உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 13 இரண்டு நாட்களுடன் சம்முகத்தின் நோய் குணமாகி விடவில்லை. ஊசி போட்டு, ஒத்தடம் கொடுத்து, பழுத்து அதைக் கீறி வினையை வெளியாக்க ஒரு வாரம் ஆகிறது. டாக்டரம்மா நல்ல கைராசிக்காரி. காலையில் தினமும் பொன்னடியான் வந்து அவரை டாக்டர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். சங்கத்து அலுவலகத்தில் ஒரு புறம் பாயை விரித்துப் படுத்தவாறு பல புத்தகங்களைப் படித்துக் கொண்டும் மன உளைச்சல் நினைவு வராமல் வருபவர் போகிறவர்களிடம், பழைய நண்பர்களிடம் பேசிக் கொண்டும் ஆறுதலாகக் கழிகிறது. சோசலிசப் பாதையில், பாரதி பாடல்கள், மாதர் முன்னேற்றம், புதிய சிந்தனைகள், என்ற தலைப்புகளில் சிறு புத்தகங்களை ஆழ்ந்து படிக்க முடிகிறது. அலுவலகத்துக்குப் பின்னால் ஆறு ஓடுகிறது. கற்களைக் கூட்டி வைத்து, தகர டின்னில் சுடுநீர் போட்டுக் கொடுத்து, டீக்கடையில் இருந்து நாஸ்தா வாங்கிக் கொடுத்துப் பொன்னடியான் மிக அருமையாகப் பணிவிடை செய்கிறான். காலில் பிளவையைக் கீறிவிட்ட அன்று, ஆசுபத்திரி பெஞ்சியிலேயே மாலை வரை படுத்திருக்கிறார். பிறகு ஒரு குதிரை வண்டி வைத்துக்கொண்டு திரும்பி வருகின்றனர். அடுத்து இரண்டு நாட்களில் ஊர் திரும்பும் நம்பிக்கை வந்துவிட்டது. கையிலிருந்த நூறு ரூபாயில் வண்டிச் செலவு, நாஸ்தா, காபிச் செலவே ஐம்பது ரூபாயாகி விட்டன. ஊசி மருந்து பன்னிரண்டு ரூபாய். மற்ற சில்லரைச் செலவு பத்து ரூபாய். மீதிப் பணத்தை எண்ணிப் பார்க்கையில் இருபது ரூபாய் தேறவில்லை. டாக்டருக்குக் கொடுக்கவேண்டுமே? “நீங்க அதப்பத்திக் கவலப்படாதீங்க காம்ரேட். நீங்க நல்லபடியாகி ஊருக்குத் திரும்பணும்...” என்று அன்பு பாராட்டும் இளைஞனிடம் மனம் ஒன்றிக் கொள்கிறது. அவனிடம் சாடையாகத் தன் மகளைக் கட்டுவது பற்றிக் கூடத் தெரிவித்திருக்கிறார். “ஒரு நட வீட்டுக்குப் போயி கவலப்பட வாணாம்னு சொல்லிட்டு வரட்டுமா காம்ரேட்?” என்றான். “வாணாம். அவுங்களுக்குத் தெரியும். எதுக்கு வீண் செலவு, நடை?” அவர் மறுத்ததன் காரணம், அந்த எண்ணம், உள்வினையாக மனசுக்குள் புரையோடிக் கொண்டிருக்கிறது. காந்தி திரும்பி வந்திருக்கக் கூடும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார். ஏனெனில், அவர் கெடு வைத்த இரண்டு நாட்கள் தாண்டிவிட்டதால், லட்சுமி பஸ் ஏறி அலுவலகத்துக்கு வந்திருப்பாள். வரவில்லையாதலால், மகள் வந்திருப்பாள் என்று திடம் கொள்கிறார். மறுநாள் இறுதியாக பிளாஸ்திரி போட்டுக் கொண்டு ஊர் திரும்பவேண்டும் என்ற நினைவில், முன்னிரவு பொன்னடியான், தங்கசாமி ஆகியோரிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். விவசாய சங்கத்தின் கிளை அலுவலகம் கிளியந்துறைக் கடைவீதியில் வெறுமே பெயருக்குத்தான் இருக்கிறது. அதை வேறு பக்கம் போட்டு, ஆட்கள் வந்து வசதியாகச் செய்தி படிக்கவும், தங்கள் பிரச்னைகளைப் பேசி முடிவெடுக்கவும், ஓர் ஒழுங்கு செய்யவேண்டும். மேலும் வாரம் ஓரிரு முறை வந்து பொன்னடியான் வகுப்பு நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். காலையில் அவர் எழுந்து பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு, வெளியே டீக்கடையில் வந்து தேநீர் அருந்துகையில், பழைய நண்பர் ஒருவர் வருகிறார். “யாரு? கிளியந்துற சம்முகமா? ஏம்ப்பா, ஒனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொன்னாரு தங்கசாமி?” “ஒண்ணில்ல அண்ணாச்சி. கால்ல ஒரு பொளவ புறப்பட்டு இருந்திச்சி...” பண்ணக்குடி அண்ணாச்சி என்பார்கள். அந்தக் காலத்தில் இவர் அடியாள்களுக்குக் கிலியூட்டுபவர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை அநுபவித்து விட்டு வந்தவர். அவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு அருகில் வந்து பார்க்கிறார். நெடுநெடுவென்ற அந்த உயரம் தான் வளையாமல் இருக்கிறது; முடி பொல்லென்று நரைக்க, வற்றிச் சுருங்கி முகமே அடையாளம் தெரியவில்லையே? “ஆமா. ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமின்னு. உம்மக, படிச்சிட்டிருக்கா, கலியாணம் கட்டிட்டியா?” சம்முகத்தினால் மனவெழுச்சியை அடக்கிக் கொள்ள முடியவில்லை. “என்னடா? என்ன விசயம்?” “ஒண்ணுமில்லிங்க அண்ணாச்சி உள்ள வாருங்க...” “... நா ஏங்கேட்டன்னா, ஒரு ஏழெட்டு நா மின்ன, உம் பொண்ண கொடிமங்கலம் ஐயர் கிளப்பில பாத்தேன். உம் பொண்ண எனக்குத் தெரியுமே? இங்கதான படிச்சிட்டிருந்திச்சி? அன்னக்கி எதோ சர்ட்டிபிகேட் வாங்கணுமின்னு கூட்டிட்டு வந்திருந்தியே?...” இதயம் துள்ளி வாய் வழியாக வந்து விடும் போல் துடிக்கிறது. “ஆறுமுகத்துப் பய, அதா கோனான் மகளக் கட்டிக்கிட்டானே, அவளுக்குப் பெறந்த பய, குருசாவா, ஸ்டாலினா? அவம் பேரு எனக்கு ஞாபகமில்ல, சாலின்னு கூப்பிடுவா. அவம் பின்னோட மோட்டார் சைக்கிள்ள வந்து எறங்கிச்சி. நா. எதுர பஸ்ஸுக்கு நின்னிட்டிருந்தேன். போயி சாப்பிட்டுப் போட்டுப் போறாங்க அட, இதென்ன ஏடா கூடமா இருக்கு சம்முவத்தும் பொண்ணு போல இருக்கேன்னு நினைச்சிட்டுக் கிளப்புப் பக்கம் போயி நின்னே. ஐயிரு எனக்குத் தெரிஞ்சவருதான்.” சம்முகத்தின் கண்கள் அடக்க முடியாமல் குளம் நிரப்புகின்றன. “அண்ணாச்சி, பொண்ணுகளுக்குச் சொதந்தரம் குடுக்கணும்னு சொல்றாங்க. நல்லது கெட்டது தெரியாம, நாலு பேரறியக் கலியாணம்னு கெளரவமா முடிக்காம, இப்படிப் பேச்சுக்கிடமாக்கிடிச்சேன்னு தாங்க முடியல...” “அப்ப... உன்னக் கேக்காமதா ஓடிப்போயிரிச்சா?” “ஒண்ணுமில்லீங்க. படிக்கணும்னு அதுக்கு ரொம்ப ஆச. தொழில் படிப்புன்னு சேத்துடணும்னுதான் போனேன். அவங்க கூசாம ரெண்டாயிரம் வேணும்னு கேட்டாங்க. நானெங்க போக? அப்ப, இந்தப் பய, வூட்டுக்கே வந்து நாஞ் சிபாரிசு பண்ணுவே, எங்கப்பாரு சொன்னாப் போதும்னு ஆச காட்டினான், நானும் இருந்தேன். சண்ட போட்டு வெரட்டி இதையும் கண்டிச்சேன். காலு உபாத வேற. இவ, ஒடயாரு வீட்டுக்குப் போறன்னு ஓடிப்போயிருக்கா. தெரிஞ்சு போகல அண்ணாச்சி! அப்பன், பொண்ணு வேட்டயாடுறவன்னு பிரசித்தம். இப்ப மகன் தொடர்ந்திட்டிருக்காம் போல. நம்ம குடிலயா கால வைக்கணும்...” வசைகள் தொடருகின்றன. “ரொம்பச் சல்லியம் பண்றானுவ இதெல்லாம் திட்ட மிட்டுச் செய்யிற வேலை சம்முவம். கட்டுக்கோப்பா இருக்கிற ஓரமைப்ப ரொட்டித் துண்டப் பிக்கிறாப்பல நினைச்சிட்டு ஊடுருவிப் பிச்சிப் போடுறாங்க. நாம் பாரு, நேத்து ஊருல இல்ல. பொண்ணுக்கு ஒரு மாப்பிள தேடுற விசயமா போயிட்டே. போன எடத்தில நினைச்சாப்பல வரமுடியாம தவக்கமாயிடிச்சி. வந்தா, நம்ம மாடு அவுங்க கொல்லையில போயி வாழய மேஞ்சிடிச்சாம். மேய்க்கிற பயலப் போட்டு அடிச்சி கைய முறிச்சிட்டானுவ. வந்ததும் வராததுமா அவனக் கூட்டிட்டு ஆசுபத்திரில போயி காட்டிட்டு இப்ப கேசு குடுக்க வந்தேன்...” சம்முகத்துக்குத் தலை சுற்றுகிறது. மனிதர் எல்லோரும் உயிர் தழைக்க அவர்கள் மண்ணில் விளைவு காணப் பாடுபடுகிறார்கள். இந்த உற்பத்தி இல்லை யென்றால் வாழ்க்கையின் அடிநிலையே பெயர்ந்து போகும். இந்த உற்பத்தியில் ஈடுபடும் மக்களை அலைக்கழித்து அவர்களை வாழ விடாமல் செய்வதற்குத்தான் எத்தனை சக்திகள்! மனித வாழ்வின் நல் ஆக்கத்துக்குத் துணை நிற்கவேண்டிய அரசியல் சக்திகள் ஆதிக்க சக்திகளாகப் போட்டிக்களத்தில் இறங்கிப் போராடுவதிலேயே மனித சக்திகள் எல்லாம் விரயமாகின்றன. இந்தப் புதுக்குடிக்கு வரும் கிராம மக்கள் பெரும்பாலும் அடிதடி, ஆசுபத்திரி, வம்பு வழக்கு, கோர்ட்டு கச்சேரிக்குத்தான் வருகிறார்கள். முன்பெல்லாம் இவ்வளவு போக்குவரத்து, இவ்வளவுக்குத் தீவிர விவசாயம், முன்னேற்றம் இல்லைதான். ஆனால் இதெல்லாமும் மனிதர் வாழ்வை உயர்த்துவதைக் காட்டிலும், உடைக்கும் பணிக்கே உதவிக் கொண்டிருக் கின்றனவே? அவர் சென்றபின் இவனுக்கு நிலை கொள்ளவில்லை. விசுவநாதனிடம் சென்று இந்தப் பெண் ஓடி விட்டதைச் சொல்லி விட வேண்டும் போல் இருக்கிறது. எதுவும் சாப்பிடவுமில்லை. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அவராகவே பஸ்ஸைப் பிடித்து ஏறி, ரத வீதிக்குச் சென்று இறங்குகிறார். விசுவநாதன் வாசலில்தான் உட்கார்ந்திருக்கிறார். கண் சரியாகத் தெரியாததால் மகள் பேப்பர் படித்துக் காட்ட வேண்டும் என்று காத்திருக்கிறார். “வணக்கம் சாமி.” “என்னடா, சம்முகம், காலங்காத்தால வந்திட்ட? ஊருக்குப் போகப் போறியா இன்னிக்கு?” “இன்னிக்குத்தாம் போகணும். உங்ககிட்ட ஒரு விசயம்...” “என்னடா, பெரிய விசயம். மருந்து - ஊசிக்குத்தான் பணம் குடுத்திட்ட, கட்டுக் கட்டினவனுக்கு அஞ்சு ரூபா குடு. உனக்கோ சர்க்கரை அது இது ஒண்ணுமில்ல. வயல்ல நடக்கிறவனுக்கு அதெல்லாம் ஏன் வருது? டாக்டருக்கெல்லாம் நீ ஒண்ணும் குடுக்கவாணாம், போ!” உளம் நெகிழ்ந்து போகிறது. “ரொம்ப நன்றிங்க. இது... இது மட்டுமில்லய்யா, அந்தக் கழுத. அதா மவ, அந்தப் பய மகங்கூட, அதா அன்னக்கி வந்திருந்தானே, அவங்கூட சினிமால வாராப்பல மோட்டார் சைக்கிள் பின்னால் குந்திட்டுச் சுத்துறாப்ல. கொடிமங்கலம் ஐயர் கிளப்பில பாத்தேன்னு பண்ணக்குடி அண்ணாச்சி இப்ப சொன்னாரய்யா. அப்படியே வெட்டிப் போடணும்போல இருக்கு. என் குடில, என் ரத்தத்தில பெறந்து எங்க எனத்துக்கே துரோகம் செஞ்சிட்டாளே? கேட்டதிலேந்து பொறுக்கலய்யா!” “அட... பாவி. இதுக்கேண்டா நீ இப்பிடி அழுவுறே? அதா மூலையில பாத்தியா...” திண்ணையின் மேற்கு மூலையில் வைக்கோல் சவுரி கூளம் தொங்க ஒரு குருவி உட்கார்ந்திருக்கிறது. “என் கண்ணுக்கு நல்லாத் தெரியல இப்ப. ஆனா, அதுங்க விர்விர்ரென்று போறதும் வரதும் குப்பையும் கூளமும் கொண்டு போறதும் நன்னாத் தெரியிறது. ஓடி ஓடிக் கூடு கட்டும். பிறகு மாத்தி மாத்திக் குஞ்சு பொரிச்சதும் சோறு குடுக்கும். சரியா இருபத்தோராம் நாளு, கூட்டவிட்டு குஞ்சு வெளியே வரும். பறந்துபோக அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுக்கும். பறந்து போயிடும். பிறகு அது வரவே வராது. போயே போயிடும். இதே காரியமா நான் வாட்ச் பண்ணிருக்கேன். அறுப்பான நிலத்த மறுபடி காயப் போட்டு, கிடயவிட்டு தண்ணி வுட்டு உழுது விதக்கிறாப்பல, இதுங்க கூட்டை சீர் பண்ணும். மறுபடி முட்ட வைக்கும். திரும்பிக் குஞ்சு பொரிச்சு ஆகாரம் குடுக்கும். ஒரு ஜோடி, பாரு மூணு தரம் முட்ட வச்சதும் ஆண் என்ன பண்ணிச்சிங்கற? புதுசா ஒரு பெட்டயக் கூட்டி வந்திடுத்து. அந்தக் கிழப் பெட்டைக் குருவி நேத்து தனியா உக்காந்து இருந்தது...” அவர் சிரிக்கிறார். “நீங்க சிரிக்கிறீங்கய்யா...” “சிரிக்காம என்ன செய்யலாம்ங்கற? இதுல ஒரு தத்துவம் இருக்கு சம்முகம். மனுசனுக்குப் பகுத்தறிவு இருக்குன்னு பேரு, அதுங்களுக்குப் பகுத்தறிவு இல்ல, ஆனா, ‘இன்ஸ்டிங்ட்’ங்கற உணர்வு - இயல்புணர்வு இருக்கு. அததுபடிக்கு அதது நடக்கிறது. எல்லா உயிர்களுக்கும் இனப் பெருக்கம் குறிக்கோள். அதுவே சாவுது, இல்லாட்டி பிற பிராணிகளுக்கு இரையாகுது. ஒரு இனப் பட்சியோடு இன்னொரு இனப்பட்சி அநாவசியமாச் சண்ட போட்டு பாத்திருக்கியா நீ? மனிசன்தான், பகுத்தறிவுங்கறத வச்சிட்டுச் சுயநலம் வளத்திட்டு, அடுத்தவன் வாழணும்ங்கிற எண்ணமில்லாம அழிஞ்சி போறான். இதை அரசியல் சமுதாய அமைப்புக்கள் இன்னும் கூறுபோட்டுக் கோளாறு பண்ணிட்டு வருது. இதை இந்த நிலையில் ஒண்ணுமே செய்யமுடியாது. அதது போக்குலதா வுடணும்...” “அதெப்படி அய்யா விட்டுட முடியும்...? அந்தப் புள்ளையை எத்தினி கனவோட வளர்த்தேன்? போயி சாணிக் குழில குதிச்சிருக்கிறாளே?...” “அதெப்படி நீ சாணிக் குழின்னு சொல்ல முடியும்? நானானால், எங்க சாவித்திரி இப்படிப் போயிருந்தால் அலட்டிக்க மாட்டேன். அவம்மாவானா கத்துவ. இப்ப நான் ஒண்ணு கேக்கிறேன். உன் பொண்ணு ஆறுமுகத்தின் பயலுடன் போகாமல், என்னுடைய பயலோ, இல்ல உன் சங்கத்தச் சார்ந்த எந்தப் பயலுவ கூடவோ போயிருந்தால் நீ இப்படிக் கோபிச்சிப்பியா?” சம்முகத்துக்கு இலேசாகச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. “அதெப்படிங்க?” “என்ன அதெப்படி? நீ ஒப்புவியா, மாட்டியா?” “ஒப்புவேன். இந்தப் பொண்ணு இப்ப நம்ம விட்டுப் போயிடிச்சே, நம்ம கொள்கை நியாயம் எதுவும் இல்லாத இடத்துக்குப் போயிட்டதேன்னுதா வருத்தம்.” “அப்ப அவ சுதந்தரத்த இது கட்டுப்படுத்தல? அதுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கு? நினைச்சிப் பாத்தா, ஒரு மதம், அரசியல் கட்சிபோல இருக்கிற சில பெரிய அமைப்புக்கள் எல்லாமும் கூட, சிலருடைய சுயநலத்தை வளர்க்கத்தான் பயன்படுறாப்பல இருக்கு. மனுசனை மேம்படுத்த, மனித தத்துவத்தை மேலாக மதிக்க ஒரு கொள்கைன்னு வகுத்தால், அதற்குன்னு சில நியதிகள், நீதிகள், ஒழுக்கங்கள் எல்லாமே அதைக் கட்டிக்காக்க வேண்டியிருக்கு. மதமெல்லாம்கூட இப்படி வாழ்க்கை முறையைச் சுயநலமில்லாமல் ஒழுக்கம் பாலி க்கணும்னு வற்புறுத்தியிருக்கு. எதுவுமே இன்னிக்கு முக்கியமான குறிக்கோள் இல்லாம போனதுனாலதான் தாறுமாறாயிருக்கு...” “படிச்ச பொண்ணுதான். ஆனால் படிக்காதவர்களுக்கு இருக்கிற அனுபவம் அவளுக்கு இருக்கல. பேச்சில மயங்கியே போயிருக்கா. அவனுவ கூட்டக் குலைக்கிறாப்பல. அதச் சாதகமாக்கிக் கூட்டிட்டுப் போயிருக்கிறானுவ...” “இன்னிக்குச் சராசரி படிக்கிற, படிச்ச இளம்பிள்ளைகள் எல்லாரும் எதோ எங்கியோ கானல் நீரைப் பாத்து ஓடுறாப்பல ஓடிட்டிருக்காங்க. வாழ்க்கையிலே அநுபவிக்கணும் பணம் வேணும், அதிகாரம் வேணும். அதற்குக் கவர்ச்சிகள். சினிமா, பத்திரிகை. நீ இதெல்லாம் பாக்க மாட்டே...! உனக்கெங்கே சந்தர்ப்பம்?” “எனக்கு மானம் போயிடிச்சய்யா, ஊர்ப்பஞ்சாயத்தக் கூட்டி நாயமா அவள விலக்கணும், சொல்லப்போனா...” “அடபோடா, முட்டாள்! வீட்டுக்கு வந்தாச் சேத்துக்காத! அவ்வளவுதான். இறகு முளச்சிப் பறந்து போயிட்டா?...” “நிச்சயமாச் சொல்றேன். அவ பறந்து போகல. அப்படி ஒண்ணுந் தெரியாம கால உட்டிருக்கா... நா... இப்ப என்ன நாயம் ஊருக்குச் சொல்லுவே? முத்துக்கருப்பன் மகளுக்கு நொத்துரி லேந்து சம்பந்தம் கொண்டுவந்தா. அந்தப் பய, வேற கட்சிக்குப் போயிட்டா. அந்த சம்பந்தம் வாணாண்டான்னு கருத்துச் சொன்னேன். இப்ப வேற சம்பந்தம் தான் கட்டியிருக்கு. செங்கச் சூளையில வண்டி ஓட்டுறான். குடிச்சிட்டு உதை உதைன்னு உதைக்கிறான். அந்தப் புள்ள அழுதிட்டு வந்திருக்கு. எனக்கு நினைச்சாலே நெஞ்சுக்கு வேதனையா இருக்கு. இப்ப, அவன் சொல்ல மாட்டான்?” “என்ன செய்யிறதுடா? ஒரு சமுதாயப் பொறுப்புன்னா எப்பவுமே கணக்குச் சரியாகிறதில்ல. தப்புக்கணக்கும் வுழுது? கீதையில, அதா, உன் கடமையச் செய்யி, எது நடந்தாலும் நீ அசையாம இருங்கறது. அதுதாண்டா யோகம்?” “என்னத்தய்யா ‘யோகம்’ பண்ணுறது! மனசு கெடந்து அல்லாடுது?” டாக்டரிடம் வந்து பிளாஸ்திரி போட்டுக்கொண்டு திரும்பி வருகையில் அலுவலகத்தில் லட்சுமியும் வடிவும் வந்திருக்கின்றனர். அவருடைய கோபம் அவர்களிடத்தில் பாய்கிறது. “என்னாத்துக்கு இப்ப வெட்டிக்கு பஸ் சார்ச்சுக் குடுத்திட்டு வந்திய?” லட்சுமி திகைக்கிறாள். “நீங்க வந்தவங்க ஒரு பேச்சு சொல்லியனுப்பணுமில்ல? என்ன ஏதுன்னே புரியல. கிளவியானா நேரத்துக்கு நேரம் புடுங்கி எடுக்குது, போயிப் பாத்துட்டு வாடின்னு...” “அது சரி, இவன என்னாத்துக்குக் கூட்டிட்டு வந்த! உனக்கு எடந் தெரியாதா? ஏண்டா? மேச்சாரி ஒழவு முடிச்சாச்சா? சம்பா நடவாகணுமே?” லட்சுமியும் அவனும் மெளனம் சாதிக்கின்றனர். “ஏண்டால, நா கேக்கிறம் கம்மா இருக்கிற?” “விருத்தாசலம் பிள்ளையும் பூசாரியும் எங்கவூட்டெல்லாம் அன்னிக்கு நான் போறதுக்குள்ளாற போலீசு வச்சிட்டுப் பிரிச்சுப் போட்டுட்டாங்க முதலாளி!” குண்டைத் தூக்கிப் போட்டாற் போலிருக்கிறது. “அடப்பாவிங்களா?...” “இவ அன்னிக்கி ராத்திரி வந்து தங்கிட்டுப் போனவந்தா, காலமதா வந்திருக்கிறான். குப்பன் சாம்பாருதா. பாவம், கீத்து வாங்கி வளச்சிவச்சிருக்கா. அந்தப் பளனிப்பய வெளயாட்டுப்பய. நீங்களே கேளுங்க இவன!” “இல்ல மொதலாளி, குடிச போட அம்பது ரூபாதான்னு வீரபுத்திரன் குடுக்கிறான். அதுல என்ன ஆகும் மொதலாளி? ஆட்ட வேற அன்னிக்கு ராவில எந்தப் பயலோ பத்திட்டுப் போயிட்டான். அவனத் தேடி லச்சுமாங்குடி போன...” “புளுகிறான். மட தண்ணிப் பாக்கல, ஒண்ணில்ல. ஆளயே காணோம்.” சம்முகத்துக்குச் சொல்லொணாக் கோபம் வருகிறது. “சரி, இந்த சண்டையெல்லாம் இப்ப வானாம். நா என்ன செத்தா பூடுவ? கையில காசில்லாம செத்திட்டிருக்கிற. காருக்கு அஞ்சு ரூபா, காபிக்கு நாலு ரூபான்னு செலவு வச்சிட்டு வாரிங்க...” “நா இங்க வக்கிலப் பார்க்க வந்தே முதலாளி. அவங்க செஞ்சது அநியாயம். அந்த. ரவுடிப் பய, தங்கச்சிகிட்ட அக்குரமமா நடந்திட்டானாம்...” “என்னாது?” “ஆமா முதலாளி, எங்கய்யா, தம்பி, ஆம்பிள ஆருமில்லன்னு அது சொல்லிச்சாம். நல்லதாப் போச்சுடின்னு உள்ளாற துரத்தி வந்து சீலயப் புடிச்சி இழுத்தானாம். பன்னிப்பய, சும்மா வுடுறதா? அவனுவ வேணுன்னு கட்சி கட்டிட்டு வம்புக்கு வரானுவ...” இது நுட்பமாக வந்து மருமத்தைத் தாக்குகிறது. உண்மைதான். சாமி கும்பிடுவதும்கூடக் கட்சிகளின் ஆதிக்கத்தைக் காட்டுவதுதான். பலவீனமான இடத்தில் கண்ணியை மாட்டினால் சுருக்கு இறுக்கிவிடும். ஆனால் தொட்டதற்கெல்லாம் வக்கீல் கோர்ட்டு என்று இவன் போனால் அவன் சாமானியமாக விட்டுவிடுவானா? வெட்டு, குத்து, எரிப்பு என்று கடுமையாக தாக்குதல் என்றால் எதிர்த்தாக்குதல் உடனே தொடுக்க, பக்கபலம் சேரும். இது சிறு சிறு பொசுங்கல்கள். சீலையை இழுத்தானா, கற்பழித்தானா என்பதற்குச் சாட்சியங்களைக் கொண்டா என்பான். அந்தப் பெண் முன்பேயே கற்பை இழந்தவளா என்று குறுக்குக் கேள்வி போடுவார்கள். இதுபோல் வம்பு வழக்காடி களைத்துப் போய்விட்டார். ஒருகால் அந்தப் பயல்கூட அவள் ஒடியிருப்பாள் என்ற ஊகம் இருந்தபோது முன்நாளெல்லாம் தன் மகள் சம்மதமின்றி அவளைக் கடத்திப் போனான் என்று வழக்காடலாம் என்று நினைத்தார். அதற்கும் காந்தியின் ஒத்துழைப்பு வேண்டும். அவளை மீண்டும் சந்தித்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று தள்ளினார். இப்போதோ இது குளவிக் கொட்டல்கள். எல்லோரும் எதிர்த்து நிமிர்ந்து கூலிச் சலுகை, அடிமை நிலை விட்ட வேலைச் சுதந்திரம், வேலை நேரம் என்று ஒவ்வொன்றாகப் பெற்று வந்திருக்கிறார்கள். இதற்குமேல் முன்னேற்றம் பெற்றால் அது ஆதிக்கம் செலுத்திப் பழக்கப்பட்டவர்களின் கோட்டைக்கே ஆபத்தென்று பல இடைஞ்சல்களைக் கொண்டு வருகிறார்கள். “ஆத்திரப்பட்டுப் பிரோசனமில்ல. நாம காலச் சேத்தில வுட்டுப் பழக்கமானவங்கதா. இருந்தாலும் நீ இப்ப சொல்லுறது, இதுக்குன்னு கேசு குடுக்கப்போறது, ஆத்துப் பொத மணல் மாதிரி உள்ளாற இழுத்திட்டுப் போயிடும். முதல்ல அது கோயில் நிலம். நாம குடிச போட்டு ஆக்கிரமிச்சிட்டோம்னு தா பாயுவாங்க. அவங்க நோட்டீசு குடுத்ததும் மெய்; ஆனா பிச்சுப் போட்டிருக்க வானாம். சமரசமாப் போயிருக்கலாம். நாம பொறுப்போம்; சமயம் வரும், செயலில் காட்டலாம். நம்ம பக்கம் நிறைய நியாயம் இருக்கு.” “நீங்க ரொம்பப் பயப்படுறீங்க முதலாளி: இன்னிக்கு எந்த மயிரானும் அரிசனங்க குடிசயப் பிரிக்கச் சட்டமில்ல?” “என்னடா, நீ துள்ளுனாப் போதுமா? நான் சொல்லிட்டே இருக்கேன்ல? சட்டம் என்னெல்லாமோதா இருக்கு. அவனுவ சட்டம் தெரியாதவனுவளா?. நான் வந்து எல்லாம் பாக்குறேன். இப்ப எல்லாம் விவரமா விசாரிச்சி தவராறு அத்து மீறல் எல்லாம் குறிச்சிட்டு, பேரணிக்கு மகஜர் தயாரிக்கிறமில்ல, அப்ப வைக்கிறோம். அவங்களே இப்பிடி நடந்திருக்குன்னா விசாரணை பண்ண ஏற்பாடு செய்யிவாங்க...” அவன் தலையைச் சொறிகிறான், குனிந்துகொண்டு. “தும்ப வுட்டு வாலைப் புடிக்கிறீங்க முதலாளி!” “சர்த்தாண்டா! பெரிய... விவகாரக்காரந்தா, இப்ப சொன்னதைக் கேளு, அடுத்த பஸ்ஸப் புடிச்சிட்டு வூட்டுக்குப் போலாம்.” வீச்சம் லேசாக மூக்கில் இழைகிறது. கருவாடா? “என்னாடா, சாக்குப் பையில?” கீற்றுப்புன்னகை முகிழ்க்கிறது. “ஒண்ணில்ல முதலாளி...” “என்னடா ஒண்ணில்ல? வக்கீல் வூட்டுக்குப் பெரிய கருவாடா கொண்டிட்டுப் போற?” “இல்ல முதலாளி, நாம் போயிட்டு நிமிட்டுல பஸ்ஸுக்கு வந்திடற. நீங்க போங்க...” சாக்குப் பையை இடுக்கிக்கொண்டு அவன் நிற்காமல் ஓடுகிறான். “...பாம்பு பிடிக்கப் போயிருக்கிறான்... மட்டு மரியாதியே வைக்கிறதில்லிங்க...” தங்கசாமி லட்சுமியைப் பார்த்து வருகிறார். “என்னாமா? வூட்டுக்காரரை அளச்சிட்டுப் போக வந்துட்டீங்களா? நாங்கல்லாம் மனிசங்கல்லியா?” “ஐயோ, யாருங்க அப்பிடிச் சொன்னது? நீங்கதாம் பாத்துட்டீங்க...!” “ஏம்மா, உங்க பக்கம் ஆரும் மாதர் சங்கத்துப் போராட்டம் எதிலும் சேர மாட்டேங்கறீங்க? தாசில்தாராபீசு முன்ன குடும்ப கார்ட மாத்தி ஒவ்வொரு ஆளுக்கும்னு கணக்குப் போட்டு அரிசி குடுக்கணும். சர்க்கரை மத்தும் அத்தியாவசியப் பண்டங்கள் குடுக்கணும்னு போராட்டம் நடந்திச்சி. உங்க பக்கம் கிட்டமா சொல்லி அனுப்பினேன்னிச்சி. நீங்க யாரும் எதுக்கும் வாரதில்ல?” “அவங்கவங்களுக்கு வூட்டுப்பாடு, வெளிப்பாடுன்னு சரியாப் பூடுது. எனக்கும் குடும்பத்துல ஒரே நெருக்கடி..” “எல்லாரும் பொம்பிளங்க சேந்தாத்தா சங்கத்துக்குப் பலம்னு பேசுறாங்க. ஆன அவனவன் வூட்டுப் பொம்பிளய வெளில விடாம காபந்து பண்ணிக்கிறான்!” சம்முகத்தைச் சாடையாகப் பார்த்துக் கொண்டுதான் தங்கசாமி குறிப்பிடுகிறார். சம்முகம் சாதாரணமாக இருந்தால் சிரித்திருப்பார். இப்போது சிரிப்பு வரவில்லை. “எல்லாம் பேசறதுக்குத் தாங்க நல்லா இருக்கு நடமுறக்கி வர முடியாது. இன்னிக்கிருக்கிற நிலமயில, பொம்பிளங்களக் கூட்டிட்டு வரதே லேசான காரியமில்ல...” இந்தக் கருத்தை உதிர்த்துவிட்டு சம்முகம் கொடியில் இருக்கும் துண்டை பத்திரமாக எடுத்து மடித்துப் பைக்குள் வைத்துக் கொள்கிறார். தன் பையில் டாக்டர் சீட்டு, மருந்து வாங்கின கடை பில் எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டு பணத்தை எண்ணிப் பார்க்கிறார். “காம்ரேட், இதொரு வேட்டி இருக்கு, வுட்டுட்டுப் போடாதீங்க!” பொன்னடியான் பார்த்து எடுத்து வருகிறான். “நன்றிப்பா... ஒத்த வேட்டியோட வந்தனா? ஐயரு கொடுத்தாரு...” “வரேம்ப்பா, பிறகு நான் சொன்னதெல்லாம் ஞாபக மிருக்கில்ல?” “இருக்கு போயிட்டுவாங்க காம்ரேட் பிறகு பார்த்துக்கலாம்... வணக்கம்!” எல்லோரிடமும் விடைபெற்றுக்கொள்கிறார். லட்சுமி பையைக் கையில் எடுத்துக் கொண்டு அவருடன் நடக்கிறாள். காலில் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தாலும் கூச்சமாக இருக்கிறது அவருக்கு. ரிக்ஷா என்றால் ஒன்று ஒன்றரையாகிவிடும். லட்சுமிக்கு டவுனுக்கு வருவதே அருமை. அதை ஒரு சினிமா பார்த்தோ, கடையில் இரண்டொரு சாமான் வாங்கியோ, கொண்டாட முடியாதபடி சந்தோஷங்களை ஒரேயடியாக மகள் கொண்டு போய்விட்டாளே என்று குமைகிறது. “நீங்க சின்னய்யருக்கு எழுதி, எப்படியானும் ரெண்டாயிரம் புரட்டித்தாரேன்னு சொல்லியிருக்கலாம். அவளுக்கு அதுதாங் குற. காவாளயப் போட்டுட்டுத் தண்ணிலயும் வுட்டு அது அழுவி, ஒழவோட்ட ஆளில்லாம வீணாப் போன சங்கதியா யிட்டது. அதா அவளுக்கு ஆத்திரம்...” “வெவரமில்லாம பேசுற! அரிசனம் அரிசனம்ங்கற சலுகையும் கட்சிக்கு ஆள் சேக்கிற துண்டிலப் போலப் பயன்படுத்தறாங்க. நாம இதை எதுத்துப் போராடணுமே ஒழிய நாமே லஞ்சம் குடுக்கிறதா?” “ஆமா... எல்லாரும் ஒரு நிலையிலதா நிக்கிறாங்களாக்கும்? அன்னிக்கு ஊரே சாமி கும்பிடக் கூடாதுன்னு சொன்னிங்க. ஒங்ககிட்டயே அவன் மொத வசூலுக்கு வந்து பத்து ரூபா வசூல் பண்ணிட்டுப் போறான். கோயில் சொத்து, நிலம், தோப்பு எல்லாம் என்னாச்சின்னு கேக்க யாருக்குத் தெம்பிருக்கு?” “நாங் குடுத்தேனா? நீதான் என்னமோ ஒடனே கொண்டாந்து வச்சே! இவங்கசாமிகிட்டல்லாம் உனக்குத்தான் பயம்!” “நீங்கதான் நோட்டில் பேரெழுதினிங்க? பிறகு நான் பொய்யா நிக்கணுமா? இந்த வடிவுக்கு நீங்க காசு குடுத்தது எப்பிடித் தெரிஞ்சிச்சோ? ஒருக்க அவனுவளே சொல்லியிருப்பா னுவ! நேத்தெல்லாம் ஆரும் சாமி கும்பிடக் கூடாதுன்னவரு இப்ப அவங்க கூடச் சேந்திட்டுப் பணம் குடுத்தாராமே முதலாளின்னு ஏங்கிட்ட இப்பக் கேக்கிறான். எதானும் சொன்னா, ‘ரொம்பக் கெடுபிடி பண்ணாதீங்க? எங்கிட்டுப் போனாலும் எங்கக்குக் கூலி இருக்கு. ஒரே எடத்தில்தான் உழைக்கணும்னில்ல’ன்னெல்லாம் பேசுகிறான்.” “ஒட்டலில் புகுந்து இரண்டு இட்டிலி சாப்பிட இடம் தேடுகின்றனர். ஒரு மேசையில் சரகம் சப்-இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருக்கிறார். சம்முகம் பணிவாக ஒரு மரியாதை தெரிவித்துவிட்டு, அடுத்த முன்பக்கம் காலியாகப் போகும் நாற்காலிக்குக் காத்து நிற்கிறார். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பஸ் நிறுத்தத்தில் சம்முகத்தை ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு தேநீர் வடிகட்டியும், பாண்டிச்சேரி லாட்டரிச் சீட்டொன்றும் வாங்குகிறாள் லட்சுமி, டவுனுக்கு வந்துவிட்டு வெறுமே எப்படிச் செல்வது? நாகுவுக்கு ஒரு கடலைமிட்டாய் வாங்கி வைத்துக் கொள்ளுகிறாள். கன்யாஸ்திரி ஒருத்தி அவளைப் பார்த்துக் கொண்டே வருகிறாள். புன்னகை செய்கிறாள். “காந்திமதியின் அம்மாளில்ல?” எப்போதோ பத்தாவது படிக்கையில் பள்ளிக்கூட விழாவுக்குக் கூட்டிப் போனாள். எப்படி நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள்! “காந்தி எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் சேரப்போறேன்னுதே? சேந்திச்சா?” “இல்ல.” “ஏ வந்து சர்ட்டிபிகேட் வாங்கிப்போச்சி? நல்லா படிக்கிற பிள்ளையாச்சே?” “அதொண்ணும் தோதுப்படல... கல்யாணங் கட்டிக் குடுத்திடறதா இருக்கிறோம்.” அவளிடமிருந்து கத்திரித்துக்கொண்டு வருகிறாள். என்னவெல்லாம் கனவு கண்டிருக்கிறாள்! சமுதாயத்தில் மதிப்பாக அவளுக்குக் கல்யாணம் கட்டி, படித்து வேலை செய்யும் மருமகனைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும், என்றெல்லாம் எண்ணியிருந்தார்களே! அதொன்றும் இல்லாமல் போய்விட்டது. ஊரில் தை அறுவடை முடிந்தபின் கொச்சையான விவகாரங்கள் நாய்க்குடைகளாக விரியும். அந்தச் சுவாரசியத்தில் ஆற்றோரம் குளத்தோரம் கூடும்போது, நாயக்கர் வீட்டில் நெல்புழுக்கப் போகும்போது யார் யாரை எல்லாம் பற்றியோ பேசுவார்கள். இப்போது அவள் மகளைப் பற்றி நாயக்கரம்மா காது கிழியப் பேசுவாளே? அதுவும், சேந்தன் பெண் சாதி வள்ளியம்மை சோடிப்பதில் வல்லவள். அவளுக்கு வெறும் வாயையே மெல்லத் தெரியும். இந்தத் தலைமைப் பதவியின் மயில் பீலிகளை உலுக்கிக் கீழே போடுவாள். “இவ என்ன முறைப்படி முதலா கட்டினாளா? போலீசுக்காரனுக்கு ஒண்ணப் பெத்து வச்சிருக்கிறவதானே; அம்மயப் போல பொண்ணு!” என்று நொடிப்பாள். “யாரு, லட்சுமியா?” “ஒனக்குத் தெரியாதா?... இவனுவ மிராசு பண்ணைய எதித்துக்கிட்டுக் கவர்மெண்டுக்கு விரோதமா ஆளுவளச் சேர்த்துக்கிட்டுத் தல மறவா ஒளிஞ்சுதான திரிஞ்சானுவ? அப்ப போலீசு ராவில வூடுகளில், சேரில வந்து வலபோடுற மாதிரி ஆளுவளத் தேடுவா. இவனுவதா அம்புடமாட்டானுவளே? பொம்பிளகதா இருப்பா. புடிச்சிக்குவாங்க. இவளுக்கு அப்ப கலியாணம் காட்சி ஆவல. வவுத்துல வந்திட்டது. என்னா செய்யிவா? ஆத்தாகாரி மருந்துமாயம் குடுத்துப் புள்ளயக் கரச்சிடப்பாத்தா, அது கரயல. ஆனா கோளாறாப் போயிட்டுது. மூக்கறையும் மூளை குளம்பியும் பொறந்திடுச்சி. பெறகுல்ல இவுரு வந்து கட்னது? முன்னியே தொடுப்பா இருந்ததுதான், இவுரு புள்ளன்னு சொல்லிக்கிட்டாவ. ஆனா, இவுரு பெருந்தன்ம கட்டிட்டாரு...” பஸ்ஸில் உட்காந்திருக்கையில் லட்சுமிக்குக் காட்சிகள் படலங்களாக அவிழ்கின்றன. உடல் குலுங்குகிறது. வயலில் வேலை செய்யும் படிக்காத குமரிப்பெண் கட்டு மீறிவிட்டால் சங்கத்துக்கு ஒவ்வாத சம்பந்தமாக இருந்தால் சாதிவிட்டுத் தள்ளி விடுவார்கள். அவள் பின்னர் நடவு, களை என்று வயலில் இறங்க முடியாது. ஏனெனில் அவள் சேற்றில் கால்வைக்க வந்தால் மற்றவர் அனைவரும் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். அதனால் எந்தப் பண்ணைக்காரனும் அத்துமீறிய ஆட்களுக்கு வேலை கொடுக்கமாட்டான். இந்தக் கட்டுப்பாட்டினால் தாமாகவே திரும்பி மந்தைக்குள் வந்து சேர்ந்து கொள்வார்கள். ராமாயி மகள் இப்படித்தான் எவனோ அயலூர்க்காரன் சேர்வையுடன் ஓடிப்போனாள். திரும்பி வந்துவிட்டாள். இப்போது மூக்கன் மச்சானைக் கட்டி இரண்டு பிள்ளைகளிருக்கின்றன. குஞ்சிதம்...? வெளியூர்க்காரி. பள்ளக்குடிப் பெண் தான் என்று சொல்வார்கள். ஓடிவந்தவள். பார்க்கச் சுருட்டை முடியும், புருபுருவென்ற முகமுமாக அழகாக இருக்கிறாள். ஆனால் திரும்ப ஊருக்குப் போகமுடியாமல், இங்கேதான் உயர்ந்தசாதி என்று சொல்லிக்கொண்டு மேற்குடியாரை அண்டி ஊழியம் செய்கிறாள். அவர்களுக்கே உடம்பை விற்றுத் தின்னும் பிழைப்பாயிருக்கிறாள். அக்கிரகாரத்திலும், வேளாளர் தெருவிலும் கோலோச்சும் விடலைகள் ‘அவ என்ன சாதி தெரியுமில்ல?’ என்று கண்ணடிப்பார்கள். தோளைப் போர்த்திக் கொண்டு பவ்வியமாக, ‘நாங்க வெள்ளாழருங்க!’ என்பாள். ஒரு பெண் மீறினால், உதிரிப்பூவாகக் காலில் மிதிபட வேண்டும். கண்கள் சுரந்து சுரந்து பார்வையை மறைக்கிறது. சம்முகம் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். நடவான வயல்கள் கண்களிலே தென்படுகின்றன. சில இடங்களில் கயிறு கட்டிய வரிசைகளாய் பாய் நடவு நட்டிருக்கிறார்கள். திருமணத்தாலி பூட்டிக்கொண்ட மங்கல மகளிர் அணி அணியாக நிற்பது போல் ஒரு காட்சி. இவர்களுடைய மண்ணில் எதுவும் முடியவில்லை. மகன், மகள், கட்டாக இருந்த கூட்டாளிகள் எல்லோருமே சிதறிப் போகிறார்கள். சிதறிச் சிதறிப் போகிறார்கள். சின்னா பின்னமாகிப் போய் மானுட உறவின் தொடர்புகள் வறண்டு பொடியாகிப் போய்...
எல்லோரும் வாருங்கள்! ஒன்றாகச் சேருங்கள்! உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்! உரிமைக்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்! ஏகோபித்த குரல் முழங்க, ஆயிரம் பதினாயிரமாக நில உரிமைக்காரர்களின் அடியாட்களையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்று இரத்தம் சிந்தத் துணை நின்ற சக்திகள் துண்டு துண்டாகச் சிதறிப் போகின்றன. சம்முகம் கண்களை மூடிக்கொள்கிறார்; தாள முடியவில்லை. |