உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 காந்திஜி மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் ரயிலில் ஏறிக் காலையில் தஞ்சை வருகையில் கூட்டம் ரயில் நிலையத்தில் நிலை கொள்ளாமலிருக்கிறது. சத்யமூர்த்தி, இராஜாஜி... என்று தலைவர்களைக் காண்பதில் ஒரு பரபரப்பு. மணி, சிமிளி சாம்பசிவம் அய்யருடன் வந்திருக்கிறாள். கூட்டத்தின் நடுவே, மெலிந்த வடிவினராய் காந்தி வருவதைப் பார்க்கிறாள். இதற்கு முன் சில வருஷங்களுக்கு முன்... ஐந்து வருஷங்கள் என்று நினைவு. அவர் இங்கு தென்னாட்டுக்கு வந்த போதுதான் பெரிய தலைப்பா, அங்கி, மேல் உத்தரீயம், எட்டு முழ வேட்டி என்ற உடைகளைத் துறந்து, 'நான்கு முழத்துணியே உடுப்பேன்' என்று விரதம் பூண்டார். அந்த நினைவில் மணி மெய்சிலிர்த்தாற்போல் நிற்கிறாள். கச்சையாக அணிந்த நான்கு முழக் கதர்த் துணி, நேரம் காட்டும் கடிகாரம் அந்தக் கச்சை இடுப்பில் தெரிகிறது. காலில் முரட்டுச் செருப்பு. அத்தகைய செருப்பை மணி இப்போது அணிந்திருக்கிறாள். இடையிலுங்கூட கதர்ச் சேலை; கதர் இரவிக்கை. பழைமைகளை முறித்து எறிந்து புதிய உருவம் எடுத்திருக்கிறாள். "மணி, இங்கே கூட்டத்தில் இடித்துக் கொண்டு நாம் பார்க்க முடியாது. உக்கடை ஹவுசில் தான் தங்கப் போகிறாராம். நாம் போய்ப் பார்க்கலாம்!" என்று சாம்பசிவம் தெரிவிக்கிறார். இவர்கள் காலை பதினோரு மணியிலிருந்து அங்கே காத்திருக்கிறார்கள். 'ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்' மோட்டாரிலும், வில் வண்டிகளிலும் மகாத்மாஜியைப் பார்த்துப் பேச வருகிறார்கள். ஒருவர் வயதான தாயாரை அழைத்து வருகிறார். கதர் மாலைகள் கனி வகைகள் அடங்கிய தட்டுகள், கற்கண்டு என்று காணிக்கைகள். சாம்பசிவமும் நல்ல மாதுளை, கொய்யா, வாழைக்கனிகள் வைத்த தட்டுடன் மணியை அழைத்துக் கொண்டு அனுமதி பெற்று முன்னே செல்கிறார். "இவள் என் சகோதரி. காங்கிரசில் சேர்ந்து சேவை செய்ய ஆசைப்படுகிறாள்..." அந்த மொழிகளைக் கறுவலாக ஓர் இளம்பிள்ளை ஹிந்தியில் மொழி பெயர்க்கிறான். காந்திஜி, "அச்சா" என்று மொழிந்து புன்னகை செய்கிறார். "கதர்ப் பிரசாரமும், தீண்டாமைப் பிரசாரமும் உங்களுக்கு ஏற்றது. பெண்கள் விரும்பி அணியும் கதர் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். பெண்கள் நிறைய பேர் இந்தத் தேசீய இயக்கத்தில் சேர வரும் போது நாம் சுயச் சார்பு உள்ளவர்களாக ஆவோம்..." மணி கைகுவித்து ஏற்கிறாள். இது புதியதோர் உவகையையும், ஊக்கத்தையும் அவளுக்கு அளிக்கிறது. சனாதனக் கும்பலில் இருந்து மீண்டு விட்டாள். ஆவணி மாதத் தாழை மணமாய் புரட்டாசியின் புதிய பசுமைகளாய் அந்தச் சூழலே தேசீயத்தை உணர்விக்கிறது. மொட மொடக்கும் முரட்டுக் கதர், வெண்மை, எளிமை, தூய்மை - வைரங்களும் தங்கம், பளபளக்கும் பட்டு பகட்டுகளும் நுழையக் கூசும் எளிமை. இதுதான் ஆன்மிகமாகவும் இருக்க முடியும். ஆணுக்கு ஒன்று; பெண்ணுக்கு ஒன்று என்று பிரிக்கும் சனாதனச் சாமிகளிடம் ஆன்மிகம் இருக்க முடியாது. மணியின் வாழ்வில் ஒரு புதிய ஏடு திரும்புகிறது. நாட்கள் மாதங்களாய் விரைந்து கழிகின்றன. இத்தனை காலமாக இவளுடைய நோக்கில் ஆழமாகப் பதியாமல் இருந்த பல விஷயங்கள் புதிய பொருளுடன் இவள் அறிவைத் தூண்டுகின்றன. அதிகாலையில் எழுந்து நீராடிய பின் ஊர் ஓரத் தெருக்களை எல்லாம் சுற்றும் வகையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுத்தமும் சுகாதாரமும் போதிக்கிறாள். தீண்டாமை ஒழிய வேண்டுமே? மது விலக்குப் பிரசாரமும் செய்கிறாள். பிறகு ராட்டையில் நூல் நூற்கிறாள். ஊரில் காங்கிரஸ் என்ற அலையைத் தோற்றுவிக்க ஜாதி பாராட்டா வகையில் சபாபதி, அழகுசுந்தரம் என்று பல இளைஞர்கள் பழகுகிறார்கள். சொந்த பந்தம் என்ற வட்டத்திலும் காங்கிரஸ் என்பது ஆண்கள் சமாசாரம். பெண்கள் கல்யாணங்களை, சீர் செய்நேர்த்திகளை, முத்துப்பேட்டைப் புடவைகளை, கல் இழைத்த தங்க நகைகளைப் பற்றிப் பேசுவதுதான் இயல்பு என்ற வரைமுறையை விட்டு, மணி ஆண்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு காங்கிரஸ் கொள்கை, தேசீயம், சமூகம் என்று பேசலானாள். இவளுக்கு இதே சொந்த பந்தங்களிடையே காங்கிரஸ் மிராசு குடும்பங்களிடையே மதிப்பு மேவுகிறது. வண்டி கட்டிக் கொண்டு ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட தமையன், தம்பி, சிற்றப்பா, பெரியப்பா என்ற பண்ணைக் குடும்பங்களுக்கு இந்தக் காங்கிரஸ் உறவு கொண்டே செல்கிறாள். அங்கத்தினர் சேர்ப்பதும் கடைவீதிகளில் உண்டியல் குலுக்கி நிதி சேர்ப்பதும் இந்தக் காங்கிரஸ்காரிக்கும் பழக்கமாகிறது. இந்த வகையில் இவள் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருக்கையில் தான் காங்கிரஸ் சுகஜீவன்களிடையே இந்தப் பேச்சு அடிபடுகிறது. "மாயவரத்தில் அன்னிக்கு காந்தியப் பார்க்க வந்திருந்தவ யார் தெரியுமாண்ணா? சத்தியமூர்த்தி, சீனிவாசய்யர், எல்லாரும் இருக்கறச்சே இவ வந்து ஷோக்கா வில்வண்டியில் வந்திறங்கினா. இதென்னடா கர்மம், கிரகசாரம், இவாளும் காந்தி காங்கிரஸுன்னு புறப்பட்டுட்டாப்பல இருக்கேன்னு தூக்கி வாரிப் போட்டுது!" மணிக்கு மூளையில் பொட்டென்று ஒரு மின்வெட்டு அதிர்ச்சி உண்டாகிறது. "ஏன் மாமா தாசின்னா அவா மனுஷா இல்லையா?" "ஆகா! மனுஷா தான்!" என்று நக்கலாகக் கூறிவிட்டு அவர் மூக்குப் பொடியைத் திணித்துக் கொண்டு வைரக் கடுக்கன் பளிச்சிடத் தலையைக் குலுக்குகிறார். "அவளைப் பார்க்கத்தான் அந்த மைனர் பிள்ளையாண்டான், ரைஸ் மில்காரன் எல்லாரும் வந்திருந்தான்! காந்தியப் பார்க்கவா?" இது இன்னொரு சுகஜீவனம். "இது என்ன நியாயம்? அவங்க வேலையத்துப் போய் அவளைப் பாக்க வந்தாங்கறதுக்காக அவள் காந்தியைப் பார்க்க வந்தது தப்பாகுமா? எல்லாரும் சமம்ன்னு பேசுகிறீர்கள். அவள் அப்ப மனுஷியில்லையா?" "அதெப்படி ஆகும் மணி? இவளுக்குக் காந்தியப் பார்த்து என்ன ஆகணும்? அவாவாளுக்குப் பிராசீன தர்மன்னு ஒண்ணிருக்கு. பொட்டுக் கட்டிண்டு வழி வழியா குலாசாரம் தர்மமா பாவிக்கணும். காந்திகிட்ட இவாளுக்கு என்ன வேலை...?" மணிக்கு எரிச்சல் மண்டுகிறது. "காந்தி அவங்களை ஏன் வந்தீங்கன்னு கேட்டாரா?" "அவர் கேட்பாரா? இவா போனது பிசகு... அப்படித் தான் இந்த அசத்து... சுப்பிணி இருக்கே, அது வீணாப் போனவாள்ளாம், ஏன் பொண்டாட்டி செத்தவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு கேட்டுது. அதுக்குக் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?" "என்ன சொன்னார்?" "புருஷாளும் பொம்மனாட்டிகள் வைதவ்யம் காப்பது போல், ஒரு தரம் கல்யாணம் பண்ணிண்டு தவறிப் போயிட்டாள்னா மறுபடி சம்சாரம் வேண்டாம்னு அபிப்பிராயப்படறதாச் சொன்னார். அவர் அப்படித்தான் சொல்வார். ஆனாக்க குழந்தைகள் இருந்தா காப்பாத்தறது ஆரு? அதுக்குக் கல்யாணம் தான் பண்ணிக்கணும். குழந்தைகள் இல்லேன்னாலும் அவா வம்சம் வளரணுமே, கல்யாணம் பண்ணிக்கணும். ஏதோ ஒரு கோத்திரத்துக்குச் சொந்தமாய்ப் போட்டு வந்தவளை வேற கோத்திரத்துக்கு இழுக்கிறதா? சிவ சிவா! காந்தி கீதை படிக்கிறார். உபநிஷத் வேதம் தெரிஞ்சவர் சரி. அதுக்காக பள்ளு பறைகளைச் சேத்துக்க முடியுமா? வீணாப் போனவா தலை வளத்துண்டு வேதம் சொல்லப் பொறப்பட்டாப்பல தான்..." பட்டு ப்ட்டென்று தலையில் அடிக்கும் சொற்கள் இவை. "அதுசரி, மாமா, ஆதிசங்கராசாரியர், மனீஷா பஞ்சகம் சொல்லவில்லையா? புலையன் - தீண்டாதவன்னா, இந்த உடம்பா, ஆத்மாவான்னு கேள்வி வந்தப்ப, ஆத்மாவுக்கு வேற்றுமை இல்லைன்னுதானே சொன்னார்? இப்ப, ஆண் வேற பெண் வேறன்னு சொல்லலாமா? இந்த ஆண்கள் ஒழுக்கமாக இருந்தால் தாசிகுலம் ஏற்பட்டு இருக்குமா?" "மணி, இதென்ன விதண்டாவாதம் பண்றே? பள்ளுப்பறையைக் கோவிலில் விட்டுப் பார்க்கட்டும்? இவா போங்கோன்னாலும் அவனுக அடி வைக்க மாட்டானுக. நந்தனார் சரித்திரத்தில் என்ன சொல்லி இருக்கு, நந்தனை அக்னிப் பிரவேசம் பண்ண வச்சு, வேதப் பிராம்மணனா ஆக்கினப்புறம் சுவாமி ஏத்துண்டார்!... சுவாமி அப்படியே ஏத்துக்கல!... ஹாஹா..." இவளை மடக்கிவிட்ட சிரிப்பு அது. இதெல்லாம் உண்மையாக இருக்குமா? அக்கினிப் பிரவேசம் பண்ணினால் கரிந்து போயிருப்பான். வெந்து சாம்பலாயிருப்பான். பிராம்மணர்கள் சொல்லும் இந்தக் கதை எவ்வளவுக்குச் சரி? மணியினால் இந்த முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அக்கா அத்திம்பேர் தஞ்சாவூரில் குடும்பம் போட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்துப் பிள்ளைப்பேறு, குடும்பப் பாரம், நிலத்து வருமானம் காணமுடியாத குடும்பத் தலைவர் என்ற பிரச்னைகளில் அவள் உடம்பு நலிந்து விட்டது. அம்மா அடிக்கடி அந்த மகளைப் பார்க்கப் போய்விடுகிறாள். மணி மணலூரிலேயே மும்முரமாகக் காங்கிரஸ் இயக்கத்தைப் பலப்படுத்துகிறாள். காளியம்மன் கோயிலுக்கு எதிரே, கொடி நட்டுக் கூட்டம் போடுகிறாள். தொப்பளாம்புலியூரில் இருந்தும் காக்கழனியில் இருந்தும் பலர் வந்து பேசுகிறார்கள். அந்தக் கூட்டத்துக்குச் சேரியில் இருந்து பலரையும், குஞ்சு குழந்தைகளையும் இவள் திரட்டிக் கொண்டு வருகிறாள். ஐயர் வீட்டு அம்மாளைக் கண்டதுமே அந்தப் பஞ்சைக் குழந்தைகள் ஒதுங்கிப் போகின்றன. இவள் கூட்டத்தில் நின்று முழங்குகிறாள். "நீங்கள் ஏன் ஒதுங்கிப் போகிறீர்கள்? இப்படி ஒதுக்கி வைத்தது அநியாயமா இத்தனை நாளா நடந்திருக்கு. உங்களுக்கெல்லாம் மகாத்மா காந்திங்கறவரைத் தெரியுமா? அவர் பெரிய பதவியில் இருக்க வேண்டியவர். சீமையில் வெள்ளைக்காரருக்குச் சமமா படிச்சவர். ஆனா, நம் சொந்த ஜனங்கள், தங்களுக்குள்ளே இப்படி ஒரு பிரிவை வச்சிட்டிருப்பதற்காக வருத்தப்பட்டு, சேரி ஜனங்களை, பள்ளுப்பறைன்னு கேவலம் சொல்லக் கூடாது. அவர்கள், 'ஹரிஜனங்கள்' 'கடவுளின் மக்கள்'னு சொல்றார். நீங்கள் எல்லாரும் படிக்கணும், சுத்தமாக இருக்கணும். மொத்தமாக எல்லாருக்கும் உள்ள உரிமைகள் உங்களுக்கும் உண்டு. தனிக்குளம், தனிக் கிணறு இதெல்லாம் போகணும்... இப்படியெல்லாம் நாம் ஒத்துமையா இருந்தாத்தான்... வெள்ளைக்காரன் ஆட்சியை நாம எதிர்க்கலாம், சுயராஜ்யம் வரும். இதைக் கேட்கறதுக்காகவே காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கு. நீங்க எல்லாரும் இதில் சேரணும்... வந்தே மாதரம்...! சொல்லுங்க, எல்லாரும் பலமா!" குரல்கள் எழுப்பியவர்கள், முருகையா, அழகு சுந்தரம் ஆகியவர் தாம்! மணலூரில் இவர்கள் குடும்பத்தைத் தவிர, பெரிய நில உடமைக்காரர் பட்டாமணியம் பிள்ளை குடும்பம் செல்வாக்கானது. பண்ணை பார்க்கும் சேரிக் குடும்பங்கள் இவர்கள் வகையிலும் பிள்ளை வகையிலும் கடமைப்பட்டிருந்தன. பிள்ளை குடும்பம் அண்ணன் தம்பி என்று பிரிவினைப்பட்டிருந்தாலும் பட்டாமணியம், சாதாரண ஆளில்லை என்று பெயரெடுத்தவர். மணியம் பொறுப்பும் இருந்ததால், ஊரை - மக்களை ஆளுகை செய்யும் மிதப்பில்தான் அவர் நடமாடினார். ஆனால் மணி, ஹரிஜன சேவை என்று இறங்கிய போது இவர் ஆட்கள், தங்கள் குடும்பத்து ஆட்கள் என்று தரம் பிரிக்கவில்லை. பட்டாமணியத்துக்கு ஒரு தம்பி அற்பாயுளில் போய்விட்டான். வாரிசு இல்லை. அவன் மனைவி அலமேலு ஆச்சி, மணியை மகளாகப் பாவிப்பவள். ஜீவனாம்சமாகக் கிடைத்த நெல்லை அவளுடைய தனிக்குச்சில் பொங்கித் தின்று கொண்டு, எஞ்சிய நேரத்தை இந்த எதிர்வீட்டில் கழித்துக் கொண்டிருந்தாள். மணியின் இந்த ஹரிஜன சேவையில் மகிழ்ந்தவள் அவள். வீட்டிலே பசுக்கள் பாலைப் பொழிகின்றன. மாடான மாடுகள், வாய்க்கால் கரைக்காடுகளில் மேய்ந்து, தன்னிச்சையாக உலவிவரும் பசுக்கள்... வைக்கோலும் தவிடும் போட்டு, நீர்காட்டிப் பேணுகிறாள் அல்லவா? பாலுக்குப் பஞ்சமில்லை நாலு பீறல் கறந்து, கன்று குடிக்கட்டும் என்று விட்டு விடுவார்கள். காளைக் கன்றொன்று மொழுமொழுவென்று வளர்ந்து பாய்ச்சல் காளையாகியிருக்கிறது. மணி பூவரசு மரம் ஒன்றை வெட்டி, ஒற்றை ஆள் அமர்ந்து செல்லும் வண்டி கூட்டி இருக்கிறாள். அதில் அவளே அமர்ந்து அந்தக் காளையைக் கட்டிக் கொண்டு செல்கையில் ஆகா...! என்ன உற்சாகம் பொங்குகிறது! கறந்த பாலைத் தயிர் தோய்த்துக் கடைந்து வெண்ணெயாக்கி, நெய்யிறக்கி அம்மா, பேரன் பேத்திக்குக் கொண்டு செல்கிறாள். மோர்... பானையாக மோர்... சேரிக் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது. பாலுங்கூட அந்தக் குழந்தைகளுக்கு வழங்குகிறாள். "வீணாப் புளிச்சு இத்தனை நாளாக் கருவேப்பில மரத்தில கொட்டிட்டிருந்தோம். மோர் ஊத்தினா கருவேப்பில வாசனையா இருக்குமாம்! நான் கருவேப்பிலைய மோரில் போட்டுக்குடுக்கறேன் ஆச்சி, எப்படி?..." "ரொம்ப சரி, மணி" என்று சொல்லும் ஆச்சிதான், தயிரைப் பானையில் ஊற்றிப் பாதி நாட்களிலும் கடைகிறாள். சேரியில் பிள்ளைகள், குளிக்க வேண்டும். துப்புரவாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இவள் வீட்டிலிருந்து அலுமினியத் தூக்கில் எண்ணெய் கொண்டு செல்கிறாள். பெண்கள், சாணிக்கூடை சுமக்கவோ, விறகு சேகரிக்கவோ, நாற்று நடவோ, களை பறிக்கவோ, சென்று விடுகிறார்கள். குப்பை மேடுகளில் கோழிகளும், சொறி நாய்களும், பன்றிகளும் உறவு கொண்டாடுகின்றன. சொறியும் பரட்டையும், எலும்புக் கூடுகளுமான வயிறும் புளிச்சைக் கண்களும் அம்மணமுமாகக் குழந்தைகள்... அழுக்குப் போக ஒவ்வொருவராக இந்த ஐயர் வீட்டம்மா, வாய்க்காலிலோ குளத்திலோ குளிப்பாட்டுகிறாள். பிறகு தலை சீவிப் பேன் எடுத்து சுத்தமாக்குகிறாள். நொய்யைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி, பாலோ, மோரோ ஊற்றிக் கொடுக்கிறாள். "ஏண்டா, ராசு? எங்கேடா விழுந்து பட்டுக்கிட்டே? ரத்த விளாரா இருக்கு? மூஞ்சியெல்லாம் காயம்?" "விழலீங்க. அம்மா தள்ளிடிச்சி." "அம்மாவா? ஆரு, அம்மாவா? எதுக்குத் தள்ளினா?" "எங்கப்பாரு கூட சண்ட போட்டுகிச்சி. அப்ப தள்ளிடிச்சி." "நான் வந்து கேட்கிறேன். குழந்தையை இப்படியா தள்ளுவாங்க?" சேரிக் குடிசைகளின் முன் ஆட்டுப் புழுக்கைகளும், காயவைத்த உப்புக் கண்டங்களும்... இவள் காலடிக்குக் கூசிக் குறுகி முக்கியத்துவம் இழக்கின்றன. வெற்று வாயை மென்று கொண்டு ஒரு வாயிற்படியில் கந்தைச் சுருணை போல பாவாயிக் கிழவி குந்தியிருக்கிறாள். "அய்யிரூட்டம்மா...!" "ஏம்மா? அம்சு ஓம்மருமவதான? புள்ளய ஏனிப்படி அடிச்சிட்டா?" கிழவி திக்குமுக்காடிப் போகிறாள். "அம்மா... நீங்க... நீங்களா?" "ஆமா. குழந்தையப் போட்டு நீங்களே அடிச்சிடறதா? எங்கே அம்சு?" "அது... நடவுக்குப் போயிருக்கு. அவ புருசன் பொஞ்சாதிக்குள்ள தகராறு. பட்டாமணிய வூட்டுகாரியகாரு கிட்ட இவ பேசிட்டாளாம். கரவெளி தகராறு..." கிழவி கூறுவது எதுவும் புரியவில்லை. "என்ன தகராறு?..." "கரவெளி தகராறம்மா... நீங்க நிக்கிறீங்களே?" மணிக்கு இப்போதும் புரியவில்லை. "கரவெளின்னா... என்ன அது?" "நடவாளுங்களுக்குள்ளதாந் தகராறு." மணி அசையாமல் நிற்கிறாள். பயிர், பண்ணை, சாகுபடி நெல், விற்றுப் பணம், பட்டு, வயிரம், மிராசு, இதெல்லாம் மட்டுமே பரிசயம் இவளுக்கு. இவை தவிர, எதுவுமே அறியாத மட்டித்தனத்துக்கு வருந்தி நிற்கிறாள். இப்போதுதான் இந்த ஏழை உழைப்பாளிகளின் உழைப்பைப் பற்றியும் பல்வேறு முரண்பாடுகளைப் பற்றியும் அறியாமல் இங்கு சேவை செய்வது பொருளற்றது என்று உறைக்கிறது, அவளுக்கு. பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|