(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

17

     கடந்த சில நாட்களாகத் தாயும் தகப்பனும் ஆக்ரோசமுடைய இரு பூனைகள்போல் சண்டைபோட்டுக் கொள்வதாக அம்சுவுக்குத் தோன்றுகிறது. மாறாக பாட்டியும் பாட்டனும் சீண்டிக் கொள்ளும் பேச்சும் பிணக்கும் ஓய்ந்துவிட்டன. மகள் ஓடிப்போனது, தாயும் தகப்பனுக்குமன்றி பாட்டிக்கும் ஓர் அடிதான். ஏன், பாட்டன் கள்ளுக்கடைக்குச் சென்றுவரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திண்ணையில முடங்கியே கிடக்கிறார். பொழுது விடிந்ததிலிருந்து அன்று நாகு ஊளையிடுகிறான். இந்த ஊளையொலி புதிதல்ல. பழக்கமான இசைதான். ஆனால் வாழ்க்கை இப்போது சுருதி குலைந்து கிடப்பதால் இது நாராசமாக இருக்கிறது.

     “அந்தப்பய மென்னியத் திருகிக் காவாயில போடு! என்னாத்துக்குடி எளவு இப்படி ஊளயிடுறா? இந்தப் பயலுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது.”

     வாசலில் கோலம் போட்டுவிட்டு வரும் அம்சுவை அழைத்து லட்சுமி இரகசியமாக, “போயி நாலு இட்டிலி வாங்கிட்டு வா. நேத்து முச்சூடும் எதுவும் சாப்பிடல அவெ. பசிக்கிதோ என்னமோ?...” என்று கூறுவதும் சம்முகத்துக்குக் கேட்டுவிடுகிறது.

     “ஏய், எங்கடி போற? இவளயும் காலங்காத்தால கடவீதிக்குப் போகச் சொல்லு! பல்ல இளிச்சிட்டு எவங் கூடயேனும் போவா? மானம் அச்சம் மரியாதி ஆத்தாளுக்கிருந்தால்ல மவளுக்கு இருக்கும்? ஒரு ஒச்சம் வந்து ஊரே சிரிக்கிது; தலைநீட்ட முடியல. புழுக்கப் பயலுவல்லாம் நாக்கப் பல்ல இடுக்கிட்டுச் சிரிக்கிறான். அறிவு இருக்குதா உங்களுக்கு?”

     லட்சுமிக்கு ஆத்திரம் தாளவில்லை.

     சாணியை அள்ளிக் கூடையில் போட்டு மூலையில் கொட்டுகிறாள். பரட்டுப் பரட்டென்று முற்றத்தைப் பெருக்குகிறாள்.

     சம்முகத்துக்கும் எழுச்சி அடங்கவில்லை. அவருடைய ஆற்றாமைக்கு ஒரே இலக்காக இருப்பவள் லட்சுமிதான். முடி சிலும்பலில்லாத கூந்தல் கட்டு, எப்போதும் கலையாத பளிச்சென்ற பொட்டு, பெரிய அந்தஸ்தைக் காட்டும்வகையில் சீராகக் கொசுவம் வைத்து உடுத்த சேலைக்கட்டு, பதிந்த ரவிக்கை, கட்டுவிடாத உடல் எல்லாம்.அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளின் மூலைமுடுக்குகளை எல்லாம் குடையும் வண்ணம் கோபமூட்டுகின்றன.

     அறைக் கதவு திறக்கப்படாததால் நாகு கதவைப் போட்டு தட்டுகிறான்.

     இவர் எழுந்துசென்று கதவைத் திறக்கிறார். அவன் சமையலடுக்கின் கீழ் சென்று உட்கார்ந்து கொள்கிறான்.

     சற்றைக்கெல்லாம், வாயில் பல் குச்சியுடன் ஆற்றுக்கரை மேட்டில் நிற்கையில் நாகுவின் ஊளையொலி மீண்டும் கேட்கிறது.

     நடுவீட்டில் வந்து அவன் அசுத்தம் செய்திருக்கிறான். லட்சுமி அவனை இழுத்து வருவதும் அவன் ஊளையிடுவதுமாக ஒரு அரங்கம் விரிந்திருக்கிறது.

     சம்முகம் புளிய மரத்திலிருந்து ஒரு நீண்ட பிரம்பை ஒடித்து வருகிறார். பளார் பளாரென்று முதுகிலும் காலிலும் பேய் பிடித்தாற்போல் வீறுகிறார்.

     நாகு ஐயோ ஐயோ என்று பயங்கரமாக ஊளையிட, லட்சுமி கத்த, தெருவில் கூட்டம் கூடிவிடுகிறது.

     “பாவம், அந்தப் பயலுக்கு அமாசி வேந்திடிச்சின்னா இப்பிடியாவுது...!” என்று சொல்லிக் கொண்டு போகின்றனர்.

     “உங்களுக்கு என்ன இன்னிக்குப் பேயி புடிச்சிருக்கா...”

     இரத்தம் கசியும் பையனின் காலைப் பார்த்து முதுகைப் பார்த்துக் கண்ணீர் தளும்ப விம்முகிறாள் லட்சுமி.

     “அம்மா... அம்மா... அம்மா...”

     வார்த்தை குழம்பும் அந்தக் குழந்தையைக் கண்களைத் துடைத்துச் சமாதானம் செய்து ஓரமாக அழைத்துச் செல்கிறாள்.

     “காபி... காபிம்மா கா...”

     “காபிதான? வச்சித்தாரேன். நீ ஏன் அழுவுற? நீ கத்தினதாலதான அப்பா அடிச்சாரு?...”

     சம்முகம் புளியம் விளாறை மேட்டிலிருந்து ஆற்றில் வீசி எறிகிறார். மனசில் ஒட்டிக் கொண்ட சாணியை வீசி எறிந்து கழுவ வேண்டும் போல் ஓர் அருவருப்பு தோன்றுகிறது.

     அக்கரை எல்லாம் பச்சைப் பாயலாகக் கண்களில் அமுதத்தைத் தடவுகிறது. புரட்டாசிச் சூரியன் தகத்தகாயமாக அந்தப் பச்சையின் மூலகாரணம் நானே என்று விரியக் கதிர்களைப் பரப்புகிறான்.

     இந்த மனிதர்களெல்லாம் அற்பம் என்று சொல்லுகிறானோ? தனது ஏலாமை விசுவரூபமாக முட்ட, அழவேண்டும் போலிருக்கிறது. லட்சுமி... அவளை அமுதமென அணைத்துச் சுகித்திருக்கிறார்.

     அவர்களை அறியாமைச் சேற்றிலிருந்து கை தூக்கிவிட... உயிரைப் புல்லாக மதித்து அங்கே வந்த தலைவர்களை, வேட்டை நாய்களைப் போல் போலீசார் துரத்திப் பிடிக்க அலைந்த போது, அவர்களுக்காக இவன் காவலாய் நின்ற போது, ஊழியம் செய்த போது, இடையில் இவள் எத்துணை சக்தியூட்டுபவளாக இருந்தாள்?

     நாட்டாண்மைக்காரரின் மகளாக, நெஞ்சில் ஆசையைச் சுமந்த காதலியாக இருந்து, எந்த நேரத்திலும் புகலிடம் தேடி வந்தவருக்குத் தம்மால் சோறும் நீருமளிக்க முடியும் என்ற துணிவையும் நம்பிக்கையையும் அளித்திருந்தாள்.

     அந்தக் குடிசையில் ராஜன் என்ற கல்லூரி மாணவன் தங்கியிருந்திருக்கிறான். கொள்கைப் பாடங்கள் புகட்டுவதில் மன்னன். அநேகமாகச் சம்முகத்துக்குச் சம வயசுக்காரனாக இருப்பான். இல்லையேல் ஒன்றிரண்டு கூட இருந்திருக்கும். பால் வடியும் முகம். அந்தக் குடிசைக்குள் ஒரு மாதம் போல் தலைமறைவாக இருந்தான். நாளெல்லாம் படிப்பான்; எழுதுவான். சம்முகம் அவ்வப்போது வெளிச்செய்தி கொண்டுவருவான். எழுதியதை எடுத்துக்கொண்டு செல்வான்; இரவு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வான். நாட்டாண்மையின் மகள் லட்சுமி அப்போதெல்லாம் சோறு கொண்டுவந்து போடும்போது ராஜனுடன் சிரித்துப் பேசுவதைக் காண்பான். இவன் வெளியேயிருந்து வந்து போகும் ஆள். அவனோ தலைவர் என்ற ஆழ்ந்த மதிப்புக்குரியவன். அப்போதெல்லாம் கபடமாகவோ, சந்தேகத்துக்குரியதாகவோ ஓரிழை கூடச் சிலும்பல் தெரிந்ததில்லை.

     பெரிய பண்ணையின் செல்வாக்கை ஒடுக்கவே சின்னப்பண்ணை சுந்தரமூர்த்தி இந்தப் புரட்சிக்காரரை ஆதரித்தார். லட்சுமியின் அப்பன் பெரிய பண்ணையின் கீழிருந்த ஆள். ஆனாலும் உள்ளூற இவர்கள் பக்கமிருந்து வெளிப்படையாக விரோதித்துக் கொள்ளாமல் அஞ்சிக் கொண்டிருந்தான்.

     “எலே சம்முவம்? வெதக் கோட்டயில எலி இருக்குதாம். தீவட்டிக்காரன் புகை போட வாரானாம்!”

     இந்தச் செய்தியை லட்சுமிதான் கொண்டு சென்றாள். தப்பிச்சென்ற அவனை மறைவானபடியே கடத்திக்கொண்டு வாய்க்கால் மதகடியில் படுக்கவைத்ததும், காவல்துறையினர் மேலே சென்றதும் இப்போதுபோல் சம்முகத்துக்கு நினைவுக்கு வருகிறது.

     அன்றிரவு அந்தச் சேரி முழுவதும் போலீசு புகுந்து வேட்டையாடி இருந்தது. லட்சுமியின் உடல் முழுவதும் அலங்கோலங்கள்.

     ஒருநாள் ஒரு பகல் சென்ற பின்னரே, அவன் செய்தி அறிந்து பதுங்கி வந்து பார்த்தான். விம்மி வெடிக்க அழுத அவளை முதலாவதாகத் தீண்டி அணைத்து ஆறுதல் கூறியது அப்போதுதான்.

     மறைந்தும் மறையாமலும் சாடையாகவும் சைகையாகவும் நெஞ்சங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அந்தக் குதறப்பட்ட வேளையில்தான் பகிரங்கமாக ஒருவருக்கொருவர் என்று தாங்கி நின்றனர்.

     இதைத் தொடர்ந்து சம்முகம் போலீசின் கண்களில் மண் தூவ, ஓடி ஒளிய வேண்டியதாயிற்று. சுந்தரமூர்த்தியின் மைத்துனரின் வீட்டில் கடலூரில் சென்று தோட்ட வேலைக்காரனாக இருந்தான். ஆறு மாசம் கழித்து நாகப்பட்டணம் கோர்ட்டில் அவர் சொன்னபடியே ஆஜராகி, பின்னர் அவர் முயற்சியிலேயே ஜாமீனில் வெளியே வந்தான். ஊரே சூனியமாகி இருந்தது. லட்சுமியின் அப்பன் இறந்து போயிருந்தார். அம்மாளுடன் மாமன் ஊரான பாங்கலுக்குச் சென்றதாகச் சொன்னார்கள். அப்போதெல்லாம் இப்படிப் பஸ்ஸா இருந்தது? நடை... எங்கேனும் ஒளிந்து போக வண்டி கிடைத்தால் உண்டு. ஒரு முன்னிரவில் அவன் சென்று கதவைத் தட்டினான். குளிர்காலம். திண்ணையில் யாரோ பெரியவர் படுத்திருந்தார்.

     “ஆரது?”

     “நாந்தா கிளியந்துற...”

     குரல் சட்டென்று காட்டிக் கொடுத்து விட்டது.

     “லட்சுமி...!” விளக்கை எடுத்து வந்து அவன்முன் காட்டினாள் தாய்.

     “நீ... உசிரோடு இருக்கியா தம்பி?... சாமி முனிஸ்வரனே?...” என்று கரைந்தாள்.

     லட்சுமி... லட்சுமி... அந்த விளக்கொளியில் சிலைபோல் நின்றிருந்த கோலம் அவனுக்கு மறக்கேவேயில்லை.

     நெற்றியில் குங்குமமும் - திருநீறும், விம்மிய மார்பும் முன் தள்ளிய வயிறும், செம்மை வெளுத்த நிறமும்... ஷ்...

     குப்பென்று ஒர் உஷ்ணம் பாய்ந்து உலுக்கினாற் போல் இருந்தது.

     தாய் உள்ளே உட்கார்த்தி வைத்து சோறு போட்டாள்.

     எங்கோ அக்கம் பக்கமிருந்து சோறு வாங்கித்தான் வந்திருந்தாள். அந்த நேரத்தில் லட்சுமி அவனிடம் சொன்ன சொற்கள்...

     “இங்க... எல்லாரும்... நீங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. நான் உங்ககிட்ட புனிதம்னு வேசம்போட இஸ்டப்படல. போலீசுக்காரப் பாவி அநியாயம் பண்ணிட்டான். எதுனாலும் தின்னு கரச்சிடலாம்னு அம்மா சொல்லிச்சு. கலியாணம் ஆகுமுன்ன வாணான்டின்னு. நா உங்கள ஒருக்க உசிரோட பாத்துச் சொல்லிட்டு, ஆறு குளம் எதிலன்னாலும்...” அவள் மேலே பேச விடாதபடி வாயைப் பொத்தினான்.

     “போவட்டும். எல்லாரும் நினைக்கிறாப்பல அது எம்புள்ளயாவே இருக்கட்டும். நீ இல்லேன்னா எனக்கு ஒண்ணுமேயில்ல... ஆறு குளமெல்லாம் பேசாத, லட்சுமி!” என்றான்.

     உடனே சுந்தரமூர்த்தி முன்னிலையில் தான் அவர்கள் கல்யாணம் நடந்தது. விசுவநாதனும் கூடக் கல்யாணத்துக்கு வாழ்த்துக் கூறினார். பிறகு தான் அவர் சிறைக்குச் சென்றதும் கூட.

     வழக்கு, கோர்ட்டு, சிறை என்று கல்யாணம் செய்த சில ஆண்டுகள் எப்படியோ கழிந்தன. குழந்தை பிறந்து ஒரு வயசு வரையிலும் எதையும் நுட்பமாக அவர்கள் கவனிக்கவில்லை. மரத்தடியில் ஏணையில் போட்டுவிட்டு இவர்கள் வேலைக்குப் போவார்கள். பசித்தழும் போது, மற்ற குழந்தைகள் குட்டைத் தண்ணீரையோ காவாய்த் தண்ணீரையோ கூட ஊற்றுவார்கள். கோபால் பிறந்து அவன் பேச, நடக்க ஆரம்பித்த பின்னரும், இதற்குப் பேச்சு வரவில்லை. எல்லாம் குழம்பிற்று. காற்று கருப்பு சேட்டை என்று பெண்கள் அப்போது ஊர்க்கட்டை மீறி எங்கோ சென்று பூசாரி வைத்தியம் செய்தார்கள். பயனில்லை. பையனின் வளர்ச்சியும் ஏடாகூடமாக இருந்தது. காந்தியும் அம்சுவும் பிறந்த பின் இரண்டு தடவைகள் கருவுற்றாள். இரண்டும் நிற்கவில்லை. அப்போதுதான் சின்னப்பண்ணை வீட்டு அம்மாள் சொல்லி, அவள் புதுக்குடி ஆஸ்பத்திரிக்குச் சென்று பிள்ளை வேண்டாம் என்று சிகிச்சை செய்து கொண்டாள். அந்தச் சமயத்தில்தான் கிழவி இவனைப் புதுக்குடி ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டினாள். குணமாகச் சிகிச்சை சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

     இப்போது சில நாட்களாக, இந்தப் பயல் போலீசுக்காரனின் அசுரவித்தா, அல்லது... சிறைக்குச் சென்று மஞ்சட் காமாலை நோய் வந்து செத்தானே, அந்தத் தலைவனா என்று சந்தேகம் வந்திருக்கிறது. இவள் ஏன் கருவைக் கலைக்கவில்லை என்று தோன்றுகிறது. இவள் ஏன் அந்தப் பயலைச் சோறுட்டிப் பாதுகாக்கிறாள் என்று எரிச்சல் வருகிறது. சோறு தின்பதற்கும் குளிப்பதற்கும் சில நாட்கள், ஊரைக் கூட்டுகிறான். காந்தியிடம் அவனுக்குப் பயம் உண்டு.

     காந்தி சென்ற பிறகு, இங்கே எல்லாம் குலைந்து போயிற்று.

     லட்சுமி விரும்பி துரோகம் செய்திருக்கிறாளா?...

     இந்த எரிச்சலைத் தாள முடியவில்லை. ஆற்றில் மடமடவென்றிறங்கிக் குளிக்கிறார். உடம்பைத் தேய்த்துத் தேய்த்து ஓடும் நீரில் மூழ்கிக் குளிக்கிறார்.

     அவர் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேர்ந்தும் லட்சுமியின் மீது இப்படிச் சந்தேகம் இதுவரையிலும் தோன்றியதில்லை.

     எண்ணங்கள் முறுக்குப் பிரிந்த வடத்தின் முனைகளாய் எப்படி நினைவுகளை நெருடுகின்றன!

     கொள்கை வீரர்கள், உயிரைப் புல்லாக நினைத்தவர்கள், மேல்மட்டத்து உயர்மதிப்புக்குரியவர்கள், பலரை அவர் தொண்டன் என்ற முறையில் நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறார். எவரும் மாமுனிவர் இல்லை.

     ஐயர், முதலியார், நாயுடு எல்லோரும் மனிதர்களே; பலவீனங்கள் இல்லாத மனிதர் யாருமில்லை. தாழ்ந்த சாதிக்காரன் மட்டுமே நெறிகாக்கும் விஷயத்தில் பலவீனப்பட்டவன் என்பதில்லை...

     எனவே லட்சுமி... அந்தப் பயல்...

     “மொதலாளி...?

     கரையில் வடிவு தோளில் மண்வெட்டியுடன் நிற்கிறான்.

     நீருக்குள்ளிருந்து தலைநீட்டி வாயைக் காறிக் கொப்புளித்த பின் அவனைத் திரும்பிப் பார்க்கிறார். வடிவு தவறை உணர்ந்தாற் போன்று புன்னகை செய்கிறான்.

     “என்ன மாமா, ஐயமாரப் போல காலங்காத்தால குளிக்க எறங்கிட்டிய?”

     “சும்மாதா, நின்னே; பல்லு விளக்கிட்டு குளிக்கலாம் போல இருந்திச்சி, களையெடுக்க ஆளனுப்பிச்சிட்டியா?”

     “ஐயா கூட்டிப் போயிருக்காரு. நா மேச்சாரிப் பங்கு மடை பாத்திட்டு வார. வூட்ட... அந்தப்பய வந்திருக்கிறா, மாமா...”

     அவன் தயங்கித் தலையைச் சொறிகிறான்.

     “யாரு...?”

     “நீங்க வாங்க, சொல்றேன்...”

     சம்முகம் கோவணத்துடன் படியேறி வேட்டியைக் கசக்கிப் பிழிகிறார்.

     ஈர உடல் மறைய விரித்துப் பிடித்துக் கொண்டு வருகிறார்.

     “ஐயனாரு கொளத்துலேந்து அவெ வந்திருக்கிறான்...”

     “யாரு, சோலையா? பஞ்சமி புருசனா?”

     “ஆமா. ஆயி செத்துப் போச்சி. வூட்ட கஞ்சிகாச்ச நாதியில்ல. தம்பிகாரன் மாமியா வூட்டோட போயிச் சேந்திட்டா. அப்ப என்னியோ அல்லாம் சொன்னானுவ. தெரியாம செஞ்சிட்டேன்னு கூட்டிட்டுப் போவ வந்து நிக்கிறா...”

     “இப்ப புள்ள அவனிதுதாமா...?”

     வடிவுக்குக் கடைக் கோடியில் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

     “நீங்க வந்து சொல்லுங்க மாமா...”

     வீட்டினுள் சத்தத்தையே காணவில்லை. வேறு வேட்டி உடுத்து மேலே துண்டைப் போர்த்துக்கொண்டு நெற்றியில் துளி திருநீற்றைப் பூசியவராக வடிவுடன் நடக்கிறார். இப்போது குடிசைகள் அக்கரையில் இருக்கின்றன.

     எல்லாம் வேரூன்றும் ஆதாரம் இல்லாத வெற்றுக் கூரையும் கீற்றுத் தடுப்புக்களுமாக இருக்கின்றன. இவனுடைய வீட்டின் வாயிலில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சோலை பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருப்பது கண்களில் படுகிறது.

     முடியில் நிறைய எண்ணெய் அப்பிக் கொண்டு சிகப்புச் சட்டை போட்டிருக்கிறான்!

     எட்ட இருந்து பார்க்கும் இந்தக் காட்சி, சம்முகத்துக்கு நெஞ்சில் அடிப்பது போலிருக்கிறது. ஒரு பெண்ணை உயர்த்துகிற தாய்மைக்கு மதிப்புக் கொடுப்பது அந்தப் பிள்ளையை மனிதப்பிள்ளை என்று நினைப்பது தானோ?

     இவர்களைக் கண்டதும் அவன் அவசர அவசரமாக எழுந்திருக்கிறான்.

     “வணக்கமுங்க...”

     “உக்காந்துக்க, நீயும்.”

     “இருக்கட்டும்; நீங்க உக்காருங்க...”

     “சுடுகாட்டுக்கு வழி வேணும்னு கோரிக்கை வச்சிருக்கு. போரிங்குழாய் போடறதுக்கும் நெருக்கிட்டிருக்கிறோம். இந்தக் கோடைக்குக் கஷ்டம் இருக்காது.”

     “தோப்போட பாதையையே குறுக்கா கொண்டாந்து ரோட்டில சேத்திடலான்னு முன்னியே வந்து பாத்து எல்லாம் எழுதிட்டுப் போயிருக்காரு, கணக்கப்பிள்ளை. டேப்பெல்லாம் வச்சி அளந்தாவ. அதுக்குள்ள செட்டியாரு நெலத்த வித்துப் போட்டாரு. எல்லாக் கோளாறும் வந்திரிச்சி...”

     “நெருக்கிட்டே இருப்போம். இப்பு என்ன, பெஞ்சாதிய கூட்டிப் போகவா வந்திருக்கிற?”

     அவன் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

     “என்னமோ அன்னிக்குப் பொல்லாத நேரம்... என்னமோ நடந்துபோச்சி. இப்ப, அது வந்தா கூட்டிட்டுப் போவலான்னு. புருசன் பொஞ்சாதின்னு ஒரு கட்டுக்குள்ள ஆன பெறகு... படலக்கி அந்தால பூசிணிக்கா வுளுந்தாக்கூட எடுத்துக்கிறம். புள்ள, பொஞ்சாதிய வெலக்கி வுடுறது செரியில்லன்னு தோணிச்சி...”

     குழந்தையை அவன் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறான். அது சிவப்பு சட்டையின் பித்தானைப்பற்றி இழுக்கிறது. துருதுருவென்று கைகளையும் கால்களையும் அசைக்கிறது.

     “...சும்மாருடா... பயலே...” என்று கொஞ்சிக் கடிகிறான்.

     “பஞ்சமி! இங்க வா பொண்ணு!”

     சம்முகத்தின் குரலுக்காகவே காத்திருந்தாற் போல் அவள் குடில் வாயிலில் வந்து நிற்கிறாள்.

     “என்ன சொல்லுற!... உனக்கு விருப்பம் எப்படி இருக்கு?”

     “இங்க ஏன் கெடக்கணும்?... அது சொன்னாப்பல அப்ப ஆரு பேச்சயோ கேட்டுட்டுப் பேசிடிச்சி. ஊருல கண்டதும் பேசுறாங்க...”

     “அப்ப உனக்குப் புருசன் மேல கோவமில்ல?...”

     சம்முகத்துக்குச் சிரிப்பு வருகிறது. ஆனால் அவள் சிரிக்கவில்லை.

     “ஏன் கோவம்? யாருமேல எப்பிடிக் கோபிச்சுக்கிறதுங்க? மண்ணுல சாணியயுங் கொட்டுறோம். தழயுந்தா அழுவப் போடுறம். அதுலியே நின்னுட்டு எச்சியும் துப்பிட்டுத்தா நாத்து நடுறம் சேத்துல பொறக்கிறவங்க என்னாத்தக் கோவப்படுறதுங்க, சொல்லுங்க?”

     சம்முகம் சிலையாகிப்போகிறார். பஞ்சமி, அவருக்குத் தெரிந்து இடுப்பில் துணியைச் சுற்றிக்கொண்டு பெயருக்கு மாறாப்புப் போட்டுக்கொண்டு நாற்று நட இறங்கிய சிறுமி...

     அந்தக் காலத்தில் பெண்கள் நடவுக்கு இறங்கினால் நிமிர முடியாது. ஒரு பெண்ணின் இயல்பான ஆசாபாசங்கள், வேட்கைகள், உந்துதல்கள் எல்லாமே அந்த மண்ணோடுதான். மார்பில் பால்கட்டும். நீர்முட்டிக் காலோடு வழியும். நாவின் வறட்சியை, பசி தாகம் போன்ற வேட்கைகளை மாற்ற வெற்றிலைச் சருகை நிமிர்ந்து வாயில் அடக்க இயலாது. அப்போது... அவருடைய தாய், “டேய், யார்ரா...!’ என்று பயங்கரமாக ஒரு நாள் கத்தினாளாம். “நான் காளியாயி, நான் காளியாயிடா. போடுங்கடா பூசை!...” என்று வெடித்து வந்ததாம் குரல்.

     மணிகாரன் பயந்து போனானாம். சாமி வந்திடிச்சு தங்கம்மாளுக்கு என்று நடுங்கி, “தாயே, என்ன வேணும் சொல்லு...” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டானாம்!

     ஆனால் இந்தத் தந்திரத்தை எப்போதும் கையாள முடியுமா? குட்டு வெளிப்பட்டு விட்டால்...! மண்ணின் புதல்விகள் மண்ணைப் போல் எல்லாரும் பொறுக்கிறார்கள்...

     சோலை வாங்கி வந்தான் போல இருக்கிறது. முறுக்கும் வாழைப்பழமும் வருகின்றன. குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.

     அரையில் ஒரு செப்புக்காசு சேர்த்து சிவப்புக் கயிறு கட்டியிருக்கிறான். அகன்ற கண்களில் மை, நெற்றி முழுதும் அப்பிக் கொண்ட மைப்பொட்டு.

     குழந்தை... பரங்கி பூசணியையே பாக்குறதில்ல... இது மனிதக் குழந்தை. யாரோ சொந்தம் கொண்டாடி யார் வீடுகளிலோ பொன்னும் மணியும் பாலும் நெய்யுமாக வளமை செழிக்க யார் வீட்டுச் சேர்களுக்கோ போய்ச் சேர பசியும் பட்டினியுமாக உதிரம் கொடுத்தார்கள். அப்போது அந்த மண்ணை வெறுத்தார்களா? இன்றும் உச்சவரம்பும் உரிமைச் சட்டமும் கண்துடைப்புக்களாக விளங்கும் போதும் மண்ணை வெறுத்துவிட முடியுமா?

     குழந்தையை முத்தமிட்டுக்கொண்டு ஒரு முறுக்குத் துண்டை விண்டு கொடுக்கிறார். மனம் லேசாக இருக்கிறது.