உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 11 புதுக்குடியில் காலையில் மழை பெய்திருக்கிறது போலிருக்கிறது. இரண்டு துாற்றல் விழுந்தால் போதும், சாலை கசகசவென்று கால் வைக்கத் தகுதியில்லாமலாகி விடும். பஸ் நிறுத்தம் கசகசப்பின் உச்சம். சாதாரண நாளாக இருந்தால் சம்முகம் விசுவநாதன் வீட்டுக்கு நடந்து சென்றுவிடுவார். டவுன் பஸ் ஏதோ போகிறது. ஆனால் அதற்குக் காத்திருந்து, அது நிற்கும் இடத்திலிருந்து மீண்டும் நடப்பது பிரயாசையாக இருக்கும். வடிவு ஒரு ரிக்ஷாக்காரனிடம் பேரம் செய்து, மூன்று ரூபாயிலிருந்து ஒன்றே கால் ரூபாயில் இறங்கி, அவரை உட்காரச் செய்கிறான். “நீங்க போயிட்டு வாங்க முதலாளி. நா பின்னோடையே வாரேன்.” “வீடு தெரியுமில்ல?” “ஏந் தெரியாது?” கையில் சாக்குச் சுருணை, வீச்சம் இரண்டும் அவன் இரகசியத்தை அம்பலப்படுத்துகின்றன. ‘...ப்பயல், பாம்பு கொன்றிருக்கிறான். விருத்தாசலம் பிள்ளை சொன்னது சரியாகத்தானிருக்கிறது!” பெரிய வீதி தாண்டி, மண்டபம் கடந்து ரிக்ஷா செல்கிறது. வெயில் விரைவாக உச்சிக்கு ஏறுகிறது. மணி பதினொன்றிருக்கும் என்று தோன்றுகிறது. வழக்கம்போல் விசுவநாதன் மேல் திண்ணையில் உட்கார்ந்திருக்கவில்லை. வண்டிக்கு ஒன்றேகால் ரூபாயைக் கொடுத்துவிட்டு மெள்ளப் படி ஏறுகிறார். உள்ளிருந்து பெரிய கண்களும் தாழம்பூச் சிவப்புமாக அவர் பெண்தான் வருகிறாள். “அப்பா இருக்கிறாராம்மா?” “...குளிச்சிட்டிருக்காங்க. நீங்க ஆரைப் பாக்க வந்தீங்க?” அவள் கண்கள் அவருடைய பற்றுப் போட்ட காலின் மீது படிகிறது. “அப்பாரைத்தா, விசுவநாதன். கிளியந்துறை சம்முகம்னாத் தெரியும்.” சற்றைக்கெல்லாம் நெற்றியில் துளி நீருடன் மேலே பனியனைப் போட்டுக்கொண்டு விசுவநாதன் வருகிறார். “என்னப்பா சம்முகம்? இரண்டாயிரம் ரூபாய் கிடைச்சிடிச்சா?” சிரிக்கிறார். சம்முகத்துக்குச் சிரிப்பு வரவில்லை. மனதில் ஏதேதோ தலைகால் புரியாத ஆத்திரங்கள். அந்தச் சிறுக்கி நேத்துக் காலம ஓடிட்டா என்று அழவேண்டும் போலிருக்கிறது. அவள் உடையார் வீட்டுப் பெண்ணுடன் சினிமாவுக்குச் சென்றிருக்க வில்லை என்று ஏதோ மனக்குறளி கூறுகிறது. ஏனெனில் அவள் ஒரு தீர்மானமில்லாமல் ராத்தங்கி இருக்கமாட்டாள். “நேத்துக்காலம அந்தச் சிறுக்கி வீட்ட விட்டுப் போனவ திரும்பி வர இல்ல, சாமி. ஒடயார் வீட்டுக்குப் போறேன்னு போனவ வரல. அங்க தலையாரிப் பயல அனுப்பிச்சேன். இல்ல, சினிமாவுக்குப் போயிருக்காங்கிறான். எனக்கு சமுசயம் ஏன்னா, அந்தத் தேவுடியா-மவன், இங்க அன்னிக்குக் காரில வந்தானே, அவன எங்க வீட்டுக் கோடரிக்காம்பு வீட்டுக்கே கூட்டியாந்தான். தெருத் திண்னயில உட்காந்து எங்காது கேக்க, இந்தச் சிறுக்கிகிட்ட எங்கூட்டுக்கு வந்து அப்பாரப் பாரு, உனக்கு சீட் கிடைக்கும்னு குழயடிச்சான்... இப்ப எங்கிட்ட சிநேகிதி கிட்டப் போறேன்னு காதுகுத்திட்டு ஓடிட்டா... சாமி... படிக்க வச்ச ரெண்டு நாய்களும் இப்பிடித் துரோகம் பண்ணிடுச்சே?” அவர் கடகடவென்று சிரிக்கிறார். “நீ ஏண்டா சம்முகம் பிரலாபிக்கிற? இதெல்லாம் உன்னாலும் என்னாலும் தடுத்து நிறுத்த முடியுமா? பள்ளம் கண்ட எடம் தண்ணி பாயிது!” “என்ன சாமி, இப்பிடிச் சொல்றீங்க? சேத்துப் புழுக்களா இருந்தவங்க இன்னிக்கு இந்த அளவுக்கு வர எத்தினி அடியும் மிதியும் பட்டோம்? குடும்பம் எப்படிப் பஞ்சிப் பிசிறுகளாச்சி? இன்னும் ஒரு மூக்கறைப் பிண்டத்தை வச்சிச் சுமை இழுத்திட்டிருக்கிறோம். இப்ப கண்ணு முழிச்ச இந்த நாய்களுக்கு நன்னி இல்லாம போயிடிச்சே? கோட்டைன்னு நினைச்சி இறுமாப்பு வச்சிட்டிருக்காதேன்னு மூஞ்சிலடிச்சிட்டுப் போனாப்பல...” “அட ஏண்டா பொலம்பிச் சாகற? படிச்ச பொண்ணு. உங்காலத்துப் பிரச்னை வேற; இப்ப அதுங்க கண்ணோட்டம் வேற, ஏம் விருதாவா சங்கடப்பட்டுட்டிருக்கே? விட்டுத்தள்ளு!” “எப்படிங்க விட்டுத் தள்ளுவது? எங்க தாய் தகப்பனுக்கு இருந்திராத சவுரியம் எங்களுக்கிருக்கு, எங்களுக்கில்லாத சவுரியம் எங்க மக்களுக்குன்னு அவங்கள கோபுரத்தில ஏத்தி வைக்கணும்னு பாடுபட்டேன். பையன் கட்டிக்கிட்ட வேட்டிய நா உடுத்துவேன். பொண்ணு... அவள சமீன்வீட்டுப் புள்ள மாதிரி நடத்தினேன்...” அவர் அருகில் வந்து தோளைப் பற்றுகிறார். “என்னடா இவ்வளவு திராபையா இருக்கிற பொண்ணாவது புள்ளயாவது; ஏதோ உன் கடமை, நீ செஞ்சே. அவங்கவங்க கரும பலனை அவங்கவங்க அநுபவிச்சிட்டுப் போறாங்க...” திடுக்கிட்டாற்போல் சம்முகம் குலுங்குகிறார். “வெந்ததத் தின்னு விதி வந்தாச் சாவோம், நாம சாணிப் புழுக்களப் போல இருக்கத்தான் பிறவி எடுத்தோம்ங்கறது அறியாமை. எழுந்திருங்கடா” என்று ஆவேசப்பிரசங்கம் செய்த விசுவநாதனா இவர்? “என்ன சாமி! நீங்களே இப்ப கருமம் அது இதுன்னு பேசுறீங்க? இன்னும் எங்க குடிகள்ள ஒரு சிலரத் தவுர எல்லாம் சேத்தில உழச்சிட்டு, கள்ளக் குடிச்சிட்டு, பொண்டு பிள்ளைகளைப் பராரியா நிக்கவச்சிட்டிருக்காங்க. நினைச்சிப் பாத்தா ஒரு முன்னேத்தமில்ல. சுடுகாட்டுக்குப் போக வழி குடுக்க மாட்டேங்கறாங்க. அன்னிக்கு சாமி கும்பிடாதியன்னும் வள்ளிக்கும் முருகனுக்கும் திரட்சிக் கல்யாணம்னும், ஊர் மேயுற திருட்டுச் சாமிகளை ஏண்டா கொண்டாடணும்னும் அசிங்க அசிங்கமா பேசினானுவ, நோட்டீசு போட்டு ஒட்டினானுவ. எங்க பொண்டுவ திருட்டுத் தனமா சாமி கும்புடப் போவாங்க. இப்ப இன்னிக்கு திடீர்னு சாமி கும்பிடணும், கோயில் சீர் பண்ணனும், இப்ப குடிசயக் காலி பண்ணுன்னு கிட்டிய வக்கிறான்.” “ஆர்ராது?...” “அதா விருத்தாலம்புள்ள, இன்னும் ஊரில இருக்கிறவங்க அல்லாந்தா.” “இப்ப ரொம்ப செழிப்போ?...” “கோயில் சொத்தெல்லா அவங்கய்யில தான இருக்கு? பத்து வருசமா கொள்ளையடிச்சிருக்கானில்ல?” “திருட்டுப் பயலுவகதா சாமி பூதம்னு வேசம் போடுறானுவ. அவனுவகளுக்குத்தான பயம்?” “... சாமி, என் காலப் பாருங்க! இது வேற ரோதன. அன்னிக்கிப்போன பிறகு நடமாட்டமே இல்ல...” குதிகாலைத் திருப்பிக் காட்டுகிறார். பாத முழுவதுமே வீங்கி இருக்கிறது. அவர் கைவிரலால் வீக்கத்தை அழுத்திப் பார்க்கிறார். பிறகு உள்ளே சென்று சட்டையை மாட்டிக்கொண்டு திரும்புகிறார். அவரால் காலைக் கீழே ஊன்றி வைக்க முடியவில்லை. மெள்ள சுவரைப் பற்றிக்கொண்டு நொண்டினாற்போன்று அடுத்த வீட்டுப்படி ஏறுகின்றனர். வாயில்மேல் திண்ணையில் கைக்குழந்தைக்காரிகள், சளி, இருமல், தலைக்கட்டு என்று ஒரு நோய்க் கூட்டம் காத்திருக்கிறது. கடந்து உள்ளே செல்கின்றனர். இடைகழிக்கப்பால் பெரிய கூடத்தின் ஓர் ஓரத்தில் திரை இருக்கிறது. ஒரு வெள்ளைச்சேலை நர்சும், இன்னும் சில நோயாளிகளும், டாக்டர் உள்ளே பார்க்கிறார் என்பதை அறிவிக்கின்றனர். பெஞ்சி ஒன்றில் அவனுடன் அமர்ந்து கொள்கிறார். உள்ளிருந்தவர் வந்ததும் இவர்களை முதலாக விடுகிறாள். “அட... வாங்க சித்தப்பா, எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாது? நான் வருவேனே?” சம்முகம் பின் தொடருவதைப் பிறகே கவனிக்கிறாள். “நம்ம பழைய நாளைய தோஸ்த், கீதா. கிளியந்துறை. நடையா நடப்பான். காலைப்பாரு...” சம்முகம் நாற்காலியில் அமர்ந்து சிறு ஸ்டுலில் காலை வைத்துக் காட்டுகிறார். பட்டுத்துணிபோல் மினுமினுக்கும் முடி... ராஜகளை. மொழுமொழுவென்ற கைவிரலினால் தொட்டுப் பார்க்கிறாள். முன்னுக்கு வரும் தன்மை எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் முடங்கி விடுவதில்லை. இப்படி அவர்கள் குடியில் பிறந்தவர்கள் நூற்றில் ஒருவரேனும் வரமுடிகிறதா? எங்கோ ஆயிரத்தில் ஒன்று. இத்தனை சலுகைகளைப் பற்றித் தம்பட்டம்போடும் காலத்தில்! கையைக் கழுவிக்கொண்டு வந்து வயசு அது இது எல்லா விவரங்களும் கேட்கிறாள். நீர், இரத்தம் எல்லாம் பரிசோதனை செய்ய வேணுமாம். எல்லாம் அங்கேயே செய்து கொள்ளலாமாம். இப்போது ஓர் ஊசி போட்டபின், அடுத்த நாள் பரிசோதனை முடிந்து விவரம் தெரிந்தபின் மருந்து கொடுப்பார்களாம். அது அமுங்குவது நல்லதல்ல. இரண்டொரு நாள் பாத்து கிழித்துவிடலாம். சரியாகப் போய்விடும். ஒன்றும் பயப்படுவதற்கில்லை. “அப்ப, நீ இன்னிக்கு எதுக்குடா ஊருக்குத் திரும்பிப் போகணும்? பேசாம இங்கியே தங்கிடு!...” சம்முகத்துக்கு அது உகப்பாகப் படுகிறது. ஆனால், அவரால் நடந்துபோக இயலாத நிலையில் காபி, சாப்பாடு என்று இவர் வீட்டில் தங்குவது சரியா? “இப்ப... இத தெருக் கோடிதான். நம்ம சாவித்திரி கூடப் படிச்ச பொண்ணு அவப்பாதான், இந்த பரிசோதனை பண்றாங்க நீ போயிச் சீட்டைக் காட்டி எல்லாம் குடுத்திட்டு வந்துடு. நானும் வரட்டுமாடா?” “வானாம் சாமி. நீங்க போங்க. நம்மபய, குப்பன் மகன் வடிவு வருவான். இருக்கச் சொல்லுங்க, வரேன்...” டாக்டரிடம் காட்டி ஒன்றுமில்லை என்று கேட்டபின், ஊசி போட்டபின், சிறிது மன இறுக்கம் குறைகிறது. பரிசீலனைக்கு ஆறு ரூபாய் கேட்கிறார்கள். நீரும் இரத்தமும் கொடுத்துவிட்டுத் திரும்புகையில் களைப்பாக இருக்கிறது. வடிவு வந்தால் மறுபடியும் இரண்டு ரூபாய் செலவு பண்ணிக்கொண்டு சங்க அலுவலகத்துக்குப் போய்விடலாம். இவனுக்காக ஐயர் சாப்பிடாமல் காத்திருக்கிறாரோ?... அவருடைய குடும்ப நிலைமையை உணர்ந்துகொண்ட பின் அங்கு தங்குவது சரியாகப்படவில்லை. வடிவு இந்த வழியாகத்தான் போக வேண்டும் என்பதை எதிர்பார்த்து, அங்கேயே திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். காலை நேரத்தின் வரையறை முடிந்து கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு அங்கிருந்த ஆள் போகிறான். இவர் வெற்றுத் திண்ணையில் பொருந்தாமல் அவன் வரும் வழி நோக்கி இருக்கையில் வடிவு சிரித்துக்கொண்டே மறுபுறம் இருந்து குரல் கொடுக்கிறான். “என்ன மொதலாளி, இங்க உக்காந்திருக்கீங்க?” “...வடிவு, ஒரு ரிச்சா கூட்டிட்டு வா, சங்க ஆபீசுக்குப் போயிருவம். இங்கியே தங்கிப் பார்க்கணும்னு சொன்னாங்க...” “அப்ப...?” “நீ என்னக் கொண்டுவிட்டுப் போட்டு, ஊருக்குப்போ, நாளக்கிச் சம்பா ஒழவு ஆரம்பிச்சிடணும்னிருந்தேன்.” “அதெல்லாம் நாம்பாத்துக்கிற முதலாளி. நீங்க நல்லா கவனிச்சிட்டு வாங்க. ஊசி போட்டாங்களா?” “ஆமா. ஒண்ணும் பயமில்ல. இரண்டு முணு நாளில நல்லாயிடும்னாங்க. ஐயிரு அண்ணம் மக தானே? நல்லபடியா கவனிக்கிறாங்க. இது ஒரு வயசுக்குளந்த, தேரு பாக்க வரும். இப்ப. எத்தினி உசரம் போயிட்டாங்க.” “ஐயிரப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்!...” வடிவு அவரை வண்டியில் ஏற்றிவிட்டு, ஒட்டலில் சென்று எலுமிச்சைச் சோறும் தோசையும் பொட்டலமாக வாங்கிக் கொண்டு போய் அலுவலகத்தில் கொடுக்கிறான். அலுவலகத்தில் பொன்னடியானில்லை. அவன் எங்கோ வகுப்பெடுக்கச் சென்றிருக்கிறானாம். காவலாக ஒரே ஒரு ஆள் மட்டும் இருக்கிறான். விசாலமான கூடம் இருக்கிறது. சுருட்டி வைத்திருக்கும் பாயொன்றை எடுத்துப்போட்டு அமர்ந்து கொள்கிறார் சம்முகம். “அம்மாட்ட சொல்லு. மடைபாத்துத் தண்ணிவுடு. போறப்ப, பன்னண்டு ருவாக்கி, இருக்கல்ல, பூச்சி மருந்து டப்பி, அத்த ஒண்ணு வாங்கிட்டுப் போ. நா நாள மறுநாளக்கிக் கண்டிப்பா வந்திடுவேன். ஒழவத் தள்ளிப் போடாதீங்க. பூசாரியோ விருத்தாலமோ வந்து மெரட்டினாங்கன்னா, நா. வந்து பேசிக்கிறேன்னு சொல்லுங்க. குடிசய இப்ப பிரிக்கிறதாத் தயங்க வாணாம்...” அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் முக்கியமான முள்ளிருக்கும் இடம் தவிர்க்கிறார். திரும்பிச் செல்லு முன் அவள் வீட்டுக்கு வந்திருப்பாள். இவரும் இங்கே தங்கும் வாய்ப்பில் பொன்னடியானைக் கண்டு பேசி, இன்னும் ஒரிரு தலைவர்களையும் வைத்துக் கொண்டு எல்லாம் தீர்மானம் செய்துவிடலாம். ஐப்பசியில் கட்டிவிடவேண்டும். இவள் கைவிட்டுப் போய்விடக்கூடாது. வடிவு அவரை விட்டபின், ஓட்டலில் வந்து மூன்று ரூபாய்க்கு நன்றாகச் சாப்பிடுகிறான். சம்முகம் அவன் செலவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கிறார். பூச்சி மருந்து பன்னிரண்டு ரூபாய். அது தவிர, பாம்புத் தோலுக்காக ஆறுருபாய் கிடைத்திருக்கிறது. விடுதலை மகிழ்ச்சியில சினிமாக் கொட்டகையில் வந்து உட்காருகிறான். ராஜா ராணி, தேர், குதிரை, யானை, பூதம், நாகலோகம் எல்லாம் வரும் படம். ராஜகுமாரியும் ராஜகுமாரனும் பூங்காவில் காதல் செய்யும்போது, அம்சு அருகில் இருப்பதாகவே கற்பனையில் மிதக்கிறான். வாய்மடை, வடிமடை, வரப்பு, வெட்டு, குடிசைகளின் உறுதியில்லா நிலைமை - எல்லாமே அப்போதைக்கு அவன் உலகைவிட்டு அப்பால் போகின்றன. சூனியக்காரி ராஜகுமாரியைக் கிளியாக்கிக் கூண்டில் அடைத்து விடுகிறாள். ராஜகுமாரன் பூதத்தின் துணைகொண்டு அந்தக் கிளியைத் தேடிப் புறப்படுகிறான். வழியில் நாகலோகம். நாககுமாரி காதல் பெரிய பெரிய விடம் கக்கும் நாகங்கள் சாதுவாக இருக்கின்றன. நாககுமாரி அவற்றை ஒதுக்கி வைத்துக் கொண்டு அரசகுமாரனை உபசரிக்கிறாள். ‘இத்தினி பாம்பையும் எப்படி வச்சிப் படம் புடிக்கிறானுவ! எல்லாத்துக்கும் பல்லைப் புடுங்கிருப்பா. ஆனாலும்... ஒருக்க மட்றாசுக்குப் போயி, படம் புடிக்கிறது. ஷூட்டிங்காமே, அதைப் பாக்கணும்...’ என்ற ஆசை கபடம் இல்லாமல் முகிழ்த்து வருகிறது. |