, கோர்ட்டு, கூட்டம்; தலைமறைவுக்காரர்களுக்குச் செய்தி சொல்லும் தொடர்பாக இயங்குதல் என்று மணியின் நாள்கள் விரைந்து ஓடுகின்றன. இத்துடன் மகாநாடுகள் - மிக முக்கியமான நிகழ்ச்சிகளிடையே! திருவாரூரிலும் இவள் பல சங்கங்களைக் காண்கிறாள். ஆதரவு தருகிறாள். துப்புரவாளர் சங்கம்; சுருட்டுத் தொழிலாளர் சங்கம் என்று பல தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்களும் ‘அம்மாளிடம்’ வந்து கலந்து யோசனை கேட்கிறார்கள். உணவு உற்பத்தியில் இந்நாள்களில் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. நகரங்களிலெல்லாம், ஆறவுன்சு ரேஷன் என்ற முறை பங்கீட்டு அட்டை முறையாக வழங்கப்பெற்றிருக்கிறது. கிராமங்களில், நல்ல எரு, விதை என்று உற்பத்தியைப் பெருக்க, மிராசுதாரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர்கள் ஏழை உழவர்களை மேலும் கசக்கிப் பிழிகிறார்கள். இவர்களுக்குக் கூலி சம்பந்தமாகச் சலுகைகள் வழங்கப் பெற்ற ஒப்பந்தங்கள் எந்த ஒரு பண்ணையிலும் மதிக்கப் பெற்றிருக்கவில்லை. குத்தகை விவசாயிகள், படும்பாடோ சொல்லத்தரமன்று. மணியின் திருவாரூர் இல்லத்தில் மக்கள் அபயம் என்று ஓடிவந்து சேதி சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். அன்று காலை உதயமாகு முன்பே ரயிலடிக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறுகலான படிகளேறி வருகையில், இருவர் காத்திருக்கின்றனர். சோர்ந்துவிட்ட முகங்கள், இவர்கள் ஆதரவு நாடி வந்திருப்பதை விள்ளுகின்றன. கண்களாலேயே வினவுகிறாள், செய்தியை. “அம்மா, என்ன சொல்ல? சூப்ரவைசர் வந்து பில்லட்டை வெட்ட ரோலர் பிலேட்டில் தூக்கி வைன்னாரு. நாலுக்கு நாலரை அடி நீளமுள்ள கட்டை. தூக்கிப் பார்த்தேன். முடியல. தூக்கி வைக்கிறப்ப வுழுந்திருச்சின்னா ரோல் டேப் நொறுங்கிடும். கால்ல, கையில வுழுந்துச்சின்னாலும் கூழாயிடும். அதுனால, இதெல்லாம் கிரேனில தாங்க தூக்கி வக்கியணும், அதாங்க வழக்கம், சுருக்க வெட்டிடலாம்னேன்... சூப்ரவைசர் சொல்ல, அதைச் செய்யாம மறுக்கிறாயா பயலேன்னு சொல்லிட்டுப் போனாரு. உடனே மானேசர் வந்திட்டாரு. இவரும் வந்து ஸார், இவன் வேலை செய்யமாட்டேன்னு நிக்கிறான்னாரும்மா? எனக்குக் கப்புன்னாயிடிச்சி. அதே நிமிஷம் என்ன ஒரு வார்த்தை என்ன ஏது கேக்கணுமே? கேக்கல, கை ஊக்கப்புடுங்கிட்டு, ‘போடா வெளில!’ன்னாரு. நாம் போகல. “வெளிலே போடான்னா, ஏண்டா நிக்கிற? பகர்?”ன்னு வெரட்டினாரு. “காரணமில்லாம நான் ஏன் சார் வெளியே போகணும்”னேன். “ஏண்டா திரும்பிக் கேள்வி கேக்குற? உனக்கு வேலை கிடையாது?”ன்னாரு. “நான் வேலை செய்வேன், போகமாட்டேன்னேன்.” “சம்பளம் தரமாட்டேண்டா நாயே”ன்னாரு. “தராட்டி வாணாம். நான் போகமாட்டேன்னு” நின்னேன். உடனே மானேஜர் உள்ளாற போயி, வேலையில்லைன்னு நோட்டீசை நீட்டிட்டாரு. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, ஓடியாந்தேன்...” மணி கும்மட்டியைப் பற்றவைத்துக் காபிக்கு நீர் வைக்கிறாள். பாத்திரம் பாத்திரமாகப் பால் கறந்து வெள்ளமாகக் கையண்டு பழகிய மணி அரைக்கால் படி பாலில், துணியில் வடிகட்டிய காபி நீரை ஊற்றிக் கலக்குகிறாள். சர்க்கரையும் பஞ்சம். கலந்து அவர்களுக்கும் கொடுத்துத் தானும் அருந்துகிறாள். தன் தொங்கு பைச் சாமான்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டு கதவைப் பூட்டியவளாய்க் கிளம்புகிறாள். “நீங்கள் போங்கள், நான் பின்னால் வருகிறேன்...” ஏனெனில் இவளுக்கு அதற்குள் கவனிக்க வேண்டிய தகராறு ஒன்றுக்காக வலிவலம் செல்ல வேண்டும். அந்தப் பண்ணை அதிபர் பல நூறு ஏக்கர்களுக்கு உடைமையாளர். இவர் நேரடியாக விவசாயிகளிடம் தொடர்பு கொள்ளக் கூட எட்டாத உயரத்தில் உள்ளவர். நாட்டாண்மைதான் எல்லா அதிகாரமும் செலுத்துபவன். கமலாலயம் கரையின் கீழ்ப்பக்கம் சீனிவாசன் வண்டியுடன் வருகிறான். இருவருமாகச் செல்கிறார்கள். “விசயம் இதுதாம்மா. எருக்கூடை சுமந்து கொட்டுனா கணக்குக் கிடையாது... நாள் பூரா உழைக்கிறாங்க. அவ முணமுணக்கிறா. காரியக்காரன் ஒடனே கையப் பிடிச்சிருக்கிறான். அவ திரும்பி தூன்னு துப்பிட்டு, ‘ந்தா, இந்த வேலயெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே’ன்னிருக்கிறா. ‘ஏண்டி, பொட்டக் கழுத ஒனக்கு அத்தினி ராங்கியாடி? எறங்கு நெலத்தவுட்டு?’ன்னிருக்கிறான். ஏதானும் சொல்லி நெருக்குற சாக்கு. அவ்வளவுதான். இவள வெளியேத்தவும், அவ்வளவு பொம்புளயாள்களும் களத்தவுட்டு வெளியே வந்து உக்காந்துட்டாளுவ. நாத்துக் கட்டுவச்சது அப்படியே இருக்கு. வேற யாரும் நடவுக்கு வரதில்லைன்னு கட்டுப்பாடா இருந்திட்டாங்க. ‘பொட்டச் சிறுக்கிகளா. உங்களுக்கு என்ன திமுரு, பாக்கிறேன்’னு ஒடனே ஓடிப் படலயத் தள்ளி, குடிசங்களப் பிரிச்சிப் போட்டு சட்டி பானைய உடச்சி அட்டூழியம் பண்ணிருக்காங்கம்மா!” இருவரும் பேசிக் கொண்டே வண்டியை விட்டிறங்கி நடக்கிறார்கள். வெய்யில் ஏறும் உக்கிரம். அவர்கள் குடியிருப்பு அலங்கோலமாகக் கிடக்கிறது. பனை ஓலைக்குடிசைகள். படலைகள் தூக்கி எறியப் பட்டிருக்கின்றன. குஞ்சும் குழந்தைகளுமாக இவளை கண்டதும் தாயைக் கண்ட கன்றுகளாகக் கரைந்து புலம்புகிறார்கள். பாவிகள் சட்டி பானைகளை, அவர்களுடைய ஒரே உடைமைகளைக் கூடவா உடைக்க வேண்டும்? சேற்றில் இறங்கி, நாற்றைப் பதித்து சோற்றுக்கு வழி செய்யும் பெண்கள் குடல் எரிய நாசம் விளைவித்திருக்கிறார்களே? பூமி தேவியையே மானபங்கப்படுத்திவிட்ட பாதகம் அல்லவோ செய்திருக்கின்றனர்?... இந்தப் பண்ணை உடைமையாளனின் பெயர் நினைவுக்கு வருகிறது. ஆபத்தில் துணை நிற்கும் ஈசுவரனின் பெயரை ஓர் இரக்கமில்லாத கடையனுக்குச் சூட்டியிருக்கிறார்கள். ஈசுவரனுக்கே செய்யும் அபசாரம் அல்லவோ இது? இந்தப் பிரபுவுக்குப் பதினாறு கிராமங்கள் சொந்தம். எல்லா இடங்களிலும் இதே சட்டம் படிக்கும் நாட்டாண்மைகள் தாம் நிர்வாகம் செய்கிறார்கள். “அம்மா, நீங்க நிலத்தில இறங்காதீங்க; வேற யாரையும் அண்டவும் விடாதீங்க? நீங்க தைரியமா இருங்க? அவன் வழிக்கு வரானா இல்லையான்னு பார்ப்போம்...” புலிக் குகையை நாடிச் செல்லும் வேகத்துடன் அந்த நாட்டாண்மையைப் பார்க்க விரைகிறாள். இவள் அந்தத் தெருவுக்குள் நுழைகையிலேயே ஓர் அசாதாரண அமைதி படிகிறது. “யாரப்பா நாட்டாமை...?” இவள் குரல் கேட்கையிலேயே நாமம் கடுக்கன் விளங்க நாட்டாண்மை விரைந்து வருகிறான். “ஏம்பா? என்ன நினைச்சிட்டிருக்கீங்க, நீங்கல்லாம்?” “என்னம்மா இந்தப் பொம்பிளகளுக்கு நீங்க பரிஞ்சு பேச வந்துட்டீங்க? அவளுவ என்ன திமிர்த்தனமா நடக்கிறாளுவ தெரியுமா? ஒரு நா முச்சூடும் வேலை நடக்கல, ஆருக்குநட்டம்னு பாக்கிறே...!” “ஏய்யா? பொம்பிளன்னா கிள்ளுக்கீரைன்னு எண்ணமா? ஆருக்கு நட்டம்னா கேக்குறிய? புள்ளையும் குட்டியுமா, நடுச்சந்தில கெடக்க, சட்டி பானய ஒடச்சி, படலை எடுத்தெறிஞ்சு என்னமோவெல்லாம் செஞ்சிருக்கீங்க? தட்டிக்கேட்க ஆளில்லைங்கிறது ஒங்க நெனப்பு. இல்ல? இத பாருங்க, மரியாதையா நின்னு போன வேலைக்கும் கூலி குடுத்து, பிரிச்சிப்போட்ட குடிசங்களக் கட்ட நட்ட ஈடும் குடுத்தா வேலைக்கு வருவாங்க. இல்ல, உனக்காச்சு ஒருகை, எங்களுக்காச்சு ஒரு கைன்னு... பாத்துக்கிடுவோம்!” “ஓ, விடமாட்டீங்களா? கும்பிகாஞ்சா தானே ஓடியாருவாங்க!” “வர மாட்டா. யாரையும் விடவும் மாட்டோம். இங்க இப்ப போலீசுதான் வரும்?” மணி ஓர் அதட்டல் போட்டுவிட்டு, போலீசு கச்சேரிக்குத்தான் ஓடுகிறாள். அத்துமீறி குடிசைகளைப் பிரித்துப் போட்டு சட்டி பானைகளை உடைத்து, பெண்பிள்ளை ஆள்களைக் கைநீட்டி அடித்ததற்காக வழக்கு எழுதிக் குற்றம்சாட்டிவிட்டு நாகப்பட்டினத்துக்கு வண்டி பிடிக்க விரைகிறாள். இரவு... பெருங்கடம்பனூர் தோழியின் இல்லம். இவள் கதவைத் தட்டுகையில் ஐந்தாறு வயசில் ஒரு சிறுமி, கதவைத் திறக்கிறாள். “யாரம்மா? புதிசா இருக்கு?...” விசாரித்துக் கொண்டே உள்ளே நுழைகிறாள். “புதிசில்லை. எல்லாம் உறவுதான். பாமா பட்டணம் போனப்புறம் விரிச்சின்னிருக்குன்னு கொண்டு வச்சிட்டிருக்கேன். இவளும் பாமாதான்... என்ன, மீட்டிங்கா?” “இல்ல, மில்ல தகராறு. தொண்டை புண்ணாட்டம் வலிக்கிறது. குஞ்சம்மா! நல்ல வெந்நீரில் கொஞ்சம் உப்புப் போட்டுக் கொண்டுவரச் சொல்லேன்? கொப்புளிக்கிறேன்...” மஞ்சள் போட்டுக் காய்ச்சிய பாலும் வருகிறது. அறையில் அந்தச் சிறுமியின் பக்கத்தில் விரிப்பை விரித்துக் கொண்டு படுத்து அயர்ந்து உறங்குகிறாள். திங்கட்கிழமை காலையில் மில் வாயிலில் இவளை எதிர்பார்த்துத் தொழிலாளிகள் நிற்கின்றனர்... மாணிக்கம் என்ற அந்த வேலை நீக்கிய தொழிலாளியை உள்ளே நிர்வாகம் அனுமதிக்கவில்லை. “...நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள். ஆனால், ஒருவரும் வேலை செய்யாமல் அவரவர் இடங்களில் நில்லுங்கள்!” என்று மணி கட்டளை இடுகிறாள். ஆலை ஓடவில்லை. ஆலை ஓடாமல் ஒருமணி நின்று போனாலும் நிர்வாகத்துக்கல்லவோ இழப்பு அதிகம்! பரபரப்பு... கார் ஒன்று வெளியே பறந்து செல்கிறது... வெளியாள்களைக் கொண்டு வரும் ‘கான்ட்ராக்டர்’ உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறான். மணி வாசலில் உறுதியாக அமர்ந்து கொள்கிறாள். வெளியே சென்ற ‘கான்ட்ராக்டர்’ பதினோரு மணி சுமாருக்குத் திரும்பி வருகிறான். “... ஐயா! ஓராளும் வரமாட்டேங்கிறாங்க? ‘நம்மால தான தர்மம் செய்ய முடியாது. ஆனா, இவங்க போராட்டத்துல நாயம் இருக்குன்னு தோணுது... எல்லாம் அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சிபோல, அவங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம்னுறாங்க...” ‘சபாஷ்!’ என்று மணி பகிர்ந்து கொள்கிறாள். அப்போதுதான் நிர்வாகம் - மானேஜர், மணியைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது... “இந்தப் பொம்பிள... பொம்பிளயில்ல, ஆம்பிளக்கு மேல... சரியான முள்ளு...” என்று முணுமுணுக்கும் கடுப்பை மணி உள்ளூர ரசித்துக் கொள்கிறாள். “என்னம்மா, இப்படித் தொழிலாளரை வேலை செய்யவிடாம தகராறு பண்ணுறீங்க?” “ஏனய்யா? நானா தகராறு பண்ணுறேன்? அந்தப் பதத்தைத் திருப்பிப் போடுங்க? தகராறுக்குன்னு நீங்க தான் கச்சைக்கட்டிட்டு வந்திருக்கிறீங்க! ஏனய்யா, நீங்களே சொல்லுங்க, நாலுக்கு நாலு நாலரை அடிபில்லெட் அதைத் தூக்கிட்டு நடந்து ரோலர் பிளேட்டில் உம்மால வைக்க முடியுமா? அவன் மனிசன் தானே? நீங்க குடுக்கிற ஆறணா, எட்டணா கூலில, அவன் முட்டயும் பாலும் வெண்ணெயும் சாப்பிட்டு பிஸ்தாவா இருக்கிறானில்ல? நிச்சயமாக நீங்கள் அவனை விட நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஊட்டமா இருக்கிறீங்க! உங்களால அதைப் புரட்டித் தூக்கமுடியிதான்னு பாருங்களேன்?...” இவளோடு வாதம் கொடுத்தால் தர்ம சங்கடம் என்பது புலனாகிறது. “...அதைச் சொல்லலம்மா, அந்தப் பயல் உள்ளே வேலையே செய்வதில்லை. உள்ளே வந்து சங்கப் பிரசாரம் தான் பேசுறான். மற்றவர்களையும் வேலை செய்யாமல் கெடுக்கிறான்?” “ஓர் ஆபத்து அபாயம்னு வரும்போது ஒற்றுமையாக இருக்க வேணும்னு சங்கமாகக் கூடி இருக்காங்க. அதை நீங்க உடைக்கப் பார்க்கிறீங்க. இந்தத் தகறாரை வேணுமின்னு நீங்க தொடங்கி, அந்தத் தொழிலாளியை எந்தக் காரணமும் காட்டாமல் வேலை நீக்கம் செய்திருக்கிறீர்கள். உடம்பில் ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டால், எனக்கென்னவென்று மற்ற அவயங்கள் வேலை செய்வதில்லை. வலிவலி என்று உடம்பு கூச்சல் போடுகிறது; இல்லையேல் இயக்கமில்லாமல் மரத்துப் போகிறது. பேசாமல், மாணிக்கத்தை வேலைக்கு எடுத்துக் கொண்டு பிரச்சினையைத் தீர்த்து விடுங்கள். அநாவசியமாக உங்களுக்கும் நஷ்டம் வேண்டாம்!” அடுத்த பயமுறுத்தலை அவளை நோக்கி வீசுகிறது நிர்வாகம். “பாதுகாப்புச் சட்டம் அமுலில் இருக்கு, தெரியுமா உங்களுக்கு? உற்பத்தி முடக்கம் கூடாது. நாங்க போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்போம். சட்டப்படி...” “ஓகோ, சட்டம் உங்களுக்கு மட்டுமில்லை ஸார்! எங்களுக்கும் இருக்கு! நீங்க போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுங்க! என்ன நடக்கும்னு பாருங்க? இப்ப, என்ன, தொழிலாளர் வெளியே நின்று அமைதி கெடுக்கிறார்களா? கும்பல் கூடிக் கோஷம் போடுகிறார்களா? உங்களைத் தாக்குகிறார்களா? ஸ்டிரைக் செய்கிறார்களா? ஒன்றும் இல்லை. அவர்கள் உள்ளே சென்று உற்பத்தியைப் பெருக்க வேலை செய்யத்தான் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாதுன்னு அநியாயமாக ஓராளை வேலை நீக்கம் செய்தீர்கள். போலீசைக் கூப்பிடுங்கள். நியாயம் எங்கே இருக்கிறதென்று பார்ப்போம்.” இது மூக்கறுபடும் சங்கதியாக முடியும்போல் தோன்றுகிறது. ஆனால் நிர்வாகத்து வெண்கொற்றக்குடை அவ்வளவு எளிதில் இறங்கலாமா? மணி அங்கேயே நிற்கிறாள், அசையவில்லை. காலை ஏழரை மணியில் இருந்து பகலுணவு நேரம் தாண்டியும் உள்ளே தொழிலாளர் அசையவில்லை. போலீசை அழைப்பதனால், இந்த அம்மாள் மசிந்துவிடமாட்டாள் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். “ஏய், நான் பல தண்ணீர் குடித்து உரமேறியவள்... நீங்கள் வெளியாள்களை அழைப்பது ஒன்றுதான் வழி. அந்த உபாயத்திலும் பெரும் அடி விழுந்தாயிற்று...” இவளுடைய செல்வாக்கு... நிர்வாகத்தை ஒன்றே முக்கால் மணிக்குப் பணிய வைக்கிறது. மானேஜர், இவளை உள்ளே அழைக்கிறார். “வாங்கம்மா, உள்ளே வந்து உக்காருங்க!” அறை துப்புரவாக இருக்கிறது. மேலே விசிறி ஓடுகிறது. நீண்ட மேஜையில் கண்ணாடி பலகை. வழுவழுப்பாக, பளபளப்பாக அழுக்கு ஒட்டாத - தூய்மை, வண்ணப் பேனாக்கள், மைக்கூடு... அருகில் டைப் இயந்திரம். ஆள் ஒருவன் டவரா டம்ளரில் காபி கொண்டு வந்து வைக்கிறான். “காபி குடியுங்கம்மா. காலையிலேந்து, நீங்க எதுவும் சாப்பிடாம நின்னிருக்கிறீங்க!” அந்த மானேஜர் முகத்தில் வியப்பூறும் புன்னகை மிளிர்கிறது. “நான் காபி குடிப்பது இருக்கட்டும். நீங்கள் முடிவாக அவனுடைய வேலை நீக்க உத்தரவை ரத்து செய்யணும். உங்களுக்கும் சரி, அவர்களுக்கும் சரி, வேலை நின்றால் நஷ்டம். ஆனால் அவர்களுடைய எட்டு மணி நேர உழைப்புக்கு நீங்கள் லாபத்தில் ஒரு கால் பங்கேனும் வரும்படி கூலி கொடுக்க வேண்டாமா? கூலியை இழந்து, குஞ்சும் குழந்தையுமாகத் தெருவில் பிச்சை எடுக்கவா அவர்கள் வேலை செய்யமாட்டோம் என்று நிற்கிறார்கள்?... ஆனால், நீங்கள் அநியாயமாகச் செயல்பட்டால், அதை எதிர்க்க அவர்களிடம் என்ன ஆயுதம் இருக்கு? சொல்லுங்கள்?” “சரி, சரிம்மா. காபியைக் குடியுங்கள். நீங்களும் ஒரு மேலான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளிக்காக நிற்கிறீர்கள். உங்களை வீணாக நிற்க வைப்பதில் எங்களுக்கும் மனமில்லை. அவர்களை வேலை செய்யச் சொல்லுங்கள்!” “இத பாருங்கள், இந்த மேல், கீழ் குடும்பக் கதையெல்லாம் இங்கே வேண்டாம்? நீங்கள் மாணிக்கத்தின் ஆர்டரை ரத்து செய்யுங்கள். இதற்காக அவனை எந்த ஒரு நிர்ப்பந்தத்தில் மாட்டுவதோ கூலி பிடிப்பதோ செய்யக் கூடாது...” “சரி, ஒப்புக்கறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் உற்பத்திக்குக் குந்தகம் இல்லைன்னு சொல்றீங்க. இப்ப காலையில் இருந்து அஞ்சு மணி நேர உற்பத்தி தடைபட்டுப் போச்சு. அதை இவர்கள் ஈடு பண்ணியாகணும்.” “அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இதே போல் கடந்த மூணு மாசங்களில் காரணமின்றி வேலையை விட்டு நிறுத்திய நாலு தொழிலாளரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் கூலிக் குறைப்புக் கூடாது...” “சரி...” ஒப்பந்தம் பதிவாகிறது. உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன. வெற்றிக் களிப்புடன் மணி திரும்புகிறாள். “தோழர்களே! வேலை செய்யுங்கள்! வேலை நீக்க உத்தரவு ரத்தாகி விட்டது! மாணிகம்...! பச்சையப்பன், எல்லாரும் வேலைக்குப் போங்கள்!” இரவு பத்து மணி வரையிலும் அன்று ‘ஸ்டீல் ரோலிங் மில்’ ஓடுகிறது. மாணிக்கத்துக்குக் கூலிப்பிடித்தம் இல்லை. மணி அன்றிரவு ஒரு தொழிலாளியின் குடிலில் உணவு கொண்டு குழந்தைகளுடன் விளையாடுகிறாள். “எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கள்... விடுதலை... விடுதலை... விடுதலை...!” பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|