உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 மயிலாப்பூர் டிராமில் வந்திறங்கி, விடுவிடென்று கைப் பெட்டியுடன் மணி ஆலிவர் சாலையிலுள்ள தம்பியின் வீட்டுக்கு வருகையில், குழந்தைகள் சந்தோஷமாகக் கூவுகிறார்கள். "மணி அத்தை!... மணி அத்தை வராம்மா!" "அத்தை வாங்கோ!" என்று வரவேற்கும் வத்சலா எப்படி வளர்ந்து விட்டாள், நெடு நெடுவென்று! பாவாடை சட்டைக்கு மேல் தாவணி போட்டுக் கொண்டு... அடக்கமான நாணப் புன்னகையுடன் இவள் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறாள். தம்பியின் ஆபீஸ் அறையில் அதற்குள் கலகலப்பு கூடிவிட்டிருக்கிறது. ..."சௌக்கியமா?" என்று கேட்டுக் கொண்டு எதிர்ப்படும் இளைஞர் தெரிந்தவன் தான். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இருப்பவன். ஒத்துழையாமை - நாள்களில் சில ஆண்டுகளுக்கு முன், இங்கிருந்து தான் இரகசிய அறிக்கைகள் 'சைக்ளோஸ்டைல்' செய்து வெளியே பல இடங்கலிலும் பரப்பும் பணியைச் செய்து வந்தான். போலீஸ் ஒரு தரம் பிடிக்க சோதனைக்கு வந்த போது, குழந்தைகள் மட்டுமே இருந்தார்களாம். வத்சலா?... அப்போதே இதெல்லாம் சொன்னாள்... எனவே அவளைப் பார்ப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. "அக்கா சௌக்கியமா?" என்று விசாரித்து விட்டு தம்பி மனைவி காபி கலந்து கொண்டு வருகிறாள். அம்மா உள்ளே ஜெபம் செய்கிறாள் போலும்! எட்டிப் பார்க்கவில்லை. மணியும் தான் வந்த காரியம் தான் முக்கியம் என்ற நிலையில், "வச்சு, என்னோடு மாடவீதி வரை வாம்மா, சித்த போயிட்டு வரலாம்!" என்று அழைக்கிறாள். மயிலாப்பூரின் வடக்கு மாட வீதியில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வீடு இருக்கிறதென்பதை அவள் அறிந்திருக்கிறாள். நேராக அவரைச் சந்தித்துக் கேட்கவே இப்போது இங்கே மணி புறப்பட்டு வந்திருக்கிறாள். அழிபோட்ட நீண்ட வராந்தா. கதவு திறந்து தான் இருக்கிறது. வாசல் பெஞ்சில் யார் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள். காலை மணி ஒன்பது ஆகிறது என்பதை அடுத்தாற்போலிருந்த முன்னறையில் கடிகாரம் அறிவிக்கிறது. சுவரில் காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட் ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. பிரம்பு நாற்காலி ஒன்றில் இவள் அமர்ந்து கொள்கிறாள். வத்சலா ஜன்னலின் பக்கம் நிற்கிறாள். எதிரே காந்தி படத்தில் கதர் மாலை புதிய வெண்மையுடன் துலங்குவதைப் பார்த்த வண்ணம், மணி சொல்ல வேண்டிய கருத்துக்களை அசை போடுகிறாள். "வாங்க, வாங்கம்மா! எப்ப வந்தாப்ல மெட்றாசுக்கு?" மணி எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கிறாள். "இன்னிக்குத்தான் காலம வந்தேன்... நேராக வீட்டுக்கு வரேன்...?" "சௌகரியந்தானே?... என்ன விசேஷம் திடீர்னு" மணி சிறிது நேரம் மௌனமாக இருக்கிறாள். "போன வாரம் கமிட்டிக் கூட்டம் நடந்தது..." "ஆமா, டிஸ்டிரிக்ட் போர்ட் எலக்ஷன் வருதில்ல? நாம நாடிமுத்துப் பிள்ளையை பிரசிடன்ட் பதவிக்கு நிக்க வைக்கிறதா தீர்மானம் கூட மூவாயி, உறுதியாயிட்டது. ஏதானும் ஆட்சேபம்... வந்ததோ?" "அதெல்லாம் இல்ல. அவர் ஜஸ்டிஸ் கட்சியா இருந்தார் இல்லையா? தேவலையா? தேசீய பரம்பரையுள்ளவங்க இல்லையே?..." "இருந்தார், இப்ப இல்லே. நமக்கும் செல்வாக்கும், பலமும் கூடணும்னா, இந்த மாதிரி தேசீய பரம்பரை பார்த்து முடியுமா? காங்கிரஸுக்கே தேசியமான ஒரு செல்வாக்கு காந்திக்குப் பிறகு தான் வந்தது. மோதிலால் 'இங்கிலீஷ்' செல்வாக்கை விட்டுவிட்டுத் தான் தேசியத்துக்கு வந்தார். அப்படி, பிள்ளைவாளும் காங்கிரஸுக்கு வந்தான பிறகு, அது பற்றி என்ன பேச்சு?" மணி வாயடைத்துப் போகிறாள். நேற்று வரை தேசியத்துக்கு விரோதமான ஒரு கட்சியில் இருந்தவர். இந்த தேசத்தில் வேரோடிக் கிடக்கும் அறியாமை, வறுமை இவற்றை எதிர்த்து மக்களின் பக்கம் நின்று தேசீய எழுச்சியை உண்டாக்காமல் பகதூர் பட்டங்களுக்காக, வெள்ளைக்காரனுக்கு முன் மாலையிட்டு மண்டி போட்டவர்கள். இவர்கள் இன்று காங்கிரஸில் பதவிக்காக வந்து சேருகிறார்கள்... "நீங்க கூட டிஸ்டிரிக்ட் போர்ட் மெம்பராக நிக்கிறதா ஒரு கருத்தை வெளியிட்டதாகத் தெரிகிறது. நேத்துக்காலம, திருவாரூர்லேந்து ஆள் வந்தது. ஆனா, உங்க தோப்பில, கள் குத்தகைக்கு விட்டிருக்கிறீங்க. நீங்க மாகாண கமிட்டில இருக்கறதே சரியில்லேம்மா?... ஏம்மா, மதுவிலக்கு காங்கிரசுக்கு உயிர் மூச்சு. உங்களுக்கு இது தெரியாதா? அப்படி இருக்கறப்ப, உங்க தென்னந்தோப்பெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு, காங்கிரஸ் மாகாண கமிட்டி வரை வந்துட்டீங்க. தப்பு, யார் செய்தாலும் தப்புதானே?" அவர் குரல் உயருகிறது. இவள் இறுகிப் போகிறாள். "இது... அபத்தம், ஏனென்றால், எனக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை வைத்து ஒரே வருஷம் தானாகிறது. அதிகம் இல்லை. எனக்குச் சொந்தமாக வரி க்ட்டும் நிலம் எட்டு மாத்தான். கள் கலயங்களை உடைத்துப் போடுபவள் நான். எங்கள் ஊருக்கு வந்து சேரியில் கேட்டுப் பாருங்கள், உண்மை தெரியும். மதுவிலக்கும், அரிசன முன்னேற்றமும், காங்கிரஸின் இரண்டு உயிரான கொள்கைகள், மகாத்மாவின் இலட்சியங்கள் என்பதை நான் பூரணமாக உணர்ந்து நம்பி செயல்படுபவள். நான் கள் குத்தகைக்கு, மரத்தை விட்டிருக்கேன் என்பது அபாண்டம்..." "அதென்னமோ அம்மா, எனக்குத் தெரியாது. மாகாண காங்கிரஸ் தலைவர் என்ற நிலையில் நான் எப்படி முடிவு செய்யணுமோ அப்படிச் செய்திருக்கிறேன். உங்க மரங்கள் குத்தகைக்கு விட்டிருக்கிறதா எனக்கு ஆதாரபூர்வமா தாலுகா கமிட்டிலேந்தே சமாசாரம் வந்திருக்கு. உங்ககிட்டே எனக்கென்னம்மா விரோதம்?..." மணிக்கு இப்போதுதான் இந்தச் சூழ்ச்சிகள் புரிகின்றன. "...அந்த நிலம் என் தம்பியின் சொத்து. பிரஸிடென்ட் வாள், எனக்கும் அதுக்கும் இப்ப சம்பந்தமில்லை. எனக்குன்னு இருக்கிறது எட்டு மா. அதில் இப்பத்தான் தென்னங்கன்று வச்சிருக்குறேன். நான் கள்ளுக்கலயம் கண்டா, கல் எடுத்து உடைக்கிறேன். என் பேரில இப்படி அபாண்டமா?..." "அம்மா அப்படிப் பார்த்தாலும், நீங்க இந்த மெம்பர் எலக்ஷனுக்கு நிக்க முடியாது. ஏன்னா அதுக்குள்ள அளவு வரி நீங்க கட்டக்கூடியவரில்லைன்னு ஆவுது... இந்த ஜில்லா போர்டுங்கறது, ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நபரைத் தான் வைக்கணும்ங்கறது..." மணி, தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்கிறாள். "எனக்குப் பதவி ஒரு துரும்புக்குச் சமானம். அதனால் ஜனங்களுக்கு இன்னும் பிரயோசனமா எதானும் செய்யலாமோங்கறதுதான் என் லட்சியம். ஆனால், என் கண்ணியம், நேர்மை, சத்தியம் இதுங்க மேல, ஒரு தூசு இருப்பதாக நீங்க நினைக்கிறது கூடச் சரியில்லை. என்னை நீங்க புரிஞ்சுக்கல... நான் வரேன். இப்படி மனசுவிட்டுச் சொன்னதுக்கு வந்தனம்..." மணி விடு விடென்று படியிறங்கி வருகிறாள். காங்கிரஸ் என்பது, தேசீய எழுச்சியை உண்டாக்கும் ஸ்தாபனமில்லையா? ஆள் கட்டும் பணக்கட்டும் கொண்டு ஏழை மக்களை நசுக்கும் நிலச்சுவான்தார் ஆதிக்கம் செலுத்துவதனால் காங்கிரஸ் மேன்மை பெறுமா? ...ஆனால், இவையனைத்தும் சூழ்ச்சி என்று புரிகிறது. இந்தச் சூழ்ச்சி வளையத்தில் இவள் தம்பி-பெற்றவள் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது. இவள் தன்னந்தனியே நின்று ஓர் இலட்சியத்துக்காகப் போராடி வாழக் கூடாது; செல்வாக்கும் பெறலாகாது. அவன் ஆண். தம்பியானாலும் தலைவன். அம்மா, பிள்ளைக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அந்த அயோக்கிய சிகாமணி பட்டாமணியத்துக்கு முன் இவளை மட்டந்தட்டி நடுத்தெருவில் நிறுத்தினார்கள்... என்ன அநியாயம்! அவன் மரத்தில் கள்ளுப் பானையைக் கட்டி, இவள் காங்கிரஸ் செல்வாக்கை ஒழிக்க, அந்தத் தம்பியே துணை...! உள்ளம் துடிக்கிறது; உதடுகள் துடிக்கின்றன. கோச் வண்டி, கார்கள் என்று மாடவீதியைச் சுறுசுறுப்பாக்கி இருக்கின்றன. பள்ளிக்கூடம், அலுவலகங்கள் செல்லும் நேரம். கபாலி கோயில் கோபுரம் கம்பீரமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதைச் சுற்றி இருக்கும் கும்பல், பொய்யர்கள், அரசியல் சூதாடிகள் நிறைந்த அகங்காரக் கும்பல். கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு சட்டம் ஒன்றைப் பற்றிக் கொண்டு பொய்யின் புகழ் பாடும் கும்பல். கறுப்பு... கறுப்பு, சத்தியத்தைக் கொன்று விட்டதன் அடையாளச் சின்னம்... இவள், வீடு திரும்புகையில் தம்பி கோர்ட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இவள் அவன் முன் நின்று நிமிர்ந்து பார்த்துப் பேசவில்லை. அம்மா தான் உருகிக் கண்ணீர் வடிக்கிறாள். "மணி, நீரடிச்சு நீர் விலகுமா? என்னம்மா வீம்பு? அவந்தான் சித்த புடிவாதமா இருக்கான்னா, நீயும் அவங்கிட்ட வீம்பா இருக்கலாமா? அந்தப் பாவி குத்தகைப் பணமே அனுப்பல. உள்ளூற உங்கிட்ட அப்படி நடந்துட்டமேன்னு உருகிப் போறான்... இப்ப கோர்ட்டில போடறேன், படவா ராஸ்கல்னு கத்தறான். அவனுக மூர்க்கங்கள்; முரடன்கள்; கண்ட சகதியிலும் விழுந்து புரண்டுட்டு, பரிமளம் பூசிண்டு சபைக்கு வர கும்பல். ஆகா, ஊகான்னான். ஒரு லெட்டருக்குப் பதில் இல்லை. அவனுக்குச் சரியா நாம போக முடியுமா? அன்னிக்கே நீ கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இத்தனைக்கு வருமா?..." மணி பேசவில்லை. "ஆச்சு, இந்த வருஷத்தோடு தீந்துவிடும். சித்திரைக்கப்புறம், அதை நீயே வச்சிண்டு பாத்துக்கோ அக்கான்னு சொல்லக் கூசறான். எங்கிட்ட நீ சொல்லுன்னு சொல்லிட்டுத்தான் போறான்..." "என் செல்வாக்கில் ஒரு கரும்புள்ளியைக் குத்த, குத்தகையைப் பிடுங்கி அவங்கிட்டக் குடுத்து, கள் பானைய மரத்தில கட்டி வச்சுதுமல்லாம, இது வேற... என்னைப் பொருத்தவரை, பட்டாமணியம் கும்பல், காங்கிரஸ் கும்பல், அண்ணன் தம்பி பாசங்கள் எல்லாம் ஒண்ணு தான்!..." மணி பெருமூச்செறிகிறாள். தம்பியுடன் பேசவில்லை. அன்றே ஊர் திரும்பக் கிளம்பி விடுகிறாள். எழும்பூர் ரயில் நிலையத்துக்கருகே டிராமை விட்டிறங்கி நடக்கையில், அந்த இளம் பிள்ளையாண்டான் ராமுவைப் பார்க்கிறாள். அவன் படிக்கிறானா, தொழில் செய்கிறானா என்று நிச்சயமாக இவளுக்குத் தெரியாது... ஆனால் காங்கிரஸில் சேர்ந்து தீவிரமாக உழைக்கும் பிள்ளை. இவள் பின்னே வந்து, 'நமஸ்காரம்' என்று குரல் கொடுக்கிறான். புன்னகையுடன், "எங்கே வந்துட்டு உடனே திரும்பறாப்பல...?" என்று விசாரிக்கிறான். மணி பெஞ்சியில் உட்கார்ந்து, சுருக்கமாகத் தென்னமரக் குத்தகை, ஜஸ்டிஸ் கட்சி ஆள்களின் காங்கிரஸ் ஆதிக்கம் என்று விவரிக்கிறாள். மனவருத்தம் குரலில் முட்டிக் கொண்டிருக்கிறது. "இப்படித்தானம்மா பொதுவாக நடப்பு எங்கேயும் மோசமாயிருக்கு. இதுக்காக நீங்கள் மனசு தளர்ந்து விட வேண்டாம். நீங்க விவசாயத் தொழிலாளர் மத்தியில, ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்க முயற்சி செய்வதை நிறுத்தி விட வேண்டாம். காங்கிரஸ் இப்படி விளக்கெண்ணெயாக இருந்து விட முடியாது... இந்த மிட்டா மிராசு ஆதிக்கங்களைத் தகர்க்க நாம் தொழிற்சங்கங்களைக் கூட்ட வேணும். அதுதான் நமக்குப் பலம். தொழிற்சங்கங்கள் செயல்படாமல், தேசீய விடுதலை வரவே வராது. நீங்க இந்தச் சின்னச் சின்ன சலசலப்புக்கெல்லாம் தளர்ந்துவிட வேண்டாம்." மணிக்கு ஆறுதலாக இருக்கிறது. அவளை விடச் சிறிய பிள்ளை, ஆனால் ஆணாக இருப்பதாலேயே, சுதந்தரமாகச் செயல்படவும் சிந்திக்கவும், சந்தர்ப்பங்களை நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவும் முன் நிற்கிறாள். இவனுடைய வயசில், இவள்... வெறும் கூட்டுப் புழுவாகவே இருந்தாள். இளமையின் வேகங்களும் அரும்பும் ஆர்வங்களும், இவளுக்கு மூடநம்பிக்கைகளின் பிணிப்பில், அன்றே மாய்ந்துவிட்டன. இளமை மடிந்து விட்ட காலத்தில் எஞ்சியுள்ள ஆர்வத் துளிகளை, இவள் இலட்சிய வேகங்களே வீரியமிக்கதாகச் செய்யக்கூடும்... ஆம், துவள வேண்டாம்... அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில், வைத்தீசுவரன் கோயிலுக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒரு குடும்பம் இருக்கிறது. இவள் ஏறிப் படுத்துக் கொண்டு நன்கு உறங்குகிறாள். காலையில், திருவாரூர் வண்டி ஏறி, நிலையத்தில் வந்து இறங்குகிறாள். காக்கழனிக்கு வரும்போது, உச்சியாகும் நேரம்... அண்ணா, திண்ணையை விட்டு உள்ளே வந்திருக்கவில்லை. பரம்பரையாக கிராம மணியம். "ஒழியட்டும், மன்னி! எல்லாரும் திட்டமிட்டு சதி பண்ணிருக்கா..." கிணற்றடியில் துவைத்துக் குளிக்கிறாள். புளிக்கொட்டை எடுக்கிறாள் ஒரு குடியானவப் பெண். பின்பனிக்கால வெயிலும் குளிர் நீரும் சுகமாக இருக்கிறது. இந்த மன்னி, இவளைச் சிறிது கூட விகற்பமில்லாமல் பாராட்டி அரவணைப்பவள். இலை போட்டு உணவு பரிமாறுகிறாள். "உன் நேர்மையும் தைரியமும் யாருக்கு இருக்கு?... தப்பைத் தப்புன்னு சொல்லிட்டுத் தைரியமாகப் புறப்படற தைரியம் யாருக்கு இருக்கு? நான் இன்னிக்குச் சொல்றேன். முன்ன ஒரு நா நாணக்குடி ஜோசியர் வந்தப்ப, அண்ணா ஜாதகத்தக் காட்ட, பழைய புஸ்தகத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார். அதுல உன்னோடதும் இருந்தாப்பில இருக்கு. ஜோசியர் பார்த்துட்டு... இந்த ஜாதகருக்கு, முப்பத்து மூணு வயசில மரணம் வந்துடறதே'ன்னு சொன்னார் திடுக்கிட்டாப்பல. "அது மணி ஜாதகம்னா...?ன்னார் அண்ணா. அவர் சொன்னாச் சொன்னது. ஜோசியாள், கெட்டது இருந்தாச் சொல்லமாட்டா. நல்லதுதான் வாக்குல சொல்லுவா. எனக்கு அது உறுத்திண்டே இருந்தது. நீ இப்படி அந்த ஜன்மாவை ஒழிச்சிட்டு இப்படி வேஷ்டியும் கிராப்புமா வந்து நின்னப்ப சந்தோஷப்பட்டேன். மணி, நீ ஆயுளோட இருக்கணும். நீ ஊருக்கு உபகாரம் பண்ணிண்டு இருக்கே. அதை வெளில சொல்லிக்க வேண்டாம். தானே வெளில தெரியும். மணி, பொண்ணாப் பிறந்திட்டோம், இந்த வாசற்படிக்குள்ளியே என்ன அதிகாரம் இருக்கு? உக்காருன்னா உக்காரணும். நில்லுன்னா நிக்கணும்... இதில என்ன இருக்கு?... நீ ஆயுசோட இருக்கணும்மா!" பரங்கியும் பூசணியும் போட்டுச் சமைத்த குழம்பை ஊற்றுகிறாள். "புதுசா வடாம் போட்டேன்" என்று பொரித்த வடகத்தைப் போட்டு இவள் சுவைத்து உண்பதை வாஞ்சையுடன் பார்க்கிறாள். மணிக்குக் கண்கள் கசிகின்றன. "மன்னி, நீ என்னிடம் காட்டும் அன்பு ஜன சமூகம் முழுவதும் காட்டறதா எனக்குப் படறது." உணர்ச்சிப் பெருக்கில் தொண்டை கம்முகிறது. பச்சைக் குத்தும் பெரிய சிவப்புக்கல் காது ஓலையும் குங்குமப் பொட்டுமாக, அந்த உறவினள் இவளுக்குத் தாயாகத் தோன்றுகிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|