சேற்றில் மனிதர்கள் - Setril Manitharkal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

9

     காலையில் கோழி கூவும் குரல் எதுவும் கேட்குமுன்பே விழித்தெழுந்து விட்டாள். வழக்கமாக அம்சு சாணம் தெளிப்பாள். இன்று அவளுக்காகக் காத்திராமல் காந்தி அவளே சாணம் தெளித்துப் பெருக்கிவிட்டு, முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். தாத்தாவுக்கு நீராகாரம் எடுத்து வைத்துவிட்டு, இவளும் சிறிது சோறும் நீரும் அருந்துகிறாள். பின்னர் கூந்தலை வாரிக்கொள்ள அவிழ்க்கிறாள்.

     செவிகளிலே அகலமான தங்கத்தோடு, போன மூன்றாம் வருசம் நாயக்கரம்மா மூலமாக அம்மா வாங்கியிருக்கிறாள். அப்போதே இது நானுற்று சொச்சம் ஆயிற்று. மாசாமாசம் பத்தும் இருபதுமாகக் கொடுத்து கடனடைத்தார்கள். இவளுக்கு நீண்ட மென்மையான கூந்தல். அதை நீண்ட விரல்களால் கோதி ஒரு இழை மற்ற இழையோடு ஒட்டாமல் குளுகுளுவென்று சரியவிட்டுக் கொள்வதில்தான் பாதிப் பொழுதையும் இப்போதெல்லாம் கழித்துக் கொண்டிருக்கிறாள். எண்ணெய் நிறைய வைக்காமல், மென்மையாகச் சீவி, காதுகள் மூடும் வகையில் தளர்த்திப் பின்னல் போட்டபிறகு இரண்டு கிளிப் ஊசிகள் கொண்டு காதுகளில் தோடுகள் தெரியச் சற்றே தூக்கி இறுக்கமாகப் பின்னலுக்கடியில் செருகிச் சிங்காரித்துக் கொள்கிறாள்.

     “ஏண்டி? எங்க போப்போற காலங்காத்தால?”

     “எங்க போக? வீரமங்கலந்தா. உடயாரு சொன்னாங்க அங்க பால்வாடி ஸ்கூல் ஒண்ணு வரப்போவுதாம். வேலை விசயமா விசாரிச்சு வைக்கிறேன்னாரு. காலம எதுக்கும் வா, இருபத்தாறாந்தேதி. இங்க அந்தம்மா ஆபீசர் வாரான்னு சொன்னாரு. போலான்னு கெளம்பினேன்...”

     அப்பாவுக்கும் கேட்கவேண்டும் என்றுதான் பேசுகிறாள்.

     “இன்னிக்குத்தான் சொல்ற?...”

     “இன்னிக்குக் கூடச் சொல்ல வாணான்னு பாத்தேன். எல்லாம் கிட்ட வாரமாதிரி வந்துதான தட்டிப்போவுது? நடக்கட்டும் பாப்போம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ளாற எங்க போறன்னு கேக்குறிங்க...”

     “பாபு ஊரிலதா இருக்கா?”

     “பாபு இங்கெங்க இருக்கு? அதுக்கு பி.எச்.இ.எல்ல வேல கெடச்சி எப்பவோ போயிட்டுது. வடக்க எங்கியோ இருக்கிறதாச் சொன்னா. சரோஜா கூட வீடு இருக்கு, போயிருக்கும். குழந்தை ரொம்பச் சின்னது. ஆறுமாசம் கழிச்சி அங்கேந்து மாத்தல் வாங்கிடலாம்னு சொல்லிட்டிருக்காங்க...”

     “நீ ஒரு காரியம் செய்யிறியா?”

     “சொல்லுங்கப்பா...!”

     “ஆசுபத்திரில டாக்டர் இருப்பாரில்ல? அப்பாக்கு இப்படி வீங்கியிருக்குன்னு சொல்லி, உள்ளுக்கு ஏதானும் மருந்தோ, மேலுக்குத் தடவிக்க ஏதானும் தயிலமோ வாங்கிட்டு வாரியா?”

     “வாரேம்பா. டாக்டர் பாதி நாளும் மாங்கொல்லை போயிடுறார்ன்னு அன்னிக்குச் சொல்லிச்சி சரோஜா. நா, இருந்தாருன்னா பாத்து வாங்கிட்டு வரேன்.”

     வீட்டை விட்டுக் கிளம்புவது உறைத்தபின் உற்சாகமும் பரபரப்பும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. வீரமங்கலத்தில் யார் நிற்கப் போகிறார்கள்? அது வெறும் சாக்கு. இவள் வீரமங்கலம் எல்லையைக் கூட மிதிக்காமல் மருள் நீக்கி ஊரைப் பார்க்க விரைந்து பஸ்ஸைப் பிடிப்பாள். சாலியின் அப்பா ஆறுமுகம் இருக்கும் கிராமம் அவளுக்கு நன்றாகத் தெரியும். பஸ்ஸில் போகும்போது பல முறைகள் நெல் புழுக்கி அரைக்கும் ஆலையின் சிம்னியும், டிராக்டர் மற்றும் டெலிபோன் கம்பிகள் செல்லும் வரிசையும் மாவூரின் புதிய மதிப்பை எடுத்துக் கூறும். ஆறுமுகம் இரண்டு முறைகள் தேர்தலில் வென்று, அதிகாரமும் செல்வாக்கும் பெருக்கிக் கொண்டவர். அண்மையில் சென்ற தேர்தலில் அவர் நிற்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் கூறிக்கொண்டார்கள். ஆனால் அதெல்லாம் இப்போது அவளுக்குத் தேவையில்லை. அவருக்கு இப்போது செல்வாக்கு இருக்கிறது. அவர் மகனே வந்து அழைத்திருக்கிறார். ஒருமுறை பார்த்துவிட்டால் எப்படியும் வேலையோ அல்லது மேற்படிப்பு உதவியோ நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறாள். ஒரு நல்ல முயற்சியில் நம்பிக்கை வைத்துச் செல்கையில் பொய் சொல்வது குற்றமில்லை.

     அந்தச் சேலையைத் தவிர்த்து நீல உடலில் பெரிய பச்சைக்கொடிகள் ஒடும் இன்னொரு சேலையை அணிந்து கொள்கிறாள்.

     லட்சுமி குதிரிலிருந்து நெல் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

     “போனா போன எடம்னு உக்காந்திடாதே. பொழுதோட வந்திடு!”

     “சரிம்மா!”

     தாத்தா பாட்டி எவரையும் பாராமல் அவள் செருப்பை மாட்டிக்கொண்டு விரைந்து கிழக்கே செல்கிறாள்.

     இக்கரையுடன் சென்றால் தெரிந்தவர் அறிந்தவர் கடைத்தெருவில் கூடுபவர் எல்லோருக்கும் வெளிச்சமாய்த் தெரியும்.

     கிழக்கே சிறிது தொலைவு சென்று ஆலமரத்தடியில் கள்ளுக்கடைக்காரன் போட்டிருக்கும் மூங்கிற் பாலத்தின் வழியாகச் சென்று இரண்டு கிலோ மீட்டருக்கு மேலுள்ள தொலைவைக் கடக்கிறாள்.

     மகிழ்ச்சியுடன் அச்சமுமான பரபரப்பு ஓர் இனிய கிளர்ச்சியின் கலவையாக இருக்கிறது. காலைப் பொழுதின் கவர்ச்சிகளனைத்தும் வாழ்வின் முயற்சிக்குக் கட்டியம் கூறுவதாகத் தோன்றுகின்றன. நெடிய வயல்கள், உழுது போட்டிருப்பவை, உழவுக்காக ஊறிக் கொண்டிருப்பவை; நடவு முடிந்த வயல்கள்; பச்சை வெல்வெட்டுப் பாய் விரித்த நாற்றங்கால்கள், எல்லைக் கோயில்கள், குளங்கள்...

     பவழ மல்லிகையோ, மர மல்லிகையோ தம் கடைசிச் சுவாசங்களைக் காற்றில் கலக்கும் மண இழைகள். குளித்துவிட்டு மடியாக நீர் சுமந்து செல்லும் மேற்குல ஆடவர், பெண்டிர், உழவுக்கும் நடவுக்கும் செல்லும் பெண்கள்... ஒன்றிரண்டு போக்குவண்டிகள்... இவளை இனம் கண்டு கொள்பவர் யாருமில்லை என்று நடக்கிறாள்.

     மருள் நீக்கி கிராமத்தில் பளிச்சென்று வெயில் அடிக்கிறது. டீக்கடையில் நாலைந்து பேரிருக்கின்றனர். பஸ் நிறுத்தம் இங்கு பாதுகாப்பாக மழை வெயில் பாராமல் கட்டப்பட்டிருக்கிறது. ஆண்கள் பகுதியில் யாரோ ஒரு நகரத்துக்காரர் மூக்குக் கண்ணாடி தோல் பையுடன் நிற்கிறார். பெண்கள் பகுதியில் ஒரு கிராமத்துப் பெண். அவள் தாயைவிட மூத்தவளாக இருப்பவள் நிற்கிறாள்.

     “டவுன் பஸ் போயிடிச்சா?”

     “எட்டா நெம்பர்தான? இன்னும் வரஇல்ல...”

     அவள் நெஞ்சு படபடக்க நிற்கிறாள். எவரேனும் பார்த்துவிட்டால், மருள் நீக்கி அப்படி எட்டாத இடமில்லை. வீரமங்கலம் செல்வதாகச் சொல்லிவிட்டு, வேறெங்கோ வந்து நிற்பது அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால், என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

     நல்லவேளையாக டவுன் பஸ் வந்துவிடுகிறது.

     அதிக நேரம் நிற்க வேண்டியில்லை. இந்த பஸ்ஸில் வேறு எவரேனும் தெரிந்தவர்கள் இருந்து, எங்கே போறம்மா என்று கேட்டுத் தொலைக்கக் கூடாதே?

     விடுவிடென்று ஏறி முன்னேறிச் செல்கிறாள். உட்கார இடமில்லாத கூட்டம். பெண்கள் பக்கத்தில் ஒரு கிழவியின் மீது சாய்ந்தாற்போல நின்றுகொள்கிறாள். கிழவி ஆசனத்துக் கடியில் ஒரு சாக்கு மூட்டை வைத்திருக்கிறாள். அதிலிருந்து கறிவாட்டு வீச்சம் எல்லோருடைய சுவாசங்களைப் பற்றியும் நலம் விசாரிக்கிறது.

     கண்டக்டர் அவளிடம் சீட்டு வாங்க வருமுன் கிழவியிடம் வருகிறான்.

     “என்ன ஆயா?... மூட்டையிலே என்ன?”

     “அட ஒண்ணுமில்ல. முருங்கைக்கீரயும் சுக்காக்கீரயும் கொண்டிட்டுப் போற...?”

     அவன் குறும்புச் சிரிப்புடன் மூட்டையை உலுக்குகிறான்.

     “ஏம்மா, எங்க, புதுக்குடியா?”

     காந்திக்குக் குரல் தடுமாறுகிறது.

     “இல்ல மாவூரு...”

     “அறுபது பைசா குடு...!”

     ஒற்றை ரூபாய்த் தாள் ஐந்து அவள் மறைத்து எடுத்து வந்திருக்கிறாள். கைப்பையிலிருந்து ஒரு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். நாற்பது பைசாவைக் கொடுத்துவிட்டு அவன் கிழவியின் மூட்டையை மீண்டும் பற்றி இழுக்கிறான். “ஏனாயா? முருங்கக் கீரையா வச்சிருக்க?” எல்லாருக்குமே சிரிப்பு வருகிறது. கிழவியும் சிரிப்பை அடக்க முடியாமலே பொய்யை உறுதி செய்யப் பார்க்கிறாள். “முரங்கக் கீரதா ஆட்டுக்கு...”

     “ஆட்டுக்கு முருங்கக்கீரயா? அதுக்கு மூட்ட என்னாத்துக்கு? இந்த வீச்ச சமாசாரமெல்லாம் பஸ்ல தூக்கிட்டுப் போகக்கூடாது தெரியுமில்ல?”

     “பஸ்ஸில தூக்கிட்டுப் போகக்கூடாதுன்னா முதுவிலியா தூக்கிட்டுப் போக?”

     “போ...! வாசம் உன்னோடயே வரும்!... இங்க பாரு... எடு மூட்டய கெளவீ!...”

     “அட போய்யா! சும்மா ஆட்டுக்குத் தழ கொண்டிட்டுப் போற... வாசம் வருதா?”

     “தழவாசனயா இது?... சரி சரி ஒரு ரூபா எடு!”

     “எதுக்கு?”

     “வாசம் வருதில்ல? அதுக்கு!”

     “ஒரு ரூவா குடுத்தா வாசம் போயிடுமா...?”

     “ஏ கெளவீ! என்னா எதிர்த்துப் பேசுற! இல்லாட்டி உம் மூட்டையோட எறக்கி விட்டிருவேன்! கறிவாட்டு மூட்டய வச்சிட்டு... மூக்கத் துளக்கிது!”

     கிழவி மடியில் சுருக்குப் பையிலிருந்து எண்ணி இரண்டுகால் ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறாள்.

     “என்னா? இன்னும் அம்பது பைசா குடு!”

     “இல்ல ராசா, இதா இருக்கு.”

     “அட அவுராதம் ஒரு ரூவாய்க்கிக் குறஞ்சி இல்ல கெளவி. இதென்ன வம்மாப் போச்சி!”

     இந்த விவகாரத்தில் மாவூர் நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றதே தெரியவில்லை. மாவூர் என்ற பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு காந்தி பரபரப்புடன் இறங்குகிறாள்.

     கிருஷ்ண விலாஸ் காபி ஹோட்டல் பெரியதாகவே இருக்கிறது. அருகில் ஒரு மிட்டாய்க் கடை. ஆப்பிள் சரம் குத்தித் தொங்க விட்டிருக்கும் வெற்றிலைப் பாக்குக்கடை. இடப்பக்கம் முத்தாறு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றுக்கப்பால் வயல்களில் பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் செழிப்பு.

     எல்லா இடங்களிலும் நடவாகவே இருக்கையில் இங்கு அதற்கு முன் பயிர் கதிர்காணத் தொடங்கிவிட்டதே!

     பசுமையினிடையே ஆங்காங்கு காணும் அறிவிப்புப் பலகைகள் மாவூர் கிராமத்தின் மாதிரி விவசாயப் பண்ணை அது என்பதைத் தெரிவிக்கிறது. வயல்களிடையே செல்லும் கப்பிச் சாலையில் சென்றுதான் ஊருக்குள் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆறுமுகம் என்றால் அங்கு தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவள் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கையில் அவர் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார். பாதையில் நடந்து சென்றதும் புராதனமான கோயிலும், குளமும் வருகின்றன. செம்மண் சுண்ணாம்புப் பட்டை அடிக்கப்பட்ட மதில் சுவர்கள். மேற்குலத்தார் வசிக்கும் வீடுகள். யாரிடமேனும் கேட்டால் சொல்வார்களாக இருக்கும்.

     யாரிடமும் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது.

     மூட்டைகளை அடுக்கிக்கொண்டு சல்சல்லென்று ஒரு மாட்டுவண்டி வருகிறது.

     நின்று அவனைக் கேட்கலாம் என்று சற்று ஒதுங்குகிறாள்.

     அவனிடம் கேட்கவே அவசியம் இல்லாதபடி, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது.

     நெஞ்சு துடிக்க மறந்து போகிறது; அந்தக் காலையின் ஏறும் வெயிலில், தொப்பி போன்ற முடியும், கறுப்புக் கண்ணாடியுமாக சாலிதான். மோட்டார் சைக்கிள் அவளைக் கண்டதும் நிற்கிறது.

     “அட நிசந்தானா? பொய்யில்லையே?”

     கவர்ச்சியாக ஒரு சிரிப்பு.

     அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. “வந்து அப்பாவப் பாத்திட்டுப் போலான்னு...”

     “என்னால நம்ப முடியவில்லை. உங்கப்பா - எப்படிச் சம்மதிச்சாரு?”

     “அவுரு சம்மதிச்சு வந்ததாச் சொல்லலியே நான்?”

     இளநகை அவள் இதழ்களில் எட்டிப் பார்க்கிறது.

     “சபாஷ்... நா நீ தயிரியசாலின்னு நினைச்சேன். அது கணக்கு சரிதான்னு நிரூபிச்சிட்ட...”

     “அப்பா வீட்ல இருக்காரில்ல?”

     ஒரு கணம் சூரியனின் வெளிச்சம் குன்றுகிறது.

     “இல்லியே? நாகபட்ணம் போயிருக்காரு.”

     “அடடா. அப்ப. இப்ப பாக்க முடியாதா?”

     “முடியாதுன்னு ஆரு சொன்னது? நாகபட்ணம் போயி அவரப் பாக்குறது?”

     “எப்படிங்க? இப்ப பஸ்ஸிருக்குதா?”

     “ம்...? பஸ்ஸாலதாம் போவணுமா காந்தி?”

     “பின்ன எப்படிங்க போறது?”

     “பின்னாடி உக்காந்தேன்னா அரமணில போயிடலாம். அப்பாவப் பாத்ததும் திரும்பிடலாம். பஸ்ஸுன்னா இங்கேந்து புதுக்குடி போயி வேற பஸ் புடிச்சிப் போவணும். சொல்லப் போனா, நானே அவரப் பாக்கத்தா இப்ப கிளம்பிட்டிருந்தேன்.”

     ‘பின்னாடி உட்காருதா. யாருனாச்சியும் பாத்துட்டா’ என்ற அச்சத்தில் அடி வயிறு இலைபோல் ஒட்டிக்கொள்கிறது.

     “நா... நா... எங்கப்பா, அம்மாட்டப் பொய் சொல்லிட்டு வந்திருக்கிறேன். அதுனால...”

     “என்ன பொய் சொன்ன?...”

     இதழ்களில் குறும்பு கொப்பளிக்க அவளைக் கவ்வி விடுபவன்போல் பார்க்கிறான். குறுகுறுப்பு நாடி நரம்பெல்லாம் பாய்கிறது.

     “வீரமங்கலம் போயி சிநேகிதியப் பாக்கிறதா ச் சொன்னேன்.”

     “அவ்வளவுதானே? சும்மா பின்னாடி உக்காந்துக்க?”

     “எனக்கு அப்படியெல்லாம் உக்காந்து பழக்கமில்லிங்க பயமாயிருக்கு...”

     “பழக்கம் எப்பிடி வரும்? உக்காந்தாத்தான வரும்? சும்மா உக்காந்துக்க?”

     அவளுக்குச் சொல்லொணாப் பிரபரப்பு. இருந்தாலும் தயக்கமும் தடைபோடுகிறது. தெருவில் யாரோ ஒரு ஆள் பார்த்துக் கொண்டே போகிறான். நின்று பேசுவது சரியல்ல சட்டென்று பின்புறத்து ஆசனத்தில் தாவி அமர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கமாகவே இரு கால்களையும் தொங்கவிட்டுக்கொண்டு கைகளால் ஆசனத்தைப் பற்றிக்கொள்கிறாள். நெஞ்சுத் துடிப்பு மிக விரைவாகிறது.

     “கெட்டிமாப் புடிச்சிக்க...”

     “புடிச்சிட்டிருக்கிறேன்.”

     “எங்க?”

     “சீட்டப் புடிச்சிட்டிருக்கிறேன்.”

     “அவன் சிரிக்கிறான், திரும்பி.

     சட்டை தோளில் உராய்கிறது. மிக நெருக்கத்தில் மென்மையான (பவுடர் மணம் என்று நினைக்கிறாள்) வாசனை இழைகிறது.

     முகத்தில் சிலிர்ப்போடுகிறது.

     வண்டியை அவன் கிளப்புகையில் தூக்கிப் போடுவது போல் அதிர்ச்சி குலுக்குகிறது. சட்டென்று அவன் தோளைப் பற்றிக்கொள்கிறாள்.

     அந்த நிலையிலேயே வண்டி தடதடவென்று செல்கிறது. பாலத்தில் ஏறி ஆற்றைக் கடக்கிறது.

     ‘தும் தும்’ என்று உடலுக்குள் ஒரு குலுக்கம் புதுமையான உணர்வுகளை வாரி இறைக்கிறது. அவன் தோளை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாள். ஆற்றோரமான சாலைப் புளிய மரங்களில் பட்டுத் துளிர்கள் வெயிலில் பளபளக்கின்றன. புதுக்குடிப் பெரிய கோயில் உற்சவத்தின் போது சுவாமிக்குக் குடை பிடிப்பார்கள். அந்தப் பட்டுக்குடையின் தங்கத் தொங்கட்டான்கள் இப்படித்தான் பளபளக்கும்.

     வாழ்க்கையின் இருண்ட ஏடுகள் போய், ஓர் ஒளிமயமான திருப்பத்துக்கு அவள் போய்க்கொண்டிருக்கிறாளோ?

     அவள் ஆறுமுகத்தைச் சென்று பார்ப்பதைக் குறித்து எத்தனை விதமாகவோ கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இந்த உண்மை நடப்பின் கனவாகக்கூட அவள் எண்ணங்கள் படியவில்லை.

     காலைச் சூரியன் மேலுக்கு விரைந்து அவளை நோக்கி நம்பிக்கையூட்டுகிறான்.

     அவள் கண்களை மூடிக்கொள்கிறாள். வண்டி சட்டென்று நிற்கிறது. எதிரே பத்ம விலாஸ் என்ற பெரிய ஓட்டல்.

     “எறங்கு. எதுனாலும் சாப்பிடலாம்...”

     “நாகபட்ணம் வந்திட்டமா?”

     “எதானும் சாப்பிட்டுப் போகலாம். பதினஞ்சி நிமிசத்தில நாகபட்ணந்தா...”

     “...வாணாங்க...”

     “என்ன வாணாம். காலம என்ன சாப்பிட்ட?”

     “...இட்லி...”

     “பொய்யி, உம்முகத்தப் பாத்தா நீ ஒண்ணுமே சாப்பிடாம வந்திருக்கிறேன்னு தெரியிது. எறங்கிடு கண்ணு வந்து எதுனாலும் சாப்பிடலாம்...”

     தள்ளவும் முடியவில்லை; கொள்ளவும் பயமாக இருக்கிறது.

     “இந்த ஒட்டல்ல எல்லாம் ஏ ஒண்ணா இருக்கும். நா இங்கதா சாப்பிடுவேன், எப்பவும். சும்மா வா...”

     “எனக்குப் பயமா இருக்குங்க...”

     “என்ன பயம்? இங்க ஒங்கப் பாரு இப்ப வந்து குதிக்கமாட்டாரு நம் ஆளுங்கதா எல்லாம். சும்மா வந்து சாப்பிடு, பாப்பாக் கண்ணு...”

     கல்லாவில் உட்கார்ந்திருக்கும் ஐயரிடம் இவனுக்கு விஷேச மரியாதை கிடைக்கிறது. ஒரு சிரிப்பு, கை உயர்ந்த வணக்கம். தடுக்கப்பட்ட அறைக்குள் சென்று மேசை முன் அமருகின்றனர்.

     இட்லி, பொங்கல் என்று ஆணை கொடுக்கிறான்.

     தேங்காய்ச் சட்டினி, சாம்பாருடன் எல்லாம் இசைந்து வயிற்றை நிரப்புகின்றன. காபி கள்ளிச் சொட்டாக நாவைவிட்டுப் பிரியவில்லை. ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொள்கிறான். பில்லைக் கொடுத்த பிறகு வெளியே வருகின்றனர்.

     “...நாகப்பட்ணம் போயிட்டுச் சாயங்கால மாத் திரும்பிடலாங்களா?”

     அவன் அவளைத் தாழ்ந்த பார்வையால் ஊடுருவுகிறான்.

     “ஊஹூம். உன்னைத் திருப்பி அங்க அனுப்புற எண்ணங் கிடையாது.” குளிர் சிலிர்ப்பில் குலுங்குகிறான்.

     “ஐயோ? அப்ப...”

     “ஐயோ ஆட்டுக்குட்டி உங்கப்பாவுக்கு தெரிஞ்சி போகாம இருக்குமா? அசட்டுத்தனமா திரும்பிப் போகலாங்கிறியே?... எங்கூட வந்து அப்பாவப் பாரு. பத்திரமா உங்கண்ணங்கிட்ட அனுப்பி வைக்கிறேன்.” அவளுக்குக் கண்கள் துளிர்த்து விடும்போல் நெகிழ்ச்சி உண்டாகிறது.

     “ரொம்ப நன்றிங்க.. ஆனா. ஆனா, நா மாத்துச் சேலை கூட இல்லாம வந்திருக்கிறேனே? சர்ட்டிபிகேட் மட்டுந்தா பையில வைச்சிருக்கிறேன்...”

     “சரியான பாப்பாக்கண்ணுதா நீ அவ்வளவு பெரிய வீட்டில் நீ வந்துட்டா, அப்பிடியேவா அனுப்புவாங்க? சும்மா உக்காரு...”

     அவள் இப்போது அவன் பின் அமருகையில் அவன் அவள் கையைத் தோளில் இருந்து எடுத்து இடுப்பைச் சுற்றி வைத்துக் கொள்ளச் செய்கிறான்.

     காந்தி சேற்றில் கால்பட இறங்கியதேயில்லை. ஒரு தடவை அப்பாவுக்குச் சோறு கொண்டு போனாள். வரப்பெல்லாம் சகதி காலைப் புதையச் செய்தது. கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாவாடையை முழங்காலுக்குத் தூக்கியவளாய் அவள் வாய்க்காலில் இறங்கிய போது, கால் நழுவிக் கூடையோடு வாய்க்காலில் விழுந்துவிட்டாள்.

     அருகில் களை பறித்துக் கொண்டிருந்த பாட்டி விரைந்து வந்து கூடையை மீட்டு, அவளையும் கைபிடித்துக் கரையேற்றினாள்.

     “கால ஊனி வச்சி எடுக்கறதில்ல, களுத? பள்ளக்குடில பெறந்திட்டு, வயக்காட்டுல நடக்கத் தெரியல...?” என்றாள்.

     அதற்குப் பிறகு அவள் சோறுகொண்டு செல்லவே மாட்டாள். வாய்க்காலுக்கு இக்கரையிலேயே நின்று யாரையேனும் பிள்ளைகளை விட்டுச் செய்தி கூறி வரச் சொல்வாள். அவள் படிப்பும் பழக்கமும் மறுமலர்ச்சியும் அரிசனக்குடியில் இருந்து வந்தவள் என்று நம்ப முடியாதபடி மாற்றியிருக்கின்றன.

     அவள் விடுதியில் இருந்தபோது, பரிமளா என்ற ஐயங்கார் வகுப்பில் பிறந்த தோழி ஒருநாள், “ஏன் காந்தி? உங்கூட்டில் நண்டு, நத்தை எல்லாம் குழம்பு வைப்பாங்களாமே?” என்று கேட்டாள்.

     “சீ நாங்க சாப்பிட மாட்டோம் அதெல்லாம்; எங்க வீடுங்கள்ள, மீனு, ஆட்டுக்கறி இது தவிர எதுவும் செய்ய மாட்டாங்க! அது கூட எனக்குப் பிடிக்காது. எனக்குப் பருப்புக் குழம்பு, சாம்பாரு இதெல்லாந்தான் இஷ்டம்” என்றாள். தாழ்த்தப்பட்டவர்கள் என்றே ஊருக்கு வெளியே குடியேறி வாழும் மக்கள் சூழலில், எண்ணெய் வடியும் தலையும் கருகருமேனியில் அழுக்குக் கச்சையும் வெற்றிலையால் சிவந்த வாயுமாக இருக்கும் இளைஞர்கள் யாரும் தன்னை நினைத்துப் பார்க்கக் கூடத் தகுதியில்லாதவர்கள் என்று அவள் இறுமாந்திருக்கிறாள். இப்போது சாலியின் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்துக் கொண்டு, சூழலைப் பார்க்கத் துணிவில்லாத சுய சிந்தனைகளுடன் குலுங்கிக் குலுங்கிச் செல்கிறாள்.

     வண்டி தென்னையும் மாவும் கிளி கொஞ்சும் சோலை களுக்கு நடுவே பெரிய கோயில் கோபுரம் தெரியும் ஒர் ஊரில் செல்கிறது.

     கிளைவழியில் திரும்பி ஒரு தெருவில் நாயகமாக விளங்கும் பெரிய மாடி வீட்டின் முன் நிற்கிறது. வாயிலில் சிமிட்டித் திண்ணைக்குக் கீழ் ஒரு வில் வண்டி கூண்டு சரிந்த நிலையில் காட்சி தருகிறது. அருகில் மாடுகள் செல்லும் சிமிட்டித் தளமிட்ட சந்து. திண்ணையின் முகப்பில் புதிய காவி வண்ண பெயிண்ட் துலங்க, சிமிட்டியின் சிவப்பும் பச்சை வரம்பும் பளிச்சென்றிருக்கின்றன.

     தூண்களின் பித்தளைப் பட்டங்களும், வாயிற்படி மரவேலைப்பாடுகளும், வீட்டின் செல்வச் செழிப்பை விள்ளுகின்றன.

     மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுச் சந்திலிருந்து முண்டாசும் அரைக் கச்சையுமாக ஒரு ஆள் வருகிறான். பார்த்துவிட்டு, “வாங்க சின்ன முதலாளி” என்று கூறிவிட்டு நிற்கிறான். அவன் வண்டியை நகர்த்தி ஓர் ஓரத்தில் இறங்குகிறான்.

     “வா காந்தி.”

     அவளுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இயல்பாக இருக்க முயன்றவளாக அவனைத் தொடர்ந்து முன்பட்டக சாலைக்கு வருகிறாள்.

     உடையார் வீட்டுக் கூடத்தைப்போல் அத்தனை பெரிதில்லை. எனினும் நாகரிகமாக முற்றத்தைச் சுற்றி இரும்பு வலை அழிபோட்டு பச்சை வண்ணம் அடித்திருக்கிறார்கள். கீழே சிவப்பு சிமிட்டி பளபளவென்று துலங்குகிறது. முற்றத்தில் வழவழவென்று மின்னும் தேக்கு மர ஊஞ்சலில், சங்கிலியின் நடுவே கைபிடிக்க பளபளவென்று பித்தளைக் குழல்கள் அணி செய்கின்றன. கூடத்தின் ஒரு மூலையில் பெரிய பத்தாயம் தேக்குமரம்தான் அதுவும்.

     “இப்படி வா, காந்தி!” என்று அழைத்துவிட்டு அவன் விடுவிடென்று கூடத்தின் அறைக்குள் நுழைந்து செல்கிறான் அவள் சுவரில் இருக்கும் பெரிய வண்ணப்படங்களைப் பார்க்கிறாள்.

     ஒன்றில் சரிகை வேட்டியும் கழுத்தில் ஒன்றை உருத்திராக்கமும் விளங்க, ஒரு பெரியவர் விரல்களில் மோதிரங்களுடன் நாதசுரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொன்றில் பரத நாட்டியக் கோலத்தில் ஒரு பெண்மணி புன்னகை செய்கிறாள். இடையே சில சிறிய புகைப்படங்கள் மாட்டப் பெற்றிருக்கின்றன. நேருவின் அருகில் அதே நாட்டியப் பெண் சதங்கையுடன் நிற்கிறாள். இன்னொன்றில் அந்த நாதசுரக் கலைஞருக்கு யாரோ மாலையிடுகிறார்கள்.

     காந்திக்கு மருட்சியாக இருக்கிறது.

     நாதசுரம், நாட்டியம், சின்ன மேளம், நாகப்பட்டினத்துப் பொதுமகளிரைக் குறிக்கும் சில ஈனச்சொற்கள் எல்லாம் சிந்தையில் மோதுகின்றன. நாற்று நடவு, மருந்துத் தெளிப்பு, உரமிடுதல், களைபிடுங்குதல் என்று வெயில் மழையில் அலைந்து பாடுபடாது போனாலும், மேல்சாதிக்கார ஆண்கள் வண்டி கட்டிக்கொண்டு, திருவாரூர், நாகப்பட்டினம் என்று பொதுமகளிரை நாடிச் சென்றால்தான் கெளரவம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறாள். இதை எல்லாம் பற்றிக் கொச்சையாக அவள் அப்பா கூட பேசியதுண்டு.

     இந்த இவன் யார் வீட்டுக்கு அவளைக் கூட்டி வந்திருக்கிறான்?

     அந்த அப்பா இங்கே யார் வீட்டில் இருக்கிறார்?

     அவளுக்கு பொருந்தவேயில்லை. இனந்தெரியாத பயம் ஆட்கொள்ளுகிறது.

     உள்ளிருந்து சற்றே பருமனாக, சிவந்த மேனியில் ஊட்டத்தின் மினுமினுப்பு இளமைக்கட்டும் மேவியிருக்க ஓரம்மாள் - நாற்பது வயசுக்கு மதிக்கக்கூடிய பெண்மணி வருகிறாள். நேர்வகிடுடன் கருகருவென்ற கூந்தலைக் கோடாலி முடிச்சாக முடிந்திருக்கிறாள். அந்த முடிச்சு சிறிய தேங்காயளவுக்கு இறுகியிருக்கிறது. வளைந்த புருவங்களுக்கிடையே நீண்ட குங்குமத்திலகம். இரண்டு மூக்கிலும், சுடர் விடும் வயிரப் பொட்டுக்கள். செவிகளில் சிவப்புப் பிரபை சூடிய வயிரத் தோடுகள். அரக்கும் மஞ்சளுமானதொரு சின்னாளப்பட்டுப் புடவையில் மிக எடுப்பாக இருக்கிறாள். புன்னகை செய்கையில் கன்னங்கள் குழிகின்றன. அந்தப் படத்தில் இருக்கும் பெண்மணி தான் அவள்.

     “வாம்மா? உக்காந்துக்கோ...”

     “இவுங்க சின்னம்மா, காந்தி. அப்பா செத்தமின்னதா கார்ல திருச்சிக்குப் போனாராம். நைட்டுக்குத் திரும்பிடுவாராம்.”

     “ஆமா. அங்க என்னமோ மீட்டிங்னு சொன்னாரு. நாங்கூட, ரெண்டுநாளா உடம்பு சரியில்லாம இருந்திருக்கு ரெஸ்ட் எடுத்துக்குங்களேன்னேன், ஆனா வந்த வங்க கேக்கிறாங்களா?. உட்காரம்மா? உம் பேரென்ன?”

     “காந்திமதி...”

     “நல்ல பேரு.”

     புன்னகையும் கண்களும் சொக்கவைக்கும் கவர்ச்சி.

     “என்ன சாப்பிடறே?. ரோஸ் மில்க் சாப்பிடுறியா பாபு?...”

     கேட்ட குரலுடன் “அடி பூவாயி! பூவாயி!” என்று விளிக்கிறாள்.

     கட்டுக்குட்டென்று ஒரு பாவாடை தாவணிப் பெண் வருகிறாள். அசப்பில் அம்சுவைப் போல் இருக்கிறாள். பித்தளை ஜிமிக்கியும், வளையலும் அவள் வேலைக்காரப் பெண் என்று பறைசாற்றுகின்றன.

     “தக்காளி போட்டு, வெங்காயம் நெறய அரிஞ்சு போட்டு முருங்கக்கா சாம்பார் வச்சிடு, புளிய ரொம்பக் கரச்சி ஊத்தாத, பக்குவமாயிருக்கட்டும். தாத்தா எங்கே?”

     “அது குளிக்கச் போயிருக்கும்.”

     “மரத்திலேந்து நீட்டக்காயா நாலு முருங்கக்கா அறுத்துக் குடுக்கச் சொல்லு, மருதுகிட்ட.”

     “சரிம்மா!”

     அவள் சென்றபின் சின்னம்மா எதிர்புறமுள்ள அறைக்குச் சென்று குளிரலமாரியைத் திறக்கிறாள். சற்றைக்கெல்லாம் இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் குளிர்ந்த ‘ரோஸ்மில்க்’ ஊற்றிக்கொண்டு வருகிறாள்.

     சாலி கூடத்தில் இருந்த அலமாரியைத் திறந்து பத்திரிகைக் கட்டுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

     “இந்தா பாபு.” அவன் ஒன்றை வாங்கிக் காந்தியிடம் நீட்டுகிறான்.

     “...வாணாங்க. இப்பத்தான் காபி எல்லாம் குடிச்சிட்டு வரோம்.”

     “அட கூச்சப்படாதே காந்தி, இது உங்கூடுன்னு நினைச்சிக்க...”

     “...இல்லிங்க... இப்ப.”

     “சும்மா அதும் இதும் சொல்லாத, சின்னம்மா ரோஸ் மில்க்தா குடுப்பாங்க. அப்பதா அவங்களுக்குத் திருப்தி சாப்பிடு...”

     உதட்டில் வைத்தால் அந்தச் சில்லிப்பு பற்களைக் கொட்டுகிறது. காந்தி எல்லாக் குழந்தைகளும் வாங்கும் இனிப்பு ஐஸ் குச்சி கூட வாங்க மாட்டாள்.

     ஆனால் சில்லிப்பு சிறிது பழகி விட்டதால் கூச்சம் விட்டுப் போய்விடும் போலிருக்கிறது. குடித்துவிட்டு டம்ளரைக் கழுவும் எண்ணத்துடன் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறாள்.

     “அப்படியே வச்சிடும்மா. பூவு வந்து கழுவி வய்ப்பா!”

     “மாடி ரூம் திறந்திருக்குதா சின்னம்மா?”

     “துறந்துதா இருக்கு. லச்சு நேத்தெல்லாம் வந்து புது டேப்பெல்லாம் போட்டுட்டிருந்திச்சி. எல்லாம் அப்படி அப்படியே வச்சிருக்கிறான்னு காலம ஐயா கோவிச்சிட்டுப் போனாரு...”

     “என்னென்ன டேப்பு புதிசாருக்கு?”

     “அதா, ஐயா கோலாலும்பூர் போயிருந்தப்ப பேசினதெல்லாம் நேத்து கொண்டிட்டு வந்திருந்திச்சி. பெறகு புதிசா குன்னக்குடி வயலின் டேப் ஒண்ணு போட்டிச்சி, என்னா அருமை! வெறும் வயலின்ல, காவேரி உற்பத்திலேந்து சங்கமம் வரைக்கும். அது சொல்லி முடியாது; ஐயாவுக்கு ரொம்பப் புடிச்சிருந்திச்சி. வானொலிலேந்து டேப் பண்ணிருக்கு...”

     “அட, அப்ப போட்டுப் பார்க்கணுமே!... வா காந்தி. மாடில ரேடியோ கிராம் இருக்கு. ஸ்டீரியோ டேப் போட்டுக் காட்டுகிறேன்.”

     காந்திக்குக் கூட்டைக் கீழே வைத்துவிட்டு ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டு ஆகாயத்தில் பறக்க எழும்பினாற் போன்று அச்சம் மேலிடுகிறது.

     கால்கள் பின்னிக்கொள்கின்றன.

     “வா காந்தி! என்ன பயம்?...”

     நடுப்படியில் தயங்குபவளை மேலே கைப்பற்றி அழைக்கிறான்.

     மாடி அறை பெரிதாக இருக்கிறது. மெத்தை போட்ட இரட்டைக் கட்டிலில் பச்சைப் பூப்போட்ட விரிப்பு. குட்டையான நீண்ட மேசைமேல் கண்ணாடிப் பெட்டிக்குள் ரேடியோவைப் போலிருக்கிறது.

     அவளுக்குப் பரிச்சயமேயில்லாத பல பொருள்கள் பெரிய கண்ணாடி பதித்த மெருகு மின்னும் அலமாரி, சுவரில் இவனுடைய தந்தையின் முழு உருவ வண்ணப்படம் அதில் சரிகை மாலை விளங்குகிறது.

     சாலி கண்ணாடிப் பெட்டி மூடியைத் திறந்து டேப்பை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்க்கிறான். டக்டக்கென்று ஒசையிட, ஒவ்வொன்றாகப் பொருத்திச் சுழலவிட்டுப் பரிசீலனை செய்கிறான்.

     “உனக்கு என்ன பாட்டுப் பிடிக்கும் காந்தி? புதிசா இப்ப வந்திருக்கே, அந்த சினிமாப் பாட்டு வைக்கட்டுமா?”

     குமிழ்களைத் திருகி அடித்து, சுழல விடுகிறான்.

     சந்தனக்கிண்ணம், தேனின் பலா... என்று காதற்பாட்டு சுருள் அவிழ்கிறது.

     அவன் அவள் அருகில் வந்து தோளைத் தொட்டு விழுங்குபவனைப் போல் பார்க்கிறான். அவள் அவன் கைகளை விலக்க முயலுகிறாள்.

     “காந்தி நீ ஏன் பயப்படுற?... நா... நா... உன்னைக் காதலிக்கிறேன். உன்ன பாத்ததிலேந்து என்னால் அமைதியா இருக்க முடியல காந்தி, ஐ லவ் யூ... எங்கப்பாவிடம் சொல்லி சம்மதத்தோட கூட்டி வந்தாப்போல நினச்சிக்க. காந்தி. ஏன் பேசமாட்டேங்கற?...”

     காந்தியினால் பேசத்தான் முடியவில்லை.

     ஏதோ ஒரு பேரலை மோதினாற்போல் பரவசமாகும் சிலிர்ப்பாகத் தோன்றுகிறது.

     “காந்தி... ஐ லவ் யூ, நீ ஏன் பேசாமலிருக்கிற?. காந்தி காந்தி!...”

     தனது வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரப்போகிறதென்று அன்று காலையில் கூட நினைவு இல்லை. ஆனால் அவள் அவனுடைய ஆக்கிரமிப்பில் இருந்து திமிறவில்லை. திமிறும் மறுவினை கூட அவள் உடலில் நிகழவில்லை. எத்தனையோ நாட்கள் காத்திருந்தாற் போன்று அவனைச் சுவீகரித்துக் கொள்ளும் உணர்வுகளே அவள் தடைக் குரல்களை அமுக்கி விடுகின்றன.

     கட்டிக்காக்கும் மிகையில்லாமல் இயல்பாகவே காக்கப்பட்டிருந்த மெல்லிய இழைகள் ஆரவாரம் இன்றி கரைந்து போகின்றன.


புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247