(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

23

     அம்சுவுக்கு உள்ளே அடி வைக்கவே தோன்றவில்லை. சிறிது நேரம் கொல்லை ஆற்றுக் கரை மேட்டிலிருந்து எதிர்ச் சாரியில் செல்லும் ஆட்களைப் பார்க்கிறாள். இன்னும் சிறிது நேரம் வாசலில் இறங்கி, கிழக்கே குளக்கரை வரையிலும் சென்று வாய்க்கால் கடந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறாள்.

     அவர்களெல்லாம் அஸ்தமங்கலம் போனால், போலீஸ் டேஷன் ஆர்ப்பாட்டம் என்றால் எப்போது வருவார்களோ?

     மூக்கனும் அவன் மாமியார்க் கிழவியும் திண்ணையில் குந்தியிருக்கிறார்கள்.

     “நாவுவ உள்ளே போட்டிருக்கியா அம்சு?”

     “இல்ல பாட்டி. அவனத்தா தேடுறே, காலம ஒடிப் போயிட்டா...”

     “அங்க கோயிலாண்ட ராட்டினம் வந்திருக்கில்ல? எல்லாம் ஓடிப்போயிருக்குங்க...”

     வீட்டுக்குள் ஒடி வருகிறாள். பாட்டி தாத்தாவுக்கு சோறும் நீருமாக உப்புப்போட்டு மிளகாய்த் துவையலுடன் வைத்துக் கொடுக்கிறாள்.

     “சோறு சமச்சி வைக்கிறாயாடி?... எதுனாலும் போட்டு ஒரு குளம்பும் காச்சி வய்யி. அந்தப்பய எங்க இருக்கிறானோ?”

     “காணம் பாட்டி..!”

     “ஓடிப் போயிட்டு வருவா. என்னமோ கப்பலே முழுவுறாப்பல இருக்கு, அவனப்பத்தி என்ன இப்ப?”

     அம்சுவுக்கு உள்ளூற ஏதோ ஓர் அச்சம் ஆட்கொள்ளுகிறது. சோற்றை வடித்து வைத்து, ஒரு காரக் குழம்பைக் கூட்டி வைக்கிறாள். வீடுபெருக்கி, மாடுகளுக்குத் தண்ணிர் காட்டி, எல்லா வேலையையும் முடித்தாயிற்று. வெயில் பின் முற்றத்துச் சுவரில் ஓடிவிட்டது.

     காந்தி மணிக்கணக்காகப் புத்தகம் படிப்பாள். படங்கள் கத்திரிப்பாள். ஒட்டுவாள். ஏதேனும் வீட்டுக்குள் செய்வாள். அம்சுவுக்கு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கவே பொருந்தாது.

     நாகு இத்தனை நேரம் எங்கும் போய் வராமலிருந்ததில்லை. ஒருமுறை மருள் நீக்கி வரையிலும் போய்விட்டான். அவனை அந்தப் பக்கத்தில் எல்லாருக்கும் தெரியும். கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அவனுக்குத் தண்ணிரைக் கண்டால் பயம். ஆறு குளத்தில் நிச்சயமாக இறங்கமாட்டான்.

     நெருப்புப்பெட்டி கிடைத்தால் கொளுத்துவான். பீடி குடிக்கவேண்டும் என்று சாடை காட்டுவான். வெளியே யாரேனும் குடித்துக் கொண்டிருந்தால் போய்க் கேட்பான். கோடித் தாத்தா அவனுக்குப் பீடி குடிக்கக் கொடுப்பார். அவள் அம்மா திட்டுவாள்...

     “என்னாடி? அம்சு? இங்க வந்து நிக்கிற?”

     “நாயக்கர் வூட்டம்மா!”

     “வாங்கம்மா... வாங்கம்மா!...”

     “என்னாடி? எல்லாம் பேசிக்கிறாவ? உங்கக்கா வந்திட்டாளாமே?”

     “வாங்கம்மா, பாட்டி இருக்கு...”

     “கேட்டதுக்குப் பதிலக் காணல?...”

     “ஆமாம்மா. அல்லாரும் இன்னிக்கு அஸ்தமங்கலம் போயிருக்காவ...”

     “என்னா விசேசம்?”

     “வீரபுத்திரன் மாமாவப் போலீசில புடிச்சி வச்சிருக்காவல்ல? அதுக்குத்தா?”

     நாயக்கரம்மா புருவத்தைச் சுளிக்கிறாள்.

     “அதுக்கு இவங்கெல்லாம் போயி என்ன செய்யப் போறாங்கடி?”

     “எனக்குத் தெரியாதுங்க, பாட்டிகிட்ட கேளுங்க...”

     “சாதுரியக் காரியாச்சே நீ! ஏண்டி! கோயில் விழாவுக்கு இப்ப ஆரும் மகில் எடுத்திட்டுப் போயிக் கும்பிடுறதில்லைன்னு தீந்திடிச்சா?”

     “அதப்பத்தி எல்லாம் பேசிக்கலிங்க. வூட்டுப்பக்கம் வாங்கம்மா, பாட்டி இருக்கு...”

     “மூட்டு வலிக்கிதுடி கொஞ்சம் வாத மடக்கி எல கொண்டான்னு ஒங்கிட்டச் சொல்லச் சொல்லி அசந்துட்டே. கோமதி சொன்னா, மூலையா வுட்டுக் கொல்லையில இருக்குன்னு. அதுவர வந்தமே கோயில்ல என்னமோ வர்ணமெல்லாம் அடிச்சிருக்காவன்னாங்களே, பாத்திட்டுப் போவம்னு வந்தே. நீ இங்க மேட்டுல நிக்கிறியே? ஏன்னு கேட்டேன். உள்ள போடி! காலம் கெட்டுக் கிடக்குது!”

     மாலை குறுகி மஞ்சள் முறுகிக் கருமை பரவுகிறது.

     வெளியில் கட்டிய மாட்டை உள்ளே கட்டிச் சாணியை எருக்குழியில் போட்டாயிற்று. அம்சுவுக்குப் பொழுதைப் பிடித்துத் தள்ளினாலும் போகவில்லை. தாழ்வரையிலுள்ள அறை நாகுவில்லாமல் திறந்து விறிச்சிட்டுக் கிடக்கிறது. அக்கரையில் கள்ளுக்கடையில் பளிச்சென்று பெட்ரோமாக்ஸ் லைட் தெரிகிறது. கீழே பாம்பாய் நெளியும் ஆறு. முதுகில் வரிப்பாலம். அதன் மீது நிழலுருவங்கள் சொட்டாய்ச் சொட்டும் பனித்துளிப்போல் ஒவ்வொன்றாக நகர்ந்து வருகின்றன.

     கொசுக்கள் ஙொய்யென்று செவிகளில் பாடுகின்றன.

     மாரியம்மாவின் குரல் கேட்டது.

     “புள்ள வந்திச்சா?”

     “ஆரு அப்பாவயா கேக்குறிங்க? அவரு காலம வந்திட்டுப் போயிட்டாரு...”

     “அவங்கல்லாம் இப்ப எங்க வருவாங்க? நாவு... அரச மரத்தடில குந்திட்டு பீடி குடிச்சிட்டிருக்கு. புள்ளங்கள்ளாம் கூடிச் சிரிச்சிச் சீட்டுதுங்க. இது புக வுட்டுட்டு இருந்திச்சு. வூட்டுக்குத் தெரியுமோ, தெரியாதோன்னு ஓடியாந்தே. சோறு வச்சீங்களா?...”

     “வச்சே! நீங்க சாப்பிடுறீங்களா?...”

     வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வேண்டாம் என்று மாரியம்மா கைகாட்டுகிறாள்.

     “நாம் போறேன். பதனமா இருந்துக்க. அந்தப் பயல முடுக்கி வுட்டுட்டுப் போறேன். ரெண்டு வெறவு இருந்தா தாயே?”

     முட்சுள்ளியை ஒடித்துக் கூடையில் வைத்துக் கொண்டு செல்கிறாள். இவர்களுக்கே விறகு தீர்ந்துவிட்டது. மூங்கிற் காட்டில் போய் கொஞ்சம் சேகரித்து வரவேண்டும்.

     கொல்லைப்படலை இழுத்துக் கட்டிவிட்டு வாசற்பக்கம் வருகிறாள்.

     “சோறு சாப்பிட்டுட்டுப் படுத்துக்கடீ. நா மூக்கனப் போயிப் பாத்துட்டு வரச் சொல்லுற.”

     கிழவர் எழுந்து கேட்கிறார். “எல்லாம் எங்க போயிட்டாவ?”

     “முன்ன போனமே புதுக்குடிக்கு அப்படி எல்லாம் போயிருக்காவ.”

     “கூலித் தவராறா?...”

     “இல்ல... பொம்பிளயப் போலீசில கூட்டிட்டுப் போயிருக்கிறானா...”

     ஒரு வசையை உதிர்த்து விட்டுச் சாராயத்தைப் பருகுகிறார்.

     லொக் லொக்கென்று இருமல் வருகிறது.

     தெருவில் பிள்ளைகள் குஞ்சுகள் போகும் அரவங்கள்.

     யார் வீட்டிலோ பிள்ளை அழுகிறது.

     மாடத்தில் முணுக் முணுக்கென்று சிம்னி விளக்கு எரிகிறது.

     நடுவிட்டில் அம்சு விரிப்பை விரித்துப் படுக்கிறாள். பாட்டி அருகில் வந்து சுருங்கிய கையை அவள் தலையில் இதமாக வைக்கிறாள்.

     “சோறு தின்னியா கண்ணு?...”

     “அவுங்கல்லாம் வரட்டுமே!...”

     இருளில் மூங்கில் தோகைகள் சரசரப்பதுபோல் ஓசை கேட்கிறது.

     “பாட்டி! நாவு... நாவு வந்திருக்கிறா...?”

     “நீ இரு. நாம் போயிப் பாக்கிறே...”

     பாட்டி பின்பக்கக் கதவைத் திறக்கிறாள்.

     பின்பக்கம் யார் யாரோ ஒடிவரும் அரவங்கள். கிழவிக்கு நெஞ்சு திக்கென்று குலுங்குகிறது. நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. அவள் உள்ளே வந்து கதவை அழுத்தமாகத் தாளிடுகிறாள்.

     அம்சு விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு வாயிற்பக்கம் நாகு வந்திருக்கிறானோ என்று பார்க்கப் போகிறாள்.

     அடுத்த கணம் வாசலில் வெள்ளையும் சள்ளையுமாக இருளில் உருவங்கள். ஒரு மொட்டை பனியன், “டேய், சிறுக்கி துணிய அவுங்கடா வசமாச் சிக்கிட்டா” என்று கொக்கரிக்கிறது இரட்டைத் தொண்டையில்.

     கிழவிக்கு எப்படிப் புலனாயிற்றோ?

     அடுத்த நிமிஷம் உலக்கை அவன் கையில் விழுகிறது.

     “டே மாடா, மூக்கா, அமாசி...! எல்லாம் வாங்க!...”

     பாட்டி அம்சுவை உள்ளே இழுத்து வந்து நடுவீட்டுக் கதவுகள் இரண்டையும் தாழிட்டு விடுகிறாள்.

     கிழவர் திடுக்கிட்டு எழுந்தாற்போல் திண்ணையில் வசை பொழிகிறார். ஈக்கூட்டம் போல் வாயிலில் கூடிவிடுகிறது. செவத்தையனும் மூக்கனும் மாடசாமியும் கையில் கதிரரிவாள், தடி சகிதம் வந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கின்றனர்.

     துணியை உருவிச் சட்டையைக் கிழிக்கிறார்கள்.

     “ஏண்டா இப்பிடித் திமிருபுடிச்சி மனிச ரத்தத்துக்குப் பேயா அலயுறீங்க?”

     “அந்தக் கெளவன உதச்சி எறியுங்கடா! சாமி கோயில் பந்தல்ல நெருப்பு வச்சிருக்கானுவல்ல?...”

     “பந்தலெறியிதா? எரியட்டும்! எங்க வவுத்தெரிச்சல் அதுவா பத்திட்டு எரிறது!...”

     “பாத்திங்களா? இவனுவதா வச்சிருக்கானுவ! எலே நெருப்புக் குச்சியக் கிளிச்சிப் போடுங்க! இவனுவளும் எரியட்டும்!”

     செவத்தையனும் மாடசாமியும் ரங்கனைப் பிடித்துக் குமுக்குகின்றனர். உழவோட்டி தூக்கி அடித்து சுமந்த உரம் வாய்ந்த உடல்கள். காலிக்கும்பலை எதிர்க்க அவர்கள் அனைவரும் திரண்டு ஆற்றுக்கரை மேடு, குளப்பக்கம் என்று அரண் நிற்கின்றனர்.

     அம்சுவைத் திண்ணையில் பதுங்கச் செய்துவிட்டுக் கிழவியும் வெளியே உலக்கையைக் கையிலெடுத்துக்கொண்டு வருகிறாள்.

     இரவு நெடிய இரவாக ஊர்ந்து செல்கிறது. குஞ்சு குழந்தைகள் கிழவர்கள் யாருமே உறங்கவில்லை.

     மறுநாட் காலையில் இருள் விலகும்போது கோயிலும் சுற்றுப்புறங்களும் முழுமையாக மலரவில்லை.

     பந்தல் கரிந்து மூளியும் மொக்கையுமாகக் கிடக்கிறது. உடம்பில் ஒரு துண்டு துணிகூட இல்லாமல் குஞ்சிதத்தின் உடல் காவாய்க்கரையில் கிடக்கிறது...