(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

12

     சினிமா முடிந்து வருகையில் இலேசாகத் தூற்றல் விழுகிறது.

     பஸ் நிறுத்தத்தில் வந்து ஒரு டீ குடித்துவிட்டு, மிட்டாய்க் கடையில் சேவும் அல்வாவும் வாங்கிக்கொள்கிறான். மீதி நான்கு ரூபாயை மடித்துப் பையில் தனியாக வைத்துக்கொண்டு பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிறான்.

     “எங்க இந்தப் பக்கம்? வடிவு?...”

     தேவுதான் நிற்கிறான்! சர்ட்டு சராய் போட்டுக்கொண்டு, கையில் ஒரு தோல் பையுடன்... “ஆ...மாங்க. தலவருக்கு உடம்பு சரியில்ல. கால்ல... வீக்கம், கூட்டியாந்து ஆசுபத்திரில காட்டிட்டு வூட்டுக்குப் போறேன்...”

     “பஸ் ஆறு மணிக்கு வரணும்.”

     “நீங்க ஊருக்குத் தானா சாரு!”

     தேவு சிரிக்கிறான். “என்னப் போயி சாருமோருங்கற. நீயும் நானும் ஒண்ணாப் படிச்ச தோழர்கள் தானே, தேவுன்னு கூப்பிடறது.”

     “அதெப்படிங்க, நீங்க ஒசரத்துக்குப் போயிட்டீங்க. நாந்தா படிக்காம ஏரப் புடிச்சிட்டேன்!”

     வடிவுடன் அவனும் சிரிக்கிறான். “அப்ப நீதான் உசத்தி. ஏரின் பின்னால் தான் உலகமே. உங்களைப் போன்ற தொழிலாளிக இல்லன்னா, ஏது மத்த வளமை எல்லாம்?”

     “அது சரி, அது உளுமதா. ஆனா யாருங்க அதெல்லாம் ஒத்துக்கிறாங்க? படிச்சி அழுக்கு ஒட்டாம வேலை செய்யிறவங்க ஆருங்க எங்களை மதிக்கிறாங்க?...”

     “அது யாரோட தப்புன்னு நினைக்கிற? உங்க தப்புத் தான்...”

     “எங்க தப்பா?...”

     “ஆமாம். வெறும கூலி உசத்திட்டாங்கன்னா கம்முனு பேசாம இருந்திடறீங்க...”

     “பின்னென்ன செய்யிறது?”

     “பாரு, பாரு உங்களுக்கு இன்னும் என்ன இல்லைங்கறது கூட பிறத்தியான் சொல்ல வேண்டியிருக்கு... அது சரி, உன் தலைவரு மகளக் கூட்டிட்டுப் போனாரே அன்னிக்கு, ஸீட் கிடச்சிச் சேந்தாச்சா?”

     வடிவு உதட்டைப் பிதுக்குறான். “எங்கங்க. அதென்னமோ ரெண்டாயிரம் கட்டணும்னாங்களாம். உள்ளுக்குள்ள ஏதோ கரசபுரசலு. அவருக்கும் கால்ல ஏதோ குத்தி காச்சல் கடுப்பு. எந்திருக்கிறதுக்கில்ல. இந்தப் பொண்ணு பாருங்க..” குரலைத் தாழ்த்திக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறான்.

     “நேத்து காலம எங்கோ ஓடிட்டது. ஒடயாரு வீட்டுக்குப் போச்சின்னாங்க. என்னப்போயி வீரமங்கலத்துல விசாரிக்கச் சொன்னாங்க. அங்க இல்ல. நமுக்கேங்க வம்பு. அவங்க சினிமாக்குப் போயிட்டாங்கன்னு சொன்னேங்க. ஆக பொண்ணு இப்ப வந்திருக்குதோ என்னமோ...?”

     அவன் புருவங்களை நெரித்துக்கொண்டு நிற்கிறான்.

     “அவரு மகன் மட்ராசில இருக்காரில்ல...? அங்க போயிருக்குமா இருக்கும்?"

     “அதென்னன்னு தெரியல மகங்கூட செரியில்லிங்க.” இதற்குள் பஸ் வருவது தெரிகிறது. இருவரும் ஓடிப்போய் இடம் பிடிக்கிறார்கள். முன் வரிசையில் கெளரவமான தேவுவின் அருகில் அமரும்போது வடிவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவன் கையை அமர்த்திவிட்டு அவனே சீட்டெடுக்கிறான்.

     “என்னாத்துக்குங்க நீங்க, சீட்டெடுக்கிறது?”

     “பரவாயில்ல, நான் உனக்குச் சீட்டெடுக்கலாம். எல்லாம் செய்யலாம்...”

     புன்னகை.

     கறுப்புக்கூட உதிர்ந்து பயல் எப்படி இருக்கிறான்! படிச்சவன் தன் இனத்தானை ஒதுக்குவதைத் தான் வடிவு கண்டறிந்திருக்கிறான். கோபு, நின்ற இடத்தில் கூட நிற்காமல் போவான். வாடா போடா என்று எவ்வளவு துச்சமாகப் பேசுவான்? ஏன், சட்டக்கூலி கொடுக்கக்கூடாது என்று நின்றான்! மருள் நீக்கி வரும்வரை அவன் எதுவும் பேசவில்லை. அங்கே இறங்கி நடக்கின்றனர். வரப்பின் குறுக்கே நடக்கையில் திடீரென்று “ஆமா, அந்த ஐயனார் கொள வெவகாரம், அதற்கு ஒண்ணும் பண்ணலியா?” என்று கேட்கிறான்.

     “...என்ன பண்ணுறதுங்க? அவனுவ பக்கம் அல்லாக்கட்டும் ஆளுகளும் இருக்காங்க. கொடி புடிச்சிட்டுக் கூச்சப்போடுவம். போலீசு வந்து அடிச்சி உள்ள தள்ளு வா. ஒண்ணும் இல்லமலேயே இவனுவ சந்தேகம்னு புடிச்சிட்டுப் போயி வாக்கரிசி வாங்கிக்கறாங்க...”

     “உங்க சங்கம் பின்ன என்னதா செஞ்சிட்டிருக்கு?”

     “போன வருசத்துக்கு இந்த வருஷம் கூலி உசந்திருக்கில்ல?”

     “அது சரிதா. இருந்தாலும் பல உரிமைகளை விட்டுக் குடுக்கிறோம். சின்னச் சின்னப் பிரச்னைபோல தெரிஞ்சாலும் எல்லாரையும் கூட்ட அதுதான் உதவி செய்யும்.”

     “அது சரிதாங்க. இப்பக் கூட, காலம குடிசயப் பேத்திடுவோம்னு பூசாரி பயமுறுத்திட்டுப் போறான். முதலாளி புதுக்குடில படுத்திட்டாரு...”

     குபீரென்று தேவு சிரிக்கத் தொடங்கி அடக்கிக் கொள்கிறான்.

     “என்னங்க...?”

     “இல்ல, நீ முதலாளின்னதும் சிரிப்பு வந்தது...” இவனுக்கும் வெட்கமாக இருக்கிறது.

     “முதலாளின்னு கூப்பிட்டுப் பழக்கமாயிடிச்சிங்க. நம்ம எனத்துல, சொந்தமா அஞ்சுமா வச்சிட்டு ஒரு தலவரா இருக்கிறவர நாம முதலாளின்னு கூப்பிடுறது கவுரததானுங்களே?”

     “...இப்பத்தா எனக்கு நல்லாப் புரியுது. நம்ம சனங்களுக்கு தாங்க ஒரு முதலாளியா, மிராசா, சமீனா இருக்கணும், நமக்குக்கீழ நாலுமனுசன் கைகட்டி சேவுகம் பண்ணனும்ங்கற உணர்வு ரெத்தத்தோட ஊறிப்போயிருக்கு. பொது உடமைச் சித்தாந்தமெல்லாம் பேசி ஊறினாக் கூட, தனக்குன்னு வாரப்ப, எந்த மனுசனும் பொஞ்சாதியையேனும் குறைஞ்சபட்சம் அடிமைன்னு நினைச்சி அதிகாரம் பண்ணாம இருக்கிறதில்ல. தாங்க ஒரு உடமைக்காரராக இல்லாத நிலையிலதான் சித்தாந்தம், வேதாந்தம், எல்லாம்...”

     தலைவனை விமரிசனம் செய்வது என்பது ஒத்துக்கொள்ள முடியாத வரம்பாக ஊறிப் போயிருக்கிறது. எனவே வடிவு அவன் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை.

     “நீங்களும் எத்தினி வருசமா உழைக்கிறீங்க? உங்கப்பாரும் அடிதடி, சிறைவாசம்னு எத்தினி கஷ்டப்பட்டிருக்காரு. இன்னும் ஒரு சாண் நிலம் சொந்தமாக வச்சிக்க முடியல. இவங்க கோயில்ல சாமில்லன்னு சொல்றப்ப நீங்க கும்பிடக்கூடாது; ஏத்துக்கணும். இவங்க சாமி கும்பிடணும்னு சொல்றப்ப நீங்க குடிசயத் தூக்கிட்டு நடுவீதில நிக்கணும்! அது சரி, முன்ன ஸ்கூல் கட்டணும்னு உங்களக் குடிசங்களத் தூக்கிட்டுப்போயி, கோயிலுக்குப் பக்கத்தில அவங்கதா போட்டுக்கச் சொன்னாங்க. அப்ப, வெள்ளாழத் தெருப் பக்கத்திலோ, அக்கிரகாரத்துக்குப் பக்கத்திலோ உங்க நாலஞ்சு பேருக்கு எடம் குடுக்கக் கூடாதா? பரப்பயல்னா, ஊருக்கு வெளியே இருக்கணும்னுதா இப்பவும் நினைக்கிறாங்க இல்லியா? இத்தக் கேக்க உங்களுக்குத் தெரியலியே?”

     வடிவு ஒரு வியப்புடன் தேவுவின் சொற்களை ஏற்கிறான்.

     “நாயந்தான். இப்பக்கூட, அக்கிரகாரத்தில பல வீடும் பாழடஞ்சி கிடக்கு. ஆத்தோரம் வரயிலும் எத்தினி கொல்லை நீண்டு பாழாக்கிடக்கு? அங்க போயிக் குடிசைகளைப் போட்டுக்க எடம் குடுப்பாங்களா? மறுபடியும் ஊருக்கு வெளியே இன்னும் தள்ளி ஆத்துக்கு அக்கரையில சட்டியத் தூக்கிட்டு ஓடணும்னு தான சொல்றாங்க...” வடிவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால் உள்ளே சலனமடைகிறான்.

     “என்ன பேசாமலிருக்கிற வடிவு? புரட்சியக் கொண்டாரோம்னு எங்கப்பன் உங்கப்பன் உங்க தலைவரோட அப்பன் எல்லாம் அடிபட்டாங்க. சாவுக்கும் அஞ்சல. அம்மாமாருகளெல்லாம் போலீசுக்காரனும் அவனும் இவனும் மானம் குலச்சிச் சுமை சுமக்க வச்சதையும் பொறுத்தாங்க. ஆனா எல்லாம் அடங்கிப் போச்சு. குடுத்த விலையெல்லாம் வெத்துக்கருக்காய்க்குன்னு ஆச்சி. நினைச்சிப் பாரு...”

     வடிவுக்குச் சுருக்கென்று உரைக்கிறது.

     ‘புரட்சி’ என்ற சொல்லைப் பற்றி வடிவு நிறையக் கேட்டிருக்கிறான்.

     அவர்கள் சங்கத்துக் கோஷமே அந்த உயிர்ச் சொல்தான். உச்சவரம்புப் போராட்டம், கூலி உயர்வுப் போராட்டம், விலைவாசிப் போராட்டம், நிலப் பட்டாப் போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்களில் அவனுடைய அப்பன், ஏன், அம்மாவும் கூடக் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். ஆறுமாசம், நான்கு மாசம் என்று போவதும், வக்கீல், கோர்ட்டு என்று அலைவதும், அவனுக்கு வாழ்க்கையில் சாதாரணமாகப் பழகியவை. ஆனால் அவன் பெரும்பாலும் அந்த சமயங்களில் நிலத்தைப் பார்த்துக் கொள்ளத் தங்கிவிடுவான். இப்போது சில நாட்களாகத்தான் சில்லறை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு காவல் நிலையங்களைப் பார்த்து வருகிறான். சில மாசங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு நாள் சாயங்காலம் குடித்துவிட்டுத் தெம்மாங்கு பாடிக்கொண்டு போனான். நடவு, உழவு எதுவும் இல்லாத நாட்கள். உளுந்து பயிறு பிடுங்கிய பின் தரிசாகக் கிடந்தன. இவனுக்கு அன்று கையில் கொஞ்சம் காசு கிடைத்திருந்தது. லீவுக்கு வந்திருந்த ஐயர் மகன் கொடுத்திருந்தான். அஸ்தமங்கலத்துக்குச் சினிமாவுக்குப் போவதாக எண்ணிக்கொண்டு புறக்காவல் நிலையத்துக்கு முன் சென்று கொண்டிருந்தான். ஐயர் மகன் சிவப்புக் கட்டம்போட்ட புதிய தேங்காய்ப் பூத்துவாலை ஒன்றும் அவனுக்குக் கொடுத்திருந்தான். அதைத் தலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

     ஏட்டையா அவனைக் கைக்குச்சியால் ஒரு தட்டுத் தட்டினார். “ஏண்டால? என்னா சமாசாரம்?... எங்கடா வந்து ஆட்டம்போடுற?" என்றார்.

     அப்போது இம்மாதிரி பப்ளிக்காக கள்ளுக்கடைகள் திறந்திருக்கவில்லை. தோப்பில் தான் ஊறல் விற்பார்கள். ஆனால் எல்லோரும் குடிப்பதுதான் அப்போது அவனைப் பிடித்ததற்கு காரணம் என்று நினைத்தான்.

     “இல்ல... சாரு...” என்று குழறினான்.

     ஏட்டு அவன் தலைத்துண்டைப் பற்றி இழுத்தார்.

     “இன்னாடா சேப்புத் துண்டு போட்டிருக்கிற?. கம்னாட்டிப் பயலே.” என்று திட்டி முதுகில் நான்கு சாத்தினார்.

     “ஐயோ... இல்லீங்க..”

     “குடிச்சிட்டு வந்து டேசன் முன்ன ஆட்டம் போடுறான். இன்னாடா தயிரியம்?...”

     “இல்லிங்க சாரு இல்லிங்க தெரியாம வந்திட்டேன்.”

     “ஏண்டால, சேப்புத் துண்டு போட்டிருக்கிறியே, புரட்சின்னா இன்னான்னு தெரியுமாடா?”

     “தெரியும் சாரு புரட்சின்னா சாஸ்தி கூலி வரும். நல்லா இருப்போம். அதுக்குத்தான் போராடுறம்...”

     “அட போடா முட்டாப்பயல? போயி உந் தலவரிட்டக் கேளு!” என்று புதிய துண்டை உருவிக்கொண்டு அவனை விட்டார். அன்று வந்ததும் முதல் வேலையாகச் சம்முகத்திடம் “புரட்சின்னா என்ன முதலாளி? சரியாச் சொல்லுங்க!” என்று கேட்டான்.

     சம்முகம் நடந்த விவரங்களைக் கேட்டுவிட்டு அவனுடைய கபடமற்ற தன்மைக்குச் சிரித்துக்கொண்டார். “நீ முதலாளின்னு கூப்பிடக்கூடாது, முதல்ல!”

     ‘புரட்சி என்றால் என்ன?’ என்று தலைப்பிட்ட ஒரு சிறு புத்தகத்தைக் கொடுத்தார்.

     “எளிமையா எழுதிருக்கு பாரு, படிச்சித் தெரிஞ்சிக்க, நா வந்து கேப்பேன், சொல்லனும்!” என்றார்.

     இவனுக்குப் படிக்க வணங்குவதில்லை. எழுத்துக் கூட்டி அந்தச் சிறு பிரசுரத்தில் நான்கு பக்கங்கள் படித்தான். பிறகு அப்படியே போட்டு விட்டான். அது மறந்தே போயிற்று.

     தேவு அவன் வழிக்குப் பிரிந்துபோகிறான்.

     வடிவு முதலாளியின் வீட்டுக்கு வருகிறான். வீடே ஓய்ந்து கிடக்கிறது. அம்சுவும் லட்சுமியும் கன்னத்தில் கைவைத்த வண்ணம் உட்கார்ந்திருக்கின்றனர். கிழவன் படுத்துக் கிடக்கிறான். கிழவியைக் காணவில்லை. பைத்தியக்காரப்பயல் உள்ளே கதவைத் தட்டி ஊளையிடுகிறான்.

     “...காந்தி வரலிங்களா?”

     “ஆரு? வடிவா? முதலாளி வரல?...”

     “அவங்க ரெண்டு நா தங்கி ஊசி போட்டுக்கிடணுமா. நீர், ரத்தம் பரிசோதனை பண்ணிருக்காவ. இந்தாங்க, பூச்சி மருந்து, உள்ளாற வாங்கி வையுங்க...”

     சட்டைப்பையில் கைவிட்டு அவர் கொடுத்த பணத்தில் மீதிச் சில்லறையையும் பூச்சி மருந்து - பில்லையும் எடுத்துக் கொடுக்கிறான்.

     “ஐயிரு வீட்டுக்குப் போனாங்களா, சருக்காராசுபத்திரிக்குப் போனாங்களா?”

     “ஐயிரு வீட்டுக்குத்தா...”

     “ஏண்டா, புதுக்குடிக்கு சினிமாக்குப் போனதாவா ஒடயாரு சொன்னாரு?”

     “ஆமா...”

     “நீ காந்தி வந்திச்சான்னு கேக்கலியா?”

     “நா எல்லாம் எங்கன்னே. சினிமா போயிருக்காங்கன்னு சொன்னாரு. சரி, காந்தியும் போயிருக்கும்னு சொன்னே...”

     “மக்குப் பயல்ங்கறது சரியாயிருக்கு...”

     லட்சுமி முணமுணத்துக்கொண்டு உள்ளே போகிறாள்.

     சொல்லத் தெரியாமல் சங்கடம் செய்கிறது. இந்தப் பெண், அத்துமீறி ஓடிவிட்டாளா?

     வடிவு அங்கே பிறகு தாமதிக்கவில்லை.

     நிலவு எழும்பும் காலம்தான். எனினும் நீர்ச்சாரல் விசிறும் மேக மூட்டத்தில் நிலவின் கவர்ச்சியில்லை. எதிரே வருபவர் முகம் விளங்காத மங்கல் மருதனும் பொன்னனும் குடித்துவிட்டு அதே குரலில் கூலிப்பிரிவில் சச்சரவு செய்வது கேட்கிறது. அவன் விரைந்து குளம் சுற்றிப் போகிறான். ஏதோ நடவாதது நடந்திருப்பது தெரிகிறது. அங்கே ஒரு பஞ்சாயத்து விளக்குண்டு. கோயில் வாசலில் மணல் இறங்கியிருக்கிறது. சவுக்குத்தடிகள் இறங்கியிருக்கின்றன. இடுப்பில் பட்டை வேட்டியும் கழுத்தில் உருத்திராட்சமுமாகப் பூசாரி நிற்கிறான். மணியகாரர், மூலையான்... பின்னே... ஐயோ? அவர்கள் வீடு... குடிசை என்ன ஆச்சு? முட்டுமுட்டாக அரைச்சுவர்கள் மட்டுமே மானங் குலைக்கப்பட்ட நற்குடிப் பெண்கள்போல் நிற்கின்றன. பஞ்சமி செய்வதறியாது நிற்கிறாள். அவளுடைய தாய் காளியாயி மாரியாயி எல்லாரையும் கூவி அழைத்து அக்கிரமத்தைப் பார்க்கச் சொல்லி முறையிடுகிறாள். போலீசை வைத்துக்கொண்டு பிரிக்கச் சொன்னார்களாம்.

     அப்பன் மூங்கில்கள், பொடிந்த கீற்று எல்லாவற்றையும் பிரித்துக் கொண்டிருக்கிறான். அமாவாசி கட்டாகக் கட்டித் தூக்கிச் செல்கிறான். குஞ்சு குழந்தைகள், ஆடு, கோழி நாய், சட்டி பானை, முறம், உரல், உலக்கை எல்லாம் அவன் முன் அநாதைகளாக நிற்கின்றன. தூங்கும் எரிமலையை ஏற்கெனவே தேவு தொட்டுப் பார்த்திருக்கிறான். இப்போது அது புகையையும் குழம்பையும் கக்குகிறது. வசையும் குரலும் மூர்க்கமாகப் பாய்கின்றன.

     “யார்ராவன் தேவடியாமவன் எங்க வூட்டப் பிரிச்சது?”

     கொடியேறிய அவரை தரையில் வீழ்ந்து புலம்புகிறது. படல்கட்டு இவர்கள் குடிசையைச் சுற்றிப் புதிதாக வளைத்திருந்தார்கள். அதை அகற்றவில்லை இன்னமும். உடம்பிலிருக்கும் சாரமனைத்தும் நடந்தும் ஓடியும் வெட்டியும் கொட்டியும் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நிம்மதியாகப் படுக்க, உட்கார்ந்து பசியாற, அடிநிலம் சொந்தமில்லை, உரிமையில்லை என்று உரைத்துச் சொல்கிறார்கள். இந்த மண்ணைத் தவிர அவர்களுக்கு வேறு பாத்தியதை கொண்டாட எதுவும் நெருக்கமில்லை.

     பல்லைக் குத்திக்கொண்டு விருத்தாசலம் பிள்ளையும் நிற்கிறார்.

     “ஏங்க, இது நாயமா உங்களுக்கு? வாழுறவங்க வூட்டப் பிரிச்சிப்போட்டு சாமி உங்களக் கும்பிடச் சொல்லிச்சா! அந்த சாமிக்குக் கண்ணில்ல?”

     “யார்ராது? வடிவுப் பய வந்திட்டானா? என்னாடா... பேச்சு தடிக்கிது?”

     “ஆமா, தடிக்கத்தா தடிக்கும். வாழுறவங்க குடிசயப்பேத்து மானங்குலக்கச் சொல்லிச்சா ஒங்க சாமின்னு கேட்டேன்?”

     “பறப்பயலுக்கு வந்த திமிரப் பாத்தீங்களா? ஏண்டா நீங்க கோயில் நிலத்தில் இருந்துகிட்டுக் கண்ட மாமிசத்தையும் உரிச்சிப் போட்டுக்கிட்டு அக்கிரமம் பண்ணது மில்லாம, நாக்குமேல பல்லப்போட்டு எதித்துக் கேக்க வந்திட்ட! போனாப் போகுதுன்னு இத்தினி நா வுட்டதுக்கு எங்க புத்தியதா சொல்லணும்?”

     “நடவு வேலயெல்லா ஆனபெறகு நாங்க போயிடறோம்னு தான சொல்லிட்டிருந்தோம்? அதுக்கின்னு இப்ப பிள்ளையும் குட்டியுமா நிக்க வச்சிட்டு வூட்டப் பிரிச்சது நாயமான்னு கேக்குறேன். நாங்களும் உங்களப்போல மனிசங்கதானே? உங்கூட்ட இப்படிப் பிரிச்சிப் போட்டா சும்மா இருப்பீங்களா?”

     “கேட்டிங்களா இந்தத் திமிர் பிடிச்சவன், வாதாடுறத? ஏண்டா? உங்க தலைவன் கிட்ட ஆறுமாசத்துக்கு முன்ன நோட்டீசு குடுத்து, அப்பப்ப சொல்லிட்டே வந்தேன். மரியாதையா பிரிச்சிட்டுப் போனிங்களா? சாமிக்கு விழா எடுக்கணும்னா அததுக்கு நாளு நட்சத்திரம் இல்லியா? உங்க இட்டத்துக்குத் தள்ளி வச்சிக்கிறதாடா? முட்டாப்பயல?”

     “பத்து வருசமா ஒண்னுமே செய்யாம தள்ளிப் போட்டீங்களே? ஆரக் கேட்டீங்க அதுக்கு?”

     “எதித்து எதித்துக் கேக்கற நீ? மூஞ்சி முகர பேந்து பூடும்! என்னடா துள்ளுற? நீ சொல்லியாடா நாங்க சாமி கும்புடணும்?”

     குப்பன் வந்து மகனைப் பின்னுக்குத் தள்ளுகிறான்.

     “நாங்க காலி பண்ண மாட்டமின்னா சொன்னம்? முதலாளிக்கு உடம்பு சரியில்லாம ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்கு. இப்ப நடவு ஒழவுன்னு போனாதா எங்களுக்கு ரெண்டுகாசு கிடக்கிம்னு நாயமாச் சொன்னோம். நீங்க இப்படி நெருபிடியாப் பிரிக்க வச்சிட்டீங்க.”

     “ஆமா, அப்படிச் சொல்லலன்னா நீங்க பிரிப்பீங்களா? அல்லாருமாச் சேந்து கொடியத் தூக்கிட்டுப் போராட்டம் கிளம்புவீங்க? எலே, நீங்க என்னிக்கு நாயமா நடந்தீங்க? வெட்டுறதும் குத்துறதும் அள்ளுறதும் துள்ளுறதுமா ஊரையே நாசம் பண்ணிப்போடுறீங்க. உங்களுக்கே நாயமில்ல, இங்க நாயம் கேக்க வரீங்க. போங்கடா..” இதைக் கேட்டதும் வடிவு திமிருகிறான்.

     “எல, சும்மாருடா. அவங்க கை இப்ப மேலுக்கு இருக்கு. இப்ப எதும் கோபத்தில செஞ்சிட்டா, இவனுவளே நாலு வக்கப் படப்பக் கொளுத்திட்டு நம்ம செயில்ல கொண்டு வைப்பான். இப்ப நாம ராவிக்கு முதலாளி வூட்டில போயி ஒண்டிட்டுப் பொழுது விடிஞ்சி எதானும் பண்ணுவம்...”

     அமாவாசியின் மனைவி கர்ப்பிணி, மற்றவர்கள் காலையிலேயே இந்த நெருக்கடி வந்ததும் கூட்டைப் பிரித்துக்கொண்டு ஆற்றுக்கு அக்கரையில் சேர்த்துவிட்டார்கள். குப்பன் உழவுக்குப் போய்விட்டுப் பிற்பகலில்தான் திரும்பியிருந்தான். பஞ்சமியைக் கண்டபடி ஏசினானாம். சீலையைப் பிடித்து இழுத்தானாம் ரங்கன் பயல்.

     வடிவு உண்மையாகவே அவர்கள் கொல்லைகளை நாசமாக்கிவிடத் துடிக்கிறான். சம்முகம் இருந்திருந்தால் ஒரு படைதிரட்டி விடுவான் என்றே இவர்கள் அவர் இல்லாத நேரத்தில் இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறார்கள்.

     “எல்லாம் மொதலாளி வீட்டுப் பக்கம் போயிருங்க, காலம பேசிக்கலாம்.”

     பழனி சோற்றுக்கான பசியுடன் அப்போதுதான் ஓடி வருகிறான்.

     அவன் தலையிலும் சுமையை வைத்து அனுப்புகிறான் குப்பன்.

     வாசற்படியில் கிழவி குந்தி இருக்கிறாள். வீட்டினுள் சிம்னி விளக்கு எரிவதுகூடத் தெரியாமல் மங்கலாக இருக்கிறது.

     “யம்மோ..!”

     இடுப்பில் பிள்ளையும் தலையில் பாய்ச்சுருட்டும் கோணியுமாகப் பஞ்சமி...

     “வீட்டெல்லாம் போல்சு வந்து பிரிக்கச் சொல்லிட்டாங்கம்மா!...”

     லட்சுமி குரல் கேட்டு வெளிவருகிறாள். அம்சுவும் எட்டிப் பார்க்கிறாள்.

     குப்பன் எல்லாவற்றையும் விவரிக்கிறான்.

     “கேடு வந்திச்சின்னா ஒரே முட்டாத்தான் வரும். என்னாத்துக்குன்னு அழுவ?”

     வடிவு வரிக்கம்பு, ஓலை எல்லாவற்றையும் கட்டி எடுத்து வந்து வீட்டுப் பின்புறத்தில் வைக்கிறான். இரண்டு ஆடுகள், ஒரு கோழி, எல்லாம் பின் தாழ்வாரத்தில் இடம் பெறுகின்றன.

     அன்று லட்சுமி அடுப்பு மூட்டிச் சோறு பொங்கியிருக்கவில்லை. இப்போது இந்த எதிர்பாரா விருந்தைச் சாக்காக்கி அம்சு அடுப்பைப் பற்றவைத்து உலை போடுகிறாள். திண்ணை ஓரமிருந்த கலப்பை, சாக்கு போன்ற சாமான்களைப் பின்புறம் கொண்டு வைத்து வாயிலின் மறு திண்ணையில் குப்பன், மாரியம்மா, பஞ்சமி எல்லோருக்கும் இடம் ஒதுக்குகிறாள். வீட்டில் நிலவிய சோர்வையும், சங்கடமான அமைதியையும் இந்த இடையீடு நீக்குகிறது.

     நாகு பஞ்சமியின் குழந்தையைப் பார்த்துவிட்டுக் குதிக்கிறான்.

     “ஐயா... பா.ப்பா... கொழ்ழா...” என்று கையை நீட்டி ஆர்ப்பரிக்கிறான்.

     “ஆமா. புள்ள ஒண்னுதா கொறச்ச...”

     கிழவி முணுமுணுத்தாலும் பஞ்சமி அவன் மடியில் குழந்தையை வைக்கிறாள்.

     சூடுபரக்க எல்லோருக்கும் அம்சுதான் சோறும் குழம்பும் வைத்துத் திண்ணையில் கொண்டு கொடுக்கிறாள். அவளுடைய பாட்டன் விருத்தாசலம் பிள்ளை வகையறாக்களை வசை பொழிந்து கொண்டே சோறுண்ணுகிறார்.

     லட்சுமிக்கு ஒரு கவளம் எடுக்கக்கூட மனமிறங்கவில்லை.

     “காலமேந்து ஒரு பருக்கயில்லாம இருக்கிற, என்னம்மா இது?”

     கடிந்துகொண்டு இரண்டு வாய் உண்ணச் செய்கிறாள் மகள்.

     குப்பன் சாம்பாருக்குச் சோறு வைத்துக் கொடுக்கையில் வடிவு இன்னமும் சுமை சுமந்து வருகிறான். பனந்துண்டம், குந்தாணி, எரு முட்டை என்று தட்டுமுட்டுக்கள் வீடு குலைந்ததும் வளர்ந்து வருவதுபோல் நீளுகின்றன.

     இறுதியாகக் காத்திருந்து அம்சு அவனுக்குச் சிறு விளக்கை வைத்துச் சோறு படைக்கிறாள்.

     அந்த இடிபாடுகளின் இடையிலும் அம்சுவின் முகம் எதிர்கால நம்பிக்கையாக உணர்வூட்டுகிறது.

     “போதும், போதும்...” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் மொழிந்தாலும், கைகளும் மனமும் வேறொரு கோணத்தில் பரபரக்கின்றன.

     பின் தாழ்வரையில் ஆடு, கோழிக் கூண்டு, எருமுட்டை, அடுக்கு ஆகிய தட்டுமுட்டுக்களுக்கிடையில் பீடி குடித்துக் கொண்டு அவன் உட்காருகிறான். துாற்றல் விழுகிறது.

     உழவுமாடுகள், ஒரு கறவை வற்றிய மாடு, கரைந்துவிட்ட சிறு வைக்கோற்போர், அப்பால் எருக்கிடங்கு என்று கொல்லையில் ஒவ்வொரு சதுர அடியும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

     நாகு அறைக்குள் செல்ல மறுக்கிறான். லட்சுமி சிறிது நேரம் போராடிவிட்டுக் கோடியில் அவன் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள்.

     பின்னர் நடுவீட்டுக் கதவையும் சாத்திவிட்டு அம்சுவும், லட்சுமியும் படுத்துக் கொள்கின்றனர்.

     “ராத்திரி காபந்தா இருக்கணும். இந்தப் பயலுவ மாட்டப் பத்திட்டுப்போனாலும் போவானுவ. வேற என்னமே அடாவடியாச் செஞ்சாலும் செய்வானுவ.”

     தெருத்திண்ணையில் முடங்க இருக்கும் அப்பனைத் தட்டி எழுப்பி, “பின்னால போயி இரு. நா வயப்பக்கம் ஒரு சுத்துப் போயிவார. வேணுமின்னு மாட்ட ஆட்ட வுட்டு மேயச் சொல்லுவானுவ!”

     அம்சுவுக்கு உறக்கம் கொள்ளவில்லை. இந்த மழையிலும் தூற்றலிலும், கொழுந்து விட்டெரியும் மேற்குடிப்பகையிலும் அவன் இருட்டில் ஏன் போகவேண்டும் என்றிருக்கிறது.

     “யம்மோ..! அத்த இப்பப் போவாணாம்னு சொல்லு...!”

     “உனக்கென்னடி அத்தினி கரிசனம் அவனவனப் பத்தி? அவனவன் கவலப்பட மாட்டானா?”

     “இல்லம்மா, ஊரு கெட்டுக்கிடக்கயில, இந்தாளும் கோவத்தில எதானும் அடாவடியாப் பழி பாவத்துக்கு ஆளாறாப்பல எதேனும் செஞ்சிட்டா?”

     லட்சுமிக்குச் சுருக்கென்று தைக்கிறது. நேரம் பற்றாமலிருக்கிறது. இவன் தன் கோபத்தைக்காட்ட அவர்களுடைய வயல்களில் மாட்டை விட்டோ, மடையை அடைத்தோ, வைக்கோலை நாசம் செய்தோ பழிக்காளாகலாம் இல்லையா? தேனிக் கூட்டில் தீயை வைத்து ஒட்டித் தேனைக் கவர்ந்து கொள்ளும் ஆதிக்க மனிதனைப்போல் அவர்கள் ஆள்கட்டு, அதிகாரம் எல்லாம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தக் குடிசை பெயர்த்தல், பிணம் தூக்க இடம் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தது, எல்லாம் கவனிக்கப்படாமல் போகாது. வரும் மாசம் சங்கத்தின் பெரிய கூட்டம் இருப்பதாகவும், பல பிரச்னைகளை முன்வைத்துப் பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்முகம் சொல்லியிருக்கிறார். எனவே, எதிராளி பலமறியாமல் இவன் எதையேனும் செய்துவிட்டு, நமது ஒற்றுமைப் பலம் சிதறிவிட வாய்ப்பு வரக்கூடாதே?...

     லட்சுமி கதவைத் திறக்கிறாள்.

     “வடிவு...? எல வடிவு...?”

     சிம்னி விளக்கைப் பெரிதாக்கிப் பார்க்கிறாள். குப்பன் சாம்பார்தான் கோழிக்கூட்டுக்கும் வறட்டிக் குவியலுக்கும் நடுவே, சாக்கு விரிப்பில் சுருண்டு குறட்டை விடுகிறான். வாயிற் கதவைத் திறந்து திண்ணையில் பார்க்கிறாள்.

     “என்னாடி?...”

     “வடிவுப் பயல வெளியில எங்கும் ராவுல போவானாம்னு சொல்லத்தா.”

     “அவ ஆயிப்பனுக்கு இல்லாத அக்குசு ஒனக்கென்னடி? தென்ன மரத்துல தேளு கொட்டி பன மரத்துல நெறி ஏறிச்சாம்? பெரும்பண்ண, மிராசுன்னு அந்தச் செறுக்கி நினைப்பு. கமுக்கமா கதவச் சாத்திட்டுப் படுங்க போயி...”

     கிழவியின் எரிச்சல் புரிகிறது. இவர்களுக்கு இடம் கொடுத்தது மட்டுமில்லை, அம்சு சோறு வடித்துப் போட்டது பிடிக்கவில்லை.

     பொழுது உறக்கமில்லாமலே கழிகிறது.


புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247