உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 18 காருக்குள் அமர்ந்திருப்பவர் யாரென்று இனம் கண்டுகொள்ள முடியாது. கறுப்பு அடித்த கண்ணாடி; பின்னால் பட்டுத்திரை. “இன்னிக்கு நாம திருவாரூர் போலாமா காந்தி? புதுப்படம் வந்திருக்கு...” அவனை அப்படியே கழுத்தைப் பிடித்துவிடவேண்டும் போல் இருக்கிறது. கபடமறியாது, உலகை எட்டி அளக்கக் கால்வைக்கத் துடித்த அன்றைய காந்தி இல்லை. ஆழந்தெரியாத சகதியில் முட்புதரில் சிக்கிக் கொண்டிருக்கும் மலர் அவள். வடிவு பாம்புக்கு அஞ்சாமல் முள்ளுக்கும் கூசாமல் தாழைக்குலை கொண்டு வருவான். உடையார் வீட்டில் சரோஜாவுக்கு அந்தப் பூவில் உயிர். என்ன வாசம் பாரு! பீரோத்துணில வச்சா அப்பிடியே புதிசா இருக்கும் என்று போற்றிப் போற்றி வைப்பாள். வரப்பில் நடக்கும்போது சேற்றில் விழக் கால் தடுமாறி விட்டால், பிறகு குளித்துக் கரையேறிவிடலாம். இந்தச் சேற்றிலிருந்து கரையேறுவது எப்படி? நறுமண சோப்பு, பவுடர், பூ, பொட்டு, நல்ல சேலை, எந்த நீரினாலும் போக்கமுடியாத சேறு... “சின்னம்மா வராங்களா?...” “சின்னம்மாவுக்கு இப்ப வார புதுப்படம் எதுவும் புடிக்கலியாம்...” கண்களைச் சிமிட்டுகிறான் சாலி, கோகிலத்தைப் பார்த்துக் கொண்டே. இந்தக் கிராமத்திலிருந்து அவள் ஓடிச் செல்வதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை. சிறிது நேரம் வாசலில் போய் நின்றால்கூட பலருடைய கண்கள் தன்மீது பதிவது போலிருக்கிறது. ஆனால் இவ்வாறு வெளியே சென்றால் தப்புவதற்கு ஏதேனும் வழியிருக்காதா? அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் மிகவும் கிலி பிடித்துப் போயிருக்கிறாள். உள்ளூற இடிந்து விழுந்து அழுந்திவிட்ட நம்பிக்கையின் இடிபாடுகளின் ஒரு சிதிலத்தைப் பற்றிக் கொண்டுதான் அவள் இச்சேற்றிலிருந்து மீளும் வழியை யோசிக்கிறாள். இவள் மருண்டு போயிருப்பதைக் கண்டுகொண்ட சாலியும் களிப்பிக்கும் வகையில் அவ்வப்போது வந்து கல்லூரியில் சேருவது குறித்துப் பேசி உற்சாக மூட்டுகிறான். பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் நுழைமுகக் கல்லூரிப் பரீட்சைக்கான காகிதங்களை அவளிடம் வந்து காட்டி அவள் எந்தப் பாடம் எடுத்துக் கொள்ளலாம் என்று விவாதித்தான். வெகுநாட்கள் கழித்து இப்போது சினிமாவுக்கு அழைக்கிறான். “எங்க தங்குறோம் ராவுக்கு?” “நான் உன்னைவிட்டே போக மாட்டேன். ஏன் பயப்படுற கண்ணு...” அவனுடைய ஒவ்வொரு பேச்சிலும் கவடம் நெளிந்து அருவருப்பாய் வெறுப்பூட்டுகிறது. தன் மனைவியை விலைப் பொருளாக்குவதை விட வேறு ஒரு கேவலம் இருக்கமுடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. “அங்க எங்க ஃபிரண்ட் ஒரு புரொபசர் இருக்காரு. அவர உனக்கு ட்யூசனுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிடலான்னு யோசனை சொல்றாரு, அப்பா. ஏன் காந்தி?” “ம். செய்யுங்க...” “வா, அப்ப இன்னிக்கு சினிமா பார்த்துட்டுத் தங்கிக் காலம அவரப் பாத்து ஏற்பாடு செஞ்சுட்டு வரலாமில்ல?” காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அட அசட்டுப் பெண்னே? இந்தக் கார் சவாரி, உயர்ந்த சேலை, அது இதெல்லாவற்றுக்கும் விலை உண்டு. இப்போ தெல்லாம் விலை போடப்படாத எந்தச் சரக்கும், எந்த இயக்கமும் உலகில் இல்லை. ஒரு பெண்ணை, அவளது மென்மையான இயல்பில் பூக்கும் உணர்வுகளை எப்படிக் கபடத்துடன் கனிய வைத்து அதைக்கொண்டே அவளை வீழ்த்துகிறார்கள். இந்தக் கயவர்கள்! கோகிலத்தின்பால் அவளுடைய நெஞ்சம் ஒட்டிக்கொள்கிறது. அவள் தேவதாசி மரபில் வந்தவள். இந்தச் சமுதாயம் இப்படி ஒரு மரபை அனுமதித்திருக்கிறது. அவளுடைய கபடமற்ற அறியாமையில் பயங்கரமான இத்தகையதோர் அனுபவம் வெடித்துத் துளைத்தபின்னர் அந்தப் பொத்தல் வழியாக பல இருண்ட பகுதிகளைத் துலாம் பாரமாகப் பார்க்கமுடிகிறது. பெண்... பெண்ணை இவ்வாறு பந்தாடுவதற்கே அவள் தன் நாவைப் பறித்து வைத்திருக்கிறார்களோ? தனது தாயையும், பைத்தியக்கார நாகுவைப் பற்றியும் அவள் இந்நாள் வரை தீவிரமாகச் சிந்தித்ததில்லை. தாயை போலீசுக்காரன் கற்பழித்து விட்டான் என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவள் அறிந்தாள். விலைவாசிப் போராட்டம் என்று குப்பன் சாம்பாரின் பெண் சாதி மாரியம்மாவும் கிட்டம்மாளும் போனார்கள். ஆனால் அம்மா போகவில்லை. அப்போது அப்பாவிடம் அது பற்றிப் பேசும்போது பாட்டி “ஒருக்க சூடுபட்டு, அவ சென்மம் மிச்சூடும் அனுபவிக்கிறது. பெரிய போராட்டந்தா. ஊரு நாயிங்களுக்கு என்ன தெரியும்?...” என்று பேசினாள். “துரோபத சீலயப் புடிச்சிழுத்தப்ப அவ தேவியா இருந்தா. இந்தக் கலியுகத்துல எந்தச் சாமி வருது? சாமியுந்தா கண்ணளிஞ்சி போயி இவளுக்கு இந்தத் தண்டனையைக் குடுத்திச்சி. காலங்காத்தால அந்தப் பய குரலெடுத்துக் கத்தையில, வயித்தச் சங்கட்டம் பண்ணுது...” என்று கத்தினாள். ஆனால் அப்போது “சீ இதெல்லாம் கூட்டிச் சொல்ற பேச்சு!” என்று இழிவாகவே தோன்றியது. இப்போதெல்லாம் அம்மாவின் முகம் அவள் நெஞ்சில் தோன்றும் போது சொல்லமுடியாத வேதனை தோன்றுகிறது. ஐயா அவளை மணந்து, குடும்பம் என்ற பேராதரவு கொடுத்தது... நெஞ்சு வெடிக்க அவர் காலடியில் வீழ்ந்து, “அப்பா நான் தெரியாம செஞ்சிட்டேன், மன்னிச்சிக்குங்க” என்று புலம்பத் தோன்றுகிறது. அந்த வீடு, அம்சு காலையில் வீதி தெளிப்பது, வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களிடையே உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் பொருள் பொதிந்ததோர் அவசியமான வாழ்வுக்காக விரிகிறது. ஆனால், அவளால் இந்த அழிவிலிருந்து எப்படிப் போகமுடியும்? விபசாரத் தடைச்சட்டம் என்றால் என்ன? பெண் ஒருமுறை கற்பழிக்கப்பட்டதும் கறைபட்டு, அதே வாழ்க்கைக் குழியில் தள்ளப்பட்டு விடுகிறாள். பலமுறைகள் தனியாக இருக்கும்போது, கோகிலத்திடம் இதைப்பற்றிக் கேட்க நினைத்தாள். ஆனால், அவள் பேசுவதில்லை. சொல்லப்போனால் காந்தி, சினிமா மற்றும் கதைப்புத்தகங்கள், சாப்பாடு, உடை என்று சாலி அனுபவிக்கச் சிறைப்பட்டிருப்பது போல்தான் இருந்திருக்கிறாள். வேலைக்காரப் பெண், அல்லது பண்ணை ஆளும் கூட அவளிடம் பேசமுடியாத காவலாக அவள் இருந்திருக்கிறாள். ஒவ்வொரு சமயங்களில், அந்தத் தடை சட்டம் எதுவாக இருந்தாலும் ஏதேனும் காவல் நிலையத்தில் போய் இவர்கள் அக்கிரமங்களைச் சொல்லி, அல்லது எழுதிப்போட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் காகிதமும் கவரும் ஒருநாள் கேட்டதும் கோகிலம், “பாபுவை விட்டுக் கொண்டிட்டு வரச் சொல்றேன்...” என்றாள். அவன், “பேப்பர் பேனா கேட்டியாமே? யாருக்கு, லட்டர் எழுதணும்?” என்றான். பேப்பர் பென்சில் வரவில்லை. அவளுடைய கைப்பையில் சர்ட்டிபிகேட், வகையறாதான் இருந்தது. எழுதினால் அவர்களுக்குத் தெரியாமல் அனுப்ப முடியாதே? திருவாரூர் வந்துவிட்டது புலப்படுகிறது. ஒரு பெரிய ஓட்டலின் முன் வண்டியை நிறுத்துகிறான் சாலி. மணி ஏழு என்பதைக் கடியாரம் காட்டுகிறது. மாலை ஆட்டம் சினிமா துவங்கி இருப்பார்கள். ஏழு மணிக்கு இங்கு வருவதன் காரணம். யாருக்கு விலை பேசவோ? அவளுடைய தற்காப்பு உணர்வு, சக்திகளனைத்தையும் திரட்டிக்கொள்ள ஆயத்தமாகிறது. கல்லாப்பெட்டியில் இருக்கும் தங்கச் சங்கிலி, குங்குமப் பொட்டணிந்த சிவந்த முதலாளி சாலிக்குப் புன்னகையுடன் வணக்கம் சொல்கிறான். “ரூமா” என்று கேட்பது போல் முகம் காட்டி, சற்று நேரத்தில் ஒரு சாவியை எடுத்துக் கொடுக்கிறான். அப்போது அந்தச் சில நிமிடங்களில், காந்தி வெளியே பார்த்து நிற்கையில், சற்று எட்டி ஒரு ஆசனத்திலிருந்து மாலை தினசரியைப் பார்த்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று அவள் மீது படிகிறது. அவளும் பார்த்துவிடுகிறாள். “நீயா..?” தேவு, “நா... நான்தான்... தேவு. நான்தான்!” இவள் அவனைப் பார்த்து தன் மன உணர்வுகளனைத்தையும் கொட்டிவிடும் பாவனையில் நிற்கிறாள். “...வா... வா காந்தி!...” சாலி மாடிப்படியில் நின்றழைக்கிறான். ஓட்டலின் கலகலப்பான கூட்டத்தில் அவளும் கலந்து துளியாகிவிட வேண்டும்போல் இருக்கிறது. தேவு... தேவுக்குத் தெரிந்திருக்குமோ? அவனுடன் அதிகமான பழக்கம்அவளுக்குக் கிடையாது. அவள் தந்தையிடம் ‘தலைவர்’ என்று வந்து நின்று குழையும் விவசாயத் தொழிலாளி அல்ல அவன். அன்று பஸ்ஸில் போகும்போது அவன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. தேவு...? அவன் எப்படிப்பட்டவனோ? அறைக் கதவைப் பையன் திறந்துவிடப் படியில் தாவி ஓடுகிறான். இவள் கால்கள் பின்னலிட அங்கேயே நிற்கிறாள். “...என்ன? வா, மேல...?” அதட்டினாற்போல் அருகில் வந்து சாலி அவளை அழைத்துப் போகிறான். “நா வரமாட்டேன். என்ன...” அவள் கத்த நினைக்கிறாள். குரல் எழும்பவில்லை. பயம் தொண்டையைப் பிடிக்கிறது. “என்ன திகச்சிப்போயி அங்கேயே நின்னிட்டே?...” “எங்கூருக்காரரு” என்ற சொல் வாயில் வந்துவிட்டது. அவசரமாக விழுங்கிக் கொள்கிறாள். “ஒண்ணில்ல. அவரு கையில பேப்பரில ரஜினி ஆக்ட் பண்ணின சினிமா போல படம் இருந்திச்சி. பாத்தேன்...” “இன்னிக்கு ரஜினி படம் போகணுமா, கமலஹாசன் படம் போகணுமா?” “இரண்டு பேருமே இல்லாத படம் ஒண்ணுகூட இல்லியா?” “ஏ இல்லாம?. முதல்ல என்ன சாப்பிடலாம் சொல்லு, ஆர்டர் பண்ணுறேன்.” பையன் வருகிறான். இவள் இரட்டைக்கட்டில், கண்ணாடி, அறையிலிருந்து வரும் ஒருவிதமான புழுக்க நெடி, இவற்றில் ஒரு பயங்கரம் புதைந்திருப்பதான உணர்வில் குழம்பி நிற்கிறாள். அவள் கடந்த சில நாட்களாகப் படித்திருக்கும் பத்திரிகைக் கதைகளில், மலிவுப் பதிப்புக்களில் சித்திரிக்கப்பெற்ற, கற்பழிப்புப் பெண்கள் பலரை நினைத்துப் பார்க்கிறாள். கற்பழிப்புக்காகவே கல்யாணங்கள் நடக்கின்றன. கற்பழித்தபின், அவளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள உரிமை பெற்றவன், உடையவன். இந்த அபாக்கியத்துக்கு ஆளான பெண்ணொருத்தி, கையில் குழந்தையுடன் பாண்டிச்சேரிக் கடலில் விழுந்து உயிரை முடித்துக் கொள்வதைத் தத்ரூபமாகச் சித்திரித்திருந்தாள் ஒரு பெண் கதாசிரியை. அவள் கற்பழிப்பை நியமமாக்குகிறாளா? “என்ன ஒரே ‘மூடி’யா இருக்கிற காந்தி? நீ சிரிச்சிட்டுச் சந்தோசமா இருக்கணும். எனக்கு உம்முனு இருக்கிறவங்களக் கண்டா பிடிக்காது...” அவள் பளிச்சென்று சிரிக்கிறாள். பையன் இரண்டு பிளேட் அல்வா, சப்பாத்தி குருமா, எல்லாம் கொண்டு வருகிறான். அந்தப் பையனிடம் ஒரு சீட்டுக் கிறுக்கி ‘வாசலில் நிற்கும் தேவுவிடம் கொடு’ என்று அனுப்பலாமா? ஆனால், இவன் காவலாக இருக்கிறான். அல்வாவும் குருமாவும் நெஞ்சில் குழம்ப விழுங்குகிறாள். பழைய காலக் கதைகளில் வருவதுபோல் அற்புதம் நிகழவேண்டும்! கோட்டை மதிலுக்குமேல் ஆலமர விழுதைப் பற்றி உள்ளே கதாநாயகன் வந்திறங்குவான். அப்படி அவள் வெகுநாட்களுக்கு முன் சினிமா பார்த்திருக்கிறாள், அப்படி யார் வரப்போகிறார்கள்? “காந்தி, அப்பா உன்னை மட்றாஸ் ஆஸ்டலில் சேர்க்கலாம்னு ஒரு எண்ணம் கேட்டாரு. இங்கன்னா உனக்கு உங்கூரு ஆளுக வருவா, போவான்னு ஒரு கூச்சம் இருக்கும்னு அவர் கருத்து. எப்படியும் இந்த வருசம் எதும் செய்யிறதுக்கில்ல. உனக்கு இஷ்டமா...” “எங்கண்ணனுக்குக் கடிதாசி எழுதிப் போடணும்னு கவர் கேட்டேன். நீங்க காதிலியே போட்டுக்கிடல...!” “உங்கண்ணனுக்கு நாந்தான் சேதி அனுப்பினேன். நேத்துத்தா ஒந்திரியரு பாத்தேன்னும் ரொம்ப சந்தோசம்னு சொன்னான்னும் வந்து சொன்னாரு நாந்தா உங்கிட்டச் சொல்ல மறந்து போனேன்!” ஒன்பதரை மணிக்குக் கிளம்பு முன் குளியலறையில் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பவுடர் போட்டு மறுபடியும் பொட்டு வைத்துக் கொள்கிறாள். திருத்திக்கொண்டு அவனுடன் வருகிறாள். ஓட்டலில் கூட்டம் வந்துவிட்டது. அவர்கள் வருகையில் கல்லாவில் இருக்கும் முதலாளி, புன்னகை செய்கிறார். காரடியில் ஒரு பிச்சைக்காரக் கிழவி உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலை பாக்குக் கடை வாசலில் கயிற்று நெருப்பில் பீடிக்கு ஒருவன் நெருப்புப் பற்றவைக்கிறான். தேவு... தேவுவைக் காணவில்லை. “என்ன சினிமான்னு முடிவு பண்ணினிங்க? மீண்டும் கோகிலாவா?” வெளியில் இருப்பவருக்குக் கேட்கவேண்டும் என்ற மாதிரியில் சற்றே உரக்கவே கேட்கிறாள். வண்டி செல்கிறது. இரவில் அதிகமாக லாரிகள் நடமாட்டமே குறுக்கிடுகின்றன. காரின் வெளிச்சம் சாலையில் விழும்போது, எதிர் வண்டி வெளிச்சம் படும்போது, இந்த ஊரில் யாரைத் தெரியும் என்று துழாவுகிறாள். புதுக்குடி பழக்கமான இடம்; நாகைக்குப் போய் வந்த பழக்கம் உண்டு. ‘பெண்களைத் தனியாக அனுப்பக்கூடாது’ என்று பாட்டி கடுமையாக நிற்பாள். இவள் உடையார் வீட்டுக்குச் செல்வதையே ஆமோதிக்க மாட்டாள். “போயிட்டு வரட்டும். அப்பத்தான் தயிரியம் வரும்” என்பார் அப்பா. ‘என் தயிரியத்தில் அரைக்கிணறு தாண்டி இருளில் விழுந்தேன் அப்பா!’ சரேலென்று இங்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அலுவலகம் இருக்கும் என்ற நினைவு வருகிறது. முன் காட்சிக் கூட்டம் இன்னும் வெளிவரவில்லை. சாலி, சிகரெட்டை ஊதிக்கொண்டு, ஏ என்று போட்ட அடையாளத்தில் ஏயின் ஒரு காலோடு, உடலில் ஒன்றுமில்லாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு தன் நீல விழியை அந்தரங்கமான எண்ணத்தைக் காட்டும் சாளரமாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தவாறு நிற்கிறான். திடீரென்று அவள் அருகில் இருக்கிறாளா என்று பார்ப்பதுபோல திருப்பிப் புன்னகைக்கிறான். “காந்தி நீ ஆறு, குளத்திலே நீச்சலடிப்பேல்ல?” “ஹும்... எனக்குத் தெரியாது...” “உனக்கு நீச்சலுடைபோடணும்னு எனக்கு ஆசை...” சிகரெட் சாம்பலைத் தூணில் தட்டிக் கொண்டு சிரிக்கிறான். “டிக்கெட் வாங்கிட்டு உள்ளாற போக நேரமாகுமா?” “நாம பால்கனில உக்காந்துப்போம்...” “ஹலோ, என்னப்பா சாலி ஆளயே காணம்..?” யாரோ ஒரு விடலை தோளைக் குலுக்குகிறான். “மீட், மிஸ் காந்தி?...” பரட்டைத் தலையும் யானைக் குழாய் சட்டையுமாக இருக்கும் அவன் புன்னகை செய்கிறான். இவளுக்கு இது ஏதேனும் முன்னேற்பாடாக இருக்குமோ என்ற திகில் பரவுகிறது. அவர்கள் பேசும்போது கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்களால் துழாவுகிறாள். அப்போது படம் முடிந்து கூட்டம் வெளியே திபுதிபுவென்று வெளிவருகிறது. அவர்கள் சீட்டு வாங்க நிற்கையில், சரேலென்று காந்தி கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். விடுவிடென்று வெளியேறுகிறாள். அவளுக்கு அடுத்த சிந்தனை இல்லை. ஒரு கிராமத்தான் போன்ற ஆணும், மனைவியும் கைக்குழந்தையுடன் முன்னே நடக்கின்றனர். தலைப் பூவைப் பிய்த்துப் போட்டுவிட்டு அவள் அவர்களுடன் விரைகிறாள். “தூத்தேறி” என்று காறி உமிழ்கிறாள் அந்தப் பெண். “என்னாளெவு? கூச்சநாச்சம் இல்லாம!...” “அப்பிடி இருந்தாத்தா சனங்க வாரங்க...” “நெல்லால்ல. சாமி படம், ஆதிபராசக்தி நெல்லாருந்திச்சி, திருவிளையாடல் நெல்லாருந்திச்சி...” அவர்கள் விரைந்து நடக்கிறார்கள். இவள் அவர்களுக்கு ஈடுகொடுக்க ஓடவேண்டி இருக்கிறது. பின்னே ரிக்சாக்கள். லாரி வெளிச்சம் விழும்போது, கார் தன்னைத் துரத்தி வருவதாகக் கிலி பிடித்து நா ஒட்டிக்கொள்ள வீழலில் ஒதுங்குகிறாள்; ஓடுகிறாள். “என்னாங்க...? ஒங்களுக்கு வெவசாய சங்க ஆபீசு எங்க இருக்குன்னு தெரியுமா?...” அந்த ஆள் திரும்பிப் பார்க்கிறான். “ஆரும்மா நீ?...” “இல்லிங்க... வந்து. பஸ்ஸுக்கு நானும் எங்கண்ணனும் வந்தம், அவரு பஸ்ஸுல என்ன உக்காத்தி வச்சிட்டு எதுக்க கடய்க்கு போயிட்டு இதா வந்திடறேன்னு போனாரு பஸ்ஸு அதுக்காட்டியும் எடுத்திட்டா நா அண்ணன் வரலியேன்னு எறங்கிட்டேன். பாத்தா கடயில அண்ணன் இல்ல. ஓடிப்போயி பஸ்ஸில ஏறிப் போயிடுச்சி போல இருக்கு...” கதை ஒன்று ஒட்டுப்போடுவது சிரமமாக இருக்கிறது. “என்னம்மா, ராநேரம் பதனமா இருந்துக்கிடாம இப்பிடி எறங்குவாங்களா?” “எங்கிட்ட காசொண்ணுமில்ல. அண்ணன் வராம நாம் போயிட்டு டிரைவர் கேட்டா என்ன பண்ணுவே?...” “எந்துாரு...?” “புதுக்குடி போவணும்.” “காலம அஞ்சரைக்குத்தா இனி பஸ்ஸு...” “அதா, ஒங்கூட்ல வந்து தங்கிட்டு, மொத பஸ்ஸில கொஞ்சம் ஏத்திபுட்டீங்கன்னா... நா உங்களுக்கு. உங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன்...” “புதுக்குடில எந்தப் பக்கம்?” அந்தப் பெண் இடைமறித்தாள். “ரதவீதிக்குப் போகணும்.” “என்னாம்மா, புத்திகெட்ட பொண்ணா இருக்கிறியே? அவரு ஆம்பிள ஓடிவந்து ஏறிப்பாரு. டைவரிட்ட சொல்லி பாக்கச் சொல்லுறதில்ல?” பெண் பிள்ளைக்கு அவளுக்கு இடம் கொடுப்பதில் விருப்பமில்லை என்று புரிகிறது. பெண்கள் தாம் பெண்களுக்கு முதல் எதிரிகளாக இருக்கிறார்கள். கோகிலத்திடம் அந்தரங்கமாக இருக்க எவ்வளவு முயன்றாள்? “நடந்து போச்சி, கொஞ்சம் எரக்கம் காட்டுங்க. எனக்குக் கார்க்காக குடுத்து ஏத்தி புதுக்குடி அனுப்பிடுங்க. நா. மறக்கவே மாட்டேம்மா...” “இந்த வம்பெல்லாம் நமக்கு என்னாத்துக்கு” என்ற மாதிரியில் பெண் பிள்ளை நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். “நாங்க இருக்கிற எடத்துல பெரிய... குடும்பம். எல்லாம் யாரு என்னன்னு கேப்பாங்க...” “எனக்கு ஒக்கார எடம் குடுங்கம்மா, உங்களப்போல நானும் ஒரு பொண்ணு. காலையில் நான் போயிடுவேன். உங்களுக்குச் சந்தேகம் எதும் வாணாம். புதுக்குடில... டாக்டர் வூடு இருக்கு வேண்டிய மனிசாள் இருக்காங்க. உங்களுக்கு அப்பிடி ஒரு ரூவாக் காசில சந்தேகம் இருந்திச்சின்னா, காதில போட்டிருக்கிற தோடு கழற்றித்தாரேன். வந்து வாங்கிக்குங்க...” அந்தச் சேற்றுக் குழியிலிருந்து மீள, காலை எடுத்துவிடும் நம்பிக்கையில் அவர்களைப் பற்றிக் கொள்கிறாள். |