உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 15 மண்வெட்டிக்குப் புதிதாகச் சீவி வைத்த கட்டையுடன் வீரபுத்திரன் பெரிய பண்ணை ஐயர் வீட்டுக் கொல்லையில் நுழைகிறான். அக்கிரகாரத்து வீடு, வாயில்புறம் வீட்டின் முன்பகுதி முழுவதும் பல பொருள் சிறப்பங்காடிக்கு விட்டிருக்கிறார்கள். பூமணி ஆற்றுக்கரை வரை நீண்ட கொல்லையில் விருத்தாசலம் பிள்ளை ஆயிரங் காய்ச்சித் தென்னை பயிரிட்டிருக்கிறார். அதற்குத் தண்ணீர் விட்டுப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு குஞ்சிதத்துக்கு. பின் கொல்லைத் தாழ்வரையில் அவள் பொங்கித் தின்று முடங்குவதாகப் பெயர். ஆனால் அருணாசலத்தின் காபிக் கிளப் நாஸ்தாவும், குருக்கள் வீட்டிலோ, பிள்ளைவாள் வீட்டிலோ வேறெங்கோ சோறு கிடைத்துவிடும். இரவுக்கு எங்கிருக்கிறாள், யாருக்கு உடல் தசை தீர்க்கிறாள் என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது. பெரிய பண்ணை ஐயர் குஞ்சிதபாதம் இறந்து அவர் குமாரர்கள் வாரிசாக வந்த பிறகு அவர்கள் யாருமே இங்கு இருக்கவில்லை. பண்ணையும் உச்சவரம்பு வந்ததும், பலர் பங்கில் பிரிந்து போயிற்று. விருத்தாசலம்பிள்ளையின் மேற்பார்வையில் தான் இப்போது எல்லாம் இருக்கின்றன. பெரியம்மா இங்கு சிறிது நாட்களுக்குத் தனியாக இருந்தாள். பின்னர் உடல் நலம் கெட்டுப் பெரிய மகனுடன் டில்லிக்குச் சென்று அங்கேயே இறந்து போனாள். அந்தப் பெரிய மகனும் சென்ற இரண்டாம் ஆண்டு மாரடைப்பில் இறந்துபோனார். அவர் மக்களுக்கெல்லாம் இந்த கிராமத்தையே தெரியாது. இரண்டு மைந்தர்களும், மகளும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஊன்றிவிட, அந்தம்மாவும் அங்கேயே போய்விட்டதாகத் தெரிகிறது. இங்கு அப்போதைக்கப்போது மகளின் வழிவந்த மருமகப் பிள்ளை வாசுதேவன் தான் வந்து தொடர்புகொண்டு ஆண்டில் ஒருமுறை பணம் பெற்றுச் செல்பவர். வாசுதேவன் செங்கற்பட்டுப் பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறார். மிகவும் பயந்த சுபாவம். அவருக்கே நிலபுலன்கள் இருக்கின்றன. இந்த வீடு வாசல் எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்துவிட்டு, டவுனில் இரண்டு ஃப்ளாட் வாங்கிப் போட்டாலும் பயனுண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வீடாவது வீடு மூன்று கட்டு, கூடம், தாழ்வரை, பெரிய முற்றம் முழுவதும் கம்பிவலை அடித்திருக்கிறது. தென்னந்தோப்பிலிருந்து காய்கள் கொண்டு வந்து எண்ணெய் ஆடக் காயப் போடுவதற்காக, அண்மையில்தான் விருத்தாசலம் பிள்ளை வலைபோட்டார். அறைகளுக்குள் தேக்குமர பீரோக்கள், பெட்டிகள் நிறையப் பாத்திரங்கள். பெரும்படிப் பாத்திரங்களைச் சென்ற ஆண்டில்தான் வாசுதேவன் வந்து விற்றுப் பணமாக்கினார். எல்லாம் பிள்ளை மூலமாகத்தான். வாசுதேவன் வந்துவிட்டால் அவருக்கு ராஜ உபசாரம் நடக்கும். விருத்தாசலம் தரையில் உட்காரக்கூட மாட்டான். பின்னால் கைகட்டிக்கொண்டு நடப்பான். “இவ்வளவு பெரிய வூடு எதுக்குங்க சும்மா கெடக்கிறது? நாந்தா இப்படி அங்காடிக்குக் குடுக்கணும்னு பேசி, தோது பண்ணினேன். ஏதோ நூறு ரூபா வாடகைன்னு வரும். கெடந்துட்டுப் போவுது!” என்று கையெழுத்துக்கு நீட்டியபோது வாசுதேவன் உளம் குளிர்ந்து போனார். ஒரு பகுதி நிலம், சிறுகச்சிறுக, அவனுக்கே என்று இந்தப் பத்து வருஷங்களில் தீர்ந்துவிட்டது. அந்த வீட்டின் நடுவறையில் ஒரு நிலவறையும் அதில் சில பாத்திரங்களுடன் ஒரு இரும்புப் பெட்டியும் இருப்பது வாசுதேவனுக்கும் தெரியும். “மாரியம்மன் கோயில் சொத்து. இதில நகையெல்லாம் எதோ இருக்கும்பா. எல்லாம் பெரிய மாமிக்குத் தெரியும். சாவியக்கூடத் தேடி எடுக்கணும். இதிலெல்லாம் எனக்கென்ன தலையிலெழுத்து? கிராம விவகாரத்தில் நான் தலையிடணும்னு” என்று வாசுதேவன் பொதுப்படையாகச் சொல்லியிருந்தார். நிலவறையைத் திறந்து இருக்கிறார்கள். பெரிய அண்டா, கொப்பரை, கோயில் வழிபாட்டுச் சாமான்களைக் குருக்களும், அவர் மைத்துனன் நடராசனும், ரங்கன் பையனும் பிள்ளையும் பாத்திரங்களை எடுப்பதை மேற்பார்வை செய்வதுபோல் கூடியிருக்கிறார்கள். “ஏ குஞ்சிதம்? இங்க வாடி! இதெல்லாம் புளிபோட்டு சுத்தமா விளக்கி வை!” தென்னைக்கு நீரூற்ற வந்த குஞ்சிதத்தைக் கூப்பிட்டுப் பாத்திரங்களை எடுத்துச் செல்லப் பணிக்கிறார்கள். வீரபுத்திரன் குஞ்சிதத்துக்கு உதவியாக ஏற்றி இறக்கி, ஆற்றுக்கரையில் தேய்க்கக் கொண்டு வருகையில் கிட்டம்மா அங்கு வருகிறாள். “த, பொழுதோட வூட்டுக்குப் போயிடு! புள்ளங்க தனியாயிருக்கும்...!” என்றவள் குஞ்சிதத்தைக் கண்டதும் ஒரு வசையை உதிர்த்துக் காறி உமிழ்கிறாள். வீரபுத்திரன் மறுமொழி கூறவில்லை. “என்ன? நாம்பாட்டுக்குச் சொல்லிட்டிருக்கிற, நீ பேசாமலிருக்கிற?” “எல்லாம் வார. நீதாம் போறிய, அப்புறம் இதென்ன?” “நாம் போயிட்டு நாளக்களிச்சி மக்கியநா சாங்காலமாவும் வாரதுக்கு. ஒழுங்கா பொழுதோட வந்து புள்ளங்கள பாத்திட்டுருங்க. அந்தப் பய, பள்ளிக்கொடத்துக்குப் போவாம டிமிக்கி குடுத்திட்டுத் திரிவா. செவகாமிட்ட சொல்லியிருக்கிற வூட்டப் பாத்துக்குங்க!. என்னா?” “சரி, சரி. நீ போ...!” “எல, எங்கடா போறா உம் பொம்பிள?” விருத்தாசலம் கேட்டுக்கொண்டே வருகிறார். ‘புதிய பெண் பிள்ளை வந்திருக்கிறாள் என்றால் கழுகுக்கு மூக்கில் வேக்கிற மாதிரி வந்திடறாம் பாரு’ என்று நினைத்துக் கொள்கிறான் வீரபுத்திரன். “மட்றாசிக்கு...” “அடி செருப்பால. என்னடா மட்றாசில?” “பேரணிங்க...!” “என்னடா பேரணி, ஊரணி, மயிரு? நீங்கதா ஏழு ஒம்பது வாங்குறிங்களே!” “கூலி ஒண்ணுதாங்களா? என்னா வெல விக்கிது சாமான் சட்டெல்லாம்? மனிசன் செத்தா பொதக்கிறதுக்கு எடமில்ல, பொணத்தைக் கொண்டிட்டுப் போக வழியில்ல, குடியிருக்க எடமில்ல, குடிக்கத் தண்ணியிருக்காது கோட வந்திட்டா!” “என்னாடா அடுக்கிட்டேப் போற? குடியிருக்க எடமில்லாததா இவ்வளவு பேச்சுப் பேச வாயி வந்திச்சான்னு கேக்குற? இன்னிக்கு உரவில பூச்சி மருந்து வில விக்கிறது தெரியிதா? முன்னப்போலவா நீங்க வேல செய்யிறீங்க!” “வெலவாசிக் கோரிக்கயுந்தா வைப்பாங்க. உழைச்சிப் பாடுபடுகிறவனுக்கு நெல்லு விக்கிற விலயச் சொல்ல உரிமையில்ல. எவனோ நிர்ணயஞ் செஞ்சு போடுறான். கட்டுப்படியாவுலன்னா எங்க மேல நீங்க பாயுவீங்க. ஒரம், பூச்சி மருந்து அது இதெல்லாம் பண்ணுற தொழிற்சாலைச் செலவெல்லாம் அந்த மொதலாளிக, அதுந் தலயில வச்சு வெவசாயி தலையில கட்டுறாங்க. கூலி அதிகம் சம்பளம் அதிகம்னு சாமான் வெலய ஏத்துறாங்க. நீங்க என்னமோ அஞ்சு ரூபாய ஏழு ரூபாயாக்கிட்டோம், ஏழ ஒன்பதாக்கிட்டோம்னு பெரிசாச் சொல்லிக்கிறீங்க. ஒரு நாயித்துக்கிழமை உண்டா? சம்பளத்தோட லீவு உண்டா? சீக்காப் படுத்தா ஏன்னு கேக்க நாதி உண்டா? என்ன பத்திரம் பாதுகாப்பு? இன்னும் கடன் வாங்கிட்டு வட்டி குடுக்க முடியாம சாவுறோம்...” “அடி செருப்பால. இந்தப் பய என்ன பேச்சுப் பேசுறாம் பாரு? ஏண்டால, அன்னிக்குப் பண்ண கீழன்னு இருந்தப்ப, மிராசுதார் எல்லாந்தாங் குடுத்தாரு. கலியாணம் கருமாந்தரம், அது இதுன்னா மிராசுதார் குடுத்தாரு. அப்பவும் அடிமைன்னு சொல்லி எகிறினிங்க. சட்டம் கொண்டு வந்துட்டாங்க. இன்னிக்கு வேறயாச் சுதந்தரமா இருக்கிறீங்க. இப்பவும் அழுவயா?” “என்னா சொதந்தரங்க இப்பவும் இருக்குது, சோத்துக்கு இல்லாத சொதந்தரம்?” “அடிரா செருப்பால. சொதந்தரம் வந்து உங்களுக்கு என்னடா ஒண்ணும் வரல? வாய்க் கொளுப்பு வந்திருக்கே? போறது, எங்கனாலும் போயி சம்பாதிக்கிறது! அண்டின எடத்தயே துரத்திட்டுத் திரியறது. பெரிய படிப்பு!... சரி சரி, அண்ட கட்டப் போனவ நீ இங்கெங்க வந்த?” “மம்முட்டி கம்பொடிஞ்சி போச்சி, வந்த இத போறேன்.” “இன்னிக்கு எல்லாப் பங்கும் சப்ஜாடா முடிச்சுரணும். நாத்துப் பறிக்க ஆரு போனது?” “சித்தையன் போயிருக்கிறான்...” “உம் பொம்பிள சொன்னான்னு முடிக்காம போயிடாத, கள்ளுக்குக் காசு தார, இருந்து முடிக்கணும்...” விருத்தாசலம் மீசையைத் திருகிக் கொள்கிறார். ஒரு கீழ்ப்பார்வை குஞ்சிதத்தின் மீது பதிந்து மீளுகிறது. புதுக்குடிச் சங்க அலுவலகத்தில் கூட்டம் தேனிக் கூட்டைப்போல் பொங்கி வழிகிறது. உள்ளே தோரணமாகத் தொங்கும் பிரசுரங்களில் மூவண்ணங்களில் டிராக்டரை ஓட்டும் குண்டுப் பெண்ணும், முகம் மட்டும் தெரியும் கூடுபோன்ற விண்வெளி உடையணிந்த வீரனும் கண்கள் இடுங்கப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சுவரில் குறுந்தாடி லெனினும், பரந்த அடர்தாடி கார்ல்மார்க்ஸும் புடைப்புச் சித்திர முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட கோட்டில் செருகப் பெற்ற ரோஜாவுடன் முழு வடிவாக நேரு புன்னகை புரிகிறார். சுத்தியல் நட்சத்திரங்களுடனும், சந்தனப்பேலா வடிவில் பொங்கும் நெற்கதிர் செண்டுடனும் கதிர் அரிவாள் தொடர்புகொண்டு சுவர் முழுதும் கோலச் சின்னங் காட்டுகிறது. நரை திரைகள், பொங்கும் இளமைகள், ஒயர் பைகளில் வெள்ளைத்துணி மற்றும் டிபன் தூக்குகள், சம்புடங்கள் என்று குழுமியிருக்கும் கிராமத்தாரில் பலரும் இரவே நடந்து வந்திருப்பதால் ஆங்காங்கே படுத்து அயர்ந்திருக்கின்றனர். சிலர் கூடி நின்று வாயிலில் பீடி குடித்துக் கொண்டிருக்கின்றனர். எதிரே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில், எண்ணெய் வழியும் கறுத்த சருமம் பளபளக்க, புதிய மினுமினுப்புச் சட்டையும் வேட்டியும் சிவப்புத் துண்டும் கோலத்துக்குப் புதுமையாகவே நிற்க, சில இளைஞர்கள் வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். செவத்தையன் படியில் காலை ஊன்றிக் கொண்டு புட்டம் தரை தோயாமல் குந்தி இருந்து பீடி குடிக்கிறான். “மாமா, பணம் கட்டிட்டீங்களா?” பொன்னடியான் மரியாதையாகவே பலரையும் விசாரித்துக் கொண்டு வருகிறான். “என்னாயுசில ஒருதரம் மட்றாசி போய்ப் பாக்கணும். அதா வார...” பற்கள் விழுந்து கண் குழிந்து சுருங்கிப்போன கைத்தடிக் கிழவர் ஒருவரின் ஆசை. “நாகப் பட்ணத்தக் காட்டிலும் பெரிசில்ல...?” “நாலு நாளக் கூலி போயிடும், நட்டந்தா. ஆனா இது போல சந்தர்ப்பம் வருமா?...” ஒருவரின் நியாயம். “நாப்பது ரூபா இப்ப பஸ் சார்ச்சிக்குக் குடுக்கிறமில்ல? அதையும் சேத்துக் கணக்குப் பாத்தா. கூடத் தானாவுது. ஆனா, அதுக்கெல்லாம் பாத்தா ஆவுமா?” “ஏது நாலு நா? இத இன்னிக்குப் புறப்படுறம். நாளக்கி அமாசி. அமாசியன்னிக்கு வேல இல்ல. முடிச்சுட்டு ராத்திரி கிளம்பி மக்யா நா திரும்பிடப் போறம்.” “அட இதுக்குனு மட்றாசி போறம். சமுத்திரம், பீச், பெரிய மாடிக்கட்டிடம், லைட்டவுசு, இன்னும் என்னென்னவோ இருக்காமில்ல... எல்லாம் ஒரு நடை பார்க்கணுமில்ல?” “அதெல்லாம் பாத்திட்டே தான பேரணில நடந்து போறம்?...” “நா எழுபத்தாறுல ஒரு பேரணில கலந்திட்டேன். குளிக்க கொள்ள முடியாம வெயில் வேற, கட்டமாப் போச்சி...” “ஆமா உனக்கு மூணு நேரமும் குட்டயில எருமயப்போல கெடக்கணும்!” “ஏப்பா..? இன்னா விசயம். நம்ம தலவர் மவ ஆறுமுகம் மவன. சொல்லிக்கிறாங்க...? ஆக்சன் ஏதும் எடுத்தாங்களா?...” “ஓடிட்ட பெறகு என்னாத்த ஆக்சன் எடுக்கறது?” “அப்ப மைத்த பேருக்கும்.அதே ரூலுதான? பொட்ட புள்ளகளுக்கு ரொம்ப நீளச்சி குடுக்கக் கூடாது. கண்டிசன்னா...” “ஆமா! பொட்ட புள்ளைங்க இல்லாம நீங்க கிளிச்சிருவீங்க!” கட்டைக் குரல் அங்கே ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு பாய்கிறது. “ஆரு? மாதர் சங்கத்து அம்மாளா? ஏம்மா? பேரணிக்கு உங்கூட்டுக்காரன் வரல?” “அவரும் வந்தா எப்பிடி? நாந்தான் வாரே...” “இந்தம்மாதா அஞ்சாம்பிளக்கி சமமாச்சே!...” “ஆமாய்யா. நானும் பாத்திட்டே வாரேன். இத்தினி பேரு வெள்ளயும் சள்ளயுமா உக்காந்திருக்கிறீங்க. உணிமையா, மாதரை மதிக்கிறவங்களா இருந்தா, நீங்க ஒரு பத்துப் பொண்டுவளன்னாலும் கொண்டாரனுமில்ல? நாம் போயி மல்லுக்கு நின்னு அத, பிரேமாப் பொண்ணையும் சங்கிலியம்மாவையும் கூட்டிட்டு வந்தேன், எல்லாம் பேசுவீங்க!” “அம்மா, உங்கிட்ட வாய்க் குடுக்க முடியுமா?...” “இத தலவர் வாராரு. அட என்னங்க, நீங்ககூட அக்காளக் கூட்டிட்டு வரல!...” சம்முகம் சிரிக்கிறார். முழுச்சிவப்புத் தேங்காய்ப் பூத்துவாலை சட்டைக்குமேல் விளங்க, கையில் வயர் பையில் துண்டு, வேட்டி, இட்லிப் பொட்டலம் சகிதம் பேசாமலே தங்கசாமி பண வசூல் செய்யும் மூலைக்குச் செல்கிறார். “பாத்தீங்கல்ல? பேசாமலே போறாரு?... பொண்டுவளுக்குத் தயிரியம் வாரணும்னு மேடையில பேசுவாங்க அல்லாரும்! ஆனா வூட்டுக்குள்ள போனா, கதையே வேற. இத களப்பாள் காரரு வாராரு இந்தத் தோழரும் கம்முனு தா வாராரு. அம்பது அறுபது பேரு வார பக்கத்திலே மூணே பொண்டுவ! நோட்டீசு குடுத்து படிச்சிப் படிச்சி சொல்லிட்டு வந்தே...” “அட ஏம்மா லவலவன்னு கத்திட்டே இருக்கிற? பொண்டுவ அல்லாரும் உன்னப்போல இருப்பாங்களா? வூடு வாச, புள்ள குட்டின்னு இருக்கில்ல?” குப்பன் சாம்பார் தொளதொளத்த சட்டையும் சிவப்புக் கரை வேட்டியுமாக நெருங்கி நின்று கிட்டம்மாளுக்குப் பதில் கூறுகிறான். “ஆமா, நாம் பேசுனா லவலவன்னு கத்தறது! நீங்க வார பணத்தக் கள்ளுக்கடயில குடுத்திட்டு...” “ஏங்க? வண்டி என்னமோ பத்து மணிக்கே வந்திடும்னாங்க நான் வேகமா ஓடியாரேன்...” பேச்சை மாற்றுகிறான் ஒருவன் சாதுரியமாக. “நாங்க குப்புமங்கலத்திலேந்து நடந்தே வாரம். நீங்க எந்துரு?...” “நாங்க கண்ணங்கோயில். ராவே இங்க வந்திட்டம். காலம ஏழு மணிக்கெல்லாம் வண்டிக்கு ரெடியா இருக்கணும்னு இத... இந்தத் தோழர்தா கண்டிசனாச் சொன்னாரு. சார்ச்சுக் குடுத்திட்டுப் போறதுன்னா பதினேளு ரூபா டிக்கெட்டே ஆயிப்போவுதாம். இப்ப நமுக்கு ஒருவேள சாப்பாடு, நாஷ்தா இதுல அடக்கம்.” வடிவு அலுவலகத்துக்கு வெளியே நின்று ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதிய சட்டையும் கிராப் வாரலும் முகச்சவரமுமாகப் பளிச்சென்று சிவப்புத் துண்டு தெரிய பல இளைஞர்கள் பேரணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்துக்கொண்டு அவனால் போக இயலாது. “நீங்கதா முன்னியும் போயிருக்கீங்க. நாந்தா பட்ணம் பாத்ததில்ல. நாம் போறன் பேரணிக்கு!...” என்று கூறிப் பார்த்தான். “கெடடா, கம்மா, அவுங்க குப்பன் சாம்பாருன்னு ஆபீசில பொறுக்கி எடுத்திட்டாங்க. நா இன்னும் எத்தினி நா இருக்கப்போறேன்? செறுபய, உனக்கு எத்தினியோ சந்தர்ப்பம் வரும், போவலாம். அவங்க இது செரியில்லன்னா டில்லில தலநகரில போய் பேரணி நடத்துறதா இருக்காங்க. அப்ப உன்னையே அனுப்பச் சொல்றண்டா?” என்று அடித்து விட்டான் அப்பன். முதலாளியிடம் குழைந்து கேட்டுப் பார்த்தான். “ஒரு வூட்டிலேந்து ரெண்டு பேரும் வர்றதுக்கில்லடா. மேலும் எல்லாரும் போயிட்டா பங்கில மடைபாத்து வுடுறது ஆரு?...” சம்முகம் அவன் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும் ஆசை அவனைத் துரத்தி வந்திருக்கிறது. சினிமாவில் மட்டுமே கண்டிருக்கும் சென்னைப் பட்டினம், மாடி பஸ், பகலைப் போல் இரவிலும் ஒளிரும் சாலைகள், இருபது மாடிக் கட்டிடங்கள், மின்சார ரயில் வண்டி, குளுகுளுவென்று வெய்யிலிலும் குளுமையாக இருக்கும் சினிமாக் கட்டிடங்கள், சிலைகள் எல்லா விந்தைகளையும் பார்க்கும் ஆசை அவனுக்கு அடங்கவில்லை. வண்டி வரும் சமயத்தில் நின்று எப்படியேனும் புகுந்துவிட்டால் முதலாளி இறக்கிவிட மாட்டார் என்று குழந்தைபோல் நம்பிக்கொண்டு நிற்கிறான். சம்முகம் வெளியே வருபவர், இவன் அசட்டுச் சிரிப்புடன் நிற்பதைப் பார்த்து விடுகிறார். திடுக்கிட்டாற்போல் விழிக்கிறார். “ஏண்டா, நீ எப்ப வந்த?...” “கொஞ்ச மின்னாடி.” “நாங்க வந்த பஸ்ஸிலயா வந்த?... நீ எதுக்குடா வந்த, இப்ப?...” “நானும் வார முதலாளி, நானும் பேரணில கலந்து கோசம் குடுக்கறேன் முதலாளி...!” தலையைச் சொறிகிறான். “அட...ப்பாவி? நீ வரப்போறேன்னே தெரியாது? அதெல்லாம் இப்ப நீயும் வரதுக்கில்ல. ஏண்டாலே, சின்னக் குளந்தபோல ஓடி வந்திருக்கிற? உங்கையாக்குத் தெரியுமா?...” அவன் தெரியாது என்று தலையாட்டுகிறான். “ஒரு தரம் இப்ப கூட்டிட்டுப் போங்க முதலாளி...” “இப்ப வந்து என்னடால வம்பு குடுக்கற? உன்னையாவது கூட்டிட்டுப் போறதாவது? பேசாம வந்த வழிய திரும்பிப்போ. நாம யாருமில்லன்னா, வயல்ல மாட்டவுட்டு அடிச்சாலும் கேள்வி முறயில்ல. கோவம் வரும்படி நடக்கிற!” “இல்ல முதலாளி, இந்த ஒரு தடவை...” சம்முகத்துக்குக் கோபம் வருகிறது. “முதலாளி முதலாளின்னு கழுத்தறுக்கிறடா நீ! இனிமே முதலாளின்னு கூப்பிடக்கூடாது!” “பின்ன எப்பிடிங்க கூப்பிடுறது?” இவனைச் சற்று எட்டத் தனியாக அழைத்துச் செல்கிறார். “ஏண்டால இப்படி மானத்த வாங்குற? போயி ஊருல வேலயப் பாரு. அடுத்த தடவை எதுன்னாலும் உன்னையே அனுப்பச் சொல்றேன்.” “இல்ல முதலாளி...” சிரிப்பு வந்து விடுகிறது. “முதலாளின்னு கூப்பிடலன்னா எப்பிடிங்க கூப்பிடுறது?” ‘தோழரே’ என்று சொல்லிக் கொடுக்க சம்முகத்துக்கும் நா எழவில்லை. “அண்ணேன்னு கூப்பிடுறது!” வடிவுக்குச் சிரிப்பு கொள்ளாமல் வழிகிறது. “அண்ணேன்னு எப்பிடிங்க கூப்பிடுறது? அண்ணேன்னு அளச்சா, அண்ணன் மவள ஆருன்னாலும் கட்டுவாங்களா? மாமான்னு கூப்பிடுறேன் முதலாளி?” சம்முகத்துக்கு சிரிப்புத்தான் வருகிறது. அவனுடைய கபடமற்ற குழந்தை உள்ளம் கோபிக்கும்படியாக இல்லை. “அப்ப, இப்ப நான் சொல்றதைக் கேளு! வர பஸ்ஸைப் புடிச்சி ஊருக்குப் போய் வேலையப்பாரு! பொண்ணக் கட்டணும்னா, பொறுப்போட வேலையப் பாக்கணும், நடக்கணும்; உன்ன நம்பித்தா நா எல்லாம் விட்டுப் போறேன்!” “எனக்குப் பட்டணம் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு மாமா!” “பாக்கலாம்டா. கலியாணம் ஆனதும் அனிமூன் அனுப்பி வைக்கிறேன். இப்ப நீ ஊருக்குப் போ!” திரும்பி அவன் பஸ்ஸில் ஏறிச் செல்லும் வரை பார்த்த பின்னரே சம்முகம் அலுவலகத்துள் செல்கிறார். வடிவுக்கு ஒரு ஆறுதல், அவன் மாமா என்று அழைத்து மனதில் உள்ளதை வெளியிட்டு விட்டான். அவர் கோபிக்க வில்லை. கலியாணம் கட்டி, அவனைப் பட்டணத்துக்கு அனுப்பி வைப்பார்! அங்கு மச்சான், படித்து வேலை செய்யும் மச்சான், பாப்பாரப் பெண்ணைக் கட்டி இருக்கும் மச்சான் வீட்டில் தங்குவார்கள். அவனும் நாகரிகமாக நடப்பான். அம்சுவுடன் பட்டணத்தில் கைகோத்து உலவுவான்! மாடி பஸ்ஸில், எலக்ட்ரிக் வண்டியில் போவார்கள். குளுகுளுவென்று சினிமாக் கொட்டகையில் உட்கார்ந்து சினிமா பார்ப்பார்கள். என்ன பேரணி! ஒரு இடமும் பார்க்க முடியாது. போய்விட்டு உடனே வண்டியேறித் திரும்பி விட வேண்டும். போகாததும் நல்லது... மாமா... அம்சுவிடம் ஓடிப்போய் இதைச் சொல்லப் பரபரக்கிறது மனம். பஸ்ஸின் வேகம் போதவில்லை. |