உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
31 “வாய் கசந்து, ரொம்பப் பித்தமாக இருக்கு; தலை சுத்தறது. எதானும் மருந்து குடப்பா!” “சொல்லி அனுப்பினால் நான் வரமாட்டேனா மணி? எதற்கு நீ முடியாமல் இங்கே வரணும்?” “... ஒரு நாலெட்டுக்கூட இல்ல, இது ஒரு முடியாமையா? டெயிலர்ட்ட ஒரு பெரிய பை தைக்கச் சொல்லிக் குடுத்திருந்தேன். அதை வாங்கிட்டுப் போக வந்தேன். அப்படியே உன்னிடம் மருந்தும் வாங்கிக்கலாமேன்னு நுழைஞ்சேன்!” இவள் வட்டமான ஸ்டூலில் உட்காருகிறாள். தலை கனமாக இருக்கிறது. இரவில் நல்ல உறக்கம் வருவதில்லை. உறங்கினாலும் உருப்படியில்லாத கனவுகள். டாக்டர் இவள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கிறான். “உனக்கு பிரஷர் இருக்கு மணி, பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ...” “இராத்திரி போட்டுண்டு கொஞ்சம் தண்ணீர் குடிச்சிட்டுப் படுத்துக்கோ...” என்று மருந்துப் பொட்டலமும் டானிக்கும் தருகிறான். சூசகமாக “எல்லாம் விட்டுடு” என்கிறான்; உறவு முறையில் சகோதரன் ஆக வேண்டும். எல்லாம் என்றால் எதை எப்படி? விடுவது? புதிதாகத் தைத்த பை பெரிதாக இருக்கிறது. ஒரு விரிப்பு, ஒரு செட் உடை எல்லாம் தாராளமாகக் கொள்ளும். இரவு நன்றாகத் தூங்குகிறாள். பையில் சமக்காளம், போர்வையை மடித்து இவள் வைப்பதைப் பார்க்கும் வண்ணம் தியாகராஜன் படியேறி வருகிறான். “அம்மா, எங்கே கிளம்புறாப்பல?” “ஏம்பா, தியாகராஜன்? என்ன, விசேஷம் எதானும் உண்டா?” “ஆமா, லால்குடில மகாநாடு...” “என்ன மகாநாடு? இந்தி எதிர்ப்புப் போராட்டமா?” “இல்லம்மா... பல பிரச்னைகள்...” மணி ஒரு கணம் மவுனமாக நிற்கிறாள். அதே நாளில்தான் நாகையில் இவர்கள் கட்சி மாநாடு நடக்க இருக்கிறது. இவள் மீது நடவடிக்கை எடுத்து... அதிகபட்ச தண்டனை கொடுக்கும் தீர்மானம்... “ஏம்பா, உங்க மாநாட்டிலும் கூட்டம் நிறைய இருக்குமில்லையா?” “ஆமாம்மா! நேரு, தி.க., தி.மு.க. வித்தியாசம் கூடத் தெரியாமல் பொதுப்படையா நான்சென்ஸ்னு சொன்னாரே, அதைக் கண்டனம் செய்யறது முக்கியம்... அரசியல் நடவடிக்கைகள், குலக் கல்வித் திட்டம், எல்லாம் தான் பேசுவாங்க.” “நம்ம பிரசுரங்களை அங்கே கொண்டு வந்தாலும் விற்கலாம், இல்லையா?” “... ஓ... விற்கலாம்மா?” “அப்பா, வெள்ளிக்கிழமை சாயங்காலம், வழக்கமான இடத்தில் வந்து, இந்தக் கட்டெல்லாம் எடுத்திட்டுப் போகிறாயா?...” “நெட்டி வேலைக்காரன் தெரு பெட்டிக் கடையில் தானே?” “ஆமாம், நீ கிளம்பு முன்ன, வெள்ளிக்கிழமை அங்கு வந்து இரு...” அவனுக்குச் சந்தோஷம்; போகிறான். இவளுக்கு ஓர் இறுக்கம் விட்டாற் போல் இருக்கிறது. டாக்டரிடம் வாங்கி வந்த பொடியைப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடிக்கிறாள். அன்றிரவு உறங்கிப் போகிறாள். மாநாடு - மாநில அளவில் நடக்கிறதென்றால், எத்தனை உற்சாகமாக இவள் முன்னேற்பாடுகளைச் செய்வாள்? நிதி திரட்டுவாள்? அறுவடையானதும் மக்களிடம் அரைப்படி, ஒரு படி என்று அரிசி வாங்கி மூட்டையாகச் சேர்த்துக் கொண்டு போவார்கள். ஆனால், இப்போது கிராமங்களில் மணியம்மை கட்சி என்று சொல்பவர்கள், மணியம்மா இல்லாத கம்யூனிஸ்ட் மாநாடு கூட்டுகிறது என்று அறிவார்களோ?... இந்தக் கட்சியின் பெயரிலேயே பிற இளைஞர்களுக்கு ஓர் அச்சம் தோன்றியிருப்பது உண்மை. ஏனென்றால் எந்த ஒரு முரணான சிலும்பலையும் மேலிடம் பொறுக்காது. அநியாயம் என்று எவரும் வாதிட முடியாது. கட்சி மேலிடம் என்பது தனிப்பட்ட தலைவனின் ஆணையா, பொதுக்குழுவா என்பதைக் கூடக் கேட்க முடியாது. தொண்டனாகச் செயல்படுபவன், யாருக்குத் தூது செல்கிறான், யாரைக் கூட்டிச் செல்கிறான், யாருக்கு உணவு போகிறது என்பதையே அறியான். சொல்லப் போனால் அவன் இயந்திரம். அதற்கு மேல் அவனுக்கு அறிவு தேவையில்லை. எனவே மணியம்மாவுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறதென்று அரசல் புரசலாகத் தெரிந்தாலும் அது ஒதுக்கப்படும். அவர்கள் இதை அறிவதற்குள் இவள் விலாசம் இல்லாதவளாகி விடுவாள். இத்தனை நாட்களில் இத்தனை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறாளே, வெளிப்படையாக இவளை யாரேனும் பாராட்டு முகமாக அல்லது இவர்கள் பத்திரிகையிலே கூட ஒரு பெயரையேனும் வெளியிட்டிருக்கிறார்களா? இல்லை. பெண்ணும் ஆணும் சமம் - சம உரிமை என்று வாய் கிழியக் கொள்கை பேசினாலும், ஒரு பெண், ஆணுக்கு நிகராக - ஏன் மேலாகவே போராளியாவதைச் சகிக்காத ஆதிக்கமே இவள் உணர்ந்த உண்மை. இவள் அதையெல்லாம் பொருட்படுத்தி இருக்கவில்லை. இவள் இலட்சியம், சமுதாய ஒற்றுமை, பலம், மனித சக்தி, அதனாலேயே இவள் எதையும் பொருட்படுத்தி இருக்கவில்லை. இது இறுதிக் கட்டப் போராக இருக்கும். ஆம், அனைத்து உழைப்பாளிகளும் இவள் பக்கம் வருவார்கள். நியாயக் குரல் ஓங்கும். வெள்ளியன்று காலையில் பையை மாட்டிக் கொண்டு குடையை இடுக்கிக் கொண்டு கிளம்புகையில் ஓர் ஆள் வருகிறான்... பேச்சுவார்த்தைக்கு, சமரசத்துக்கு வரவும்... என்று சோதரராக உறவு கொண்டாடும் பண்ணையில் இருந்து செய்தி கொண்டு வருகிறான். “சரி... பூந்தாழங்குடிக்கு நாளக் காலம வர்றேன். அங்கேந்து வரேன்னு சொல்லு?” மனம் இலேசாகிறது. தம்பி முறைப் பையன். புதிய முன்னேற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் உடையவன். பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முக்கியத்துவம் இருக்கிறது... விறுவிறுப்பாக நெட்டி வேலைக்காரத் தெருவுக்கு நடக்கிறாள். “நாகப்பா! ஒரு சோடா குடு!” என்று கேட்டு வாங்கிக் குடிக்கிறாள். வைகாசி பிறக்கப் போகும் நாட்கள் ஏறும் வெய்யிலே கடுமையாக இருக்கிறது. “நான் இன்னிக்கு தியாகராஜனிடம் லால்குடி மகாநாட்டுக்கு வரதாச் சொல்லியிருந்தேன். வரதுக்கில்ல, வேற ஓரிடம் போக வேண்டியிருக்கு. அவன் வந்து விசாரிப்பான். சொல்லிடுங்கோ!” காலையில் இவள் பூந்தாழங்குடியில் வந்திறங்குகையில், பல புன்னகை முகங்கள் வரவேற்கின்றன. “வாங்கம்மா! வாங்கம்மா! இத்தின நேரமாச்சே, இந்தப் பக்கம் பஸ் போயிடிச்சேன்னு பார்த்தேம்மா” என்று வரவேற்கும் தோழர், வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறார். கட்டிலைப் போட்டு, உட்காரச் சொல்கிறார்கள். தட்டில் சர்க்கரையும் பழமும் வருகின்றன. வீட்டில் பெண்கள் பலர் புடை சூழும் கோலாகலம், வாயிலில் கோலம்; மாவிலைத் தோரணம். இளநீரைச் சீவிக் கொண்டு வந்து வைக்கிறார்கள். “அம்மா! நீங்கள் கட்டி வச்ச ராசாத்தி! எட்டு வருசம் கழிச்சி புள்ள பெத்திருக்கா... அம்மா மடில வச்சி பேரு சொல்லணும்...” சுருள் முடி கண்களை மறைக்க, ஒரு பூங்குழந்தையை அதன் பாட்டி இவள் மடியில் கொண்டு வந்து வைக்கிறாள். மணிக்கு உடல் புல்லரிக்கிறது. பட்டுப்போன்ற அதன் மேனியைத் தொடும்போதே ஒரு பரவசம் தோன்றுகிறது. மனித சமுதாயம் என்றும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவநதியன்றோ? என்றும் பழமையாய், என்றும் புதுமையாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி. குழந்தையின் முடியில் எண்ணெய்க் கிண்ணத்தைத் தொட்டு உச்சி வைக்கிறாள். சர்க்கரையை நாவில் வைக்கிறாள். அது செவ்விதழ் அகல பட்டுப்போன்ற நாக்கில் இனிப்பைச் சுவைப்பது கண்டு பூரித்துப் போகிறாள். இங்கு சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமைகள் கரைந்து போகட்டும். மனிதன்... ஒப்புயர்வற்ற அந்த உன்னத நேய உணர்வு என்றென்றும் இனிமையாகச் சுரக்கட்டும். இதுவே இந்த மனிதத்தின் இலட்சியமாக இருக்கட்டும். போராட்டங்களும், புயல்களும் கொந்தளிப்புகளும், இந்த இலட்சியத்தை நோக்கிய இயக்கங்களாகவே இருக்கக்கூடும்... “பேர் வைக்கணும்மா, நீங்க...! புள்ளக்கி நல்ல பேரா வைங்க.” “‘உஷா’ன்னு வைக்கிறேன். காலை உதயம். இருட்டுப் போகும் வெளிச்சம். விடிவெள்ளி... இவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.” முத்தமிட்டுக் குழந்தை பெயரைச் சொல்லி அழைக்கிறாள். உஷா... உஷா... ஒரே மகிழ்ச்சி. பிறகு பெண்களைப் பாடச் சொல்கிறாள். விடுதலைப் பாட்டு; கட்சிப் பாட்டு; நடவுப்பாட்டு; தாலாட்டுப் பாட்டு... ஒரே உற்சாகத்தினிடையே மணி தோசையும் காப்பியும் அருந்துகிறாள். பதினோரு மணி சுமாருக்கு பஸ் வருகிறது. எல்லோரும் வந்திருந்து பஸ்ஸில் ஏறுவதைப் பார்க்கிறார்கள். அண்மையிலுள்ள ஊர்தான். சாலையின் ஒரு புறத்தில், குளத்தங்கரை, அரசமரம், பள்ளிக்கூடம். எதிரே பண்ணைப் பங்களா. அதனுள் செல்லும் கப்பிப் பாதை நேராக இவர்களுடைய கிராம அக்கிரகார வீட்டுக்குச் செல்லும். உச்சி வெயில் உக்கிரமாக இருக்கிறது. நீலவானில் ஒரு பஞ்சு ரேகை கூடக் கிடையாது. மணி, தன் மணிக்கட்டுக் கடிகாரத்தைப் பார்க்கையில் கமலாபுரம் தோழர் குரல் கேட்கிறது. “வாங்கம்மா... இந்த பஸ்ஸில் தான் வாரீங்களா?” “ஆமா, பூந்தாழங்குடி போயிட்டேன் காலம... என்னப்பா விவகாரம்...?” இதற்குள் ஆங்காங்கிருந்த பண்ணை ஆட்கள் வந்து சூழ்ந்து விடுகிறார்கள். ஒருவன் உள்ளே பங்களாவின் முன் பெஞ்சியைக் கொண்டு வந்து போட்டுத் தகவல் சொல்லப் போகிறான். மணி உட்காரவில்லை. பிணைவாசல் நாகப்பன் தட்டு வண்டியில் நெல் மூட்டைகளுடன் வந்தவன் அம்மாளைக் கண்டு வண்டியை விட்டிறங்கி நிற்கிறான். “பொம்பிளங்க சாணிக்கூடை சுமக்கணும். மூணுபடி குடுக்க முடியாது. அம்புட்டுப் பேரும் போயி காங்கிரசுக்கு விரோதமா ஓட்டுப் போட்டீங்க... இதாம்மா வெவகாரம்.” மணி கேட்டுக் கொண்டே நிற்கிறாள். எதிரே கப்பிப் பாதையில் வில் வண்டி வந்து நிற்கிறது. சகோதரன் தம்பி இறங்கி வருகிறான். “அக்கா வந்து ரொம்ப நாழியாச்சா?” “இப்பதான் கொஞ்ச நேரம்...” “ஆத்துக்குப் போகலாமா? வாயேன்? சாப்பிட்டுட்டுப் பேசலாம்...” “வரதுக்கில்ல...” இவள் இருபக்கமும் பார்த்துக் கொண்டே உள்ளே அவனுடன் நடந்து செல்கிறாள். “புதுசா கிரேன் கிரஷர்... வந்திருக்கு பார்க்கிறாயா?” அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டு நடக்கிறான். கரும்பைப் பிழிந்து பெரிய கொப்பறைகளில் இட்டு வெல்லங் காய்ச்சுவார்கள். இப்போது வேலை நடக்கவில்லை. அருகில் உள்ள பெரிய பண்ணைக்காரர் - மிகப் பெரிய பண்ணை - சர்க்கரை ஆலை ஓடுகிறது. ஆலை என்று வைத்தால் அதற்குப் பகாசுரத் தீனி போட வேண்டும். கரும்பு சீசன் இல்லாத நாட்களில் தொழிலாளிக்கு வேலை கிடையாது. “இவனுக ரொம்பத் தகராறு பண்றானுக. வைக்கோல் போர் போடுவது வழக்கம் தானே? ஒரு பேச்சுக்குச் சொன்னால் கேட்கிறதில்ல. அந்தக் கமலாபுரம் ஆள் வேற தூண்டிக் கொடுக்க...” “அது சரி, அவங்க நியாயத்துக்குமேல் கேட்க மாட்டா. ஒப்பந்தத்துல இருக்கிறாப்பல, கூலியை நீங்க குடுக்க வேண்டியதுதானே? மனைக்கட்டை விட்டுப் போகச் சொல்வது நியாயமா? நீங்க ஒண்ணு மறந்து போயிடக் கூடாதப்பா, அவங்க உழைப்புத்தான் நாம சாப்பிடுறோம். நீயாயப்படி, அவங்களுக்கு எத்தனையோ உரிமை இருக்கு. கல்வி, வைத்தியம், வயசு காலத்துக்கான பாதுகாப்பு இதெல்லாம் கூட இருக்கணும். இதெல்லாம் நினைச்சுப் பார்க்க வேண்டாமா?” இது எப்போதும் இவள் ஊதும் சங்குதான். ஆனால் பலன்...? மணி பேசிக் கொண்டே போனவள், திரும்பிச் சாலை ஓரம் இவர்களை எதிர் நோக்கி வருகிறாள். அவன் வண்டியிலேறிக் கொண்டு திரும்பிச் செல்கிறான். குளத்தங்கரை அரச மரத்தடியில், அம்மா என்ன சொல்கிறார்கள் என்றறிய ஆணும் பெண்ணுமாய்க் கூடி இருக்கிறார்கள். “நீங்க விட்டுக் குடுக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலைன்னா, வேலை தான். நீங்க ஒண்ணு சேர்ந்து நிற்பதுதான் ஆயுதம். இந்தப் பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் இதெல்லாம் பலனில்லாமல் போகும்போது, வேற வழியில்லை.” “என்ன நாகப்பா? பிணைவாசல்தானே? இங்க எங்கே வந்தே?” “இது சேப்பு ராசி வெத நெல்லு. போட்டுட்டு ரெண்டு மூட்ட வெள்ள ராசி வாங்கிட்டு வரச் சொன்னாருங்க ஐயா...” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் வளைந்த குச்சியுடன் பயல் சாலையைக் கடந்து இவர்கள் பக்கம் வருகிறான். “மான் அந்தால தோப்புல கட்டியிருக்காங்களா? இந்தப் பொடிப்பயதா மான் மேய்க்கிறவன். இவன் சொன்னா அது கேட்கும். நில்லுன்னா நிக்கும்; ஓடுன்னா ஓடும்...” என்று யாரோ கூட்டத்தில் விளக்கம் கொடுக்கிறான். மணிக்கு நினைவு வருகிறது. இவன் இங்கே அபூர்வமாகக் கலைமான் ஒன்று வளர்க்கிறான். குட்டியாகக் கொண்டு வந்தான். அதை இங்கே இந்தப் பக்கத் தோப்பில் கட்டியிருக்கிறானா? ஆனால் மணி திரும்பித் திருவாரூர் செல்லும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிறாள். மானைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்க முடியாது. இந்த பஸ்ஸை தவற விட முடியாது. இவர்கள் அழகுக்கு, ஆசைக்கு மான் வளர்க்கிறார்கள். மனிதத்துவத்தை வளர்க்க மாட்டார்கள். காட்டில் யதேச்சையாகக் கூட்டத்தோடு திரியும் மிருகத்தைக் கொண்டு வந்து இங்கே கட்டிப் போட்டு வளர்க்க வேண்டுமா? இவளுக்கு மாட்டைக் கட்டுவது கூடப் பிடிக்காது. அந்த நாட்களில் மணலூரில், இவள் பசுக்கள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும்? பட்டாமணியத்தின் ஆட்கள் அவற்றை வழி மறித்துப் பற்றிக் கொண்டு போக நிற்பார்கள். அவை தாமாக அதைப் புரிந்து கொண்டு ஒரே பாய்ச்சலில் இவள் கொட்டிலில் வந்து நிற்கும். ஏன் தம்பி நிலங்களையும், தோப்பையும், வீட்டையும் பட்டாமணியத்துக்குக் குத்தகைக்கு விட்ட நாட்களில் கூட, அந்தப் பசுக்கள் இவள் கொட்டிலில் தான் வந்து நிற்கும். நாகப்பன் கத்துகிறான். “அம்மா! மானை அவுத்திருக்காப்பல, ஓடி வருது!” “அதுக்கு நீ ஏம்ப்பா கத்தறே? மான் அவுத்திட்டா அது அந்தால தோப்புக்குள்ள ஓடிப்போகுது.” சொல்லிட்டு மணி பையும் இடுக்கிய குடையுமாகச் சாலையில் பஸ்ஸைப் பார்த்து நிற்கிறாள். அடுத்த சில கணங்களில், அவள் இடுப்பிலும், விலாவிலும், குத்து வாளாய்க் கொம்பு இறங்க... “அம்மா...?” என்ற எதிரொலி அனைத்து மக்களின் இதயங்களையும் தாக்கும்படி எழும்புகிறது. இரத்தம் பீறிட, குடல் சரிய அந்தப் பெருமகள் மண்ணுக்கு மணியாரமாக அணி செய்பவளாகச் சாய்கிறாள். இறுதிவரை என் இலட்சியம் கட்சிப்பணி. என்னை நீக்கி விட்டு நீங்கள் மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பீர்களா? இந்த அணியில் இருந்து என்னை நீக்கிவிட முடியுமா? என்று கேட்கும் முகம். அவள் அடி வைத்த இடங்களில் செம்பருத்தி இதழ்களாய்ச் சிவக்க குருதி... பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|