(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

8

     விளையாட்டுப் போல ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. சம்முகத்தால் நடக்க முடியவில்லை. வீக்கம் இருக்கிறது; மஞ்சளாகிப் பழுக்கவுமில்லை. காலையும் மாலையும் வரப்பிலும் வாய்க்காலிலும் நடக்கவேண்டிய ஒருவருக்கு முடங்கிக் கிடப்பதும் மிகக் கடினமாக இருக்கிறது.

     ஒருநடை டவுனுக்குப் போகலாம் என்றால்கூட, பஸ் நிற்குமிடம் வரையிலும் நடக்கமுடியாது. யாரிடமேனும் வண்டி கேட்க வேண்டும். யார் கொடுப்பார்கள்!

     பழைய வேம்பு ஒன்று ஐயர் நிலத்தில் இருக்கிறது. அதை வெட்டி ஒரு வண்டி செய்து வைத்துக்கொண்டால் மிக உதவியாக இருக்கும். ஆனால் எத்தனையோ எண்ணங்களைப் போன்று அதுவும் முதிர்ந்து பலன்கொடுக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் மங்குகிறது.

     அன்றுமாலை விளக்குவைக்கும் நேரம், லட்சுமி சாமான் வாங்கக் கடைக்குச் சென்றிருக்கிறாள். காந்தி திண்ணையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

     வெள்ளையாக இருட்டில் தெரிகிறது. அந்த நேரத்தில் குடித்துவிட்டு வரும் ஆண்களில் யாரும் அத்தனை வெள்ளைத் துணிக்குரியவராக இருக்க மாட்டார்கள். ஏதோ ஓர் ஆர்வத்தில் உந்தப்பட்டவளாகக் காந்தி எழுந்து வாயிலில் வந்து நிற்கிறாள்.

     “ஏம்மா, காந்தி? சம்முகம் இருக்கிறானா?”

     “இருக்காரு!... அப்பா!” என்று உள்ளே நோக்கிக் காந்தி மெதுவாகக் குரல் கொடுக்கிறாள்.

     “விருத்தாசலம் பிள்ளையும் மூலையாரும் வாராங்க...”

     சம்முகம் மெள்ள எழுந்திருக்கிறார். “வெளக்க ஏத்தி வாசல்ல வை” என்று கூறிவிட்டு வாயிலில் வந்து நின்று கை கூப்புகிறார்.

     “வாங்க வாங்க...”

     திண்ணையில் வந்து உட்காருகின்றனர்.

     “என்னப்பா? ஒடம்புக்கென்ன?”

     காந்தி சுவரொட்டி விளக்கொன்றை ஏற்றிக்கொண்டு வந்து ஓரமாக வைக்கிறாள்.

     “கால்ல முள் குத்தினாப்பல இருந்திச்சு. இப்ப என்னன்னே புரியல. குத்துவலி ஒரு வாரமா மஞ்சக் குழச்சிப் போட்டு, அந்தி மந்தாரை இலை, ஊமத்தை இலை கொண்டாந்து வாட்டிப் போட்டு, புளி குழச்சிக் காச்சிச் சூடா தேச்சி வச்சு எல்லாம் பாத்தாச்சி. பளுக்கவுமில்ல, உடையவுமில்ல.”

     “அட? டாக்டரிட்ட யார்ட்டன்னாலும் காட்டக்கூடாது?”

     “அதான் வீரமங்கலம் போறதுன்னாலும் வண்டிவேணும், இங்கதா டாக்டர் யாருமில்ல. டவுனுக்குப் போயிக் காட்டலான்னாலும் வண்டியில்ல.”

     “இது பாத்தா வாதக் கோளாறாட்டும்லா தோணுது? சுக்கு வேலிப்பருத்திய அரச்சிப் போட்டுப் பாரு. கப்புனு அமுங்கிடும்.”

     மூலையாரின் வைத்தியம் இது.

     “நடவு, உழவு, பூச்சிமருந்து வாங்கிட்டு வந்து அடிக்கணும். நான் நின்ன எடத்தில் நிக்காம சுத்தினாத்தா முடியும். வீட்டில பொம்பிளயே முழுசும் அங்க இங்கே போயிப்பாக்கணும்னா எப்பிடி? ரொம்பச் சங்கட்டமாயிருக்கு.”

     “அதெல்லாம் சரியாப்பூடும். இதெல்லாம் ஒரு நேரம் பத்தாத கோளாறுதான். பத்து வருசமா அம்மனுக்கு ஒண்ணும் செய்யாம போட்டுட்டம். இப்ப விட்டிடக்கூடாது. போன வருசம் பாரு, மழவந்து குறுவபூரா பாழாப் போச்சி, கோடயில மாடு கன்னெல்லாம் சீக்கு வந்து அதும் கோளாறாப் போச்சி. இதுக்கெல்லாம் என்ன காரணம்?... நாம இன்னிக்கு ஊருல ஒரு மதிப்பா தலையெடுத்த பிறகு நாமதா முன்ன நின்னு நடத்தணும். வக்கீலையரு சம்சாரம் வந்து ‘அப்பவே எல்லாம் செய்யிங்க, வீட்டு இரும்புப் பொட்டில நவ நட்டெல்லாம் இப்பவும் பூதம் காக்குற மாதிரி எதுக்கு வச்சிருக்கிறது. சாமிக்கின்னு இருக்கிறத சாமிக்குச் செய்யணும்’னு சொன்னாங்க அந்தக் காலத்தில ஊரில எல்லாம் சேந்து அம்மனுக்குன்னு ஒதுக்கி வச்ச சொத்து... அதனால, விழா எடுக்கிறதுன்னு தீருமானமாயிட்டது.”

     “அதா மின்னயே சொல்லிட்டீங்களே?”

     “சொன்னேன், ஆனா நீ ஒரு ஆக்ஷனும் எடுக்கலியே? கோயில் வளவில இந்த அஞ்சு பேருதா குடிசய வச்சிட்டு, கோளி ஆடுன்னு குடியேறி ஸ்திரமாயிட்டாங்க! போன தை அறுப்பும் போதே இப்படி ஒரு உத்தேசம் இருக்குன்னேன். சாடையா வேற எடம் போகட்டும்னு. போனானுவளா? உன்ன ஆளயே காணுறதுக்கில்ல. நீ வெவசாய சங்கம், மாநாடு, பேரணின்னு எப்ப பார்த்தாலும் அங்க இங்க போயிட்டிருக்கிற, விழா எடுக்கிறதுன்னா முதல்ல வளவு முச்சூடும் துப்புரவாக்கி, கோயிலப் புதுப்பிக்கணும். முன்னாடி ஒரு மண்டபம் மாதிரி போடலான்னு மணிகாரரு, சொன்னாரு...”

     “அதுக்கெல்லாம் நாங்க ஒண்ணும் இப்ப தடை சொல்லலீங்க. ஆனா, ஆளுவ எல்லோரும் இப்ப உழவு நடவுன்னு இருக்கயில, எப்பிடி இதச் சொல்லுறது. நீங்க யோசிச்சிப் பாருங்க...”

     “அதா தலக்கி அம்பது ரூபா குடுத்துடறேன்னு சொன்னனே?”

     “அது சரிதாங்க, இப்ப வேலை இருக்கறப்ப அவங்க நாலு காசு சம்பாதிச்சாதா உண்டு. அவனுவங்க குடிசயப் பேத்திட்டுப் போவணுமின்னா அஞ்சாறு நா தவக்கமாகும். ஏதோ புடல் பாகல்னு போட்டிருக்காங்க. அதனால நீங்க ஒரு ரெண்டு மாசம் பொறுங்க. புரட்டாசி அப்பிசில...”

     “அப்ப மட்டும் நெருக்கடி இல்லையா? அப்பதா குறுவ அறுப்பு, தாளடின்னு பறப்பீங்க.”

     “அது சரிதா, தை அறுப்பு ஆன பிறகு விழா வச்சிக்குங்க.”

     “அப்ப மட்டும் சால்ஜாப்பு சொல்ல மாட்டானுவளா? வருஷம் பூராத்தா இப்பல்லா வேலையிருக்கு. ஒண்ணு தீர்மானம் செஞ்சா பிறகு மாறக்கூடாது. இது அம்மன் காரியம். அதுனால ஒரு ரசாபாசமில்லாம இந்த வெவகாரம் முடியணும். இவங்க குடிசையைக் கூட, அங்கொண்ணு இங்கொண்ணா இஷ்டத்துக்குப் போட்டிருக்கானுவ. சுத்தமா எடுத்தாத்தா, பொண்டுவ வந்து பொங்கல் வைக்க, அடுப்புக் கோடு இழுக்க, ஒரு நாடகம் அது இதுன்னு வச்சா அல்லாம் உக்காந்து பாக்க பந்தல் போட முடியும். ஒந்தலயாரிமெவ அந்த வடிவு பய...”

     குரல் இறங்கி, தீவிரத்துள் நுழைகிறது.

     “அந்த தேவேந்திரன் பய இருக்கானில்ல?... அதாம்பா? உங்க ஆளுதா, இத வேட்டுவனூரு வண்ணார்குளம் சேரிலேந்து லா படிச்சிட்டு வந்திருக்கான்ல?”

     “ஆமா?...”

     “அவ நடப்பொண்ணும் சரியில்ல சம்முகம், உம் மனசில கெடக்கட்டும். பயனுக்கு அப்பன் வெட்டுப்பழி குத்துப்பழி வாங்கி செயிலுக்குப் போனான். பின்னால எலக்சன் சமயத்தில எதிராளுவளே இவன வெட்டிப் பழி வாங்கிட்டானுவ. அம்மாக்காரி ஆந்தக்குடியா நாடகக்காரனோடு ஒடிப்போனா.”

     “அதெல்லாம் தெரிஞ்சதுதா. இவன் படிச்சதெல்லாம் தெரியுமே? கெட்டிக்காரப்பய. இப்பக்கூட பத்துநா மின்ன பாத்தேன், அவனுக்கென்ன?”

     அடி மனதில் ஒரு சமயம் காந்தி படித்து முடித்து, கட்டுவதற்கு ஏற்ற இளைஞன் என்ற எண்ணம் முளை விட்டிருந்தது. அவனைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால்...

     “அதா... இப்பதா தீவிரவாதிங்க நிறையத் தலையெடுத்திருக்காங்களே? அஞ்சாறு மாசத்துக்கு முன்ன, ஆம்பூர் பக்கத்திலேந்து ரெண்டாளுவ இவன் வூட்டிலதா தலமறவாத் தங்கியிருந்தானுவன்னு எனக்குச் சேதி கெடச்சிச்சி. அவனுவ வெடிகுண்டை வச்சிட்டு வெளயாடுறானுவ. அந்த காலத்தில இதெல்லாம் இருந்ததுதா. நம்ம கீழ்த்தஞ்சைப் போராட்டம் நாடறிஞ்சது. இன்னிக்கு ஆண்டான் அடிமையில்ல, அரிசன மக்களுக்கு எல்லா அந்தசும் வந்தாச்சு. அடிமைப்பட்டிருந்ததும் அடிபட்டதும், பழய கதை. இப்ப, இவங்க நடமுறைய உடக்கிறாங்களாம். அப்ப நம்ம குமரேசன் வந்து சொன்னா, கிட வுட்டிருந்த நிலத்தில, காவலுக்குப் போயிட்டிருக்கயில பாத்தானாம். கோவில் வளவில உன்னோட ஆளுவள வச்சித் தூண்டிக்குடுக்கிறான்னு...”

     சம்முகம் அதிர்ச்சியுற்றாற்போல் பார்க்கிறார்.

     “இல்லாட்டி இந்த வடிவுப்பயல் இவ்வளவு எகிற மாட்டான். ஏங்கிட்ட இங்க ஏட்டய்யா சொன்னாரு சரகம் சபின்ஸ்பெட்டரு கூடச் சொன்னாரு. இந்தப் பக்கத்துல கூட அவனுவ புரயோடிட்டு வாரானுவ. அத்தப் பாத்துக்கிட்டே இருக்கிறம். தேவேந்திரன் பயதா இங்க சந்தேகப்படுற பேர்வழி. ஆனா, ஒண்ணும் சட்டுனு பண்ணறதுக்கில்ல. எதானும் கேட்டா, ஜனநாயகம், அநுமதிச்சி இருக்கிற பார்ட்டி, காட் வச்சிருக்கேம்பா. ஆனா வாட்ச் பண்ணுறம்னு.”

     “அப்பிடியா? அந்தமாதிரி எனக்குத் தெரியாம எதும் நடக்கிறதுக்கில்லியே?”

     “அட ஒனக்குத் தெரிஞ்சா நடத்துவானுவ? இப்ப ஐயனார் கொளத்துக்காரங்ககிட்ட தூண்டிவுடுறான். வயலுக்கு நடுவ குடிசயப் போட்டுக்கிடறா. தரிசாக் கெடந்திச்சி, அப்ப சரி. இப்ப செட்டியாரு கைமாறினதும் இவன் தீவிர வெவசாயம்னு பண்ணிட்டா. வயல்ல நடவாயிட்ட பிற்பாடு மிதிச்சிட்டுப் போறதுக்கென்னன்னு கேட்டானாம். வடிவுப்பய ராவில போறான். தலவன்னு பேரு வச்சிட்டவன் இன்னிக்கு ஏண்டா போராட்டத்துக்கு எறங்காம பொண்ணு படிப்புன்னு போறான்? இவன் இன்னிக்கு மேலே போனான், பூர்ஷ்வா வாறான், அப்பிடி இப்பிடின்னு பேசுறாப்பல. நீ ஒழச்சி நாலுகாசு சேத்திருக்கிற. இவனுவளுக்காக எத்தினியோ தியாகம் பண்ணி மின்னுக்கு வந்த உன் பையன் இன்னிக்குக் கவுரவமா படிச்சான், மேல் சாதிப் பொண்ணக் கட்டிட்டான். எதோ வூடு கட்டிருக்கே...”

     “எங்கங்க? வீட்டுக் கடன் அப்பிடியே நிக்கிது. வாரதும் சாப்பிடறதும் சரியாப் போவுது...”

     “அது சரி, உழுதவங்க கணக்குப் பாத்தால்ல அது தெரியும்? இவனுவளுக்கென்ன? பயிரு தீஞ்சாலும் அழுவினாலும் மழபெஞ்சாலும் பெய்யாட்டியும் கூலி வாங்கிட்டுப் போறானுவ. பொறுப்பா இருந்து என்ன செய்றானுவ? அன்னன்னிக்குக் கிடக்கிறத அன்னன்னிக்கே கள்ளுக்கட, சாராயக் கட, சினிமான்னு தொலச்சிடறான். பண்ணையாள் பாதுகாப்பு சட்டம்னு எப்பவே ராஜாஜி கொண்டாந்து, அடிமை ஆண்டானில்லன்னு ஆக்கி, கூலிய ஒசத்தியாச்சு. ஆனா, இப்பவும் இவனுவ கலியாணம், கரு மாந்திரம் எல்லாத்துக்கும் முதலாளின்னு தானே குழயிறானுவ?...”

     சம்முகத்துக்குக் குறுக்கிட நா எழவில்லை.

     “அரசு பாலர் பள்ளி வச்சிருக்கா, உணவுத் திட்டம் இருக்கு எத்தினி பேரு தொடச்சியா பள்ளிக்கு அனுப்புறானுவ? கணக்கெடுத்துப்பாரு? மதகடில நண்டு பிடிச்சிட்டும், தெருப் பொறுக்கிட்டும் திரியுதுங்க. கேட்டா அதில்ல, இதில்ல, எப்பிடிப் பள்ளிக்கொடத்துக்கு அனுப்புறதுன்னு பேசுறானுவ. நாம முன்ன போவணும்னு ஒரு எழுச்சி வாணாம்? சும்மா வாழுறவனப் பாத்துப் பொறாமை பட்டாப் போதுமா?”

     நாயம், நாயம் என்று சம்முகத்துக்குத் தோன்றுகிறது.

     “அதா, உம் பொண்ணு சின்னக்குட்டி இருக்கிறால்ல? அத்த இவன் வளச்சிட்டிருக்கிறான். இது நாயக்கர் வூட்டுக்கு வந்து எதோ கழுவி மெழுவி சீலகீல தோச்சிக் குடுக்கறாப்பல. இந்தப் பய போறப்ப வரப்ப, அத்த வளச்சிட்டுப் போறான்.”

     “ஆரு... வடிவையா சொல்றீங்க?”

     “ஆமா. நீ கவுரவமா இருக்கிறவன். என்ன ஒண்ணுன்னாலும் நீ பள்ளர்குடி வாய்க்காரு, அவன் மாடு திங்கிற பறப்பயதானே? நாளக்கி எதுனாலும், ஆச்சின்னா ஆ ஊன்னு அப்ப கத்தி பிரயோசனமில்ல. இப்ப உம் பய்யன் கவுரவமா வேலை செஞ்சான். மேச் சாதியக் கட்டியிருக்கிறான். அதுமேல போற வழி. ஆனா, இது... சரியில்ல பாரு? அட நடவுக்குப் போறாங்க, பொண்டுவ. இப்ப காலம் ரொம்பக் கருப்பா இருக்கு. மேச்சாதிப் பொண்டுவ அல்லாருமே நடவுக்குப் போறாங்க. ஆனா இங்க ஒளுக்கம் கொறயக் கூடாது பாரு?”

     இவர் நிறுத்தும் நேரத்தில் லட்சுமி கூடையில் சாமான்களுடன் கொல்லை வழியாக உள்ளே நுழைந்திருக்கிறாள். சம்முகம் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்கிறார்.

     “என்ன லட்சுமி! நடவா?”

     அவள் தோளைப் போர்த்துக்கொண்டு வாயிற்படியில் சார்ந்து “ஆமாம், வாங்க, அம்மால்லாம் சொகமா?” என்று கேட்கிறாள்.

     “எல்லாம் சொகம். எங்க சின்னக்குட்டி? அதும் நடவுக்குப் போயிருக்கா?”

     “ஆமாங்க. நாயக்கர் வூட்டுக்குப் போயிட்டு வருவா...”

     “கொஞ்சம் எச்சரிச்சி வையி. இப்ப, கோயில் விசயமா வந்தோம். எல்லாம் புதுப்பிச்சி, விழாவ நல்லபடியா எடுக்கணும்னு ஏற்பாடு. சம்முகத்துக்கிட்டச் சொல்லியிருக்கிறேன். என்ன சாமியில்லன்னு பேசுனப்ப கூட, பொண்டுவ வுட மாட்டீங்க. நீங்க போயி கும்பிட்டு வந்து ஆம்புளகளுக்குத் திருநீறு குங்குமம் கொண்டாந்து கொடுப்பீங்க. இப்ப இத்தினி வருசத்துக்குப் பெறகு விழா விமரிசயா எடுக்கணும்னிருக்கு. பொண்டுவ எல்லாரிட்டையும் சொல்லிடு. மகிலெடுத்திட்டு விமரிசயா குலவ இட்டுட்டு வந்து பொங்கல் வய்க்கணும். பொண்டுவ இல்லாம அம்மன் விழா சிறப்பு இல்ல.”

     “வச்சிட்டாப் போச்சி...”

     உள்ளே சென்று தட்டில் வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு வருகிறாள்.

     “வெத்தில போடுங்க...!” விருத்தாசலம் பிள்ளை மகிழ்ந்து வெற்றிலை போடுகிறார்; மூலையானுக்கு நகர்த்துகிறார்.

     “இவருக்கு, காலுதா இப்பிடி வீங்கிக்கெடக்கு. வண்டி எதுனாலும் கிடச்சா, ஆசுபத்திரிக்கின்னாலும் கூட்டிட்டுப் போயி பாக்கலாம். காச்சலும் இருக்கு. கெடந்து அவதிப்படுறாங்க...”

     “அதா...” புளிச்சென்று வாயிலில் வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து வருகிறார். “வண்டி இருக்கு, ஆனா மாடெல்லாம் ஒழவுக்குப் போயிருக்கு. இல்லாட்டி ஒரு வில்லங்கமும் இல்ல, தாரதுக்கு. இவனுக்கு ஒண்ணில்ல. மூலையாரு சொன்னாப்பல வாதக் கோளாறு, இது இப்பிடித்தா இழுத்தடிக்கும். இஞ்சிக்குடி வைத்தியரு ஒரு எண்ண வடிச்சிக் குடுப்பாரு. நான் சொல்லி அனுப்புறேன். அம்மனுக்கு வேண்டிக்க ஒரு கொறயும் வராது.”

     “இவங்க படுத்திட்டதே ஒண்ணும் ஓடலிங்க...”

     “ஒண்ணும் வராது. நான் சொல்றம் பாரு உங்கை ராசியான கை சம்முகம். முதல்ல உங்கையால பத்து ரூபா அம்மன் விழாவுக்குன்னு எளுதிக் குடு...”

     மூலையான் இத்தனை நேரமும் தயாராக வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தை நீட்டுகிறார்.

     “பத்து ரூபாயிங்களா?... என்னங்க அவ்வளவு போட்டுட்டீங்க?”

     சம்முகம் குழப்பத்தையும் எரிச்சலையும் காட்டாமல் சிரிக்கிறார்.

     “பின்னென்னப்பா? சொந்தமா அஞ்சு மா வாங்கிட்ட, வீடு கட்டிட்டே, விவசாய சங்கத் தலைவன். புள்ள, பொண்ணு படிச்சு கவுரமாயிட்டிங்க. இதெல்லாம் அம்மன் குடுத்தது தான? பத்து வருசத்துக்கு, வருசத்துக்கு ஒரொரு ரூபாவச்சாக் கூட பத்து ரூபாதான்? நாயமா உன் அந்தசுக்கு நூறுருபா போடலாம். நா. கஷ்ட நஷ்டம் ஒனந்தவன். அதான் பத்தோட நிறுத்திட்டேன்...”

     சம்முகம் நோட்டுப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவர் கொடுத்த பேனாவாலேயே பத்து ரூபாய் என்று எழுதியதற்கு நேராகக் கையெழுத்துப் போடுகிறார்.

     “முதல்ல கடஞ்சொல்ல மாட்டே குடுத்திடுவேன்னுதா இங்க வந்தோம்.”

     சமூக மதிப்பைக் குறிப்பாக்கி உயர்த்தி வைக்கும்போது மனம் மயங்காமலே இருப்பதில்லை. லட்சுமி அவனைக் கேட்காமலே உள்ளிருந்து பத்து ரூபாய் கொண்டுவந்து கொடுக்கிறாள்.

     அவர்களிருவரும் படியிறங்கிச் செல்கின்றனர்.

     “காந்தி, நாகு எங்கடீ; அவம்பாட்டுல எங்கனாலும் போயிடப் போறான்!”

     லட்சுமிக்கு அவனைப் பற்றிய உணர்வு ஒரு நொடியில் கூடச் சாவதில்லை.

     “ல்லாம் பாட்டியோடதா உக்காந்திருப்பா, புள்ளங்க ஆடுறதப் பாத்திட்டு!”

     தாத்தா குடித்துவிட்டு வருகிறார்.

     பின்னால் அம்சு ஈரச்சேலையுடன் வீடு சுற்றிக் கொல்லை வழி நுழைகிறாள்.

     சம்முகம் உள்ளே நடுவிட்டில் வந்து அமரும்போது அவள் உலர்ந்த துணி எடுக்க வருகிறாள்.

     “இங்க வாடி! இந்நேரம் என்னடீ உனக்கு? வெளக்கு வச்சி எந்நேரம் ஆவுது? இனிமே நாயக்கர் வீட்டுக்கு நீ போக வானாம். காந்தி இருக்கிறா. பொழுதோட போயி தொழுவத்தக் கூட்டிட்டு வரட்டும்... தே...வடியா!...”

     அம்சு நடுங்கிப் போகிறாள்.

     “அந்த வடிவுப் பயகூட இளிக்கிறதும் பேசுறதும் நாலுபேரு பாத்து பேசும்படியா... சீச்சீ! வெக்கங்கெட்ட தனம்...! எனக்கு அவுரு கேக்கறப்ப தல நிமித்த முடியல. நம்ம நடத்தயப் பாத்து ஒரு சொல்லு கெளம்பிச்சின்னா, அது உனக்கோ எனக்கோ இந்த வீட்டுக்கோ மட்டும் கெட்ட பேரில்ல. நாம ஒரு பெரிய அமைப்பைச் சாந்திருக்கிறோம். நமக்குன்னு ஒரு நாயம் கேக்குற ஒழுங்கும் சுத்தமும் இருக்கணும். அதுக்கு ஒரு கெட்டபேரு வந்திடிச்சின்னா நாம சார்ந்திருக்கிற ஒரு அமைப்பே சரிஞ்சி போயிடும். இன்னாடா இவன் பெரிய சங்கத் தலைவன். இவம் பொண்ணு புள்ளங்களே ஒழுங்கு நடத்தயில்லாம இருக்குன்னு ஒரு பேச்சு வந்திச்சின்னா எல்லாக் கட்டுக்கோப்பும் போயிடும். இன்னிக்கு நாம ஒரு மனிசன்னு நிமிர்ந்து நிக்கிற தயிரியம் வந்திருக்குன்னா அது அந்தக் கட்டுக்கோப்பினாலதா. பெரியவங்க இருக்காங்க, உனக்கு எது எப்படிச் செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும். அதுக்குள்ள அசிங்கம் பண்ணிடக் கூடாது. ஏண்டி?”

     அம்சுவின் முகம் தொங்கிப் போகிறது. குற்றவாளியாகக் கால் நிலத்தைச் சீண்டுகிறது.

     “அந்தக் காலத்தில் பொம்பிள நடவு செய்யிறப்ப குனிஞ்சதல நிமுந்தா மணிகாரன் கூப்பிட்டு அடிப்பான். இப்பவும் அது மாதிரி ஒரு ஒழுங்கு இருக்கணும் போ...!”

     காந்தி இது தனக்கில்லை என்பதுபோல் வாயிற்படியில் போய் நிற்கிறாள்.

     “இந்தப் பொட்டங்களக் கட்டிக் குடுக்கிற வரய்க்கும் வயித்துல நெருப்புத்தா, வூட்டுக்குள்ள குந்த வச்சிச் சோறுபோட முடியல..." என்று கிழவி முணுமுணுக்கிறாள்.