முன்னுரை

     வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் 'தொழில்' என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். 'நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்' என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது.

     இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.

     பயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும், அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும், அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக் கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும் எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். நந்தன் சரித்திரத்தை எங்கள் சிற்றூரில் பல கதாகாலட்சேப பாகவதர்கள் விரித்துரைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றைக்கூட நான் நழுவவிட்டதில்லை. முன் வரிசைப் பொட்டு பொடிகளிடையே நானும் ஒருத்தியாய் முழுசும் தூங்காமல் விழித்திருந்து, பாகவதர் பாடும் பாடல்களில் சொக்கி இருந்ததுண்டு. வேதியருக்கும், உழவு செய்ய வேண்டிய சேரி நந்தனுக்கும் இடையே ஏற்படும் ரசமான விவாதங்களை, நொண்டிச் சிந்தில் அமைந்த எளிய பாடல்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.

     நண்டைப் புசித்துக் கள்ளைக் குடித்துக் கொண்டே காட்டேறி வீரனுக்குப் பூசைபோடும் மக்களே சேரியில் வாழ்பவர். இவர்களே சேற்றிலே உழைப்பவர்கள். இவர்களில் நந்தன் மேற்குளச் சாமியைப் பூசிக்கிறான். 'ஒன்றே குலம். ஒருவனே தேவன். சுவாமி ஒருவரே. பல பேரிட்டு அழைக்கிறோம்' என்ற வாசகங்கள் அந்நாளில் என் போன்ற சிறுவர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பாடமாய் அமைந்திருந்தன. 'சாமிகளிலும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பாகுபாடுகள் உண்டு' என்ற மாதிரியிலான முரண்பட்ட உண்மைகள் அப்போது என்னைக் கவர்ந்ததுண்டு. அந்தப் பருவத்தில் அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் வளர வாய்ப்புகள் ஏதுமில்லை. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம், இவ்வகையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த வகையில் சமுதாய உணர்வைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது எனலாம்.

     இந்துமத சமுதாயம் என்று பொதுவாக எடுத்துக் கொண்டால், நான்கு வருணப் பாகுபாடு, வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டதை மறுப்பதற்கில்லை. இந்த நால்வருண அமைப்புக்கு அப்பாற் பட்டவர்களையே பஞ்சமர் - ஐந்தாவது படியில் உள்ளவர்கள் அல்லது மிகத் தாழ்ந்தவர்கள் என்றும், அடிமைகளாகக் கொள்ளப்படுபவர்கள் என்றும் தீர்ந்திருக்கிறது. நான்கு வருணங்களுக்குள் வராமல், வெளிநாட்டிலிருந்து வந்த இனத்தாரைப் பஞ்சமர் என்று ஐந்தாம் வருணத்தவராக மறந்தும் குறிப்பிடுவதில்லை. ஏன்? அவர்களுடைய வெள்ளைத்தோல், அவர்களை ஆளும் தகுதிக்குரியதாக நம்மை ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறது!

     எனவே நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் - அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

     அந்த நியாயங்களால் உறுதிபெற்ற 'சண்டாள - தருமங்களை' எந்த மனீஷா பஞ்சகங்களும் அசைத்து விடவில்லை. 'அரிசனங்கள்' என்ற பெயர் மாற்றமும் சமுதாயப் புரட்சியைச் சாதித்து விடவில்லை. அவர்களை உயர் சாதிக் கோயில்களில் நுழையச் செய்தும், பார்ப்பனர் குடியிருப்புக்களில் உரிமை கோரச் செய்து சட்டங்கள் இயற்றியும் சலசலப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறோம். 'ஏழை என்றும் அடிமை என்றும் இந்தியாவில் இல்லையே' என்று சமத்துவம் சட்ட பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. கல்விச் சலுகை, வேலைச் சலுகைகளின் ஒதுக்கீடுகள், சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயம் என்ற இலட்சியத்தைக் குறிப்பாக்கியே நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.

     நந்தன் காலத்திலிருந்து பார்த்தால், இன்று வரை, அரசியல், சமுதாய, அறிவியல், பொருளாதார அரங்குகளில் புதிய புதிய ஒளிகள் பிறந்திருப்பது தெரிய வருகின்றது. எனவே, தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் என்றறியும் அவா என்னுள் குடைந்து கொண்டே இருந்தது. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இந்த முப்பத்து நான்காண்டுகளில் துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உறுத்திக் கொண்டே, இருந்தது.

     எனவே, இந்த முயற்சியை மேற்கொள்ளத் துணிந்தேன்.

     முதலில் உயிர்க்குலம் வாழத் தொழில் செய்த மனித வரலாற்றிலிருந்து சில ஏடுகளைப் பார்க்கலாம்.

     காட்டுமிராண்டியாகப் பச்சை யூனைப் புசித்து உயிர் வாழ்ந்த மனிதன், பூமித்தாயின் வன்மையைப் பயிர்த்தொழிலால் பெற்று உயிர் வாழலாம் என்று நாகரிகமடைந்த பிறகு, ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்று குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கிய பிறகு, 'நில உடமை' என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே வலுப்பெற்று வந்திருக்கின்றன என்பது கண்கூடு.

     நமது அனைத்துச் சீர்திருத்தங்களும், முற்போக்குச் சட்டங்களும், இந்த அடித்தள உண்மையைத் தீண்டியிராததால், மேற்போக்காகவே பயனற்றுப் போயிருக்கின்றன. உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த வகையில் எந்தக் கட்டுப்பாடும் செய்யாமல் சீர்திருத்த முயற்சிகள் பயனளிக்காது என்ற உண்மையையே அன்றாட நடப்புக்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. உடமைகளையும் உரிமைகளையும் ஒரு சாராருக்கு நியாயங்களாக்கும் கலாசாரம், சமயம், அரசியல் எல்லாம் வலிமை படைத்திருக்கும் போது சட்டங்களும் ஒதுக்கீடுகளும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களும் பலனளிக்காத கண் துடைப்பாகவே முடிந்து விடுகின்றன. எழுச்சிகளும் போராட்டங்களும் கூட இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்குச் சாதகமல்லாத எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன என்றால் தவறில்லை.

     இந்தப் புதினத்தை உருவாக்க, நான் கீழ்த் தஞ்சைப் பகுதிகளில் பல சிற்றூர்களில் வாழும் அடித்தள மக்களின் வாழ்வை அருகிருந்து உணர்ந்தேன். பாரதம் அரசியல் விடுதலை பெறுமுன்பு, இப்பகுதி மக்களிடையே, சமுதாய விடுதலை, ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவம், பொருளாதார மேன்மை ஆகியவற்றைக் குறிப்பாக்கிக் கிளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. ஆனால் வெறும் அரசியல் விடுதலை, முன்பு குறிப்பிட்ட வகையில் ஆழ்ந்த குறிக்கோள்களைக் கொண்டிராததனால் இம்மக்களின் உண்மையான முன்னேற்றம் மலர்ந்து விடவில்லை. உயிர் வாழ இன்றியமையாததான நீருக்கும் உணவுக்குமே தட்டுப்பாடாகவும் போராட்டமாகவும் பிரச்னைகளாகவும் தொடர்ந்து, குடியரசு உரிமையில் எழுச்சிகளுக்கான வாய்ப்புக்களைக் காட்டிலும் ஆதிக்கங்களுக்கான உரிமைகளும் வாய்ப்புக்களுமே வலிமை பெற்று வந்திருக்கின்றன.

     உழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. அதீதமான உடமை உரிமைகள் சந்து பொந்துகளுக்கு இடமின்றித் தவிர்க்கப்பட வேண்டும்.

     இந்தப் புதினத்தை நான் உருவாக்கிய காலத்தில் 'சமுதாய மனச்சாட்சி' என்ற ஒன்றைத் தேடிய காலமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

     காவிரித்தாய் தன் கரங்களால் மண் அன்னையைத் தழுவிப் பிரியாவிடை கொள்ளும் இப்பிரதேசத்தில் அவள் வன்மையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். தனது மக்கட்செல்வங்கள் அனைவரும் வளமையுடன் வாழவேண்டும் என்ற அந்த இயற்கைத் தாயின் நியாயங்களை மனிதர் மதித்திருக்கவில்லை. தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும் போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும் வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள், இன்னமும் மிடிமைகளில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.

     இந்த மனிதர்களை நான் சந்தித்து, அவர்களுடன் மனமொன்றிப் பழகும் வாய்ப்பைத் தர, எனக்குப் பல நண்பர்கள் ஆதரவளித்து உதவி புரிந்திருக்கின்றனர். அவர்கள் இருவரை மிக முக்கியமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குப் பழக்கமில்லாத சேற்றிலும், வயல் வரப்புக்களிலும், இம்மக்கள் குடியிருப்புக்களிலும், என்னுடன் துணையாக வந்தும், வேறு வகைகளில் ஆதரவளித்தும் திருமதிகள் மீனாட்சி சுந்தரத்தம்மாளும் ஏனங்குடி இராஜலட்சுமியும் எனக்குப் பேருதவிகள் புரிந்திருக்கின்றனர். ஒரு வாழ்வை நுணுகி அறிவதற்கு இத்தகைய நேர் அநுபவங்கள் இன்றியமையாதவை அன்றோ?

     எனக்குப் பல செய்திகளை ஆர்வத்துடன் கூறி உதவிய பலதரப்பட்ட சோதரர்களுக்கும் சோதரிகளுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

     எனது ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இந்த நூலையும் கொண்டு வருகிறார்கள். நூல் வடிவில் கொண்டு வரும் போது ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் முனைந்து நிறைவேற்றித் தரும் பாரி புத்தகப் பண்ணை, திரு. கண. முத்தையா அவர்களுக்கும், இளவல் கண்ணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகரிடையே இந்நூலை வைக்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்.