22

     “சத்தியத்தின் ஜோதியை ஏந்திக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து போனார்” என்று கடை வீதி ரேடியோ அழுகிறது. கூட்டம் கொத்துக் கொத்தாகச் சேர்கிறது. மணி அப்போதுதான் பட்டுக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் வந்து இறங்கியிருக்கிறாள். தியாகப்பிரும்ம உத்ஸ்வ ஆராதனை கொண்டாடும் ரேடியோவில்...

     “என்னப்பா?...”

     “காந்தி செத்துப் போயிட்டாரம்மா! உண்ணாவிரதம் இருந்ததைத்தான் முடிச்சிட்டாரே? எப்படிச் செத்துப் போனாருன்னு தெரியல?” என்று ஒருவன் செய்தி சொல்கிறான்.

     இவள் ரேடியோ பக்கம் செல்கிறாள்.

     “ஓராள் குண்டுபோட்டுக் கொன்னிட்டான். நமஸ்தேன்னு சொல்லி வணக்கமா வந்து, கிட்ட வந்ததும் துப்பாக்கி எடுத்துச் சுட்டுட்டான். ‘ஹே ராமா’னு விழுந்துட்டாரு. கொன்னவனைப் பிடிச்சிட்டாங்களாம்!”

     மணிக்கு மாடி ஏறத் தோன்றவில்லை. உண்மையிலேயே இருள்... முனிசிபாலிட்டுச் சங்கு, யுத்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டு அழுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் மெகாபோனை வைத்துக் கொண்டு “பொதுமக்களே, நமது தேசப்பிதா, நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி, ஒரு பாதகனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் அனைவரும் காலையில் நீராடி உண்ணாவிரதம் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்...” என்று இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

     தொடர்ந்து இந்தத் துயர அலையில், பஜனைகளும், பக்திப் பாடல்களின் ஒலிகளும் வானொலிப் பெட்டி தரும் இறுதி ஊர்வல விவரங்களுமாகப் பொழுது கழிகிறது.

     ஆட்சியாளர் அனைவரும், அஸ்தி கலசம் என்று நாடு முழுவதும் பங்கிட்டுக் கொண்டு வந்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று புனித நீர் நிலைகளில் கரைக்கும் சம்பவத்தை ஒரு தேசீய நிகழ்ச்சியாகச் செய்கின்றனர். சத்தியம் காத்த காந்தியின் மரணத்துக்காக உலகமே கரைகையில், இந்நாட்டின் ஆளும் கட்சியாகப் பரிணமித்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும், அந்த மகாத்மாவைப் பெற்ற பெருமையை ஏற்று, தங்களை அந்த மகாத்மா விட்டுச் சென்ற கொள்கைகளைக் காப்பவர்களாகவே பிரகடனம் செய்து கொள்கின்றனர். ஆனால், ஒப்பந்தப் பத்திரங்களை வீசி எறிந்துவிட்டு உரிமை கோரிய உழவர் பெருமக்களை ஈவிரக்கமின்றிப் பொய் வழக்குகள் போட்டு சட்டத்தின் கண்ணிகளில் அவர்களை மாட்டி, நில உடைமை வர்க்கம் கொடுமைகள் இழைக்கையில் ‘சத்திய வாரிசா’ன அரசு அதிகாரிகளும் அவர்களுக்கே ஆதரவாக இருக்கின்றனர்.

     “அம்மா, மணலூரில ஒரே ரகளையம்மா! பாவி, ராசுமவன அடிச்சே கொன்னிட்டான். போலீசு வந்து வீட்டில் புகுந்து சட்டிபான கூட இல்லாம உடச்சிட்டாங்க. நமுக்கு சொதந்தரம் வராம இருந்தப்ப கூட போலீசுக்காரன் இப்படி அடாவடி பண்ணலம்மா!” என்று ஓலமிடுகிறார்கள்.

     இவள் நாகப்பட்டினத்துக்கு விரைகிறாள்.

     கலெக்டரைப் பார்க்க முடிகிறதா? மனுக்களையும் மகஜர்களையும் எழுதி வைத்துக் கொண்டு காத்திருக்கும் கும்பல்... கதர்ச் சட்டைகளின் ஆதிக்கங்கள் புரிகிறது. முன்பு ஆங்கிலேய நாகரிக சூட்டும் கோட்டும் டையும் அணிந்த கனவான்கள், இன்று குளோஸ் கோட் போன்ற நீண்ட அங்கியும் வெள்ளைச் சராயும் அணிந்திருக்கிறார்கள். இது தேசீயம். காத்துக்கிடந்து கலெக்டரைப் பார்க்க ஒரு நாளாகிறது. ஒரு தமிழ்வாதி சொல்கிறான். கலெக்டர் என்ற பெயர் இனிமேல் “தண்டல் நாயகம்” என்று மாற்றப்படுமாம்.

     மணிக்கு வேடிக்கையாக இருக்கிறது.

     கலெக்டர் அறை இவளுக்குப் பழையதுதான். “என்னம்மா!”

     “ஸார், சுதந்தர சர்க்கார் வந்த பிறகும் இப்படித் துயரமான நடவடிக்கைகள் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சத்தியத்தின் பெயரால் ஆட்சியைப் பற்றியவர்கள்... சத்தியமே வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு, போலீஸ், ஒன்றுமறியாத ஜனங்களை நசுக்கி விடலாமா? கிஸான் சங்கம் - சர்க்கார் - பண்ணை மூன்று பேரும் சேர்ந்து செய்த ஒப்பந்தம் ஓரிடத்திலும் மதிக்கப்படவில்லை. ‘மூன்று படியா? மொத்தக் கண்டு முதலில் பங்கா, கிடையாது. உன்னால் ஆனதைப் பார்’ என்று சொல்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் நியாயம் இதுதானா?”

     இவளுக்கு முகம் சிவக்க, குரலில் சூடு பறக்கிறது. “அம்மா... கொஞ்சம் அமைதியாகப் பேசுங்கள். நீங்கள் எந்த ஊர் பற்றிப் பேசுகிறீர்கள்...”

     “நான் மணலூரில் இருந்து வரேன். சில நாள்களுக்கு முன் தான் குறுவை சாகுபடி சமயம் மயிலாங்குடியில் பெரிய கலவரத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால், உடனே மறுபடியும் அதே கதை. இந்தியாவின் பரம ஏழைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார் காந்திஜி. அவர் மரணம் சத்தியத்தின் மரணமாகி விட்டதா?”

     அவர் சற்றே திணறித்தான் போகிறார்.

     “அம்மா, நீங்கள் இப்ப என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?”

     “நீங்கள் மணலூருக்கு வரவேண்டும். நமக்குச் சுதந்தரம் வந்துவிட்டது. நல்ல நியாயம் கிடைக்கும் என்று ஏழைகள் எதிர்பார்த்தது பொய்யென்று ஆகக் கூடாது. நீங்கள் வந்து இரு தரப்பையும் விசாரித்து நியாயம் வழங்க வேணும்.”

     “கிளார்க்! குறிச்சுக்கோப்பா...”

     சிறிது யோசனை செய்துவிட்டு, “பிப்ரவரி 24-வரேம்மா, காலையில்” என்று கூறுகிறார்.

     மணி வெற்றிப் பெருமிதத்துடன் நடக்கிறாள்.

     கலெக்டரின் விஜயம் சுற்றுவட்டப் பல பண்ணை அதிபதிகளையும் பரபரப்புக்குள்ளாக்குகிறது.

     அவர்கள் அனைவரும் வருகின்றனர். ஆங்காங்கு உள்ள விவசாய சங்கத் தலைவர்களும் வருகிறார்கள். அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மணி நிற்கிறாள். இந்தப் பகுதியில், எத்தனை முயன்றாலும் இந்த உழைப்பாளி மக்களின் ஒற்றுமையையும் நேர்மையையும் குலைக்க முடியாது...

     சென்ற ஆண்டில் இதே தஞ்சையில், முப்பதாயிரம் ஏக்கராவையும் வாரதாரர்களுக்குக் குத்தகைக்கு விடாமல் வெளி ஆள்களை வைத்துச் சாகுபடி செய்வதென்று முடிவு செய்தார்கள். அப்போதும் இதே காங்கிரசின் இடைக்கால அரசு ஆளுகை செய்தது. ஆனால் விவசாயிகள் அஞ்சி விடவில்லை. களத்தில் இறங்கி வெளி ஆள்களை வேலை செய்ய விடாமல் தடுத்த போது, தஞ்சையில் நிலப்பிரபுத்துவம் தகர்கிறது என்று ஆதிக்கம் அலறியது.

     அதெல்லாம் பழைய கதை. இப்போது?

     சரியாகப் பதினோரு மணிக்கு, மணலூர் கம்பிச் சாலையில் ஜீப் வண்டி வருகிறது. போர் முடிந்த பிறகு இந்த வண்டிகள், அரசு அலுவலக அதிகாரிகளைச் சுமக்கின்றன.

     இந்த அதிகாரி, தமிழ் நன்றாகவே பேசுகிறார். எல்லாத் தரப்பு வாதங்களையும் கேட்பது மட்டுமின்றி எழுத்து மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்.

     பண்ணையாளுக்கு மூன்று படி நெல்லும் அரை ரூபாய்க் காசும் கொடுக்க வேண்டும். ஆண் - பெண் கூலியில் வித்தியாசம் இருக்கக் கூடாது. எருக்கூடை சுமப்பது தனியான வேலை. அது வயல் சம்பந்தமான வேலையோடு சேர்ந்ததல்ல. நாற்று நடுவது என்றால், அது மட்டும்தான். அதே போல் ஆண், வைக்கோல் போர் போடுவது தனியான வேலை. இதுபோன்ற உபரியான வேலைகளுக்குத் தனியான கூலி உண்டு. பிரசவம், நோய் போன்ற காலங்களில் ஓர் அடிப்படைக் கூலியைச் செலவுக்காகப் பண்ணை கொடுக்க வேண்டும். குடியிருப்பு இடங்களைக் காலி செய்யச் சொல்லி, அநியாயமாக வழக்குச் சுமந்து கொண்டு சென்று காவலில் வைத்திருக்கும் ஆள்களை விடுதலை செய்ய வேண்டும்.

     பண்ணைகளுக்குப் பேச விஷயம் இல்லை.

     ஆனால், மூன்று படியும் அரை ரூபாயும் அதிகம் என்று வாதாடுகின்றன. கலெக்டர் நடுநிலையில் நின்று இரண்டு படியும் அரை ரூபாயும் என்று தீர்க்கிறார். பின்னர், இவர்கள் முன் வைத்த அனைத்து ஷரத்துகளையும் ஒப்புக் கொள்ளச் செய்து, ஒப்பந்தம் எழுதப் பணிக்கிறார். ஒப்பந்தம் தயாரானதும் எல்லோரிடமும் கையொப்பம் வாங்கி, ஒவ்வொருவரிடமும் ஒரு பிரதியைக் கொடுக்கிறார்.

     காக்கழனியில் வந்து கலெக்டருக்கு வடை பாயாசத்துடன் சாப்பாடு போடுகின்றனர். அவரும், அவருடைய சிப்பந்திகளும் சாப்பிட்டுவிட்டு, மாலையோடு ஜீப் வண்டியிலேறிச் செல்கிறார்கள்.

     அவர்களை மணி, வழியனுப்பிவிட்டுத் திரும்புகையில், திண்ணையில் மணலூரின் இளைய மைனர், பட்டா மணியம் - உட்கார்ந்து இருக்கிறான். இவன் தந்தை காலமாகி விட்டார். இவன் சில்க் ஜிப்பா, குதப்பும் வெற்றிலை, வாசனை என்று அடாவடித்தனத்தின் மொத்த உருவமாகத் திகழ்கிறான். சுவரில் தெறிக்க, வெற்றிலைச் சாற்றை உமிழ்கிறான். இது மணிக்குத்தான்.

     “... கலெக்டரைக் கூப்பிட்டு ஒப்பந்தம் பண்ணிட்டே! ஒரு காசு கொடுக்க முடியாது... இந்தப்... பசங்களுக்கு. கலெக்டர் வந்தா மட்டும் நடந்திடுமோ? ஹேஹ்ஹேன்னானாம்! கலெக்டருக்குமேல, மெட்றாஸ் ஐகோர்ட்டுக்குப் போய் உங்களை ஒண்ணுமில்லாம அடிக்க முடியும்...?”

     “... வாயைக் கொட்டாதேப்பா? அதுக்குமேல எனக்கும் எங்கே போகணும்னு தெரியும்! சத்தியம் பேசும் இங்கே!”

     “சத்தியம் பேசும்!”

     “ஆமாம். பேசுறதைப் பார்க்கிறேன். உங்களை அழுத்தி எழுந்திருக்க முடியாம பண்ணாட்டா நா... நா... நானில்ல!”

     “வீணாச் சவடால் விடாதே! நானும் பார்க்கிறேன்!”

     மணியின் ஆத்திரப் படபடப்பு அடங்க வெகு நேரமாகிறது. அண்ணா வருகிறார்.

     “கிடக்கிறான் மணி, இவனோட என்ன, தெரிஞ்ச குணம்தானே? நீ உள்ளே வா!”

     அப்போதைக்கு அது, அற்பமாகத்தான் தோன்றுகிறது.

     ஆனால், திருப்பம் இவள் எதிர்பாராமல் ஏற்படுகிறது.

     மணி அன்று ரயில் நிலையத்தில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தன் இருப்பிடம் வரும்போதுதான் அவரைப் பார்க்கிறாள். குடுமி வைத்துக் கொண்டு நாமம் போட்ட முகம். நடுத்தர வயசு இருக்கும். பருமனில்லாத, உயர வாகு. மூலைக்கச்ச வேஷ்டி; முழுக்கைச் சட்டை. உள்ளூர்வாசியாகப் பார்த்த முகமாகத் தோன்றவில்லை. என்றாலும் பரிச்சயமானதொரு பார்வை. இவள் நினைவின் மடிப்புகளைத் துழாவுகிறது.

     “நீங்க... மணியம்மாதானே?”

     “ஆமாம்...” என்ற பாவனையில் தலையசைத்து விட்டுப் படியேறி இவள் மாடிக் கதவைத் திறக்கிறாள். “உள்ளே வந்து பேசலாமே? என்ன சமாசாரம்?”

     “வந்து உக்காந்து பேசுறதுக்கில்ல. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகவந்தேன்.”

     குரல், மிக நெருக்கமாக, நட்புறவின் இணக்கம் தோய்ந்ததாக இருக்கிறது.

     “சொல்லலாமே!”

     “உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனா, எனக்கு உங்களை நல்லாத் தெரியும்... நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது... இத்தனை நாளைப் போல இல்ல...!”

     இதைக் கூறிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமலே அவர் விடுவிடுவென்று இறங்கிச் செல்கிறார்.

     மணி முன்புறத்துச் சன்னலருகில் நின்று கீழே பார்க்கிறாள். இன்னும் கடைகள் திறந்து முழுக் கலகலப்பும் வரவில்லை. துடைப்பமும் கையுமாகச் சாக்கடை பெருக்கும் வீராயி வருகிறாள். ஒரு காக்கை வரிச்சட்டத்தில் வந்து குந்துகிறது.

     மின்னல் கீற்றுகளாக எத்தனையோ முகங்கள்; சம்பவங்கள்... இந்த ஜாக்கிரதை என்ற சொல் இவளுக்குப் புதிதில்லை. ஆனால் இப்படித் தீவிரமாகவே தோன்றியதில்லை. இவளைச் சுற்றிக் காலை வாரிவிடும் வஞ்சகங்கள் எப்போதுமே வலைவிரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த ஜாக்கிரதைக்கு... இப்போது புதிய பரிமாணம் இருப்பது போல் தோன்றுகிறது.

     பலருக்கும் வாரண்டுகள் பிறப்பித்து அஞ்சாத வாசத்தில் தள்ளி இருக்கிறது அரசு. நாற்பதுகளின் தொடக்கங்களிலேயே தலைவர்களைச் சிறைபிடித்துப் பிறகு விடுதலை செய்தாலும், அவரவர் ஊர் எல்லைகளை விட்டுத் தாண்டலாகாது என்ற ஆணை பிறப்பித்திருக்கிறது. சொந்த மண்ணில் அன்னியமாக நடமாடுபவர்களும், பெண்களைப் போல் முக்காடும் சேலையும் போட்டுக் கொள்பவர்களும் கூட வியப்புக் குரியவர்களாகத் தோன்றாமல் இயக்கம் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது... ஆனால், இப்போது, இவள்... இவளுக்குக் கண்ணியா? இவளால் இனியொரு வேஷம் புனைய முடியுமா? பைராகி, ஊதுவத்திக்காரர் என்று பொருந்துமா?... இவளுக்கு ஒளிவு மறைவு சமாசாரமே பொருந்தா. எல்லாம் நேருக்கு நேர் போராட்டம்தான். எனவே இவளைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்... இந்த ஆள் தகவல் உளவாளி... ஸி.ஐ.டி.யோ? இவளை எச்சரித்திருப்பதாகக் கொள்ளலாமா?

     மணி மறுபடி நினைவு படுத்திக் கொள்கிறாள்.

     சில மாதங்களுக்கு முன்வரை போராட்டம் தீவிரமாக இருந்தபோது, வரித்துறை, ரெவின்யூ மந்திரி இங்கு நிலவரங்கள் அறிய சுற்றுப் பயணம் வந்தார். அவருக்கு விவரங்கள் கூறச் சென்ற குழுவில் இவளும் இருந்தாள். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம், சீர்காழி எல்லா இடங்களுக்கும் சென்றாள். எங்கு சென்றாலும், ஒரு பெண் ஆண் வேஷத்தில் வருவதனால் ஏற்படும் சலசலப்பில் கிசுகிசுப்பில் ஏளனப் பார்வைகளும், கிண்டல், குத்தல்களும் இவளுக்குப் பரிச்சயமானவை.

     இப்போது... இயக்கம் சம்பந்தமான பல பதிவேடுகள், குறிப்புகள் எல்லாம் இருக்கின்றன. அவை பத்திரமாக்கப் பட வேண்டும்.

     காக்கழனி மருமகனை வரச்சொல்லிச் செய்தி அனுப்புகிறாள். அன்று மாலையே மன்னார்குடிக்குப் பயணமாகிறாள்.