(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

19

     பள்ளமாக இருக்கும் பங்கிலிருக்கும் அதிகமான தேக்க நீரை, ஓர் இறைவை கட்டி மேட்டுப் பங்குக்கு மாமுண்டி இறைத்துக் கொண்டிருக்கிறான்.

     அது கோவிலுக்குரிய நிலம். சம்பாப் பயிர், பகங்கொள்ளையாகக் கண்களையும் மனதையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. வரப்பு மிகக் குறுகலாக இருக்கிறது. காலை எட்டி எட்டி வைத்துச் சம்முகம் மிக விரைவாக வாய்க்காலில் இறங்கிக் கடந்து வருகிறார். பொன்னடியான் இன்று வகுப்பெடுக்க வரவேண்டும்.

     பழைய கடைத்தெருக் கொட்டகையை விட்டு புதிதாக ஆற்றோரத்தில் குப்பன் சாம்பார் முதலியோருடைய குடிசைகளுக்கு அருகிலேயே ஒரு சிறு கூரைக் குடில் அமைத்திருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கக் கொடியை நட்டு, ‘படிப்பகம்’ என்று எழுதிய அட்டையையும் மாட்டியிருக்கிறார்கள்.

     முறையாகத் திறப்பு விழா என்று ஒன்றும் கொண்டாடவில்லை. பொன்னடியான் புதன் கிழமையும் சனிக்கிழமையும் வருகிறான். முக்கியமாக வடிவு, மாமுண்டி, சித்தையன் என்று ஐந்தாறு ஆண்களுடன், அம்சு, ருக்மணி, சாலாச்சி ஆகியோரும் முதல் வகுப்பில் வந்து அவன் பாடம் சொல்வதையும், பலகையில் எழுதிப் போடுவதையும் கேட்டார்கள், பார்த்தார்கள்.

     சம்முகம், இளைஞர்கள், தங்கள் தொழில், பொது அறிவு, சமுதாயம், உலகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த அறிவுபெற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர், அடுத்த வகுப்புக்குப் பொன்னடியான் வந்தபோது சம்முகம் ஐயர் பூமியில் மருந்து தெளிப்புக்குப் போய்விட்டார். அதற்கு அடுத்த வகுப்பில் ஐந்தாறு பேர்கூட இல்லை. வடிவு, குப்பன் சாம்பாரைப் பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, வேறெங்கோ உழவென்று போயிருந்தான்.

     அவன் இப்போதெல்லாம் அவர் கண்களில் அதிகம் படுவதில்லை. குப்பன் சாம்பார் மட்டுமே கூடக் கூட வருகிறான். பழனிப்பயல் எப்போதேனும் இங்கு வருகிறான்.

     சேத்துார் மதகை எட்டியதும் சாலையில் சைக்கிள் வருகிறதோ என்று பார்க்கிறார். பொன்னடியான் சைக்கிளிலேயே வந்து விடுகிறான். காந்தியைக் கட்டுவதுதான் நடக்கவில்லை. அந்தத் தலைகுனிவு நீங்க, இந்த அறுவடை முடிந்ததும் அம்சுவை இவனுக்கு விமரிசையாகக் கட்டிவைக்க வேண்டும் என்றதொரு வீம்பு இவருள் ஓங்கியிருக்கிறது.

     “வணக்கம் காம்ரேட். பத்து நிமிசம் லேட்டாயிடுச்சி...”

     சைக்கிளை விட்டிறங்கி அதை உருட்டிக்கொண்டே அவன் அவருடன் நடக்கிறான்.

     பசுமையில் பூத்த வண்ணப் பூக்களாய்ப் பெண்கள் குனிந்து களை பறிக்கிறார்கள். நல்ல மழையும் வெயிலும் பசுமைக்கு வீரியம் அளிக்க, கன்னிப் பெண்ணின் மலர்ச்சிபோல ‘தூர்’ பிடித்துப் பயிர்கள் விரிந்திருக்கின்றன.

     முட்செடிகளிடையே மாரியம்மா சுள்ளி பொறுக்குகிறாள்.

     “மாரியம்மா, வடிவு இருக்கிறானா?...”

     “அவனுக்கு ஒடம்பு நல்லால்ல. ஐயனார் குளத்து வயித்தியரிட்டப் போனா...”

     “ஏ என்னாச்சி? ரொம்பக் குடிச்சிட்டானா?”

     “அப்பிடியெல்லாம் வடிவு குடிக்கமாட்டா. அன்னிக்கி மழயில முச்சூடும் நனஞ்சிட்டான். சளி புடிச்சிக் காச்சலும் ஒடம்பு வலியுமா அல்லாடினா. சோறே சாப்பிடறதில்லே. பித்தமாயிருக்குன்னா...”

     “சரி, பழனி இருக்கிறானா?”

     “பழனி இப்ப எப்பிடி வருவான்? மிசின்ல மூட்ட வருமில்ல?”

     “வகுப்ப சாயங் காலமா வச்சிக்கிறதுன்னாலும் தோதுப்படுறதில்ல. அல்லாம் குடிக்கப் போயிடறாங்க. பொம்பிளங்களுக்கு வீட்டு வேலயிருக்கு. ஆனா இப்ப நடவு உழவு இல்ல, மத்தியானம் ஓரவரு ஒதுக்கலான்னு நினைச்சி வரேன்... அதான், காம்ரேட் காலம ஏழு மணிக்கு வேல தொடங்கி, மத்தியானம் ரெண்டு மணியோட வேலய முடிச்சிடனும்ணு சில இடங்களில் அமுல் பண்றாங்க. மஞ்சக்குடிப் பக்கமெல்லாம் இதுக்கு ஒத்திட்டிருக்காங்க, இதுனாலே நாம நாலு மணிக்குப் படிப்பகம் நடத்தலாமில்ல...?”

     சம்முகம் பேசாமல் நடக்கிறார்.

     இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை அவரால்.

     “நாம இந்தச் சங்கக் கூட்டத்துல பேசினதுதான? சேத்தில எறங்குனா ஏழு மணி நேரமும் தல நிமிராம வேலை செய்ய முடியுமா? நடுவில ஒருமணி, ரெண்டு மணி இருக்கிறது சரிதான். காலம எட்டுலேந்து பன்னண்டு. பெறகு இரண்டிலேந்து அஞ்சு, அஞ்சரைன்னு இருக்கிறதா சரி. அநேகமா பக்கத்திலேந்தா பொண்டுவ வூடுகளுக்குப் போயிட்டுக் கூட வாராங்க. புள்ளிக்கிப் பாலு கொடுக்கிறதுன்னு வேற இருக்கு... அதுமில்லாம, ரெண்டு மணிக்கே கள்ளுக் கடயில போயி உக்காந்திடுவாங்கல்ல?...”

     சங்கத்து வாசலுக்கு வருகிறார்கள்.

     நாலைந்து சிறுவர் சிறுமியர் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

     “ஏண்டால? ஸ்கூலுக்குப் போகல நீங்க?”

     பொன்னனின் பயல் முருகன் சம்முகம் கேட்டதும் மூக்கை உறிஞ்சிக்கொண்டு ஒடுகிறான்.

     பொன்னடியான் குடிசைகளுக்கு முன் நின்று “யாருமில்ல?... ஏ. ராசாத்தி உங்கண்ணனெங்க...” என்று ஆள் கூட்டுகிறான்.

     “எம்பேரு ராசாத்தியில்ல...”

     இடையில் பாவாடை கிழிந்து தொங்க முடி அவிழ்ந்து மறைக்க அதேபோன்ற சாயலுடைய ஒரு குழந்தையை இடுக்கிக்கொண்டு நிற்கும் சிறுமி சிரிக்கிறது.

     சங்கத்துக் கதவாக அமைந்த இரட்டை வரிக் கீற்றை எடுத்து வைக்கிறான். திறப்பு வைபவத்தன்று சாணி மெழுகிக் கோலமிட்டதுதான். கருமை பூசிய பலகை ஒரு முட்டுக்கட்டையின் ஆதரவில் சாய்ந்திருக்கிறது. உள்ளே ஆடு கோழி வகையறாக்கள் வந்து தங்கிய அடையாளமாகப் புழுக்கைகள், எச்சங்கள்.

     “மாதர் சங்கத்துக் கிட்டாம்மாளக் காணம்! இத்த நறுவிசு பண்ணி வைக்கக்கூடாது?”

     “தா... யாரங்க...? பாட்டி! கொஞ்சம் இங்க வா!...”

     ஒரு கிழவி தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய அகப்படுகிறாள்.

     ஒரு கீற்றைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கரும் பலகையைத் துடைத்து, கையோடு கொண்டு வந்திருக்கும் சாக்குக்கட்டியால் தேதியை எழுதிப் போடுகிறான்.

     பையிலிருந்து புதிய பத்திரிகை, சிறிய துண்டுப் பிரசுரங்களை எடுத்து வைக்கிறான்.

     சம்முகம் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார்.

     மாடசாமி வாய்க்கார் கட்டம்போட்ட சிவப்புத் துண்டுடன் ஓடி வருகிறான்.

     “முதலாளி... முதலாளி... வீரபத்திரனையும் குஞ்சிதத்தையும் போலீசில புடிச்சிட்டுப் போறாவ...!”

     “என்னடா..? போலீசிலா?”

     “ஆமா அக்கிரகாரத்துப் பக்கம் காலமேந்து கூட்டம் கூடிக் கெடக்குது...”

     “ஏ, என்னாச்சி?”

     “கோயிலில் அம்மன் நகையெல்லாம் வச்சிப் பூட்டிருந்தாங்களாம். பொட்டி ஒடச்சிருக்குதாம்...”

     “அதுக்கு...? வீரபத்திரனுக்கென்ன? கோயிலுக்கு நகை இருக்கிற விசயமே நமக்குத் தெரியாது.”

     “அதென்ன்மோ மூணு நா முன்னம செங்கல்பட்டு ஐயிரு, வரதராசன் எல்லாரும் வந்து பொட்டி தொறந்து அல்லா நகையும் பார்த்து வச்சிப் பூட்டினாங்களாம். இப்ப பொட்டி ஒடச்சிருக்கு தாம். சரப்பளியோ, பதக்கமோ காணாம போயிடிச்சாம். வீரபத்திரனும் குஞ்சிதமுந்தா வூட்ட ராவில இருந்தாங்களாம். கிட்டம்மா இப்பத்தா அழுதுகிட்டே போவுது, வடிவுப் பயதா கூட்டிட்டுப் போறா.”

     “இதென்னடா வம்பாயிருக்கு?”

     பொன்னடியான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

     அக்கிரகாரத்துக் கூட்டம் இன்னமும் கரையவில்லை.

     குருக்கள் வீட்டு வாசலில் ரங்கன் பயல், நடராசு சின்னத் தம்பி, விருத்தாசலத்தின் அக்கா, மூலையான் மனைவி எல்லாரும் இருக்கின்றனர்.

     “என்னங்க சாமி?”

     “சம்முவமா? வாப்பா. விசாரணைன்னு டேசனுக்குக் கொண்டு போயிருக்காங்க. நிலவறைக் கதவு திறந்திருக்கு. இரும்புப் பெட்டிய மறு சாவி போட்டுத் திறந்திருக்காங்க. ஒட்டியாணம், சரப்பளி மாலை, கல்லிழைச்ச பதக்கம், நாலு சங்கிலி எல்லாம் காணலியாம். மூணு நா முன்ன ஐயர் வந்து லிஸ்ட் கொண்டாந்து பாத்தாங்களாம்...”

     “குஞ்சிதம், இந்தப் பொம்பிள பாவம், அத்த வேற புடிச்சிருக்காங்குறிய?”

     “வீரபுத்திரன் வூட்டுலதா ராத் தங்குறானாம், காவலுக்குன்னு. தேங்கா புடுங்கிப் போட்டிருக்காங்க, சாமான் சட்டெல்லாம் இருக்கு. இந்தப் பொம்பிளதா கேக்க வேண்டாம். இவளும் இங்கதானிருந்திருக்கா. இரண்டாங்கட்டு ரூம்ல நிலவற இருக்கு...”

     “ராத்திரி பூட்டிட்டுப் போனேன்னு நடராசு சொல்லுறான். அந்த ரூம் பூட்டுத் திறந்து பத்து இருபது நாளாச்சி. பாத்திரமெல்லாம் குஞ்சிதம் தேச்சி வச்சா, எனக்குத் தெரியும். அந்தப் பக்கமே நா போகலன்னு வீரபுத்திரன் அழறான், பாவம். ஆனா, நகை என்னமோ காணல. குஞ்சிதத்தின் சீலையில் சாவி இருந்ததாம். அதுதா மாத்து சாவியாம்...”

     “இதென்ன சாமி, நம்பறாப்பல இல்லியே? அந்தப் பொம்பிள எதோ நாலுபேர அண்டிட்டுப் பிழச்சிட்டிருந்திச்சி. அத்தப் போயி...”

     “அதா இவந் தூண்டுதலில் அவளும் சம்பந்தப் பட்டிருக்கலாம்...”

     “என்னா சாமி, கேவுறில் நெய்யொழுவுதுன்னா கேக்கிறவங்களுக்கு மதி வாணாம்?”

     “கோவிலுக்கு சாமி கும்புடவே போகாத ஆளுங்க, கோயில் விசயமே தெரியாது. இது அப்பட்டமான சூட்சியாயிருக்குதே?”

     விருத்தாசலத்தின் அக்காள் மங்கம்மா தன் பெரிய குரலெடுத்துப் பாய்ந்து வருகிறாள்.

     “கழிசடங்க. சாமி கும்பிடப் போகாத சனியங்க. இந்தக் கோயில் விழா நல்லபடியா நடக்கக்கூடாதுன்னு கச்ச கட்டிட்டு இப்பிடிப் பண்ணித் தொலச்சிருக்குங்க. குஞ்சிதமாம் குஞ்சிதம், வெளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சலம். எங்கேந்தோ வந்த பர நாயி. அத்த வூட்ட வச்சி, சோறு போட்டதுக்கு இப்பிடிக் கோயில் சொத்தக் களவாண்டிருக்கிறாளே? வீரபுத்திரன் தல தெறிச்சி நின்னான். என்னடா பேச்சு? ஒரு நிமிசத்தில துக்கி எறிஞ்சிடுவா! பண்ணக்கார பயனுவளாவா இருக்குறானுவ?”

     சம்முகத்தின் நாவில் வசைகள் தெறிக்கின்றன. கொட்டிவிடாமல் பதுக்கிக் கொள்கிறார்.

     “கணக்கப்புள்ள, பழயமணிகாரர் அல்லாருந்தா இருந்தாவ. அந்தக் களுத வாயத் தொறந்தாளா? இனிஸ்பெட்டரு வந்து கேக்கறாரு இவ, வாயெ தொறக்கல. இந்தச் சாவி உனக்கு எப்பிடிம்மா கெடச்சிச்சின்னு கேக்குறாரு ஒண்ணுமே பேசல. சரி டேசனுக்கு இட்டுப் போயி கேக்குறபடி கேக்குறோம்னு போயிருக்காங்க. தங்கம் விக்கிற வெலயில டேயப்பா! போயிருக்குற பொருள ஒரு லட்சத்துக்குக் காணும்...”

     இந்த நகைகளை இவர்களே பதுக்கிக்கொண்டு இப்படி நாடகம் ஆடுகிறார்களா?

     கோயில் திருவிழா நாடகமே இதற்குத்தானா?

     ஆனால் இதையெல்லாம் எப்படிக் கேட்பது?

     “நாம அப்ப அஸ்தமங்கலம் போயித்தான் பார்க்கணும். முள்ளுமேல போட்ட துணியாக நம்ம சமூக வாழ்க்கை ஆயிடுச்சி.”

     சம்முகத்துக்கு நெற்றி வேர்க்கிறது. காலையிலிருந்து ஒழுங்காக ஒன்றும் சாப்பிட்டிருக்கவில்லை. சிறிது நீராகாரம் அருந்திவிட்டு விடியற்காலையில் வயலுக்குச் சென்றவர்தாம். வீட்டுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது.

     “வாப்பா, பொன்னு, வீட்டுக்குப் போயிட்டு வரலாம்...”

     சைக்கிளில் பின்னே அமர்ந்து கொள்கிறார். விரைவாகவே விடு திரும்பி விடுகின்றனர். சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே குனிந்து நுழைகிறார்.

     வாசலில் பெட்டைக்கோழியும் ஒரு குஞ்சும் இரை பொறுக்குகின்றன.

     திண்ணையில் அப்பா படுத்திருக்கிறார். இப்போதெல்லாம் இவர் படுத்தே கிடக்கிறாரே என்று தோன்றுகிறது.

     வீடு திறந்திருக்கிறது. உள்ளே மனித அரவமே தெரியவில்லை.

     “அம்சு!...”

     கூவிக்கொண்டே நடுவிட்டில் துண்டைப் போட்டுக் கொண்டு அமருகிறார்.

     தாய்தான் பின் தாழ்வரையிலிருந்து வருகிறாள்.

     “உக்காரு தம்பி. எங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்கிறாங்களா?”

     “காத்தான் மாமன் வந்து சொன்னா, நடவுன்னு நாளாக்கிப் பத்து ரூபாக்கிமேல செலவாவுதில்ல? போயிருக்காவ...”

     “சோறிருக்குதா, எதுனாலும் இருந்தா எடுத்து வையி. ஒரே குழப்பம். இப்ப போலீஸ் டேசனப் பார்க்க போவணும்...”

     இதொன்றும் கவனமில்லாதவள் போல் உள்ளே பார்க்கிறாள் கிழவி.

     சமையலறை இருட்டிலிருந்து கையில் தண்ணிர் செம்புடன் வெளிப்படும் உருவம் கண்களில் முதலில் நிழலாக பின்னர் தூலமாக - உயிர் வடிவாகத் தெரிந்து பார்வையை அப்பிக் கொள்கிறது.

     தண்ணிரைக் கொண்டு கீழே வைப்பவள் குனிகையில் கன்னத்தில் நெருப்புத் தழலாக விரல்கள் வீறுகின்றன. தண்ணிர் சிதறப் பாத்திரம் பிடியை விட்டு நழுவிச் சாய்கிறது.

     காந்தி இதை எதிர்பார்த்தவளாகவே சுவரைப் பற்றிக் கொண்டு, கண்ணீரை விழுங்கிக்கொண்டு அவரைப் பார்க்கிறாள்.

     ‘இது நியாயமா’ என்று துளைப்பது போலிருக்கிறது அந்தப் பார்வை.

     சிறிது நேரம் அவருக்கும் எதுவும் புரியவில்லை. பொன்னடியான் வெளியே வந்து தெருவைப் பார்க்கிறான்.

     “எந்த மூஞ்சிய வச்சிட்டு நாய் மாதிரி உள்ளே நுழஞ்ச? சீச்சி! வெக்கங்கெட்டு எப்பிடி வந்து உள்ளாற நுழைஞ்சு எம்முன்ன வந்து நிக்கிற? பொட்டச் சிறுக்கி, உங்குணத்தக் காட்டிட்டியே?” அவள் அசையவேயில்லை.

     அவள் எதிரொலி எழுப்பியிருந்தால் அவருடைய பொங்கலுக்கும் குமைச்சலுக்கும் வடிகாலாக இருந்திருக்கும். சிலையாக நின்றதுஎழுச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. தம்முடைய சீற்றத்தின் வேர்களை அசைப்பதாக இருக்கிறது. எனவே தமக்குச் சாதகமான வகையில் மருமகள் வெளியே நிறுத்தி வைத்தது, மகன் உதாசீனப்படுத்தியது எல்லாம் நினைவில் புரண்டு கொடுத்து அவரை வெறியனாக்குகின்றன.

     “என்னடீ, நாங் கேக்குற, நிக்கற? அந்தப் பய கூட ஸ்கூட்டர்லல்ல ஊர்கோலம் போனியாமே? ஒட்டல்லே பார்த்ததாக ஒந்திரியர் சொன்னாரு எண்சாணும் ஒரு சாணாக் குறுகிப்போனேன். அப்பிடியே கெடந்து மானம் துடிச்சிச்சி. அப்பிடி ஒரு ஒடம்பு கேக்குமாடீ?... இந்தக் குடிலபெறந்து...” வசைகள் கட்டுக்கடங்கவில்லை. எழுந்து தாவுகிறார்.

     கிழவி குறுக்கே மறிக்கிறாள்.

     “என்னடால, உனக்குப் புத்தி பெரண்டு போச்சு? அது இந்த மட்டுக்கும் சமாளிச்சிட்டு வந்திருக்குதேன்னு ஒரு தன்ம வேணாம்? இத உம்பய கூடத்தான் போயி கட்டிக்கிட்டான். அவன் ஒரு வூட்டில கொண்டாந்து வச்சி கொளாவல?...”

     “நீ இப்ப நாயம் பேச வந்திட்டியாக்கும்? அவங் கண்ணு காணாம தொலைஞ்சி போயிருக்கிறா. ஓடிப் பூடிச்சாமேன்னு கேட்டவங்க திரும்பி வந்திடிச்சி போலிருக்குன்னு சொல்லுறப்ப... மானமே போயிடுமே! யாராருக்கோ நாயஞ் சொன்னான். பொண்ண மட்டும் கூட்டி வச்சிட்டான்னு சொல்லமாட்டா? ஒரு பய என்ன மதிப்பானா?... இனிமே இவள எந்தப்பய கட்டுவா? போயித்தொலஞ்சவ அங்கியே இருக்கிறத வுட்டுட்டு ஏண்டி வந்தே?”

     அவளுக்கு உதடுகள் துடிக்கின்றன. முகத்தை மூடிக்கொண்டு விம்முகிறாள்.

     “ஏண்டி வந்தே? அப்பன் முகத்தில கரி பூசினாலும் சமாளிச்சிக்குவான், இருந்து அவனச் சாவ அடிக்கணும்னு திரும்பி வந்தியா? உனக்கு சூடு சொரண இருந்தாப் போயிருப்பியா, போனவ திரும்பி வந்திருப்பியா?. இதபாரு, இந்த வீட்டில இனிமே எடமில்ல. நட... எவங்கிட்ட வேணாப் போ...”

     அவள் கையைப் பற்றித் தள்ளுகிறார். அவள் எதிர்ப்புக் காட்டாததால் தடுமாறி விழுகிறாள்.

     “லே, சம்முகம். நீ செத்த சும்மாருடா. அது வரவே மாட்டேனுதா சொல்லிச்சாம். ஆத்துல கொளத்துல வுழுந்து பழிகொண்டு வராம வந்திச்சேன்னு எரக்கப்படு. ஆந்தக் குடியா பெத்த பயதா, படிச்சிட்டு வந்திருக்கிறான்ல. தேவு, ஐயிரு வூட்டில வந்திருச்சாம். ஐயிரு அவங்க கூட சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதபாரு லட்டர் கூடக் குடுத்திருக்காரு...”

     ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

     “சம்முகத்துக்கு ஆசீர்வாதம். மகள் காந்தியைக் தேவுவுடன் அனுப்பி வைக்கிறேன். எதுவும் முரண்டாமல் ஏற்றுக்கொள். அவள் மகா தைரியசாலி. சோதனைக்குள் அகப்பட்டு அதிலிருந்து எழும்பி வருவதுதான் தீரம்.

     உன்னுடைய ஊர் கெட்டு, சாதிக்கெட்டு, கொள்கைக் கெட்டு எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, மனிதாபிமானக் கண்ணோடு பாரு. புதைமணலில் கால் வைத்தவள் தெரிந்து தப்பி வந்திருக்கிறாள். இன்றைய நிலையில் பெண்ணினம் எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்பதற்கு அவள் அநுபவமே போதும். இந்த நிலையை மாற்றப் பெரிய அளவிலே எதானும் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. அவளை அடிக்காதே. புண்படுத்தாதே. விசுவநாதன்.”

     சட்டென்று தெருவாசலைப் பார்க்கிறார்.

     நாகு கையில் மண்ணை வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டே நெல் துற்றுவதுபோல் இறைக்கிறான்.

     சைக்கிளை, பொன்னடியானைக் காணவில்லை.

     தலைவிரிகோலமாகக் கிட்டம்மாளும், தேவுவும் வருகின்றனர்.

     தேவு சற்றே முகமலர வணக்கம் தெரிவிக்கிறான்.

     “எங்குடில மண்ணள்ளிப் போட்டுட்டாங்க, அந்தத் தேவிடியா! ஊராம் புள்ளக அத்தினி பேரயும் கொலச்சிப் போடணும்னு வந்த பரநாயி. எம்புருசனுக்கு ஒண்ணு தெரியாது. இவுருபோயி கள்ளச்சாவி கொண்டாந்தாராம். மாரியாயி! நீ பாத்துக்கிட்டுத்தான் இருக்கிற...?”

     தெருவில் உள்ள பொட்டு பொடிசுகள் கூடிவிடுகின்றன. படுக்கையோடு கிடந்த கிழவன் ஏதோ கனவு கலைந்தாற் போன்று எழுந்து உட்காருகிறான்.

     “நீங்க இப்ப கொஞ்சம் வாங்க. நாம போலீஸ் ஸ்டேசனுக்குப் போயி மேக்கொண்டு செய்ய வேண்டியதைப் பார்ப்போம்..” என்று தேவு நிதானமாகக் கூறுகிறான்.

     “நான் காலம வந்திருந்தேன்...”

     “நானும் அதான் கிளம்பினேன்... இது ஒரே அடாவடியால்ல இருக்கு. எப்படியோ கண்ணி வச்சி நாடகம் போடுறாங்க. கோவில் திருவிழான்னு வரப்பவே சம்சயமாயிருந்திச்சி...”

     “இப்ப, முக்கியமா மணிகாரரு. வரதராசனெல்லாம் கூட ரொம்ப அக்கறை காட்டல. நகை என்னென்ன இருந்திச்சின்னு சரியா லிஸ்ட் குடுக்கவே ஆளுங்க இல்ல. சாவி செத்துப்போன அம்மா வாசுதேவங்கிட்டக் குடுத்து, அவரு கொண்டாந்தாராம். ஆனா, அது நிலவறச் சாவிதான்னு குருக்கள் சொல்றாரு... விருத்தாசலம், வாசுதேவன் நாலு பேருக்கு முன்ன சாவியக் காட்டித் திறந்து நகையப் பாத்துட்டு வச்சாருன்னும், பிறகு பெட்டிய நிலவறயில வச்சிப் பூட்டிட்டு அந்தச் சாவிய வூட்டில கொண்டு பீரோவில் வச்சாருன்னும் சொல்றாங்க. வீரபுத்திரன் முந்தாநா அவுருகிட்ட சாயங்காலம் காசு கேக்கப் போனானாம். கூடத்துல அவனப் பாத்ததாக அம்மா சொல்லிச்சாம். பீரோல சாவி தொங்கிச்சாம். ஒண்ணும் நம்பறாப்பல இல்ல. கோயிலுக்கு இத்தினி சொத்து, நகை இருக்கு, ஏன் எண்டோமெண்ட் போர்ட் கீழ வரலங்கிறதே பெரிய கேள்வி. முதல்ல, நாம போயி அந்தப் பொம்பிளய விடுவிச்சிட்டு வரணும். ஸ்டேஷனிலே ரா நேரத்துக்கு வச்சிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு.”

     கிட்டம்மா இதைக் கேட்டதும் குமுறிப் பாய்கிறாள்.

     “பொம்பிள... பொம்பிளயா அவு? எங்குடிக்கில்ல மண்ணு போட்டுட்டா! ஊராம்புள ஒருத்தன் பாக்கியில்ல. இவ போலீசுகாரனயும் வளச்சிட்டிருப்பா... ஊரு சனமறியாம, ஒடம்ப வித்து சீவிக்கிறவளுக்குப் போயி சட்டம் பேசுறிய?...”

     “த, ஏனிப்படி லோலு லோலுன்னு கத்துறீங்கம்மா? ஒரு பொம்பிளக்கிப் பொம்பிளங்கற எரக்க புத்தி உங்களுக்கு இல்லாம போனதுதா எல்லாத்தயும் விட மோசம்!...”

     அவர்கள் படி ஏறாமலே நிற்கின்றனர். சம்முகம் சட்டையை மாட்டிக் கொண்டு செல்கிறார்.