20

     “அம்மா...!”

     “யாரப்பா? குளுந்தானா? என்ன சமாசாரம்?”

     குளுந்தன் தப்புச் செய்த பாவனையில் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறான்.

     “என்னடா? தேங்கா திருடினியா? அடி வாங்கினியா?”

     “அதெல்லாம் இல்லீங்கம்மா... வந்து... அத்த, தலையப் புடிச்சு இழுத்து அடிச்சி ஒ ஆத்தா வூட்டுக்குப் போடின்னு தொரத்திட்டேன்...”

     “உம் பொஞ்சாதியையா? ஏம்ப்பா, மாம மகளத்தான கட்டினே, ஆறு மாசம் ஆகல? அதுக்குள்ள எதுக்கு அப்படி அடிச்சே?”

     “... வந்து... காலம, கஞ்சி கொண்டாந்தா. அதுக்குத் தொட்டுக்க ஒரு வியஞ்சனம், உப்பு மொளவா வச்சி அரச்சிக் கொண்டாரக் கூடாது? மொளவாயச் சுட்டு, கஞ்சில மொதக்க வுட்டிருந்தா... கோவம் வந்திடிச்சி... அடிச்சிட்டே...”

     “நீ காலமேயே கள்ளும் குடிச்சிருந்த... இல்ல?...” அவன் நாணித் தலை குனிகிறான்.

     “ஆமாங்க...!”

     “ஏம்ப்பா, உங்களுக்கு எத்தினி தபா சொல்லணும்? குடிச்சதினால பொஞ்சாதிய அடிச்சு வெரட்டினே. எத்தினி நாளாச்சி!”

     “மூணு மாசமாம்மா? எங்கம்மா போடா, போயி அதை அழச்சிட்டு வா, இல்லாட்டி உனக்குச் சோறு வய்க்கமாட்டேங்குறா. அவ அண்ணெமவ. அங்க போனா, மச்சா, மாமியா ஆரும் மொவம் குடுத்துப் பேசுறதில்லம்மா...”

     மணி சிறிது நேரம் பேசாமல் இருக்கிறாள்.

     பிறகு... “நாள ராத்திரி, ஆண்டாங்கரயில ஒரு மீட்டிங் இருக்கு. அங்க வா. இதுக்குத் தீர்வு அங்க சொல்லுறேன், போ?”

     அது ஒரு முன் பனிக் கால இரவு. கார்த்திகைக் கடைசி. மழைத் துளியா, பனி நீர்த்துளியா என்று புரியாத ஈரத்தில் தரை குளிர்ந்திருக்கிறது. வானில் எங்கோ ஒரு நட்சத்திரம், பிரமையோ உண்மையோ என்று புரியாமல் முணுக் முணுக்கென்று சிமிட்டுவதுபோல் இருக்கிறது. இவள் தவிர பிற விவசாய சங்கத் தலைவர்களுக்கெல்லாம், வெளியேற்ற, தடைச் சட்ட ஆணைகள் போடப்பட்டிருக்கின்றன. எனவேதான் இரவோடிரவாகக் கூட்டம். இதற்கு யார் வருவார்களோ, வரமாட்டார்களோ? குரலில் இருந்து தான் ஆளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     அது ஒரு மாந்தோப்பு...

     “வணக்கம்... வணக்கம்...”

     குரலில் இருந்து சீனிவாசராவ், குப்பு என்று புரிந்து கொள்கிறாள்.

     “எல்லாம் வந்துட்டீங்களா?... ஏம்ப்பா? அங்கே இங்கே இருக்கிறவங்க எல்லாம் கிட்ட வாங்க...?”

     கசமுச கசமுசவென்று இரகசியக் குரல்கள்...

     “மணி அம்மா... மணி அம்மா வந்திருக்கிறாங்கப்பா!...”

     மணி பேசுகிறாள்:-

     “அன்பார்ந்த தோழர்களே! சகோதர சகோதரிகளே! உங்களை எல்லாம் ஒன்றாகச் சேரவைத்துப் பொதுவான பிரச்சினைகளையும், உங்கள் சொந்தப் பிரச்சினைகள் எப்படி அந்தப் பொதுப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருக்குன்னு சொல்லவும் வரச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எல்லாரும், காலம் காலமாக நிலச் சொந்தக்காரர்களுக்காக உழைத்தீர்கள்; உழைக்கிறீர்கள். ஆனால் மானம் மறைக்க முழத் துணி இல்லை; வயிறு நிறையச் சோறு இல்லை. இந்த அநியாயம் புரியாமலே பழகிப் போயிட்டுது. இங்கிலீஷ்காரன்கிட்ட சுயராஜ்யம் கேட்டுப் போராடிட்டிருக்கிறோம். காங்கிரஸ், இதுக்காகப் பாடுபடற கட்சின்னு தெரியும். காங்கிரஸ் சர்க்கார் வந்திட்டா நமக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சோம். இப்ப இடைக்கால சர்க்கார், காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. ஆனா, காங்கிரஸ்ல இங்க யாரெல்லாம் இருக்காங்க? அடிமைகளைக் கசக்கிப் பிழியிறவங்களும், குத்தகை விவசாயிக்குக் கொடுக்காம வயிற்றிலடிக்கிறவனும்தான் இருக்காங்க. வெள்ளைக்காரன் கிட்ட ராவ்பகதூர் பட்டம் வாங்கினவங்க, திடீர் தேசபக்தி வந்து இங்கே புகுந்திருக்காங்க. இவங்க என்னிக்குமே உழைப்பவனை மதிக்கல. கிசான் சங்கம் வளரக் கூடாதுன்னு தற்காப்புப் படைன்னு வச்சு அடிச்சு நொறுக்குறவங்க இருக்காங்க. மன்னார்குடி ஒப்பந்தம் உங்களுக்குத் தெரியும். அந்தக் கூலி யார் குடுக்கிறாங்க? வேலைக்காரங்களுக்கு மூணில ரெண்டு வேணும்னு போராடினோம். பாதிக்குப் பாதியுமில்ல. அஞ்சில் ஒண்ணுக்கே வயித்திலடிக்கிறாங்க. சங்கமாடா பயலே? தொலைச்சிப்பிடுவேன்...னு மிரட்டல். புது சர்க்கார் வந்தப்புறம் நீடாமங்கலத்துக்கு வந்த சட்ட மந்திரி சர்க்கார் மத்யஸ்தம் வச்சுத் தீர்ப்புச் சொல்றது சரியில்ல, சர்க்காருக்கு அதுக்கு அதிகாரமில்லேன்னு சொல்றார். ஆனா, நியாயத்துக்காக நீங்க கூலி கேட்டு வாரம் கேட்டுப் போராடுற போது, புடிச்சி வழக்குப் போட்டு, ஜெயிலில் போட அதிகாரம் இருக்கா?...

     இப்ப சர்க்கார் குறுகிய காலக் குறுவை நெல்லை அதிகமாக விளைவித்து விற்றால் மணங்குக்கு ரெண்டு போய் போனஸ் கொடுப்பதாக அறிவிப்புச் செய்தது. ஆனால் இந்த போனஸ், பாடுபட்ட தொழிலாளிகளுக்குத் தானே சேர வேண்டும்? அதுதானே நியாயம்? மூணு மணிக்கு உழவோட்டியவனுக்கு, எருச் சுமந்து கொட்டிய பெண்சாதிக்கு, கரவெளிப் போட்டில நின்னு நடவு நட்டவளுக்கு, களையெடுத்தவளுக்கு, மடை பார்த்து மடை வெட்டி ராப்பகலா பூச்சி பொட்டுக்கு அஞ்சாம பாதுகாத்தவனுக்கு, அறுவடை செய்து, போரடித்துத் தூற்றினவனுக்குப் போனஸ் இல்லை. போனஸ் ஏன்? அரைக்கால் மரக்கால் கூட்டிக் கேட்ட கூலி கூட இல்லை. அதோடு, நம் மந்திரி மகானுபாவர், மிராசு இஷ்டப்பட்டால் யாரையும் நிலத்தை விட்டோ, மனைக்கட்டை விட்டோ வெளியேற்ற உரிமை உண்டுன்னும் சொல்லியிருக்கிறார்!

     அன்பார்ந்த தோழர்களே! நீங்கள் இப்ப என்ன செய்ய வேணும்? நாம் ஒண்ணு சேரணும். ஒண்ணு சேருவது... அதற்கு அடையாளமாகச் சங்கம் சேரணும். என்ன சங்கம்? செங்கொடிச் சங்கம். கதிரும் அரிவாளும் போட்ட சின்னம் உள்ள செங்கொடிச் சங்கம். இது பாட்டாளியை மதித்துக் கௌரவிக்கும் - அமைப்பின் சின்னம். உழவர்களும் தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்து நாட்டை, சமுதாயத்தை விடுதலை செய்யும் சின்னம், ஒரு புதிய தத்துவம் பூப்பூவாய் மலரக் கூடிய சின்னம்...

     உங்களுக்குள் எத்தனையோ சொந்தத் தவறுகள் இருக்கலாம். சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லோரும் உழைப்பாளிகள் என்ற ஒரே வர்க்கம். வாய்க்கார், சாம்பார், அம்பலக்காரர், வள்ளுவர் என்றெல்லாம் எந்த வேறுபாடும் உங்களைப் பிரிக்கக் கூடாது. நீங்கள் எல்லாரும், மிராசு ஜமீன்களுக்கு அடிமைப்பட்ட வர்க்கம். உங்களைச் சேர்க்கும் கொடிதான் இது. உங்களை ஒற்றுமையாகப் பிணைக்கும் இக்கொடியை வைத்து ஒவ்வொரு ஊரிலும் சங்கம் கட்டுங்கள்! தோழர்களே! சேருவீர், செங்கொடியின் கீழ்! ஜெய்ஹிந்த்!”

     உரை முடிந்து இவள் கிளம்பும் சமயம் குளுந்தான் ஓடி வருகிறான்.

     “அம்மா, நீங்க வரச் சொன்னீங்க, வந்திட்டேன். மச்சானும், மாமனும் முகம் கொடுத்துப் பேசலீங்க...”

     “ஓ... அந்தப் பிரச்சினையா!... இப்ப... பேசினதக் கேட்டீல்ல! உங்க ஊருல, செங்கொடி சங்கம் கட்டு! உன் பொஞ்சாதிய நானே கொண்டு வுட்டுடச் சொல்லுற!...”

     தனியாரின் பிரச்சினைகளையும் இந்தச் சங்கம் வேகமாகத் தீர்த்து வைக்கிறது.

     எல்லாரும் அக்கொடிக்குக் கீழ் ஒரே குடும்பம். ஆணும் உழைக்கிறான்; பெண்ணும் உழைக்கிறாள். கள் குடிப்பது வேண்டாம்; பெண்சாதியைக் கை நீட்டி அடிப்பது பாவம்... ஒற்றுமையாக இருந்தாலே வஞ்சிப்பவரைப் பார்த்து நியாயம் கேட்டுப் போராடலாம்...

     இந்த மொழிகள், மந்திரங்களாக ஒவ்வொரு உழைப்பாளியின் செவிகளிலும் மோதுகின்றன.

     பகலெல்லாம் அலைந்துவிட்டு, இரவில்தான் அன்றாட வரவு செலவை இவள் கணக்குப் பார்க்க வேண்டி இருக்கிறது. எதிரே உள்ள அச்சகம் தவிர, கடைவீதியே பொட்டலமாக மடிந்துவிட்ட அந்த நள்ளிரவிலும் இவள் அறை விளக்கு எரிகிறது.

     ரசீதுப் புத்தகங்களை எண்ணி எண்ணிப் பார்த்துக் கட்சிக் கணக்கைச் சரி பார்க்கிறாள். செங்கொடிச் சங்கச் சந்தா, ஆண்டொன்றுக்கு ஜோடிக்கு இரண்டணா. மணி, அச்சகத்துக்காரரிடம் மொத்தமாக ரசீதுப் புத்தகங்களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துவிடுவாள். அவ்வப்போது ஐந்நூறு இருநூறு என்று தேவைக்குப் பெற்றுக் கொள்கிறாள். கையில் கிடைக்கும் தொகையில் சிறுகச் சிறுகக் கட்டி விடுகிறாள். செலவோ, கொடி, கூட்டங்களுக்கான துண்டுப்பிரசுரம் அச்சடித்தல், விளக்கு வாடகை, தொண்டர்களை ஆங்காங்கு அனுப்புதல், ‘தலைமறைவு’ இயக்கத்தை நிர்வகித்தல்... என்று பல நிர்ப்பந்தங்கள்.

     அதிகப்படியாக இருபத்து நான்கு ரூபாய் துண்டு விழுகிறது.

     எந்த இனம்... கொடுக்கப்படவில்லை?

     கட்சிக்கு நிதி என்று பல பிரசுரங்களை விற்று வந்த பணம்...

     மாநாடுகளில் கூட்டங்களில் அவற்றை வைத்துக் கொண்டு ஒரணா, ஒரணா என்று வசூல் செய்த பணம்...

     நமது சரித்திரப் பாரம்பரியம்...

     மக்கள் வயிற்றில் அடிக்காதே...

     சோவியத் ஜனநாயகம்...

     ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதிகள் வரவழைத்திருந்தாள். அனைத்தும் தீர்ந்து போயிருக்கின்றன... இந்தக் கணக்குகளை மறுபடி கூட்டுகிறாள்.

     கடந்த ஒரு வாரமாக, வலிவலம், நாகை, கச்சேரி பொதுக்கூட்டம் என்று அலைந்த அலைச்சலில் உடல் வலிக்கிறது. அசதி, படுத்துக்கொள் என்று கெஞ்சுகிறது. மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.

     விடியற்காலையில் இவள் எழுந்திருக்க வேண்டும்.

     கட்சிப் பணக் கணக்கென்பது நெருப்பு.

     இவளுக்குச் சொந்தமாக அந்த வீட்டையும் நிலத்தையும் விற்ற தொகை ஆயிரத்துச் சொச்சம் இருக்கிறது. இவளுடைய கொடுக்கல் வாங்கல் எல்லாம் குஞ்சம்மாள் வகையில் தான் நடக்கும். அவள் ஏழைகளுக்கும் கொடுப்பாள். பணம் இருப்பவருக்கும் கொடுப்பாள். சொந்த பந்தங்கள், இவளை எப்படி நினைக்கிறார்கள். இவளுக்கென்ன, பிள்ளையா, குட்டியா? இவள் சேமித்தால் கட்சிக்காரன் அநாமத்தாகக் கொண்டு போவான்... என்ற மனப்பான்மைதான் தெரிகிறது. கட்சிப் பணம் மட்டும் கறாராக நாகை கடைவீதியில் உள்ள அனுமான் வங்கியில் இருக்கிறது.

     புகையிலைக் கம்பெனிக் கிழவன்... இருமுகிறான்.

     இவன் அடுக்கிருமல் தொடர்ந்தால் மணி ஒன்றரை என்று கொள்ளலாம்.

     இவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.

     கதவு தட்டும் ஓசை கேட்கிறது.

     “அம்மா...”

     வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

     “நாந்தாம்மா, சீனிவாசன். வண்டி கொண்டாந்திருக்கிறேன்... காலமேயே முகூர்த்தம்...”

     மணி கண்களைக் கசக்கிக் கொள்கிறாள்.

     “ஓ, நாகலூர் கல்யாணமா? நான் மறந்தே போனேன். கோனேரிராஜபுரம் போகணும்னிருந்தேன்...”

     “எப்படிம்மா? நீங்கதானே சங்கம் கட்டின கையோட கல்யாணமும் நடக்கும்னீங்க. அம்மா கையால தாலி குடுத்துக் கட்டுறதுன்னு முடிவாயிடிச்சே!...”

     “...சரி... வரேன்...”

     சீனிவாசன் இன்னும் அருகில் வருகிறான்.

     “அம்மா, இந்த உத்தண்டராமன் வந்து உஷார்னு சொல்லிட்டுப் போயிருக்காப்புல. அம்மாளச் சுத்தி, இருக்கிற முள்ளுவளே பிடுங்கிடும்போல இருக்குன்னான்.”

     “ஏம்ப்பா? கண்டங்கத்திரி பிறந்த இடமே முள்ளுத்தானே? அதை மருந்துக்குப் பறிக்கணும்னா கவனமாத்தான் இருக்கணும்...”

     “நீங்க நேரா வந்திருங்க இப்ப, பிளசர் காத்திட்டிருக்கு. நேரா, ஊருக்குப் போயி நீங்க குளிச்சி எல்லாம் செஞ்சிக்குலாம்!”

     நாகலூரைச் சுற்றி இவளுடைய உறவுகள் பிறந்த குடும்பம் சார்ந்தவை. அந்நாள்களில் சனாதனத்துக்கு உள்பட்டுப் பூச்சியாக ஊர்ந்த நாள்களில் உறவுக் கூட்டம் இவளை மதித்தது. இப்போது சாதி ஆசாரங்களைத் துறந்துவிட்ட இவளைப் பிடுங்குவதற்குக் கருக்கட்டிக் கொண்டிருப்பது இயல்புதானே? போனவள் எங்கோ கண் காணாமல் தொலையக் கூடாதா! சுற்றிச் சுற்றி அவர்கள் வளைவுச் சேரிகளுக்குள்ளேயே நடமாடினாள்!

     மணி அந்தக் கருக்கிருட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு, ஓசைப்படாமல் வந்து நிற்கும் பிளசரில் கிளம்புகிறாள். வண்டி, பாலம் கடந்து செல்வது தெரிகிறது. பிறகு திரும்புகிறது. சுந்தரவளாகத் திருப்பம் என்று புரிந்து கொள்கிறாள். அங்கே கதவு திறக்க, ஓராள் கூட ஏறிக் கொள்கிறான். ஊர் வந்து சேர்ந்ததும் காலைக் கடன் முடித்து, அவர்கள் நிரப்பி வைத்திருக்கும் இதமான வெந்நீரில் உடல் நோவு போகக் குளிக்கிறாள்.

     உடன் கொண்டு வந்த வேஷ்டி சட்டை மாற்றி, ஈரம் துவைத்துப் படலையில் போடுகிறாள்.

     அதற்குள், “அம்மா வந்துட்டாங்க! அம்மா வந்தாச்சு!” என்ற மகிழ்ச்சி ஆரவாரங்கள் பரவுகின்றன.

     “சும்மா இருங்கடே...” என்று சீனிவாசன் அதட்டுகிறான்.

     ஓராள் வந்து குசுகுசுக்கிறான்.

     மணி தலை சீவிக்கொள்ளக் கண்ணாடி வருகிறது. சுடச்சுட இட்டிலி, தூக்குச் செம்பில் காபி... கொண்டு வருகிறார்கள்.

     “வேல்கம்பு, பாலா கம்பு, ஆராக்கத்தி, அரிவாள்...” என்று கூறுவது செவிகளில் விழுகிறது.

     “என்னப்பா, சீனிவாசா?...”

     “உங்களுக்கு ஒண்ணுமில்ல. நீங்க சாப்பிடுங்கம்மா!”

     மணமேடை என்று பிரமாதமில்லை. சிவப்புக் காகிதத் தோரணம் கட்டப்பெற்ற நான்குகால் பந்தல். சாணி மெழுகிய இடத்தில் பலகையில் கோலம் போடப்பட்டிருக்கிறது. மணமக்கள் வந்து அம்மாளைப் பணிகிறார்கள்.

     மணி இதற்கென்றே கொண்டு வந்திருக்கும், அரிவாள் கதிர் சின்னம் பொருந்திய சிவப்பு வில்லையை இருவர் ஆடைகளிலும் பொருத்துகிறாள்... குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது. பிறகு மாலைகள் இரண்டையும் அம்மா எடுத்து ஒன்றைப் பெண்கையில் கொடுத்து மணமகனுக்குப் போடச் சொல்கிறாள். பிறகு மற்றொரு மாலையை மணமகன் கையில் கொடுத்து மணமகளுக்குப் போடச் சொல்கிறாள். நடுவீட்டில் இருவரும் பலகையில் வந்து அமர்கிறார்கள்.

     அம்மாதான் புரோகிதர்; அம்மாதான் தலைவர்; அம்மா... அம்மாதான் எல்லாம்.

     “குழந்தைகளா! நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள். சாம்பார் வாய்க்கார் என்ற பிரிவுகள் இல்லை என்று அழிந்து போக, ஒன்றுபடுகிறீர்கள். காலம் முழுவதும் ஒருவருக்கொருவர், பிரியமாய் நேசமாய் இருப்பீர்கள். வாழ்க்கை என்பது எதிர்ப்படும் கஷ்டங்களைத் தீரமாக எதிர்த்துப் போராடி வெல்வது தான். அப்படி எந்தவிதமான கஷ்டம் வந்தாலும், நீங்கள் சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதால், மொத்த சமுதாயமும் அப்படியே ஒன்றுபட்டிருக்க ஏதுவாக இருக்க முடியும். குழந்தைப் பேறு பெற்று, ஐக்கியமாக, இந்தச் சமுதாயத்தை இன்னும் துணிவும் பலமும் மிகுந்த தாக்குவீர்கள். எந்தப் பிளவும் உங்களிடையே வராமல் இருக்கட்டும்...”

     தாலிச் சரடில் மஞ்சள் கிழங்கை வில்லையாக்கிக் கோத்திருக்கிறார்கள். அதை அம்மா எடுத்து மணமகன் கையில் கொடுக்க, மணமகள் கழுத்தில் அவன் கட்டுகிறான். கட்சிக்கென்று நன்கொடையாக 5 ரூபாய் வெற்றிலை பாக்குப் பழத்துடன் தட்டில் வைத்து அம்மாவுக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் குலவை இட, திருமணம் மகிழ்ச்சியுடன் நிறைவேறுகிறது.

     அந்த உற்சாகத்தில் எவனோ, “மணியம்மை வாழ்க!” என்று குரல் கொடுக்கிறான்.

     அருகே உத்தண்டராமன் வந்து, வாயைப் பொத்திச் சாடை காட்டுகிறான்.

     “அம்மா, வாங்க. இனிமே இங்கே இருக்க வாணாம்!” இவளைக் குறுக்குப் பாதையில் எங்கோ தனியாக அழைத்துச் செல்கிறான். வேல்கம்பு, ஆராமீன் அறுக்கும் கத்தி... பாலாகம்பு என்று ஓர் ஆயுதப்படை இவளைச் சூழ்ந்து கவசமாக்கிக் கடத்திச் செல்கிறது.

     வேறொரு கிராமம்... வண்டிப்பாதையை விட்டு வரப்பில் விரைகிறார்கள். அறுவடைக்குக் காத்திருக்கும் கதிர்கள் சாய்ந்திருக்கின்றன.

     மணலூர்... “அம்மா! அம்மா வாங்க!” கால் கழுவ நீர் வருகிறது. குஞ்சு குழந்தைகளோடு இவளை வரவேற்கும் இனிய முகங்கள். கைகள் நீண்டு நீண்டு அனைவரையும் ஆரத்தழுவ வேண்டும்போல் உணர்ச்சி வசப்படுகிறாள் மணி.

     அம்மாவை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மணி விரைந்து இந்த அயர்வு நீங்கத் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். உடனே ஓடிச்சென்று ஒரு பனை ஓலை விசிறி கொண்டு ஒரு பெண் விசிறுகிறாள்.

     “அம்மா, உங்களுக்குச் சிரமமில்லாம, பிளசர்ல கூட்டிப் போகணுமின்னு இருந்தோம். பிளசரை மறிச்சி நிறுத்த ஆளுகள் நிறுத்தியிருக்காங்க பாதையிலன்னு ராமன் சொன்னான். இப்படிக் கூட்டிட்டு வரவேண்டியதாயிட்டதம்மா...”

     “மன்னிச்சிக்குங்கம்மா!”

     சீனிவாசன் பணிந்து சொல்கிறான்.

     நில உடைமை ஆதிக்கங்கள் இவ்வாறு திட்டமிட்டதில் இவளுக்கு வியப்பில்லை.

     இவள் உடைமை வர்க்கங்களை அதே வளைவில் நின்று குதறி எறிகிறாள் அல்லவோ!

     சனாதனப் போர்வைகளைக் கிழித்து எறிகிறாளே...! ஆனால் இந்தக் குழந்தைகள் காட்டும் அன்பு...! அடிபட்டு மிதிபட்டுப் பஞ்சையானாலும், தளும்பி நிற்கும் மனிதாபிமானம்...!

     “அம்மா, ஐயர் வச்சு சமையல் பண்ணி, பொண்ணு மாப்பிள கூட பந்தில நீங்களும் சாப்பிடணும்னு ஆசையாக இருந்தோம்... தப்பா நினைக்காதிங்க தாயி! டிபன் காரியர்ல சாப்பாடு வருது...”

     தலைவாழை இலையைப் போட்டுச் சுத்தமாகத் துடைத்து, காரியரைக் குப்பாயி திறந்து வைக்கிறாள்.

     “ஏம்ப்பா, இவ்வளவு சோறா நான் சாப்பிடப் போறேன்! வாங்கடேய்!...”

     மணி சோறு குழம்பு போட்டுப் பிசைந்து, அருகில் குழந்தைகளைக் கூப்பிட்டு உருட்டிக் கொடுத்துவிட்டுச் சாப்பிடுகிறாள். பாயசம், வடை, லட்டு, நொறுங்கி விட்ட அப்பளம், மோர்...

     மணி உண்ட பின் அந்தக் குடிலிலேயே இளைப்பாறுகிறாள். பிறகு இருட்டும் நேரத்தில் வண்டியில் ஊர் திரும்புகிறாள். திரும்பும் போது நெஞ்சில் முணுக் முணுக்கென்று நோவுகிறது... மாடி ஏறும்போது மூச்சு வாங்குவதுபோல் வலி வந்தவள் பாயை விரித்துப் படுத்துக் கொள்கிறாள். தூங்கிப் போகிறாள்.

     இரவு ஒன்பது மணிக்கு மேலிருக்கும். இவளுடைய உறவினரான, ஒன்றுவிட்ட சகோதரன், டாக்டர் வருகிறான்.

     “மணி, உடம்பு சரியில்லையா...?”

     “... ஒண்ணுமில்லையே? ஆரு சொன்னா?...”

     “... நீ கிராமத்துப் பக்கம் எங்கேயோ பள்ளர்குடிக் கல்யாணத்துக்குப் போறதாக் காதில் விழுந்தது. நான் உன்னைப் போகவேண்டாம்னு சொல்ல வரணும்னு நினைச்சேன். ஒரு அவசரக் கேசு, மாட்டிண்டுட்டேன்.”

     “... ஏன் போகவேண்டாம்னு சொல்ல நினைச்சே? இவ இப்படிக் குடி கெடுக்கிறாளே, ஆள் வச்சு அடிக்கணும்னு ஏற்பாடு பண்ணிருந்தார்களோ...”

     இவளுக்கு உணர்ச்சி வசப்படுவதால் தானோ என்னவோ படபடப்பு அதிகமாகிறது.

     “அதெல்லாம் தெரியாது மணி. எதுக்கு ரசாபாசம்? ஏற்கெனவே பாப்பான் அப்படி இப்படின்னு ஒரு கூட்டம் துரத்திண்டு திரியறது! நீ வெளியூரில் எங்கேயானும் போறப்ப நமக்கு ஒண்ணும் தெரியாது. ஆனா சொந்த இடத்துல சகதியப் பூசிக்கிறாப்பல, ஒரு மட்டு மரியாதை இல்லாம நீயும் விட்டுக்குடுத்துப் பேசற. இல்லையா?”

     “ரொம்பச் சரி. என் மானம் மரியாதை பத்தி உனக்கேனும் இவ்வளவு அக்கறை இருப்பது எனக்குச் சந்தோஷமாயிருக்கப்பா.”

     “மணி, உன் முற்போக்குக் கொள்கை எல்லாம் நல்லதுதான். ஆனா, இந்த ஜனங்கள் நீ நினைக்கிறாப்பில இல்ல. நீ என்ன சொன்னாலும் செஞ்சாலும் உன் கட்சி கூட உன்னை வேறயாத்தான் நினைக்கும். சொந்த பந்தங்கள் கிட்ட உனக்கு ஏன் வெறுப்பு? நீ வேஷம் மாறினதாக யாருக்கும் விரோதம் இல்ல. ஆனா, நீ கீழ்ஜனங்கள் கிட்டப் போயி, நீ பிறந்த குடியைத் தூத்தறது சரியில்ல...”

     “நீ ஏன் இதுக்குச் சாதிக்கலர் குடுக்கறே? உன் பார்வை தப்பு...”

     “மணி, உனக்கு இப்பப் புரியாது, நீ நினைக்கற மாதிரி உன் கட்சியோ ஜனங்களோ இல்ல...”

     “ரொம்பச் சரி. நீ இப்ப வந்திருக்கே. வாயுக்குத்து மாதிரி ஒரு வலி முணுக்முணுக்குனு வரது. ஏதானும் மருந்து இருந்தாக்குடேன்!”

     அவன் கிளினிக்குக்கு சைக்கிளில் சென்று மருந்துப் பெட்டியுடன் வருகிறான். இவளைப் பரிசோதிக்கிறான். “...மணி, நீ இப்படி ரொம்ப அலட்டிக்கக் கூடாது. ரெஸ்ட் எடுக்கணும். நான் முன்னே சொன்னதை ஞாபகத்தில வச்சுக்கோ!”

     “அது சரி, நீ மருந்து ஏதானும் குடுக்கிறதானாக் குடு. மத்ததெல்லாம் எனக்குத் தெரியும்.”

     சில மாத்திரைகள், டானிக்புட்டி எல்லாம் மறுநாள் காலையில் வருகின்றன.