உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
29 நாகைக்கு வந்தாலே, மணிக்கு இப்போது, குஞ்சம்மாளை நினைத்து ஒரு தொய்வு ஆட்கொள்கிறது. பெண்... பெண் ஒரு கருவி; செக்குமாடு. இவள் தொழுவத்தில் கட்டப்பட்டு, வேண்டும் என்ற போது அவிழ்த்துக் கொண்டு போகப்படும் பிராணி... குஞ்சம்மாளை நினைத்த தொய்வுதானா? ஏனிப்படித் தோன்றுகிறது? வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறாள். ஆனால், வெற்றி விழாக்களில், இவளுக்கு என்ன பங்கு இருக்கிறது? ... சே, இது பிற்போக்குத்தனமான சோர்வு... புரட்டாசி மாசத்து வெயில் சுரீலென்று விழுகிறது. அச்சகத்தில், தோழர் சிங்காரவேலு இருக்கிறார். “வாங்கம்மா, இப்பதான் உங்களைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன்! நூறு வயசு...!” “அப்படியெல்லாம் சபிக்காதீர்கள் தோழர்! செங்கொடி வெற்றி பெறணும்னு நினைச்சேன். வெற்றி கிடைத்ததுமே நம் வேலை முடிஞ்சுபோச்சு?” “என்னம்மா நீங்க இப்படிச் சொல்றீங்க? வேலை எங்கே முடிஞ்சிச்சி? இப்பத்தான் ஆரம்பம். பொதுவுடைமைக் கட்சி, பதவியைப் பிடித்ததும் அப்படியே நிற்க முடியுமா? அது ஒரு மக்கள் இயக்கம். அது தேங்கலாமா? நீங்கள் இன்னிக்கு மக்கள் மத்தியில் ஒரு பெருஞ்சக்தி. ஓயக்கூடாது.” “இல்லை தோழர். விளக்கில் எண்ணெய் இருக்கும் வரையிலும் சூழலைப் பற்றிப் பயம் இல்லை. எண்ணெய் குறைந்துவிட்டால், ஒரு சின்னக் காற்றின் அசைவு கூட சுவாலையை அணைத்துவிடுமோ என்ற நடுக்கம் தோன்றுகிறதே, அது போல்தான்...” “அம்மா, உங்களுக்குத் தெரியாததில்லை. இன்னிக்கு இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவில், பழிவாங்குறாப்போல், எல்லா மிராசுகளும் அவனவன் கீழுள்ள ஆட்களை, நிலத்தை விட்டு வெளியேற்றுவதில் கண்ணாக இருக்கு. அரிசி ரேசன், ஆறவுன்சோ, நாலவுன்சோன்னு ஒரு கன்ட்ரோல் முறை இருந்தது. இப்ப அதுவும் போயிட்டுது. திண்டாடுறாங்க. இது வெற்றியாம்மா? சுப்பிரமணியம் கமிட்டி, முடிவு செஞ்சி அறுபது, நாப்பதுன்னு தீத்திருக்கு. எந்த மிராசு கொடுப்பான்? நீங்க கிள்ளுகுடி என்ன, ராஜபுரம் என்ன, வலிவலம் என்னன்னு ஓடி ஓடிச் செங்குடிச் சங்கங்களைக் கட்டி ஓட்டுப்போட வச்சீங்க. ஓட்டுப் போட்ட குத்தத்துக்காக அவங்க வதைபடு படலம் ஆரம்பமாயிடிச்சி. நீங்க ஓஞ்சுட்டா அப்புறம் என்ன ஆவுறது?” நெஞ்சு கனத்துப் போகிறது. “சாகும்வரையிலும், என் இறுதி மூச்சுள்ளவரையிலும் இந்த இயக்கம், உழைப்பாளி உரிய பங்கைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடும் இயக்கம்... இதை விட்டுவிட மாட்டேன்...” என்று சொல்லிக் கொள்கிறாள். “அம்மா, சாப்பிட்டீங்களா? இல்லையே? உள்ளே சாப்பாடு வந்திருக்கு!” மணி ஆறுதலடைகிறாள். முகம் கழுவிக் கொண்டு, உள்ளே செல்கிறாள். எலுமிச்சை, தயிர் - கலந்த சாதங்கள். “தோழர், எலுமிச்சை பித்தத்துக்கு நல்ல ஆரோக்கியம், இப்ப... எனக்கு உங்கள் பேச்சே எலுமிச்சையாக இருக்கு. உங்களுக்கு ரொம்ப வந்தனம்!” சாப்பிட்டு முடித்தபின் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஜனசக்தி நிதி திரட்டப்படும் நாட்கள்... மக்கள் மத்தியில் புதிய தத்துவங்களைப் பரப்பும் கதைகள் நிறையச் சேரவேண்டும். எப்படி? “அம்மா, இப்போதுகூட, மாக்ஸிம் கார்க்கியின் கதைகள் - அமரசிருஷ்டி - அவற்றில் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். பெற்ற தாய் - பிறந்த பொன்னாடு என்ற தலைப்பில். ஆனால், புத்தகம் போட்டுப் பணம் பண்ண முடியாது. எப்படியோ போடலாம் என்றால், பொருளுதவி இல்லாமல் ஒன்றும் ஆகிறதில்லை... எங்கே திரும்பினாலும் நெருக்கடி...” “தோழர், இந்தத் தொண்டு நிச்சயம் செய்தாக வேண்டும். நான் எப்படியானும் முயற்சி செய்கிறேன்...” அவர் குறிப்பிட்டது உண்மைதான், மிராசுதார் அடக்குமுறைகள், அலையலையாக இவர்களை வீழ்த்த நெருக்குகின்றன. வலிவலம், கீவளூர், கிள்ளுகுடி என்று இவள் ஓடி ஓடிப் போய்க் களத்தில் நிற்கிறாள். ஒப்பந்தக் கூலி கிடையாது; நாற்பதாவது, அறுபதாவது! என்று விரட்டியடிக்க வெளியாட்கள் கொண்டு வரப்படுகின்றனர். “தோழர்களே! வெளியேறாதீர்! ஒன்றுபடுங்கள்! நாம் உயிருள்ளவரை போராடுவோம்! உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!” துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன வீரன் மகனைப் புதைத்து விட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்... அந்த ஆண்டில், புயல் நாகையைத் தாக்குகிறது. ஏன்? தஞ்சை ஜில்லாவின் பெரும் பண்ணைகளே வெள்ளக் காடாகின்றன. தென்னை, வாழை அடியோடு நாசமடைகின்றன. சாலைப் புளியமரங்கள் ஒன்று கூட நிற்கவில்லை. குடிசைகள் வெள்ளக் காடாகி, மக்களைச் சின்னாபின்னமாக்கி அலையச் செய்கிறது. மணி இந்தச் சூழலில், சீர்திருத்தப் பணியில், உழைப்பாளிகளுக்கு நியாய ஊதியம் பெற்றுத் தர முன்நிற்கின்றாள். “ஏம்ப்பா? உங்க ஊரில சங்கம் இருக்கா? நியாயக் கூலி இல்லாமலா வேலை செய்யிறீங்க...?” “...மின்ன இருந்திச்சி. அம்மா கட்னீங்க. இப்ப அல்லாம் பூடிச்சி... வெள்ளம் வந்திச்சா...? அல்லாம பண்ணையாளுன்னு இப்ப ஒண்ணும் இல்லாமில்ல...? எங்க வேணா வேலைக்குப் போயிக்கறாங்க?” “ஏம்ப்பா, கூட்டி வச்ச வேப்பங் கொட்டயா சங்கமங்குறது? எல்லா ஆளுகளும் சேர்ந்து செங்கொடிச் சங்கத்தைக் கட்டுங்கப்பா.” அவன் மவுனம் சாதிக்கிறான். “ஏம்ப்பா...?” “சங்கம்னா காசு வேணுங்க; சந்தா குடுக்கமாட்டம்ங்கறாங்க...” “என்னப்பா சந்தா? வருசத்துக்கு சோடிக்கு - ஆணுக்கும் பெண்ணுக்குமா நாலணா. இது குடுக்க முடியாதா?” “குடுக்கமாட்டம்ங்கறாங்க. அவவ ஓரணான்னா ஓரணாங்குறான்?” மணி சிறிது யோசனை செய்கிறாள். “சரி, வருசத்துக்கு சோடிக்கு ரெண்டணாத் தாங்க. போதும், சங்கத்தைக் கட்டுங்க! நான் வர புதங்கிழமை கொடி கொண்டாந்து ஏத்தி வைக்கிறேன்...! அம்பது பேருக்குக் குறையாம இருக்கணும்!” இது புதிய விறுவிறுப்பைக் கொண்டு வருகிறது. மணி அச்சகத்தில் ரசீது புத்தகம் அச்சடித்து, ஊர் ஊராகத் தானே சென்று சங்கங்களை முறையாக நிமிர்த்துகிறாள். வாய்ப்பேச்சு இல்லாமல் கூட்டம், தீர்மானம், கோரிக்கை என்று ஒழுங்கு கற்பிக்கிறாள். இந்தக் கிராமச் சுற்றுப் பயணங்களில், புதிய விறுவிறுப்பில், சில அடிப்படை சமாசாரங்கள் இவளுக்குக் குறுக்கே வரவில்லை. திருவாரூரில், இவள் அலுவலகத்தில் குழு உறுப்பினர் ஒருவர் வந்து உரத்துக் கேட்கிறார். “என்னம்மா, நீங்க செய்யிற வேலை? இது கட்சித் துரோகம் இல்லை?” மணி, ஜனசக்திப் பிரதிகளுக்கு மறுபடி பிரதிநிதியாக இருந்து வரவழைக்கிறாள். கோவிந்தராஜன், பக்கிரி என்று இரு இளைஞர்கள் ரயிலடியில் சென்று வாங்கி அவற்றைச் சந்தாதாரருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விற்றுவிட்டு வருகிறார்கள். முதல் நாள் பிரதியை அவள் பார்த்துக் கொண்டிருக்கையில் இடியாக ‘கட்சித் துரோகம்’ என்ற சொல் முட்டுகிறது. “என்ன சொல்கிறீர்கள் தோழர்?” “நீங்க கட்சி நிர்வாகக் குழுவினரைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று தெரியாதா? பதவி கிடைக்கலேங்கற ஆத்திரத்தில், நீங்க கட்சியை... நீங்களே பிராபல்யம் பெற பிளவு பண்ண முடிவு எடுத்திருக்கிறீங்க?” இவள் திகைத்துப் போகிறாள். “நான் என்ன முடிவு செய்துவிட்டேன், தோழர்?” “சோடிக்கு ரெண்டணா சந்தான்னு யாரைக் கேட்டு முடிவு செய்தீங்க? ஏற்கெனவே கட்சிப் பணம் போனதுக்கு உங்ககிட்ட சரியான விளக்கம் இல்ல. உங்க சொந்தப் பணம் தங்கி, வீடு வாங்கியிருக்கிறீங்க! கட்சிப் பணம் மட்டும்...” அடி வயிற்றில் கத்தி சொருகப்பட்டாற் போன்று துடிதுடித்துப் போகிறாள். என்றாலும், இவள் சத்தியம், இவள் விவேகம், இவள் முதிர்ச்சி, இவளை அமைதியாக வைக்கின்றன. “உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள், ஆட்களை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுறீங்க... இது பெரிய துரோகம்!” “தோழர்... நிதானமாகப் பேசுங்கள். துரதிஷ்ட வசமாக நான் அந்தப் பணம் பற்றிப் பேசும் நிலையில் இல்லை. எனக்கென்று ஒரு பணமும், சொத்தும் நான் வைத்துக் கொள்ளவில்லை. என் சொத்தே என் சத்தியமும், நான் உழைக்கும் இந்த இயக்கமும் தான். உழைப்பாளிகளை, விவசாயிகளைப் பண்ணை முதலாளிகள் தாம் வயிற்றில் அடிக்கிறார்கள். அவர்களை எந்தக் காரணம் காட்டி சங்க ஒற்றுமையைக் குலைக்கலாம் என்று கண்ணி வைக்கிறார்கள். நாமும் கட்சி என்ற முறையில் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தலாமா? நம் குறிக்கோள் சங்க உணர்வைச் சிதையாமல் காப்பாற்ற வேண்டும்...” “அதற்காக உங்கள் இஷ்டப்படி முடிவு செய்வதா? அது கட்சி மேலிடம் தீர்மானம் செய்யும் விஷயம். தனிப்பட்டவர் கருத்து இங்கே குற்றம் தான். கட்சி விதிக்கு விரோதமாக நீங்கள் செயல்படுறீங்க?” “அப்படியானால் மக்களை இயக்கத்தில் இணைப்பது முக்கியமில்லையா? கட்சி விதி... அதுதான் முக்கியமா? வேலி பயிரை மேய்ந்தால், அதைத் தூக்கி எறிவேன் நான்!” இவளும் பொங்கித் தான் வெடிக்கிறாள். ஆனால், இந்தக் கத்திக் குத்தல் போன்ற தாக்குதல் புரையோடிப் போவது தெரியாமல், இவளைத் தனிமைப் படுத்தும் போக்குகள் தொடருகின்றன. ஏற்கெனவே இவள் சொந்தபந்தங்கள், இடைநிலை வருக்கப் பெண்கள் என்று அன்னியப்படுத்தப்பட்டவளாக இருக்கிறாள். கட்சி சார்ந்தும் இவள் அன்னியப்பட்டுப் போவது வெளிக்குத் தெரியாமலே தொடருகிறது. அவள் தானாக அண்டிய தனித்துவம், தன் சுயமதிப்புக்காக, தற்காப்புக்காகத் தேடிக் கொண்டது. அந்தத் தனித்த ஆளுமையில் கவரப்பட்ட ஆயிரமாயிரம் ஏழை உழைப்பாளர்கள், அவளைத் தன்னிகரில்லாத் தலைவியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். “மணியம்மா! எங்க ஊருக்கு வாங்க! எங்களுக்கும் உங்க சங்கத்துல சேரணும், செங்கொடி குடுங்க!” என்று இவள் செல்லுமிடமெல்லாம் மக்கள் மொய்க்கின்றனர். “என்னப்பா பக்கிரி? படிப்பை மேலே தொடராமல் என்னிடம் வேலை குடுங்கன்னு வரியே? உன்னைத் திருச்சி ஆஸ்டலில் சேர்க்கச் சொல்லட்டுமா?...” “அம்மா, உங்க கூடக் கொஞ்ச நாளேனும் இருக்கேம்மா! என்ன வேலைன்னாலும் குடுங்கம்மா!” இந்த இளைஞர்களுக்குத்தான் இவளிடம் எவ்வளவு நம்பிக்கை! அவன் காலையில் ரயிலடிக்குச் சென்று, ஜனசக்தி இதழ்களைப் பெற்று, வாடிக்கையாளரிடம் கொடுத்துக் காசு வாங்கிக் கொண்டு பத்து மணி சுமாருக்கு அம்மாவின் இருப்பிடத்துக்கு வந்தால், காலை உணவு தோசையோ, உப்புமாவோ அம்மா கொடுக்கிறாள். பிறகு, அவனைக் கட்சிச் சங்க அலுவலாக எங்கு அனுப்பினாலும் சென்று திரும்பி விடுகிறான். அம்மாவின் அலுவலகத்தில்தான் படுக்கை. இன்னோர் இளவல் தியாகராசன். இவன் பொதுவுடைமைக் கட்சியைச் சேராத, திராவிட முன்னேற்றக் கட்சி இளைஞன். அம்மாளிடம் மிகுந்த அபிமானம். அம்மாள் பொதுவுடைமைப் பிரசார வெளியீடுகளை எங்கே கொண்டு செல்லப் பணித்தாலும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான். இவளுடைய மனிதாபிமானத்துக்குக் கட்சி, சமயம் இனம் எதுவுமே கிடையாது. திராவிடக் கட்சியில் ஈடுபாடு கொண்டதால் ஜமாத்தை விட்டு விலக்கம் பெறும் முஸ்லிம் அன்பர் அம்மாளிடம் வந்து ஆலோசனைக் கேட்டுப் பழகுகிறார். “அம்மா...!” என்றழைத்துக் கொண்டு அன்று காலை வில்வனம்படுகை கோபால் வருகிறான். “என்னப்பா கோபால், என்ன சமாசாரம்?” “பட்டாமணியம், அதாம்மா மணலூரு பட்டாமணியம் போயிட்டாரு...!” “என்னது...? சொக்கலிங்கமா? சின்ன வயசு; நல்லாத்தானே இருந்தான்?” “... ஆமாம்மா... பந்தநல்லூரில... தொடுப்பா இருந்த பொண்ணு வீட்டில என்னமோ சாப்பிட்டாராம். பலது சொல்லிக்கிறாங்க. பிளசர் வச்சிக் கொண்டாந்திருக்காங்க.” “அட... பாவி...” இவளை எப்படி எதிரிட்டுக் கொண்டு தனக்கு நிகரில்லை என்று நடந்தான். ‘நீ உன்னாலானதைப் பார்ப்பியோ? சல்லிக்காசு பேராது!’ என்று அவன் பேசிய பேச்சுகள் ஒலிக்கின்றன. பிறர் உழைப்பில் உண்டு கொழுத்த சதைப் பசிக்கு எத்தனை பெண்கள் இரையாயிருப்பர்?... அவன் இளம் மனைவி... உறவினர்... “இரப்பா, கோபால், நானும் வரேன்! சாவு வீட்டுக்குப் போகணும்!” அன்று கோபாலும் அவளும் பேசிக் கொண்டே ரயிலில் அடியக்கமங்கலத்தில் இறங்கி, மணலூருக்கு நடந்து செல்கிறார்கள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|