உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 4 அன்றைய பொழுதின் ஆறுதலாக, மாலை நேர பஸ் கிடைக்கிறது. வழி நெடுகிலும் மண் அன்னை நீர் முழுகக் குளிர்ந்து நிற்கும் காட்சிகள். வரிவரியாக வண்ணப் புள்ளிகளாகப் பெண்கள் குனிந்து நாற்றுநடும் கோலங்கள், சமுத்திர ராசனிடம் புகுமுன் அன்னையிடம் பிரியா விடை கொள்ளும் காவிரித்தாய் இரண்டு கை விரல்களையும் அகலவிரித்து மண் அன்னையைத் தழுவிக்கொண்டிருக்கும் வளமை. இந்தப் பூமியில் மனிதர் பசி தீர்க்கும் அமுத சுரபிகளாய் ஆறு குளங்கள் நிரம்பித் துளும்பு கின்றன. அந்நாளில் வங்கத்துக்காரரான ஒரு தலைவர் ஒருமுறை கிராமக் கூட்டத்திற்கு வந்தார். பாரதம் முழுவதும் சுற்றியவர். இந்த அழகைக் கண்டு பரவசப்பட்டுப் போனார். எல்லாம் நீர், எல்லாம் மண் என்றாலும், ஒவ்வொரு நதியின் வன்மையிலும், தனித்தன்மை துலங்குகிறது. இந்த பூமியின் மண் தறிகளில் எத்தனை வகை மக்கள். இந்த மக்கள் யாரும் எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும்போது கொண்டு செல்லுவதுமில்லை. ஆனால் இந்த அழகுகளைச் சுதந்தரமாக அதுபவிக்க முடியாமல், மனிதனுக்கு மனிதன் ஆக்கிரமித்து அடித்துக் கொள்ள, இவற்றையே சாதனங்களாக்கிக் கொள்கிறானே என்றார். இந்தப் பேச்சை விசுவநாதன் தான் மொழி பெயர்த்தார். சாமி இல்லை என்று சொல்பவனும் இங்கே இயற்கையின் சூழலில் நெடி துயர்ந்து நிற்கும் கோபுரங்களைக் கண்டு மனம் சிலிர்க்கமுடியும். ஆனால் இந்த மண்ணிலே ஊன்றி இந்த அழகிலே வளர்ந்தவன், மனிதனுக்கு மனிதனாக இல்லை. வீடு திரும்புகையில் கால் அதிகமாக வலிக்கிறது. பொழுது இறங்கி விட்டது. நடவுக்கும் உழவுக்கும் சென்றவர்கள் கரையேறிக் கொண்டிருக்கிறார்கள். கடைத்தெருவில் வியாபாரமும் கூச்சலும் உச்சக்கட்டத்தில் மோதிக்கொள்ளும் நேரம். கள்ளுக் கடையில் கலகலவென்று ஆட்களின் குரல்கள் உயர்ந்து ஒலிக்கின்றன. அக்கரையிலிருந்து மூங்கிற்பாலம் கடந்து, மூலை ரங்கனும் விருத்தாசலம் பிள்ளையும் வருகின்றனர். இவர் பாதையில் எதிர்ப்படுவதால், சற்றே ஒதுங்கி வழிவிட நிற்கிறார். “ஏம்ப்பா சம்முகம்? நான் சொல்லி ஆறு மாசமாவுது, காதிலேயே போட்டுக்காம இருக்கியே? டவுனுக்கா போயிட்டு வார? மத்தியானம் நேத்தும் வீட்டுப்பக்கம் ஆளனுப்பிச்சேன், இன்னிக்கும் விசாரிச்சேன்.” கிளியந்துறைப் பிரமுகர்களில் ஒருவராகச் செல்வாக்குப் பெற்றிருக்கும் குரல் அதட்டுவதுபோல் ஒலிக்கிறது. “என்னாங்க விசயம்?...” “பாத்தியா? மறந்தே போன? கோயில் பக்கம் குடிசயப் போட்டுட்டு எல்லாம் அசிங்கம் பண்ணிட்டிருக்கானுவ! பத்து வருசத்துக்கு முன்ன, அப்ப பள்ளிக்கூடத்துக்கு இடம் வோனுன்னு இவனுவள குடிசயத் தள்ளிக்கொண்டு போடனும்னு சொன்னாங்கதா, அப்பதா எல்லாம் போதாத காலம், கோயிலுக்கு பூசை, விழா ஒண்ணும் இல்லன்னு இருந்திச்சி! பத்து வருசமா ஏதேதோ ஊரிலும் கஷ்டம். இப்ப இந்த வருசம் கோயிலைச் செப்பம் பண்ணி விழா நடத்துறதுன்னு தீர்மானம் பண்ணிருக்கு. வீராசாமிப் பிள்ளை, வரதராஜன் எல்லோரும்தான் முடிவு செஞ்சி அப்பவே சொன்னேன், உனக்கு விசயமே மறந்துபோச்சி.” “...இல்லிங்க. நீங்க ஆறு மாசத்துக்கு முன்ன சொன்னதா நினைப்பில்ல. வேற எடம் தோதாக்கிட்டில்ல கிளப்பச் சொல்லணும்? இப்ப நடவு, உழவுன்னு நெருக்கடியாயிருப்பாங்க...” “அது வருசம் பூராத்தா இருக்கு. இப்ப ஆத்துக்கு அப்பால அரிசனங்களுக்குக் குடிசை போட்டுக்கலான்னு சொல்லி மாரிமுத்து, வீரபுத்திரன்லாம் போட்டுக்கலியா? அந்தப்பக்கம் போட்டுக்கட்டுமே?” “சொல்றேங்க, ஒரு ரெண்டு மூணு மாசம் பொறுத்துக்குங்க...” “அதான் முன்னமே சொன்னது, நீங்க இப்படித் தவண கேட்பீங்கன்னு. உன் பண்ணக்காரன் குப்பன்தான் அடாவடிக்காரன். அதும், அவன் பய வடிவு இருக்கிறானே, என்ன எகிறு எகிறறாங்கற? அம்மன் கோயில் பக்கம் பரம்பரையா புத்து இருக்கும். அதுபாட்டில நல்லதுங்க குடியிருக்கும். எப்பவானும் கண்ணுல படும். எங்க வீட்ல கூட பொண்டுவ பால் வய்க்கிறது வழக்கம். இப்ப ஒண்ணு இல்ல. இந்தப்பய அல்லாத்தையும் கொன்னு தோலக் கொண்டு வித்துப்போட்டான்.” “அப்படிங்களா?” “ஆமாம். இப்ப ஆள வரச்சொல்லி சுத்து வட்டம் சுத்தம் பண்ணி முன்னால மண்டபம் எடுத்து, புனருத்தாரனம் பண்ணப்போறம். குடிசைகளை அப்புறப்படுத்தச்சொல்லு நல்லபடியாவே, என்ன குடிசை? ஓலைக்குடிசைங்க? ஆளுக்கு அம்பது ருவா வேணாலும் தந்திடறம், வீணா ரசாபாசம் வச்சுக்காதிங்க?” விருத்தாசலம் பிள்ளை மேல் வேட்டியை வேகமாகச் சரியாக்கிக்கொண்டு போகிறார். மண்டையில் அடித்த மாதிரி இருக்கிறது. வாசலில் அப்பாவைக் காணவில்லை. ஏதேனும் பொட்டு பொடிசு கையைப் பிடித்துக் கொண்டு கள்ளுக்கடைக்குப் போயிருப்பார். திண்ணையில் நாகு உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது. பளாரென்று முதுகில் அறைந்துவிட்டு அதைப் பிடுங்கிப் பார்க்கிறார். விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளருக்கு சென்னையிலிருந்து அனுப்பப் பெற்றிருக்கும் துண்டுப்பிரசுரம். “இந்தப் பய கையில் எட்டும்படி ஒரெளவையும் வைக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தான? பன்னிப்பயல்! நாய்ப்பயல்! போடா! இவன ரூம்பில போட்டுப் பூட்டாம ஏ வுட்டு வக்கிறிய?” எல்லா ஆத்திரமும் அவன் மீது வடிகிறது. அவனைக் காந்தி கத்தக்கத்த இழுத்துச் செல்கிறாள். காந்தியிடம் மீறமாட்டான். அம்சுவானால் திமிறுவான். அவளுக்கும் ஆத்திரம். பின்புறத்து அறையில் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள். பாட்டி, கோழிக்குஞ்சு ஒன்றைக் காணாமல் தேடிவிட்டு வருகிறாள். “அல்லாம் வூட்டத் தொறந்து போட்டு, இவனையும் உக்கார வச்சிட்டு எங்க போயிட்டீங்க?” “ஏங்கண்ணு? இன்ஜினிருக்குச் சேந்தாச்சா...” பாட்டி அருமையாக அவள் கூந்தலைத் தடவிக் கொண்டு விசாரிக்கிறாள். “ஆமா இந்தத் தரித்திரம் புடிச்ச குடில பெறந்திட்டு கனாக் கண்டா மட்டும் பத்துமா?” என்று சீறி விழுகிறாள். “கோவப்படுற... நீ நல்லா இருக்கணும். பொறந்த குடில உசத்தனும்னுதான் ஆச...” “ஆசப்படுங்க, அங்க சீட்டுமில்ல ஒண்ணுமில்ல. ரெண்டாயிர ரூபா கட்டணுமாம்.” மூலையில் சோர்ந்துபோய் உட்காருகிறாள் காந்தி. பாட்டியும் திகைத்துப் போய்த்தான் நிற்கிறாள். “ஏ, காந்தி இந்தா, பணத்தைப் பத்திரமாக் கொண்டு வையி...” சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுக்கிறார். “எங்க லட்சுமி, அம்சு எல்லாம்? நடவுக்குப் போயிருக்காளுவளா?” “ஆமா, குப்பம் பயலும் இல்ல, வடிவு வந்தா, நேத்துப் புடுங்கின நாத்த மட்டும் நட்டுடலான்னு உம் புள்ள போயி தவராறு பண்ணிருக்கா...” “கோபுவா?” “ஆமா, என்னாத்துக்கு ஏழு-ஒம்பது குடுக்கிறது? அஞ்சு ரூபா ஆணுக்கு, பொம்பிளக்கி மூணுன்னா, அப்பாரு வெதக் கோட்டயில எலி மாருதி இன்னா தம்பி, நீயே பேசுறன்னா, இவ அடிக்கப் போயிட்டா. நேத்து நீங்கல்லாம் பண்ண மிராசுன்னு அவனவங்கால நக்கிட்டுக் கிடந்தப்ப, ஆருரா குண்டடிப்பட்டு இந்த நெலமக்கிக் கொண்டு வந்தது? ஏழு-ஒன்பது வெளில பேசு, இங்க அந்த ரூல் செல்லுபடியாவாது? என்றான் போல.” “அப்படியப்படியே கரையேறிட்டாங்க போல. இவ ஒரு மூணு மணியிருக்கும், கிளம்பிப்போனா...” “இவன் யாரு இங்க நாட்டாமை பண்ண வந்தது? எல்லா இவளாலதா, பயல அன்னைக்கே, அடிச்சி வெரட்டுன்னேன்! துரை, இங்க வந்து அதிகாரம் பண்றானா? செருப்பாலடிக்க.” “காந்தி, கொஞ்சம் சுடுதண்ணி வச்சிக் கொண்டா! காலுல ஊத்திட்டுச் செத்தப் படுக்கிறேன்.” காந்திக்கு முசுமுசென்று கோபம் வருகிறது. உள்ளே சன்னக்குரலில் நாகு ஊளையிடுகிறான். பானையில் தண்ணிர் இல்லை. குடியிருப்புக்கு ஓர் அடி பம்பு உண்டு. அதை இந்தக் குட்டிப்படைகள் அடித்து அடித்து ஒடித்துவிட்டன. அதற்கு விமோசனம் இப்போது வராது. ஆறு குளங்களில் தண்ணிர் வற்றியபிறகு அவள் தந்தைதான் செப்பனிட ஆள் கூட்டி வருவார். எரிச்சலாக வருகிறது. ஆற்றிலிருந்து தண்ணிர் முகர்ந்துவந்து முட்சுள்ளியை ஒடித்து எறியவிட்டு வெந்நீர் காய்ச்சி வருகிறாள். லட்சுமி ஆற்றில் குளித்து ஈரச் சேலையுடன் வீட்டுக்கு வருகையில் இருள் நன்றாகப் பரவியிருக்கிறது. “வந்தாச்சா? ஏண்டி? விளக்கேத்தி வைக்கிறதில்ல? ஐயா ஏன் படுத்திருக்காரு?...” காந்தி இருளோடு இருளாக அசையாமலிருக்கிறாள். “என்னாங்க...? போன காரியம் நல்லபடியாச்சா?” “ஒண்ணும் ஆவல. அந்தத் தொர எங்க?” “அவன் எங்க போனான்னு எனக்கென்ன தெரியும்? இந்த வடிவுப்பய அவன இன்னிக்கு அடிக்கப் போயிட்டான்.” “வடிவு சும்மா அடிக்கப்போனானா?” “ஆமா, இவன் வாய் குடுத்தா அவனும் வாயாடுறா, கூலி குடுக்கப் போறவ நா. நடவப் பாத்துக்கன்னு சொல்லிட்டு நா இங்கல்லா ஒட்டடி பண்ணிட்டுப் போறதுக்கு முன்ன மசுருபுடி சண்டை. இவந்தா வம்புக்குப் போகாம இருக்கக் கூடாதா?... அவனும்தா ரொம்ப எகிறறா. மரியாதியில்லாம போயிட்டுது. என்னியே நீங்க சும்மாருங்கன்னு அடக்கிட்டான். நேத்துப் பறிச்ச நாத்த மட்டும் அந்தத் தெக்கோரப் பங்குல நட்டுட்டுக் கரையேறிட்டாளுவ...” “கூலி என்ன குடுத்த?” “ஏழு விகிதந்தா. அஞ்சாளுக்கு பத்துப் பேரு வந்தாளுவ...” “ஆமா பொணம் கொண்டிட்டுப் போகலன்னு வந்தாங்களே? அது யாராச்சும் வந்தாவளா?” “நீங்க என்ன ஊரக்கப்போர எல்லாம் சாரிச்சிட்டு! இவனுவளும் கேக்கிறபடி கேட்டிருக்கமாட்டானுவ பொட்ட யதிகாரம் பண்ணிருப்பா. தோப்புல தேங்காயெல்லாம் பூடுதுன்னு படலயப் போட்டு மூடி வச்சிட்டானுவளாம். ரோடு சுத்திப் போய்க்கிங்கன்னானுவளாம். எங்கேந்து ரோடு சுத்த? அங்கியே குழிச்சி மூடிருப்பா...” உலர்ந்த சேலையை உடுத்துக் கொண்டு ஈரத்தைத் தாழ்வாரச் சுவரில் கட்டுகிறாள். காந்தி இன்னும் எழுந்திருக்கவில்லை. “ஏண்டி மோட்டுவளயப் பாத்திட்டு உட்கார்ந்திருக்கிற? எந்திரிச்சி விளக்கப் பொருத்தி ஒலயப்போடு. நாங்கடக்கிப் போயிட்டு விருவிருன்னு செலவு சாமானம் வாங்கியாரேன். புளி தீந்துபோச்சி.” “போம்மா, முள்ளு கையக் குத்துது...” லட்சுமி அவள் கன்னத்தில் இடிக்கிறாள். “என்னாடி? எப்பிடியிருக்கு? பெரி மவரானின்னு நினப்பா? சீ, கழுத, குந்தவச்சி சோறுபோட இது பெரும் பண்ண சமீனில்ல? அந்தப் பொண்ணு, இங்க கரையேறி முடிஞ்சி, வேற பக்கம் நடவுக்குப் போட நாலு ரூபா சம்பாரிச்சிக் குடுத்திட்டு நாயக்கர் வீட்டுக்கு ஓடிருக்கு. அம்புட்டுத் தண்ணியும் தூக்கி, பெருக்கி மொழுவி, கழுவி, எத்தினி வேல செய்யறா? காலம எந்திரிச்சி சீவி சிங்காரிச்சிட்டு போயிட்டு ஒடம்பு நலுங்காம வந்து குந்திக்க!” “ஆமா, பின்ன ஏன் படிக்கப் போட்டிய? படிக்க வச்சா ஒழுங்கா வக்கணும். பாதி ஆத்துல இறக்கி வச்சிட்டு கைவுட்டுடக் கூடாது?” “என்னாது? பாத்தீங்களா இவ பேச்ச? மூஞ்சி முகர பேந்து போயிடும். எந்திரிடி சொல்ற?... பொட்டக் கழுதய என்னிக் கின்னாலும் கட்டிக் குடுக்கணும், நம்ம விரலுக்கு மிஞ்சி எடுப்பு வானாம்னேன், உங்கையா கேக்கல.” சுவரொட்டி சிம்னி விளக்கை ஏற்றிச் சமையலறையில் வைக்கிறாள். இந்த வீடு கட்டி ஒன்றரை வருசமாகப் போகிறது. இன்னமும் விளக்கு இழுக்க நேரம் வரவில்லை. குறுவை அறுப்பு முடிஞ்சி இந்த வருசம் வூட்டுக்குக் கரன்ட் இழுத்திடணும்... அடுப்பில் சுள்ளியைப் பார்த்து எரியவிட்டு எருமுட்டையை வைத்துவிட்டு உலையை ஏற்றி வைக்கிறாள். புகை நடு வீட்டுக்குள் பரவுகிறது. “அரிசியக் கழுவிப்போடு, நா வாரேன்.” வெளியே ருக்குமணியும் பாக்கியமும் வீச்சு வீச்சென்று விறகுச் சண்டை போடுகிறார்கள். ஒருவர் சொத்தை மற்றவர் அபகரித்ததாக வாயால் அடித்துக் கொள்வது வழக்கமான சமாசாரம். கோதண்டமும் அம்மாசியும் பொழுதுடன் குடித்துவிட்டுத் திரும்புகிறார்கள். கள்வாடை கப்பென்று மூக்கைப் பிடிக்கிறது. ஆற்றங்கரை மேட்டோடு கூடடையும் பறவையினங்கள் போல் சேரி மக்கள் விரைந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். புளியமரமும், உடைமரமும், இருளோடு இருளாக மைக்கொத்தாக அப்பியிருக்கின்றன. மதகடி வரும்வரையிலும் வெளிச்சம் கிடையாது. சைக்கிள் கடையில் இளவட்டங்களின் கும்மாளம். காலரைத் துரக்கிவிட்டுக் கொண்டும், முடியை ஸ்டைலாக வைத்துக்கொண்டும் கவலையற்ற கேலியிலும் கிண்டலிலும் சிரிப்பிலும் காலம்கழிக்கும் இளசுகள். விருத்தாசலம் பிள்ளையின் மகன் துரை, தையல் கடை பக்கிரியின் தம்பி, வஸ்தாது, மூலை ரங்கனின் இரண்டு வாரிசுகள் ஆகிய முக்கியமான இளவட்டங்கள் கண்களில் படுகின்றனர். இங்கே கோபு இல்லை. வீரமங்கலம் சினிமாக் கொட்டகையில் புதிதாக வந்திருக்கும் சினிமா விளம்பரத் தட்டி பெரிதாகக் கடையின் இருபுறங்களிலும் அணிசெய்கின்றன. அதில் பிறந்த குழந்தைக்குப் போடக்கூடிய அரைக்கச்சுடன் ஒரு பெண் காலைத் துக்கிக் கொண்டிருப்பதும், இந்தப் பிள்ளைகளைப் போல ஒரு இளசு குனிந்து அவளைப் பார்ப்பதுமாக இருக்கின்றனர். ‘துரத்தேறி’ என்று துப்பத் தோன்றுகிறது. மறுநாளைய நடவு, உழவு பற்றிய விவரங்களுடன் நாட்டாமைகள் சூழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுடைய சங்கக் கொடியுடன் இருக்கும் கீற்றுக் கொட்டகையில் மொய்த்திருக்கிறார்கள். குப்பன், ஐயனார் குளத்துச் சங்கதிகளைப் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. கிட்டம்மாளும் அங்கே நிற்கிறாள். கிட்டம்மாள் கிளியந்துறைக் கடை வீதிக்கு அருகிலேயே ஆற்றுக்கப்பாலுள்ள விவசாயத் தொழிலாளர் குடியிருப்பில் இருப்பவள். இந்த வட்டகை மாதர் அணியின் தலைவி. எட்டாவது படித்திருக் கிறாள். துணிச்சலாகப் பேசி நடப்பவள். “லட்சுமியக்கா! வாங்க, தலைவருக்கு உடம்புக்கென்ன? டவுனுக்குப் போனாங்களாம்?” “ஒடம்புக்கொண்ணில்ல, காலுல எதோ முள்ளு குத்தியோ கல்லு குத்தியோ வீங்கிருக்கு. நடக்கக் கஷ்டப்படுறாரு...” “செத்த மின்னதா பஞ்சாமி சொல்லிச்சி, ஐயனார் கொளத்துல பொனங்கொண்டு போவ எடங்குடுக்க மாட்டேன்னிட்டாராமே பிச்சமுத்து மணியாரர்? நேத்தென்னமோ தலைவர் வந்ததும் போராட்டம்ன்னாவ, அப்புறம் அங்கியே குழிச்சி மூடிட்டாவளாம்...” “பத்துப் பேரா படலயப் பிச்செறிஞ்சிட்டுப் போங்கடான்னாரே?” “அதெப்படி? அவனுவ ஆளுவ சும்மா விட்டுடுவாங்களா? வெட்டுகுத்தல்ல வரும்!...” “மின்ன அந்த வழியா நடந்திட்டுத்தா இருந்தாங்க. இப்ப அந்தச் செட்டியாரு வித்திட்டுப்போக, இவங்க வாங்கின பெறகுதா படலயப் போட்டு மறச்சிட்டா.” “இல்லக்கா, அப்ப தரிசா இருந்திச்சாமே? இப்பதானே அல்லாம் உழுது நாத்து நட்டுவச்சிருக்கா? மின்னியே சங்கத்தில சொல்லி பிடிசன் குடுத்ததுதா? இப்ப போராடணும்னு சாம்பாரு முனப்பா பேசிட்டிருக்காரு.” “போராட்டம்தா. பொழுதுக்கும் எந்திரிச்சிப் படுக்கற வரய்க்கும் பொழப்பு மிச்சூடும்...” “பின்ன என்ன செய்யிறது? அங்காடில குடும்பக்கார்டுக்கு ஒண்ணுவிட்டொரு நாளு ஒண்றக்கிலோ ரேஷன் அரிசி போடுறான். எட்டு வவுறு சாப்பிடப் பத்துமா? தாசில்தாராபிசுக்கு முன்ன ஆர்ப்பாட்டம் பண்ணுங்கங்கறாங்க. அல்லா ஆம்பிளையும் இத குடிச்சிட்டு வந்து சோத்துக்குக் குந்திக்குவான். கொஞ்சுண்டு வச்சாப் பத்துமா?...” லட்சுமிக்கு நிற்க நேரமில்லை. கந்தசாமியின் கடையில் கூட்டத்தில் நின்று சோம்பு, பூண்டு, புளி, குப்பியில் எண்ணெய் என்று வாங்கிக்கொண்டு திரும்புகையில் ஒரு போர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காடா விளக்கடியில் திருக்கை மீன் கண்டமிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த புண்யகோடிக் கிழவன் மண்ணில் விழுந்துவிட்ட கண்டங்களைப் பொறுக்கிக் கொண்டு வசை பொழிகிறான். சண்டை கைகலப்பு வடிவுக்கும் அருணாசலத்தின் தம்பி முருகையனுக்கும்தான். அவன் அழுக்குத் தண்ணீரை, வடிவு நிற்கையில் இவன் மீதே கொட்டினானாம். ‘எல, ஏண்டா கண்ணு தெரியல’ என்றானாம் இவன். ‘கடமுன்னால நின்னா அப்படித்தா வுழுகும்’ என்றானாம் அவன். பேச்சு தடிக்கையில் பறப்பயல் என்று சாதியைக் குறிப்பிட்டான். அவ்வளவே, கள்ளுக்கடையிலோ, கடை வீதியிலோ இப்படித் தகராறு ஏற்படாத நாளே இல்லை என்ற மட்டில் பழகிப்போன விவகாரங்கள். லட்சுமி விரைவாக நடக்கிறாள். பின்னால் கள்ளின் வேகத்தில், ஆவேசமாகப் புரட்சிப் பிரசங்கம் செய்து கொண்டு மாமனார் வருகிறார். “உழவுத் தொழில் ஜீவாதாரமான தொழில். சேத்தில காலவச்சாத்தா சோத்தில கைய வைக்கலாம். சோத்தில கைய வைக்காம மனுசன் உசிர் வாழ முடியுமா? சொவர வச்சித்தா சித்திரம் அறிவு, படிப்பு, பட்டம், பதவி, ராச்சியம் எல்லாத்துக்கும் அடிப்படை இது. அடிப்படை தொழில் இது. சேத்தில இருக்குன்னு குழிதோண்டிப் புதைக்காம மேலே ஏத்தி வைக்கணும். இதுமேல, மத்ததெல்லாம் கீள. இதுதாம் புரட்சி. விவசாயம் முதத்தொழில் இதச் செய்யிறவனுக்கு அந்தசு, கவுரவம் வேணும். அத்தக் கொண்டு வருவது புரட்சி. இப்ப உழைக்காதவன் மேல; உழைப்பவன் கீள. இது மாறிய புரட்சி.” லட்சுமிக்கு நடை விரைவு கூடப் பிடிக்கவில்லை. நெஞ்சம் கனிந்து கண்கள் பசைக்கின்றன. “கள்ளுக் குடிச்சா எவ்வளவு தெளிவாப், பேசுறாரு!...” “அம்மா!...” இருட்டில் எட்டி ஒடிப் பின் தொடருபவள் அம்சுதான். “ஏண்டி இந்நேரமா நாயக்கர்வூட்டில இருந்த?” “மீனு வாங்கிக் கழுவி மொளவா அரச்சிக் குடுத்தேன். நாகப்பட்டணத்திலேந்து சின்னய்யா வந்திருக்காரு. கோபு கூட இருக்காம்பா!” “சரி சரி, உங்கய்யாகிட்ட ஒண்ணுஞ் சொல்லாதே, ஏற்கெனவே கோவிச்சிட்டிருக்காரு.” சோற்றைச் சரித்து வைத்து விட்டுக் காந்தி படுத்துக் கிடக்கிறாள். லட்சுமி மசாலைப் பொருள்களை எடுத்து வைத்துச் சிம்னி விளக்குடன் வெளியே கிடக்கும் அம்மியில் அரைக்க உட்காருகிறாள். அம்சு குடத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். “எங்கடி? தண்ணி இருக்கே?” “போம்மா, மேலெல்லாம் மண்ணு, குளிக்கணும்.” “எந்நேரண்டி நீ குளிக்கிறது, இருட்டில ஆத்துக்குப் போயி?” “கொளத்துல வெளக்கு வெளிச்சம் இருக்கும்மா!” “குளிக்க வானாம், இப்ப நீ உள்ளற போ! ஈரமா இருந்தா சீலய அவுத்து மாத்திக்க புளியக் கரைச்சி வையி. இப்ப தாத்தா சத்தம் போடும்.” அம்சு தனது விருப்பத்தை நிலைநாட்டிக்கொள்ள அடம் பிடிக்க மாட்டாள். செல்லுபடியாகாது என்றால் மறந்து விடுவாள். உடனே குடத்தை வைத்துவிட்டுப் போகிறாள். “ஏம்மா, வெறும் காரக் குளம்பா? மீனு வாங்கியாரலியா?” “கைக்காசு இதுக்கே சரியாப் போச்சி. எட்டணா புளி ஒரு நாத்தா வருது.” வாசலில் யாரோ திமுதிமுவென்று வரும் ஒசைகள். “கூப்பிடுடா உங்க தலவர!...” கபீரென்கிறது. இரட்டைக் குரல், அந்த மூலை ரங்கனின் பயல் மாதிரி கேட்கிறது. கூடவே சாம்பாரின் அபய ஒலி. “வாய்க்காரே!... வடிவ டேசனுக்கு இட்டுப் போயிட்டானுவ, வாய்க்காரே..!” அரைத்த குழவி நிற்கிறது. அம்சு திகைத்து விழிக்கிறாள். சம்முகம் எழுந்திருக்க முடியாமல் எழுந்திருக்கிறார். காந்திக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது. “அந்தப்பய ரோட்டிலே நின்னவ மேல அழுக்குத் தண்ணிய ஊத்திச் சண்டக்கி இழுத்தா வாய்க்காரே...!” “எல, பொய் சொன்னா பல்லு பேந்து போகும். கடவாசல்ல நின்னிட்டு இந்தக் கம்னாட்டிப்பய மவ திட்டக் குடியான ஒத அடின்னு பேசுனானா இல்லியான்னு கேளு. கிழட்டுப் பய...” சம்முகத்துக்குச் சுரீலென்று உறைக்கிறது. அந்தத் தோப்புக்காரனும் அருணாசலமும் ஒரு பக்கம். உடம்பிலே ஓரிடத்தில் கேடு வந்தால் எல்லா இயக்கமும் கோளாறாவது போல் தான். புறக் காவல் நிலையம் என்ற அவுட் போஸ்ட் அக்கிரகாரத்துக் கோடி வீட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கிறது. சம்முகம் சட்டையைப் போட்டுக்கொண்டு நடக்கமுடியாமல் நடந்து செல்கிறார். |